இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 7 

‘நீ ஏண்டா இப்படிக் கோவப்படுற, உனக்குதான் ஒரு பொண்ணை நிச்சயம் பண்ணியாச்சே அப்புறம் ஏன் யாரோ ஒரு பொண்ணு மேலே கோபப்படுற?’ எப்பொழுதும் போல் அவனது மனம் கேள்வியெழுப்ப, யோசனையானான் ஸ்ரீ.

எப்பொழுதும் மனதின் குரலை அலட்சியபடுத்தும் ஸ்ரீயால் இப்பொழுது அப்படி இருக்க முடியவில்லை.

‘தான் உண்மையாகவே அவளைக் காதலிக்கிறோமா?’ என்ற யோசனைக்கு வந்திருந்தான்.

அதிலும், ‘அந்தப் பெண் கோதாவரியோ? தனலக்ஷ்மியோ?’ பேர் நியாபகம் இல்லை அந்தப் பெண்ணைப் பார்த்த பிறகு அவன் மனம் ஒரு நிலையில் இல்லை.

தனக்கு நிச்சயம் செய்திருக்கும் பெண் கீர்த்தனாவின் பெயரைக் கூட நியாபகம் வைக்காதவன் அவளுடனான திருமணதிற்குச் சம்மதம் கூறியிருக்கிறான்.

‘வைஷ்ணவியை நீ காதலிக்கிறாய்.’ என்று மனம் அடித்துக் கூறினாலும் அதில் அவனுக்குக் கொஞ்சமும் உடன்பாடில்லை.

அவளை மிகவும் பிடிக்கும், அவளிடம் பேச கொள்ளை ஆசை இருந்தாலும் அவனது தகுதி இடம் கொடுக்கவில்லை.

இப்படியாகப் பலவாறான யோசனையுடன் கோவில் திண்ணையில் அமர்ந்திருக்க,

“வாழ்த்துக்கள் பாஸ்” என்ற குரலில் டக்கென்று நிமிர்ந்துப் பார்த்தான் ஸ்ரீ.

அவனின் முன்னே ஆகாய வண்ண புடவை அணிந்து நின்றிருந்தாள் வைஷ்ணவி.

அவளின் வாழ்த்தை கவனிக்காதவன் போல், அவளைப் பார்த்தான். அழகான புன்னகை முகம், பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு.

நெற்றியில் ஆகாய வண்ண சின்னப் பொட்டு அதற்க்கு மேல் சின்னக் கீற்றாய் சந்தனம். கழுத்தின் வழியாய் மல்லிகை பூ முன்னே தொங்கியது. இப்பொழுதான் வைத்திருப்பாள் போல, அவளைப் போலவே கொஞ்சமாய்ச் சிரித்திருந்தது. மேலும் கண்கள் அப்படியே கீழே செல்ல,

அவனது பார்வையில் எப்பொழுதும் போல் மனம் படபடக்க,

“பாஸ்… வாழ்த்துக்கள்” என்றாள் தயக்கமாய்,

“எதுக்கு?” என்றான்.

“உங்க கல்யாணத்துக்கு.”

‘சரி’ என்பது போல் தலை அசைத்து விட்டு கடந்துவிட்டான் ஸ்ரீ.

‘திருமணம்’ என்ற பேச்சு மனதில் வர அப்படியே நடையைக் கட்டிவிட்டான். அவளிடம் பேச வந்தது எல்லாம் அடி மனதில் செல்ல, அவளிடம் நின்று பேசும் உரிமை தனக்கு இல்லை என்பதைப் போல் தோன்ற கிளம்பிவிட்டான்.

‘வேலைக்கு எத்தனை மணிக்கு வரவேண்டும் என்று ஸ்ரீயிடம் கேட்டுக் கொள்’ அவளிடம் கூறி சிவா சென்றுவிட்டான்.

‘திருமணதிற்க்கு வாழ்த்துக் கூறி அப்படியே அவனிடம் கேட்கலாம் என்றால் பெரிய இவன் மாதிரி கிளம்பிட்டான்.’

‘உனக்கு இவ்ளோ கொழுப்பு இருக்கும் போது எனக்கும் இருக்கும் பே’ என்பதாய் அவனைப் பார்த்து நின்றாள் வைஷ்ணவி.

பாவம் அவனின் மனப்போராட்டம் இவளுக்கு எங்கே தெரியபோகிறது?

***

எப்பொழுதும் போல் காலை எட்டு மணிக்கு வயலுக்குச் சென்றவன் பத்து மணிக்கு போல் வீட்டுக்கு வந்தான் ஸ்ரீ.

‘நாளை காலை வேலைக்குப் பெண் வருகிறாள் கொஞ்சம் வந்து கணக்கை சொல்லு ஸ்ரீ’ என்பதாய் ஸ்ரீகரண் நேற்றே கூறியிருந்தார்.

வீட்டுக்கு வந்து தாத்தாவைப் பார்க்க, “ஷிவானி கூட அந்தப் பொண்ணு பேசிக்கிட்டு இருக்கு” என்றார்.

‘ஷிவானி கூடப் பேசிட்டு இருக்காளா? யார் அது ஷிவானிக்கு தெரிந்த பொண்ணா?’ யோசனையுடன் அங்குச் சிஸ்டம் இருக்கும் அறைக்குச் சொல்ல,

“குட் மார்னிங் பாஸ்” பளிச்சென்று கூறினாள் வைஷ்ணவி.

சத்தியமாக அங்கு அவன் வைஷ்ணவியை எதிர்பார்க்கவில்லை.

‘இவளா! இவளா இங்க வேலைக்கு வந்திருக்கா? செந்தில் அங்கிள் இவளையா இங்க அனுப்பிருக்காங்க?’ அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அவனுக்கு.

சில நேரம் சில கணக்குகளைச் செந்தில் கேட்கும் பொழுது சிவா இங்கு இல்லை என்றால் இவன்தான் செல்வதுண்டு. அங்கு இவளைக் கண்டாலும் தெரிந்தது போல் காட்டிக் கொள்ளமாட்டான் ஸ்ரீ.

இப்பொழுது ஒரே வீட்டில் இவனுடன் அவள்!

“ண்ணா, என்ன அப்படியே நிக்குற, வைஷு ரொம்ப ஸ்வீட் தெரியுமா? இவ கிட்ட பேசினா பேசிட்டே இருக்கலாம் போல இருக்கு… ஆனா பாரு நாளையில் இருந்து எனக்குக் காலேஜ் ஓபன் ஆகுது. நான் எப்படி இவ கிட்ட பேசுறது,

நீ இவளை எப்பவும் நான் வந்த பிறகுதான் வீட்டுக்கு விடணும். அதுக்கு முன்ன விடவே கூடாது” கண்டிஷன் போட,

‘சுத்தம்… உன் நிலமை இப்படியாடா இருக்கணும் ஸ்ரீ. இவ கூடப் பேசினா மட்டும் இல்ல ஷிவானி இவளே ஸ்வீட் தான்’ டேஸ்ட் பார்த்தது போல் மனம் இப்பொழுதே புலம்ப ஆரம்பித்தது.

“நீ எதுக்கும் கவலைப் படாத ஷிவானி, பாஸ் விரட்டினாலும் நான் போகமாட்டேன்” என்றாள் கிண்டலுடன்.

“சோ ஸ்வீட் நீ” கன்னத்தைக் கிள்ள,

இச்செயலை பார்த்துக் கொண்டு ஸ்ரீயால் நிற்க முடியவில்லை.

“நான் கொஞ்சம் வயல் வரைக்கும் போயிட்டு வாரேன், நீ கணக்கு நோட் எடுத்து குடு இவங்க டைப் பண்ணட்டும்” வேண்டும் என்றே விலகி சென்றான் ஸ்ரீ.

வைஷ்ணவியைச் சிறிது தவிர்க்க நினைத்தான் ஸ்ரீ. நேற்று அவளைப் புடவையில் பார்த்ததில் இருந்து கொஞ்சமாய்த் தடுமாறிவிட்டான்.

நிச்சயம் செய்த பெண்ணுடன் இனிய கனவில் மிதக்க வேண்டியவன், இவளுடன் கனவில் மிதந்தான்.

அது அவனுக்கே மிகவும் தவறு என்று தோன்றினாலும் மனதில் இருக்கும் அவளை விரட்ட வழியில்லாமல் தவித்தான்.

வைஷ்ணவியைப் போல் காதலில் சுத்தமாக நம்பிக்கை இல்லை அவனுக்கு, ஆனால் இப்பொழுது தன்னிடம் தோன்றும் உணர்வு, அவளை மறக்க முடியாமல் தவிக்கும் தன் நிலை, அவளின் கொலுசு சத்தத்திற்காய் ஏங்கும் தன் இதயம் இப்படி எல்லாம் எண்ணினால் அவள் மேல் தனக்குக் காதல்தான் என்று நன்கு தெரிகிறது. ஆனாலும் மிகவும் தடுமாறினான்.

அங்கு ஒரு பெண்ணுடன் நிச்சயம், இங்கு வீட்டில் காதலி நினைக்கவே அவனுக்கே வெறுப்பாக இருக்க, முயன்று தன்னைத் தேற்றினான்.

‘அவளை நினைக்காதே… நினைக்காதே’ மனதில் உருபோட்டுக் கொண்டே இருந்தான். முடிந்த அளவு அவள் முன் வராமல் இருக்க முயற்சித்தான். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றான்.

ஓரளவு மனத்தைத் திடப்படுத்திக் கொண்டான் ஸ்ரீ. இவ்வாறாக அவன் வைஷ்ணவியை நேரில் பார்க்க ஒருவாரம் எடுத்துக் கொண்டான்.

அந்த நாட்களில் ஓரளவு வைஷ்ணவியும் தன்னை வேலையில் பொருத்திக் கொண்டாள்.

எந்த விதமான சலனமும் இல்லாமல் அவளை நேருக்கு நேர் பார்த்து அவள் செய்ய வேண்டிய வேலையைக் கூறினான். அது மட்டும் இல்லாமல் எப்பொழுதும் அவளை நோக்கி வீசும் அந்தப் பார்வையைக் கூட மாற்றிக் கொண்டான். இப்படியாக அவனே அவனை மாற்றிக் கொண்டான்.

ஒரு வாரம் பக்கத்தில் இருந்து வேலையைக் கற்றுக் கொடுத்தான் ஸ்ரீ. அவன் இப்படிக் கணக்கு வழக்கு பார்ப்பான் என்று ஸ்ரீ கரண் அன்றுதான் நேரில் பார்த்தார்.

எல்லாம் விரல் நுனியில் வைத்திருந்தான் ஸ்ரீ.

அவனிடம் வேலை கற்கவே அவளுக்குப் பிடித்திருந்தது. அத்தனை அழகாகப் புரியும்படி கூறினான். ஏற்கனவே அவளுக்குத் தெரிந்த வேலைதான் இருந்தாலும் அவனிடம் புதிதாகக் கற்பது போல் கற்றுக் கொண்டாள்.

இந்த ஒரு வாரமும் அனாவசிய பேச்சுகள் என்று எதுவும் இல்லாமல் பொழுது நன்றாகவே சென்றது.

மாலையில் கொஞ்சம் நேரம் மட்டும் ஷிவானியுடன் அமர்ந்து பேசுவாள்.

அந்த நேரம் பெரும்பாலும் ஸ்ரீ கரண் தூரத்தில் அமர்ந்திருந்து அவர்களையே பார்த்திருப்பார்.

‘வசதி, வாய்ப்பு இல்லையென்றாலும் பொண்ணை மாறன் நல்லா வளத்திருக்கிறான்’ என்பதாய் எண்ணிக் கொண்டார் ஸ்ரீ கரண்.

***

தங்கள் வீட்டின் முன் காரில் வந்து இறங்கியவர்களைப் பார்த்து இனிமையாக அதிர்ந்தனர் வைஷ்ணவி வீட்டினர்.

விக்ரம்தான் அவன் வீட்டினரை அழைத்து வந்திருந்தான்.

“வாங்க… வாங்க… எப்படி இருக்கீங்க சார்” விக்ரமின் அப்பா, சிவராமனை பார்த்து கேட்டார் கோதைநாயகி.

வைஷ்ணவிக்குப் படிப்பில் உதவிகள் செய்திருப்பதால் அவரை நன்கு தெரியும்.

“நாங்க ரொம்ப நல்லா இருக்கோம்… நீங்க எப்படி இருக்கீங்க?”

“ரொம்ப நல்லா இருக்கோம் சார், உட்காருங்க குடிக்க ஏதாவது எடுத்துட்டு வாரேன்” கிச்சன் பக்கமாய் நகர,

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் உட்காருங்க, உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்”

யோசனையாக அவரையே பார்த்திருக்க,

“இது என்னோட மனைவி லக்ஷ்மி, இது என்னோட ஒரே ஒரு பையன் விக்ரம். இன்னும் இருபது நாள்ல லண்டன் போறான்.”

அதற்குள் ஸ்கூல் சென்றிருந்த வைஷாலியும், வசந்தும் வந்திருக்க,

இருவரையும் அவர்களுக்கு அறிமுகபடுத்தினார் கோதைநாயகி.

இருவருக்கும் அவரை நன்கு தெரியுமாதலால் ஒரு வணக்கம் வைத்துக் கொண்டனர்.

“போன மாசமே வரணும்னு இருந்தோம், பையனுக்கு விசா விஷயமா கொஞ்சம் அலையவேண்டி இருந்தது” விஷயம் கூறாமல் மேலும் பேச,

‘இவர் என்னதான் சொல்ல வாரார்?’ என்பதாய் கோதைநாயகி அவரையே பார்த்திருந்தார்.

“வந்த விஷயத்தைச் சீக்கிரம் சொல்லுங்களேன்” என்பதாய் லக்ஷ்மி கூற,

விக்ரமும் அதையேதான் கண்களில் வெளிபடுத்தினான்.

லஷ்மியின் பார்வை ஆராய்ச்சியாய் அவர்களை வட்டமிட்டது.

“உங்க பொண்ணும், என் பையனும் ஒரே காலேஜ்லதான் படிச்சாங்க. என் பையனுக்கு உங்க வைஷ்ணவியை ரொம்பப் பிடிச்சு போயிட்டு, அதுதான் உங்ககிட்ட கல்யாணத்தை எப்போ வாசிக்கலாம்னு கேட்க வந்திருக்கோம்”

வந்திருந்தவர்களை அமைதியாகப் பார்த்திருந்தார் கோதைநாயகி.

“உடனே நீங்க பதில் சொல்லவேண்டாம். என் பையன் ரெண்டு வருஷம் லண்டன் போயிட்டு வந்த பிறகு கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம். இரண்டு வருஷம் உங்களுக்கு டைம் இருக்கு, நல்லா யோசிச்சுப் பதில் சொன்னா போதும், நீங்க மாறன் கிட்ட பேசி ஒரு முடிவு சொல்லுங்க, நானும் அவங்களைத் தோட்டதுல பார்த்து பேசுறேன். ஒரு நல்ல பதிலா சொல்லுவீங்கன்னு எதிர்பார்க்கிறேன்” என்பதாய் அவர்கள கிளம்ப,

அவரை முறைத்தபடி பின்னால் சென்றான் விக்ரம்.

“ப்பா… ஏன் இரண்டு வருஷம் கழிச்சுன்னு சொன்னீங்க, கல்யாணத்தை முடிச்சுட்டே நான் அங்க கிளம்பிருப்பேன் தானே?”

“நீ கொஞ்சம் சும்மா இருடா” முறைத்த லக்ஷ்மி காரில் ஏற, அவர்களோடு பின்னாடியே ஏறி அமர்ந்தான் விக்ரம்.

“அம்மா, அக்காவை இவங்க வீட்டுலையா கல்யாணம் பண்ணி குடுக்கப் போற?” வைஷாலிதான் ஆரம்பித்தாள்.

“ஏண்டி?”

“அந்தம்மா பார்வையே சரியில்லை, என்னமோ பிச்சைக்காரங்களைப் பார்க்குற போலப் பாக்குது, ஆளும் அது மூஞ்சியும், ஏன்மா இந்த மாதிரி ஆளுங்களை நீ உள்ளே விடுற?” முறைக்க,

“வர வர உனக்கு ரொம்ப வாய் வைஷாலி” கோதை முறைக்க,

“ம்மா, ஏன் அவளை முறைக்குற, அந்தப் பொம்பளை நம்மளை பார்த்ததே சரியில்லை”

“ஆமாடா, உனக்குப் பெருசா தெரிஞ்சு போச்சு வாயை மூடிட்டு அங்கிட்டு போடா” முறைத்தார்.

ஆனாலும் லக்ஷ்மி பார்வை அவரை உறுத்தத்தான் செய்தது. அப்படியே யோசனையாக அமர்ந்திருக்க,

“யம்மா, யோசனைக்குப் போயிட்ட அப்படியே நல்ல விதமா யோசி, அந்தம்மா பார்வையை நல்லா நியாபகம் வச்சி யோசி, அப்படியும் அந்தம்மா பார்வை உனக்கு மறந்துட்டுனா சொல்லு நான் வேணா முழிச்சு காட்டுறேன்?” என,

“போ, போய்ப் படிக்குற வேலையைப் பாருடி” கோதை ஒரு அதட்டல் போட,

“நான் சொல்லுறதை நீ எப்போதான் கேட்ட, அக்கா வரட்டும் சொல்லுறேன்”

“பேசாம இரு வைஷாலி, அக்காகிட்ட எதுவும் சொல்லவேண்டாம், இந்த இடம் சரி வரும் போலத் தெரியல, அப்பா வந்த பிறகு பேசிக்கலாம்”

“என்னதோ அக்காக்கு நல்லது பண்ணுனா சரி” என்பதாய் அவள் பார்க்க,

“என்னடி பார்வை” முறைக்க,

“நான் படிக்கப் போறேன்மா” வசந்த்தையும் இழுத்துக் கொண்டு சென்றாள் வைஷாலி.

அப்படியே யோசனையாக அமர்ந்திருந்தார் கோதைநாயகி.

***

வைஷ்ணவி அங்கு வேலைக்குச் சேர்ந்து கிட்டதட்ட ஒரு மாதம் கடந்து விட்டிருந்தது.

மனதை கட்டுபடுத்த எண்ணினாலும், அவனால் சில சமயம் முடிவதில்லை, அவனை அறியாமல் அவளைச் சுற்றி வரும் அவன் கண்கள்.

ஸ்ரீ கரண் அறைக்கும், அவள் அமர்ந்திருந்து வேலைப் பார்த்துக் கொண்டிருக்கும் அறைக்கும் பல முறை நடந்து செல்வாள், அப்பொழுதெல்லாம் அந்த ஹால் ஷோபாவில் அமர்ந்திருந்து கண்களை மூடி அவளின் கொலுசின் ஓசையை ரசிப்பான்.

அவனின் இந்த வித்தியாசமான செயலை யோசனையாகப் பார்த்திருப்பாள் ஷிவானி.

இன்னும் அவனது எண்ணம் அவளுக்குச் சரியாகப் பிடிபடவில்லை.

அவள் பாராத பொழுது அவளையே பார்த்திருப்பான். காதல்தான் என்று அறிந்தாலும் அவளிடம் கூற முயற்சிக்கவில்லை. தான் காதல் சொல்லும் தகுதியில் அவள் இல்லை என்பதான எண்ணம் அவன் மனதில் எழுந்தது.

இதற்கிடையில் கீர்த்தனா வேறு இருமுறை அவனை அழைத்துப் பேச முயற்சிக்க, வேலை இருப்பதாய் தட்டிக் கழித்தான்.

இப்பொழுதெல்லாம் அவனது பார்வை வித்தியாசத்தை வைஷ்ணவியே உணர்ந்துக் கொண்டாள் .

‘ஏன் இவன் இப்படிப் பார்க்கிறான்?’ என்ற யோசனையுடன் அவனையே சில நேரம் பார்த்திருப்பாள் வைஷ்ணவி.

அவளின் பார்வையை அவன் உணர்ந்தான். அதிலும் அவளது பார்வை எத்தகையது என்பதையும் உணர்ந்தான், ஆனாலும் அலட்டிக் கொள்ளவில்லை.

எல்லாம் நல்லபடியாகச் சென்று கொண்டிருபதாக அவன் எண்ணிக் கொண்டிருக்க, அவளிடம் தான் அதிக உரிமை எடுக்கிறோம் என்று காட்டும் நாளும் வந்தது.

அன்று வயலில் வைத்து, விக்ரம் வீட்டினார் வைஷ்ணவியைப் பெண் கேட்டு வந்த விஷயத்தை ஸ்ரீயிடம் கூறிக் கொண்டிருந்தார் மாறன்.

அவன் நல்லவனா, அவன் குணம் இப்படியான விஷயம் கேட்டிருக்க, மனதில் அனல் பறந்தது,

ஆனாலும் மறைத்துக் கொண்டு அவன் தன்னிடம் பேசியதையும், அதை அவன் மறந்தாகவும் கூற பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை மாறன்.

இப்படியாக அவரிடம் பேசி வீட்டுக்கு வர, ஷிவாவிடம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி.

அதிலும் அவன் ஏதோ சொல்ல, இவள் சிரிக்க, அவன் இவள் தலையில் செல்லமாய் அடிக்க,

காண, காண அவனுக்கு வயிறு எரிந்தது.

அதென்னவோ அவள் தன்னிடம் மட்டுமே இப்படிப் பேச வேண்டும் எண்ணம் மனதில் வர,

“சிவா, மில்லுக்குப் போகலியா?’

“இதோ கிளம்பிட்டேன் ஸ்ரீ… ஏதோ கணக்கு புரியலன்னு கால் பண்ணுனா அதுதான் சொல்ல வந்தேன்” என்றவன் இருவரிடமும் கூறி கிளம்பி விட்டான்.

அவன் வெளியே செல்லவும் ஷிவானி வீட்டின் உள்ளே நுழைந்தாள்.

ஸ்ரீ கரண் அப்பொழுதுதான் ஸ்ரீயின் திருமண விஷயமாய் யாரையோ பார்க்க செல்வதாய்க் கிளம்பி சென்றார்.

வீட்டில் சமையல் செய்யும் ஆயா மட்டுமே இருந்தார்.

வைஷ்ணவி முன்னே வந்தவன் அவளை உறுத்து விழித்தான்.

அவனைக் கண்டு முதல் முறையாகப் பயம் வர, அவனை ஏறிட்டுப் பார்த்தாள் வைஷ்ணவி.

எப்பொழுதும் அவனது பார்வையில் ஒரு படபடப்பு வரும், ஆனால் பயம் இதுவரை வந்ததில்லை. இன்று வந்தது.

“வேலைக்கு வந்தமா, வேலையைப் பார்த்தமான்னு இருக்கணும் அதென்ன ஆம்பிள்ள கிட்ட இப்படிச் சிரிச்சு சிரிச்சு பேசுற, உன் பின்னாடி ரெண்டு பேர் சுத்துறது பத்தாதா? மூணாவதும் ஒருத்தன் சுத்தனுமா?”

அவளின் புடவையைக் காட்டி, “இப்படி டிரஸ் பண்ணிட்டு வந்தா எல்லாரும் மயங்கி உன் பின்னாடி வரணும்னு எண்ணமா?” என்றான் என்ன பேசுகிறோம் என்று அறியாமலே,

புடவையில் அவள் அவனை அளவுக்கு அதிகமாகவே சலனபடுத்துகிறாள் என்ற எண்ணத்தில்தான் அவனுக்கு வார்த்தைகள் வந்து விழுந்தது.

அவனது வார்த்தைகள் அவளை காயப்படுத்தும் என்பது அவனுக்கு தெரியவேயில்லை.

‘அப்போ நான் புடவை கட்டி ஆள் மயக்குறேனா?’ என்ற எண்ணம் மனதில் வர, என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என அறியாமலே அவனை ஓங்கி அறிந்திருந்தாள் வைஷ்ணவி.

“உன்கிட்ட வேலை பார்த்தா, என்ன வேணாலும் பேசுவியா நீ? நீ பேசுறதை எல்லாம் கேட்டுட்டு சும்மா இருப்பேன்னு என்னை நினைச்சியா? அவ்வளவு இளக்காரமா போய்ட்டோமா நாங்க,

நீ ஒன்னும் எனக்குச் சும்மா சம்பளம் தரல, நீ பேசுறதை எல்லாம் கை கட்டிட்டு வாங்கிட்டு நிற்க, நான் வேலை செய்யுறேன் சம்பளம் தார, என்னமோ சும்மா அள்ளி வீசுறது மாதிரி பேசுற,

உன் வேலையும் வேண்டாம், உன் பேச்சும் நான் கேட்க வேண்டாம் போடா” என்பதாய் அங்கிருந்த பேப்பரை அவனை நோக்கி வீசி வெளியே சென்றாள் வைஷ்ணவி.

“ஏய்” என்ற உறுமலுடன் செல்லும் அவளையே பார்த்திருந்தான் ஸ்ரீ.

‘அவ அடிச்சு, இவ்ளோ பேசியும் இந்தண்ணன் ஏன் இப்படி நிக்குது?’ எனபதாய் அவனையே பார்த்திருந்தாள் ஷிவானி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!