ஆழி சூழ் நித்திலமே 8(ஆ)

மௌனமாயிருந்தாள் செல்வி. அவளுக்கு குழப்பமாய் இருந்தது. பள்ளிக்குப் போக மாட்டேன் என்று அடம் பிடித்து அழுதால் விட்டுவிடுவார்கள் என்று எண்ணியிருக்க,  அவளது அம்மாவும் அண்ணனும் அடி வெளுத்துவிட்டது கடுப்பாயிருந்தது. 

‘இதோ இந்த பாரி அண்ணன் மட்டும்தான்  பள்ளிக்குப் போக வேண்டாம் என்ற வார்த்தையை கூறுகிறான். பாரியண்ணன் சொன்னால் தன் தாயும் அண்ணனும் கேட்பார்கள்’ மனதுக்குள் எண்ணியவள் பாரியிடம் பள்ளிக்குப் போக மாட்டேன் என்பதற்கு என்ன காரணம் கூறலாம் என்று எண்ணியபடி இருந்தாள். 

கூடவே பரசுராமன் சார் கூறிய விஷயங்களும் காதினுள் எதிரொலித்துக் கொண்டிருந்தது. இந்த முறையும் மாதாந்திரத் தேர்வில் ஒற்றை இலக்க மதிப்பெண் பெற்றிருந்ததால் பெற்றவர்களை அழைத்து வரச்சொல்லி பத்து நாட்களாக பள்ளியில் சொல்லி விடுகின்றனர். 

வீட்டில் தேர்வுத்தாளையோ மதிப்பெண்களையோ காட்டவே இல்லை. காட்டினால் கண்டிப்பாக உதை விழும் என்பது தெரியும். எப்படியோ ஆசிரியர்களை சமாளித்து வந்தவள் மறுபடியும் பள்ளிக்கு செல்ஃபோன் எடுத்து வந்ததற்காக மாட்டிக் கொண்டாள். 

அவளை ஸ்டாஃப் ரூமுக்கு அழைத்த பரசுராமன் அவளது அலைபேசியை வாங்கி வைத்துக் கொண்டு, 

“அடுத்து ஸ்கூலுக்கு நீ வரும்போது கண்டிப்பா உங்க அம்மாவோ அப்பாவோ ஸ்கூல்க்கு வரனும். அதுவரை ஃபோன் என்கிட்ட இருக்கட்டும்.”

‘அய்யய்யோ ரெண்டு நாளைக்கு புள்ளையார் சதூர்த்தி லீவாச்சே. இவரு ஃபோனை வாங்கி வச்சிக்கினா நாம எப்புடி விளாடுறது’ உள்ளுக்குள் பதறிப் போனவள், 

“சார், எனக்கு அப்பா இல்ல சார் அண்ணன்தான் இருக்குது. அதுவும் கடலுக்குப் போயிக்குது சார். ப்ளீஸ் ஃபோனை குடுத்துருங்க சார். ஃபோனு இல்லன்னா வூட்ல அடிப்பாங்க சார்.”

“ஃபோனை ஸ்கூலுக்கு எடுத்து வர்றது தப்புன்னு உங்க வீட்டுக்குத் தெரியுமா தெரியாதா?”

பரசுராமனின் கேள்விக்கு புரியாதபடிக்கு நாலாதிசையிலும் தலையை ஆட்டி வைத்தாள். என்ன செய்வது இந்தப் பெண்ணை என்று மனதுக்குள் கடிந்து கொண்டவர், 

“சரி, அப்படின்னா உங்கம்மாவ வரச் சொல்லு. அவங்ககிட்டயே ஃபோனைத் தரேன்.”

“சார் சார் ஃபோனை எங்கிட்டக் குடுங்க சார்.  இனிமேட்டுக்கு ஸ்கூலுக்கு எடுத்தார மாட்டேன் சார். நானு வெள்ளிக்கிழம கண்டிப்பா எங்கம்மாவ இட்டாறேன்.” மிகவும் கெஞ்சியவளைப் பார்த்தவர் அவளிடம் அலைபேசியை தந்துவிட்டு, 

“இங்க பாரு செல்வி. உங்கம்மாவ கூட்டி வராம நீ மட்டும் ஸ்கூலுக்கு வந்த, எங்க வீட்டுக்குப் பின்னாலதான இருக்கு உங்க வீடு. நானே தேடி போயி உங்கம்மாவ பார்ப்பேன் புரியுதா.”

வேறு வழியின்றி அவர் சொன்னதற்கு எல்லாம் மண்டையை ஆட்டிவிட்டு அலைபேசியை வாங்கிக்கொண்டு வந்திருந்தாள். 

பரசுராமன் வீட்டுக்கு வருவேன் என்று சொன்னது வயிற்றில் புளியைக் கரைத்தது. அவர் மட்டும் வீட்டுக்கு வந்து பேசினார் என்றால் ஸ்கூலில் செய்யும் தகிடுதத்தங்கள் அனைத்தும் வீட்டுக்குத் தெரிய வந்துவிடும். அதை விட தான் பள்ளிக்கே போகவில்லை என்றால் நம்மை மெனக்கெட்டு தேடி வரமாட்டார் என்று எண்ணியது அவளது மனது. 

பள்ளிக்குப் போகாமலிருப்பதற்கு என்ன காரணங்களை சொல்லலாம் ஆராய்ந்தபடி இருந்தாள். சொல்லும் காரணத்தை பாரியண்ணன் நம்ப வேண்டும். பயப்படவும் வேண்டும். பள்ளிக்கே இனி போகாதே என்று அவன் வாயால் வரவேண்டும். அப்படி எதைச் சொல்லலாம் என்று சிந்தித்தபடி இருந்தாள். 

“என்னா செல்வி, எம்மாம் நேரமா கேட்டுனுக்கறேன். நீபாட்டுக்கு கம்முனு குந்திக்கினு இருந்தா எப்புடி. எதுக்கு புள்ள ஸ்கூலுக்கு போ மாட்டேங்குற.”

“அ… அது வந்து பாரிண்ணா. நா… நான் சொல்றத யாரான்டையும் சொல்ல மாட்டல்ல.”

செல்வியின் தயக்கமான வார்த்தைகள் பாரியின் விழிகளை கூர்மையாக்கியது. 

“ம்ம்… சேரி. யாரான்டையும் நாஞ்சொல்லல. நீ விசயத்த சொல்லு.”

“அ… அது வந்து. அ…து வந்து…”

“ம்ம்… சொல்லு செல்வி.”

“எ… எங்க வாத்தியாரு எங்கிட்ட த… தப்பு தப்பா பேசுறாரு. மேல க… க…கையெல்லாம் வைக்குறாரு.”

“என்னாது…” கர்ஜித்தவனின் குரலில் அரண்டவள், 

“அய்யோ! சத்தம் போடாதண்ணா. யாரான்டையும் சொல்ல மாட்டேனுக்கற நீ.” 

பேசும் முன் முனுக்கென்று கண்களில் நீர் சூழ்ந்தது. சொல்லும் பொய் நெஞ்சை வெகுவாய் அரித்தது. பின்விளைவுகளை அறியாமல் தான் சொல்லும் பொய் எத்தனை அனர்த்தங்களை நிகழ்த்தப் போகிறது என்பது பாவம் அவளுக்கு அப்போது புரியவில்லை. 

எப்பொழுதுமே சுயநலமான மனித மனம் தனக்குச் சாதகமாய்தான் யோசிக்கும். மற்றவர்களைப் பற்றி அதற்குக் கவலை இல்லை. பொய்யோ புரட்டோ தனக்கு பாதிப்பு வராத வகையில் எதுவும் சரிதான் என்ற மனநிலை கொண்ட மனிதர்கள் ஏராளம். 

ஒரு பிரச்சனை என்றால் அந்த இடத்தில் அந்த நேரத்தில் தான் தப்பிக்க எதையும் பேசும் மனிதர்களும் அடுத்தவரைக் கைகாட்டும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பின்விளைவுகள் பற்றி யோசிப்பதில்லை அவர்கள். இதில் சிறியவர்கள் பெரியவர்கள் பாகுபாடு என்பது இல்லை. 

“மெய்யாலுந்தான் சொல்றியா செல்வி?”

அடக்கப்பட்ட கோபத்தோடு வந்த கேள்விக்கு பதில் பேசாமல் தலையை மட்டும் அசைத்தாள். பொய் சொல்கிறோமே என்ற படபடப்பு அவள் மனதின் ஏதோவொரு மூலையில் வண்டாய் குடைந்தாலும், தற்போது இதை பாரியண்ணன் நம்ப வேண்டுமே என்ற தவிப்பும் அவளுக்கிருந்தது. 

ஏதேனும் உப்பு சப்பில்லாத காரணமாய் இருக்கும் செல்வியை பேசி சமாதானப்படுத்தலாம் என்றெண்ணியவனுக்கு செல்வியின் பேச்சு பெரும் அதிர்ச்சியையும் அளவில்லாத கோபத்தையும் கொடுத்தது. 

படிக்கும் பெண் அதுவும் வயது வந்த பெண் இந்த விஷயத்தில் பொய் சொல்லக்கூடும் என்று ஒரு துளிகூட அவனுக்குத் தோன்றவில்லை. இது இயல்பும்கூட. நம் வீட்டுப் பிள்ளைகள் சொல்வதைத்தானே நாம் நம்புவோம். 

தன்னிடம் பயிலும் மாணவியிடம் அத்து மீறிய கயவனை தூக்கிப் போட்டு மிதிக்கும் வேகம் வந்தது பாரிக்கு. எவ்வளவு தைரியமிருந்தால் எங்கள் வீட்டுப் பெண் மீது கை வைப்பான் உள்ளுக்குள் வெகுண்டவன், 

“எந்த வாத்தி? அவம் பேரென்ன?”

“எ… எதுக்கு?”

“சொல்லுங்கறேன்ல.”

“பரசுராமன்… சயின்ஸ் சார்.”

“…” 

“பாரிண்ணா நானு இனிமேட்டுக்கு ஸ்கோலுக்குப் போகல. ஸ்கோலுக்குப் போனாதான பிரச்சன. நானு வூட்லயே குந்திக்கினுக்கிறேன். யாரான்டையும் இத்த சொல்லாதண்ணா.”

சுழன்றடிக்கும் புயலை உள்ளடக்கிய அமைதியோடு, “ம்ம்… சேரி நாஞ்சொல்ற வரைக்கு ஸ்கோலுக்குப் போ வேணாம். வூட்லயே இரு.” 

சரியென்று தலையாட்டிய செல்வியை வீட்டுக்குள் அனுப்பியவன் தேவாவிடமும் ராணியிடமும் கொஞ்ச நாளைக்கு அவளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்றும் கூறினான். 

காரணம் கேட்டவர்களிடம், “அதுக்கு பாடமெல்லாம் கஷ்டமாக்கிது போல. எதனா நல்ல டியூஷனா பார்த்து சேர்த்து வுடுவோம். அப்பாலிக்கா அது ஸ்கூலுக்குப் போவும்.” என்று வாயை அடைத்திருந்தான். 

வீட்டுக்கு வந்தவன், விறு விறுவென்று கிளம்பி வெளியே வந்து உணவு எடுத்து வைத்த கயலைக்கூட சட்டை செய்யாமல் விருட்டென்று வண்டியைக் கிளப்பிக் கொண்டு பறந்தான். சாப்பிடாமல் சென்றவனையே ஆதங்கத்தோடு பார்த்தபடி நின்றிருந்தாள் கயல். 

*************

நுங்கம்பாக்கம்… 

 

நுங்கம்பாக்கத்தில் உள்ள வெளிநாட்டு ஏற்றுமதி வணிக இயக்குநர் அலுவலகத்தைவிட்டு வெளியே வந்தனர் பாரியும் வெற்றியும். டின்னில் அடைத்த மீன் உணவுகளை ஏற்றுமதி செய்வதற்கான நிறுவனம் துவங்க லைசன்ஸ்க்காக விண்ணப்பித்திருந்தனர். 

வந்த வேலை முடிந்ததில் அடுத்து நிறுவனம் துவங்குவதற்கு வங்கியில் லோன் வாங்குவது சம்பந்தமாகப் பேச வரச் சொல்லியிருந்த வங்கி மேலாளரை சந்திக்கக் கிளம்பினர். 

பாரியின் வாகனத்தில் வெற்றி தொற்றிக் கொண்டதும், வங்கியை நோக்கி செல்லத் துவங்கினர். 

“ஏன்டா காலையில உன்னய எப்ப வரச்சொன்னேன். எத்தனை தடவ ஃபோன் பண்னேன்.  நீ ஆடியசைஞ்சி பொறுமையா மதியம் கொட்டிக்கிற நேரத்துக்கு வந்து சேர்ற. நல்ல வேளை அந்த ஆபீசரு எங்கயும் போகாம இருந்தாரு. இல்லைன்னா இன்னைக்கு லைசன்ஸ்க்கு அப்ளை பண்ணியிருக்க முடியாது. ஏன்டா லேட்டு?”

“ம்ப்ச்…”

“என்னடா? ஏன் ஆளே ஒருமாதிரியா இருக்க? மேலுக்கு ஏதும் நோவா இருக்குதா?”

“அதெல்லாம் ஒன்னியுமில்ல வெற்றி.”

“பின்ன… மூஞ்சி ஏன் காஞ்ச கருவாடாட்டமிருக்கு?”

“ம்ப்ச்… மனுசங்களை நினைச்சாலே வெறுப்பாக்கிது வெற்றி. தாம் பொண்ண மட்டும் பொத்தி பொத்தி வச்சிக்குவானுங்க,  ஊராம் பொண்ணுன்னா இளக்காரமாக்குது இவனுங்களுக்கு. 

வயசுக்குத்தக்க பொழைப்பு வேணாம். மனசுக்குள்ளாற அம்மாம் அழுக்க வச்சிக்கினு, வெள்ளையுஞ் சொள்ளையுமா உடுத்துக்குனா பெரிய மனுஷனுங்க ஆகிடுவானுங்களா? மனசே ஆறலடா எனக்கு.”

தன்னைப் போல பாரி புலம்பிக் கொண்டிருக்கத் தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை வெற்றிக்கு.

“இன்னாடா சொல்ற?  ஒன்னியும் புரியல எனக்கு. யாரைப்பத்தி சொல்ற நீ?”

“ம்ப்ச்… வுடு. என்னவோ மனசே சரியில்ல அதான் உங்கிட்ட புலம்புனேன். அத்து ஒன்னியும் பெரிய விஷயமில்ல. நாம நம்ப வேலைய பாப்போம். எனக்கு ராயபுரம்கிட்ட வூடு பாக்கலாமான்னு தோனுது. எதனா நல்ல வூடு இருந்தா பார்க்கச் சொல்லு வெற்றி வாங்கிரலாம்.”

“ஏன்டா,  குப்பத்த வுட்டு வரவே மாட்டேன்னுவ. இப்ப ஏரியாவே மாத்தப் போறேங்கற? வீடு பெருசா வேணும்னா உன் இடத்துலயே கட்டிக்கலாம்லடா.”

“ம்ப்ச்,  இல்ல வேற ஏரியா மாத்தி போகனும்னு முடிவுலதான் இருக்கேன். நீ இடம் பார்க்கச் சொல்லு.”

வெற்றிக்கும் பாரி அழுத்திச் சொல்லவும் காரணம் விளங்கியது. அதுவும் சரிதான் என்று எண்ணிக் கொண்டவன்,  வீட்டின் விலை போன்ற விபரங்களை விசாரித்துக் கொண்டான். 

மேலும் பேச்சை திசை மாற்றி செய்யப் போகும் தொழிலின் சாதக பாதகங்கள், செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் எனப்பேச பயணம் முழுவதும் பேச்சு நீண்டு கொண்டே போனது. 

சென்னை திருவான்மியூர் வங்கியின் முன் வண்டி நின்றது. ஏற்கனவே வங்கி மேலாளரைச் சந்தித்துப் பேசியிருந்தனர். துடிப்பான இளைஞர்கள் தொழில் செய்வதற்கு உரிய உதவிகளைச் செய்வதாகச் சொல்லியிருந்தார் அவர். 

முறையான தொழில் திட்ட வரைவுகளோடு வந்து சந்திக்கச் சொல்லியிருந்தார். மேலும் தமிழ்நாடு மீனவர் சங்கத் தலைவருமான மகேந்திரன் சிபாரிசு செய்ததில் லோன் கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கை இருவருக்கும் வந்திருந்ததில் வங்கி மேலாளர் கேட்டிருந்த அனைத்து ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு வந்திருந்தனர். 

உள்ளே நுழைந்து அவருக்கு வணக்கம் கூறியதும் அமரச் சொன்னவருக்கு, தொழில் தொடர்பான அனைத்து விளக்கங்களையும்  எடுத்துக்கூறினர். இருவருக்கும் சொந்தமான போட் உரிமங்கள், ஐஸ் ஃபேக்டரி உரிமங்கள் மற்றும் சொத்து விபரங்களையும் கொடுத்ததில் வங்கி மேலாளருக்கு அவர்களின் மீது பெரிதும் நம்பிக்கை வந்திருந்தது. 

தொழில் தொடங்க லைசன்ஸ் கிடைத்ததும் வங்கியில் லோன்க்காக அப்ளை செய்யச் சொன்னவர் பொதுவாக பேசிக் கொண்டிருந்தார். 

அந்த நேரத்தில் பாரியின் அலைபேசி மெல்லிய இசையை வெளியிட்டது. கயல் அழைத்துக் கொண்டிருந்தாள். ‘அவ்வளவு சீக்கிரம் கயல் என்னை அலைபேசியில் அழைக்க மாட்டாளே’ என்று யோசனையாய் நெற்றியைச் சுருக்கியவன், இருவரிடமும் அனுமதி பெற்று அலைபேசியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். 

அலைபேசியை உயிர்ப்பித்துப் காதில் வைத்ததும் கயலின் அழுகுரல் செவிப்பறையில் மோதியது. 

“கயலு… கயலு இன்னா புள்ள?  இன்னாத்துக்கு அழுவுற?” மிகுந்த பதட்டமாகிப் போனது அவனுக்கு. 

“மாமா, உன்னியத் தேடி போலீசு வந்துக்குது மாமா. என்னென்னமோ சொல்றாங்க எனக்கு பயமாக்குது மாமா.”

“அழுவாத புள்ள. போலீசா… எதுக்கு வந்துக்கறாங்களாம்?”

“நீ யாரையோ கொலை பண்ணிட்டன்னு சொல்றாங்க மாமா.”

கயலின் அழுகையோடு சேர்ந்து வந்த வார்த்தைகளில் அதிர்ந்து நின்றான் பாரி. 

—ஆழி சூழும்.