ஆழி சூழ் நித்திலமே

1596006291531-349b7037

ஆழி சூழ் நித்திலமே

அனைவரும் விடைபெற்றுக் கிளம்பிய பிறகு, பாக்கியலஷ்மியும் நித்திலாவிடம் விடைபெறும் போதுதான் நித்திலாவுக்கு இனி தான் இங்குதான் இருந்தாகவேண்டும். இதுதான் இனி என்வீடு என்ற நிதர்சனம் புரிந்ததில் கண்கள் கரித்துக்கொண்டு வர, விசும்பியவளை ஆதரவாய் அணைத்துக் கொண்டார்.

“நித்திம்மா, என்னடா? எல்லா பொண்ணுங்களும் ஒருநாள் இந்த சூழலை கடந்துதான்டா ஆகனும். இனி இதுதான் உன்வீடு. இங்க இருக்கறவங்களோட சந்தோஷமும் நிம்மதியும் உன் கையிலதான் இருக்கு.

 கல்யாணம் நடந்த சூழ்நிலை வேணும்னா நம்ம மனசுக்கு ஒப்பாம இருந்திருக்கலாம், ஆனா இந்த கல்யாணம் நடந்தது நன்மைக்குதான்.

கொதிக்கிற தண்ணியில பிம்பம் தெரியாது நித்திம்மா. இப்ப உன் மனசு அப்படிதான் அலைபாய்ஞ்சுகிட்டு இருக்கும். அம்மாவுக்குப் புரியுது. எது சரி எது தப்புன்னு இப்ப எதையுமே யோசிக்காத. எல்லாமே கொஞ்சம் தள்ளி வை.

நடந்து முடிஞ்ச சில நிகழ்வுகளை மட்டுமே வச்சு ஒருத்தவங்களோட குண இயல்பை நம்மால கணிக்க முடியாது. அது சரியாவும் இருக்காது. அவங்களோட இயல்பா பழகிப் பார்க்கறப்பதான் உண்மையான குணம் தெரியவரும்.

பார்க்க கரடுமுரடா தெரிஞ்சாலும் இவங்க எல்லாருமே நல்ல மனசு உள்ளவங்களாதான்டா தெரியறாங்க. இவங்களோட இயல்பை புரிஞ்சுக்க முயற்சி பண்ணுடா.

உண்மையான சந்தோஷம் நாம வாழற இடத்துல இல்லடா. நாம வாழற விதத்துலதான் இருக்கு. நீ புத்திசாலிப் பொண்ணு. நீ இங்க வாழற வாழ்க்கை நிச்சயம் மகிழ்ச்சியா இருக்கும். அந்த நம்பிக்கை எனக்கிருக்கு.

 உன்னை ஒரு நல்ல இடத்துல சேர்த்திருக்கற நிம்மதியும் அம்மாவுக்கு இருக்குடா. இத்தனை நாள் மனசுல இருந்த அலைப்புறுதல் சங்கடமெல்லாம் இப்ப இல்ல. இனி எல்லாமே நல்லதே நடக்கும் நித்திம்மா.”

பாக்கியலஷ்மியின் வார்த்தைகள் சற்று தெளிவைத்தர, தலையாட்டிக் கொண்டாள் நித்திலா. பாரி, கயல், ஆயாவிடமும் நித்திலாவைப் பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு விடைபெற்றுக் கொண்டார் பாக்கியலஷ்மி.

“அக்கா, உனக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு நான் பெரிய பையன் இல்ல. ஆனா, அடிப்படையில பாரி மாமா நல்லவங்கக்கா. அதை மட்டும் நினைவுல வச்சிக்கோ.

 உனக்கு எல்லாமே நல்லதுதான் நடக்கும். பழசையெல்லாம் மறந்துடு. இன்னைக்கு உன் லைஃப் புதுசா ஆரம்பிக்குது. இனி இதை மட்டும் யோசிக்கா.”

நித்திலாவை அணைத்துக் கொண்டு நிகிலேஷூம் விடைபெற, அவர்கள் கிளம்பியதும் வீட்டினுள் நுழைந்தனர் அனைவரும்.

உள்ளறையின் படுக்கை விரிப்பை மாற்றி, ஒதுக்கி வைத்து நித்திலாவைப் படுத்துக் கொள்ள சொன்ன கயல், தன் மாமனிடம் வந்து,

“போ மாமா, அவங்களாண்ட கொஞ்சம் பேசு. ரொம்ப பயந்து போயிக்கிறாங்க. நாங்க இன்னாதான் பேசினாலும், நீ தெகிரியம் சொல்றா மாதிரி ஆவுமா? போய் பேசு மாமா.”

‘ஏதேய்… எனக்கே யார்னா தெகிரியம் சொன்னா தேவலைன்னு இருக்கு, இதுல இந்தக் கயலு வேற…’ மனதுக்குள் எண்ணிக் கொண்டவனுக்கு நித்திலாவிடம் தான் பேச வேண்டியதன் அவசியமும் புரியத்தான் செய்தது.

ஆனால் தான் எதாவது பேசினாலும் அவள் கோபத்தைச் சந்திக்கும் அபாயமும் இருப்பதும் புரிந்தது. கோபம்கூட சமாளிக்கலாம், அழுதால் தாளமுடியாது. அவள் மனநிலை அமைதியாவதே தற்போதைய முக்கியம் என்று தோன்றியது.

 கயலிடம் மையமாய் தலையசைத்துக் கொண்டு அறைக்குள் சென்றான்.

பாரி அறைக்குள் நுழையவும் கட்டிலில் அமர்ந்திருந்த நித்திலா சட்டென்று எழுந்து நின்றாள். பள்ளி மாணவி போன்ற அவளது செய்கையே அவளது பயத்தின் அளவைக் காட்ட,

“இன்னாத்துக்குங்க இப்புடி பயப்புடுறீங்க? உங்க வூட்ல நீங்க எப்படி இருப்பீங்களோ, அதேபோல ஃபிரியா இருங்க. உங்களுக்கு இங்க யாரும் எந்த சங்கடமும் தரமாட்டாங்க. முக்கியமா என்னியால எந்த சங்கடமும் வராது. நீங்க இங்க படுத்துக்கோங்க. நான் வெளிய படுத்துக்குவேன்.”

ஒற்றை போர்வையையும் தலையணையையும் எடுத்துக் கொண்டவன்,

“உங்க விஷயத்துல இதுவரைக்கும் நான் செஞ்சது பூராமே ராங்காதான் ஆயிருக்கு. உங்களுக்கும் எம்மாம் பிரச்சனைய இழுத்தாந்திருக்கு.  ஆனா,  இன்னைக்கு நடந்த கல்யாணம் அப்படியில்லங்க… அப்படியாகவும் வுட மாட்டேன்.”

“…”

“உங்ககிட்ட நெறைய பேசனும்னுங்க. ஆனா, நீங்களே இன்னிக்கு குழப்பத்துல இருப்பீங்க. இப்ப எதுவும் பேச முடியாது.

நீங்க நிம்மதியா தூங்குங்க. இன்னோரு நாளு நாம பேசுவோம்.”

தலையணை போர்வையோடு வெளியே வந்தவனை கேள்வியாக கயல் பார்க்க, “அந்த புள்ள பாவம் கயலு. ரொம்ப குழப்பத்துலயும் பயத்துலயும் இருக்குது.

மொதல்ல பயமெல்லாம் போயி நம்ப எல்லார்கூடவும் அது சகஜமா பேசி பழகட்டும். அதுக்கப்புறம் மத்ததெல்லாம் யோசிப்போம்.”

“கண்ணாலம் கட்டியும் வெளிய போய் படுத்தா நல்லாவா இருக்கும் பாரி. பார்க்கறவங்க எதனா பேசுவாங்க.” ஆயா வெகுவாய் வருந்த,

“அதெல்லாம் யாரும் எதுவும் பேசமாட்டாங்க. கயலுக்கு கண்ணாலம் பண்ணாம நானு கட்டிக்கினு வந்ததே தப்பு. அத ஒரு நல்லவன் கையில புடிச்சி குடுத்துட்டு என் வாழ்க்கைய நான் பார்த்துக்குவேன். நீ எதுவும் கொழப்பிக்காத ஆயா.”

எப்போதும் வழக்கமாய் படுக்கும் வீட்டின் முன்புறமிருந்த ஷெட்டில் கயிற்றுக் கட்டிலில் போர்வையை விரித்து படுத்தவனை சற்று யோசனையோடு பார்த்திருந்தாள் கயல்.

“இன்னா பாரி மொதோ நாளே அடிச்சி வெளிய தள்ளிருச்சா உன் வூட்டம்மா.” ஆரம்பத்திலிருந்து நடந்த அவ்வளவும் தெரிந்தவனாகையால் விளையாட்டாய் வம்பிழுத்த தமாஸூக்கு,

“அட! நீ தெனமும் அண்ணி கையால வாங்கறத விடவா நான் வாங்கிற போறேன். உன்னைய வெரட்டி விடவும்தான இங்க வந்து குந்திக்கினுக்கிற.” பதில் கொடுத்தவன்,

“நானு நல்லா தூங்கி ஒரு மாசமாவுது. இன்னிக்குதான் நிம்மதியா தூங்க போறேன். இன்னிக்கு காவலுக்கு நீ உக்காரு.” என்றபடி படுத்துவிட,

“அது சரி… வந்து வம்பிழுத்ததுக்கு தேவைதான்டா எனக்கு.” வாய் வார்த்தையாக நொடித்துக் கொண்டாலும் தானும் ஒரு கட்டிலைக் கொண்டு வந்து போட்டு படுத்துக் கொண்டான் தாமஸ்.

உள்ளே கட்டிலில் படுத்திருந்த நித்திலாவுக்கு மனது சற்றே ஆசுவாசமாய் இருந்தது.

நேற்று வரை அவ்வளவு கோபத்தோடு எதிரியைப் போல நினைத்திருந்தவன் இன்று தனக்கு கணவன். விதி தனக்கு விதித்தது இது.

அவன் மீதான கோபம் இம்மிகூட குறையாத நிலையில் அவன் இன்று உரிமையாய் ஏதேனும் ஒற்றை வார்த்தை பேசியிருந்தாலும் ஒன்று காளியாய் கொதித்திருப்பாள், இல்லையென்றால் மொத்தமாய் உடைந்திருப்பாள்.

அவன் நாசூக்காக விலகிப் போனது சற்று ஆறுதலளித்தது. இதுதான் தனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை. அது நன்றாகவே புரிகிறது. ஆனால் அதை ஏற்றுக்கொள்ள,  மனதளவில் தான் சமாதானமாக வெகு காலம் ஆகுமோ என்று தோன்றியது.

முதலில் தன் மனம் சமாதானம் ஆகுமா என்பதே சந்தேகமாய் இருக்க, உடனடியாக கணவன் என்ற உரிமையோடு அவன் எதைப் பேசியிருந்தாலும் தன்னால் தாங்கியிருக்க முடியாது என்று மட்டும் உறுதியாய் தோன்றியது.

‘எனக்கு மட்டும் ஏன்ப்பா இப்படிலாம் நடக்குது’ எப்போதும் போல கண்ணீரோடு தந்தையின் நினைவில் தஞ்சமடைந்தது அவள் உள்ளம். உறக்கம் என்பது அறவே விழிகளில் அற்றுப் போக, எதையெதையோ யோசித்துத் தவித்தபடி படுத்திருந்தாள்.

வெளியே ஆயாவோடு படுத்திருந்த கயலுக்குள்ளும் எண்ணங்களின் ஊர்வலம். பாரியின் வார்த்தைகள் காதில் ஒலித்தபடி இருந்தது.

தன் மாமனுக்கு அவன் மனம்போல வாழ்க்கை அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சிதான். அதில் எள்ளளவும் வருத்தமில்லை.

அவன்மீது மலையளவு பாசமும் நேசமும் இப்போதும் இருக்கிறது. அது என்றுமே மாறாது. ஆனால் முன்பிருந்த அவன்மீதான திருமண ஆசைகள் துளிகூட தற்போது இல்லை.

ஆனால், தான் இங்கே இருக்கும் வரை மாமன் அவனுடைய வாழ்க்கை பற்றி யோசிக்க மாட்டானோ…? தனக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும் என்ற எண்ணமும் வலுவாய் அவனுள் இருக்கிறது.

தன்னால் வேறு திருமணம் செய்து கொள்ள முடியுமா? முகம் தெரியாத அந்த மனிதனுக்கு நல்ல மனைவியாய் வாழ முடியுமா? நினைக்கையில் ஆயாசமாய் இருந்தது.

தனக்கு இந்த வீடு சாஸ்வதம் இல்லை என்பது புரிகிறது. இனி தான் அதிக நாட்கள் இங்கிருப்பது சரிவராது என்பதும் புரிகிறது.

ஆனால், வீட்டைவிட்டு தனித்து செல்லும் எண்ணமெல்லாம் இல்லை. அப்படி தான் தனித்திருந்தால், அது தன் மாமனை வெகுவாய் வருத்தும். குற்றவுணர்வும் கொள்ள வைக்கும். ‘மாமனுக்கு மனவருத்தம் தரும் எந்த செயலையும் நான் செய்ய மாட்டேன்’ உறுதியாய் எண்ணிக்கொண்டாள்.

அதுவே தான் முறையாய் திருமணம் செய்து போனால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது. ஆயாவின் மனநிலையும் அமைதியாகும்.

எதையெதையோ யோசித்துக் குழம்பியது உள்ளம்.

பெண்கள் இருவரும் விடியும் வரை உறக்கம் தொலைத்திருக்க, இதுநாள் வரை வெறும் கனவு, அதுவும் கைசேர வாய்ப்பில்லாத கனவு என்றெண்ணியிருந்த காதல் கைசேர்ந்ததில் நிம்மதியாய் உறங்கியிருந்தான் பாரி.

—-ஆழி சூழும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!