ஆழி சூழ் நித்திலமே 5

ஆழி சூழ் நித்திலமே 5

ஆழி சூழ் நித்திலமே 5

 

நன்கு புலர்ந்த காலை பொழுது… ஆனாலும் இரவின் குளுமை காற்றில் இருக்க, கூப்பிடு தூரத்தில் இருந்த கடலும் அதன் பங்குக்கு குளுமையை வாறி இறைத்துக் கொண்டிருந்தது. 

ஆயாவின் இட்லி கடையில் வியாபாரம் ஜரூராய் நடந்து கொண்டிருந்தது. அந்த குப்பத்து மக்களுக்கு காலைப் பலகாரம் விதவிதமாய் செய்து உண்ணும் வழக்கமெல்லாம் இல்லை.

 இரவு மீந்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து காலையில் அதைப் பிழிந்து போட்டு சுண்ட வைத்த மீன் குழம்பை ஊற்றிச் சாப்பிடும் போது கிடைக்கும் சுவை வேறெந்த உணவிலும் கிடைப்பதில்லை அவர்களுக்கு. 

மூன்று வேளையும் விதவிதமாய் சமைக்கும் வழக்கமும் அவர்களுக்கு இல்லை. ஒரே சோறு ஒரே குழம்பாக மதியம் வைப்பதுதான். சோறு தீர்ந்து போனால் இரவு மீண்டும் வைத்துக் கொள்வார்கள். குழம்பு மூன்று வேளைக்கும் வருவது போல நிறைக்க வைத்து விடுவார்கள். 

சிறு குழந்தைகள், அவசரமாய் வெளியே செல்பவர்களுக்கு ஆயா கடை இட்லிதான் காலை உணவு. சுடச்சுட இட்லியும் பொட்டுக்கடலை சட்னியும் காரசாரமாய் பட்டை மிளகாய் வைத்து அரைக்கும் துவையலும் தேவாமிர்தமாய் இருக்கும். 

பாத்திரங்களைக் கொண்டு வந்து சிலர் இட்லிகளை வாங்கிக் கொண்டு போக, சிலர் அங்கேயே அமர்ந்து உண்டு கொண்டிருந்தனர். பிளாஸ்டிக் தட்டுகளின் மீது தையல் இலையை வைத்து சூடான இட்லிகளையும் சட்னி வகைகளையும்  வைத்து உண்பவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தாள் கயல்விழி. 

“இந்தா மரியம்… பழைய பாக்கியே குடுக்காம நிக்குது. இன்னைக்கும் சட்டியத் தூக்கினு இட்லி வாங்கியார வந்துக்கின.”

“ஆமா, உன் துட்டக் குடுக்காம ஊர விட்டு ஓடியாப் பூட்டேன். புள்ளைக்கு ஸ்கோலுக்கு டைம் ஆச்சும்மே. நீ இட்லிய வை. அவரு யாவாரத்துக்குப் போய் வந்ததும் அப்பாலிக்கா உன் துட்டத் தாரேன்.”

“எம்மாம் வைக்க?”

“இருபது ரூவாய்க்கு வை.”

குளித்துவிட்டு வந்த பாரி ஒரு முக்காலியை எடுத்துப் போட்டு கடை முன் அமரவும் அவனுக்கும் இட்லிகளைத் தட்டில் அடுக்கி, சட்னியோடு முன்தினம் வைத்திருந்த மீன்குழம்பையும் ஊற்றி நீட்டினாள் கயல்விழி. 

சட்னியிலும் குழம்பிலும் இட்லிகளைக் குளிப்பாட்டி உள்ளே தள்ளிக் கொண்டிருந்தான். கணக்கில்லாமல் இட்லிகள் உள்ளே சென்று கொண்டிருந்தது. குறையக் குறைய அவன் தட்டில் இட்லிகளை நிரப்பியபடி அருகே நின்றிருந்தாள் கயல்விழி. 

“ஏய்…ஏய்… நில்லு நில்லு… நின்னுடு ப்ளீஸ் நின்னுடு. ஆ… ஆ… ஐயோ.” க்றீச்சிட்ட பெண் குரலில் நிமிர்ந்தவன் ஒரு நொடி அதிர்ந்து பின் சுதாரித்து ஒற்றைக் கையால் அந்த ஸ்கூட்டரைப் பிடித்து நிறுத்தியிருந்தான். 

அவன் பிடித்த பிடியில் வண்டி நின்றுவிட பேலன்ஸ் இல்லாமல் பக்கவாட்டில் சரிந்த நித்திலாவைக் கயல்விழி பிடித்து நிறுத்தியிருந்தாள். தூரத்தில் நிகிலேஷ் ஓடி வருவது தெரிந்தது. 

பாரி சுதாரித்துப் பிடித்திருக்காவிட்டால் இட்லிக் கொப்பரையைத் தள்ளிவிட்டு அடுப்பினுள் வண்டியை பார்க் செய்திருப்பாள். 

 இந்தக் களேபரத்தில் அங்கே நின்று சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் சிதறியிருக்க,  ஆயா கன்னாபின்னாவென்று கத்தத் துவங்கியிருந்தார். 

“என்னா பாப்பா…! கண்ணப் பொடனியில வச்சிக்கினு தெனாவட்டா வர்ற. கொஞ்சம் வுட்ருந்தா எம் பொழப்புல மண்ணள்ளிப் போட்ருப்ப. வண்டியக் கொணாந்து வுடறதுக்கு என் வூடுதான் ஆப்புட்டுச்சா உனக்கு.” குய்யோ முறையோவென்று ஆயா கத்தவும் தன்னைப் போல பயத்தில் வெலவெலத்து கண்கள் கலங்கியிருந்தது அவளுக்கு. 

இளஞ்சூரியக் கதிர்கள் முகத்தில் பட்டு ஜொலிஜொலிக்க, நொடிக்கு நொடி சிவந்து கொண்டே சென்ற அவளது நுனி மூக்கும் கன்னங்களும் பாரியை  வியப்பில் ஆழத்திக் கொண்டிருந்தன. அசையாமல் பார்த்திருந்தான்… 

‘என்னாக் கலருடா இந்தப் பொண்ணு. பால்லயே குளிப்பாளோ!’ இதுதான் அவன் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

 “சாரி… சாரி… ப்ளீஸ் சாரி…” விடாமல் ஜெபித்த அவளது செர்ரி இதழ்களும், பயத்தில்  கலங்கித் தேங்கிய ஒரு துளி இப்பவோ அப்பவோ என்று விழத் தருணம் பார்த்திருந்த அவளது கண்களும் உறைய வைத்திருந்தது அவனை. 

“இந்தா ஆயா… சும்மா வாய மூடு. அதான் ஒன்னுமாகன்டி மாமாதான் புடிச்சிருச்சில்ல. சும்மா ஏன் கூவுற. பாவம் அதுவே பயந்து நடுங்கினு நிக்குது.” ஆயாவை அதட்டிய கயல்விழியின் குரலில் சற்று சுதாரித்திருந்தான். 

வண்டியைக் கூடப் பிடிக்க முடியாமல் வெடவெடத்த கை கால்களோடு நின்றிருந்தவளுக்கு நிகிலேஷ் ஓடி வந்து வண்டியைப் பிடிக்கவும்தான் ஆசுவாசமாகியிருந்தது. 

“சாரி சாரிங்க. தெரியாம வந்து இடிச்சிட்டாங்க. மன்னிச்சுக்கோங்க.” பொதுவாக அனைவரையும் பார்த்து நிகிலேஷ் சொல்லவும்…

“வண்டிய வுட்டு பழகிக்க எங்க வூட்டாண்டதான் காலியாக்கீதா?  வண்டிய இட்டாந்து இட்லிக் கொப்பரையைத் தள்ளிவுட்ருந்தா  படா பேஜாரா போயிருக்கும்?”

“அட, அதான் ஒன்னுமாகலல்ல சும்மா வுடேன் ஆயா. சண்டை வலிக்காத” பாரியும் அதட்டவும், முனுமுனுவென்று தனக்குள் முனகியபடி வியாபாரத்தைப் பார்க்க அமர்ந்து விட்டார் ஆயா. 

“சாரிங்க. இந்த பக்கம் பெரிய வண்டிங்க எதுவும் வரலையேன்னுதான் வண்டி ஓட்டிப் பழக இங்க வந்தோம்.” சற்று சங்கடமாகவே சொன்னான் நிகிலேஷ்.

கயல்விழிதான், “அட விடு தம்பி. வேணுகினேவா செஞ்சாக? தெரியாமதான. பயந்து போய் இருக்காங்க. பத்ரமா இட்டுக்கினு போ.” என்கவும் யாரையுமே நிமிர்ந்து பார்க்காமல் தம்பியோடு சென்ற அவளையே பின்தொடர்ந்தது பாரியின் பார்வை. 

வண்டியை நிறுத்தத் தெரியாமல் நில்லு…! ப்ளீஸ் நின்னுடு…! என்று வண்டியோடு பேசிக் கொண்டு வந்தவளின் கோலம் கண்முன் வர தானாக புன்னகையில் வளைந்தன உதடுகள். 

கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்துக்கு முன்பு நித்திலாவை முதன் முதலாக நேரில் பார்த்த இந்த சம்பவத்தை நினைத்துக் கொண்டிருந்தவனைக் கலைத்தது பின்னே அமர்ந்திருந்த வெற்றியின் குரல். 

“யாருடா அந்த பொண்ணு?”

“எந்தப் பொண்ணு?”

“எந்தப் பொண்ணா? இப்ப பக்கம் பக்கமா வசனம் பேசி வக்காலத்து வாங்கிட்டு வந்தியே ஒரு பொண்ணுக்கு. அந்தப் பொண்ணத்தான் கேக்கறேன் யாருன்னு.”

“நம்ம ஏரியா பொண்ணுதான்டா.”

‘நம்ம ஏரியாவா? அதான் எங்கயோ பார்த்த மாதிரியே இருந்துச்சா?’ தனக்குள் முனகிக் கொண்டவன், “யார் பொண்ணுடா? நம்ம குப்பத்துல பார்த்த மாதிரியே இல்லையே.”

“லொள்ளுதான உனக்கு? அந்தப் பொண்ணப் பார்த்தா நம்ம குப்பத்துப் பொண்ணு மாதிரியாடா தெரியுது?”

“நீதானடா நம்ம ஏரியாப் பொண்ணுன்னு சொன்ன?”

“நம்ம ஏரியான்னா நம்ம குப்பமா? நம்ம குப்பத்துக்குப் பின்னால புதுசா வந்த நகர்ல பெரிய அடுக்குமாடி வூடு கட்னாங்களே. அதுல ஒரு வூட்ல குடியிருக்குது இந்தப் பொண்ணு. நல்ல பொண்ணுடா. **** காலேஜூல படிக்குது. மிருகங்களைப் பத்தியெல்லாம் படிக்கற படிப்பு படிக்குது. ஒரே தம்பிதான் அதுக்கு. அந்தப் புள்ள வெளிய போறதும் தெரியாது வர்றதும் தெரியாது.”

புருவத்தை உயர்த்தினான் வெற்றி. ‘இதென்ன அவளது பயோடேட்டா முழுவதையும் ஒப்பிப்பான் போலவே இந்தப் பாரி’ மனதுக்குள் குறுகுறுத்தவன், “அவ படிக்கற காலேஜூ, படிக்குற படிப்புலாம் உனக்கெப்படித் தெரியும்?”

குறுகுறுவென்று வந்த வெற்றியின் கேள்வியின் அர்த்தம் புரிந்தது பாரிக்கு. “அடங்…  நானென்ன அவ பின்னாடியே சுத்திகிட்டு இருக்கேன்னு நினைச்சியாக்கும். வேற வேலையில்ல எனக்கு? அத்தவுடு… அப்படியே நாஞ்சுத்தினாலும் அந்தப் பொண்ணெல்லாம் திரும்பியாச்சும் பார்க்குமா என்னைய?”

“…”

 “டிசம்பர் மாசம் நம்ம ஏரியா கடற்கரையில ஆமை முட்டைங்கலாம் தேடி எடுக்க வருவாங்க தெரியுமா?”

“ம்ம்… ஆமா. ஆலிவ் ரிட்லி வகை ஆமைங்க நம்ம ஏரியா பக்கம்தான் நிறைய முட்டையிடும். அதை சேகரிக்க வனத்துறையில இருந்து வருவாங்க. டிசம்பர் மாசத்துல இருந்து மார்ச் வரை சேகரிச்சு, பாதுகாப்பா குஞ்சுங்க வெளியில வந்ததும் கடல்ல கொண்டு விடுவாங்க. 

ஆமைங்க இனம் அழியாம இருக்கறதுக்கு கவர்ன்மெண்ட்ல வருஷா வருஷம் செய்யறதுதான இது.”

“அத்தேதான், அதுக்கு இந்தப் பொண்ணும் அவ தம்பியும் வருவாங்க. கூட இந்தப் புள்ளகூட படிக்கிற காலேஜூ புள்ளைங்களும் வரும். அப்பதான் எனக்கு இந்த புள்ளையும் அந்த காலேஜூல படிக்குதுன்னு தெரியும்.

அது மட்டுமில்லாம அந்த அடுக்குமாடி வீட்ல குடியிருக்கற இன்னும் ரெண்டு மூணு காலேஜூ புள்ளைங்க சேர்ந்து நம்ம குப்பத்து சின்னப் புள்ளைங்களுக்கு டியூஷன் கூட எடுக்குதுங்க.  நல்ல புள்ளைங்கடா. அத்தப் போய் தப்பா பேசுனா சும்மா இருக்க முடியுமா?”

பாரியின் கேள்வி நியாயமாக இருந்ததில் சமாதானமானான் வெற்றி. இருந்தாலும் பாரியை சீண்டுவது போல, 

“அது சரிதான்… ஓவரா பொங்குனியா? என்னை வுட்டுட்டு நீ மட்டும் தனியா காலேஜூ வாசலாண்ட சைட்டு வுட்டுகிட்டு இருக்கியோன்னு ஒரு டவுட்டு…” வெற்றி இழுத்த இழுவையில் கடுப்பானவன், 

“அடக் கருமம் புடிச்சவனே. நான் காலேஜூ காலேஜா சைட்டடிச்சிட்டுத் திரிஞ்சத நீ என்னிக்குடா பார்த்த? வண்டியோட கீழ சரிச்சு வுடப் போறேன் பாத்துக்கோ.” 

“இன்னும் நாலெட்டு தள்ளி சரிச்சு வுட்டியனா எங்க வூட்டாண்டயே வுழுந்துக்குவேன்.” 

“உன்னையெல்லாம் வரப்போற பொண்ணு மொத்துனாதான் உண்டு. அத்தப் பாக்கதான்டா நானும் ஆசையில கிடக்கறேன்.”

“பாக்கலாம் பாக்கலாம்… அதது நடக்கும் போது பாக்கலாம். இப்ப உள்ள வர்றியா?”

“இல்ல… காலையிலயும் வூட்ல சாப்புடல மதியமும் சாப்புடல. ராவுக்காச்சும் எதையாவது போய் சாப்புடுவோம். இல்லன்னா கயலு மூஞ்சத் தூக்கி வச்சிக்கும்.”

“…”

“நான் வூட்ல இருந்தா மூனு வேளையும் என் வயித்த நிறைக்கறதுதான் அதோட வேலையே. என் அம்மாடா அது.” குரல் வெகுவாக குழைந்திருந்தது. 

பாரி கயல் மீது வைத்திருக்கும் பாசம் தெரிந்ததுதான் என்றாலும் அவன் வாயால் கேட்கும் போது வருத்தமும் சந்தோஷமும் கலந்த புதுவித உணர்வில் திளைத்திருந்தான் வெற்றி. 

“இப்ப ஹோட்டல்ல பாத்தோமே அந்த மாதிரி பொண்ணுலாம் வானத்துல இருக்கற நெலா மாதிரி, பார்த்து ரசிக்க மட்டும்தான் நம்மால முடியும். அத்தைக் கொணாந்து வூட்ல வைக்க முடியாது. 

நம்ம கயலு மாதிரி பொண்ணுங்கலாம் அகல் வெளக்கு மாதிரி. நம்ம வூட்டுக்குலாம் அந்த மாதிரி புள்ளைங்கதான் வெற்றி சரிவரும்.” சொல்லிவிட்டு நிற்காமல் பாரி சென்றுவிட… அவனது வார்த்தைகளுக்கான பொருளை புரிந்து கொள்ள முடியாமல் நின்றிருந்தான் வெற்றி. 

******

 

பூமி நிற்காமல் சுழன்றதில் நாட்கள் நகர்ந்திருந்தன… 

திருவான்மியூர் அரசு உயர்நிலைப்பள்ளி அந்த காலை வேளையில் அமைதியாக இயங்கிக் கொண்டிருந்தது. 

கீழே மரத்தடியில் அமர்ந்திருந்த மாணவ மாணவிகள் கோரசாக கணக்கு வாய்பாடு சொல்வது, முதல் மாடியில் ஆசிரியர்களுக்கான ஓய்வறையில் அமர்ந்திருந்த பரசுராமனின் காதுகளில் சன்னமாய் ஒலித்தபடி இருந்தது. 

அவரது கவனம் முழுவதும் அவரது கைகளில் வைத்திருந்த பதினொன்றாம் வகுப்பு மாணவ மாணவிகளின் விடைத்தாள்களில் நிலைத்திருந்தது. 

கிட்டத்தட்ட நாற்பது வருட அனுபவம், அனிச்சை செயல் போல அவருடைய கண்களும் கைகளும் தத்தம் வேலையை செய்தாலும், மனமோ பனிரென்டாம் வகுப்பு மாணவி செல்வியின் சமீபத்தைய நடவடிக்கைகளை எண்ணியபடி இருந்தது. 

பத்தாம் வகுப்பு வரை ஓரளவு நன்றாக படிக்கக்கூடிய மாணவிதான். இந்த ஒரு வருட காலத்தில் பின்தங்கிப் போனது ஏன் என்று அவரது மனம் சிந்தித்தபடி இருந்தது. 

சிறப்பு வகுப்புகள் என்று வைத்தாலும் அவள் வருவதில்லை. அரசுப் பள்ளிக்கூடத்தில் அதற்குமேல் தன்னாலும் எந்த முயற்சியையும் செய்ய முடிவதில்லை. சென்ற வருடத் தேர்வில் வெகு சொற்ப மதிப்பெண்களே பெற்று தேர்ச்சியடைந்திருந்தாள். 

நல்ல பெண்ணின் எதிர்காலம் நன்றாயிருக்க வேண்டுமே! அதற்கு தான் ஏதேனும் செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டார். 

இப்பொழுதெல்லாம் மாணவர்களைக் கண்டுதான் ஆசிரியர்கள் பயப்பட வேண்டியதாயிருக்கிறது. மாணவர்களுக்குத் துளிகூட பயமோ மரியாதையோ இருப்பதில்லை. 

பதினேழு வயதிலிருந்து ஆசிரியராய் பணிபுரியும் அவருக்கு அந்த கால இடைவெளி மாற்றம் நன்கு புரிந்தது. 

நல்ல நிலைமையில் பெரிய பதவிகளில் இருக்கும் பழைய முன்னாள் மாணவர்கள் இன்றும் கூட தன்முன் மரியாதையோடு பணிவாய் நிற்பதையும் பார்த்திருக்கிறார்…  அதே நேரத்தில் தற்போது அவரிடம் படிக்கும் மாணவன் வெளியே யதேர்ச்சையாகக் கண்டால்கூட கண்டு கொள்ளாமல் தெனாவட்டாய் நிற்பதையும் பார்த்திருக்கிறார். 

எந்த காலத்திலும் மாணவர்களைப் பெரிதாய் அடித்தோ கண்டித்தோ பழக்கமில்லை அவருக்கு. அரவணைப்பான பேச்சிலேயே வழிக்குக் கொண்டு வரும் வித்தை தெரிந்தவர் அவர். 

அப்படியும் அடங்காத மாணவர்களுக்கு மெய்யடி பொய்யடியாய் சில தண்டனைகளைக் கொடுத்து வழிக்குக் கொண்டு வந்ததும் உண்டு. 

ஆனால் இப்போதிருக்கும் மாணவர்களை அடிப்பது என்ன ஒரு சொல் கடிந்து சொல்லக் கூட பயமாய் இருக்கிறது. 

வகுப்பறையிலேயே ஆசிரியரை கத்தியால் குத்துவதிலிருந்து, தன் சாவுக்கு ஆசிரியர்தான் காரணம் என்றெழுதி வைத்து தற்கொலை செய்து கொள்வது வரை ஏகப்பட்ட சம்பவங்களை நாளிதழ்கள் வாயிலாகவும் தொலைகாட்சி வாயிலாகவும் கண்ட பிறகு எந்த ஆசிரியருமே பிள்ளைகளைக் கண்டிக்கத் துணிவதில்லை. 

இளமையில் செய்த தவறுக்கு ஆசிரியரிடம் அடி வாங்கித் திருந்தாதவன் பின்னாளில் செய்யும் தவறுக்கு நீதிமன்றத்தில் தண்டனை வாங்குவான் என்பர். ஆனால் பிள்ளைகளைக் கண்டிக்கும் ஆசிரியரை பெற்றவர்களே எதிரியைப் போல பார்க்கும் போது அவர்களும் என்ன செய்ய முடியும்? 

போதாக்குறைக்கு மாணவர்களின் மனநிலை பாதிக்கக்கூடிய வகையில் அவர்களை கண்டிக்க கூடாது அடிக்கக்கூடாது. தண்டனைகள் தரக்கூடாது என்று அரசாங்கமே சொல்லும் போது என்ன செய்ய? அடங்காத பிள்ளைகளை எப்படியும் போகட்டும் என்று ஒதுக்கி விடத்தான் வேண்டியதாயிருக்கிறது. 

ஆனால் செல்வியை அப்படி ஒதுக்க முடியவில்லை. திறமையான மாணவிதான், இடையில்தான் படிப்பிலிருந்து கவனம் சிதறியிருக்கிறது அவளுக்கு. பேசிப் பார்த்தால் சரி செய்து விட முடியும் என்று எண்ணியிருக்க, நேற்றைய அவளது செய்கை வெகுவாக யோசிக்க வைத்திருந்தது. 

வகுப்பறைக்குள் அலைபேசி எடுத்து வருவது ஆசிரியர்களுக்கே தடை செய்யப்பட்டிருக்கும் போது மாணவர்கள்  எடுத்து வந்து மறைத்து வைத்திருப்பதை என்னவென்று சொல்வது. 

அதிலும் அலைபேசியை பள்ளிக்கு எடுத்துவந்து மறைத்து வைத்திருந்த செல்வி அவளது ஆசிரியரிடம் மாட்டிக் கொண்டபோதும் துளிகூட பயமின்றி திமிராய் நின்றது வியப்பையே தந்தது. 

பொதுவாகவே பெண் பிள்ளைகள் தவறு செய்து மாட்டும் போது பயந்து கண்கள் கலங்குவர், மன்னிப்பு கேட்பர், குறைந்தபட்சம் மாட்டிக் கொண்டோமே என்ற குற்றக் குறுகுறுப்பாவது இருக்கும். 

ஆனால், எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாமல்,  பயமோ பதட்டமோ கொள்ளாமல், இனி இது போல செய்ய மாட்டேன் என்று பேருக்கு கூட சொல்லாமல் அடமாக நின்றிருந்த செல்வி அனைத்து ஆசிரியர்களுக்குமே எரிச்சலைக் கிளப்பினாள். 

தலைமையாசிரியரிடம் அழைத்துச் சென்ற போது கூட அவள் பயப்படவில்லை. குறைந்தபட்சம் பள்ளியிலிருந்து நீக்குவீர்கள் அவ்வளவுதானே நீக்கிக் கொள்ளுங்கள் என்று திமிராகதான் நின்றிருந்தாள். 

   இனி இப்படி செய்யாதே என்று எச்சரிக்கை செய்து அனுப்புவதைத் தவிர வேறு வழியின்றி போனது ஆசிரியர்களுக்கு. பெற்றவர்களை அழைத்து வா என்று எத்தனை முறை கூறினாலும் அதையெல்லாம் காதில் வாங்குவதில்லை அவள். 

தான் குடியிருக்கும் பகுதிக்கு பின்புறம்தான் அவளது வீடு. அவளது பெற்றவர்களை சந்தித்து செல்வியின் நடவடிக்கைகளைப் பற்றி பேசிப் பார்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டார். 

******

 

பாரி வேந்தன் என்று பளபளப்பாக பெயிண்டில் எழுதப்பட்டிருந்த படகு கத்தி போல கடல் நீரைக் கிழித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தது. கிட்டத்தட்ட நூறு அடிகளுக்கும் மேல் நீளம் கொண்ட பெரிய அளவிலான விசைப்படகு அது. 

இந்திய தேசியக் கொடி இன்ஜின் அறையின் மேற் கூரையில் நீண்ட கம்பத்தில் பொருத்தப்பட்டு கடல் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. படகின் மேற்பரப்பில் பாரிக்கு உதவியாக வந்திருந்த மீனவர்கள் வலையை கடலில் வீசுவதற்கு ஏதுவாக கயிறு கொண்டு பிணைத்துக் கொண்டிருந்தனர். 

இம்முறை வெற்றியும் பாரியுடன் கடலுக்கு வந்திருந்தான். வேறு பெரிதாக வேலைகள் இல்லாத நாட்களில் பாரியோடு இணைந்து கடலுக்கு வருவது அவனுக்கு வழக்கம்தான். 

அவர்கள் கடலுக்கு வந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தது. இன்று ஒருமுறை பாடு சென்றுவிட்டு நாளை கரைக்குத் திரும்ப வேண்டும். கடலில் மீன் வலையை விரிப்பதற்கு பாடு செல்லுதல் என்று பெயர். 

 இறங்கு பொழுதில் (மதியம் இரண்டு மணிக்கு மேல்) வலையை விரித்து வைத்து பின்மாலை வேளையில் வலைகளை இழுப்பர். சில வகை மீன்களுக்கு ஆழ்கடலில் கூண்டுகளை அமைப்பதும் உண்டு. அது போக மடி வலையும் உபயோகப் படுத்துவது உண்டு. 

மடி வலை என்பது பெரிய அளவிலான பை போன்ற அமைப்பு உடையது கடலில் பெருமளவு மீன்கள் கூட்டத்தைப் பார்க்கும் போது மடிவலையை உபயோகப் படுத்துவர். மடி வலையில் பெரிய மீன்களில் இருந்து சிறு மீன்குஞ்சுகள் வரை தப்பாமல் சிக்கும். 

இலங்கை கடற் பகுதிகளில் மடி வலை உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சிறு மீன் குஞ்சுகளைக் கூட விடாமல் பிடிப்பதால் கடலில் மீன் வளம் அழிந்து போகும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்திய மீனவர்கள் சிலர் அதனை உபயோகிக்கின்றனர். 

ஒவ்வொரு வகை மீன்களும் ஒவ்வொரு இடங்களில் மிகுதியாக இருக்கும் என்பதால் அந்தந்த இடங்களுக்குச் சென்று வலையை விரிப்பர். பெரும்பாலும் கணவாய் வகை மீன்களுக்கும் இறால் வகைகளுக்கும் மடிவலையை உபயோகிக்கின்றனர். 

பாரியின் படகில் கீழ் புறம் இருந்த கிடங்கு முழுவதும் மீன்களால் நிறைந்திருந்தது. கிடங்கு என்பது மார்பளவு உயரமுடைய தடுப்புகள் கொண்ட பெட்டிகள் இருக்கும் அறையாகும். அந்த பெட்டிகள் முழுவதும் பலவகை மீன்களால் நிரப்பப்பட்டிருந்தது. மூன்று நாட்களுக்கான உழைப்பு அது. 

மோட்டார் மூலம் அந்த மீன்களின் மீது கடல் தண்ணீரைப் பாய்ச்சி, எடுத்து வந்திருந்த ஐஸ் கட்டிகளை உடைத்துப் போட்டுக் கொண்டிருந்தான் பாரி.  வெற்றியும் மேலும் இரண்டு பேரும் அவனுக்கு உதவியாக நின்றிருந்தார்கள். 

ஐஸ்கட்டிகள் கரையக் கரைய போட்டு விட்டால் போதும் பத்து நாட்களானாலும் மீன்கள் கெடாது. கிட்டத்தட்ட முப்பதாயிரம் முதல் நாற்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஐஸ்கட்டிகளை எடுத்துச் செல்வது அவர்களின் வழக்கம். 

மேலே நின்றிருந்த தேவா குரல் கொடுத்தான். 

“பாரிண்ணா, வலை  கயிறு கட்டி ரெடியாக்கீது. மடிப்பும் எடுத்து வச்சிட்டோம் ண்ணா. மேல வர்றியா நீ.”

“தோ… வரோம்.”

குரல் கொடுத்தவன் சிறு கயிற்று ஏணியின் மூலம் ஏறி மேலே வந்திருந்தான். காற்று சற்று பலமாகவே வீசியதால் படகு அலைபாய்ந்தபடியே இருந்தது. 

“மழை வருமா பாரி?”

வெற்றியின் கேள்விக்கு வலையின் ஒரு புறமிருந்த கயிற்றில் கனமான கல்லைக் கட்டியபடி, “அதெல்லாம் வராது வெற்றி. காத்து வடக்க பக்கமா வீசுது. மழை பெய்யலாம் வாய்ப்பேயில்ல.”

சற்று வயது முதிர்ந்த சக மீனவர் ஒருவரும் பாரியின் கூற்றை ஆமோதித்தார். 

வலையை கடலில் விரிப்பதற்கு முதலில் சற்று கனமான பிளாஸ்டிக் பலகை போன்ற மிதவை ஒன்றை கடலில் வீசினான் பாரி. பின்னர் கடலில் குதித்து நீந்தி அந்த மிதவையில் ஏறி சற்று ஸ்திரமாக நின்ற பிறகு, கல் கட்டப்பட்டிருந்த வலையின் முனையை கடலிலும் கயிறு இருந்த மற்றொரு முனையை பாரியிடமும் வீசினான் தேவா. 

பாரி அந்த கயிற்றின் முனையை இறுகப் பற்றிக் கொண்டதும் படகு மெதுவாக நகரத் துவங்கியது. படகின் வேகத்துக்கு இணையாக மடிப்பு மடிப்பாய் தயார் செய்து வைத்திருந்த மிக நீளமான கில்நெட் வலையும் அதோடு பிணைக்கப் பட்டிருந்த கயிறும் விரைவாக கடலுக்குள் தள்ளி விடப்பட்டுக் கொண்டே வந்தது. 

வலை சிக்கலாகாமல் கவனமாக இதனைச் செய்து கொண்டிருந்தனர் தேவாவும் மணியும். கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டர் அளவுக்கு நீளமான வலை. அரை வட்டமடித்து படகு மீண்டும் பாரி நின்றிருந்த பகுதிக்கு வரும் வரை வலை விரிக்கப் பட்டிருந்தது. 

வலையின் ஒருபுறத்தில் வரிசையாக கோர்க்கப் பட்டிருந்த ஆரஞ்சு நிற மிதவை பந்துகள் கடலின் மேற்பரப்பில் மிதந்து வலை இருக்கும் இடத்தை காட்டியபடி இருந்தது. ஆங்கில எழுத்தான யு வடிவில் வலை விரிக்கப்பட்டிருந்தது. 

பாரி பிடித்திருந்த வலையின் முனையை அந்த பிளாஸ்டிக் மிதவையோடு இறுகக் கட்டி அதனை போட்டோடு இணைத்த பிறகு கயிற்று ஏணி வழியாக போட்டினுள் ஏறினான் பாரி. 

இனி மூன்று நான்கு மணி நேத்திற்கு அவர்களுக்கு ஓய்வுதான். ஏற்கனவே பிடித்த மீன்களை தேவா, மணி மற்றும் உடன் வந்திருந்த மீனவர்கள் தரம் பிரிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்க சற்று ஓரமாக ஒதுங்கி வந்து அமர்ந்தனர் வெற்றியும் பாரியும். 

பாரி வலை விரிக்க கடலில் குதித்ததிலிருந்து மீண்டும் படகில் ஏறியது வரை அலைபேசியில் வீடியோ எடுத்திருந்தான் வெற்றி. 

அவற்றை கவனமாக எடிட் செய்து யூடியூபில் பதிவேற்றம் செய்தவன், சிறு சிறு வீடியோ கிளிப்பிங்குகளாக டிக்டாக்கிலும் பதிவேற்றினான். இது வழக்கமாக அவன் செய்வதுதான். 

யாரும் கண்டிராத புதிய வகை மீன்கள், வலையில் சிக்கும் விஷமுள்ள கடல் பாம்புகள், ராட்சத வடிவ மீன்கள் வலையில் சிக்கும் போது எடுத்த காட்சிகள் ஆகியவற்றை ஏற்கனவே பதிவு செய்திருக்கிறான். அந்த வகை வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பும் இருந்தது. 

மடிக் கணிணியை வைத்து இயக்கிக் கொண்டிருந்த வெற்றியின் அருகே நெருங்கி அமர்ந்த பாரி, “என்னடா செய்யற?”

“ஒன்னுமில்ல பாரி, இப்ப எடுத்த வீடியோவ யூடியூப்ல போட்டேன்.” என்று அவனிடம் காட்டியவன், அப்படியே டிக்டாக் வீடியோக்களையும் காட்ட, வரிசையாக பார்த்துக் கொண்டு வந்தவனின் விழிகளில் நித்திலாவின் வீடியோவும் விழுந்தது. 

புருவங்கள் உயர ஆச்சர்யத்தோடு, “வெற்றி, இந்தப் பொண்ணு…!”

“ம்ம்… இந்தப் பொண்ணு அது தம்பியோட சேர்ந்து போடற வீடியோலாம் நிறைய இருக்கு பாரி. எங்கயோ இந்தப் பொண்ண பார்த்த மாதிரியே இருக்கேன்னு அன்னைக்கு யோசிச்சேன். டிக்டாக்லதான் பார்த்திருக்கேன் போல.”

அவளுடைய புரொஃபைலுக்குள் சென்று அவளது வீடியோக்களை வரிசையாக பார்த்துக் கொண்டிருந்தான் பாரி. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் ரசிக்கும்படி இருந்ததில், கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, வெற்றி சிறிது நேரம் படுக்கிறேன் என்று கூறி கண்ணயர்ந்தது கூடத் தெரியாமல் போனது. 

வீடியோவில் தெரிந்த அவளது பிம்பத்தின் முக பாவனைகளிலும் விழியசைவுகளிலும் மூழ்கிப் போனான் பாரி. அவ்வளவு நெருக்கத்தில்… இரு கைகளுக்குள் அடங்கிய அவளது மாய பிம்பம் சொல்ல முடியாத மாற்றங்களை அவனுக்குள் ஏற்படுத்தியது நிஜம். 

கண்களிலே பெளத்தம் பார்த்தேன்

கன்னத்தில் சமணம் பார்த்தேன்

பார்வை மட்டும் கொலைகள் செய்ய பார்க்கிறேன்…

       பற்களிலும் கருணை பார்த்தேன்

பாதங்களில் தெய்வம் பார்த்தேன்

புன்னகையோ உயிரை தின்ன பார்க்கிறேன்…

 

 

— ஆழி சூழும். 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!