இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் 8

இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை வைஷ்ணவி. அவளைவிடப் பல மடங்கு உயரத்தில் இருக்கும் ஸ்ரீயை கை நீட்டி அடித்ததை அவளால் இன்னும் நம்ப முடியவில்லை.

ஆனால் அறைந்ததில் உண்டான கை எரிச்சல் இன்னும் மறையவில்லை!

“என்ன வைஷு சீக்கிரமே வந்துட்ட?” தாயின் கேள்விக்கு,

“தலைவலிம்மா” என்றபடி கண்களில் டவலை கட்டி அப்படியே படுத்துவிட்டாள். கண்கள் கொஞ்சமாய்க் கலங்கியது.

‘உனக்குக் கை ரொம்ப நீளம் வைஷு’ தன்னைத்தானே திட்டியபடியே படுத்திருந்தாள்.

அவனை அடித்தது தவறு என்று தோன்றியது வைஷ்ணவிக்கு, ஆனால் அவன் பேசியதுக்கு இந்த ஒரு அடி போதாது என்றும் தோன்றியது.

‘இனி அங்குப் போகவே கூடாது’ முடிவெடுத்தவள் கண்களை மூடி தூங்க முற்பட்டாள்.

கொஞ்ச நேரத்தில் அவளைத் தேடி வந்தாள் ஷிவானி.

வைஷ்ணவி வீட்டின் முன் வந்து நின்று வெகுநேரம் வீட்டையே பார்த்திருந்தாள்.

‘யாராவது வெளியில் வருகிறார்களா?; என வெகுநேரம் பார்த்திருந்தாள்.

‘யாரும் வருவது போல் தெரியவில்லை?’ எண்ணியவள் அவர்களின் வீட்டை தட்ட எண்ணினாள்.

“வைஷு… வைஷு”

கதவைத் திறந்த கோதைநாயகி, “உள்ள வா ஷிவானி” அவளை உள்ளே அழைத்துச் சென்றார்.

“வைஷு எங்கே?”

“தலைவலிக்குதுன்னு உள்ளே படுத்திருக்கா ஷிவானி, என்னாச்சு ஏதாவது பிரச்சனையா?”

“ஐயோ அப்படிலாம் இல்ல, தலைவலிக்குதுன்னு வீட்டுக்கு வந்துட்டா, அதுதான் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்”

“வந்ததுல இருந்து தலைவலிக்குதுன்னுதான் படுத்திருக்கா போய்ப் பாரு. நான் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வாரேன்” அவளிடம் கூறி சமயலறைக்குச் சென்றார் கோதைநாயகி.

“வைஷு” அழைத்தப்படி அறைக்குள் நுழைய,

“வா ஷிவானி” கண்களில் கட்டியிருந்த டவலை அவிழ்க்க, உள்ளே நுழைந்தாள் ஷிவானி.

அவளையே பார்த்தபடி ஷிவானி நிற்க,

“என்னாச்சு?”

“வீட்டுக்கு வந்தவங்களை உக்கார சொல்லமாட்டியா வைஷு”

“சாரி ஷிவானி… உக்காரு” என்றவள், “என்ன ஷிவானி?” என,

“அது வந்து… சாரி வைஷு. ஸ்ரீண்ணா வேணும்னே பேசல, அது ஏதோ ஒரு கோவத்துல இருந்திருக்கும் போல அதுதான் உன்னைத் திட்டிட்டாங்க, அதுக்காக நீ வேலைக்கு வரமாட்டேன்னு ஏன் சொன்ன?”

“எனக்குப் பிடிக்கல ஷிவானி”

“ஏன்… ஏன் பிடிக்கல?”

“நான் மறுபடியும் அங்க வந்தா உங்கண்ணன் சொன்னது எல்லாம் உண்மைன்னு ஆகிடும் ஷிவானி, நீயும் அப்படிதான் நினைக்குற போல?”

“ஏய்! என்ன பேசுற நீ” முறைக்க,

“பின்ன உங்கண்ணன் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவான், நான் கேட்டுட்டு தலையாட்டனுமா?”

“நீ எங்க தலையாட்டிட்டு வந்த, பளிச்சுன்னு ஒண்ணு குடுத்துட்டுதான வந்த, என்னமோ சும்மா வந்த மாதிரி பேசுற?”

“சரி விடு எதுக்கு வந்த?” ஸ்ரீயை அடித்தது மீண்டும் குற்ற உணர்ச்சியை உண்டாக்கியது வைஷ்ணவிக்கு.

“நடந்ததை எல்லாம் மறந்திடு வைஷு. அவன் பண்ணுனது சரின்னு நான் சொல்லமாட்டேன். அவன் பேசினது ரொம்பத் தப்புதான். ஆனா நீயும் அவனைக் கை நீட்டி அடிச்சிருக்கக் கூடாது,

என் தாத்தா எதுக்கு வரலன்னு கேட்டா என்ன சொல்லுவா? நடந்ததை உன்னால சொல்லமுடியுமா?

ஒருவேளை என் அண்ணனே உன்னைத் திருப்பி அடிச்சிருந்தா என்ன ஆகிருக்கும்?

அவன் பண்ணினது தப்புன்னு தெரிஞ்சுதான் உன்னை ஏதும் சொல்லாம இருந்தான்.

இதை நினைச்சுட்டே இருக்காதா வைஷு, எப்பவும் போல வேலைக்கு வா, எங்கண்ணன் உன்னை ஒன்னும் சொல்லமாட்டான். நான் உன்னைப் பாத்துகிறேன் நீ வா வைஷு”

“என்னால வர முடியாது ஷிவானி”

“எங்க வர முடியாதுன்னு சொல்லுற வைஷ்ணவி” காபியுடன் வந்த கோதைநாயகி கேட்க,

“கோவிலுக்குக் கூப்டுறாம்மா அதுதான் வரலன்னு சொல்லுறேன்” சமாளிக்க,

“இந்தா இதைக் குடிங்க” என வைஷு கையிலும், ஷிவானி கையிலும் கொடுத்து விலக,

“நாளைக்குக் காலையில் நீ வேலைக்கு வார அவ்ளோதான்” என்றபடி கிளம்பி சென்றாள் ஷிவானி.

“நீ சொன்னா நான் வந்திருவேனா? வரமுடியாது போ” இங்கிருந்து கத்தினாள் வைஷு.

***

‘என்னா அடிடா’ என்றபடி கண்ணாடியை பார்த்து அவள் அடித்த இடத்தைப் பார்த்திருந்தான் ஸ்ரீ.

இவன் கை வைக்க, லைட்டா தடித்த உணர்வு, “பலமாதான் அடிச்சிட்டாளோ?” வாய்விட்டுக் கூறிக் கொண்டான்.

“நல்ல வேளை ஸ்ரீ, நீ கருப்பா போயிட்டா, இந்த வெள்ளைக்காரன் மாதிரி வெள்ளை கலரா இருந்தன்னு வை, என்னைப் பார், என் அடியை பார்னு உன் கன்னமே காட்டி குடுத்திருக்கும்”

“இந்த ஆண் சிங்கத்துக்கு ஏத்த பெண் சிங்கம் இந்த வைஷு சிங்கம்தான்” அவனே அவனுக்குக் கூறி கட்டிலில் படுத்துக் கொள்ள,

“உனக்கு ஏத்த சிங்கமா? அதுதான் அவளை அப்படிப் பேசினியா? நீயா இருக்கப் போய் ஒரு அடியோடு நிறுத்தினா, இதேது வேற யாராவது இருந்தா என்ன ஆகிருக்கும் தெரியுமா? தூக்கி போட்டு மிதி மிதின்னு மிதிச்சிருப்பா?”

“என்னை நீ மிதிப்பியா ஜல்ஜல்?” அவன் ஃபோனில் வைத்திருந்த வைஷுவிடம் கேட்டுக் கொண்டிருந்தான் ஸ்ரீ.

சில நாட்களுக்கு முன், ஷிவானியிடம் பேசிக் கொண்டிருந்த வைஷ்ணவியை அவர்களுக்கே தெரியாமல் ஒரு போட்டோ எடுத்திருந்தான் ஸ்ரீ.

அந்தப் போட்டோவைப் பார்த்து பேசிக் கொண்டிருக்க,

“ண்ணா” அழைத்தபடி ஸ்ரீ அறைக்குள் ஷிவானி நுழைய,

டக்கென்று ஃபோனை மறைத்தவன், “சொல்லு ஷிவானி” என,

“உனக்கு என்னாச்சுண்ணா?” என்றாள் முதல் கேள்வியாய்.

“ஏன்… எனக்கு என்ன?” போட்டோவைப் பார்த்துவிட்டாளோ என்ற எண்ணத்தில் கேட்க,

“நான் அன்னைக்கு ஒருத்தன் கூட ஓடி போக இருக்கும் போதே என்னை நீ கோவமா திட்டல, ஆனா வைஷு மேல உனக்கு அப்படி என்ன கோபம்”

ஸ்ரீயுமே தான் அவளைக் கோபமாக அப்படித் திட்டுவோம் என்று எண்ணவே இல்லை. அவன் செய்தது தவறு என்று அவனுக்கே தெரியும் ஆனாலும் அவளிடம் மன்னிப்பு கேட்க மனம் வராமல் அவளை முறைத்து அறைக்குள் வந்து அமர்ந்து கொண்டான்.

யோசனையில் அமர்ந்துவிட்டவனைக் கண்டு, “எதுக்கு அவளைத் திட்டின?” என,

“கோவம் வந்திச்சி திட்டினேன்?” என்றான் உண்மையை ஒத்துக்கொண்டு,

“அப்படி உனக்கு என்ன கோவம்”

மௌனமாக அமர்ந்திருந்தான் ஸ்ரீ. எப்படி வெளியில் சொல்லுவான். ‘அவ என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுறா? அது எனக்குப் பிடிக்கல அதுதான் அப்படித் திட்டினேன்’ என்று கூறவா முடியும் அமைதியாக அமர்ந்துவிட்டான்.

“அவளைத் திட்ட நீ யாரு? அதுவும் ஒரு பொண்ணைப் பார்த்து மயக்குற அப்படி இப்படின்னு பேசுற, என்னை யாராவது அப்படிப் பேசுனா நீ பார்த்துட்டு இருப்பியா?”

“அதுதான் அவ அடிச்சிட்டாதானே பின்ன எதுக்கு மறுபடியும் அதையே பேசிட்டு இருக்க”

“நீ பண்ணுனது தப்புன்னு உனக்கே தெரியுது, அதுதான் அவ அடிச்சப்ப சிரிச்சிட்டு இருந்தியா?”

மற்ற நேரமாக இருந்திருந்தால் ஷிவானியை இவ்வளவு பேசவே விட்டிருக்கமாட்டான்.

அவனது இந்த அமைதியை அதிசயமாகப் பார்த்திருந்தே மீண்டும் அவனைத் திட்டினாள் ஷிவானி.

அவளுக்கு ஒரு விஷயம் தெரியவேண்டி இருந்தது. ‘இந்த அண்ணன் வைஷ்ணவியிடம் எதுவோ எதிர்பார்க்கிறான். என்னன்னுதான் தெரியல, அதுக்குக் கண்டிப்பா வைஷ்ணவி இங்க இருக்கணும்’ யோசித்துதான் வைஷ்ணவியை மீண்டும் அழைக்கச் சென்றாள்.

“அவ இனி வேலைக்கு வரமாட்டாளாம் சொல்லிட்டு போறா? தாத்தா கேட்டா என்ன சொல்ல போற நீ? அவளைத் திட்டினேன் அவ என்ன அடிச்சிட்டானு கொட்டடிக்கப் போறியா? ஆனாலும் நீ ரொம்ப மாறிட்ட”

வைஷ்ணவியிடம் என்ன கூறினாளோ அதையேதான் இவனிடமும் கூறினாள். இனி ஒருதரம் இப்படி நடக்கக் கூடாது என்று எண்ணிதான் இவனிடம் இவ்வளவு நேரம் அமர்ந்திருந்து பேசினாள் ஷிவானி.

‘பேசி முடிச்சிட்டதான கிளம்பு’ என்பதாய் பார்க்க, கிளம்பி விட்டாள் ஷிவானி.

மீண்டும் யோசனைக்குச் சென்றான் ஸ்ரீ.

‘நான் மாறிவிட்டேனா? இல்லை என்னை அவள் மாற்றிவிட்டாளா?

மீண்டும் ஒரு பலமான யோசனை.

அவனைப் பற்றியும்! அவளைப் பற்றியும்!

***

இன்று வீட்டில் வைஷ்ணவியைப் பார்த்ததும் அவளிடம் பேச ஆசை வந்தது. ஆனால், தானாகச் சென்று பேசினால் ஷிவானி ஏதாவது நினைத்து விடுவாளோ என்று அவளைக் காணாதவன் போல் நகர்ந்து சென்றான் ஸ்ரீ.

வைஷ்ணவி வருவாள் என்று சுத்தமாக நினைக்கவே இல்லை ஸ்ரீ. அவளது குணத்துக்கு வரவேமாட்டாள் என்றுதான் எண்ணினான்.

ஆனால் இன்று வரவும் மிகவும் ஆச்சரியமாய் இருந்தது.

வந்ததும் அவனைத்தான் பார்த்தாள் வைஷ்ணவி. அவனும் அவளைத்தான் பார்த்திருந்தான்.

அவளை அல்ல, அவளது கொலுசின் ஓசையை.

தயக்கமாய் வீட்டின் உள்ளே வர, அவளது கொலுசும் தயக்கமாய் ஒரு ஓசையை வெளியிட்டது!

இன்று தாவணி அணிந்திருந்தாள். இதே தாவணியை இந்த ஒரு மாதத்தில் பத்து நாட்களுக்கு மேல் பார்த்துவிட்டான்.

மனதில் மீண்டும் அவனது தகுதி வந்து அமர்ந்து கொண்டது. பேச நினைத்தாலும் முடியாமல் அவளைக் காணாதவன் போல் கடந்துவிட்டான்.

‘அவன் தன்னிடம் கோபமாக இருக்கிறான்’ இவளே தனக்குள் எண்ணிக் கொள்ள அமைதியாக வந்து வேலையை ஆரம்பித்துவிட்டாள்.

மீண்டும் வேலைக்கு வரவேண்டும் என்று வைஷ்ணவி நினைக்கவே இல்லை. ஆனால் ஷிவானி வந்து பேசியது அவளை யோசிக்க வைத்திருந்தது.

ஒருவேளை தாத்தா வந்து கேட்டால் என்ன சொல்வது, உங்க பேரன் என்னைப் பேசிட்டான், நான் அடிச்சுட்டேன்னு சொன்னா யார் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

யோசிக்க, யோசிக்க வேலைக்குச் செல்வதே சரி என்று தோன்ற இதோ கிளம்பி வந்துவிட்டாள்.

‘அவனிடம் அதிகம் பேச்சு வச்‌சுக்கக் கூடாது, அவனைப் பார்க்க கூடாது, அவனிடம் பேசினால், பார்த்தால் தானே குற்றவுணர்ச்சி அதிகமா வருது அவனைப் பார்க்கவே கூடாது’ மனதில் உருபோட்டுக் கொண்டே அவனைப் பார்க்காமல், அவளறியாமலே அவனது நினைப்பாகவே இருந்தாள் வைஷ்ணவி.

***

ஸ்ரீ திருமணத்திற்க்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் அன்றுதான் ஜவுளி எடுக்கக் கிளம்பினர் ஸ்ரீ வீட்டினர். கூடவே வைஷ்ணவியையும் அழைத்திருந்தனர்.

வெளி வேலைகள் எல்லாம் முடிக்கபட்டிருக்க, ஜவுளி எடுக்கும் வேலைகள் மட்டுமே பாக்கியிருக்க, இன்றுதான் ஸ்ரீ கொஞ்சம் வேலையில்லாமல் இருக்க அவனைக் கிளப்பிக் கொண்டு சென்றாகி விட்டது.

வரமாட்டேன் என்றவனை வலுக்கட்டாயமாகக் கிளப்பியிருந்தாள் ஷிவானி.

‘பல முறை கீர்த்தனா ஸ்ரீக்கு அழைத்தும் அவன் அவளது ஃபோன் கால் எடுக்கவே இல்லை, அதுவே அவனுக்கு ஒரு குற்ற உணர்ச்சியாய் இருக்க, அவளை எப்படி நேரில் சந்திப்பது என்ற யோசனையுடன் காரை ஒட்டிக்கொண்டு வந்தான்.

கீர்த்தனா வீட்டினர் அப்படியே அங்குக் கடைக்கு வருவதாய்ப் பேச்சு. நிச்சயதார்த்தமும், திருமணமும் அடுத்தடுத்த நாள் எனக் குறிக்கப்பட்டிருக்கக் கொஞ்சம் வேலைகள் அதிகமாகவே இருந்தது.

நேரம் செல்ல செல்ல கீர்த்தனா வீட்டினர் வரவே இல்லை.

ஸ்ரீ அதைக் கண்டு கொள்வதாய் இல்லை. அவந்து பார்வை முழுவதும் வைஷ்ணவியிடமே!

ஃபோன் பார்ப்பது போல் ஓரக்கண்ணால் பாராமல் பார்ப்பது போல் வைஷ்ணவியையே பார்த்திருந்தான் ஸ்ரீ.

இளந்தளிர் நிறத்தில் புடவை அணிந்திருந்தாள் இன்று. மிகவும் அழகாகத் தெரிந்தாள்.

ஷிவானி, கீர்த்தனாவுக்கு அழைக்க, ஸ்ரீ கரண், கீர்த்தனா அப்பாவிற்க்கு அழைத்துக் கொண்டிருந்தார். இருவரும் ஃபோன் எடுக்கவில்லை.

பதட்டத்துடன் ஷிவானி அவளது அண்ணனைப் பார்க்க, அவனது கண்களோ வைஷ்ணவியையைத் தழுவி இருந்தது.

டக்கென்று அவள் வைஷ்ணவியைப் பார்க்க, அவள் யாரையும் கவனிக்காமல் கடையையே சுற்றிப் பார்த்திருந்தாள்.

‘இந்தண்ணன் ஏன் இவளையே பார்த்திருக்குது?’ இவள் யோசிப்பதற்க்குள்,

“என்னாச்சு ஷிவானி, ஃபோன் எடுத்தாங்களா?” ஸ்ரீ கரண் கேட்க,

டக்கென்று பார்வையை அவர்கள் பக்கம் திருப்பினான் ஸ்ரீ.

“யா… யாரு ஃபோன் எடுக்கல?”

தன்னைதானே தலையில் தட்டிக் கொண்டான் ஸ்ரீ. ‘இவ இங்க இருந்தா நான் நானாகவே இருக்க மாட்டேன் என்கிறேன்’ தன்னைத்தானே தலையில் தட்டிக் கொண்டான்.

“ம்‌ம்… உன் பொண்டாட்டி வீட்டுல இருந்து யாரும் இன்னும் வரல” முறைப்பாகவே பதில் தந்தாள் ஷிவானி.

ஃபோன் பார்ப்பது போல் தலையைக் குனிந்து கொண்டான் ஸ்ரீ.

யார் முன்னும் இப்படித் தலை குனிந்து நிற்பது அவனுக்குப் பிடிக்காத ஒன்று, ஆனால் வைஷ்ணவி இருக்கும் பொழுது சுத்தமாய் அவனை அவன் இழக்கிறான்.

அவனுக்கே அவனை நினைத்து கோபம் வந்தது.

அவனது காதலை அவன் உணர்ந்தாலும், அதை வெளிபடுத்தும் எண்ணம் இல்லாமல் தன்னையே ஏமாற்றி இன்னொரு பெண்ணுடன் திருமணத்திற்க்கு சம்மதித்த பின்னும் காதலியை மறக்க முடியாமல் தவிக்க,

நீ உன் காதலியை தவிர்க்காமல் இரு, நானும் என் காதலனை தவிர்க்காமல் இருக்கிறேன் என்பது போல, அவர்களைக் கடந்து சென்றாள் கீர்த்தனா.

இன்னொரு ஆடவனின் கை கோர்த்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!