ஆழி சூழ் நித்திலமே 3(ஆ)

“அன்னைக்கு உனக்கு ஒரு பிரச்சனைன்னா ஓடி வந்தான்ல,  அதே மாதிரி இன்னைக்கு டேவிட்டுக்கு பிரச்சனைன்னாலும் வருவான். அதான் பாரி.”

“…”

“விவசாயியும் மீனவனும் உலகத்துக்கே சோறு போடற தொழில் செய்யறவங்க. ஆனா, அவங்களுக்கு ஒரு கஷ்டம்னா எவனும் உதவி பண்ண வரமாட்டான். அவங்களே அவங்களுக்குள்ள உதவிக்கனும். 

விவசாயிக்காவது இயற்கை சீற்றங்கள்ல பயிர்தான் போகும். ஆனா மீனவனுக்கு…! அவன் உயிரே போகும். நிலையில்லாத வாழ்க்கை வாழறவங்கடா நாம. நமக்குள்ளவே ஒத்துமை இல்லைன்னா என்ன செய்ய முடியும் சொல்லு.”

“…”

“ பாரியப் பொறுத்தவரை தப்பான விஷயத்தை அவனும் செய்ய மாட்டான். அடுத்தவனையும் செய்ய விடமாட்டான். நீ செய்தது தப்பு அதான் உன்னை தட்டிக் கேட்டான். உன்னை அடிச்சதுக்கு அவன உன்கிட்ட மன்னிப்புக் கேக்கச் சொல்றேன். நீ டேவிட்டுக்கிட்ட அநியாயமா வாங்குன வட்டிப் பணத்தை திருப்பி குடு.”

மகேந்திரன் பேச்சில் இருந்த நியாயம் புரிந்தது சூசைக்கு. “நான் செஞ்சது தப்புதாங்கய்யா. டேவிட்டுக்கிட்ட நான் பணத்தைத் திருப்பி குடுத்துடறேன்.

நான் செய்தது தப்புதான். பாரி டேவிட் ரெண்டு பேருமே என்னை மன்னிச்சிடுங்க.” தயங்காமல் சூசை மன்னிப்பு கேட்க, 

“அட… சூசை நான்தான் உன்னாண்ட மன்னிப்புக் கேட்கனும். வயசுல பெரியவன் நீயி… உன்னைய அடிச்சது தப்புதான். மன்னிச்சிடு சூசை.”  என்றபடி அணைத்துக் கொண்டான் பாரி. 

“சரி… சரி… இனிமே எந்தப் பிரச்சனையா இருந்தாலும் நமக்குள்ள தீர்த்துக்கனும். பாரி… அடிதடியில இறங்கறதும் தப்புதான் புரியுதா? ஒரே தொழில் செய்யற நாம ஒத்துமையா இருந்தாதான், நம்ம இனத்துக்குத் தேவையான சலுகைகளை அரசாங்கத்துக்கிட்டயிருந்து போராடி வாங்க முடியும். 

புயல் வரப்போறது முதல்ல மீனுங்களுக்குத் தெரியும். அதுக்கடுத்து மீனவனுக்குத்தான் தெரியும். ஆனா இயற்கை சீற்றங்களை கண்காணிக்கற வானிலையியல் சம்பந்தப்பட்ட துறையில நம்ம ஆளுங்க ஒருத்தர்கூட கிடையாது. அதைவிடு… மீனவர்கள் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட மீன்வளத்துறையிலகூட ஒரு மீனவனும் கிடையாது. 

விவசாய நலத்துறையிலகூட ஒரு விவசாயியாவது இருப்பான். ஆனா நமக்கு சம்பந்தப்பட்ட இந்த இரண்டு துறையிலயும் நம்ம ஆளுங்க ஒருத்தர்கூட கிடையாது. அப்புறம் எப்படி அங்க இருக்கற அதிகாரிகளுக்கு நம்ம நிலை புரியும்? 

 இதுக்கு காரணம் என்ன? நம்மள்ல படிச்சு முன்னுக்கு வர்றவங்க ரொம்ப கம்மி. பிள்ளைகளை நல்லா படிக்க வைங்க. நம்ம தொழிலைக் கத்துக் குடுக்கற அதே நேரத்துல அவங்க சமுதாயத்துல உயர்ந்த நிலைக்கு வரனும்னா படிப்பைத் தவிர வேற எதாலயும் முடியாது. 

இன்னைக்கு நல்ல தரமா ஒரு போட் கட்ட ஒன்னுல இருந்து ஒன்றரை கோடிவரை ஆகும். இங்க  இரண்டு மூனு போட் வச்சிருக்கவங்க கூட இருக்கீங்க. ஆனா சமுதாயத்துல நீங்க ஒரு கோடீஸ்வரன்னு உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்குதா? 

மீனவன்னா படிப்பறிவில்லாத, நாகரீகம் இல்லாத முரட்டுப் பசங்கங்கற நினைப்புதான எல்லாருக்கும் இருக்கு. அதை மாத்த நல்ல கல்வியால மட்டும்தான் முடியும்.”

மகேந்திரன் பேசுவது அனைவருமே ஏற்றுக் கொள்ளும்படி இருந்தது.

மேலும் அவர்களது தொழில் தொடர்பான பல விவாதங்கள் நடந்தன. தொடர்ச்சியான எரிபொருள் விலையேற்றமும், டீசலுக்கு அரசாங்கம் கொடுக்கும் மானியம் போதவில்லை என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டு அதுபற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுவதாக மகேந்திரனால் உறுதி கொடுக்கப்பட்டது. 

சைனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதிவேக இன்ஜினை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டு தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது என்று மீனவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.  ஒருவாறாக அனைத்து விபரங்களும் பேசி முடிக்கப்பட்டு சங்கத்து உறுப்பினர்கள் கலைந்து சென்றனர். 

“ஏலே பாரி, மீனாம்மா உன்னைய வீட்டுக்கு வரச் சொல்லுச்சி. கொடிக்கறி குழம்பு வச்சிருக்காம். உன்னைய கையோட கூட்டியாறச் சொல்லுச்சி.” சங்கக் கட்டிடத்தை விட்டு வெளியே வந்ததும் மகேந்திரன் கூற, 

“மதினி கையால கொடிக்கறி குழம்பு சாப்பிட்டு எவ்ளோ நாளாச்சு. வரேங்கய்யா… நீங்க முன்ன போங்க நான் என் வண்டியில வரேன்.”

மகேந்திரனும் ஞானவேலும் அவர்களது வாகனத்தில் ஏறிச் சென்றுவிட, பாரியின் பின் தொற்றிக் கொண்டான் வெற்றி. வெற்றியின் வீடு நோக்கிச் செல்லும் மெயின் ரோட்டைப் பிடித்ததும் வாகனம் வேகமெடுத்தது. 

“மதினி கையால கொடிக்கறி குழம்பு திங்க வர்றியாக்கும்.” நண்பனின் தோளில் கை வைத்து வாகாக அமர்ந்தவாறு புன்சிரிப்போடு வெற்றி கேட்க,  அவன் முகத்தை வண்டியின் முன்புறம் இருந்த கண்ணாடியை அட்ஜஸ் செய்து பார்த்தவாறு, 

“டேய், புள்ளைங்களைப் பார்த்து எம்புட்டு நாளாச்சு? அதுக்காகவும்தான்டா வரேன்.”

“வா… வா… தூத்துக்குடியில இருந்து எவளோ ஒரு ஊளை மூக்குக்காரிய பார்த்து வச்சிருக்கு மதினி. என் தலையிலயாவது உன் தலையிலயாவது கட்டிப்புடனும்னு காத்திருக்கு. ஒரு வாரமா சோப்பு போட்டும் என்னைய அசைக்க முடியலைங்கவும் இன்னைக்கு உனக்கு அழைப்பு வந்திருக்கு. சூதானமா பொழைச்சுக்கோ நண்பா.”

வெற்றியின் பாவனையில் சப்தமாகச் சிரித்தவன், “ஊளை மூக்குக்காரியா? அது யாருடா?”

“மதினிக்குத் தூரத்துச் சொந்தமாம். தங்கச்சி முறையாம். கிளி கணக்கா இருப்பான்னு என்கிட்டவே பொய் சொல்லுது. அவுக சொந்தத்துல கிளி கணக்கா ஒருத்திகூட இல்ல. அவுக கல்யாணத்தும்போது நீயும் நானும் பார்க்காததா?”

“ஏலேய், என்னைய ஏன்டா உன்கூட கூட்டுச் சேர்க்கற. நானெல்லாம் கல்யாண வேலையத்தான் பார்த்தேன்.”

“யோக்கியன் வர்றான் சொம்பத் தூக்கி உள்ள வைய்யின்னானாம். டேய் அடங்குடா. நீ யாருன்னு எனக்குத் தெரியும். நான் யாருன்னு உனக்குத் தெரியும். சொல்றத சொல்லிட்டேன் பொழைச்சுக்கோ.”

“சரி, சரி… பார்த்துக்கலாம் விடு.”

“மதினி போனதும் உனக்கு மஞ்சத் தண்ணியத் தெளிக்கும். கறிச் சோறுக்கு ஆசைப்பட்டு தலைய ஆட்டிப்புட்ட, ஒரே வெட்டுதான். தூத்துக்குடிக்காரிக்கு உன்னைய பலி குடுத்துரும் ஜாக்கிரதை.”

“ஹா… ஹா… ஹா… மதினி என்னா சொன்னாலும் நாலா மடங்கி எட்டா வளைஞ்சு நிப்ப… இப்ப எப்படி ஒரு வாரமா மறுப்பு சொல்லினுக்கற?”

“மத்ததெல்லாம் சரிதான். இது வாழ்க்கை… காலம் முழுக்க கூட வாழப்போறவ மனசுக்குப் புடிக்க வேணாமா?” ஸ்ருதி குறைந்திருந்தது வெற்றியின் குரலில். 

“பாக்காமயே எப்படிப் புடிக்கும் வெற்றி? ஒரு தபா பொண்ணைப் பார்க்கலாம்ல.”

கனத்த மௌனம் வெற்றியிடம். மௌனமாய் இருந்த நண்பனின் மனதுக்குள் வீசும் புயல் புரிந்தும் புரியாத நிலை பாரிக்கு. 

“வெற்றி… ஏன் அமைதியாகிட்ட?”

“ம்ப்ச்…  உனக்குத் தப்பிச்சிக்க வழி சொன்னேன். என்னை இதுல மாட்டி விடாத. எந்தப் பொண்ணையும் பார்க்கற மனநிலை இப்ப எனக்கில்ல. வருஷம் போகட்டும் அப்புறம் பார்க்கலாம்.”

நண்பனின் மனதில் ஏதோ காயமிருக்கிறது என்பது பாரிக்குத் தெரியும். எவ்வளவு வற்புறுத்தியும் என்னவென்று சொல்ல மறுப்பவனை என்ன செய்ய முடியும். 

மாறும் காலங்களுக்கு மட்டுமே நண்பனின் மனக்காயத்தை ஆற்றும் சக்தி உள்ளது என்று எண்ணிக் கொண்டான்.  

சில நிமிடப் பயணத்தில் வெற்றியின் வீடு வந்திருக்க, வண்டியை வெளியே நிறுத்தி பூட்டிவிட்டு நண்பர்கள் இருவரும் இறங்கி உள்ளே சென்றனர். 

ஞானவேலும் வெற்றிவேலும் தொழிலில் தலையெடுக்கும் முன்புவரை குப்பத்தினுள் வீடு கட்டி குடியிருந்தவர்கள்தான். அண்ணன் தம்பியின் வளர்ச்சிக்குப் பிறகு திருவான்மியூரிலேயே மெயினான இடத்தில் வீடு வாங்கிக் குடியேறியிருந்தனர்.

சற்று பழமையான வீட்டை வாங்கி, புதுப்பித்து பழமையும் புதுமையும் கலந்ததாய் மாற்றியிருந்தனர். பாரியையும் வெற்றியையும் கண்டதும், “சித்தா…” என்றபடி தாவி வந்து ஏறிக்கொண்டான் ஞானவேலின் ஐந்து வயது மகன் பரத். 

 சிறுவனைக் கையில் அள்ளிக் கொண்டவன், முத்தமழை பொழிய… அதற்குள் தளிர் நடையிட்டு அவனை நெருங்கியிருந்தாள் ஞானவேலின் ஒன்றரை வயது மகள் பார்கவி. 

சிறுவனை இடது கைக்கு மாற்றியவன், வலது கையால் பார்கவியை அள்ளிக் கொள்ள,  அவனது கழுத்தைக் கட்டிக்கொண்ட குழந்தைக்கும் முத்தம் பதித்தவன், வீட்டினுள் நுழைந்தான். 

“வா பாரி…  நான் வந்து வரவேற்கறதுக்குள்ள இதுங்க ரெண்டும் ஓடி வந்துடுச்சா.”

“நம்ம வூட்டுக்கு நான் வர்றதுக்கு வரவேற்புலாம் எதுக்கு மதினி?”

“அதுவும் சரிதான். நீயாவது மதினின்னு என் மேல பாசம் வச்சு ஆசையா பார்க்க வந்தியே.” வெற்றியைப் பார்த்து முறைத்தபடியே கூற… 

“யப்பா டேய் பாரி, பாசம் ஓவரா பொங்கி வழியுது. பார்த்து வழுக்கி வுழுந்துடப் போற.” நக்கலாய் பதில் சொன்னான் வெற்றி. 

“நீ சொன்னாலும் சொல்லாட்டியும் பாரி பாசக்காரன்தான். நீ வா பாரி. உனக்காகதான் ஆசையா கொடிக்கறி குழம்பு வச்சேன். அவங்களும் மாமாவும் சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க. நீயும் சாப்பிட வா.” பாரியை அழைத்தாள். 

வெற்றியைப் பார்த்து பழிப்புக் காட்டியபடி, “சொல் பேச்சு கேக்கலைன்னாலும் உனக்கும் சாப்பாடு போடுவேன். நீயும் சாப்பிட வா.” என்றவள் கழுத்தை வெட்டிக்கொண்டு உள்ளே சென்றாள். 

அவளின் சிறுபிள்ளைத்தனமான செய்கையில் சிரித்த வெற்றி, தானும் உணவு மேசைக்குச் சென்றான்.

பாரியின் மீது தொற்றிக் கொண்டிருந்த பிள்ளைகளை வாங்கி விளையாட விட்டவள், உணவு மேஜையில் அமர்ந்த வெற்றிக்கும் பாரிக்கும் தட்டு வைத்துப் பரிமாறினாள். 

சிறிது நேரம் ஆண்கள் பொதுவாகப் பேசிக் கொண்டிருக்க… மகேந்திரன், “ஏம்மா மீனா… பாரிக்கிட்ட என்னமோ கேக்கனும்னு சொன்னியே கேளு.”

மேஜைக்குக் கீழே பாரியின் கால்களைத் தன் காலால் அழுத்திய வெற்றி குனிந்து கொண்டு அமைதியாக சாப்பிட,  நண்பனைத் திரும்பி பார்த்துவிட்டு, “என்னா மதினி சொல்லனும்… சொல்லுங்க.”

“ஒன்னுமில்ல தம்பி, எங்க சித்தப்பாரு பொண்ணுக்கு வரன் பாக்கறாங்க. நம்ம கையிலயே வரன் இருக்கயில ஏன் வெளிய பாக்கனும்னு நான்தான் நிறுத்தி வச்சிருக்கேன். 

இந்தா இருக்கானே உன் நண்பன் பிடியே குடுக்க மாட்டேங்குறான். உனக்கு வேணும்னா அந்தப் பொண்ணைப் பார்ப்போமா?  பொண்ணு அழகா கிளி கணக்கா இருப்பா.”

மீனாவின் கடைசி வரியில் புரைக்கேறி இருமிய பாரியின் தலையில் தட்டிய வெற்றி, “பார்த்துப் பார்த்து… பைய சாப்புடு பாரி. இதுக்கே புரையேறுதே உனக்கு” என்க. 

தண்ணீர் டம்ளரை அவன்புறம் நகர்த்திய ஞானவேலும், “டேய் எவ்வளவு நாளைக்குதான் தனியாவே காலத்தை ஓட்டுவீங்க. உங்களுக்குன்னு குடும்பம் குட்டின்னு பெருக வேண்டாமா?”

“அதான, மீனா சொல்ற வரன் நல்ல வரன். உங்க ரெண்டு பேர்ல யார் ஒத்துக்கிட்டாலும் சரி. உடனே பொண்ணைப் போய் பார்த்துட்டு பரிசம் போட ஏற்பாடு பண்ணலாம்.” மகேந்திரனும் ஒத்து ஊதினார். 

“என்னை இதுல இழுக்காதீங்க. என்னோட முடிவை எப்பவோ சொல்லிட்டேன். எனக்கு இன்னும் இரண்டு வருஷம் போகட்டும். நான் சொல்லும் போது பொண்ணு பாருங்க.” கட் அண்ட் ரைட்டாகப் பேசிய வெற்றி குனிந்த தலை நிமிராமல் சாப்பிட ஆரம்பித்தான். 

“போன வருஷம் கேட்டப்பவும் இதே பதிலைதான் சொன்ன நீ.” மீனா கடுப்போடு கூறினாள். 

‘அடுத்த வருஷம் கேட்டாலும் இதைதான் சொல்லுவேன்’ மனதிற்குள் எண்ணிக் கொண்டவன் வாயே திறக்கவில்லை. 

“வெற்றியக் கொஞ்சம் விட்டுப் புடிப்போம். நீ பாரிக்கிட்ட கேளு மீனா.” மகேந்திரன் மருமகளை சமாதானப்படுத்த… 

“ஐயா, தொழில்ல இன்னும் கொஞ்சம் முன்னேறி வீடு வாசல்னு வாங்குனதும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு யோசிச்சிருக்கேன்.” கவனத்தோடு வார்த்தைகளைக் கோர்த்தான் பாரி. 

“ஏன் பாரி இப்பவே நீ நினைச்சா உடனடியா வீடு கட்ட முடியும். இப்பவும் தொழில் நல்லபடியா நடக்கத்தான செய்யுது. இது ஒரு காரணமா? வேற எதுவும் மனசுல வச்சிருக்கியா தயங்காம சொல்லு.” கயல்விழியை மனதில் நிறுத்தி மகேந்திரன் கேட்க,  பதில் ஏதும் கூறாமல் மௌனித்தான் பாரி. 

“இப்படியே இரண்டு பேரும் அமுக்கமா இருந்தா என்னடா அர்த்தம்? எனக்கு ரெண்டுல ஒன்னு இன்னைக்குத் தெரிஞ்சாகனும். 

பாரி, ஒன்னு நீ நாங்க பாக்கற வரனை முடிக்கனும். இல்லையா அந்த கயலு புள்ளையவாது கல்யாணம் பண்ணனும். ஆயா விசனப்பட்டுக்கினு இருக்குது. நீ இப்பவே முடிவாச் சொல்லு.”

மீனாவின் வார்த்தைகளில் கயல்விழியின் பெயர் வரும்போது உணவு உண்டு கொண்டிருந்த வெற்றியின் கரம் ஒரு நொடி நின்று மீண்டும் இயங்கியது. அடைத்த தொண்டையில் நீரைச் சரித்துக் கொண்டான். 

அனைவரின் வாழ்விலும் மறக்கவே முடியாத ஒரு முகமும் மறந்திட விரும்பும் ஒரு முகமும் இருப்பது சகஜம். ஆனால், இரண்டும் ஒரே முகமாய் இருப்பது விதியின் சதியன்றி வேறேது…

மௌனமாய் சாப்பிட்டு முடித்தவன், யார் முகத்தையும் பார்க்காமல் எழுந்து சென்றான். 

— தொடரும்.