ஆழி சூழ் நித்திலமே 9 (அ)

   9

 

 

உதிராத மலர் இல்லை. உலராத பனியுமில்லை. புதிரான வாழ்க்கையிதில் புதையாத பொருளில்லை. உடையாத சங்கில்லை. ஒடுங்காத மூச்சில்லை. இயற்கையின் நியதிகளில் இறப்பும் ஒரு கூறுதான் என்றாலும் பிரியத்துக்குரியவர்களின் இறப்பு நம்மை நிலைகுலையச் செய்து விடும் என்பதுதான் நிதர்சனம். 

அரசு மருத்துவமனை வளாகத்தில் மார்ச்சுவரி அருகே இருந்த ஒரு அறையில் பரசுராமனின் உடல் போஸ்ட்மார்ட்டம் செய்வதற்காய் வைக்கப்பட்டிருக்க,  அந்த அறைக்கு எதிரேயுள்ள மரத்தின் அடியில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் வேரறுந்த மரமாய் நிலைகுலைந்து அமர்ந்திருந்தாள் நித்திலா. 

அந்த இடத்தின் சூழ்நிலையே படு மோசமாய் இருந்தது. அகாலமாய் இறந்து விட்ட நபர்களின் உடல்களின் மீது விழுந்து கதறி அழும் உறவுகளும், அந்நேரத்தில் கூட மனசாட்சியில்லாமல் பிணத்தை வாங்கிச் செல்ல பேரம் பேசிக் கொண்டிருக்கும் கடைநிலை ஊழியர்களும், 

இது போல எத்தனையோ நான் பார்த்திருக்கிறேன் என்று கூறாமல் கூறியபடி முகத்தில் சிறு இளக்கம்கூட காட்டிடாத மருத்துவப் பணியாளர்களும் நிறைந்திருக்க,   ஆறுதல் தேறுதல் சொல்லக்கூட அருகில் ஒரு சொந்தமுமின்றி தனித்து அமர்ந்திருந்தாள். 

கடந்த ஐந்தாறு மணி நேரங்களில் அடுக்கடுக்காய் நிகழ்ந்த நிகழ்வுகள் அவளை ஓங்கியழக்கூடத் தெம்பில்லாமல் ஒடுக்கிப் போட்டிருந்தது. இப்படி ஒரு மோசமான நாளை தந்ததற்காய் மனதார இறைவனை சபித்தபடி இருந்தது அவளுள்ளம். வற்றாத ஜீவநதியாய் கண்களில் கண்ணீர் கரகரவென வழிந்து கொண்டிருந்தது. 

ஏன் எதற்கு எப்படி என்று எதுவுமே புரியாத நிலை. காலையில் சந்தோஷமாய் பேசிச் சிரித்து பணிக்குச் சென்ற தந்தை சில மணிநேரங்களில் பிணமாய் போவார் என்று கனவில் கூட எண்ணியதில்லையே. 

இப்படியாகும் என்று தெரிந்திருந்தால் காலையில் அவரை எங்குமே செல்லவிடாமல் வைத்திருந்திருக்கலாமே. இரவு முழுக்க பயணம் செய்த அயர்வு அவரது முகத்தில் இருந்தாலும் கடமைக்குதான் முன்னுரிமை என்று பணிக்கு கிளம்பியவரை தடுத்திருக்கலாமே உள்ளுக்குள் மருகிக் கொண்டாள். 

அன்று மதியத்திற்கு மேல் கல்லூரிக்குச் சென்றால் போதும் என்று வீட்டில்தான் இருந்தாள் நித்திலா. காலையிலேயே பரசுராமனுக்கு வார்த்தைகளில் இருந்த உற்சாகம் முகத்தில் இல்லாததைக் கண்டுகொண்ட பாக்கியலஷ்மி கூட, 

“நைட்டெல்லாம் ட்ராவல் பண்ணி வந்தீங்க. முகமே டயர்டா தெரியுது. வீட்ல இன்னைக்கு ரெஸ்ட் எடுக்கலாம்ல. லீவ் போடுங்க.” என்றதற்கு காலாண்டுத் தேர்வுகள் நெருங்கும் நேரம் லீவ் போட முடியாது என்று வம்படியாய் கிளம்பிச் சென்றார் பரசுராமன். 

நிகிலேஷூம் கல்லூரிக்குக் கிளம்பி சென்ற பிறகு, காலை உணவை தாயுடன் சேர்ந்து உண்டுவிட்டு,  பாக்கியலஷ்மி மதிய வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க, தன் பாடப் புத்தகங்கள் மீது கவனம் வைத்து அமர்ந்திருந்த நித்திலாவைக் கலைத்தது வீட்டின் அழைப்பு மணி. 

வந்திருந்தது பரசுராமனோடு பணிபுரியும் சக ஆசிரியர் சதாசிவம். பரசுராமனுக்கு உடல்நிலை சரியில்லையென ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கிறோம் என்று அவர் கூறியபோதே வெடவெடவென நடுங்க ஆரம்பித்துவிட்டது நித்திலாவுக்கு. 

இருப்பினும் சற்று சுதாரித்துக் கொண்டவள், விஷயம் கேட்டு பதறி அழுத தாயை சமாதானப்படுத்தி அவரையும் அழைத்துக் கொண்டு சதாசிவம் சாரோடு கிளம்பி பரசுராமனை சேர்த்திருந்த தனியார் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தாள். 

அந்தோ பரிதாபம்! இவர்கள் மருத்துவமனையை அடைவதற்கு வெகுநேரம் முன்பே பரசுராமனின் உயிர் இவ்வுலகைவிட்டுப் பிரிந்து சென்றிருந்தது. 

சூழ்நிலையின் கணம் தாளாமல் அதிர்ச்சியில் மூர்ச்சையான பாக்கியலஷ்மியை அதே மருத்துவமனையில் அனுமதிக்கும்படி ஆகிற்று. அவருடைய இரத்த அழுத்தம் நிலையில்லாமல் இருந்ததில் அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட தாயைப் பார்க்கவா தந்தையைப் பார்க்கவா என ஒன்றும் புரியாமல் தவித்துப் போனாள் நித்திலா. 

 நிகிலேஷ்க்கு உடனடியாக அலைபேசியில் தகவல் தரவும் அவனும் விழுந்தடித்துக் கொண்டு வந்து சேர்ந்தான். அகாலமான தந்தையின் இறப்பும் அதைக் கேட்டு நொந்து போன தாயின் நிலையும் புரட்டிப் போட்டிருந்தது அவனை. தமக்கையை கட்டிக் கொண்டு கதறித் தீர்த்தான். 

 தந்தையை இழந்துவிட்டு தாயும் மருத்துவமனை சிகிச்சையில் இருக்கையில் நிராதரவாய் அழுதுகொண்டிருந்த இருவரையும்  பார்க்கவே பாவமாய் இருந்தது அனைவருக்கும். அவர்களைத் தேற்ற முயன்று தோற்றுப் போனார் சதாசிவம். 

பரசுராமனை ஹாஸ்பிடலில் சேர்க்கவென உடன் வந்திருந்த சக ஆசிரியர்களுமே பரசுராமனின் மறைவில் வெகுவாய் கலங்கிப் போயிருந்தனர். 

“நல்ல மனுஷன். அதிர்ந்துகூட பேச மாட்டாரு. ஈ எறும்புக்குகூட பாதகம் பண்ணாதவரப் போட்டு அடிச்சி கொன்னுட்டானே அந்த ராஸ்கல்.” சக ஆசிரியர் ஒருவர் துக்கம் தாங்காமல் புலம்ப, வெகுவாய் அதிர்ந்து போனாள் நித்திலா. 

“என்ன சொல்றீங்க அங்கிள். அப்பாவ அடிச்சாங்களா?” கண்களில் வழிந்த நீரோடு வினவ, வேதனையோடு ஆமோதித்தார் அந்த ஆசிரியர். 

    “யாரு அடிச்சாங்க?  எதுக்கு அங்கிள்?” நிகிலேஷ் கொதிக்க, அழுகை தாங்கவில்லை நித்திலாவுக்கு. 

“என்ன நடந்தது என்ன விபரம்னே சரியாப் புரியலம்மா. காலையில வழக்கம் போலதான் ஸ்கூல்க்கு வந்தாரு பரசுராமன் சார். கிளாஸ்ல பாடம் நடத்திக்கிட்டு இருக்கும்போது எவனோ ஒரு ரௌடிப்பய வந்திருக்கான்.

 என்ன பிரச்சனைன்னு தெரியல. சாரை சட்டையப் பிடிச்சி இழுத்து அடிச்சிருக்கான். சார் நிலை தடுமாறி சேர்ல விழுந்திருக்காரு. கிளாஸ் பசங்கதான் ஓடிவந்து எங்ககிட்ட சாரை யாரோ அடிக்கிறாங்கன்னு சொன்னானுங்க. நாங்க ஓடிப் போய் பார்க்கறப்ப அந்த ரௌடி அங்க இல்ல. சார்தான் முகமெல்லாம் வேர்த்துப் போய் ரொம்பப் படபடப்பா இருந்தாரு. 

என்னன்னு விசாரிச்சிக்கிட்டுதான் இருந்தோம். அவருக்கே எதுவுமே சரியா புரியல. வந்தவன் யாருன்னும் தெரியல. கொஞ்ச நேரத்துலயே நெஞ்செல்லாம் வலிக்குதுன்னாரு. உங்களுக்கு தகவல் சொல்ல சதாசிவம் சாரை அனுப்பிட்டு நாங்க இங்க உடனே கொண்டுவந்து சேர்த்தோம். ஆனாலும் அவரை காப்பாத்த முடியலம்மா.”

“யாரு அங்கிள் அது? எதுக்கு அப்பாவ அடிச்சாங்க? யாரோ ரௌடி வந்து அடிக்கற அளவுக்கு என்ன பிரச்சனை? அவர் எந்த வம்புக்குமே போக மாட்டாரே. அய்யோ…”  கதறி அழுத நித்திலாவை சமாளிக்கவே முடியவில்லை யாராலும். 

“அம்மாடி அழாதம்மா. யாரா இருந்தாலும் அவனை சும்மா விட்ருவோமா. அவன் ஒரு கவர்மென்ட் எம்ப்ளாயிய அவரோட வேலை செய்யற இடத்துக்கே வந்து அடிச்சிருக்கான்.  அவனை எப்படி சும்மா விடமுடியும்? நீ என்கூட வந்து போலீஸ்ல ஒரு கம்ப்ளைன்ட் குடும்மா.” 

சதாசிவம் கூறவும், சக ஆசிரியர்களுமே அதை ஆமோதித்தனர். 

“போலீசா…?” என்று பயந்த நித்திலாவை சமாதானப்படுத்தினார் சதாசிவம்.  “பயப்படாதம்மா. போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் குடுத்துட்டா அவங்களே அவன் யாருன்னு கண்டுபிடிச்சி தண்டனை வாங்கி குடுத்திடுவாங்க.”

சக ஆசிரியர்களுமே வற்புறுத்தவும், அழுது கொண்டிருந்த நிகிலேஷூக்குத் தைரியம் சொல்லி பாக்கியலஷ்மிக்குத் துணையாக இருக்கச் சொல்லிவிட்டு, சதாசிவம் சாரோடு போலீஸ் ஸ்டேஷன் சென்று நடந்ததைச் சொல்லி புகார் கொடுத்தாள் நித்திலா. 

முதலில் புகாரை அலட்சியமாகக் கையாண்ட இன்ஸ்பெக்டர் நாதன், பள்ளி வாட்ச்மேனை அழைத்து விசாரித்ததில் பரசுராமனை அடித்தது பாரிவேந்தன் என்று தெரிந்ததும் வெகு சுறுசுறுப்பானான். 

உடனடியாகப் புகாரைப் பதிந்தவன்,  ஒருமுறைக்கு இருமுறை நித்திலாவிடம் புகாரை வாபஸ் பெறமாட்டாய்தானே என்று கேட்டுக் கொண்டான். 

“அவனை உள்ள வச்சி முட்டிக்கு முட்டி பேர்த்து எடுத்துடறேன். வெளியவே வராத அளவுக்கு கேஸைப் போட்டு உள்ள தள்ள வேண்டியது என் பொறுப்பும்மா. 

அவனுக்குன்னா அவன் குப்பமே பின்னாடி வரும். அதுவுமில்லாம பெரிய பெரிய ஆளுங்களோட தயவும் இருக்கு அவனுக்கு. 

எங்கிட்ட எந்த பருப்பும் வேகாது. ஆனா, புகார் குடுக்கற ஆளுங்களை மிரட்டி புகாரை வாபஸ் வாங்க வச்சிருவானுங்க. அதனாலதான் இதுவரைக்கும் மாட்ன கேசுலகூட அவனை உள்ள தூக்கிப் போட முடியல என்னால. 

யாரு வந்து மிரட்டுனாலும் கேஸ வாபஸ் வாங்க மாட்டதான?”

யார் எவனென்று தெரியாத போதும் தன் தந்தையின் சாவுக்கு காரணமான அவனைத் தன் கையால் கொல்லும் அளவுக்கு ஆத்திரத்தோடு இருந்தவள், 

“நிச்சயமா மாட்டேன் சார். எங்கப்பாவ அடிச்சுக் கொன்னவனை சும்மா விட்றாதீங்க சார்.” அழுகையோடு கூற… அவளைப் பார்த்த நாதன்,

“அட நீ அழாதம்மா. உனக்காகவே அவனை நார் நாரா உரிக்கிறேனா இல்லையான்னு மட்டும் பாரு.” என்றபடி மளமளவென அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தான். 

பரசுராமனின் உடல் போஸ்ட்மார்ட்டம் செய்வதற்காய் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. நிகிலேஷை பாக்கியலஷ்மிக்குத் துணையாக அந்த மருத்துவமனையில் இருக்கச் சொல்லிவிட்டு,  சதாசிவம் சாரோடு சேர்ந்து நித்திலாவும் அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தாள். 

அரசு மருத்துவமனையின் வேகம் அனைவரும் அறிந்ததே. போஸ்ட்மார்ட்டம் செய்யும் மருத்துவர் வரத் தாமதமாகியதால் நித்திலாவும் சதாசிவமும் அங்கேயே காத்திருந்தனர்.  நித்திலாவை அந்த சிமெண்ட் பெஞ்சில் அமரச் சொல்லிவிட்டு மருத்துவ ஊழியர்கள் வாங்கித் தரச் சொல்லியிருந்த பொருட்களை வாங்கச் சென்றிருந்தார் சதாசிவம். 

வாங்கி வந்த பொருட்களை மருத்துவப் பணியாளர் வசம் ஒப்படைத்தவர், அழக்கூடத் தெம்பின்றி சோர்ந்து அமர்ந்திருந்த நித்திலாவின் அருகே வந்து அவர் வாங்கி வந்திருந்த தேநீரைக் கொடுக்க, வேண்டாமென்று மறுத்தவளை வற்புறுத்திக் குடிக்க வைத்தார். 

“குடிம்மா. நீதான் தெம்பா இருக்கனும். அம்மா பாவம் ரொம்பத் துவண்டு போயிட்டாங்க. அவங்களைத் தேத்தனும். தம்பியும் சின்ன பையன் அவனுக்கும் நீதான் ஆறுதலா இருக்கனும். நீ தைரியமா இருடாம்மா.”

“ஒரே நாள்ல இப்படித் தலைகீழா எல்லாமே மாறும்னு நினைச்சிக்கூடப் பார்க்கலையே அங்கிள். அப்பா இல்லாம நாங்க எப்படி இருக்கப் போறோம்?” கதறி அழுதவளைத் தேற்றியவருமே வெகுவாக கலங்கிப் போனார். 

“அம்மாடி, அழாதம்மா… தைரியமா இரும்மா. சொந்தக்காரங்கள்லாம் யார் யாருக்குச் சொல்லனுமோ சொல்லுடாம்மா. தூரத்துல இருந்து வர்றவங்க வரனும்ல.” 

அவர் சொல்லவும் நினைவு வந்தவளாய் தன் அலைபேசியில் பதிந்து வைத்திருந்த பெரிய அத்தை உமாவின் எண்ணுக்கு அழைத்தாள். 

ஃபோனை எடுத்துப் பேசியவரிடம் தந்தை இறந்ததை அழுதுகொண்டே சொல்ல,  எதிர்புறம் கேட்ட பரசுராமா என்ற அலறலிலும் அழுகையிலும் இவளுக்கும் கண்ணீர் கரையுடைத்து தரையை நனைத்தது. 

அம்மாவின் அழுகையில் பதறி அவரிடமிருந்து ஃபோனை வாங்கிப் பேசிய பெரிய அத்தை மகன் அருணாச்சலத்திடமும் அழுகையோடு விபரத்தைச் சொன்னவள்,

வேறு யாருக்கெல்லாம் சொல்ல வேண்டுமோ அவர்களுக்கும் மீதி இரண்டு அத்தைகளுக்கும் சொல்லிவிடுமாறு சொல்லி அலைபேசியை வைத்தாள். 

போஸ்ட்மார்ட்டம் ஆரம்பிக்கும் முன்பே அதற்கு இதற்கு என்று ஓயாமல் பணம் கேட்ட மருத்துவ ஊழியர்களிடம் பணம் கொடுத்துக் கொண்டிருந்த சதாசிவத்தைப் பார்க்கையில் சங்கடமாய் இருந்தது அவளுக்கு. 

 அங்கே மருத்துவமனையில் பாக்கியலஷ்மிக்கான மருத்துவ சிகிச்சைகளுக்கு யார் செலவு செய்கின்றனர் என்றும் தெரியவில்லை அவளுக்கு. 

நிச்சயமாய் நிகிலேஷிடம் ஒரு சில ஆயிரங்களைத் தவிர கண்டிப்பாக பணம் இருக்காது. நித்திலாவுக்குமே அந்த நிலைதான். அவர்கள் வீட்டைப் பொருத்தவரை வீட்டு நிர்வாகமும் வரவுசெலவும் பரசுராமன் வசம்தான். 

பாக்கியலஷ்மிக்குமே அவர் வாங்கிப் போடுவதை வைத்து கட்டுசெட்டாய் குடும்பம் நடத்தத் தெரியும். அதைத் தவிர்த்து வரவு செலவு கணக்கெல்லாம் என்றுமே கேட்டதில்லை அவர். கணவருமே அநாவசியமாக எந்தச் செலவும் செய்பவர் இல்லையென்பதால் செலவு கணக்கு கேட்கும் அவசியமும் வந்ததில்லை அவருக்கு. 

பரசுராமனுமே பெரும்பாலான ஆண்களைப் போல வீட்டு நிர்வாகத்தை தன் வசமே வைத்துக்கொண்டு, அடிப்படையான கொடுக்கல் வாங்கல், சேமிப்பு விபரங்களைக்கூட மனைவியிடமோ பிள்ளைகளிடமோ தெரிவித்ததில்லை. அதற்கான அவசியமும் வந்ததில்லை. 

ஆனால், இன்றைய இக்கட்டான நிலையில் அடுத்தடுத்த செலவுகளுக்கு என்ன செய்வது என்றுகூடத் தெரியவில்லை அவளுக்கு. பாக்கியலஷ்மி கண்விழித்தால்தான் ஏதாவது விபரம் தெரியும். அதை நினைக்கையில் மேலும் அழுகையாய் வந்தது. 

மொத்தத்தில் பரசுராமன் என்ற அச்சாணியைக் கொண்டுதான் மூவரும் சுற்றிக் கொண்டிருந்தனர். இன்று அந்த அச்சாணி முறிந்து போனதில் அவர்களது குடும்பமே நிலைகுலைந்து போயிருந்தது. 

 

**********

பேங்க் மேனேஜரிடம் விடைபெற்று வெளியே வந்த வெற்றி, வாசலில் பேயறைந்தவனைப் போல நின்றிருந்த பாரியை உலுக்கி விபரத்தைக் கேட்டறிந்த போது, முதலில் எதுவுமே புரியவில்லை அவனுக்கு. 

“இன்னடா உளர்ற? யாரைக் கொலை பண்ணிட்டன்னு போலீஸ் தேடி வந்திருக்கு? என்னா நடந்துச்சின்னு ஒழுங்காச் சொல்லு பாரி.”  என்று உலுக்கியதில் கண்களில் கலக்கத்தோடு தடுமாறினான் பாரி. 

“அ… அந்தப் பொண்ணோட அப்பா.”

“எந்தப் பொண்ணோட அப்பாடா?”

“அ… அதான் நீ… நீ… கூட பார்க்கக்கூடாதுன்னு சொன்னியே…அந்தப் பொண்ணு… நம்ப படகுல கூட வந்தானே அந்தப் பையன் நிகிலேஷ். அ… அவனோட அப்பா. மெய்யாலுமே செத்துப் போவார்னு நெனைக்கவேயில்லடா” கலக்கமாக உளறிக்கொட்டினான்.

 அவனாலும் ‘யாரையோ ஸ்கூலு வாத்தியாரக் அடிச்சிக் கொன்னுட்டன்னு சொல்றாங்க மாமா’ என கயல் ஃபோனில் அழுதுகொண்டே கூறியதை ஜீரணிக்கவே முடியவில்லை. 

பாரி சொன்ன பதிலில் அயர்ந்தான் வெற்றி. “இன்னடா சொல்ற? அவருக்கும் உனக்கும் இன்னடா பிரச்சன?  இன்னா நடந்துச்சின்னு சொல்லித் தொலையேன்டா?” 

“ம்ப்ச்… நான் எதுவுமே செய்யல வெற்றி. அவரக் கோவமா சட்டையப் புடிச்சி உலுக்கி மெரட்டுனேனக்கன்டி, மேலல்லாம் கை வைக்கலடா. எப்படி செத்தாரு? எனக்கே ஒன்னியும் புரியலடா” 

லேசாய் கலங்கிய கண்களோடு புலம்பிய பாரியைப் பார்க்கவும் பாவமாய் இருந்தது வெற்றிக்கு. பக்கத்துக் கடையிலிருந்து குளிர்ந்த தண்ணீர் பாட்டில் ஒன்றை வாங்கி பாரியை அருந்த வைத்தவன், தானும் அருந்திக் கொண்டான். சற்று நிதானம் வந்ததும், 

“என்ன நடந்ததுன்னு முழுசா சொன்னாதான பாரி அடுத்து என்ன செய்யனும்னு புரியும். அவரை எங்க பார்த்த? எதுக்கு மெரட்டுன?”