இணைந்து வாழ்வோம்(லிவ் இன்)

images_(5)_(4)-f8fb83f0

இணைந்து வாழ்வோம்(லிவ் இன்)

” என்னை மன்னிச்சுடு கடுவா… உன் பார்வையை என்னாலே புரிஞ்சுக்க முடியுது.. ஆனால் நான் எந்த உறவுல டா  உன் கிட்டே வர முடியும்.. நீ தான் என்னை கல்யாணம் பண்ண மாட்டேனு சொல்லிட்டியே.. ஆனால் நான் உன்னை புருஷனா நினைச்ச அடுத்த நொடியே நீ என் மனசை உடைச்சிட்டே.. அந்த மனசோட உன் கூட இருந்தா கண்டிப்பா என்னோட ஏமாற்றத்தை நான் உன் மேலே கோபமா காட்டி இருப்பேன்.. அதுவே நம்ம உறவை விரிசல் ஆக்கி இருக்கும்.. நம்ம அன்பும் காணாம போய் இருக்கும்.. அதான் நான் வந்துட்டேன் அர்ஜீன்.. ஒரு புரிதலோட சேர்ந்து இருந்தா மாதிரி.. ஒரு புரிதலோட பிரிஞ்சுடுவோம் கடுவா.. நான் அங்கே இருந்தா எங்கே நம்ம அழகான உறவை சண்டைப் போட்டு கோபத்தை காட்டி ஏமாற்றத்தை காட்டி வெறுப்பைக் காட்டி உருதெரியாம சிதைச்சுருவனோனு தான் நான் வந்துட்டேன்.. இந்த அன்பு இது போதும் இதை நினைச்சு நான் வாழ்ந்துக்கிறேன்… என்னை மன்னிச்சுடு கடுவா.. நான் போறேன்.. இந்த இடத்தை விட்டு என் மனசை விட்டு என் சந்தோஷத்தை விட்டு போறேன்.. பாய் ” என்று அவள் மனதினுள் நினைத்துக் கொண்டு தன் பொருட்கள் அடங்கிய பையை ஒரு கையில் பிடித்துக் கொண்டு தான் இன்பமாய் அவனுடன் வாழ்ந்த அந்த வீட்டை மறுபடியும் பார்த்தபடி காருனிள் ஏறி அமர்ந்தாள்…

” இங்கே பாரு தியா.. இதான் கடைசி.. அவன் கூட இனி பேசுற வேலை வெச்சுக்காதே.. நாங்க சொல்ற பேச்சை கேட்டா உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்” என அவளது தந்தை சொல்ல ஏதும் பேசாமல் ஒரு விரக்தி புன்னகையை உதிர்த்துவிட்டு ஜன்னல் பக்கமாய் திரும்பிக் கொண்டாள்…

கடுவன் என்னும் மரத்தில் அன்பினால் விளைந்த தியா என்னும் இலை உதிர்ந்தது.. அந்த இலையை மற்றொரு மரத்தில் பசை போட்டு ஒட்ட பெற்றோர்கள் முனைய அவளுக்கு மட்டும் தானே தெரியும் அவள் வேறு மரத்தை சேர்ந்தால் வாடிப் போய்விடுவாள் என்று….

வீட்டுக்குள் நுழைந்த தன் மகளை வாட்டி வதைப்பதற்காகவே காத்திருந்த தாயும் தன் வசைப் பாட்டைத் தொடங்கினார்…

” நான் அப்பவே சொன்னனே.. இவளை நம்ப முடியாதுனு.. என் பேச்சை  கேட்டீங்களா??..  என்ன காரியம் பண்ணிட்டு வந்து இருக்கானு பாருங்க.. காதலிச்சு இருந்தா கூட ஓரளவுக்கு மன்னிச்சு இருப்பேன்.. ஆனால் கல்யாணத்துக்கு முன்னாடியே ஒருத்தன் கூட கூத்து அடிச்சு இருக்கா.. இப்படி வெக்கங்கெட்ட பொண்ணை பெத்து போட்டதுக்கு நான் செத்து போய் இருக்கலாமே” என அவர் சொல்ல அவள் அப்போதும் கடுவனின் நினைவில் சிலையாகவே நின்றாள்.. இவரது பேச்சு காதில் விழாமல்…

“அதைப் பார்த்து கோபம் கொண்ட தாயோ என்னடி இந்நேரத்துக்கு வாய் கிழிய பேசுவ.. இப்போ தப்பு பண்ணதும் பேச்சு வராம வாயடைச்சு போய் நிக்கிறீயோ” என்று அவளை உலுக்க அதில் நிகழ்காலத்துக்கு வந்தவள் தன் தாய் சொன்ன வார்த்தைகளை மீண்டும் நினைவுப்படுத்திவிட்டு கோபமாய் பேச ஆரம்பித்தாள்…

” நான் தப்பு பண்ணேனு நினைச்சா தானே வாயடைச்சு போய் நிக்குறதுக்கு.. நான் எந்த தப்பும் பண்ணல” என நெஞ்சை நிமிர்த்தி பேசிய தியாவைக் கண்டு கோபத்தின் உச்சிக்கே சென்றார்…

” சீ கல்யாணத்துக்கு முன்னாடி கெட்டு போய்ட்டு வந்துட்டு எவ்வளவு நெஞ்சழுத்தமா பேசுறா பாரு.. நீயா டி என் வயித்துல வந்து பொறந்த.. எங்க குடும்ப கௌரவத்தையே வாங்கிட்ட… “

” எப்படி எப்படி மா.. அப்போ கல்யாணத்துக்கு அப்புறம் கெட்டுப் போனா பரவாயில்லையா.. தாலி வாங்கிட்டு கற்பை இழந்த பொண்ணுங்க எல்லாம் கௌரவத்தை காப்பாத்தினங்கவ.. நான் கெட்டுப் போனவ இல்லை..  என் கழுத்துல தாலி இல்லைன்றதாலே தானே இந்த பேச்சு பேசுற.. அப்போ பல ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி தாலின்ற ஒன்னு நடைமுறையிலேயே இல்லையே.. அப்போ  தெரியாம தான் கேட்குறேன்  தாலி அவங்க கழுத்துல இல்லைன்றதாலே அவங்க எல்லாரும் கெட்டுப் போனவங்களானு கேட்கிறேன் நான்… இந்த தாலி முறை எல்லாம் கிபி 10 க்கு அப்புறம் வந்தது தான்.. அப்போ உன் சந்ததி வழியில கிபி 10 க்கு முன்னாடி பிறந்த பொண்ணுங்க   எல்லோரும் குடும்ப கௌரவத்தை அழிச்சவங்களா?? ம் சொல்லு” என அவள் கத்த இதற்கு பதில் தெரியாது முழித்த அவர் மீண்டும் பேசத் தொடங்கினார்…

” ஐயோ இது தான் டி நம்ம கலாச்சாரம்.. நம்ம தமிழர் பண்பாட்டை நாம காப்பாத்தாம யாரு காப்பாத்துவாங்க??”

” ஆமாம் தாலி தமிழரோட கண்டுபிடிப்புனு யாரு சொன்னது.. அது வட இந்தியாவில வந்த பிராமணர்கள் தமிழ்நாட்டுல அறிமுகப்படுத்தியது… புரியுதா.. நான் நம்ம கலாச்சாரத்தை தப்பா சொல்லல மா.. இங்க சொல்லப்படுற  எல்லாத்துக்கும் ஒரு அர்த்தம் இருக்கு… இந்த தாலின்றது உறவுக்குள்ளே நம்பிக்கையை ஏற்படுத்துறதுக்கான பாதுகாப்பு வளையம் மா.. இதைக் கட்டுனா அந்த உறவு கடைசி வரை நம்மளை விட்டு போகாதுனு ஒரு தைரியமூட்டும்… எனக்கானவன் எனக்கானவள்னு பெருமைப்பட வைக்கும்.. இதோட அர்த்தம் எனக்கு இப்போ தான் புரிஞ்சுது மா.. அப்படி கூடவே இருக்கிற வரத்தை இந்த கயிறு தந்துடாதானு நான் தாலிக்காகவே ஏங்கினேன் மா… ” என்று ஆற்றாமையோடு பேசியவள் மேலும் தொடர்ந்தாள்…

” ஆனால் ப்ளீஸ் மா.. என்னை இப்படி வார்த்தையாலேயே காயப்படுத்தாதே.. நான் கெட்டுப் போனவள் இல்லை.. என் மனசை ஆக்கிரமிச்சவனோட தான் என் வாழ்க்கையை பகிர்ந்துக்கிட்டேன்… என்ன உன் கிட்டே தாலி இருக்கு என் கிட்டே இல்லை அவ்வளவு தான் வித்தியாசம்.. அதுக்காக என்னை இவ்வளவு கீழ்த்தரமா பேசுவியா.. கெட்டுப் போனவள் அப்படி இப்படினு…. நான் ஒன்னும் நம்ம கலாச்சாரத்தை எதிர்க்கிறவ இல்லைமா.. இந்த தாலி வழக்கமுறையை நான் முழுமையா ஏத்துக்கிறேன்.. ஆனால் சில விஷயங்களிலே நம்ம கலாச்சாரம் சொன்ன  விஷயங்கள் இந்த காலத்துக்கு பெருந்தாது.. தீட்டு ஆன தனியா படுக்கணும்.. யாரும் தொடக்கூடாது… சோபால கூட உட்காரக்கூடாது அப்படினுலாம்…  இது எல்லாமே கொடுமை தானே மா… அந்த நாளிலே ஏற்கெனவே உடம்பால படுற வலி போதாதுனு மனசளவுலயும் வலி தரீங்க.. இங்கே மட்டும் தான் இந்த பழக்கம்.. வேற நாட்டுலலாம் இந்த பழக்கம் இல்லை தானே… அப்போ அந்த நாட்டில உள்ள பொண்ணுங்க எல்லாம் கெட்டவங்க நாம மட்டும் தான் சரியா நடந்துக்குறோம்னு அரத்தமா??… இல்லைலமா… இது எல்லாம் நம்ம புராணங்களிலே கூட எழுத்து வடிவத்துல இல்லைமா… இடையில வந்து சொன்ன யாரோ பேச்சைக் கேட்டு தான்மா நம்ம மாறி இருக்கோம்.. முதல் நாலு
பேரு மாறுனதாலே அடுத்த நாலு பேரு அவங்களைப் பார்த்து  மாறி இப்போ மொத்த சமுதாயமே மாறிப் போயிடுச்சு.. அதுல மாறாம இருக்கிற சில பேரை சமுதாய விரோதிகள் கலாச்சாரத்தை சீரழிக்கிறவங்கனு சொல்றதுல நியாயம் இல்லைலமா.. உண்மை தான் நம்ம கலாச்சாரத்தை நாம தான் பாதுகாக்கணும்.. அதைக் குழந்தைங்க கிட்டே சொல்லி வளர்க்கணும்… ஆனால் நம்ம கலாச்சாரத்துல சொல்லப்பட்ட எல்லாத்தையும் ஏத்துக்கணும்னு கட்டாயப்படுத்தக்கூடாது மா.. எதுலாம் அவங்க மனசுக்கு பிடிக்கிதோ அதை ஏத்துக்கட்டும்.. அவங்க நடைமுறைக்கு சரிப்பட்டு வராததை ஏத்துக்க வேண்டாம்… ஆனால் நீங்க என்ன பண்றீங்க… அவங்க ஏத்துக்காத விஷயத்தை நாலு பேரு தப்பா நினைப்பாங்க.. நீ இதை எல்லாம் கடைபிடிக்கலனா நல்ல பிள்ளை  இல்லை..  அதனாலே ஏத்துக்கோ இந்த சமுதாயம் சொல்றதைக் கேளுனு… ஏற்கெனவே உங்க சின்ன வயசுல எது நல்லது கெட்டதுனு தெரியாத வயசுல உங்களுக்கு கற்பிக்கப்பட்டதை எங்கள் மேலே திணிக்கிறீங்க…. அது மனசளவுல எவ்வளவு பெரிய சஞ்சலத்தை உண்டு பண்ணும் தெரியுமா?? தான் நினைச்சா மாதிரியும் இருக்க முடியாமா.. இந்த சமுதாயம் சொல்ற படியும் இருக்க முடியாமா.. கடைசியில அந்த குழந்தை மென்டலா அஃபெக்ட் ஆகும்மா.. இதே மாதிரி தான் நானும் அஃபெக்ட் ஆனேன்.. உங்கள் கூட அதிகமா பேசுனா தானே இப்படி மனசு பாதிக்கிதுனு சொல்லி தனியா இருந்தேன் மா.. நான் ஏதாவது உங்கள் கிட்டே பேசுனாலும் அது சண்டை போடுறதுக்காக தான் இருக்கும் மா.. என் உணர்வுகள் உங்க யாராலயும் புரிஞ்சுக்கப்படல.. ஒரே ஒருத்தன் மட்டும் தான் என் உணர்வுகளை என் யோசனைகளை என்னை புரிஞ்சுக்கிட்டான்.. அவன் தான் என்னோட கடுவா..  உண்மையை சொல்லணும்னா அவனைப் பார்க்குற வரைக்கும்  நான் கல்யாணமே பண்ணிக்கக்கூடாதுனு நினைச்சேன்.. ஏனா பயமா இருந்தது.. எங்கே என் சுதந்திரத்தை இழந்திடுவனோனு.. கண்டிப்பா அவனை சந்திக்கலனா இந்த ஜென்மத்தில நான் கல்யாணம் பண்ணனும்ன்ற முடிவை எடுத்தே இருக்க மாட்டேன் மா.. ஆனால் என்னை அந்த முடிவெடுக்க வெச்சது அவனோட அன்பு தான்.. என் சுதந்திரத்தை நானே இழந்து அவன் அன்புக்கு அடிமையா மாறும் போது கூட அவன் என்னை நானா இருக்கணும்னு சொல்லி மாத்துனான் மா… என் காதலை என் அன்பை என் பெண்மையை முழுசா எனக்கு உணர்த்துனவன் கூட தான் மா என் வாழ்க்கையை நான் பகிர்ந்துக்கிட்டேன்.. அவனைப் பத்தி முழுசா புரிஞ்சுக்கிட்ட அப்புறம் தான் மா என்னை அவனுக்கு தந்தேன்.. இது எனக்கு தப்பா தெரியல.. இத்தனை வருஷ வாழ்க்கையிலே அவனோட இருந்த நாட்களிலே தான் நான் சந்தோஷமா இருந்தேன்.. அந்த நாட்களை நினைச்சு என்னோட மீதி நாட்களிலே சந்தோஷமா இருப்பேன்..” என அவள் நீண்டதாய் பேசி முடிக்க அவளது தாயின் கண்களில் சிறு கலக்கம் தென்பட்டது… அவள் சொல்லிய எல்லாம் சரியெனவே பட்டது.. சின்ன வயதில் இருந்து தன் குழந்தை தன்னால் பாதிக்கப்பட்டு இருப்பது புரிய தன் மேலேயே கோபம் வந்தது.. இந்த நான்கு பேருக்காக என் பொண்ணை தனியாக தவிக்கவிட்டு விட்டானே என்று வருத்தப்பட்டவர் கடைசியாக அவள் திருமணமே செய்ய மாட்டேன் என்று சொல்லிய வார்த்தையில் அதிர்ந்து விழித்தார்.. அவள் முடிவெடுத்தால் மாற்றுவது கடினம் என அறிந்தவர் சிறு திகைப்புடனே

” அப்போ நீ வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டியா.. குழந்தை பெத்துக்க மாட்டியா?” என அவர் கேட்க அவள் திடமாய் இல்லை என்று மறுத்தாள்… அவளது உறுதியைக் கண்டு உறுதி இழந்த தாய் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுந்தார்…

அது வரை அதிராமல் பேசிக் கொண்டு இருந்த தன் தாயின் நிலையைப் பார்த்ததும் அதிர்ந்து போய் பேச்சிழந்து நின்றாள்.. அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பதற்றத்துடன் காத்துக் கொண்டு இருக்க வெளியே வந்த டாக்டர் இது ரொம்ப சிவியர் அட்டாக் அவங்க மனசை பாதிக்காம பாத்துக்கோங்க.. எந்த அதிர்ச்சியான விஷயங்களையும் கஷ்டமான விஷயங்களையும் சொல்ல வேண்டாம்  என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்…

அவளது கையைப் பிடித்துக் கொண்டு ” தயவு செஞ்சு என் பொண்டாட்டி உயிரை என் கிட்டே குடு மா.. உன் பிடிவாதத்துக்காக உன் அம்மா உயிரை எடுத்தாதே ” என கையைப் பிடித்துக் கெஞ்சியவரை விரக்தியாய்ப் பார்த்தாள்…

“கடைசியிலே என்னையும் இந்த நிலைமையிலே நிக்க வெச்சுட்டிங்களே..  உயிரைக் காமிச்சு மிரட்டுறீங்களே.. எமோஷனலா என்னை ப்ளாக்மெயில் பண்றீங்க இல்லை??…. ” என்றுக் கண்களில் கண்ணீருடன் கேட்டவள் மடமடவென கீழே இறங்கி சென்றுவிட்டாள்… பின்பு அவள் அன்னை கண் விழித்ததும் அவர் முன்பு வந்து நின்றாள்…

” தியா ப்ளீஸ் மா.. கல்யாணம் பண்ணிக்கோ”

” அம்மா நான் அவ்வளவு சொல்லியும் என் உணர்வுகளைப் புரிஞ்சுக்கல இல்லை.. இப்போவும் ஊருக்காக தானே பார்க்கிறே.. எங்கே கல்யாணம் பண்ணலனா தப்பா பேசுவாங்களோனு.. ஆனால் நான் உன்னை மாதிரி இல்லை மா.. நீ ஊருக்காக பார்ப்ப ஆனால்   நான் உனக்காக பார்க்கிறேன்.. நீ சொல்றதை செய்யுறேன் போதுமா.. சீக்கிரமா உடம்பு தேத்துக்கிட்டு வா.. கடைசி வரை என் உணர்வு உன்னாலே மதிக்கவேப்படல இல்லை.. ” என்று விரக்தியாக சொல்லிவிட்டுச் சென்ற மகளைக் கண்டு கண்ணீர் தான் வழிந்தது அவருக்கு…

” தியா மா.. இல்லை டா.. நான் பண்ண தப்பை சரி செய்யுறதுக்காக தான் மா கேட்கிறேன்.. நீ சொல்லும் போதே புரிஞ்சுது.. நான் உன்னை ஒழுங்கா சுதந்திரமா வளர்க்காம மனசுல கஷ்டத்தைக் கொடுத்து இருக்கேனு… எனக்கு அது ரொம்ப கஷ்டமா இருக்கு.. அந்த தப்பை சரி செய்யணும்னு மனசு அல்லாடுது.. நீ கல்யாணம் பண்ணி பெத்து தர பிள்ளையை நான் தான் கூட இருந்து வளர்ப்பேன் உன்னைக் கஷ்டப்படுத்தினா மாதிரி இல்லாமா சுதந்திரமா வளர்க்கணும்னு ஆசையா இருக்கு டா.. அதான் அம்மா கேட்குறேன்.. ப்ளீஸ் டா தப்பா எடுத்துக்காகதே… ” என முதல் முதலாய் நான் சொல்கிறேன் நீ செய் என்ற கட்டளையாய் இல்லாமல் எனக்காக உன்னால் செய்ய முடியுமா என்று இரவலாய் கேட்ட அன்னையை புதிதாகப் பார்த்தாள்.. அவரது உடல் நிலை நினைவுக்கு வர ” சரி மா.. உன் விருப்பம் போல நான் உனக்கு குழந்தைப் பெத்துத் தரேன்.. அதை நீ நினைச்ச படி நல்ல படியா வளர்த்துக்கோ.. இப்போ ரெஸ்ட் எடு மா” என்று தன் வருத்தத்தை மறைத்துக் கொண்டு சொன்னவள் அந்த அறையை விட்டு வெளியேறி சிலையென இலக்கற்று எங்கோ தூத்தில் பறந்த பறவையை வெறித்துக் கொண்டு இருந்தாள்…

?????

மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தவனை வெறுமையே வரவேற்றது.. இதற்கு முன்பு தனியாக இருந்து பழக்கம் தான்.. ஆனால் இப்போது புதிதாக தாக்கிய அந்த தனிமையை அவனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை..

செய்யும் எந்த செயலிலும் கவனமற்று எல்வாவற்றையும் தவறாக செய்துக் கொண்டு இருந்தான்… கதை எழுதலாம் என்று காகிதத்தை எடுத்தாள் காகிதம் முழுவதும் அவளது பெயர்களாய் இருப்பதுப் போல் ஒரு பிரம்மை.. என்ன இது என் மனம் இப்படி தடுமாறுகிறது..

இந்த நிலையற்ற மன உணர்ச்சிக்குலாம் நான் மயங்க மாட்டேன்.. என்னால என்னை கட்டுப்படுத்திக்க முடியும்.. என்னாலே தனியா வாழ்ந்துக்க முடியும்.. நான் யாரையும் சராந்து வாழ மாட்டேன்.. அன்பு என்னை சிதைக்க விட மாட்டேன்.. என அவன் அவனை கட்டுப்படுத்திக் கொள்ள முயல அவன் மேலும் தன் கட்டுப்பாட்டை இழந்தான்….

ஒரு வேளை எனது உடல் தேவையினால் தான் நான் என் கட்டுப்பாட்டை இழக்கிறேனா என அவன் அந்த தேவையைப் போக்கிக் கொள்ள வேறு இடம் சென்றான்… ஆனால் அந்த பெண்ணின் கைகளைக் கூட அவனால் தொட முடியவில்லை.. ஏதோவொன்று அவனைத் தடுத்தது.. விருட்டென்று எழுந்து வெளியே வந்துவிட்டான்.. அப்போ இது என்னோட உடல் தேவை இல்லை.. அப்போ எதுக்கு என் மனசு இப்படி அலை பாயுது அதுக்கு என்ன தான் தேவை என அவன் யோசித்தபடி வீட்டினுள் நுழைய அங்கே ஒரு கடிதம் இருந்தது…

பிரித்துப் பார்க்க அவனால் வரையப்பட்ட ஓவியங்கள் Olympus global open photo contest ல் தேர்வு பெற்று இருந்தது.. ஆனால் இதை நான் அனுப்பவே இல்லையே யாரா இருக்கும் என யோசித்தவனின் நினைவில் மந்தி வந்து நின்றாள்.. அடியே நான் அன்னைக்கு சொன்னதை நியாகபகம் வெச்சுக்கிட்டு திருட்டுத்தனமா என் போட்டாஸை எல்லாம் சுட்டு அந்த காம்பெட்டிஷன்க்கு அனுப்பி வைச்சு இருக்கியா.. நீ செம மந்தி.. என அவனுள் இருக்கும் மந்தியோடு அவன் தனியாய் பேசிக் கொண்டு இருக்க அவனின் செல்போன் ஒலித்தது…

“சார் நீங்க எழுதுன கதையை எங்க பப்ளிஷிங் அவுஸ் ரிவியூ பண்ணி பதிப்பிக்க முடிவு பண்ணி இருக்கோம்.. நாளைக்கு நீங்க கம்பெனிக்கு வாங்க.. மீதி டீடெயில்ஸ் பத்தி பேசிக்கலாம்” என சொல்ல அவன் சரியென்று சொல்லிவிட்டு போனை வைத்தான்… இதுவும் தன்னுடைய மந்தியின் வேலை தான் என்று அவனுக்கு தெளிவாய் புரிந்தது..

எனக்காக இவ்வளவு பண்ணி இருக்காளே…. என்னோட கனவு எல்லாத்தையும் நிறைவேத்தி வெச்சிட்டு நீ எங்கே போன டி.. இந்த சந்தோஷத்தைப் பகிர்ந்துக்கக் கூட எனக்கு யாருமே இல்லையே.. இப்பவே உன்னைக் கட்டிப்பிடிச்சு இந்த விஷயத்தை சொல்லணும் போல இருக்கே என நினைத்தவன் மனதிற்கு அப்போது தான் புரிந்தது என் தேவை அவள் மட்டும் தான் என்று.. இது உடலுக்காக நடத்தப்படும் தேடல் அல்ல உள்ளத்துக்காக நடத்தப்படும் தேடல் என்று… என் தியாவை நான் காதலிப்பது ஏற்கெனவே என்னால் அறியப்பட்ட ஒன்று தான்.. ஆனால் அவள் இல்லாமல் நான் இல்லை என்பது இப்போது தான் அறியப்பட்ட ஒன்று…

வேகமாக உள்ளேச் சென்று தியாவோடு அவன் இருந்த அறையைப் பார்க்கும் போது ஏதோவொன்று அவன் மனதை பிசைந்தது.. அவளது உருவங்கள் அங்கே நிழலாடுவதுப் போல் ஒரூ பிரம்மை.. கட்டிலில் கிடந்த அவளது ஒற்றை முடியை பத்திரமாய் எடுத்து வைத்து அவள் நினைவு வரும் போது எல்லாம் அதை எடுத்துப் பார்த்துக் கொண்டு இருந்தான்….

அவளை எந்த உறவின் பெயரை சொல்லி தடுப்பது என  தெரியாமல் அவளைத் தடுக்க வழியற்று நிர்கதியாய் நின்றதை அடியோடு வெறுத்தான்.. நான் தானே சொன்னேன் கல்யாணம் வேண்டாம்னு… அப்புறம் எப்படி அவள் என் கூடவே இருக்கணும்னு நான் நினைக்கிறேன்..  இது என்ன பைத்தியக்காரத்தனமா யோசிச்சுட்டு இருக்கேன்..அவள் கூட பேசுனா இந்த மனசு கொஞ்சம் அமைதியாகிடும் என நினைத்து போன் செய்ய அவளது மொபைலோ ஸ்விட்ச்ட் ஆப் என வந்தது..
அதில் கடுப்பானவன் அங்கே இருந்த எல்லா பொருட்களையும் போட்டு உடைத்தான்.. அதில் பட்டு அவன் கைகளில் ரத்தம் வழிய தனக்கு ஏதாவது ஒன்று என்றால் துடித்துப் போகும் தியாவின் நினைவு வந்தது…

ஐயோ இந்த ஒரு சில நாள் பிரிவே இப்படி நரகமா இருக்கே… இது தெரிஞ்சு இருந்தா நான் என் தியாவா போகவே விட்டு இருக்க மாட்டனே.. என் தியா எனக்கு வேணும் என அவன் மனது சொல்ல விருட்டென்று எழுந்து அமர்ந்தான்..

இல்லை மாட்டேன்.. தியா அவளா விரும்பி தான் இங்கே இருந்து போனா.. அவளுக்கு அங்கே ஒரு நல்ல வாழ்க்கை காத்துக்கிட்டு இருக்கும் போது அதை நான் கெடுத்துடக்கூடாது.. அவள் என்னோட இல்லைனா என்ன அவள் நினைவோடவே வாழ்ந்துட்டு போறனே…. அவள் எனக்கு வேணும்னு நான் சுயநலமா யோசிக்க மாட்டேன்.. அவள் எங்கே நான் ப்ளாக்மெயில் பண்ணிட போறனோனு நினைச்சு தான் அவசர அவசரமா சொல்லிட்டு என்னை விட்டு போனா போல… தியா உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லைனா கண்டிப்பா உன்னை பிடிச்சு வெச்சு கஷ்டப்படுத்த மாட்டேன் டா.. உன் சந்தோஷம் எனக்கு போதும்” என அப்போதைக்கு அவன் மனதை சமாதானப்படுத்திக் கொண்டான்..

காலையில் எழுந்துக் கொள்ளும் போது எல்லாம் தியா காப்பி என தன்னை மறந்து உளறிக் கொட்டினான்… அந்த வீட்டில் அவள் விட்டுப் போனவற்றை இவன் பார்த்துக்
கொண்டான்..

ஆசையாய் அவளால் வளர்க்கப்பட்ட சப்பாத்திக்கள்ளி செடியைப் பக்கத்தில் இருந்து மணிக் கணக்காய் ரசித்தான்.. தினமும் செல்லாவுக்கு அதாவது அவள் வளர்த்த கரப்பான் பூச்சிக்கு இவன் தான் உணவு வைத்தான்… அவர்கள் ஒன்றாய் தங்கி இருந்த அறையிலே அவளோடு உறங்குவதுப் போல நினைத்துக் கொண்டு உறங்கினான்…

நாளுக்கு நாள் அவனது காதல் வளர்ந்து வளர்ந்து அவன் இதயத்தை முட்டி நின்றது… ஒரு வேளை என் தியாவும் இதே நிலைமயில் தான் இருப்பாளோ??.. நான் தானே அவளைக் கல்யாணம் கூடாது என சொல்லிக் கொண்டே அவளை காயப்படுத்திக் கொண்டு இருந்தான்.. அவள் என் மீது அளவுக் கடந்த அன்பு வைத்து இருந்தாளே அதை மறந்து இன்னொரு கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்கிறவளா என் மந்தி.. இல்லை இல்லை.. அவள் கடைசியாய் மாறினாளே.. தன் உரிமையை நிலை நாட்ட விரும்பினாளே.. நான் தானே காயப்படுத்தினேன்.. ஒரு வேளை அந்த காயத்தால் தான் என்னிடம் எதுவும் சொல்ல முடியாமல் விலகி விட்டாளோ?? அவள் கண்டிப்பாய் இந்த திருமண ஏற்பாட்டை நிறுத்தி இருப்பாள்..” என்று யோசித்தவன் ஆர்த்தியை அழைத்து அவளைப் பற்றி விசாரிக்க அவள் தியாவிற்கு கல்யாணம் என சொல்ல அதைக்  கேட்டு இவன் இதயம் மீண்டும் உடைந்து விட்டது… என் தியாவை நான் இழந்துட்டேன் என வாய்விட்டு புலம்ப ஆரம்பித்தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!