ஆழி சூழ் நித்திலமே 7

             ஆழி 7

 

 

 

ஆளரவமே இல்லாது வெறிச்சோடிப் போயிருந்த தெருவைப் பார்க்கவே பயமாய் இருந்தது நித்திலாவுக்கு. இத்தனைக்கும் தினமும்  வந்து போகும் தெருதான். துணையோடு வரும்போது வந்திராத பயம், தனிமையாய் நின்றிருந்த போது வயிற்றுக்குள் கலவரம் தந்தது.  

நீளமான அந்த தெருவில் சற்று தள்ளித் தள்ளி இருந்த ஸ்ட்ரீட் லைட் மட்டுமே சொற்ப வெளிச்சத்தை உமிழ்ந்தபடி இருக்க,  மற்றபடி காலி மனைகளில் எல்லாம் அந்தகாரம் அமானுஷ்யம். இத்தனைக்கும் நேரம் என்னவோ இரவு எட்டைதான் தாண்டியிருந்தது. 

அதிலும் கட்டி முடிக்கப்பட்டு பாதி நிலையில் இருந்த கட்டிடங்கள் வெகுவாகவே பயமுறுத்தியது. கையில் இருந்த அலைபேசியில் மீண்டும் ஒருமுறை தம்பிக்கு அழைத்தாள். 

“நிக்கி மாடு, எங்கடா இருக்க? வந்துட்டியா? இல்லையா?”

“வந்துட்டே இருக்கேன் நித்திக்கா. சீக்கிரம் வந்துடுவேன். உன்னை யாரு நடந்து போகச் சொன்னது? நான் வர்ற வரை கொஞ்சம் பஸ் ஸ்டாப்லயே வெயிட் பண்ணியிருக்கலாம்ல.”

பதட்டத்தோடு பேசுகிறான் என்பது அவனது குரலிலும் அக்கா என்ற அவனது அழைப்பிலும் தெரிந்தது அவளுக்கு. அவனை மேலும் பதட்டப்படுத்த விரும்பாமல், “ஒன்னும் பிரச்சனை இல்லை. மெதுவா நடந்துக்கிட்டு இருக்கேன் நீ வந்துடு.” என்றபடி ஃபோனை கட் செய்தாள். 

செமஸ்டர் நெருங்குவதால் நண்பர்கள் இணைந்து படிக்க முடிவு செய்து தோழி ஒருத்தியின் வீட்டில் கூடினர். அரட்டையும் படிப்புமாக சென்றதில் பொழுது போனதே தெரியவில்லை. பாக்கிய லஷ்மி ஃபோன் செய்த பிறகுதான் கிளம்பினாள். வழக்கம் போல நிகிலேஷை பஸ் ஸ்டாப்புக்கு வரச் சொல்லிவிட்டு இவளும் பஸ் ஏறியிருந்தாள்.

நிகிலேஷூம் அவனது நண்பர்களுடன் இணைந்து வெளியே சென்றிருந்ததால் நித்திலாவை பிக்கப் செய்து கொள்கிறேன் என்று கூறியிருந்தான். ஆனால் ட்ராபிக்கில் சிக்கிய அவனால் நித்திலாவுக்கு முன்பே அங்கு வரமுடியாத சூழல். 

சற்று பொறுத்திருந்து நிகிலேஷூடன் வந்திருக்கலாம், பஸ் ஸ்டாப்பில் தனியாக நிற்க சங்கடப்பட்டுக்கொண்டு, நடந்துகொண்டே இருப்போம் தம்பி வந்ததும் அவனுடன் இணைந்து கொள்ளலாம் என்றெண்ணி அவளது வீடு செல்லும் பாதையில் நடக்கத் துவங்கினாள். 

மெயினான பகுதிகளில் நடந்து வரும் போது ஒன்றும் தெரியவில்லை. நிகிலேஷூம் வரத் தாமதம் ஆகவும், விறுவிறுவென்று நடந்தவளுக்கு ஆள் நடமாட்டமே இல்லாத இந்த தெருவுக்குள் வந்ததும் பயம் பிடித்துக் கொண்டது. 

பரசுராமன் இருந்திருந்தால் உடனடியாக அவருக்கு அழைத்து வரச் சொல்லியிருப்பாள். அவர் உறவினர் குடும்ப விழா ஒன்றில் கலந்து கொள்ள தஞ்சாவூர் சென்றிருந்தார். நித்திலா நடந்து வந்தது மட்டும் அவருக்குத் தெரிந்தால் பாக்கிய லஷ்மிக்கும் நிகிலேஷ்க்கும் சேர்ந்து திட்டு விழும். 

தந்தையை நினைத்த மாத்திரத்தில் மனம் கனிந்து லேசானது… தைரியத்தையும் நேர்மறை எண்ணங்களையும் மனதில் இருத்தியபடி நடையை எட்டிப் போட்டாள். 

“பட்… பட்… பட்… படபடபட…”

இருளையும் நிசப்தத்தையும் கிழித்தபடி கேட்ட வண்டிச் சத்தம் தூக்கிவாறிப் போட வைத்தது அவளுக்கு. திரும்பிப் பார்க்க, சற்று தூரத்தில் நின்றிருந்த இருசக்கர வாகனமும் அதன்மேல் ஆகர்ஷித்திருந்த ஒருவனையும் கண்ட மாத்திரத்தில் கைகால்கள் தனிச்சையாய் உதறல் எடுத்தது.

 வந்த வண்டி கடந்து சென்றிருந்தால்கூட ஒன்றும் தெரிந்திருக்காது. வண்டியும் அவனும் இவளை பார்த்ததும் நின்றது பயத்தைக் கிளப்பியது. 

பதட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு நடையை எட்டிப் போட்டாள். சற்று தூரத்தில் கட்டி முடிக்கப்பட்ட தனிவீடு ஒன்று இருந்தது. அங்கு யாரேனும் ஆட்கள் இருக்கக்கூடும் என்றெண்ணியபடி திரும்பிப் பார்க்க,  அவன் வண்டியை உருட்டியபடி இவளைப் பின்தொடர்வது தெரிந்தது. 

மேலும் பயம் கூடிப்போக வியர்வையில் பிசுபிசுத்த உள்ளங்கையில் இருந்த ஃபோனை அழுந்த பற்றிக் கொண்டு மீண்டும் தம்பிக்கு அழைத்தாள்.  இவள் பேசும் முன் அவன் பேசினான். 

“நித்திக்கா நெருங்கிட்டேன். பஸ் ஸ்டாப் தாண்டிட்டேன். சீக்கிரம் வந்துடுவேன்”

“சீக்கிரம் வா நிக்கி. யாரோ ஃபாலோ பண்ற மாதிரி தெரியுது. பயமா இருக்கு.”

“வாட்… ஃபாலோ பண்றாங்களா? எங்க இருக்க நீ? நல்லா வெளிச்சமான இடத்துல இரு. வீடுங்க இருக்கற இடத்துல நில்லு. அதிகபட்சம் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவேன்.”

“ம்ம்… சரி. பங்களா ஒன்னு புதுசா கட்டியிருக்காங்க இல்ல, அங்கதான் நிக்கறேன். சீக்கிரம் வா.” என்றபடி விறுவிறுவென்று நடந்தவள் அந்த வீட்டின் அருகே சென்று நின்று கொண்டாள். 

அவள் நின்றிருந்த இடத்தில் சற்று லேசான வெளிச்சம் இருந்தது. அந்த வீடு முகப்பில் இருந்து சற்று உள்ளடங்கி இருந்தது. வீட்டின் கேட் மூடியிருந்தாலும் உள்ளே ஆட்கள் இருப்பது தெரிந்தது. ஏதேனும் பிரச்சனை என்றால் குரலெழுப்பினால் வெளியே வருவர் என்றும் தோன்றியது. 

தம்பி வரும் வரை அங்கு நிற்பது பாதுகாப்பாக இருக்குமென்பதால் அங்கேயே நின்று கொண்டாள். கையில் வைத்திருந்த புத்தகங்கள் அடங்கிய பையை நெஞ்சோடு இறுக அணைத்துக் கொண்டு மெல்ல வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தாள். 

 பின்தொடர்ந்து வந்தவன் சற்று தூரத்தில் இருளில் மறைந்தவாறு நின்றிருப்பது புலப்பட்டது.  ‘எதற்காக பின் தொடர்கிறான்? எதற்காக இப்போது நிற்கிறான்?’ பதட்டத்தோடு எண்ணிக்கொண்டவள், பயத்தோடு அவ்வப்போது அவன் நின்றிருந்த புறம் பார்வையை ஓட்டியபடி நின்றிருக்க. அடுத்த சில நிமிடங்களில் நிகிலேஷின் வண்டி இவளருகே வந்து நின்றது. 

சற்று தூரத்திலே தம்பியின் வண்டியைப் பார்த்த மாத்திரத்தில் தைரியம் மீண்டிருந்தது நித்திலாவுக்கு. தம்பியின் வண்டியில் ஏறிக் கொண்டாள். அவ்வளவு நேரம் இவளைத் தொடர்ந்து வந்து நின்றிருந்த வண்டியும் அதனை ஓட்டி வந்தவனும் புயல் வேகத்தில் கடந்து சென்றனர். 

“இந்த ராஸ்கல்தான் ஃபாலோ பண்ணான் நிக்கி. நான் நிக்கவும் அவனும் நின்னுட்டான்… பயமாப் போச்சு எனக்கு. இப்ப நீ வந்ததும் கிளம்பிட்டான்.”

“ச்சே… ச்சே… அவர் ஃபாலோ பண்ணியிருக்க மாட்டார் நித்திக்கா. உனக்குத் துணையா வந்திருப்பாரா இருக்கும். நீ தனியா நிக்கவும் கூடவே நின்னுருக்காரு. இப்ப என்கிட்ட போயிட்டு வரேன்னு தலையசைச்சிட்டுதான் போறாரு.”

“நிஜமாவாடா சொல்ற. உனக்குத் தெரிஞ்சவரா?”

“ம்ம்… நம்ம வீட்டுக்கு பின்னாடி இருக்கற குப்பத்துலதான் இருக்காரு. நான் கடல்ல விழுந்தேன்ல அன்னைக்கு… அப்ப என்னை காப்பாத்துனது இவர்தான். இவர் பேரு பாரி. இவர் போட்லதான் நாங்க திரும்பி வந்தோம்.”

“நிஜமாவாடா சொல்ற.” அன்றைய நினைவில் இன்றும் மேனி சிலிர்த்தது நித்திலாவுக்கு. நிகிலேஷூக்கும் ஆழிக்குள் விழுந்து எழுந்த பயம் இன்னும் மிச்சமிருந்தது. அன்றைய நிகழ்வுக்கு இருவரின் மனமும் சென்றது. 

போட்டுக்குள் ஏறியிருந்தபோதும் உடம்பின் ஈரத்துக்கும் சுழன்றடித்த குளிர்ந்த கடல் காற்றுக்கும் நிகிலேஷின் உதடுகள் தானாகத் தந்தியபடித்தபடி இருந்தன. அவனது நண்பர்கள் இருவர் அவனது கை கால்களைச் சூடுபறக்கத் தேய்த்துவிட்டபடி இருந்தனர். 

சற்று சூடான தேநீரைக் கொண்டு வந்து தேவா கொடுக்கவும் நடுங்கும் கரங்களால் வாங்கிக் கொண்டான். அவனுக்கு அது தேவையாகவும் இருந்தது. குளிரை விட பயத்தில் ஏற்பட்ட நடுக்கம்தான் அதிகம். 

என்னதான் நீச்சல் தெரிந்தாலும் பல நூறு அடிகள் ஆழமுள்ள கடலில் எதிர்பாராமல் விழுந்தது பெரும் பயத்தில் ஆழ்த்தியிருந்தது அவனை. முதல் முறை மூழ்கி வெளியே வந்து அடுத்த முறை மூழ்குவதற்குள் பாரி வந்து தூக்கியிருந்தான் என்றாலும் தண்ணீருக்குள் விழுந்த அந்த நொடிகளின் பயம் அவனைவிட்டு போகவில்லை. 

அவனது உடமைகளில் இருந்து துவாலையும் சட்டையும் எடுத்து வந்து சவரி கொடுக்க,  அதை மாற்றிய பிறகுதான் நடுக்கம் சற்று மட்டுப்பட்டது. 

நிகிலேஷ் விழுந்ததும் போட்டை நிறுத்தச் சொல்லிவிட்டு கடலுக்குள் குதித்திருந்தான் பாரி. சுதாரித்து படகை நிறுத்துவதற்குள் படகு சற்று தூரம் சென்றிருந்தது. போட்டில் இருந்த அனைவருமே பதறித்தான் போயிருந்தனர். 

உடனடியாக உயிர் காக்கும் மிதவைகளை எடுத்து பாரியை நோக்கி வெற்றி வீச, அதற்குள் நிகிலேஷை நெருங்கி அவனை தன் பிடியுள் கொண்டு வந்திருத்த பாரி அந்த மிதவைகளைப் பற்றிக் கொண்டு நீந்தி படகை அடைந்திருந்தான். 

படகின் மேலிருந்து கயிற்று ஏணியை இறக்கவும் அதனைப் பற்றிக் கொண்டு மேலே ஏறியிருந்தனர் இருவரும். 

வீட்டில் இருந்து அலைபேசி வழியே தம்பி தடுமாறி கீழே விழுந்ததை பார்த்திருந்த நித்திலாவின் நிலை படுமோசமாய் இருந்தது. நிகிலேஷ் விழுந்த வேகத்துக்கு அவன் கையிலிருந்த அலைபேசி எகிறிப் போய் குவித்துப் போடப்பட்டிருந்த வலைகளினூடே விழுந்திருந்தது. 

கேமராவை வலை மறைத்திருக்க, காட்சிகள் எதுவும் தெரியவில்லை. கசமுசவென்ற சப்தத்தைத் தவிர வேறேதும் புரிந்து கொள்ளவும் முடியவில்லை அவளால். 

“நிகிலேஷ்… நிகிலேஷ்…” என்று கத்திக் கதறிவிட்டு அலைபேசி இணைப்பைத் துண்டித்து விட்டு மீண்டும் முயன்றாள். பாரியையும் நிகிலேஷையும் மேலே தூக்குவதில் முனைப்பாய் இருந்தவர்களின் காதில் அலைபேசியின் சப்தம் விழாததில் யாரும் அவளழைப்பை ஏற்கவுமில்லை. 

தம்பிக்கு என்னவாயிற்றோ ஏதாயிற்றோ என்று ஒன்றும் புரியாமல், பயத்தில் உள்ளம் வெடவெடக்க, கை கால்கள் நடுக்கத்தில் உதற, கண்களில் வழிந்த கண்ணீருடன் மீண்டும் மீண்டும் அலைபேசிக்கு அழைத்துக் கொண்டே இருந்தாள். 

படகில் நிகிலேஷ் சற்று ஆசுவாசமானதும், ஒலித்துக் கொண்டிருந்த அலைபேசியின் சப்தம் கேட்டு அதைத் தேடி எடுத்த பாரி, திரையில் தெரிந்த நித்திலாவின் பிம்பத்தைப் பார்த்ததும் வெற்றியிடம் கொடுத்திருந்தான். 

அழைப்பை ஏற்று பேசிய வெற்றி அழுகையில் கரைந்த நித்திலாவுக்கு சமாதானம் சொல்லி, தம்பியோடு அவளையும் பேச வைத்து ஆசுவாசப்படுத்தியிருந்தான். 

 

“இப்ப நினைச்சாக்கூட பயமா இருக்குடா. கடவுளுக்குதான் நாம நன்றி சொல்லனும்.”

“ம்கூம், இப்ப போனாரே அவருக்குதான் நன்றி சொல்லனும்.”

“ம்ம்… இருட்டுல சரியா முகத்தைக் கூட பார்க்கலடா. அன்னைக்கு என்கூட பேசினவரா இவரு?”

“இல்ல,  அவர் வேற. அவர் பேரு வெற்றி. டிக்டாக்ல விதவிதமா மீன்களைப் பத்தி, மீன் பிடிக்கற முறைகள் பத்தியெல்லாம் வீடியோ போடுவாரில்ல, அவர்தான் வெற்றி. அன்னைக்கு உன்கூடப் பேசினவரு. இப்ப வண்டியில போனவரு பாரி. நம்ம வீட்டுக்கு பின்னாடிதான் இருக்காரு.”

“ம்ம்…”

நடந்த சம்பவத்தைப் பெற்றவர்களிடம் கூடத் தெரிவிக்கவில்லை இருவரும். அவர்களுக்குத் தெரிந்தால் பதறிப் போவார்கள் என்பது ஒருபுறமிருந்தாலும், அடுத்து எங்கேயும் நிகிலேஷையும் தனியாக அனுப்ப மாட்டார்கள் என்பது திண்ணம். ஆகவே அவர்களிடம் சொல்ல வேண்டாம் என்று நித்திலாவிடம் கெஞ்சிக் கேட்டிருந்தான் நிகிலேஷ். 

“நிஜமா அன்னைக்கு எனக்கு உயிரே போயிடுச்சிடா. நம்ம அப்பாவுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சுதுன்னா கண்டிப்பா உன்னை காப்பாத்தினவரைப் போய் பார்த்து நன்றி சொல்லியிருப்பாரு. நாம ரெண்டு பேரும் இந்த வாரம் அவங்க வீட்டுக்குப் போய் தேங்க்ஸ் சொல்லிட்டு வரலாமா நிக்கி?”

“ம்ம்… நாம போகலாம் நித்திக்கா. எனக்கு அவங்க வீடு தெரியும். நான் கூட்டிட்டுப் போறேன். ஆனா, அப்பாவுக்கோ அம்மாவுக்கோ தெரிஞ்சுதுன்னா அவ்வளவுதான். என்னையும் எங்கயும் வெளியவே அனுப்ப மாட்டாங்க. வண்டியையும் வாங்கி வச்சுப்பாங்க. அவங்ககிட்ட சொல்லிடாத நீ.”

“சரி, சரி சொல்ல மாட்டேன்.” 

இருவரும் பேசியபடி வீட்டினுள் வந்திருக்க, பரசு ராமனோடு அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள் பாக்கிய லஷ்மி. 

“அப்பா எப்ப வர்றாங்களாம் ம்மா. அங்கேயிருந்து கிளம்பிட்டாங்களா இல்லையா? ஐ மிஸ் ஹிம்.” சிணுங்கியபடி பாக்கியலஷ்மியின் அருகே அமர்ந்து தோளைக் கட்டிக் கொண்டாள் நித்திலா. 

“இந்தா, நீயே உங்கப்பாகிட்ட பேசு. பஸ் ஏறிட்டாராம். ரெண்டு நாள் உங்கப்பாவ பார்க்காம இருக்க முடியலையா உனக்கு?”

சிரித்தபடி அன்னை நீட்டிய அலைபேசியை நாக்கைத் துருத்தி பழிப்பு காட்டியபடி வாங்கியவள், பஸ் எப்போது கிளம்பும் என்பதில் ஆரம்பித்து, இருக்கைகள் அவருக்கு வசதியாக இருக்கிறதா? சென்னைக்கு எத்தனை மணிக்கு வந்து சேருவார்? என எல்லா விபரத்தையும் கேட்டுப் பிறகு சிறிது நேரம் செல்லமும் கொஞ்சிவிட்டு ஃபோனை வைத்தாள். 

 

தஞ்சை பஸ் நிலையம்… 

மகளிடம் அலைபேசியில் பேசி முடித்துவிட்டு பஸ் இருக்கையில் சாய்ந்து அமர்ந்த பரசுராமனின் முகம் புன்னகையில் விகசித்திருந்தது. எத்தனை வருடங்கள் ஆனால் என்ன? எவ்வளவு வளர்ந்திருந்தால் என்ன? தன் மகள் இன்றும் சிறு குழந்தைதான் என்று எண்ணிக் கொண்டார். 

அதிலும் தன்மீது அவளுக்கு பாசம் அதிகம் என்று பெருமிதத்தோடு எண்ணிக் கொண்டது உள்ளம். குழந்தையாய் அவரிடம் கொஞ்சிக் குழைபவள், அவருக்கு லேசான உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும் அன்னையாய் மடி தாங்கிக் கொள்வாள். அந்த வகையில் அருமையான குடும்பம் அமையப் பெற்றவன் நான் என்று பூரிப்பாய் எண்ணிக் கொண்டார். 

அதே நேரத்தில் அவருடைய தமக்கையின் பேச்சுக்களை நினைத்த மாத்திரத்தில் உள்ளம் திராவகமாய் காந்தியது அவருக்கு.  காலையிலிருந்து கொதித்துப் போயிருந்த மனது சற்றுமுன் பேசிய மகளின் பேச்சில்தான் குளிர்ந்திருந்தது. 

எவ்வளவு இளக்காரமாய் எண்ணியிருந்தால் பூப்போல நான் வளர்த்திருக்கும் என் மகளை இரண்டாம் தாரமாய் தன் மகனுக்குக் கேட்பாள்? தன் தமக்கையை நினைக்க நினைக்க மனதே ஆறவில்லை அவருக்கு.

 ‘காசு பணம் வசதியில் வேண்டுமானால் அவளுக்கு நான் குறைவாய் இருக்கலாம், அதற்காக தேவதையாய் பெண்ணை வளர்த்து ராட்சஸன் கையிலா பிடித்துக் கொடுப்பேன். 

ஊரே தூற்றுகிறது தன் தமக்கையின் குடும்ப லட்சணத்தையும், அவர்கள் மருமகளை நடத்திய விதத்தையும். அதிலும் அந்த கேடுகெட்டவனுக்கு இல்லாத கல்யாண குணங்களே இல்லையாம். அவனுக்கு என் பெண் கேட்கிறதோ?’ எண்ணி எண்ணிக் குமைந்தார். 

    யார்வீட்டு விசேஷமாய் இருந்தாலும் குடும்பத்தோடு செல்லும் வழக்கத்தை வெகு வருடங்களுக்கு முன்பே விட்டிருந்தார். 

இப்பொழுதும் அவருடைய தந்தை வழி உறவினர் வீட்டுத் திருமணம் தவிர்க்க முடியாத ஒன்றாய் இருக்கவும், அவர் மட்டுமே தஞ்சைக்குக் கிளம்பி வந்திருந்தார். 

அந்த திருமண வீட்டில்தான் அவருடைய மூன்றாவது தமக்கை வசந்தா, ஜாடை மாடையாக நித்திலாவைப் பெண் கேட்பது போல பேச, கத்தரிப்பது போல பேசி அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். 

பரசுராமனின் மூன்றாவது அக்கா வசந்தாவுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்த பெண்ணை உள்ளூருக்குள் கட்டிக் கொடுத்திருந்தவள், மூன்று வருடத்துக்கு முன்புதான் மகன் ராஜசேகரனுக்கு வசதியான பின்புலம் கொண்ட பெண்ணைக் கட்டி வைத்திருந்தார். 

அந்தத் திருமணத்தின் போதே ஏகப்பட்ட சலசலப்புகள். வரதட்சணை, சீர் வரிசை, செய்முறை என்று தன் அக்கா பெண் வீட்டை படுத்திய பாட்டை பார்த்து சொந்த தம்பியான பரசுராமனுக்கே வெறுத்துப் போய்விட்டது. 

அதிலும் அக்கா மகன் ராஜசேகரின் குண லட்சணத்தைப் பற்றி ஊரார் பேசிய விதத்தில், இவனுக்கு எப்படி பெண் கொடுக்க முன்வந்தனர் என்று யோசிக்கையில், அந்தப் பெண்ணோடு அவன் முறை தவறிப் பழகியதில் பெண் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் என்ற செய்தி தெரிய வந்ததும் ச்சீ… என்றாகிப் போனது அவருக்கு. 

திருமணத்துக்குப் பிறகாவது குடும்பமாக ஒழுங்காக வாழ்ந்தால் சரிதான் என்றெண்ணியவருக்கு, இப்போது ஊருக்கு வந்த போதுதான் இவர்களது லட்சணம் தெரிந்தது. ஊரைக் கூட்டி பஞ்சாயத்தில் அந்தப் பெண்ணை அவளது குழந்தையோடு ஒதுக்கி வைத்திருந்தனர். 

அதைப் பற்றி பரசுராமன் விசாரித்ததற்குதான், தனது மருமகளைப் பற்றி தரக்குறைவாகத் தூற்றிவிட்டு தனது உத்தம சிகாமணி மகனுக்கு இரண்டாம் தாரமாய் நித்திலாவைப் பெண் கேட்டாள் அவரது அக்கா. 

ராஜசேகரின் திருமணத்தின் போது நிகிலேஷூக்கு பத்தாவது அரசு பரிட்சை இருந்ததால் பாக்கிய லஷ்மியிடம் பிள்ளைகளை விட்டுவிட்டு இவர் மட்டுமே தாய்மாமனாக திருமணத்தில் கலந்து கொண்டார். இவர்களின் லட்சணம் எதுவுமே பாக்கிய லஷ்மிக்கு அவ்வளவாய்த் தெரியாது. 

இதுவரை பரசுராமனும் பெரிதாக எதையும் சொன்னதில்லை. மனைவியின் முன் உடன் பிறந்தவர்களை விட்டுக் கொடுக்க முடியாத சராசரி மனிதர்தான் அவர். ஆனால் இந்த முறை அவரது அக்கா பேசிய பேச்சு அவருக்கே மிகுந்த வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இதே அக்காதான் சில வருடங்களுக்கு முன்பு நாக்கைத் தேள் கொடுக்காய் சுழற்றி, தம்பியின் பொருளாதார நிலைக்குத் தன்வீட்டில் சம்பந்தம் செய்யும் தகுதி இல்லை என்று கூறியிருந்தாள். இத்தனைக்கும் அப்போது நித்திலா பள்ளிப் பருவத்தில் பயின்று கொண்டிருந்த சிறுமி. 

ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு. பரசுராமனின் மூத்த அக்காளின் மகன் அருணாச்சலத்தின் திருமணத்திற்கு குடும்பத்தோடு தஞ்சைக்கு சென்றிருந்தார். திருமண வீட்டில் அழகாய் உடையணிந்து தேவதையாய் நடமாடிய நித்திலாவைப் பார்த்த மூத்த உறவுமுறைப் பெண்மணி ஒருவர், 

“ரதியாட்டமா பிள்ளையிருக்கு. யாருக்கு குடுத்து வச்சிருக்கோ? அடியே வசந்தா விட்ராத. இப்பவே உம்மவனுக்கு பரிசம் போட்டு வச்சிக்கோ.” என்றபடி திருஷ்டி வழித்து கன்னத்தைக் கிள்ளி கொஞ்சிக் கொண்டார். 

இது ஒரு சாதாரண நிகழ்வு. உடனடியாக திருமணம் பேசும் வயதும் நித்திலாவுக்கு இல்லை. ஆகவே அனைவருமே இதை விளையாட்டாகத்தான் எடுத்து சிரித்துக் கொண்டனர். ஆனால் வசந்தாவோ முகத்தைக் கடுகடுவென்று வைத்துக்கொண்டு, 

“ஏன் பெரியம்மா… வயசாயிட்டாலே என்ன பேசறோம் ஏது பேசறோம்னு புரியாம எதையாவது பேச வேண்டியது. எம் மவனுக்கு எம்புட்டு பெரிய இடத்துல இருந்துலாம் சம்பந்தம் வருது. 

அதையெல்லாம் விட்டுட்டா நான் இங்க சம்பந்தம் பண்ணுவேன்.” அவ்வளவு இளக்காரமிருந்தது அவரது குரலில். அதுவே சுருக்கென்றது பாக்கிய லஷ்மிக்கு. 

“ஏண்டி அவன் உன் சொந்த தம்பிதான. தம்பி மகள உம் மவனுக்கு கட்டுனாதான் என்ன தப்பு.” விடாமல் அந்தப் பெரியம்மா வாதாட, 

“வந்தமா சாப்பிட்டமான்னு கிளம்பனும். தேவையில்லாத பேச்செல்லாம் பேசக்கூடாது. விரலுக்குத் தகுந்த வீக்கம்தான் இருக்கனும்னு என் தம்பிக்குத் தெரியும். அவன் தகுதிக்குத் தக்க மாப்பிள்ளை பார்ப்பான் அவன் பொண்ணுக்கு.” 

நொடித்துக் கொண்ட வசந்தா,  பாக்கிய லஷ்மியிடம் திரும்பி, “இதுக்குதான் எல்லார் பார்வைய உறுத்தற மாதிரி புள்ளைக்கு  அலங்காரம் பண்ணக்கூடாது. பாரு கண்டபடி பேசறாங்க.” என்றும் கடிந்து கொள்ள கண்களே கலங்கிவிட்டது பாக்கிய லஷ்மிக்கு. 

மகளை அழைத்து தன்னுடனே பொத்தி வைத்துக் கொண்ட பாக்கிய லஷ்மி, அடுத்து வந்த எந்த விசேஷங்களுக்குமே நித்திலாவை அழைத்து வந்ததில்லை. பரசுராமனுக்கும் தன் அக்கா பேசியதில் உடன்பாடு கிடையாதென்பதால் அவருமே குடும்பத்தோடு விழாக்களில் கலந்து கொள்ளும் முறையை அதோடு விட்டொழித்திருந்தார். 

அதே அக்காதான் இன்று குழைவாக, “பரசு, நம்ம சொந்தம் விட்டுப் போயிடக்கூடாதுடா. அக்காவுக்கு ஒன்னுன்னா நீதான பார்க்கனும். அந்தச் சிறுக்கிய( அவளது மருமகளை) வெட்டி விட்டாச்சி. எந்தப் பிரச்சினையும் இனி இருக்காது. 

நாம சம்பந்தம் கலந்துக்குவோமா? நீ செய்முறையெல்லாம் நிதானமா செய். அக்கா எதுவுமே அவசரப்படுத்தி கேக்க மாட்டேன்.”

அவரது அக்கா பேசப் பேச உள்ளே கடுகடுவென்று இருந்தது அவருக்கு. வயதில் மூத்தவர், ஏதேனும் கடுமையாகப் பேசினால் விசேஷ வீட்டில் ரசாபாசமாகிவிடுமே என்று பல்லைக் கடித்துத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவர், 

“நீ வேற இடத்துல பாருக்கா. நித்திலாவுக்கு நான் இப்ப கல்யாணம் பண்ற மாதிரி இல்ல. நான் ரிட்டையர்ட் ஆன பிறகுதான் யோசிக்கனும். பாப்பாவும் இன்னும் படிக்கனும்ங்கறா. இது சரிவராது. இனி இதைப் பத்திப் பேசாத.” என்று கத்தரித்து முடித்துவிட்டு மேற்கொண்டு பேசாதபடிக்கு சட்டென்று வேறிடம் நகர்ந்திருந்தார். 

மனிதர்கள் எப்படியெல்லாம் சந்தர்ப்பத்துக்கு தக்க மாறிக் கொள்கின்றனர். நினைக்கையில் விசித்திரமாய் இருந்தது அவருக்கு. ஒரே தாய் வயிற்றில் பிறந்தவர்களுக்குள்ளே எவ்வளவு வேறுபாடுகள். 

மூன்று அக்காள்களுமே பரசுராமனைவிட வசதியில் பல படிகள் உயர்ந்தவர்கள்தான். அதிலும் வசந்தா இன்னும் வசதி. அந்த செருக்கு அவளிடம் நிறையவே உண்டு. 

மூத்த அக்கா உமாவும் சரி அவளது பிள்ளைகளும் சரி பரசுராமனின் மீது சற்று பாசமாகவே இருப்பர். நித்திலா நிகிலேஷின் மீதும் பிரியம் உண்டு அவர்களுக்கு.

 இரண்டாவது அக்கா பத்மா துவேஷமும் காட்டியதில்லை பிரியமும் காட்டியதில்லை. எப்போதாவது பார்க்கும் நேரத்தில் முகம் திருப்பாமல் பேசிக் கொள்வார். செய்முறைகள் சரியாக வந்துவிட வேண்டும் அவருக்கு. அதைத் தவிர வேறு பிரச்சனைகள் எதையும் செய்ததில்லை. 

மூன்றாவது வசந்தாதான் சற்று மோசம். கறாராய் செய்முறைகளை கேட்டு வாங்குவதோடல்லாமல், ஒவ்வொன்றிலும் குற்றம் குறைகள் கண்டுபிடித்து பேசுவதும் அவள்தான். நித்திலா நிகிலேஷோடு தன் பிள்ளைகளை பழகக்கூட விட்டதில்லை அவள். 

மூன்று அத்தைமார்களின் பிள்ளைகளுமே தங்களை விட வெகுவாக வயதில் பெரியவர்கள் என்பதால் நித்திலாவுக்கும் நிகிலேஷூக்கும் அவர்களுடன் மரியாதையாய் இடைவெளியோடு பேச வருமேயன்றி தோழமையாய் நெருங்கத் தோன்றியதில்லை. 

அடுத்தடுத்து நித்திலாவும் நிகிலேஷூம் தங்களது படிப்பில் கவனத்தைத் திருப்பிவிட, சொந்தங்களை எல்லாம் பார்ப்பதுகூட அரிதாகிப் போனது அவர்களுக்கு. எப்போதாவது ஃபோனில் பேசிக் கொள்வதோடு சரி. 

 பரசுராமனைப் பொருத்தவரை நித்திலாவின் திருமணத்திற்கென்று பெரிதாக எதையும் சேமித்து வைத்திருக்காவிட்டாலும், தனது ரிடையர்டு செட்டில்மெண்ட் பணத்தையே பெரிதும் நம்பியிருந்தார். அவளது திருமணத்தை பற்றி பல கனவுகள் இருந்தது அவருக்கு. 

தான் ரிடையர்டு ஆனதும் வரும் பணம் முழுக்க முழுக்க நித்திலாவுக்கு செலவு செய்து, அவளது திருமணத்தை ஜாம் ஜாமென்று நடத்த திட்டமிட்டிருந்தார். 

நிகிலேஷ் படித்து வேலைக்குச் சென்றானென்றால் போதும். அவனுக்கென்று வீடு வாங்கியாகிவிட்டது. தனக்கும் பாக்கிய லஷ்மிக்கும் தனது பென்ஷன் பணமே போதும் என்று எண்ணிக்கொள்வார். 

சாதாரணமாக நடுத்தர குடும்பத் தந்தையாக அவரது திட்டமிடல்கள் அனைத்தும் சரியே…  ஆனால்இறைவனின் திட்டமிடல்கள் வேறாய் இருக்கிறதே… ! அது அவருக்குத் தெரியுமா? 

இன்று தான் திட்டவட்டமாக கத்தரித்துப் பேசிவிட்டு வந்த அக்கா வசந்தா, வரும் காலத்தில் தன் குடும்பத்தில் செய்யப் போகும் குழப்பங்களை அவரறிவாரா? முன்பே தெரிந்திருந்தால் பாக்கிய லஷ்மியிடம் தன் தமக்கையைப் பற்றியும் அவளது மகனைப் பற்றியும் சொல்லி வைத்திருப்பாரோ? 

வாழ்க்கையில் எல்லா நாட்களையுமே இனிப்பில் தோய்த்து நமக்கு அளிப்பதில்லை இறைவன். சில நாட்கள் உவர்ப்பாக இருக்கலாம். சில நாட்கள் துவர்ப்பாக இருக்கலாம்… வெகு சில நாட்கள் கசந்துகூடப் போகலாம். நித்திலாவின் வாழ்க்கையில் இனி வரும் நாட்கள் எப்படி இருக்குமோ…? காலம்தான் விடை சொல்லும். 

—ஆழி சூழும்.