ஆழி சூழ் நித்திலமே 27

                27

 

ஆயிற்று, கயல் வெற்றி திருமணம் முடிந்து ஒரு மாதம் ஓடிப் போயிருந்தது. நித்திலா பாரியின் உறவில் பெரிதாக எந்த மாற்றமும் இன்றி அப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

லேசாய் பேசி உறவில் முன்னேற எண்ணினாலும் முள்ளாய் குத்துபவளை என்ன செய்வது என்றே புரியவில்லை பாரிக்கு. தவறு முழுக்க அவன் மீது இருக்கையில் அவளைக் குறைகூறக் கூட அவன் தயாராய் இல்லை. எவ்வளவு அடித்தாலும் தாங்கும் நல்லவனாகிப் போனான் அவளிடத்தே.

கயல் திருமணத்திற்குப் பிறகு இட்லிக்கடையை மூடிவிட வேண்டும் என்று பாரி உறுதியாக கூறிவிட, குப்பத்தில் இருந்த வறிய குடும்பத்துப் பெண் ஒருத்தியிடம் இட்லி கடைக்கான தளவாட சாமான்கள் அனைத்தையும் கொடுத்துவிட்டு ஓய்வு எடுக்க ஆரம்பித்தார் ஆயா.

அனைத்து விஷயங்களிலும் ஆயா நித்திலாவைத் தாங்கிக் கொண்டாலும் பாரியிடம் அவள் முகம் திருப்பும்போது மட்டும் அவளுக்கும் ஆயாவுக்கும் முட்டிக் கொள்ளும். இடையில் பஞ்சாயத்துக்குப் போகும் பாரி துவைத்துத் தொங்கவிடப்படுவான் நித்திலாவால்.

“பார்த்தாலும் பார்த்தேன் இப்படியொரு ராங்கிய பார்த்ததில்ல சாமி!” ஆயா நொடித்துக் கொள்ளும் வேளைகளில்,

 “ஐய, ராங்கியா? அந்த புள்ள போறதும் தெரியாது வர்றதும் தெரியாது. இருக்கற இடம் தெரியாம இருக்கும். இப்ப இப்படி மாறிப்போச்சுன்னா அதுக்கு காரணமும் நாந்தான கெழவி. வேற யாராண்டயாது மொகஞ்சுருக்கி ஒத்த வார்த்தை அது பேசி பார்த்திருக்கியா நீ?” ஆயாவைதான் சமாதானப்படுத்துவான்.

மறுவீடு வந்திருந்த கயலின் முகத்தில் தெரிந்த பூரிப்பும் வெற்றியின் முகத்தில் தெரிந்த நிறைவும் அவர்கள் வாழ்வு சீராகிவிட்டதை உணர்த்த, அதேபோல பேரனுக்கும் வாழ்க்கை சீராகிவிடாதா என்ற ஏக்கம் அம்மூதாட்டிக்கு நிறைய உண்டு.

பாரியின் நல்ல குணங்களை எடுத்துச் சொல்லி, அவளுக்கு அறிவுரை கூறும்போது அமைதியாக கேட்டுக் கொள்பவள், அவை அவ்வளவையும் கவுண்ட்டராக அவனுக்குத்தான் திருப்பிக் கொடுப்பாள்.

கயல் திருமணமாகிப் போன பிறகு மிகவும் தவித்துப் போனது நித்திலாதான். உடன்பிறந்தவளைப் போல உடனிருந்து பாசத்தைக் காட்டியவளின் பிரிவு வெகுவாக வருந்த வைத்திருந்தது. கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்தபிறகு கழியும் பொழுதுகள் வெறுமையாய் உணர வைத்தது.

அதிலும் செமஸ்டர் தேர்வுகள் முடிந்து விடுமுறையும் விடப்பட்டதில் வெகுவாக போரடித்தது அவளுக்கு. அக்கம்பக்கத்து சிறுவர் சிறுமியரை அழைத்து வைத்து பொழுதைப் போக்குபவள், குப்பத்துப் பெண்களையும் ஒருங்கிணைத்து சுய உதவிக் குழுக்களைத் துவங்கி அவர்களது சுய முன்னேற்றத்துக்கான வழிகளையும் ஆலோசனைகளையும் கொடுக்கத் துவங்கினாள்.

இதனால் எப்போதும் வீட்டில் ஆள் நடமாட்டம் இருந்தபடிதான் இருக்கும். ஆனால் அன்று மதியம் பாரி வீட்டுக்கு வந்தபோது வழக்கத்துக்கு மாறாக வீடு அமைதியாக இருந்தது.

பாரிக்கும் வங்கி லோன் கிடைத்து மீன் பதப்படுத்தும் கூடம் அமைக்கும் வேலைகள் துவங்கிவிட நிற்க நேரமில்லாமல் கழிந்தது. அனைத்து வேலைகளையும் பாரி தலையில் கட்டிவிட்டு வெற்றி சம்சார சாகரத்தில் மூழ்கிவிட அனைத்தையும் முன்னின்று பார்க்கும் பொறுப்பும் வந்து சேர்ந்தது.

உணவு உண்ணும் நேரமும் ஓய்வெடுக்கும் நேரமும் மட்டுமே வீட்டுக்கு வருபவன், என்னடா இது இவ்வளவு அமைதியாக இருக்கிறதே என்று எண்ணியபடி உள்ளே நுழைந்தான். அவன் பார்வையில் ஹாலில் சொகுசாக தூங்கிக் கொண்டிருந்த ஆயாதான் பட்டார்.

‘கொலப்பசில வந்துக்கிறேன். சோறாக்காம தூங்குறத பார்த்தியா?’ என்று காண்டானவன், “ஆயா, பசிக்குது சோறாக்கலயா? நல்லா கொறட்டை வுட்டுனுக்கிற?”

“ஒம் பொஞ்சாதி சோறாக்குது. போய் துன்னு.” என்று பதில் கொடுத்தவர், திரும்பவும் கண்களை மூடி உறக்கத்தில் ஆழ்ந்தார்.

வாயெல்லாம் பல்லாய் போனது பாரிக்கு. “சோறாக்குதா? நெசமாவா? ஐய், இன்னைக்கு ஒரு புடி புடிச்சிட வேண்டியதுதான்.” குஷியானவன், “நீயும் வா ஆயா.” என்று அழைக்க,

‘எனக்கு வேணா. அது இன்னாமோ வாயில நொழையாத பேருலாம் சொல்லுது. அதெல்லாம் துன்னா எனக்கு வவுறு நெறயாது. நானு ராணி வூட்ல பழைய கொழம்பு வாங்கியாந்து துன்னுட்டேன்.” என்றவாறு ஆயா திரும்பி படுத்துக் கொண்டார்.

“ஒனக்கு அதுப்புதான கெழவி. அது எம்மாம் ஆசையா நமக்காண்டி சோறாக்குது. நீ இன்னான்னா பக்கத்து வூட்ல கொழம்பு வாங்கியாந்து துன்னுருக்க. வவ்வா மீனுதான காலேல கொணாந்து குடுத்தேன். அத்து உனக்கு வாயில நொழையலயோ? உனக்குப் போய் ஆக்கிப் போடனுமுனு நெனைச்சுது பாரு அந்த புள்ளய சொல்லனும்.”  நொடித்துக் கொண்டான்.

“போ போ, உம் பொஞ்சாதி ஆக்குனத மொதல்ல துன்னுட்டு அப்பாலிக்கா வந்து பேசு. மீனு கொழம்பவே மறந்துடுவ நீயி.” தனக்குள் முனுமுனுத்துக் கொண்டார் ஆயா.

“எகத்தாளத்த பாத்தியா கெழவிக்கு? ரவைக்கு பட்டினி போட்டாதான் சரிப்படுவ. ஒன்னியுமே மிச்சம் வெக்காம அல்லாத்தையும் நானே துன்னுடுறேன்.” என்றவாறே சமையலறை நோக்கி நடந்தான்.

சமையல் வாசனையே வித்தியாசமாய் கமகமக்க வாயில் நீர் சுரந்தது பாரிக்கு. நித்திலாவும் கயலும் இணைந்து சமைப்பது வழக்கம்தான் என்பதால் எப்படி செய்திருப்பாளோ என்ற எண்ணமெல்லாம் வரவேயில்லை அவனுக்கு.

முதன்முதலாக தங்களுக்கென தனித்து சமையல் செய்வதால் ஆர்வமாகவே சமையலறைக்குள் நுழைந்தான்.

நித்திலாவுக்கும் பாரியைக் கண்டதும் முகம் மலர்ந்தது. தான் சமைத்த உணவை ஆயா சாப்பிடாததில் சற்று சுணக்கமாக இருந்தவள், ஆர்வமான முகத்தோடு வந்தவனைப் பார்த்ததும் மகிழ்ந்து போனாள்.

“நீங்க இன்னாத்துக்குங்க ஒன்டியா கஷ்டப்பட்டுக்கினு சோறாக்கறீங்க. ஆயாவாண்ட சொன்னா அது செய்யுது.”

“ரொம்ப போரடிச்சுது. என்ன செய்யறதுனே தெரியல. அதான் சமைக்கலாம்னு வந்தேன். ஏன் நான் சமைச்சா நீயும் சாப்பிட மாட்டியா?” லேசாய் முகம் வதங்கியது.

“சேச்சே, எவஞ்சொன்னான்? நீங்க எடுத்து வைங்கங்க. கைகால் கழுவினு வரேன். இன்னிக்கு ஒரு கட்டு கட்றேன் பாருங்க.” பாரியின் பதிலில் முகம் மலர்ந்தவள் வேகவேகமாக சமைத்த அத்தனையையும் எடுத்து வைத்தாள்.

பாரி உணவு உண்ண அமர்ந்த நேரம் சரியாக நிகிலேஷ் வந்து சேர்ந்தான்.

“வாடா, சாப்பிடறியா?” என்று நித்திலா அழைக்க, பாரியோ, “வா மாப்ள, குந்து சாப்டலாம். உங்கக்கா சமைச்சிக்கிறாங்க.”

“அக்காவா” என்றபடி சேரை இழுந்துப்போட்டு அமர்ந்தவன், “நீங்க சாப்பிடுங்க மாமா. நான் சாப்பிட்டுதான் வந்தேன்.” வாய்க்குள் சிரிப்பை மென்றபடி கூறினான்.

“எதுக்குடா சிரிக்கிற? சாப்பிடலனா மரியாதையா எந்திரிச்சி போ.” நித்திலா சிடுசிடுக்க, “ஐய, சும்மா துன்னு மாப்ள. நல்லாருக்கும்.” என்றான் பாரி.

“அதெல்லாம் நல்லாதான் மாமா இருக்கும். எனக்கு தெரியாதா நித்திக்கா டேஸ்ட் என்னன்னு. நீங்க சாப்பிடுங்க.”

“அவன் கெடக்குறான். நீ சாப்பிடு.” என்றபடி பாரிக்குத் தட்டு வைத்து பரிமாற ஆரம்பித்தாள்.

முதலில் பாதாம் பருப்பை வைத்து செய்த இனிப்பில் இருந்து ஆரம்பித்தவள் வைத்த பதார்த்தங்களின் வண்ணக் கலவையே சொல்லியது அவற்றின் சுவையை.

திருதிருவென முழிக்க ஆரம்பித்தான் பாரி. ஒரு இனிப்பென்றால் பரவாயில்லை. சர்க்கரை வள்ளிக்கிழங்கு சிப்ஸ், தக்காளி சாஸில் குளித்த காலிஃப்ளவர் வறுவல், ஸ்வீட் கார்ன் சூப் என வைத்த அத்தனை ஐட்டமும் இனிப்பாகவே இருந்தது.

 பட்டை மிளகாயும் மிளகும் சேர்த்தரைத்து கயல் வைக்கும் குழம்பிலேயே இன்னும் கொஞ்சம் சுள்ளுனு வச்சிருக்கலாம் என்று வியாக்கியானம் பேசுபவனுக்கு ஸ்வீட் அன்டு சோர் சாஸ் பிஷ் ஃபில்லட் என்ற சைனீஸ்   பெயரும் வாயில் நுழையவில்லை உணவும் நுழையவில்லை.

அவளுக்கு இனிப்பென்றால் மிகவும் பிடிக்கும் என்பது தெரிந்த விஷயம்தான், அதற்காக மீனைக்கூட இப்படி இனிப்பாக செய்து வைப்பாள் என்று எதிர்பார்க்கவே இல்லை.

 பரிமாறிவிட்டு ஆவலாய் முகம் பார்ப்பவளை ஏமாற்ற மனமின்றி அத்தனை பதார்த்தங்களையும் லேசாக எடுத்து ருசி பார்த்தவன், “அல்லாமே நல்லாக்குதுங்க.” என்கவும் முகம் மலர்ந்தது நித்திலாவுக்கு.

“இதெல்லாம் எடுத்து வைங்கங்க. நானு  அப்பாலிக்கா துன்னுக்கிறேன். இப்ப சோறு வச்சு கொழம்பு ஊத்துங்களேன்.” என்றான் எப்படியும் குழம்பு நன்றாகத்தான் வைத்திருப்பாள் என்ற நம்பிக்கையில்.

“ம்ம்ம், சரி” என்றவள் சாதம் வைத்து கேரள பாணியில் தேங்காய் பால் ஊற்றி செய்யப்பட்ட இளமஞ்சள் நிற மீன் குழம்பை ஊற்றவும் நொந்தே போனான் பாரி. பாரியின் முகம் போன போக்கைப் பார்த்ததும் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தான் நிகிலேஷ்.

“ஹா… ஹா… மாமா, அக்காவப் பத்தி தெரியாம மாட்டிக்கிட்டீங்களே மாமா. நுங்கு சும்மா சாப்பிட்டாலே அவ்ளோ இனிப்பா இருக்கும். அதையே சர்க்கரையக் கொட்டி பாயாசமா செஞ்சு தரச்சொல்லி திங்கறவ இவ.

இவ செய்யற டிஷ் வேற எப்படி இருக்கும்? இந்த மீன் கொழம்ப பார்த்தாலே எனக்கு பாயாசத்த பார்த்த மாதிரிதான் இருக்கு.”

நிகிலேஷ் கலாய்க்கவும் கோபத்தில் மூக்கு விடைக்க அவனை முறைத்தவள், “போடா லூசு. இது கேரளா ஸ்பெஷல் டிஷ். ஃபுல்லா தேங்காய்பால்ல செய்யறது. செமயா இருக்கும். அவன் கெடக்கிறான் நீ சாப்பிடு.” என்றாள் பாரியிடம்.

“பாவம், பேஸ்தடிச்ச மாதிரி அவரு மூஞ்சியப் பார்த்தாலே தெரியல, உன் குழம்பை பார்த்ததுமே அவர் பயந்து போய் கிடக்குறாரு நித்திக்கா. எப்படி சாப்பிடுவாரு?

நல்லா காரசாரமா சாப்ட்டு பழகுனவங்களுக்கு உன்னோட சமையல் புடிக்குமா? அவர் டேஸ்ட் வேற உன்னோடது வேற. எப்படி சாப்பிட முடியும் நித்திக்கா? பாவம் அவரை டார்ச்சர் பண்ணாத விட்ரு.”

நித்திலாவிடம் கூறியவன், “மாமா உங்களுக்கு எங்கம்மா வச்ச குழம்பு எடுத்து வந்து தரேன். அவங்க கொஞ்சம் காரம் கம்மியாதான்  வைப்பாங்க. ஆனா இவ பண்ற மாதிரி இனிப்பா இருக்காது.”

 நிகிலேஷ் கூறவும் முகமே சுருங்கி போனது நித்திலாவுக்கு. அவளது அந்த முகமாற்றத்தைக்கூட தாங்க முடியவில்லை பாரியால்.

 “அதெல்லாம் வேணாம் மாப்ள. நானு சின்னதுலருந்து காரசாரமா துன்னு பழகுனவன்தான் இல்லேங்கல.

ஆனா, உங்க அக்காவுக்குப் புடிக்கும்னா அது எதுவா இருந்தாலும் எனக்கும் புடிக்கும். அதுங்கையால வெஷம் வச்சாலே விருந்து கணக்காத் துன்னுவேன். விருந்தே வச்சிக்கிது வுட்ருவனா?” நிகிலேஷிடம் பேசியவன் நித்திலாவைப் பார்த்து,

“நீங்க அந்தக் கொழம்ப இன்னும் கொஞ்சம் ஊத்துங்க.”  என்றபடி உணவைப் பிசைந்து உள்ளே தள்ள ஆரம்பித்தான்.

பிடிக்காத, தன் விருப்பத்துக்கு ஒத்துவராத உணவைக்கூட அவள் வைத்தது என்பதால் எந்தவொரு சுணக்கமும் இன்றி உண்பவனைப் பார்க்கையில் என்னவோ போலாகியது நித்திலாவுக்கு.

“பிடிக்கலனா விட்ரு. நிக்கிய எங்க வீட்லருந்து குழம்பு கொண்டு வரச்சொல்லுவோம்.” மெல்லிய குரலில் நித்திலா கூற, விழியெடுக்காது அவளை நோக்கியவனோ மந்தகாசம் பொங்கும் குரலில்.

“புடிக்கலனு எவஞ்சொன்னான்? காலமுச்சூடும் இதக்காண்டி வேற எதுவுமே எனக்குப் புடிக்காது.” அவனது பார்வையில் கட்டுண்டவள் அவனையே பார்த்திருக்க, இடையே அமர்ந்திருந்த நிகிலேஷோ, ‘என்னடா நடக்குது இங்க?’ என்றெண்ணியபடி அவர்களையே பார்த்திருந்தான்.

 

***

 

பின்மதியம் துவங்கிய மழை விடாது வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. இரவு உணவை முடித்துவிட்டு வெளியே கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தான் பாரி.

இது ஆரம்ப மழைதான். இனிதான் மழைக்காலம் துவங்கும் பருவமாகையால் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தது உள்ளம். எந்த நேரம் பெருமழை வரும் புயல் எச்சரிக்கை வருமென்று கூற இயலாது.

புயல் காலங்களில் குப்பத்து மக்களில் பெரும்பாலோருக்கு வருமானம் இராது. வாழ்வாதாரமே பறிபோகும் சூழல்கூட நேரும். அவர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பட்டியலிட்டுக் கொண்டிருந்தது மனது.

மழைச்சாரல் போட்டிருந்த ஷெட்டைத் தாண்டி வாசல் வரை அடித்தது. வீட்டின் வாசலை ஒட்டி கட்டிலைப் போட்டுப் படுத்திருந்தான்.

“மழையில இன்னாத்துக்கு வாசல்ல படுத்துனுக்கிற பாரி. வூட்டுக்குள்ள வா.” ஆயா வந்து அழைக்க, “ஒன்னியும் வேணாம். நீ போய் தூங்கு ஆயா. இங்க சாரலடிக்கல.” என்றிருந்தான்.

“வாச வரைக்கு சாரலடிக்குது பாரு. முழுக்க நனைஞ்சிருவ பாரி. உள்ள வந்து படேன்.”

“அய்ய, நொய்யு நொய்யுன்னாம போய்ப் படு கெழவி.” பாரி விரட்டவும் வீட்டுக்குள் வந்தார்.

நித்திலா அறையினுள் அமர்ந்து புத்தகம் ஒன்றில் மூழ்கியிருந்தாள். இவர்களின் சம்பாஷனையை அவள் கண்டு கொண்டதாகக் கூடத் தெரியவில்லை.

“கட்ன புருஷன் மழையில நனைஞ்சினு கெடக்கறான். இந்த புள்ள உள்ள வானு கூப்ட்டா இன்னா? இது கூப்டுச்சினா உள்ள வருவான்ல அவன்.” முணுமுணுத்தபடி குறுக்கே நெடுக்கே நடந்து கொண்டிருந்தார் ஆயா.

பேரனை அப்படி மழையில் வெளியே படுக்க வைத்துவிட்டு தான் மட்டும் உள்ளே சொகுசாய் படுக்க மனம் வரவில்லை. தான் சென்று கூப்பிட்ட போதும் வரமறுப்பவனை என்னதான் செய்வது?

பாரிக்கும் நித்திலாவுக்கும் இடையேயான பிணக்கு இப்போது சரியாகும் அப்போது சரியாகும் என்று காத்திருந்தால் வேலைக்காகாது என்பது புரிந்தது ஆயாவுக்கு.

அடித்தாலும் பிடித்தாலும் இருவரும் ஒன்றாக இருக்கட்டும். சண்டையோ சச்சரவோ இருவரும் ஒரே அறைக்குள் செய்யட்டும். நாளாவட்டத்தில் அனைத்தும் சரியாய் போகும் என்று அந்த முதியவரின் மூளை கணக்குப் போட்டது.

எதையாவது செய்து இருவரையும் ஒரே அறையிலாவது தங்க வைக்க வேண்டும். இப்படி தனித்தனியாய் இருப்பது நன்றாகவா இருக்கிறது. இன்னுமா இவர்கள் பிரச்சினை தீரவில்லை என்று கேள்வி கேட்பவர்களுக்கு பதில் சொல்லி முடியவில்லை அவருக்கு.

பாரி இனியும் தான் போய் பேசினால் சரிவர மாட்டான். நித்திலாவைத் தூண்டி விட்டுதான் எதையாவது செய்ய வேண்டும் என்றெண்ணியவர், அவளது அறை வாசலுக்கு சென்று நித்திலாவிடம், “கட்ன புருஷனு பார்க்க வேணாம். அவன ஒரு மனுஷனாவாச்சும் பார்க்கலாமில்ல.” என்றார்.

திடுதிப்பென அறையின் வாசலுக்கு வந்து மொட்டை தாத்தா குட்டையில் விழுந்தது போல சம்பந்தமின்றி பேசிய ஆயாவைப் பார்த்தவள், “என்னாச்சு ஆயா?” என்க,

கலைந்த கூந்தலை அள்ளி முடிந்தபடி, “நல்லா கேட்டுக்கின போ இன்னா ஆச்சுனு. அங்க ஒருத்தன் மழையில நனைஞ்சினு கெடக்கிறானே அத்த இன்னானு கண்டுக்கினியா நீ.

இந்த வூட்டுக்காக நாளு முச்சூடும் ஒழைக்கிறவன் அவன்தான். ஆனா அவனையே வூட்டுக்குள்ள வுட மாட்ற நீ.” எள்ளும் கொள்ளும் வெடித்தது ஆயாவின் முகத்தில்.

ஆயாவின் கோபத்தில் முகமே மாறிப்போனது நித்திலாவுக்கு. “நான் என்ன பண்ணேன் ஆயா? நான் எப்ப அவரை வீட்டுக்குள்ள வரக்கூடாதுனு சொன்னேன்?”

“ம்க்கும், வாயால சொன்னாதான் ஆச்சா? நீ மூஞ்சியத் திருப்பினு போவச் சொல்ல, அவன் எப்புடி வூட்டுக்குள்ள வருவான்?

இதே உன் கூடப் பொறந்த பொறப்பு இப்படி மழையில கெடந்தா நீ ரூமுக்குள்ள படுத்துக்கினு இருப்பியா? போயி உள்ள இட்டாற மாட்ட? எம்பேரன சொந்தமாவே நெனைக்கல நீயி. அதான் அவன் மழையில கெடந்தா என்ன வெயில்ல கெடந்தா என்னனு நீபாட்டுக்கு உன் வேலையப் பார்த்துக்கினுகிற.”

ஆயாவின் குற்றச்சாட்டு வெகுவாக வருத்தியது நித்திலாவை.

 ஆனால் அவள் ஒன்றும் அவனை வெளியே படுக்க சொல்லவில்லையே. அவனாகத்தானே சென்றான். மழை பெய்தால் தானாக உள்ளே வரவேண்டியதுதானே. வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தால்தான் வருவானோ! கோபம் முழுக்க பாரியின் மீது திரும்பியது.

வேகமாக எழுந்தவள் வாசலுக்கு வந்தாள். “மரியாதையா எழுந்து வீட்டுக்குள்ள வா. இல்லனா என்ன நடக்கும்னே எனக்குத் தெரியாது.” தஸ்ஸூ புஸ்ஸென்று மூச்சு வாங்கியபடி கோபத்தில் கொந்தளித்த நித்திலாவைப் பார்த்ததும் திடுக்கிட்டான் பாரி.

“இன்னாச்சுங்க…!”

“என்ன நொன்னாச்சுங்க…? உனக்கும் உங்க ஆயாவுக்கும் என்னை பார்த்தா எப்படி தெரியுது? நானா உன்னை வீட்டைவிட்டு வெளிய போய் படுனு விரட்டினேன்.

 நீயாதான வெளிய போய் படுத்த. மழை வந்தா நீயா உள்ள வரவேண்டியதுதான? உன்னை வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கனுமோ.”

“ஆயா எதனா சொன்னுச்சா? இந்தக் கெழவிய…” பல்லைக் கடித்தவனை மேலும் முறைத்தவள்,

“அவங்களை ஏன் திட்ற? அவங்க என்னை கோபமா பேசற அளவுக்கு செஞ்சது நீதான? நீயா இஷ்டத்துக்கு எதையாவது செய்ய வேண்டியது. ஆனா அதனால பாதிக்கப்படறது நான்தான்.

 எப்பவும் உனக்கு இதே வேலையாப் போச்சு. இன்னும் தேவையில்லாத எதையாச்சும் பண்ண… அவ்ளோதான். ஒரு வார்த்தை கூடப் பேசாம மரியாதையா எழுந்து உள்ள வா.”

 கடுகாய் பொறிந்தவள் உள்ளே சென்றுவிட, கனமழை அடித்து ஓய்ந்தது போல இருந்தது அவனுக்கு.

“இதுக்கெல்லாம் காரணம் அந்தக் கெழவிதான். எங்க அது?” பல்லைக் கடித்தபடித் தேட, ஆயா கண்ணை மூடி நித்திரையில் ஆழ்ந்திருந்தார்.

“விடியட்டும் கெழவி, உனக்கு கச்சேரி வெக்கிறேன்.” முணுமுணுத்தபடி பாய்படுக்கையை சுருட்டிக் கொண்டு அறைக்குள் சென்றான்.

அது மிகவும் சிறிய அறை. ஒற்றை கட்டிலும் ஒற்றை அலமாரியும் போடப்பட்டிருக்க, ஒரு ஆள் நடக்கும் அளவுக்கு மட்டுமே இடம் இருந்தது. அங்கே கீழே படுப்பது சாத்தியமற்ற ஒன்று. அவளருகே படுக்கத் தயக்கம். மெல்ல குரல் கொடுத்தான் பாரி.

“ஏங்க நான் கட்டில்ல படுத்துக்கவா?”

திரும்பி அவனை முறைத்தவள் ஒன்றும் பேசாது மீண்டும் திரும்பிக்கொள்ள, மௌனம் சம்மதம் என்று எடுத்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்தான்.

“ஏங்க இது ரொம்ப சின்ன கட்டில். பக்கத்துல படுத்தா தூக்கத்துல கையி காலு தெரியாம மேல படும். பரவாயில்லயா?”  பாரியின் கேள்வியில் கோபம் வெகுண்டது நித்திலாவுக்கு.

“எனக்கு நல்லா வாயில வந்துடும். பேச வேண்டாமேனு பார்க்கறேன். உம்மேல கொலவெறில இருக்கேன். ரொம்ப ஓவரா எதனா பேசின என்ன நடக்கும்னே எனக்குத் தெரியாது. வாய மூடிக்கிட்டு படு.” எரிந்து விழுந்தவள் திரும்பிக்கொள்ள வாயை மூடிக்கொண்டு படுத்துக் கொண்டான் பாரி.

மெல்லிய விடிவிளக்கு வெளிச்சமும் அவ்வப்போது மின்னி மறையும் மின்னலின் வெளிச்சமும் நித்திலாவின் வரிவடிவை சிற்பமாக காட்டியது. அவளிடமிருந்து வந்த மெல்லிய நறுமணம் நாசிக்கு இனிதாய் இருக்க சற்று வசதியாய் நகர்ந்து நெருங்கிப் படுத்தான் பாரி.

ஆசைப்பட்டு, கிடைப்பாளோ மாட்டாளோ என்று அவஸ்தைப்பட்டு, எக்குத்தப்பாக எதையெதையோ செய்து படாதபாடுபட்டு திருமணம் முடித்த பெண். மனம் முழுக்க ததும்பத் ததும்ப நிறைந்திருக்கும் பெண். கையருகே இருந்தது பரவசப்படுத்தியது அவனை.

இந்த தருணம் இப்படி மனைவியின் அருகில் சயனம் எதிர்பாராத ஒன்று, மிகுந்த குஷியாக்கியிருந்தது அவனை. கண்கொட்டாது அவளைப் பார்த்தபடி படுத்திருந்தான்.

நித்திலாவுக்கோ கோபம், எரிச்சல், ஆத்திரம் இவற்றை தாண்டி சற்று அவஸ்தையாகவும் இருந்தது.

அவனது சிறு சிறு அசைவுகளையும் உணரும் அவளது புலன்கள், மூச்சுக்காற்று முதுகில் உரசும் படியான அவனது அருகாமை, அவன் பார்வை முழுக்க தன்மீதுதான் என்பதை உணர்த்தும் உள்ளுணர்வு என அனைத்துமே அவளை அவஸ்தையாய் உணர வைத்திருந்தது.

ஒரே படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் கணவனின் அருகாமை அவளை இயல்பாய் இருக்க விடவில்லை. பொட்டு உறக்கம் கூட  இருவருக்குமே இல்லை. அவ்வப்போது கேட்கும் இடி சப்தம் தவிர வேறு சப்தம் இல்லை. துளித்துளியாய் கடந்த சிலபல நிமிடங்களுக்குப் பிறகு, மெல்ல தொண்டையைச் செருமினான் பாரி.

இடி சப்தத்துக்குக்கூட அசையாத பெண், அவனது லேசான செருமலுக்கு சுவாசம் சீரற்று தேகம் நடுங்கத் துவங்க, “ஏங்க…” என்ற அவனது அழைப்புக்கு ம்ம்மென்று மெல்ல முனகினாள்.

“தூக்கம் வரலயா?” அவனது கேள்விக்கு பதிலற்ற மௌனம் அவளிடத்தே. அப்போது பலத்த இடியொன்று இடிக்க, “ஏங்க, இடிஇடிக்கறது பயமா இருக்கு. உங்க கையப் புடிச்சுக்கவா?” இடக்கான அவன் கேள்வி.

மெல்லத் திரும்பி அவனை முறைத்தாள். இருளில் பளபளத்த அவளது கண்கள் அவனை வெகுவாய் ஈர்த்தது. “வேணான்னா வுட்றுங்க. அதுக்கேன் இப்புடி மொறைக்கிறீங்க?” சிரிப்பை அடக்கும் குறும்பு அவன் முகத்தில்.

“ம்ப்ச், வாய மூடிட்டு படுத்து தூங்கு.”

“ஏங்க எப்புடிங்க தூக்கம் வரும்? எத்தினி நாளு கண்ட கனா இது? மெய்யாலுமே பக்கத்துல இருக்க சொல்ல தூக்கம் வருமாங்க ஒரு மனுஷனுக்கு?”

“…”

“ஏங்க கைய புடிச்சுக்கவா? வேற ஒன்னியும் பண்ண மாட்டேன். கைய மட்டும் புடிச்சிக்கிறேனே.” அவன் பார்வையிலும் குரலிலும் வழிந்த ஏதோ ஒன்று அவளை மௌனியாக்க, அவள் விழிகளைப் படித்தபடி கையோடு கை கோர்த்துக் கொண்டான்.

“கண்ண மூடி தூங்கறப்பவும் செரி கண்ண முழிச்சி பார்க்கறப்பவும் செரி இதேபோல உங்க மொகம் எப்பவும் என்னாண்ட நெருங்கி இருக்கனும்ங்க. அத்தக்காண்டி வேற எதுவுமே எனக்கு வேணாம். ராவும் பகலும் நான் பார்த்து ரசிக்கிற நிலா நீங்கதாங்க.” ரசனையாய் கூறியவனின் வார்த்தைகளில் கட்டுண்டவளுக்கு பேச்சே வரவில்லை.

வேறொன்றும் செய்ய மாட்டேன் என்று அவன் கூறியது அரசியல்வாதியின் வாக்குறுதி போலாக, இருவருக்குமான இடைவெளி சுத்தமாய் அற்றுப்போயிருந்தது.

கரம்பற்றியிருந்தவனின் கரங்கள் விலகி அவளது கன்னத்தை வருட, மெல்ல கண்மூடிக் கொண்டாள் நித்திலா.

காதோடு மௌனங்கள் இசைவார்க்க, உள்ளுக்குள் அலைகடலின் பேரோசை. தூக்கம் காணாத கருவிழிகள் இமைகளுக்குள் உருள, கணவனின் அருகாமையில் மனம் துளித்துளியாய் இளகியது. அவளது ஐம்புலனும் மனமுமே அவளுக்கெதிராய் செயல்படுவது போன்றொரு பிரமை.

மொத்தமாய் அணைத்துக் கொள்ளையிட்டால் கூட உணர்வடங்கிப் போகும், ஒற்றை விரல் தீண்டல் உயிர்வரை தகித்தது. உருகிக் கொண்டிருந்தாள் நித்திலா.

சொர்க்கமே கைப்பிடிக்குள் சிக்கியிருக்க, அணுஅணுவாய் ரசித்துக் கொண்டிருந்தான் பாரி. எதிர்ப்புகளற்ற பெண்ணின் உடல்மொழி மேலும் முன்னேறத் தூண்ட, அவளது இதழ்களை வருடியது அவன் விரல்கள்.

இருவரிக் கவிதையாய் அவளிதழ்கள், நெருங்கிப் படிக்கும் மோகம் அவனுக்குத் தலைக்கேற, மெல்ல நெருங்கி இதழோடு இதழணைக்கத் தவித்தவன், நூலிழை நெருக்கத்தில்,

“ஏங்க எம்மேல இருக்கற கோவமெல்லாம் போயிடுச்சா?” என்க,

அவ்வளவு நேரமும் ஏதோவொரு மயக்கத்தில் கட்டுண்டு இருந்தவள், மெல்ல விழி நிமிர்த்தி அவன் கண்களை நேராய் தீர்க்கமாய் பார்த்தாள்.

“நான் சாகற வரைக்கும் உன்மேல எனக்கிருக்கற கோபம் போகாது.”

உணர்வத்தனையும் வடிந்து போனது அவனுக்கு. கண்கள் அடிபட்ட வலியை பிரதிபலிக்க, மெல்ல அவளை விட்டு விலகினான்.

இந்த நிமிடம் கூட அவளது உடலை வளைத்துவிட முடியும். வளைந்து கொடுப்பாள் அவள். ஆனால் அவளது உள்ளத்தை வளைக்கும் வழியறியாது நொந்து போனான் பாரி.

உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று
கிடைக்க உயிருடன் வாழ்கிறேன்
நானடி…!

என் காதலும் என்னாகுமோ
உன் பாதத்தில் மண்ணாகுமோ… !

 

___தொடரும்