ஆழி சூழ் நித்திலமே 4

                  4

 

இல்லத்தின் மங்களமும் உயிர்ப்பும் பெண்கள்தான்! விதி வசத்தால் ஆண்கள் மட்டுமே இருக்கும் வீடுகளில் பாசம் இருந்தாலும் உயிரோட்டம் இருப்பதில்லை! இதை நன்கு உணர்ந்திருந்தார் மகேந்திரன். அதற்காகவே மூத்த மகனுக்கு வெகு சீக்கிரம் திருமணம் செய்து வைத்தார். 

ரதி மீனாள் திருமணமாகி மருமகளாய் மகேந்திரன் வீட்டுக்கு வந்தபோது அவளுக்கு வயது வெறும் இருபதுதான். ஆனால் பெண் வாசனையில்லாத அந்த வீட்டுக்கு சகலமும் தான்தான் என்பதை வந்ததும் புரிந்து கொண்டாள். 

மகேந்திரனும் அது போலவே மருமகளிடம் அனைத்துப் பொறுப்புகளையும் ஒப்படைத்துவிட்டு, தன் தொழிலிலும் சங்கப் பொறுப்புகளிலும் மட்டும் கவனம் செலுத்தத் துவங்கினார். பிள்ளைகளும் அவரைப் பின்பற்றியே அனைத்து கணக்கு வழக்குகள் முதற்கொண்டு மீனாவிடம் ஒப்படைத்து செலவுக்குக் கூட அவளிடம் வாங்கிக் கொள்வர். 

ஞானவேலுக்கும் ரதி மீனாளுக்கும் திருமணமாகி ஏழு வருடங்கள் முடிந்திருந்தது. மருமகளாய் இந்த வீட்டுக்குள் அவள் அடியெடுத்து வைத்த பிறகுதான் வீட்டுக்கே ஒரு களை வந்திருந்தது. இத்தனைக்கும் வெற்றியின் வயதுதான் அவளுக்கும். மாதக்கணக்கில் மட்டுமே பெரியவளாய் இருப்பாள். 

அவளது வருகைக்கு முன் ஏனோதானோவென்று இருந்த மூவரின் உலகம் அவளின் வருகைக்குப்பின் அழகாகியிருந்தது. குழந்தைகளும் பிறந்தபின் சொர்க்கமாகியிருந்தது வீடு. 

பாரிக்காவது பதினோரு வயதுவரை தாய்ப்பாசம் கிடைத்தது. ஆனால், பிறந்த போதே தாயை இழந்தவன் வெற்றி. மறுமணம் செய்து கொள்ள மகேந்திரனை அனைவரும் வற்புறுத்திய போதும், மனைவியின் மீது வைத்திருந்த உண்மையான அன்பினால் அதனை மறுத்துவிட்டு பிள்ளைகளைத் தானே வளர்த்து ஆளாக்கினார். 

தாய்க்குத் தாயாய் மகேந்திரன் வளர்த்திருந்த போதும், வெற்றி உண்மையான தாய்ப்பாசத்தை உணர்ந்தது ரதி மீனாவிடம்தான்.  

வெற்றியின் தாய் ஸ்தானத்தில் இருப்பதாலோ என்னவோ, வெற்றிக்கும் பெண் பார்த்து அவனும் குடும்பமாய் வாழ வேண்டும் என்று ஒரு வருடமாக நச்சரித்துக் கொண்டிருக்கிறாள் மீனா. 

பாரியும் வெற்றியைப் போலதான் மீனாவுக்கு. திருமணமாகி வந்த போது தோளுக்கு மிஞ்சிய கொழுந்தன்கள், எப்படிப் பழகுவரோ என்று மருண்ட மீனாவுக்கு சிறு பிள்ளைகள் போல மதினியின் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாத இருவரையும் அவ்வளவு பிடித்தது. பாரிக்கும் வஞ்சமில்லாத அன்பை எந்தவித எதிர்பார்ப்புமின்றி பொழியும் மீனாவை மிகப் பிடிக்கும். 

வெற்றியைப் பொறுத்தவரை மீனா அவனிடம் காட்டும் முகங்கள் பல. சில நேரம் கண்டிக்கும் தாயாய் இருப்பவள் சில நேரங்களில் அரவணைக்கும் தமக்கையாய் மாறிப் போவாள். சரிக்குச்சரி வாயடிக்கும் போது அண்ணியாய் முகம் காட்டுபவள், துன்பத்தில் தோள் தாங்கும்போது தோழியாய் தெரிவாள். 

ஒருசில நேரங்களில் பார்கவிக்கும் மீனாவுக்குமே அவனுக்கு வித்தியாசம் தெரியாது அந்தளவுக்கு சிறுபிள்ளையாய் சேட்டைகளும் செய்வாள். 

உணவை முடித்து யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் சென்ற வெற்றியையே பார்த்துக் கொண்டிருந்த மீனாவுக்கு ஆயாசமாக இருந்தது. ‘பெண்கள்தான் அழுத்தம்… மனதிலிருப்பதை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள்’ என்ற கூற்று இருக்க வெற்றி மகா அழுத்தக்காரனாய் தோன்றினான். 

அவன் மனதில் என்ன இருக்கிறது என்றே அவளுக்குப் புரியவில்லை. வெளிப்படையாகக்கூட கேட்டாகிவிட்டது எந்தப் பெண்ணையாவது விரும்புகிறாயா என்று. சாதனையாய் இல்லை என்று மறுப்பவனை என்ன செய்ய. 

வளர்ந்த ஆண்மகனிடம் அதற்கு மேல் அவளால் கேட்கவும் முடிவதில்லை. தாயைப் போல பரிவு காட்டினாலும் தன்னால் அவனது தாயின் இடத்தை இட்டு நிரப்ப முடியவில்லையோ என்றுகூட வருந்துவதுண்டு.

ஆண்கள் மூவரும் உணவருந்தி முடித்ததும் உணவு மேஜையை சுத்தம் செய்தவள், ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மூவருக்கும் பழங்களை வெட்டி வைத்துவிட்டு வெற்றியைத் தேடிப் போனாள். 

மாடியில் இருந்த அவனது அறை பால்கனியில் நின்றிருந்தான். கையில் வைத்திருந்த எதையோ மீனாவின் கொலுசொலி கேட்கவும் அவசர அவசரமாக பேண்ட் பாக்கெட்டில் மறைத்தவனைக் கண்டு கொண்டாள் மீனா. 

“என்னதுடா…? என்னத்தை ஒளிச்சு வைக்கற நீ.”

“ம்ப்ச் ஒன்னுமில்ல மதினி.”

வெற்றியை இமைக்காமல் பார்த்தவள், ‘அழுத்தக்காரன்… இவன் வாயிலிருந்து எதையும் வாங்க முடியாது’ மனதினுள் அலுத்துக் கொண்டாள். 

“கத்திரிக்கா முத்துனா கடத்தெருவுக்கு வந்துதான் ஆகனும். ஒரு நாளில்ல ஒருநாள் எனக்குத் தெரியாமயா போகப்போகுது.”

“சரி… தெரியும்போது தெரிஞ்சுக்கோ. இப்ப எதுக்கு வந்த?”

“கீழ உன் ஃபிரெண்டு உன்ன எங்கயோ வெளிய கூட்டிட்டுப் போக உட்கார்ந்திருக்கான். நீ இங்க மாடிக்கு வந்து என்னடா பண்ற?”

“அதுக்குதான் ட்ரெஸ் மாத்த வந்தேன். நீ கீழ போ. நான் கிளம்பி வர்றேன்.” துளைக்கும் அவள் பார்வையைப் பாராமல் திரும்பி அலமாரியைக் குடைந்தான். உணர்வுகளை மறைக்கிறான் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது அவளுக்கு. 

“வெற்றி நான் உன்கிட்ட அந்நியமாவாடாப் பழகுறேன். என்கிட்டகூட உன் மனசுல இருக்கறதை சொல்ல மாட்டியா நீ? என்னைய யாரோவாதான நினைக்கிற நீ.” மிகுந்த வருத்ததுடன் வந்தது குரல். 

கைக்கு அகப்பட்ட பேண்ட் ஷர்ட்டை உருவிக் கொண்டு தன்னை சற்று நிலைப்படுத்தியபடி திரும்பியவன், 

“என்ன எமோஷனா? ரொம்ப சீன் போடாத. உனக்கெல்லாம் அது செட்டே ஆகல.”  

“இவனை…” பல்லைக் கடித்தவள், எந்த பால் போட்டாலும் அசராமல் விளாசுபவனைக் கண்டு கடுப்பாய் இருந்தது மீனாவுக்கு. 

“ஒருவேளை பொண்ணு ரொம்பப் பெரிய இடமாடா? நாம போய் பொண்ணு கேட்டா தரமாட்டாங்களோ? அப்படி எதாவது இருந்தா வீடு புகுந்து தூக்கிடேன்டா. எந்த பிரச்சனை வந்தாலும் பார்த்துக்கலாம்.”

பக்கென்று சிரித்துவிட்டவன், “தூத்துக்குடிக்காரின்னு நிரூபிக்கற பார்த்தியா… எங்க பின்னாடி திரும்பு. முதுகுல அருவா ஏதும் சொருகி வச்சிருக்கியா?”

“டேய், விளையாடாத. நான் சீரியஸ்ஸா பேசறேன்.” அவளது கோப முகம் பார்த்து வெற்றிக்கு சிரிப்புதான் வந்தது. 

“ஆனா, பார்கவி மாதிரி நீ மூஞ்ச தூக்கி வச்சிக்கிறத பார்த்தா. எனக்கு சிரிப்புதான வருது.”

“…”

 “நீ சீரியஸ்ஸாலம் பேசற அளவுக்குலாம் எதுவுமே இல்ல மதினி. எதுவா இருந்தாலும் உன்கிட்ட சொல்லாம இருப்பேனா.”

“நிஜமாவா? அப்புறம் ஏன்டா கல்யாணப் பேச்சு எடுத்தா உன் மூஞ்சு சுண்டைக்காய் கணக்கா சுருங்கிப் போகுது. உன் ஃபிரெண்டு உனக்கும் மேல…  வீடு வாங்கனுமாம் காரு வாங்கனுமாம் இன்னும் ரெண்டு போட்டு வாங்கனுமாம் லிஸ்டு மேல லிஸ்ட்டா போடறான்.”

“அவன் எப்படியோ எனக்குத் தெரியாது. எனக்கு என்னைக்காவது கல்யாணம் பண்ணனும்னு தோனுச்சின்னா உன்கிட்டதான் முதல்ல வருவேன். நீதான் எனக்காக பொண்ணு வீட்டுல போய் பேசனும். ஓகேவா.”

“அது சரி…” அலுத்துக் கொண்டவள், “இப்ப எங்க சித்தப்பாவுக்கு என்னடா பதில் சொல்றது?”

“ம்ம்… கிளி கணக்கா இருக்கற பொண்ணுக்கு கிளி ஜோசியக்காரன் எவனையாவது பார்க்கச் சொல்லு. இப்ப இடத்தை காலி பண்ணு.”

“ஆனா… உங்களுக்கெல்லாம் ரொம்ப ஏத்தமாப் போச்சுடா. இப்படியே மொட்டப் பசங்களாவே அலைங்க. எனக்கென்ன வந்தது…”

பேசியபடியே மீனா கீழே இறங்கிச் சென்றுவிட, சிறிது நேரத்தில் உடைமாற்றிக் கொண்டு வெற்றியும் கீழே இறங்கி வந்தான். 

வீட்டில் இருப்பவர்களிடமும் குழந்தைகளிடமும் விடைபெற்றுக் கொண்டு, பாரியின் புல்லட்டில் ஏறியவன், “எங்கயும் நிறுத்தாம போ பாரி” என்றபடி அவன் தோள்மீது கைபோட்டுக் கொள்ள வாகனம் போக்குவரத்தில் கலந்தது. 

இது அவர்களுக்குள் வழக்கம்தான். ஈசிஆர் ரோட்டில் மிதமான வேகத்தில் கடல்காற்றை அனுபவித்தபடி மகாபலிபுரம் வரை சென்று திரும்புவர். சில நேரங்களில் பாண்டிச்சேரி வரை கூட பயணம் நீளும். வெற்றியின் தோழர்கள் சிலரும் சேர்ந்து கொண்டால் கொண்டாட்டம்தான் அவர்களுக்குள். 

“பாரி,  அந்த இன்ஸ்பெக்டர் நாதன்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாவே இரு. என்னதான் சூசை கம்ப்ளெயிண்ட் வாபஸ் வாங்கியிருந்தாலும், அவனுக்கு உன்மேல இருக்கற காண்டுக்கு வேற ஏதாவது பிரச்சனை பண்ணுவானோன்னு தோனுது.”

“விட்றா பார்த்துக்கலாம்.”

“அப்படி அலட்சியமா இருக்காத பாரி. அவனுக்கு அரசியல் செல்வாக்கு நிறைய இருக்கு. ஹார்பர்ல நடக்கற இல்லீகல் ஆக்டிவிடீஸ் பூராமே இவனோட  தயவாலதான் நடக்குதுன்னு பேச்சிருக்கு. நேத்து பிரச்சனையில கூட சூசையத்தான் நம்மால மிரட்டி கேஸ வாபஸ் வாங்க வைக்க முடிஞ்சது. அந்த இன்ஸ்பெக்டர பகைச்சுக்க எவனுமே தயாரா இல்ல. அதனால நாம எச்சரிக்கையாதான் இருக்கனும்.”

“அந்த நாதன்லாம் ஒரு ஆளு. போலீஸ் டிபார்ட்மெண்ட்க்கே அவனால கெட்ட பேரு வெற்றி. என்ன பண்ணிடுவான் அவன்? நீயிருக்கும்போது எம்மேல கை வைக்க முடியுமா அவனால.” நண்பனை சிலாகித்துக் கொண்டான். 

“அது விட்ருவோமா? இருந்தாலும் கொஞ்ச நஞ்சமாடா அவனை பண்ணீங்க? ஜல்லிக்கட்டு கலவரத்துல சிக்குனவனை வச்சுல்ல செஞ்சுவிட்டீங்க. அடிபட்ட பாம்பா சுத்துறான். சூதானமா இருந்துக்கனும் நாம.”

“அவன் பண்ணது அப்படி. அதான் வாங்கி கட்டிக்கிட்டான். பார்த்துக்கலாம் விடு.” சிரித்துக் கொண்டான் பாரி. 

காவல் நிலையத்தில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு வழக்குகளைப் பதிந்திருக்க வேண்டும் என்ற கணக்கு உள்ளது. அது மட்டுமின்றி வெகு நாட்களாக முடிக்க முடியாமல் இழுத்துக் கொண்டிருக்கும் வழக்குகளுக்கு அப்பாவியாக சிக்கும் எவரையாவது பிடித்துப் போடுவதும் உண்டு. 

அப்படி மீனவ இளைஞர்களுக்குத் தொந்தரவுகள் அடிக்கடி போலீசாரால் ஏற்படும். நலிந்த நிலையில் இருக்கும் குப்பத்து மக்கள்தான் அவர்களது இலக்கு. எதிர்த்துக் கேட்க ஆளிருக்காது என்ற எண்ணத்தாலேயே அத்துமீறும் காவலர்களும் உண்டு. 

அது மட்டுமல்லாது உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் பாதி மாமூல் என்று பிடுங்கிக் கொள்வதும் உண்டு. கொடுக்க முடியாது என்று முரண்டு செய்தால் சாதாரண வழக்கிலிருந்து போதைப் பொருள் கடத்தல் வரையிலான பொய் கேஸ்களைப் போட்டு அலைக்கழிப்பதும் உண்டு. 

அதனால்தான் அவர்கள் குப்பத்தில் ஒரு மனதாக சங்க உறுப்பினர்கள் ஒன்றினைந்து தங்களுக்குள் எந்த பிரச்சனையாயிருந்தாலும் தமக்குள்ளே முடித்துக் கொள்ள வேண்டும். போலீசிடம் போகக்கூடாது என்று முடிவெடுத்திருந்தனர். 

பாரியின் ஏரியா இன்ஸ்பெக்டர் நாதனும் அப்படிப்பட்ட தொல்லைகளை அவனது குப்பத்து மக்களுக்குத் தர, சமயம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மெரினா ஜல்லிக்கட்டு கலவரத்தின் போது தனித்து சிக்கிய இன்ஸ்பெக்டரை சக்கையாய் பிழிந்திருந்தனர். 

அத்தனை கூட்டத்தில் யார் அடித்தது என்பது தெரியாமலேயே அடி வாங்கியிருந்தான் அவன். யார் என்று குறிப்பிட்டு தெரியாவிட்டாலும் இந்த குப்பத்து மக்கள்தான் என்பது தெரிந்திருந்தது அவனுக்கு. அவர்களை தூண்டி விட்டது பாரிதான் என்பதும் புரிந்தது அவனுக்கு 

ஆனால் வெளிப்படையாய் தெரியாததால் எதுவும் செய்ய முடியாத நிலை. பாரியின் மீது வஞ்சம் வைத்துக் காத்திருந்தவன், சூசை பாரியின்மீது புகார் கொடுக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வந்துவிட்டான். 

குப்பத்து மக்களும் பாரிக்கு ஆதரவாய் நின்றதும், வெற்றி உடனடியாக களமிரங்கி பாரியின் மீதான புகாரை பிசுபிசுக்கச் செய்ததும் அவன் எதிர்பார்க்காதது. 

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல பாரியின் மீதான வஞ்சத்தை தீர்த்துக் கொள்ள சந்தர்ப்பம் அமைந்தும் அது நிறைவேறாத கடுப்பில் இருக்கிறான். என்றாவது அவனுக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் அமைந்தால்…? அன்று பாரியின் நிலை…?

பாரியும் வெற்றியும் பேசிக்கொண்டு செல்ல,   அவர்களுடன் வெற்றியோடு படித்த தோழர்கள் சிலரும் சேர்ந்து கொள்ள பயணம் மகாபலிபுரம் வரை நீண்டது. 

 

****

 

 

 

அந்த நவீன மாடல் அலைபேசி கேமிராவாய் மாறி ஸ்டான்டில் ஒய்யாரமாய் நின்றபடி எதிரில் நின்றிருந்தவர்களை, அவர்களது உதட்டசைவுகளை தன்னுள் படம் பிடித்துக் கொண்டிருக்க…  

சிறு பிள்ளை போல முகம் சுருக்கி சின்சான் வசனத்துக்கு வாயசைத்துக் கொண்டிருந்தாள் நித்திலா. கூடவே நிகிலேஷூம்…  இவர்கள் செய்யும் அலப்பறைகளை சிரிப்புடன் பார்த்தபடி பாக்கியலஷ்மி சோபாவில் அமர்ந்திருக்க,  உணவு உண்ட களைப்பில் அறைக்குள் சற்று கண்ணயர்ந்திருந்தார் பரசுராமன். 

 

“பார்த்தும்மா பத்திரமா இருங்க போயிட்டு வந்துடறேன்.”

“வெளிய போற நீதான் பத்திரமா இருக்கனும் சின்சான். பத்திரமா போயிட்டு வா சரியா?”

“ஒன்னு பத்ரம், இரண்டு பத்ரம், மூனு பத்ரம்… சாதித்து விட்டோம்.”

“அம்மா நான் மூனுவாட்டி பத்ரமா போயிட்டேன்ம்மா.”

கீச் கீச்சென்ற சின்சான் குரலுடன் வீடியோ முடிந்ததும் ஓடிச் சென்று அலைபேசியை பார்த்தவள் உதட்டைப் பிதுக்கினாள். 

“ஏய் நிக்கி லைட்டிங் சரியில்லடா. இந்த ஆங்கிள்ல வச்சு எடுக்கலாம்.” என்று அலைபேசியின் கோணத்தை மாற்றி மறுபடியும் அதே வசனத்தை கூற வைத்து நிகிலேஷை பாடாய் படுத்திக் கொண்டிருந்தாள். 

ஒரு வழியாய் திருப்தியாய் வந்ததும் வீடியோவை டிக்டாக்கில் அப்லோட் செய்தாள்.  நித்திலாவுக்கு சமீபத்தைய பொழுது போக்கே இதுதான். தம்பியுடன் சேர்ந்து வீடியோக்கள் எடுத்து டிக்டாக்கில் பதிவதுதான் சமீபத்தைய ஆர்வம். 

அதிலும் அவளுடைய சின்சான் வீடியோக்கள் வெகு பிரபலம். பல ஆயிரம் பேர் அவளுடைய வீடியோக்களை பின் தொடர்வது ஒரு சிறு மகிழ்ச்சி அவளுக்கு.  

ஆபாசமாகவோ அத்துமீறலாகவோ இல்லாமல் கண்ணியமாக உடையணிந்து தம்பியுடன் இணைந்து நகைச்சுவையான உரையாடல்களை வீடியோவாக செய்வதால் பாக்கிய லஷ்மியும் எதுவும் சொல்வதில்லை இவர்களை. 

தன் கல்லூரித் தோழி ஒருத்தியின் பிறந்தநாள் விழாவுக்குச் செல்ல புது உடை ஒன்றை அணியவும் தம்பியுடன் இணைந்து டிக்டாக் வீடியோ எடுக்கும் ஆசை வந்துவிட்டது. மேலும் இரண்டு வீடியோக்களை எடுத்து அதையும் அப்லோட்  செய்தவர்கள் வெளியே கிளம்பினர். 

“அம்மா பாத்து பத்ரமா இருங்க போயிட்டு வரேன்.” 

“அடியேய், வெளிய போற நீதான் பத்திரமா இருக்கனும்.”

“அட சின்சான் டையலாக் நீங்க பேசறீங்கம்மா. அடுத்த வீடியோ நாம ரெண்டு பேரும் போடலாம்.”

“ஆமா, அது ஒன்னுதான் இப்ப குறையா இருக்கு. எத்தனை மணிக்கு திரும்ப வருவ?  கூப்பிட அப்பாவ வரச் சொல்லவா?”

“வேணாம்மா. பஸ்ல வந்துடுவேன். பஸ் ஸ்டாப்புக்கு இவனை வரச் சொல்லுங்க போதும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடுவேன்.”

“பஸ் ஏறினதும் ஃபோன் பண்ணிடு. தம்பி வந்துடுவான். சீக்கிரமாவே வந்துடு. இருட்டிடுச்சின்னா நம்ம ஏரியால ஆள் நடமாட்டமே இருக்காது.”

“சரிம்மா.” என்றபடி வெளியேறினாள். நித்திலாவை பஸ் ஏற்றிவிட நிக்கியும் கூட வர,  அக்காவும் தம்பியும் அரட்டை அடித்தபடியே நிகிலேஷின் வாகனத்தில் ஏறி போக்குவரத்தில் கலந்தனர். 

பஸ்ஸில் போனால் ட்ராஃபிக்கில் அரை மணிநேரப் பயணம் மட்டுமே அவளது ஃபிரெண்டு வீடு. அதனால்தான் நித்திலாவை பயமின்றி தனியே அனுப்பியிருந்தார் பாக்கிய லஷ்மி. இல்லையென்றால் பரசுராமனுக்கு யார் பதில் சொல்வது. 

என்னை எழுப்பியிருக்கலாமே என்பதில் தொடங்கி நித்திலாவை அழைத்துச் செல்லதான் நிகிலேஷ்க்கு வண்டி வாங்கியிருக்கு என்று அங்கலாய்த்து இறுதியில் பாப்பாவ கூப்பிட நான் இப்பவே கிளம்புறேன் என்று கிளம்பி நிற்பார். 

அவள் எங்கு போக வேண்டுமானாலும் போகட்டும். அவள் ஆசைப்பட்டதை செய்யட்டும். எதற்குமே அவளுக்குத் தடை போடக்கூடாது. ஆனால் அவளுக்கு பாதுகாப்பாக நாம் உடன் செல்வோம் என்பதுதான் அவர் நிலைப்பாடு. 

மாறி வரும் நாட்டின் சூழ்நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பார்க்கும் போது அவர் சொல்வதும் சரிதான் என்று தோன்றும் பாக்கிய லஷ்மிக்கு. பிள்ளையைத் தனியே அனுப்பிவிட்டு பதைபதைப்போடு பார்த்துக் கொண்டிருப்பதைவிட அவளுக்கு பாதுகாப்பாக உடன் சென்று விடலாம். 

நித்திலாவும் கொடுக்கும் சுதந்திரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் ரகம். அம்மா சொன்னபடி இருட்டுவதற்கு முன்பே பிறந்தநாள் விழாவிலிருந்து கிளம்பியவள் வீட்டுக்கு திரும்பி வர பஸ் ஏறியதும் ஃபோன் செய்து நிகிலேஷை பஸ் நிலையம் வரச் சொல்லியிருந்தாள். 

ட்ராபிக்கில் ஊர்ந்து பஸ் வந்து நிற்கவும் நிகிலேஷ் வரவும் சரியாக இருந்தது. சுற்றுப்புறமும் லேசாக இருட்டத் துவங்கியிருந்தது. பஸ்ஸிலிருந்து இறங்கி தம்பியின் வண்டியில் நித்திலா ஏறிக் கொண்டதும் வண்டியைக் கிளப்பினான் நிகிலேஷ். 

“நித்திக்கா…” குழைவாய் வந்தது குரல். 

“பார்றா… அக்கான்னு கூப்பிடறான். கைப்புள்ள குரளி வித்த காட்டுறான்…! மாட்டிக்காத…! முழிச்சுக்கோ…!” தன் ஆள்காட்டி விரலை முகத்தை நோக்கி நீட்டியபடிக் கூற கடுப்பானான் நிகிலேஷ். 

“உன்னைப் போய் அக்கான்னு கூப்பிட்டேன் பாரு என்னை சொல்லனும். எங்க என்னோட இந்த வார மாமூல்.”

“உனக்கேன்டா நான் மாமூல் தரனும். முடியாது போ.”

“டீல் இஸ் அ டீல். தோத்துப் போறவங்க அவங்களோட பாக்கெட் மணியில ஐஸ்க்ரீம் வாங்கித் தரனும். இந்த வாரம் நீதான் வாங்கித் தரனும்.”

“அடேய் ஃபிராடு… வாராவாரம் நான்தான் வாங்கித் தரேன்.” காலையில் போட்ட சண்டையை இப்போது துவங்கினாள். 

“ஏன்னா வாராவாரம் நீதான் தோத்துப் போற.” என்றபடி வழக்கமாக அவர்கள் செல்லும் ஐஸ்க்ரீம் பார்லர் முன் வண்டியை நிறுத்தினான். 

“என் பாக்கெட் மணியெல்லாம் இப்படி ஏமாத்தியே காலி பண்றடா.”

 சிணுங்கியபடியே அவனது மண்டையில் கொட்டு ஒன்று வைத்தவளின் கரத்தை அவனது மண்டையில் கவிழ்ந்திருந்த ஹெல்மெட் பதம் பார்க்க, முகத்தைச் சுருக்கி கையை உதறிக் கொண்டவளை ஐஸ்க்ரீம் பார்லரின் உள்ளிருந்த இரு கண்கள் ரசனையோடு உள்வாங்கிக் கொண்டது. 

அது உணவகத்தோடு இணைந்திருந்த பார்லர். நண்பர்களோடு மகாபலிபுரம் வரை சென்றுவிட்டு திரும்பும் போது அந்த உணவகத்தில் உணவை முடித்துவிட்டு ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டே பேசிக்கொண்டிருந்தனர் பாரியும் வெற்றியும் அவனது நண்பர்களும். 

நண்பனின் பார்வையிலும் இதழிலும் உறைந்த சிரிப்பு வெற்றியின் கவனத்தைக் கலைக்க, நண்பனின் பார்வை சென்ற திசைக்குத் தானும் திரும்பினான் வெற்றி. தன் தம்பியோடு இணைந்து உள்ளே வந்த நித்திலாவைப் பார்த்ததும் அவன் புருவங்களும் சுருங்கின. 

‘எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே’ மனதில் எண்ணிக் கொண்டவன் பார்வையை விலக்கி நண்பனைப் பார்க்க அவன் முகம் இயல்பாய் இருந்தது. யாராவது தெரிந்தவர்களாய் இருக்கக்கூடும் என்று எண்ணியபடி நண்பர்களோடு பேச்சில் கலந்து கொண்டான். 

அப்பொழுது நண்பர்களுக்கிடையே சற்று சர்ச்சைக்குரிய விவாதம் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. இந்தகாலப் பெண்கள் நாகரீக வளர்ச்சியில் பாதுகாப்பு பற்றி சிந்திப்பதில்லை. 

அதிலும் நகரத்துப் பெண்கள் ஆண் பெண் வித்தியாசமின்றி பழகுவதில் தொடங்கி சிறு வயதுப் பள்ளி செல்லும் பெண்கள் கூட காதல் என சீரழிகின்றனர் ஏமாந்தும் போகின்றனர். அதே கிராமத்துப் பெண்களிடம் பண்பாடும் கலாச்சாரமும் சற்று மிச்சம் உள்ளது என்று விவாதம் போய்க் கொண்டிருந்தது. 

அப்பொழுது தன் தம்பியோடு கை கோர்த்து உள்ளே வந்த நித்திலாவைப் பார்த்த வெற்றியின் நண்பன் ஒருவன்,

 “அங்க பாரு!. பார்த்தா ஸ்கூல் படிக்கற பொண்ணு மாதிரி தெரியுது. இந்த நேரத்துக்கு பாய் ஃபிரெண்டோட ஊர் சுத்துது. இந்த மாதிரி பொண்ணுங்களுக்கு செலவு பண்ண ஒருத்தன் தேவை. அதுக்காக என்ன வேணும்னாலும் செய்வாளுக. இந்த மாதிரி பொண்ணுங்களுக்கு பண்பாடாவது கலாச்சாரமாவது!” சற்று ஏளனமாகவே வந்தன வார்த்தைகள். 

அவனுடைய பார்வையும் வார்த்தைகளும் வெகுவாக கோபப்படுத்தியது பாரியை. 

“நிறுத்தறியா? கிராமத்து பொண்ணா இருந்தாலும் சிட்டில இருக்கற பொண்ணா இருந்தாலும் பண்பாடு கலாச்சாரமெல்லாம் மதிக்கிற பொண்ணுங்கதான் மதிக்கும். ஒழுக்கமா இருக்கனும்னு நினைக்கிற பொண்ணுங்க சிட்டியோ கிராமமோ எங்க இருந்தாலும் ஒழுக்கமாதான் இருக்குங்க. 

என்ன தெரியும் உனக்கு அந்த பொண்ண பத்தி? பார்க்கற பொண்ணை எல்லாம் இப்படிதான் கொறைச்சுப் பேசுவியா? ஒரு பையனும் பெண்ணும் சேர்ந்து பேசினா பழகினா உடனே அதை தப்பாதான் பார்க்கனுமா? 

அந்த பொண்ணு கூட இருக்கற பையன் அவ தம்பி. அந்த பொண்ணு காலேஜ்ல படிக்குது. மரியாதையான குடும்பத்து பொண்ணு. இனிமேலாவது உன்னோட பார்வையை மாத்து.”  படபடவெனப் பொறிந்தவன், 

“நான் கிளம்பறேன் வெற்றி. நீ பேசிட்டு வா” என்றபடி நிற்காமல் வெளியேறியிருந்தான். 

“என்னடா இவனுக்கு இவ்வளவு கோபம் வருது? அவனுக்குத் தெரிஞ்ச பொண்ணா?”

செல்லும் பாரியைப் பார்த்திருந்த வெற்றி திரும்பி, தன் தம்பியோடு வளவளத்துக் கொண்டே ஐஸ்க்ரீமைச் சுவைத்துக் கொண்டிருந்த நித்திலாவைப் பார்த்து புருவத்தைச் சுருக்கியபடி, 

“தெரியலையே! அவன்கிட்டதான் கேக்கனும்.”

“…”

“சரி, நானும் கிளம்பறேன். அடுத்த வாரம் பார்க்கலாம்.”

வெற்றி கிளம்பவும் உடனடியாகத் தாங்களும் கிளம்பியவர்கள், “நாங்களும் கிளம்பறோம்டா. பாரிக்கிட்ட மன்னிப்பு கேட்டேன்னு சொல்லு வெற்றி. அவனுக்கு வேண்டப்பட்ட பொண்ணு போல. அதான் சுறுசுறுன்னு கோபம் வந்துடுச்சி அவனுக்கு. நான் பேசினதை மனசுல வச்சுக்க வேணாம்னு சொல்லு.”

“விடுடா… நம்ம பாரியைப் பத்தி உனக்குத் தெரியாதா? எதையும் மனசுல வச்சுக்க மாட்டான் அவன். சரி நான் கிளம்பறேன்.” நண்பர்களிடம் விடைபெற்று வெளியே வந்த வெற்றி, காத்திருந்த பாரியின் வண்டியில் ஏறிக் கொண்டதும் வாகனத்தை கிளப்பினான். 

வெற்றியின் வீடு செல்லும் பாதைக்கு வண்டி திரும்பியதும், “பாரி, யார் அந்த பொண்ணு?”

— ஆழி சூழும்… 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!