ஆழி சூழ் நித்திலமே 9 (ஆ)

தலையைக் கோதி சற்று தன்னை நிலைப்படுத்திக் கொண்ட பாரி, சில நிமிடங்கள் செலவழித்து மெல்லிய குரலில் செல்வியின் பள்ளியில் நடந்த பிரச்சனையைச் சொல்லி, அதற்காக தான் கோபமாக பள்ளிக்குச் சென்றதையும் கூறத் துவங்கினான். 

செல்வியின் வார்த்தைகள் அவனை பெரிதும் நிதானமிழக்கச் செய்திருந்தது. மிகுந்த கோபத்தோடு அந்த வாத்தியாரை நார் நாராய் வகுந்துவிடும் வேகத்தோடு, அவளது பள்ளிக்குச் சென்றவன் வாயிலில் இருந்த பள்ளி வாட்ச்மேனிடம், 

“பரசுராமன், அறிவியல் வாத்தியாரு எங்கய்யா இருப்பாரு?”

பெற்றோர்கள் பொதுவாக ஆசிரியர்களை சந்திக்க வருவது வழக்கம்தான் என்பதாலும் பாரியை ஏற்கனவே அவனுக்குத் தெரியும் என்பதாலும் தயக்கமின்றி பரசுராமனின் வகுப்பறையைக் காட்டினான் வாட்ச்மேன். 

யாரோ இளம்வயது வாத்தியாரை எதிர்பார்த்துச் சென்றவனுக்குத் தன் மனங்கவர்ந்தவளின் தந்தையைப் பார்த்ததும் பெரும் அதிர்ச்சிதான். எத்தனை முறை நித்திலாவோடு அவரைப் பார்த்திருக்கிறான். 

“பரசுராமன், சயின்ஸ் சாரு…?” சற்று தயக்கத்தோடுதான் வந்தது குரல். 

“ஆமா, நான்தான் உங்களுக்கு என்ன வேணும்?”

“செல்வியோட சார் நீங்களா?”

ஆமாம் என்று ஆமோதித்தவர், அவன் செல்வியின் சகோதரனாய் இருக்கக்கூடும் என்றெண்ணிக்கொண்டார். மேலும் செல்வியைப் பற்றி பொறுமையாகப் பேச வேண்டும் என்பதால் அவனை காத்திருக்கச் சொல்வோம் என்னும் நோக்கத்தில், 

“இங்க பசங்களுக்குத் தொந்தரவா இருக்கும். கொஞ்சநேரம் வெளிய வெயிட் பண்ணுங்க. நான் வந்ததும் பேசலாம்.” என்றார். 

செல்வியின் குற்றச்சாட்டினால் உண்டான கோபம், அவர் நித்திலாவின் தந்தை என்பதில் உண்டான அதிர்ச்சி, அவருடைய பதட்டமில்லா நிதானம் எல்லாம் சேர்ந்து அவனை நிதானமிழக்க வைத்திருந்தது. அவரது சட்டையைக் கொத்தாகப் பற்றியிழுத்தவன்

“உனக்கு எம்மாந் தெகிரியமிருந்தா இருந்தா, எங்கூட்டுப் பொண்ணு மேல கைய வச்சிக்கினு இருப்ப? பாக்கப் பெரிய மனுசனாட்டம் இருக்கியே அதுக்குத் தக்கன நடந்துக்க வேணாம்.”

எடுத்த எடுப்பிலேயே ஒருமையில் மரியாதையில்லாமல் பேசியதோடல்லாமல் சட்டையைப் பிடித்து இழுத்தவனைப் பார்த்த அதிர்ச்சியில் பரசுராமனுக்குப் பேச்சுத் தடுமாறியது. என்ன நடக்கிறது என்பதே அவருக்குப் புரியவில்லை.

“ஏய்! யா… யாருப்பா நீ? என்னப் பண்ற?”

“அடச்சீ வாய மூடு. பெத்த பொண்ணாட்டம் நெனைக்க வேண்டிய புள்ளையாண்ட எம்மாந் தெனாவட்டிருந்தா தப்பா பேசியிருப்ப. உம் பொண்ணுன்னா பொத்தி பொத்தி வளப்ப. ஊராம் பொண்ணுன்னா அம்மாம் இளக்காரமாக்குது உனக்கு.”

அவனது ரௌத்திரத்தில் அதிர்ந்து வாயடைத்துப் போனார் பரசுராமன். ஓங்குதாங்காய் ஆறடி உயர வாலிபனின் உறுமலுக்கு முன் அந்தப் பெரியவர் சுத்தமாய் ஒடுங்கிப் போனார். அதிலும் அவரது மகளைப் பற்றியெல்லாம் பேசியது விதிர் விதிர்க்கச் செய்திருந்தது அவரை. பயத்திலும் பதட்டத்திலும் இதயம் மத்தளம் வாசிக்கத் துவங்கியிருந்தது. 

“உனக்கு இன்னும் ரெண்டே நாளுதான் டைமு… அதுக்குள்ள இந்த வேலைய வேணாமுன்னு எழுதிக்குடுத்துட்டு ஓடிப் போயிடனும். மீறி எதனா பிரச்சன பண்ண, நீயும் உங்குடும்பமும் நிம்மதியா இருக்கமுடியாது. தொலைச்சுக் கட்டிடுவேன் எல்லாரையும்.”

ஆக்ரோஷமாக கர்ஜித்தவன், வேகமாக அவரது சட்டையை உதறிவிட்டு வெளியேறினான். அவன் உதறிய வேகத்தில் தடுமாறி சேரில் விழுந்தவர் போகும் அவனையே அதிர்ச்சியோடு பார்த்திருந்தார்.  சில நிமிடங்களில் நடந்துவிட்ட இந்த நிகழ்வில் பயந்திருந்த வகுப்பு பிள்ளைகள் சாரின் அதிர்ந்த நிலையைப் பார்த்ததும் பக்கத்து வகுப்பு ஆசிரியர்களை அழைத்துவர ஓடினர். 

பரசுராமனிடம் கொந்தளித்துவிட்டு வெளியே வந்தவனோ வண்டியை எடுத்துக் கொண்டு ஆளில்லாத கடற்கரையோரத்தில் சென்றுதான் நிறுத்தினான். அவனது மனக்கொதிப்பு எளிதில் அடங்க மறுத்தது. 

பரசுராமனின் கண்ணியமான தோற்றத்துக்கும் செயலுக்கும் சம்பந்தமே இல்லையென அவனுக்கு மிகுந்த கடுப்பாயிருந்தது. 

அதிலும் தன் பெண்ணை தனியேகூட எங்கேயும் விடாமல் பொத்திப் பொத்திப் பாதுகாத்து வளர்ப்பவர் செய்யும் செயலா இது? தன்னிடம் பயிலும் பெண்ணையும் தன் பெண்ணாகத்தானே நினைக்க வேண்டும்? கோபமே தனிய மறுத்தது. 

வெகுநேரம்  கடல் அலைகளை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தவன் விடாது அழைத்த வெற்றியின் அழைப்பில்தான் கிளம்பி நுங்கம்பாக்கம் சென்றான்.

நடந்ததைச் சொல்லி முடித்து, கலக்கமாய் முகத்தைத் துடைத்துக் கொண்டவன், “அவர மெய்யாலுமே  நான் ஒன்னியும் செய்யல வெற்றி. அடிச்சி நொறுக்கனும்னு ஜரூராதான் ஸ்கோலுக்குப் போனேன். ஆனா, அவரப் பார்த்ததும் கோபத்துல உலுக்குனேனே தவிர வயசானவரை அடிக்கலாம் இல்லடா.”

“கடவுளே! என்ன பாரி இதெல்லாம்? எதுக்குடா உனக்கு இம்புட்டு கோபம் வருது?” இப்படிச் செய்து வைத்திருக்கிறானே நண்பன் என்று பயங்கர கோபமாயிருந்தது வெற்றிக்கு. 

“ம்ப்ச்…” 

தலையைக் கோதிக் கொண்டவனுக்கும் பெரும் டென்ஷனாயிருந்தது. அவர் இறந்துவிடுவார் என்றெல்லாம் பாரி எதிர்பார்க்கவே இல்லை. எவ்வளவு மோசமானவராய் இருந்தாலும் அவர் குடும்பத்துக்கு அவர் இன்றியமையாதவர் அல்லவா. இப்படியாகிவிட்டதே! அதுவும் தன்னால்…! நினைக்க நினைக்க தன்மீதே எரிச்சலாய் இருந்தது அவனுக்கு. 

“சரி…சரி, டென்ஷனாகாத. அப்பாவுக்கும் ஞானத்துக்கும் சொல்லிடலாம். நாம நேரா ஸ்டேஷனுக்குப் போயிடலாம். அங்க போய் என்ன நிலவரம்னு பார்த்துக்கிட்டு மேற்கொண்டு என்ன செய்யலாம்னு பார்க்கலாம்.” 

பேசிய வெற்றி உடனடியாக அவனது தந்தைக்கும் அண்ணனுக்கும் அழைத்து விபரத்தைச் சொல்லிவிட,  வெகுவாய் பதறியவர்கள் வெற்றியையும் பாரியையும் நேராக போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகச் சொல்லிவிட்டு நிற்காமல் தாங்களும் கிளம்பினர்.

*****

திருவான்மியூர் சரகத்துக்குட்பட்ட காவல் நிலையம் வாசலில் வண்டியில் வந்து இறங்கியிருந்தனர் வெற்றியும் பாரியும். ஞானவேலுவுக்கும் மகேந்திரனுக்கும் தகவல் தெரிவித்திருந்ததில் இருவரும் வக்கீல் ஒருவரை ஏற்பாடு செய்துவிட்டு வந்துகொண்டிருந்தனர். 

காவல் நிலையத்தினுள் வெற்றியும் பாரியும் நுழைந்த போது, இரண்டு கான்ஸ்டபிள்களும் ரைட்டரும் மட்டுமே இருந்தனர். வெற்றி, பாரியின் மீதான வழக்கு விபரத்தைப் பற்றி விசாரித்ததும், பாரியை அலட்சியமாய் பார்த்த கான்ஸ்டபிள்… 

“நீதானா அந்த பாரிவேந்தன்? அப்படி ஓரமாப் போயி நில்லு. ஐயா வெளிய போயிருக்காரு. வந்ததும் விபரம் சொல்லுவாரு.”  என்றவாறு தன் வேலைகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டார். 

இருவரையும் கொஞ்சம்கூட சட்டை செய்யவில்லை ஸ்டேஷனில் இருந்தவர்கள். வெகு அலட்சியமாய் நடந்து கொண்டனர். வழக்கு விபரங்களை எதுவும் தெரிந்து கொள்ளாமல் எதுவும் செய்ய முடியாத நிலையில், பொறுமையாய் காத்திருப்பதைத் தவிர வேறு வழியின்றி போனது இருவருக்கும். 

சற்று நேரத்திலேயே மகேந்திரனும் ஞானவேலும் வந்துவிட அவர்களுக்கும் அதே பதிலே கிடைத்தது. கூடுதலாக மகேந்திரனை அமரச் சொன்னார்கள் அவ்வளவுதான் வேறு எந்த விபரமும் தெரவிக்க மறுத்தனர். 

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல் காத்திருந்தும் இன்ஸ்பெக்டர் நாதன் வராததால் அவருடைய நம்பரை வாங்கி ஞானவேலு தொடர்பு கொண்டான்.  

“முக்கியமான விசாரணையில இருக்கேன். 

முடிஞ்சதும் ஸ்டேஷனுக்குதான் வருவேன் சார். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க.”

என்று பதில் வரவும் வேறு வழியின்றி மேலும் ஒருமணி நேரம் காத்திருந்தனர். மீண்டும் தொடர்பு கொண்டாலும் அதே பதில்தான் கிடைத்தது. லோக்கல் எம்எல்ஏவாலும் இன்ஸ்பெக்ட்டரைப் பிடிக்க முடியாமல் போனது. 

இதற்கிடையில் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த வக்கீலும் வந்துவிட, அவருமே இன்ஸ்பெக்டர் நாதனைத் தொடர்புகொண்டு வழக்கு விபரங்களையும் முதல் தகவல் அறிக்கையும் தந்தால் தாங்கள் ஜாமீன் வாங்க உதவியாய் இருக்கும் என்று கேட்க, அவருக்கும் இதோ வந்து கொண்டிருக்கிறேன் என்ற பதிலே கிடைத்தது. 

 

எந்த பிரிவில் வழக்கு பதியப்பட்டுள்ளது, யார் புகார் கொடுத்தது என்ற அடிப்படைத் தகவலைக்கூட சொல்ல மறுத்தனர். யாராய் இருந்தாலும் ஸ்டேஷனிலேயே வைத்துப் பேசி பஞ்சாயத்து செய்து புகாரை வாபஸ் வாங்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்ததில் முன் ஜாமீன் வாங்க வேண்டும் என்று எண்ணியிருக்கவில்லை அவர்கள். 

நிதானமாய் ஐந்து மணிக்கு மேல் ஸ்டேஷனுக்குள் வந்த இன்ஸ்பெக்டர் நாதன், மகேந்திரனைப் புதிதாய் பார்ப்பது போல, 

“அடடே, சார்! நீங்க வந்திருக்கீங்களா சார். என்ன இவ்வளவு தூரம்?” பாரிக்காக அவர்கள் வருவர் என்று தெரிந்தபோதும் தெரியாதவன் போல நக்கலாய் வினவினான். 

“நான் வந்து இங்க மூனு மணி நேரமா உட்கார்ந்துக்கிட்டு இருக்கறத உங்க ஸ்டேஷன்ல யாருமே உங்ககிட்ட சொல்லல. என்ன இன்ஸூ… எங்கிட்டயேவா…? நம்ப ஏரியா எம்எல்ஏவும் உனக்கு மூனு மணி நேரமா பேச ட்ரை பண்ணிக்கினு இருக்காரு. யாரையும் மதிக்காம நீ அசால்ட்டா வந்துட்டு என்னையவே நக்கலா விசாரிக்கிறியா?

பாரி மேல என்ன கேஸ்யா போட்ருக்க? யாரு புகார் குடுத்தா? எப்ஐஆர் போட்டுட்டியா என்ன?”

மகேந்திரனின் கோபத்தை எளிதாய் புறந்தள்ளியவன், “முக்கியமான கேஸ் விசாரணையில இருந்தேன் சார். உங்களுக்குத் தெரியாதா என்னைப் பத்தி?”

மகேந்திரனுடன் வந்திருந்த வக்கீலுமே வெகுவாய் கோபப்பட அவரிடம் சற்று தழைந்து பேசியவன், பாரியின் வழக்கு விபரங்களைத் தெரிவித்தான். 

அவன் எப்ஐஆர் போட்டதை அறிந்ததும் பெரும் கோபம் வந்தது அவர்களுக்கு. அனைவருக்குமே அவன் வேண்டுமென்றே செய்கிறான் என்று புரிந்தாலும் எதுவும் செய்ய முடியாமல் கடுப்போடு இருந்தனர். 

அன்று வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு மேல் ஜாமீன் வாங்க முடியாது. சனி ஞாயிறு கோர்ட் விடுமுறை. இனி திங்கள் மட்டுமே ஜாமீன் கிடைக்கும் என்பதாலும், நித்திலா உறுதியாக கேஸ் வாபஸ் வாங்க மாட்டேன் என்று கூறியிருந்ததாலும் யோசித்துக் காய் நகர்த்தியிருந்தான் இன்ஸ்பெக்டர் நாதன். 

அதற்குள்ளாகவே பாரி அந்தப் பெண் பாவம். அவள் என்ன செய்கிறாள் என்று பார்த்துவிட்டு வா என வெற்றியிடம் சொல்லவும், முதலில் அவனை முறைத்த வெற்றி பிறகு பாரியின் கெஞ்சலான பார்வைக்கு மனமிரங்கி, செல்வியின் ஸ்கூலுக்கும் பரசுராமனை முதலில் அட்மிட் செய்த மருத்துவமனைக்கும் சென்று நடந்ததை விசாரித்துக் கொண்டு, 

அரசு மருத்துவமனைக்கும் சென்று நித்திலாவுடன் துணைக்கு யார் இருக்கிறார்கள் என்றும் பார்த்துவிட்டு மீண்டும் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்திருந்தான். 

“சார் இறந்து போன பரசுராமன்ங்கறவரோட பொண்ணு நித்திலாங்கறவங்க புகார் கொடுத்திருக்காங்க. இவன் அவரோட ஸ்கூலுக்கே போய் அவரை அடிச்சிருக்கான்.  அதை அவர் கிளாஸ் பிள்ளைங்க நேர்ல பார்த்திருக்காங்க. அவர் இறந்துட்டாரு. 

சாதா அடிதடி கேஸ் இல்ல சார் இது. அட்டெம்ப்ட் டூ மர்டர். அதனால நான் எப்ஐஆர் போட்டுட்டேன். டைம் ஆகிடுச்சி. இனி கோர்ட்ல ரிமாண்ட் பண்ண முடியாது. திங்கள்கிழமைதான் எதுனாலும் செய்ய முடியும்.” கபடப் புன்னகையுடன் கூறியவனைக் கொலைவெறியோடு முறைத்தனர் அனைவரும். 

“யோவ் இன்ஸூ, வேணும்னு செய்யற நீ. பாரி எனக்கு புள்ள மாதிரி. அவனுக்கு எதனா ஆச்சி, உன்னைய வகுந்துடுவேன்.”

“ஏன் மேல கோபப்பட்டா? நான் என்ன சார் செய்வேன். புகார் ஸ்ட்ராங்கா வந்தா நான் என்ன செய்யறது? சட்டம் ஒழுங்கை நான் பார்க்கனுமா இல்லையா? அவரை அடிச்சதுக்கு ஸ்ட்ராங்கா ரீசன் சொல்ல சொல்லுங்க எதனா செய்ய முடியுமான்னு பார்க்கலாம்” 

நக்கலான அவன் பேச்சில் கடுப்பானவர்களைத் தனியே அழைத்துப் பேசினான் வெற்றி. 

“அப்பா, நான் ஸ்கூல்ல போய் விசாரிச்சேன். பாரி அவரை அடிக்கவே இல்ல. சட்டைய பிடிச்சிதான் உலுக்கியிருக்கான். தடுமாறி சேர்ல விழுந்திருக்காரு. அதுக்கப்புறமும் கொஞ்ச நேரம் ஸ்கூல்ல கூட வேலை பாக்கற சார்ங்ககூட பேசிட்டுதான் இருந்திருக்காரு. 

அப்புறமா நெஞ்சு வலிக்குதுன்னு சொல்லவும்தான் போய் ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்க. அங்க அவருக்கு ட்ரீட்மெண்ட் குடுக்கும்போதுதான் இறந்திருக்காரு. ஹார்ட் அட்டாக்னு சொல்லிதான் அங்க ஹாஸ்பிடல்லயும் சேர்த்திருக்காங்க.

அதுக்கப்புறம் கம்ப்ளைன்ட் வரவும்தான் அவரோட பாடிய போஸ்ட்மார்ட்டத்துக்கு எடுத்துட்டுப் போயிருக்காங்க. சோ, கோர்ட்டுக்குலாம் போனா கேஸ் நிக்காது. 

இப்ப உடனே பாரிய வெளியக் கொண்டு வரனும்னா, கம்ப்ளைன்ட் குடுத்த ஆளு நமக்குத் தெரிஞ்சவங்கதான். அங்க வேணும்னா பேசிப் பார்க்கலாமா?

அதுமட்டுமில்லாம செல்வியப் பத்திலாம் எதுவுமே சொல்ல வேணாம். பொம்பளப்புள்ள விவகாரம் மீடியா அது இதுன்னு போச்சுன்னா சங்கடமாகும். சுமூகமா பேசி முடிக்க முடியுதான்னு பார்க்கலாம்.”

வெற்றியின் கூற்று அனைவருமே ஏற்கும்படி இருந்தது. ஒருமனதாக நித்திலாவிடம் கேஸ் வாபஸ் வாங்கச் சொல்லி பேசிப் பார்க்கலாம் என்று முடிவெடுத்தனர். 

பாரியின் அருகே வந்த வெற்றி, “கவலைப்படாதடா, அந்தப் பொண்ணப் போய் பார்த்து பேசிட்டு வரோம். எப்படியும் வாபஸ் வாங்க வச்சிடலாம்.” அழுத்திக்கூற… 

அவ்வளவு நேரமும் நாதன் கூறிய பரசுராமனின் பெண் நித்திலா என்ற வார்த்தையிலேயே உறைந்திருந்தான் பாரி. 

எப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அவள் பெயர் தனக்குத் தெரிய வருகிறது என்று வேதனையோடு எண்ணியிருந்தவன், “நித்திலா…!” மெல்ல அவளது பெயரை உச்சரித்துப் பார்த்தான். 

சுற்றுப்புறம் உறைக்காது மோன நிலையில் இருந்தவன், எப்படியும் வாபஸ் வாங்க வச்சிடலாம் என்ற வெற்றியின் வார்த்தையில் சட்டென்று நிமிர்ந்தான். 

“எப்படியும்னா? எப்படி வெற்றி? அந்தப் பொண்ண மெரட்டப் போறீங்களா?”

உண்மையில் பேசிப் பார்ப்பது படியவில்லை என்றால் மிரட்டிப் பணிய வைக்க வேண்டியதுதான் என்றே எண்ணியிருந்தான் வெற்றி. அதுதானே அவர்களது வழக்கமும் கூட. 

“பா… பாரி. அது வந்து. இப்ப நீ வெளிய வர்றதுதான் முக்கியம்டா.”

“இல்ல வெற்றி… அந்தப் பொண்ணுக்கு நீங்க யாரும் எந்தத் தொந்தரவும் தரக்கூடாது. நான் வெளியவே வரலைன்னாலும் பரவாயில்ல. கேஸ் வாபஸ் வாங்கச் சொல்லி அந்தப் பொண்ணான்ட கேக்காதீங்க.” வெகு அழுத்தமாய் பாரி கூற, 

“என்னடாச் சொல்றான் இவன்? கேஸ் வாபஸ் வாங்காம எப்படிடா. திங்கக்கிழமதான் ஜாமீன் கிடைக்கும். இரண்டு நாள் முழுசா செல்லுல இருக்கனும். அந்த நாதன் இவன் மேல ஏற்கனவே கொலக் காண்டுல இருக்கான். இவனை ரெண்டு நாள் இங்க விட்டு வச்சா உரிச்சிடுவான்டா.”

பதறிய மகேந்திரனை சமாதானப்படுத்திய பாரி, “இங்க எதுனாலும் நான் சமாளிச்சுக்கறேன் ஐயா. நீங்க எனக்காக எதானா செய்யனும்னு நினைச்சீங்கன்னா அந்தப் பொண்ணுக்கு எந்தத் தொந்தரவும் தராதீங்க.”

“…”

அனைவருமே பாரியை விநோதமாய் பார்த்திருக்க, வெற்றியிடம் திரும்பியவன்

“எனக்கு ஒரு ஹெல்ப்பு வேணும் வெற்றி.”

“…”

“நி… நித்திலாவப் போய் பார்த்து அவங்களுக்குத் துணையா கூடவே இருடா.”

— ஆழி சூழும்.