ஆழி சூழ் நித்திலமே 2(b)

திருவான்மியூர் கடற்கரைக் குப்பம்…  பாரியின் வீட்டின் முன்புறம் இருந்த கடற்கரை மணலில் பெரிய பெரிய தார்ப்பாய்களை விரித்து உப்புத் தடவிய மீன்களை உலர்த்திக் கொண்டிருந்தாள் கயல்விழி.

முன்தினம் பாரி பிடித்துவந்த மீன்களில் அவ்வளவாக விலை போகாத வகை மீன்கள் அவை. அவற்றில் சிலவற்றை உலர்த்தி கருவாடாக விற்பனை செய்ய முடியும்.  சில வகைகள் கோழிப் பண்ணைகளில் தூளாக்கப்பட்டு கோழிகளுக்கு உணவாகப் போகும்.

இந்த வேலைகளைப் பெரும்பாலும் வீட்டுப் பெண்கள் செய்வர். மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல பெண்களுக்குத் தடை உள்ளது. வெகு காலங்களாகவே பெண்கள் கடலுக்குச் செல்ல அனுமதி இல்லை. பிடித்து வந்த மீன்களை கரையோரத்தில் விற்பனை செய்வதும், மீதமாகும் மீன்களைப் பதப்படுத்துவதும் பெரும்பாலும் பெண்களே செய்கின்றனர். 

கயல்விழிக்கு உதவியாக மணியின் தமக்கை ஜீவாவும் தேவாவின் தாய் ராணியும் மீன்களை உலர்த்திக் கொண்டிருக்க,  அருகே மொபைல் ஃபோனில் விளையாடிக் கொண்டிருந்தாள் தேவாவின் தங்கை செல்வி.  அவளது கையில் இருக்கும் ஃபோனுக்காக அவளைச் சுற்றிலும் சில வாண்டுகள். 

“தபாரு செல்வி, இந்தா வருஷம் முக்கியமான பரீஷைக்கீது, அத்த படிகாமே குட்டிகளோட விளாண்டுக்கினுகீற. உங்கண்ணே எம்மாம் பாடுபட்டு உன்னைய படிக்க வெக்குது.”  கயலின் கேள்விக்கு முகம் சுழித்துக் கொண்டாள் செல்வி. 

“அடப் போக்கா… நானும் உன்னைய மாதிரி பத்தாவதுல ஃபெயிலாகியிருந்தா கம்முனு வூட்டுல குந்திக்கினு கெடந்திருப்பேன்.  பாசானாலும் ஆனேன் பாரியண்ணன் இஸ்த்துக்கினு போய் பெரிய ஸ்கூலாண்ட சேர்த்து வுட்ருச்சி. இம்மா நாளா படிக்கப் போகவே புடிக்கல யக்கோவ்.”

“அடிப்பாவி, எனக்கு மேம்படிப்பு வரல நான் படிக்காம வுட்டேன். உனக்கென்னடி கொற? பத்தாவதுல எம்மாம் ஜோரா  மார்க் வாங்கி பாஸ் ஆகிக்கிற நீயி?” வாயில் விரல் வைத்துப் பொத்தியபடி கயல் கேட்க, 

“அத்தெல்லாம் இப்ப படிக்கறதேல்ல கயலு. புள்ளைங்களோட கூட்டா விளாண்டுகினு டீவியாண்ட குந்திக்கினு அந்தான்ட இந்தான்ட நவுர்றதில்ல. அத்தோட அவ அண்ணே ஒரு போன வேற வாங்கியாந்து அவ கையில குடுத்துப்புட்டான். எம்மா நேரமும் அதுலேகீறா கீயயே வெக்கக் காணுமே.” .

 அங்கலாய்த்த ராணியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டாள் கயல், 

“வுட்டுத்தள்ளு பெரிம்மா, சின்னப் புள்ளதான அப்பால போகப் போக பொறுப்பு வந்துக்கும்.”

“என்னாத்த சின்னப்புள்ள…? வயசு பதினஞ்சு முடிஞ்சு பதினாறாகுது. உன்னா விட ரெண்டு வயசுக்குதான் புள்ள கம்மி.  கொஞ்சம்கூட பொறுப்பே கிடையாது. இன்னாப் பண்ண இன்னும் விளையாட்டுப் புள்ளையாவே சுத்திக்கினு இருக்கா. 

நீ இந்த வயசுக்குலாம் வூட்டுப் பொறுப்பே முழுசா பாக்க ஆரம்பிச்சிட்டே.  உன்னாட்டம் சமத்து பத்தாதுமே செல்விக்கு.”

“ம்க்கும்… என்னா சமத்து இருந்துக்குனு என்னா செய்ய?  வூட்டுல எல்லா வேலையவும் இழுத்துப் போட்டுக்கினு செய்யறா, பாரிக்கு குளிக்கத் தண்ணி மொண்டு  வெக்கறதுல இருந்து வாய்க்கு ருசியா சமைச்சுப் போட்டுக்கினு அவன் துணிமணி முழுசா துவைச்சுப்  போட்டுக்கினு எம்மாம் ஷோக்கா  பொண்டாட்டி மாதிரி பாத்துக்குறா அவன. 

ஆனாக்க பாரிய முந்தானையில முடியத்  தெரியலயே. கல்யாணத்துக்குப் பிடி குடுக்க மாட்டேங்குது பாரின்னு ஒரே ஜோகம் ஆயாவுக்கு.”  ஜீவா புலம்பினாள். 

“பிடி குடுக்காம எங்கக்கா போயிடும் மாமா? ஏன்க்கா  என்னையும் குழப்பிவுட்டுக்கினுக்கிற?”  குரல் மெலிந்து உள்ளே போய் விட்டது கயல்விழிக்கு. 

“குழப்பிவுடலடி…  ஆம்பளைங்களுக்கு மனசு அலைபாயும். பொம்பளைங்க நாமதான் சூதானமா இருந்துக்கோனும். வாய் வார்த்தயானாலும் ஒரு தபா உன்னையக் கட்டிக்கறேன்னு சொன்னுச்சா உம்மாமன். நீதான் அவனையே நினைச்சு மருகிக்கினு கெடக்குறியேன்னு சொன்னேன்டி.”

“அட யாருடி இவ. வாய் வார்த்தையா சொல்லாங்காட்டி என்னா? நெனவு தெரிஞ்ச நாள்லயிருந்து கயலுக்கு அல்லாமே பாத்துப் பாத்து செஞ்சவன் பாரிதான.

 இன்னிக்கு வரைக்கும் கடலுக்குப் போயிக்கினு வந்ததும் வரும்படியப் பூரா கொண்ணாந்து பொண்டாட்டி கையில குடுக்கறது கணக்கா குடுக்கறான்ல. 

கயலுக்கு இப்ப என்னா வயசு ஆகிபுடுச்சி? சின்னபுள்ள… படிக்கப் போயிருந்தா காலேசு படிக்கிற வயசுதான?  கல்யாணம் கட்டுவான். எங்க போயிடப் போறான்? நாமல்லாம் எதுக்கு இருக்கோம்?  புடிச்சி கோழி அமுக்கறது கணக்கா பயல அமுக்கி நம்ப கயலுக்கு கட்டி வச்சிட மாட்டோம்.”

ராணியின் பாவனையில் சிரிப்பு வர சிரித்துக் கொண்டனர் ஜீவாவும் கயல்விழியும். மேற்கொண்டு பல விஷயங்களை வாய் பேசிக் கொண்டிருந்தாலும் கயலுக்கு மனது அலைபாய்ந்து கொண்டிருந்தது.  ஜீவாவின் சொற்கள் காதில் ஒலித்தபடி இருந்தது.

 அதே நேரத்தில் முன்தினம் டேவிட் வீட்டில் நடந்த பிரச்சனைக்கு மீனவர் சங்கத்தில் பஞ்சாயத்து கூடியிருந்தது. பாரியும் அதற்கு அழைக்கப் பட்டிருந்தான். அவள் நினைவுகள் முழுக்க, பஞ்சாயத்தில் பாரி என்ன செய்து  கொண்டிருக்கிறான்? என்பதிலேயே மையம் கொண்டிருந்தது. 

அப்பொழுது அவள் இடுப்பில் சொருகியிருந்த அலைபேசி இசைக்கத் துவங்கவும் எடுத்து அழைப்பது யாரெனப் பார்த்தவளுக்கு பாரியின் எண்ணைக் கண்டதும் முகம் மலர்ந்தது. நேரில் எவ்வளவு பேசினாலும் ஃபோனில் மாமன் தனக்கு மட்டும் கேட்கும்படி பேசுவது அவ்வளவு சந்தோஷத்தைக் கொடுக்கும் அவளுக்கு. 

“கயலு…”

“சொல்லு மாமா. பஞ்சாயத்துல என்னா சொன்னாங்க? வூட்டுக்கு வரல நீயி?”

“பஞ்சாயத்து இனிமேட்டுதான் தொடங்கும் புள்ள. ஐயாவும் வெற்றியும்  இப்பத்தேன் வந்தாங்க. மதியானம் வெற்றி வூட்டுக்குப் போயிட்டு ரவைக்குதான் வூட்டுக்கு வருவேன். எனக்கான்டி வெயிட்டு பண்ணாம நீயும் ஆயாவும் சாப்பிடுங்க. பஞ்சாயத்துக்கு எல்லாரும் வந்துட்டாங்க  வச்சிடுவா.”  படபடவென   பேசிவிட்டு வைத்தான் பாரி. 

 ஜீவாக்கா பேசியதில் ஒரு பக்கம் மனம் குழப்பமாயிருந்தாலும், பாரி பேசியதும் தன் மீது மாமனுக்கு இருந்த அக்கறையும், மாமன் மீது தனக்கிருந்த நம்பிக்கையும் மனதுக்கு ஆறுதல் கொடுத்தது. தன்னை மீறி அவன் போக மாட்டான் என்ற எண்ணம் உறுதியாய் உள்ளுக்குள் தோன்றியதும் செய்யும் வேலை உற்சாகமாய் நடந்தது. 

ஊருக்கே கயல் பாரியின் மீது வைத்திருக்கும் நேசம் தெரிந்திருக்கையில் பாரிக்குத் தெரியாமலா போய்விடும்?  பெண்மனம் ஆழமென்று சொல்வார்கள்…  சில ஆண்களின் மனம் கூட ஆழமானதுதான். அதில் புதைந்துள்ள எண்ணங்கள் வெளியில் யாருக்கும் தெரிவதில்லைதான். 

 

எல்லோருடைய வாழ்விலும் நாம் மரத்தடி வேராய் இருந்துவிட முடியாது. சில நேரங்களில் உதிர்ந்து விடும் இலையாகவும் வெட்டப்படும் கிளையாகவும் இருந்துதான் ஆகவேண்டும். அதுதான் யதார்த்தம். 

பாரியின் வாழ்க்கையில் கயல்விழி மரத்தடி வேரல்ல…  வெட்டப்படும் கிளையென்பதை காலம்தான் அவளுக்குப் புரிய வைக்க வேண்டும்… 

 

*******

 

 

இரண்டு கைகளிலும் சுமக்க முடியாத அளவுக்கு பெரிய பெரிய பைகளைச் சுமந்தபடி பரசுராமன் தனது வீட்டினுள் நுழையும் போது வீட்டின் நிலை வெகுவாய் மாறி இருந்தது. 

அலைபாயுதே கண்ணா

என்மனம் அலைபாயுதே…

ஆனந்த மோகன வேணுகானமதில்

அலைபாயுதே கண்ணா

என்மனம் அலைபாயுதே…

உன் ஆனந்தமோகன வேணுகானமதில்

அலைபாயுதே கண்ணா …  

ஏ. ஆர். ரஹ்மான் இசையில் சன்னமாய் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க,   அதனை ரசித்தபடி,  தலைக்குக் குளித்து ஈரத்தலைக்கு தன் தாய் போட்டு விட்ட சாம்பிராணிப் புகையின் வாசம் பிடித்தவாறு பால்கனி ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள் நித்திலா.  இடை தாண்டி தொடை தொட்டிருந்த கூந்தல் அலைஅலையாய் வழிந்து கொண்டிருந்தது. 

பிழிவதற்குச் சற்று சிரமமாக இருந்த இடியாப்ப அச்சில் மாவை பாக்கிய லஷ்மி வைத்துக் கொடுக்க,   அதை வாகாக இடியாப்ப தட்டில் பிழிந்து கொண்டிருந்தான் நிகிலேஷ். 

ஆண் பிள்ளை பெண் பிள்ளை பாகுபாடெல்லாம் கிடையாது. இரு பிள்ளைகளுக்குமே வாழ்க்கைக்குத் தேவையானவை அனைத்தையும் கற்றுக் கொடுத்திருந்தார் பாக்கிய லஷ்மி. 

விடுமுறை தினங்கள் எப்பொழுதுமே ஸ்பெஷல் நித்திலாவுக்கு. எண்ணெய் தேய்த்து பாக்கிய லஷ்மி செய்துவிடும் மசாஜ் ஆகட்டும்,   முகத்துக்கும் கை கால்களுக்கும் இயற்கை பொருட்களைக் கொண்டு ஏதேனும் ஒரு பேக் ரெடி செய்து போட்டுக் கொள்வதாகட்டும்,  தலைக்குக் குளித்து சாம்பிராணி வாசத்துடன் மணக்கும் கூந்தலாகட்டும் மிகவும் பிடிக்கும் அவளுக்கு.

அதோடு காலை வேளைகளில் தம்பியோடு போடும் செல்லச் சண்டைகளை மிகவும் விரும்புவாள். தன்னைவிட மூன்று வயது இளையவனாய் இருந்தாலும், ஒரு தோழன் போல பழகக்கூடியவன். தொட்டதுக்கெல்லாம் மல்லுக் கட்டினாலும் தன்மீது உயிரையே வைத்திருப்பவன் அவன் என்பதும் தெரியும் அவளுக்கு. 

தலைக்குக் குளித்து முடித்து வந்ததும் சுடச்சுட அன்னை போட்டுத்தரும் ஹார்லிக்சோடு  கூடை ஊஞ்சலில் பால்கனியில் அமர்ந்தவாறு தூரத்தில் தெரியும் அலை கடலை ரசிப்பது அவளுக்கு மிகமிக பிடிக்கும். 

பால்கனியில் அமர்ந்திருந்தவள், சுமைகளைத் தூக்க முடியாமல் தூக்கி வரும் தந்தையைக் கண்டதும் ஓடிச் சென்று அவரது கைச்சுமையை வாங்கிக் கொண்டாள் நித்திலா. 

“கீழ இருந்து ஒரு ஃபோன் பண்ணியிருக்கலாம்ல ப்பா.  நானோ நிக்கியோ வந்திருப்போம்ல. மாடிக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு இதை தூக்கிட்டு வரனுமா?”

“லிப்ட்டுலதானடா வந்தேன் ஒன்னும் சிரமமில்ல. நுங்கு கேட்டியே. அப்பா வாங்கி வந்துருக்கேன் பாரு.”  

வெயிலில் சென்று வந்த களைப்பு அப்பட்டமாய் அவர் முகத்தில் தெரிந்தது வயதுக்கேற்ற தளர்ச்சியும் சேர,  ஆயாசமாய் சேரில் சரிந்து அமர்ந்தார். அவருக்கு வேகவேகமாய் தண்ணீர் கொண்டு வந்து தந்தார் பாக்கிய லஷ்மி. 

“இந்த நுங்கு வாங்கறதுக்காக இப்படி வெயில்ல அலையாட்டி என்ன? பாருங்க எப்படி வேர்த்துப் போயிருக்கு.” என்றபடி ஹால் மின்விசிறியை சுழல விட்டார். 

“நிலாம்மா ஆசையாக் கேட்டுது. இந்நேரத்துக்குப் போனாதான் கிடைக்கும். எனக்கு ஒன்னுமில்ல.”  என்றபடி துண்டால் முகம் கழுத்து வேர்வையைத் துடைத்துக் கொண்டவர். 

“நிறைய நுங்கு வாங்கி வந்திருக்கேன். போன தடவை செய்த மாதிரி நுங்குபாயசம் செய் லஷ்மி. பாப்பா ஆசையா சாப்பிடுவா.” மனைவியிடம் கூறியவர்,  ஆவலோடு பையைப் பிரித்து நுங்கை எடுத்துச் சுவைத்த மகளையே ஆசையோடு பார்த்திருந்தார்.  

மகள் ஒன்றை ஆசைப்பட்டு கேட்டுவிட்டால் எப்பாடு பட்டாலும் அவளுக்குப் பெற்றுத் தரவேண்டும் என்ற எண்ணம் பரசுராமனுக்கு உண்டு. மகளின்  ஆசைகள் எப்போதுமே ஆடம்பரமாய் இருந்ததில்லை. ஆகையால் அவற்றை நிறைவேற்ற அவர் சிரமப்பட்டதும் இல்லை. 

அதேபோல, இத்தனை வயதிலும் வீட்டுக்குத் தேவையான பொருட்களை அவரே பார்த்துப் பார்த்து வாங்கிப் போட்டால்தான் அவருக்குத் திருப்தி. பழைய வாடகை வீட்டில் இருந்தவரை மார்க்கெட் கொஞ்சம் பக்கம். பாக்கிய லஷ்மியே மார்க்கெட் சென்று தேவையானவற்றை வாங்கிக் கொள்வார். 

ஆனால், சொந்தவீடு திருவான்மியூர் புறநகர். ஆகையால் பரசுராமனே வாரம் ஒருமுறை மார்க்கெட் சென்று அந்த வாரத்துக்குண்டான காய்கறிகள் மளிகை பொருட்கள் போன்றவற்றை வாங்கி வந்துவிடுவார். 

அவர்களுடைய ஏரியா சற்று வளர்ச்சியடையாத ஏரியா. அங்கொன்றும் இங்கொன்றுமாக புத்தம் புதிதாய் வீடுகள் முளைத்துக் கொண்டிருக்கும் ஏரியாவில் பாதிக்கு மேல் காலி மனைகளே. 

ஆகவே, மனைவியையோ மகளையோ தனியே அனுப்ப அவருக்கு சற்று பயமுண்டு.  ஏரியாவுக்குப் பின்புறம் இருக்கும் மீனவ குப்பமும் நாகரீகம் சற்று குறைந்த அந்த மனிதர்களும் அவருக்கு இனம்புரியாத பயத்தை ஏற்படுத்துவதுண்டு. 

பொதுவாகவே எந்தப் பிரச்சனையிலும் தலையிடாமல் ஒதுங்கிப் போகும் சாத்வீக குணமுடைய அவருக்கு, சர்வ சாதாரணமாக கைகலப்பில் ஈடுபட்டு ரோட்டில் கட்டிப் புரண்டு சண்டையிடும் அவர்களைக் கண்டால் சற்று பயம்தான். 

இந்த ஏரியாவுக்கு குடி வந்ததிலிருந்து நித்திலாவைத் தனியே வெளியே செல்ல அனுமதிப்பதில்லை அவர்.  கல்லூரிக்கோ வேறெங்கும் வெளியே போக வேண்டுமென்றாலும் அவரோ நிகிலேஷோதான் அழைத்துச் செல்வர். 

சென்ற வருடம் முழுவதும் அவர்தான் அவருடைய ஸ்கூட்டரில் பாதுகாப்பாக அவளை அழைத்துச் சென்றது. இந்த வருடம்தான் நிகிலேஷூக்கு பதினெட்டு வயது நிரம்பியதும் வண்டி ஓட்டப் பழகி,  லைசென்ஸ் எடுத்ததும் நிகிலேஷ் விரும்பிய மாடலில் புத்தம் புதிய இருசக்கர வாகனத்தை வாங்கித் தந்திருந்தார். 

ஆகவே, இளையவர்கள் இருவரும் ஒன்றாக கல்லூரிக்குச் சென்றுவிடுவர். வயதில் சிறியவனாய் இருந்தாலும் நிகிலேஷ் இதிலெல்லாம் வெகு பொறுப்பு. தன் தமக்கையை பத்திரமாக கல்லூரியில் விட்டுவிட்டுதான் அவனுடைய கல்லூரிக்குச் செல்வான். 

நித்திலாவைப் பொறுத்தவரை வெளியுலகம் அவ்வளவாகத் தெரியாத,  பாதுகாப்பான சூழலில் வளர்ந்த பெண் அவள். அவளது உலகம் மிகச் சிறியது. தாய் தந்தை தம்பியைத் தவிர வேறு யாருக்கும் அந்த உலகத்தில் இதுவரை இடம் கொடுத்திராதவள். 

மனிதர்களில் பல்வேறு வேடமிட்ட விலங்குகளும் வல்லூறுகளும் உலவும், அவற்றின் பார்வையிலோ கைகளிலோ சிக்காத வரைதான் நமக்கு பாதுகாப்பு என்பது தெரியாத வெகுளிப் பெண்.  

பின்னாளில் ஒருவனை சந்திப்போம், தன் வாழ்வின் ஒட்டு மொத்த பிரச்சனைக்கும் காரணமான அவனே தன்னை அவ்வளவு பிரச்சனையிலிருந்தும் விடுவித்துக் காத்துக் கொள்வான் என்பதைப் பாவம் அவள் இப்போது அறிந்திருக்கவில்லை. 

 

—-தொடரும்.