ஆழி சூழ் நித்திலமே

1596006291531-f9c8566b

ஆழி சூழ் நித்திலமே

  18

 

நடந்து முடிந்த எந்தவொரு நிகழ்வுக்கும் மூன்றுவிதமான தீர்வுகளை நாம் காணமுடியும்.

ஒன்று நடந்ததை அப்படியே நிறைவாக ஏற்றுக்கொள்வது. இரண்டாவது ஏற்றுக்கொள்ள முடியாததை நமக்கேற்றது போல மாற்றிக்கொள்வது.

 மூன்றாவது ஏற்றுக்கொள்ளவும் மாற்றிக்கொள்ளவும் முடியாத பட்சத்தில் நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிடுவது.

நித்திலாவுக்கு நடந்த திருமணத்தை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அதை மாற்றிக்கொள்ளும் எண்ணமுமில்லை. நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட்டாள்.

பாக்கியலஷ்மிக்காக சம்மதம் என்று சொல்லி பாரியோடு வந்துவிட்டாளே தவிர அன்று முழுவதுமே மனது பெரிதும் முரண்டியதுதான் நிஜம்.

அதிலும் பாரிக்காக கயல்விழி காத்திருக்கிறாள், இடையில் பாரி வேறு திருமணம் முடித்துவிட்டானே என்பது போன்ற குப்பத்துப் பெண்களின் அழுகையும் புலம்பலும் அவளை கோபத்தின் உச்சியில் நிறுத்தியிருந்தது.

குப்பத்து மக்கள் அவ்வளவு பேரும் கூடி ஏதோ பொருட்காட்சியைப் பார்ப்பது போல சுற்றி நின்று பார்த்தது மட்டுமல்லாமல், தான் எதோ பாரியை மயக்கித் திருமணம் செய்து வந்தது போலப் பேசவும் தாங்க முடியவில்லை அவளால்.

நானா உன்னைத் திருமணம் செய்யச் சொன்னேன் என்று அவனது சட்டையைப்பிடித்து உலுக்கும் அளவுக்கு வெறி. அவள் முறைத்த முறைப்பில் பாரி பஸ்பமாகாதது ஆச்சர்யம்தான்.

ஆனால் சில நொடிகளிலேயே நிலைமையைக் கையில் எடுத்துக்கொண்டு கயல்விழி அவ்வளவு பேரையும் சமாளித்தவிதத்தில் இவளுக்கும் சற்று ஆசுவாசமானது.

“அய்யே… இன்னா ஆயா நல்ல காரியம் நடந்த வூட்ல குந்திக்கினு ஒப்பாரி வச்சிக்கினுக்கீற? உம்பேரன் கண்ணாலம் நடந்துக்குது… நீ நல்லாயிருன்னு ஒத்த வார்த்தை சொன்னாதான நெறவாயிருக்கும் அத்து.” என்று ஆயாவை அரட்டியதாகட்டும்,

“இன்னா ஜீவாக்கா வேடிக்க பார்த்துக்கினுக்கீற? தாம்பாளத்தட்ட எடுத்து ஆராத்திக் கரையேன்.” என்று வேலை ஏவியதாகட்டும்,

“ராணியத்த, எந்திரி… கொஞ்சம்வுட்டா ஆயாவத் தாண்டி நீ பாடுவியாட்டமிருக்கு.  சூடம் சுத்தி பொண்ணு புள்ளய உள்ள இட்டார வேணாம். எம்மாம் நேரம் வெளியவே நிப்பாங்க?”

படபடவென பேசி அனைவரையும் அதட்டி, ஆரத்தி சுற்றி அவர்களை வீட்டினுள் அழைத்து அமர வைத்ததாகட்டும், குப்பமே அதிசயமாய்தான் பார்த்தது கயல்விழியை.

அதோடு நிற்காமல், தேவாவை அழைத்து, “தேவாண்ணே மாமனுக்கு ஜோரா கண்ணாலமாயிருக்கு. விருந்து வைக்கல விழா வைக்கலன்னு ஒருபய நாக்கு மேல பல்லப் போட்டு பேசிறக் கூடாது. இன்னிக்கி சாயங்காலம் நம்ம குப்பத்து ஜனங்களுக்கு விருந்துக்கு ஏற்பாடு பண்ணுண்ணே…”

என்று பணத்தைக் கொடுத்தவள், கூடியிருந்த குப்பத்து மக்களிடமும் மாலை விருந்துக்கு  அனைவரும் வந்துவிடுங்கள் என்றுகூறி அனுப்பி வைத்தாள்.

“இப்பவே இன்னாத்துக்கு கயலு விருந்தெல்லாம். அதெல்லாம் அப்பாலிக்கா பார்த்துக்கலாம்.” நித்திலாவின் மனநிலையை மனதில் நிறுத்தி, மறுத்து பேசிய பாரியையும்

“அப்பாலிக்கா எப்ப விருந்து வைக்கப்போற நீ? ஊர் பயலுக வம்பு பேசாம வாயடைக்கனும்னா விருந்து வைக்கனும். உன்னோட கண்ணாலத்தை தப்பா ஒருபய பேசிறக்கூடாது.” என்று அடக்கியிருந்தாள்.

அது ஒற்றை படுக்கையறையை கொண்ட வீடு. வீட்டின் ஹால் நல்ல விஸ்தாரமாக பத்து பேர் படுக்கும் அளவுக்கு இருந்தாலும், அறைகள் இரண்டுதான். ஒன்று படுக்கையறை மற்றது சமையலறை. பின்கட்டும் தோட்டமும் பின்னே விஸ்தாரமாய் இருந்தது.

ஹாலில் போடப்பட்டிருந்த சேரில் நித்திலா அமர்ந்திருக்க, நெருங்கிப்பழகிய வெகுசிலர் மட்டுமே வீட்டினுள் எஞ்சியிருந்தனர்.

அழுதழுது தளர்ந்து போய் ஆயா அந்த ஹாலின் மூலையில் சுருண்டு கிடக்க, பாரி அவரருகே தரையில் அமர்ந்து மெல்லிய குரலில் சமாதானங்கள் கூறிக்கொண்டிருந்தான்.

மனதளவில் வெகுவாய் தொய்ந்து போயிருந்தார் ஆயா. எத்தனை வருட ஆசை நிராசையாகிப் போனதில் உடைந்திருந்தார். பேத்தியின் வருங்காலம் வெகுவாய் மிரட்டியது அவரை.

நடுங்கிய கரங்களால் பாரியின் கரங்களை ஆதரவாய் பற்றியவரின் கரங்களை விடாது பற்றிக் கொண்டான். எப்போதும் உங்களை விட்டுவிட மாட்டேன் என்ற வாக்குறுதி சொல்லாமல் சொல்லப்பட்ட தருணமது. 

புதிய சூழலில் ஒட்டாத மனநிலையில் தனித்து சேரில் அமர்ந்திருந்த நித்திலாவுக்கு, நடப்பவைகள் அவ்வளவுமே ஒருவித ஆயாசத்தைக் கொடுத்திருந்தது.

அதிலும் வீட்டினுள் நின்று விரோதியை முறைப்பது போல தன்னை முறைத்துக் கொண்டிருக்கும் ராணியையும் ஜீவாவையும், நிமிர்ந்து பார்க்கவா வேண்டாமா என்ற குழப்பத்தோடு தலைகுனிந்து அமர்ந்திருந்தாள் நித்திலா.

அடுப்படியில் கயல் அனைவருக்கும் டீ தயாரித்துக் கொண்டிருக்க, சூழல் வெகு கடினமாக இருந்தது. கைவிரல்களைக் கோர்த்துக் கோர்த்துப் பிரித்தபடி டென்ஷனோடு இருந்த நித்திலாவின் விரல்களை மெல்லப் பற்றியது ஒரு கரம்.

யாரென்று நிமிர்ந்து நோக்கியவளின் பார்வையில் பட்டவள் செல்வி. அவ்வளவு நேரமும் நடந்த களேபரத்தில் ஓரமாய் ஒதுங்கி நின்றிருந்தவள், தனித்திருந்த நித்திலாவின் அருகே வந்தமர்ந்திருந்தாள்.

கண்களில் சற்று பயத்தோடு நித்திலாவை நோக்கிய செல்வியை, ‘இவள்தானே அன்று தங்களின் வீட்டுக்கு வந்தவள்?’ என்ற எண்ணத்தோடு பார்த்திருக்க,

“எ… என்னையத் தெரியலயாக்கா…? அ… அன்னிக்கு உங்க வூட்டுக்கு வந்திருந்தேனே. நீங்ககூட திட்டினீங்களே?”

தான் திட்டியதை ஏதோ அவார்டு வாங்கியது போல நினைவுபடுத்தும் சிறுமியின் சிறுபிள்ளைத்தனம் புரிந்ததில் மெல்ல புன்னகைத்தபடி தலையாட்டிக் கொண்டாள் நித்திலா.

நித்திலாவின் புன்னகை செல்விக்கும் தொற்ற, “யக்கா, எம்புட்டு அழகா இருக்கீங்க? நல்லா வெள்ளையா ரவா பணியாரமாட்டம்.”

திண்பண்டத்தோடு தன்னை ஒப்பிட்டவளைப் பார்த்து மேலும் சிரிப்பு அரும்பியது.

தன் தந்தையின் மீது அபாண்டமாய் பழிசொன்னவள் இவள்தான் என்ற கோபம் உள்ளூர இருந்தபோதும், கள்ளமின்றி அருகே வந்து பேசும் பெண்ணிடம் முகம் திருப்பத் தோன்றவில்லை.

செல்வி அருகே வந்து பேசியதைக் கண்ட குப்பத்து வாண்டுகள் சிலவும் வந்து பேச ஆரம்பிக்க, சற்று இறுக்கம் தளர்ந்தது நித்திலாவுக்கு.

“அக்கா… அக்கா…” என்றழைத்துப் பேசும் வாண்டுகளின் கேள்விக்கு மெல்லிய குரலில் நித்திலா பதிலளித்துக் கொண்டிருக்க,

“அட கிறுக்குக் கழுதைகளா? பாரியண்ணன் பொண்டாட்டி உங்களுக்கெல்லாம் அண்ணி மொறையாவனும். அண்ணின்னு கூப்பிட்டு பழகுங்க.”

நொடித்துக் கொண்டு பேசினாலும், அந்தப் பேச்சிலேயே தன்னை சொந்தமாய் ஏற்றுக் கொண்ட செல்வியின் தாய் ராணியை சற்று சிநேகமாய் பார்த்துக் கொண்டாள் நித்திலா.

அதற்குள் டீ தயாரித்து அனைவருக்கும் கொடுத்திருந்த கயல், ஆயாவையும் அதட்டி டீயைக் குடிக்க வைத்துவிட்டு இவளருகே வந்து அமர்ந்தாள்.

“மெய்யாலுமே அம்புட்டு சந்தோஷமாக்கீதுக்கா. என் வேண்டுதல சாமி கேட்டுக்கிச்சி. அதான் எம்புட்டு பிரச்சினை இருந்தாலும் இந்த கண்ணாலத்த எப்புடியோ முடிச்சு வெச்சிடுச்சி.” உண்மையான மகிழ்ச்சி அவள் முகத்தில்.

“இந்தப் புள்ள வாழ்க்கய நெனைச்சு நாம வெசனப்பட்டா, மாமனுக்கு கண்ணாலம் ஆனதுக்கு சந்தோசப்பட்டுனுகீறா பாரேன்.” கயல் பேச்சைக் கேட்டு ஜீவா அங்கலாய்க்க, “அதான் பாரேன்” என்று ராணி வருத்தமாய் ஆமோதித்துக் கொண்டாள்.

வந்ததிலிருந்து குப்பத்து மக்கள் அனைவருமே ஒருவர் விடாமல் கூறிய விசயம்தான் இது. கயல் பாரிக்கான திருமணப் பேச்சு. இவர்களுக்கிடையே தான்தான் இடையூறாக வந்துவிட்டோமோ என்று நித்திலாவின் மனம்  வெகுவாய் உறுத்தியது.

நித்திலாவின் தெளிவில்லாத முகம் பார்த்தே நிலைமையை யூகித்த கயல், ராணியையும் ஜீவாவையும் சமாளித்துப் பேசி அனுப்பிவிட்டு அதன்பின் நித்திலாவை ஒருவரும் அணுகாமல் பார்த்துக் கொண்டாள்.

ஆயாவிடம் பேசி ஓரளவு சமாதானம் செய்தபிறகு தேவா அழைக்கவும் பாரியும் வெளியே கிளம்பிவிட, திருமணம் நடந்த முறையை கயலிடம் மெல்லிய குரலில் கூறினாள் நித்திலா.

தனது உறுத்தலையும் கயலிடம் மெதுவாகக் கூறி மன்னிப்புக் கேட்க… அவ்வளவு வருத்தம் அவளது குரலில்.

“அய்யே, நீ இன்னாக்கா இம்புட்டு மருகலா என்னாண்ட மன்னிப்புக் கேட்டுக்கினுக்கிற. கடவுள் போட்ட முடிச்சுக்கா இது. அதான்கண்டி சரியான நேரத்துல கண்ணாலம் முடிஞ்சிக்கிது.”

“இருந்தாலும் என்னைக் காப்பாத்தறதுக்காக அவர் வந்திருக்கலன்னா… உங்க ரெண்டு பேர் லைஃப்ல நான் குறுக்க வந்திருக்க மாட்டேன்ல. என்னாலதான தேவையில்லாத பிரச்சனையெல்லாம்.”

“ஏங்க்கா? உன்னைய காப்பாத்தனும்னா கண்ணாலம் பண்றது ஒன்னுதான் வழியா என்ன? காப்பாத்தனும்னு முடிவு பண்ணா எப்பிடின்னாலும் செஞ்சிருக்கும் என் மாமா.”

“…”

“உன்னால இன்னா பிரச்சனைக்கா? ஒன்னே ஒன்னு சொல்றேன் நல்லா நெனைவு வச்சிக்கோ. மனசுல ஒருத்திய வச்சிக்கினு இன்னோருத்தி கழுத்துல எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலயும் தாலி கட்டாது என் மாமா. அது மனசுல நான் இல்லக்கா.

 இன்னைக்கு இப்புடி உங்க கண்ணாலம் நடக்கலைன்னாலும் எங்க கண்ணாலம் என்னைக்குமே நடந்திருக்காது. அது எனக்கு நல்லாத் தெரியும்.”

“…” கேள்வியாய் நித்திலா பார்த்திருக்க,

“சின்னதுல இருந்து ஒன்னாவே வளர்ந்தோம். ஆயி அப்பன் மூஞ்சிகூட நெனவில்ல எனக்கு. எல்லாமே மாமாதான். தம்மாத்தூண்டு புள்ளயிலிருந்து எனக்கு அல்லாத்தையும் பார்த்து பார்த்து செஞ்சது எம்மாமன்தான். அதுமேல எனக்கு ஆசை வரலன்னாதான் அதிசயம்.

ஆனா, அது மனசுல துளிகூட அப்படியொரு நெனைப்பில்லன்னு தெரிஞ்ச பிறகு, எம்மனச நான் மாத்திக்கிட்டேன்க்கா.

நீ சும்மா எத்தையும் போட்டு மனச பேஜாராக்கிக்காத. இதுவரைக்கும் நடந்தத பூராம் கடவுள் கையில தூக்கிக் குடுத்துப்புட்டு நீ நிம்மதியா இருக்கா. எல்லாமே நல்லதுதான் நடக்கும்.”

வெள்ளந்திப் பெண்ணின் பேச்சில் தென்பட்ட உண்மை நித்திலாவை சற்று ஆற்றுப்படுத்தியது.

மாலை விருந்தும் அமர்க்களமாய் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, நிகிலேஷ் பாக்கியலஷ்மி உமா அருணாச்சலம் அனைவருமே வந்திருந்தனர். மகேந்திரனும் குடும்பத்தோடு வந்திருந்தார்

சட்டென்று யாருடனும் பழக முடியாமல் ஒதுங்கியே இருந்த நித்திலா குடும்பத்தினரைப் பேச்சில் தன்னோடு இழுத்து சகஜமாய் பேச வைத்திருந்தாள் ரதிமீனா.

ரதிமீனாவின் பிள்ளைகள் இருவரும் வீட்டை கலகலப்பாக்க, அவ்வளவு நேரமும் இருந்த இறுக்கம் சற்று தளர்ந்தது நித்திலாவுக்கு.

ஆனாலும் அனைவரும் பாடும் பாரி புராணம்தான் காதுகொடுத்து கேட்க முடியவில்லை. கடுப்பைக் கிளப்பியது. அதிலும் குப்பத்து மக்களில் அவன் புகழ் பாடாத ஜீவனே இல்லை.

ஆனால் யாரும் சொல்லிக்கொடுத்து வருவதில்லை இந்த புகழ்ச்சி என்பதும் புரிந்தது அவளுக்கு. ‘இத்தனை மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும்படி அப்படி என்ன செய்துவிட்டான் இவன்?’ என்றெண்ணியபடி அவனைப் பார்த்துக் கொண்டாள்.

அவளைப் பொறுத்தவரை அவன் செய்தது அவ்வளவும் ஆகாத வேலைகள். நல்லவன்தான்… அதில் சந்தேகமில்லை. ஆனால் எதையும் யோசித்து நிதானமாக செய்யாதவன். இப்படிதான் அவளது கணிப்புகள் அவனைப்பற்றி.

ஆனால், தன்னை சார்ந்தவருக்கு ஒன்றென்றால் எதையும் யோசியாமல்  உயிரையும் கொடுப்பான் பாரி என்பது அவளுக்குத் தெரியாதல்லவா? யாருக்கு எந்தவொரு பிரச்சினை என்றாலும் பேதமில்லாமல் தோள் கொடுப்பான் என்பதும் அவளுக்குத் தெரியாதல்லவா? தன்னலமில்லாது அவன் காட்டிய அன்புக்கான பதில் அன்பு இது என்பது அவளுக்குப் புரியவில்லை.

பாக்கியலஷ்மி வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்த நித்திலாவின் உடைகளில் இருந்து ஒரு டிசைனர் சேலையை உடுத்தி எளிமையாக நித்திலாவை அலங்கரித்தாள் ரதிமீனா.

“ஆத்தி…! பவுடர் கூட போட வேணாம் போலருக்கே? முகம் கழுவி பொட்டு வச்சதுக்கே இப்படி ஜொலிக்குதே இந்தப் பொண்ணு.” கன்னம் கிள்ளி முத்தமிட, துளிகூட பொறாமை உணர்வின்றி ஆமோதித்தவாறு நித்திலாவைக் கட்டிக் கொண்டாள் கயல்.

ஞானவேலு மகேந்திரன் இருவரும் நிகிலேஷூடன் பேசி அவனை சற்று சகஜமாக்கியிருந்தனர். அதே இலகுத்தன்மையோடு மாமா என்றழைத்து பாரியுடனும் நெருங்கியிருந்தான் நிகிலேஷ்.

ஆயாவுக்கு கயல் வேறு பாரி வேறில்லை. இருவரது வாழ்க்கையுமே அவருக்கு முக்கியம். அவர்களது வாழ்க்கையைப் பற்றி அவர் ஒன்றை நினைக்க இறைவன் சித்தம் வேறாகிப் போனதில் உடைந்திருந்தாலும், பேரனையும் விட்டுக்கொடுக்க முடியவில்லை அவரால்.

உடைந்து நொருங்கிவிடுவாளோ என்று பயந்த கயலே திடமாய் இருக்கும்போது தான் சுணக்கமாய் இருப்பது பேரனை வருத்தும் என்பதால் சற்று தெளிந்திருந்தார்.

அதே தெளிவோடு மாலையில் விருந்துக்கு வந்திருந்த நித்திலாவின் வீட்டினரையும் குப்பத்து ஆட்களையும், மகேந்திரன் குடும்பத்தையும் வரவேற்று உபசரித்திருந்தார்.

வெற்றி ஃபேக்டரியில் வேலையிருப்பதால் வரவில்லையென்று கூறியிருக்க, ஏக கடுப்பாகியிருந்தான் பாரி.

“இன்னாவாம் இவனுக்கு. ஏன்தான் இப்புடி பண்ணிக்கினுக்கீறானோ?” ஞானவேலுவிடம் நொந்து கொண்டான் பாரி.

சிறுவயதில் இருந்து பழகிய நண்பன் தன் வாழ்வின் முக்கிய தருணத்தில் உடனிருக்காது விலகியிருப்பது வெகுவாய் வருத்தியது பாரியை.

மற்ற நேரமாய் இருந்தால் நேரடியாய் சென்று சட்டையைப் பிடித்து இழுத்து வந்திருப்பான். விழாவின் நாயகனாய் இருக்கையில் வந்தவர்களை விட்டு நகர முடியவில்லை அவனால்.

வெற்றிக்கு பாரிமேல் ஏக வருத்தம். கயல் அழுது வருந்தி கிடக்கையில், தற்போது விருந்துக்கு அவசரம் என்ன என்பது அவனது ஆதங்கம். ஆனால் விருந்தையே ஏற்பாடு செய்தது கயல்தான் என்பது அவனுக்குத் தெரியாதல்லவா?

வீட்டின் வாசலில் பந்தலிட்டு, எளிமையான அலங்காரத்தில் இருந்த நித்திலாவோடு இணைந்து நிற்கும் போது உலகை வென்ற உணர்வு. காணாது கிடைத்த பொக்கிஷம் கைசேர்ந்த உணர்வு. கண்கள் கள்ளத்தனமாய் அவளை வட்டமிட்டுக்கொண்டது.

இறுக்கமான முகத்தோடு அருகில் இருக்கும் அவளது நிலை சற்று வருத்தமளித்தாலும், வருங்காலத்தில் தன்னை அவளுக்குப் புரிய வைத்துவிட முடியும் என்று உறுதியாய் தோன்றியதில் நடக்கும் நிகழ்வுகளை ஆனந்தமாய் ரசிக்கத் துவங்கினான்.

அம்மக்களுக்கேயுரிய துள்ளலான கானா பாடல்களை இளவட்டங்கள் பாடி ஆட, விழா களைகட்டியது. வந்திருந்த அனைவருக்கும் எந்தக் குறையும் இல்லாது கயலும் ராணியும் ஜீவாவும் பார்த்துப் பார்த்து உபசரிக்க கொண்டாட்டமும் கோலாகலமுமாய் விருந்து நிறைவுபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!