ஆழி சூழ் நித்திலமே 26

                 26

கோலாகலமாக நடந்து முடிந்திருந்தது கயல் வெற்றியின் திருமணம். பாரியும் நித்திலாவும் தாரைவார்த்துக் கொடுக்க, உற்றார் உறவினர்கள் வாழ்த்துகளோடு மங்கலநாண் பூட்டி கயலைத் தன்னவளாக்கியிருந்தான் வெற்றி.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமென எதிலும் குறையில்லாது நண்பனின் திருமணத்தை நடத்தியிருந்தான் பாரி.

நண்பர்கள் உற்றார் உறவினர்கள் என வந்திருந்த அத்தனை பேரையும் நன்கு உபசரித்து, வழியனுப்பிய பிறகு பாரியின் வீட்டில் பாலும் பழமும் கொடுத்து சடங்குகள் முடிந்ததும் வெற்றியின் வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தனர் மணமக்கள்.

பிறந்து வளர்ந்த இடத்தைவிட்டு வேறிடம் போவது பெண்களுக்கு வலிதானே. ஆயாவைக் கட்டிக்கொண்டு கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தாள் கயல்.

“இப்ப இன்னாத்துக்கு அழுதுக்கினுக்கிற?  நெனைச்சா ஓடியாற தூரத்துக்குதான் வாக்கப்பட்டு போற. உன்னைய பாக்கனும்னு நெனைச்சதும் வந்துர மாட்டமா? இதுக்குலாமா அழுவாங்க? கண்ணத்தொட கயலு. சிரிச்ச மொகத்தோட போவ வேணாமா? பாரு, உன் கண்ணுல தண்ணிய பார்த்ததும் உம்புருஷன் மொகமும் சுருங்கிப் போச்சு.” ஆயா அதட்டவும் கண்களைத் துடைத்துக் கொண்டாள் கயல்.

கயலின் தலையை வாஞ்சையோடு தடவிய பாரி, “உன்னைய நல்லா பார்த்துக்கோனு வெற்றியாண்ட நானு சொல்லவே வேணாம் கயலு. அவனுஞ்சரி தலைவரு மதினி அண்ணே அல்லாருமே உன்னிய கண்ணுல வச்சு பார்த்துப்பாங்க. அந்த நம்பிக்கை எனக்கு நெறயக்கீது.

நீயும் அவுங்களை அனுசரிச்சு போவனும் புள்ள. சந்தோஷமா இருக்கனும் புரியுதா.” கலங்கிய கண்களோடு பாரியிடம் தலையசைத்தவள், அருகில் நின்றிருந்த நித்திலாவிடம், “ஆயாவையும் மாமாவையும் பார்த்துக்கோக்கா.” என்றவள் விழிகளில் வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்துக்கொண்டு, “அதெல்லாம் நீ நல்லா பார்த்துப்பன்னு எனக்குத் தெரியும்.” என்று புன்னகைத்தாள்.

அவளது புன்னகை நித்திலாவுக்கும் தொற்ற, கயலை அணைத்து விடுவித்தவள், “எப்பவுமே இப்படியே சந்தோஷமா இருக்கனும் கயல்.” மனதார வாழ்த்த, அனைவரின் வாழ்த்து மழையோடு புகுந்தவீடு கிளம்பினாள் கயல்.

வெற்றியின் வீட்டிலும் சடங்கு சம்பிரதாயங்கள் முறையாக முடிந்ததும், நெருங்கிய உறவுகளுக்கு இரவு விருந்து தயாராகிக் கொண்டிருந்தது. ஞானமும் மகேந்திரனும் அவற்றை கவனித்துக்கொள்ள, கயலும் ரதிமீனாவும் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களோடு பேசிக் கொண்டிருக்க வெற்றிக்கோ இருப்பே கொள்ளவில்லை.

கயல் அவனுக்கு அந்நியமில்லயே. சிறுவயதிலிருந்தே ஒன்றாய் விளையாடி பேசிப் பழகி இருந்தவர்கள்தானே. கயல் பெரிய பெண்ணாய் ஆகவும் இயல்பாய் அவள் ஒதுங்கிப்போக, தன் மனதில் இருப்பதை இவன் உணர்ந்து அவளிடம் சொல்லும் முன்பே அவள் விருப்பம் தெரிய வந்ததில் இவன் முற்றிலும் ஒதுங்கிப் போனான்.

ஆனால் இப்போதோ உரிமையாய் கயல் தன் வீட்டுக்குள் வந்ததே அவனை உற்சாகத்தில் மிதக்க வைத்திருந்தது. அவளை அழைத்துச் சென்று தங்கள் அறையைக் காட்ட வேண்டும், அவளோடு தனிமையில் பல கதைகள் பேசவேண்டும் என்று ஆவல் அதிகரித்திருந்தது.

கயல் அமர்ந்திருந்த அறைக்குள் எட்டிப் பார்த்தான். அவளைச் சுற்றிலும் உறவினர்கள் அமர்ந்திருக்க, தன் சித்தப்பார் மகளுக்கு பெண் பார்த்த கதையை சுவாரஸ்யமாக சொல்லிக் கொண்டிருந்தாள் ரதிமீனா.

‘ஆமா, இப்ப ரொம்ப முக்கியம் பாரு இந்தக் கதை?’ நொடித்துக் கொண்டவன், கயலை எப்படி அழைப்பது என்று புரியாது தயங்கினான்.

பிறகு மெல்ல தன் மதினி அருகே வந்து அமர்ந்து காதில் ரகசியமாய், “மதினி, கயல மாடிக்குக் கூட்டிட்டுப் போகவா?” என்றான்.

“இப்பவே என்னடா அவசரம்? அதெல்லாம் நல்ல நேரம் பார்த்து நலுங்கு வச்சிட்டுதான் சாந்தி முகூர்த்தத்துக்கு அனுப்புவோம்.” பல்லைக் கடித்துக் கொண்டு முனுமுனுத்தாள் மீனா.

“ஐய, சும்மா பேசிக்கினு இருக்கதான் மதினி கேட்டேன். வேற ஒன்னுமில்ல…” அசடு வழிந்தான் வெற்றி.

“ம்க்கும், கல்யாணம் நிச்சயமாகி இத்தினி நாளுல பேசாதத இப்ப பேச போறியாக்கும். என் வாயில நல்லா வந்துடும். எத்தினி நாளு சொல்லிருப்பேன் அந்த புள்ளகூட பேசிப் பழகுடானு. கேட்டியா நீ?

 இப்பலாம் அனுப்ப முடியாது. நல்ல நேரம் பார்த்துட்டு உன் ரூமுக்குதான் அனுப்புவோம். விடிய விடிய உட்கார்ந்து பேசு. இப்ப கெளம்பு.”

கடுகடுத்தவளிடம், “கொழுந்தனும் மதினியும் என்னத்த குசுகுசுனு பேசிக்கிறீங்க? சத்தமாதான் சொல்றது.” உறவினப் பெண்ணொருத்தி கேட்க,

“அதொன்னுமில்ல சின்னம்மா, பொண்ண இப்பவே மாடிக்கு அனுப்பனுமாம் என் கொழுந்தனுக்கு.” பட்டென்று போட்டு உடைத்தாள் ரதிமீனா.

அனைவரின் சிரிப்பு சப்தமும் அந்த அறையை நிறைத்தது.

“அதுக்குள்ள அவசரத்தைப் பாரு மாப்பிள்ளைக்கு?” என்று உறவினர்கள் கேலி செய்ய, “அதெல்லாம் இல்ல அத்த” அசடு வழிந்தவன், “உன்னப் போய் கேட்டேன் பாரு.” என்று மீனாவின் தலையில் நறுக்கென்று கொட்டிவிட்டு எழுந்து சென்றான். அவன் செயல் மேலும் சிரிப்பை வரவழைத்தது அனைவருக்கும்.

வெற்றியின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்த கயலின் உதட்டிலும் புன்னகை நெளிந்தது.

பழகிய உறவினர்கள், அந்நியமற்ற புகுந்த வீடு அவளுக்கு இலகுவாக இருந்தது. பிறந்ததில் இருந்து பார்த்து பழகிவந்த சொந்தங்களே புகுந்த வீட்டு சொந்தங்களாகிப் போனது ஆசுவாசத்தைக் கொடுத்திருந்தது.

திருமணம் அதன் பின்னான வாழ்க்கை என அனைத்து யதார்த்தமும் புரிந்தவள் கயல். அதற்காக அவள் முழுமனதாக தயாரானதும்தான் மாப்பிள்ளையே பார்க்கச் சொல்லியிருந்தாள்.

புகுந்தவீடு வேற்று மனிதர்களாய் இருந்திருந்தால் ஒருவேளை ஒதுக்கம் வந்திருக்குமோ என்னவோ, வெற்றியின் குடும்பத்தை இயல்பாய் சொந்தமாக ஏற்றுக்கொண்டது அவள் மனது.

திருமணம் நிச்சயமான பிறகு மனதை நிச்சலனமாக வைத்திருந்தாள். இனி இதுதான் தன் வாழ்க்கை என்பதில் வெகு தெளிவாக இருந்தாள் கயல். திருமண ஏற்பாடுகளிலேயே வெற்றியின் ஈடுபாடும் புரிய வந்ததில், அவளது மனமும் அவனைக் கணவனாக ஏற்கத் துவங்கியிருந்தது.

இரவு விருந்து முடிந்து உறவினர்கள் கிளம்பிய பிறகு, கயலுக்கு மெல்லிய ஒப்பனை செய்து தயார் செய்தாள் ரதிமீனா. அந்த நேரத்திற்கே உரிய பதட்டமும் தயக்கமும் கயலின் முகத்தில் போட்டி போட்டது.

கயலின் முகத்தை இரு கைகளாலும் வழித்து திருஷ்டி எடுத்த மீனா,

“ரொம்ப அழகா இருக்க கயலு. எங்க வெற்றி குடுத்து வெச்சவன்.” மெல்லிய புன்னகை அரும்பியது கயலின் முகத்தில்.

“எதையும் எடுத்து சொல்றதுக்கு இந்த வீட்ல நமக்கு பெரியவங்க இல்ல கயலு. இந்த வீட்டுக்கு மருமகளா வந்தப்ப எனக்கு நானே சொல்லிக்கிட்டது இப்ப உனக்கு சொல்றேன்.

இந்த குடும்பத்துக்கு நாமதான் அச்சாணி. நம்மள சுத்திதான் இவங்க மூனுபேரோட உலகமே சுத்தும். நம்மளோட கோபதாபம், ஆசாபாசம், விருப்புவெறுப்பு எல்லாமே இவங்கள பாதிக்கும். நம்ம முகத்துல சந்தோஷம் இருந்தாதான் இவுங்க சந்தோஷமா இருப்பாங்க. நம்ம முகம் லேசா வாடினா கூட பொறுத்துக்க மாட்டாங்க.

இந்த வீட்ல மாமாவும் சரி அவுங்க புள்ளைங்க ரெண்டு பேரும் சரி பாசத்துக்குக் கட்டுப்பட்டவங்க கயலு. நான் ஒரு மடங்கு காட்ன பாசத்தை பலமடங்கா திருப்பி எனக்கு காட்னவங்க. இந்த வீட்டோட அஸ்திவாரமே அவங்களோட அன்புதான்.

அதுலயும் வெற்றி… அவனைப் பத்தி அவன் யோசிச்சதவிட மத்தவங்களைப் பத்தி யோசிச்சதுதான் அதிகம். எல்லாருக்குமே நல்லது நெனைக்கிறவன். குடும்பத்துல இருக்கறவங்க நல்லா இருக்கனும்னா எதை வேணும்னாலும் விட்டுக் குடுப்பான்.

 இதெல்லாம் உனக்கே தெரியும். அவங்க கூடவே வளர்ந்தவதான நீ. உனக்குத் தெரியாத எதையும் நானு சொல்லிடப் போறதில்ல.” கூறிவிட்டு சற்று இடைவெளி விட்டவள், “ஆனா, உனக்குத் தெரியாத விஷயமும் ஒன்னு இருக்கு கயல்.” என்றாள்.

ரதிமீனாவின் வார்த்தைகளில் இருந்த அழுத்தத்தில் கேள்வியாக அவளை நோக்கினாள் கயல்.

கயலின் ஒரு கையில் பால் சொம்பைக் கொடுத்தவள், மற்றொரு கரத்தைப் பிடித்து அதில் ஒற்றைக் கொலுசு ஒன்றை வைத்தாள்.

அதைப் பார்த்த கயலின் விழிகள் விரிந்தன.

“அ… அக்கா, இ… இது…?”

“உன்னுதுதான?”

“ஆமா, ஆ… ஆனா, இது எப்பவோ தொலைஞ்சு போனதுபோனது! இது எப்படி உங்களுக்கு கிடைச்சுது!?” வியப்பு மேலிட்டது கயலின் குரலில்.

மெல்ல புன்னகைத்தாள் ரதிமீனா. “என் கொழுந்தன் பீரோல இருந்து அவனுக்குத் தெரியாம எடுத்தேன். இது உன்னோடதுங்கற விஷயம் கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் எனக்குத் தெரியும். என் கொழுந்தன் பொக்கிஷமா பொத்திப் பொத்தி வச்சிருந்த இந்த கொலுசுக்குப் பின்னாடி இருக்கற கதைய உன் புருஷன்கிட்ட இன்னைக்கு கேட்டுட்டு வந்து நாளைக்கு எனக்கு சொல்லு.”

திகைத்துப் போயிருந்தாள் கயல். ‘வேலுமாமா எதற்காக எப்போதோ தான் தவறவிட்ட ஒற்றைக் கொலுசை பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டும்? வேலு மாமாவின் மனதில் நானா?’ மனதில் கேள்வி அலைகள் எழும்ப மெல்ல மாடியேறினாள் கயல்.

சிறு வயது முதலே பாரி எப்படி அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்வானோ வெற்றியும் அதுபோலதான். இன்னும் கேட்டால் அவர்கள் மூவரும் ஒன்றாய் உண்டு ஒன்றாய் விளையாடி உறங்கிய நாட்கள் கூட உண்டு.

வெற்றியின் பார்வையில் எப்போதும் அவளுக்கான பரிவும் பாசமும் கண்டதுண்டே தவிர, சிறு பார்வை வேறுபாடு கூட கண்டதில்லை. ஆனால் இத்தனை ஆண்டுகளாய் அவன் மனதில் இருந்த சொல்லப்படாத காதல் அவளது கையில் வெகுவாய் கணத்தது.

மௌனமாய் அந்த கொலுசைப் பார்த்தவளின் மனதுக்குள் இனம்புரியாத உணர்வுகளின் ஊஞ்சலாட்டம். காதலிப்பதை விட காதலிக்கப்படுவதை உணர்வது பேரழகானது அல்லவா?

அதிலும் உரிமையாய் தாலி கட்டியவனின் மனங்கவர்ந்த காதல் தான்தான் என்பதை உணரும் தருணம்… மனம் முழுவதும் சந்தோஷ சாரல்களின் ஊர்வலம்.

முன்பு எப்படியோ இப்போது வெற்றியின் அறைக்குள் நுழைய எந்த தயக்கமும் தோன்றவில்லை. அவனிடம் கேட்க ஆயிரமாயிரம் கேள்விகள் அவளுள் அலைமோதின.

மெல்ல கதவைத் திறந்து கொண்டு நுழைந்தாள் கயல். வெற்றியின் முகத்தில் முன்னெப்போதும் கண்டிறாத நிறைவு கண்ணுக்குப் புலப்பட்டது கயலுக்கு.

கயலைப் பார்த்து புன்னகைத்து, “வா கயல்” என்று அழைத்தவன் அவள் நீட்டிய பால் சொம்பை வாங்கி டீபாய் மீது வைத்தான். பின்னர் சென்று கதவை மூடிவிட்டு வந்தவனின் கால்களில் கயல் விழ எத்தனிக்க, அவளைத் தடுத்துப் பிடித்தவன், “ஹேய் கயலு, எதுக்கு இந்த ஃபார்மாலிட்டிலாம்? அதெல்லாம் வேண்டாம்.” என்க,

“அக்காதான் இதெல்லாம் செய்ய சொன்னாங்க.” மெல்லியதாய் உரைத்த கயலின் வார்த்தையில் புன்னகை அரும்பியது வெற்றிக்கு.

மெல்ல நகைத்துக் கொண்டவன், அவளை கட்டிலில் அமர வைத்து தானும் அருகே அமர்ந்து கொண்டான். புத்தம் புதிதாய் பூத்திருந்த பூக்களின் வாசமும், பக்கத்தில் அமர்ந்திருந்த பூவையின் வாசமும் நாசியைத் தீண்ட இயல்பாய் கிளர்ந்தது உள்ளம்.

“வேற என்னெல்லாம் சொன்னாங்க உங்க அக்கா?” என்று கேலியாய் கேட்க, நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

அவளது அந்த பதிலற்ற பார்வை புதிதாய் இருந்தது வெற்றிக்கு. புதுமணப்பெண்ணுக்கு உண்டான நாணமோ வெட்கமோ அவளிடம் அவன் எதிர்பார்க்கவில்லைதான். ஆனால் பயத்தையும் பதட்டத்தையும் அவளிடம் எதிர்பார்த்திருந்தான்.

அப்படி அவள் பயந்தாலோ பதட்டமுற்றாலோ அவளை ஆற்றுப்படுத்தி, அவளோடு இலகுவாகப் பேசிப் பழகி பின்னர் வாழ்க்கையைத் துவங்கதான் திட்டமிட்டிருந்தான்.

ஆனா இப்போதோ, ஏதோ கேள்வி கேட்பது போன்ற அவளது பார்வை அவனை வியப்பாக்கியது.

“என்னம்மா? ஏன் இப்படி பார்க்கற? எதாவது என்கிட்ட கேக்கனுமா?”

மெல்ல அவன் முன்பு கையை நீட்டினாள். அதிலிருந்த ஒற்றைக் கொலுசைக் கண்டவனுக்குள் அவ்வளவு அதிர்ச்சி.

“க… கயல். இ… இதெப்படி உன்கிட்ட?”

“ஏன் மாமா? இந்த கேள்விய நான் கேட்டாதான சரியா இருக்கும்?”

“கயல்” காற்றாய் வந்தது வெற்றியின் குரல்.

“அக்கா இதை என்கிட்ட கொடுத்து இந்த கொலுசுக்கான கதைய உன்புருஷன்கிட்ட கேளுனு சொன்னாங்க. ஆனா நீங்க சொல்லாமலேயே இந்த கொலுசு எனக்கு நிறைய புரிய வைக்குது மாமா.”

“…”

“நீங்க என்னை பொண்ணு கேட்டு வந்து நிச்சயம் செஞ்சப்ப, எனக்கான வாழ்க்கை நீங்கதான், உங்ககூட நல்லபடியா வாழனும்னு முழு மனசோடதான் மாமா இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்சு வந்திருக்கேன்.

இப்ப இந்த கொலுச பார்க்கறப்ப, ஒருவேளை நீங்க என்னை கல்யாணம் பண்ணிருக்கலன்னா, நீங்களும் நானும் சேராம போயிருந்தா இப்படி ஒரு காதலை நான் இழந்திருப்பேன்ல மாமா?

ஏன் மாமா? ஏன் என்கிட்ட சொல்லல? கல்யாணம் நிச்சயம் ஆனதுக்கு அப்புறம் கூட சொல்லலயே? ஒருவேளை என்னைத் தப்பா…” கண்கள் கலங்க பேசியவள் கலக்கத்தோடு வார்த்தைகளை நிறுத்தவும், அவளது கரங்களைப் பற்றிக் கொண்டவன்,

“ச்சேச்சே… கயலு, உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா? நான் எந்த விதத்துலயும் உன்னை சங்கடப்படுத்தக் கூடாதுன்னு நினைச்சேனே தவிர உன்னை தப்பாலாம் நினைச்சதே இல்ல கயலு.

என் மனசு முழுக்க இருக்கற நேசத்தை உன்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லப் போறேன்? உன்கிட்ட சொல்லக்கூட வாய்ப்பு கிடைக்காதுனு துவண்டு கெடந்த காலமும் உண்டுதான் இல்லேங்கல. இப்ப நீ என் கைக்குள்ள வந்துட்ட, இனிமே என்னை யார் தடுக்க முடியும்? காலம் முழுக்க என் காதலை விதவிதமா சொல்லப் போறேன் கயலு.”  அவள் நெற்றியோடு நெற்றியை முட்டிப் புன்னகைத்தான்.

அவனது புன்னகை அவளுக்கும் தொற்ற, “நான் நிஜமாவே ரொம்ப குடுத்து வெச்சவ மாமா.” அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

பெண்ணின் காதல் தென்றலை விட மென்மையானதுதான், மலரை விட அழகானதுதான். ஆனால் ஆணின் காதல் மலையை விட வலிமையானது, கடலைவிட ஆழமானது. ஆழமான வெற்றியின் காதல் பெரும் நிறைவைத் தந்தது கயலுக்கு.

காடு மேடெல்லாம் கால் வலிக்க அலைந்தவன், நிழல் கண்டு இளைப்பாறுவது போல அவனது ஒற்றை அணைப்பு அவ்வளவு ஆசுவாசம் தந்தது கயலுக்கு. தயக்கம் ஏதுமின்றி நெஞ்சோடு சாய்ந்து கொண்டாள்.

அவளது உச்சந்தலையில் இதழ் புதைத்திருந்தவனுக்கோ, உலகையே வென்று காலடியில் போட்ட உவகை. தானாய் சொல்லியிருந்தால் எப்போது சொல்லியிருப்பானோ என்னவோ? மானசீகமாக மதினிக்கு நன்றி சொல்லிக் கொண்டான்.

“கயலு, நிஜமாவே உனக்கு என்னை பிடிச்சிருக்குதா? இன்னமும் இதை என்னால நம்பவே முடியல. நீ என் கைக்குள்ள இருக்கிறதை, நான் உன்னைக் கட்டிப்புடிச்சிட்டு இருக்கறதை எல்லாம் நம்பவே முடியல. ஒருதடவை என்னை நிமிர்ந்து பாரேன்.”

மெல்ல நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். பிடித்தம் என்பதை வார்த்தையால் மட்டும் தான் சொல்ல வேண்டுமா என்ன? பார்வையால் உணர்த்தினாள் கயல். அந்த நொடி அவள் மனம் முழுக்க நிறைந்து ததும்பினான் வெற்றி.

எந்தவொரு ஆணால் ஒரு பெண்ணின் கடந்த காலத்தை மறக்க வைக்க முடிகிறதோ அந்த ஆண்தான் அவளது மொத்த எதிர்காலமாகிறான்.

கயலின் கண்கள் இனி அவளின் எதிர்காலம் வெற்றிதான் என்பதை பிரதிபலிக்க, மனம் கொள்ளா மகிழ்வோடு அவள் நெற்றியில் இதழ் பதித்தவன் மெல்ல முன்னேறி அவளிதழில் புதைந்தான்.

மெல்லத் துவங்கிய முற்றுகை வேகம் கொள்ளத் துவங்க, இத்தனை நாட்களாக சொல்லப்படாமல் அழுந்திக் கிடந்த காதல் அத்தனையையும் அவளிடம் சொல்லத் துவங்கினான் விதவிதமாக…

 காமம் தீரும் பொழுதுகள் வரலாம், காதல் தீரும் பொழுதுகள் இவர்களுக்கு இனியேது?

___ தொடரும்.