இதயத்தின் ஓசைதான் காதல்!

இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் 9

கைகளைக் கட்டிக் கொண்டு, தன்னைப் பற்றியும், வைஷ்ணவியைப் பற்றியுமான யோசனையாக, கொஞ்ச தூரத்தில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த வைஷ்ணவியையே பார்த்திருந்தான் ஸ்ரீ.

‘இவன் ஏன் வைஷுவையே பார்த்துட்டு இருக்கான். கடைக்கு வரவே மாட்டேன்னு சொன்னவன், வைஷு கிளம்பினதும் வந்துட்டான். இப்போ இவளையே பார்த்துட்டு இருக்கான் இவன் மனசுல என்னதான் ஓடுது’ யோசனையுடன் ஸ்ரீயை, ஷிவானி முறைக்க,

அவன் இவளை கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.

‘பச்…’ சலித்து வெளியே பார்க்க,

கீர்த்தனா யாரோ ஒரு பையனின் கையைப் பிடித்துக் கொண்டு சிரித்தபடியே கடந்து செல்வதைக் கண்ட ஷிவானி,

“அண்ணா! அண்ணி அங்க பாரு”

‘அண்ணியா, யாரு அது’ என்பது போல இவன் முழிக்க,

ஷிவானி பார்வையைத் தொடர்ந்து, தன் பார்வையைத் திருப்பிய ஸ்ரீ கரண் ஒரு நிமிடம் அதிர்ந்துதான் போனார்.

“ஸ்ரீ, அந்தக் கீர்த்தனா பொண்ணு போகுது பாரு” வேகமாய் வெளியே செல்ல,

‘கீர்த்தனாவா? யாரு?’ இப்படியாகத்தான் அவன் யோசனை இருந்தது.

இருந்தாலும் ஷிவானியும், தாத்தாவும் வேகமாக வெளியே செல்வதைக் கண்டவன், கொஞ்சம் தள்ளி நின்று வேடிக்கை பார்த்திருந்த வைஷ்ணவியின் கையைப் பிடித்துக் கொண்டு வெளியே ஓடினான் ஸ்ரீ.

“பாஸ்… பாஸ்… கையை விடுங்க” இவள், அவன் கையைத் தடுக்க,

“வெளியே தாத்தாக்கு தெரிஞ்ச யாரோ போறாங்களாம், வா” அவளை இழுத்துக் கொண்டு வேகமாய்ச் சென்றான்.

கதவை திறந்து கொண்டு வெளியே சென்றவன் டக்கென்று வைஷ்ணவி கையை விட்டான்.

அப்பொழுதுதான் உண்மை முகத்தில் அடிக்க, வேகமாய் அவர்களை நோக்கி சென்றான் அருகில் நின்ற வைஷ்ணவியையும் மறந்து!

‘எப்படி இவளை மறந்தேன்… என்ன பண்ணிட்டு இருக்க ஸ்ரீ? நீ பண்ணுறது எதுவுமே சரியில்லை. கல்யாணதுக்கு ஜவுளி எடுக்க வந்த இடத்துல காதலியை சைட் அடிக்கிறியே, நீ ஒரு நல்ல ஆண்மகனா?’ மனம் கேள்வி எழுப்ப பதில் சொல்ல இயலவில்லை.

வைஷ்ணவியைப் பார்த்த நொடி முதல் பல முறை தலையைக் குனிந்தாகிவிட்டது. இதோ இப்பொழுதும் கூட அப்படியே!

அவனை நினைத்தே அவனுக்கு வெறுப்பாக இருக்கக் கீர்த்தனாவை பார்த்தான்.

கண்கள் கலங்க கைகளைப் பிசைந்தபடி நிற்க காரணம் தெரியவில்லை அவனுக்கு.

தாத்தாவை பார்க்க அவர் இவளை முறைத்துக் கொண்டு நின்றார்.

ஷிவானியை பார்க்க, அவள் இவனையும் வைஷ்ணவியையும் மாறி மாறி பார்த்திருந்தாள்.

புரியாத பல விஷயங்கள் இப்பொழுது கொஞ்சமாய்ப் புரிவதாய்! ஆனாலும் குழப்பமாய் அவள் நிலை!

“என்னாச்சு… என்னாச்சு தாத்தா?”

“எல்லாம் முடிஞ்சு போச்சு ஸ்ரீ”

‘ஏன்?’ என்பதாய் கீர்த்தனாவை ஊன்றிப் பார்க்க, பல விஷயங்கள் அவனுக்குக் கூறின, அவள் வைத்திருந்த வகிட்டுக் குங்குமம்.

‘ஓ… இவ்வளவு தானா?’ மனம் ஆசுவாசபட்டது. கூடவே அவனிடம் ஒரு பெருமூச்சு கிளம்ப, ஷிவானி அவனை முறைக்க,

“என்ன காரியம் பண்ணிருக்க?” கீர்த்தனாவிடம் கோபமாய் ஸ்ரீ பாய,

“ஸ்ரீ! என்ன பண்ணுற நீ” பதறி அவனைத் தடுத்தார் ஸ்ரீ கரண்.

‘இவன் நடிப்புக்கு இப்படி மயங்கிறியே தாத்தா?’ ஷிவானி எண்ணிக் கொண்டிருக்க,

“என்னாச்சு ஷிவானி, பாஸ் ஏன் கோவமா இருக்காங்க?” மெதுவாக ஷிவானி காதை கடித்தாள் வைஷ்ணவி.

“இதுதான் அண்ணாக்கு பார்த்த பொண்ணு, ஆனா பக்கத்துல நிக்குறவங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க போல” சுருக்கமாய்ச் சொல்ல,

ஒரு ‘ஓ’ போட்டுக் கொண்டாள் வைஷ்ணவி.

இப்பொழுது வைஷ்ணவியின் பார்வை கீர்த்தனாவை ஆராய்ச்சியாய்ப் பார்த்தது.

‘இந்த அக்கா பாஸ்க்கு கரெக்டா இருக்காது அதுதான் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க போல. பார்க்க பொம்மை போல இருக்காங்க, கொஞ்சம் குட்டை… நம்ம பாஸ் எவ்ளோ கம்பீரமாக, உயரமா இருக்காங்க’ இவள் எண்ணிக் கொண்டிருக்க,

“உன் மனசுல என்னதான் நினைச்சிட்டு இருக்க நீ? இவனை நினைச்சிட்டு இருந்திருந்தா என்னைக் கல்யாணம் பண்ண எதுக்குடி சம்மதம் சொன்ன?” கோபத்துடன் அவள் மேல் பாய,

இப்பொழுது அதிர்வது ஷிவானி முறையானது. ‘வைஷ்ணவியைப் பாக்குறான், இப்போ பார்த்தா கீர்த்தனா மேல கோவப்படுறான். என்னதான் நினைச்சுட்டு இருக்கான் இவன்’ குழம்பிப் போனாள்.

‘பாஸ்க்கு இந்த அக்காவை ரொம்பப் பிடிச்சு போச்சு போல அதுதான் கோவபடுறாங்க?’ என்பதாய் அவனையே பார்த்திருந்தாள் வைஷ்ணவி.

“கொஞ்சம் அமைதியாய் இருப்பா? என்னன்னு விசாரிப்போம்” அவனைத் தடுத்தார் ஸ்ரீ கரண்.

“இன்னும் என்ன விசாரிக்கணும் தாத்தா? அதுதான் கண்ணு முன்னாடி இந்தக் கோலத்துல வந்து நிக்குறாளே? இதுக்கு மேல என்ன இருக்கு? எல்லாரும் கிளம்புங்க போகலாம்”

“ண்ணா என்ன நீ இப்படிப் பேசுற கொஞ்சம் பொறு, எதுனாலும் இப்படி எடுத்தோம் கவிழ்தோம்னு பண்ண முடியாது என்ன ஆச்சுன்னு இவங்க கிட்ட கேட்கலாம்”

“இதுக்கு மேல நீ என்ன கேட்டுத் தெரிஞ்சுக்கப் போற ஷிவானி, இதோ நிக்குறானே இவனை விட்டுட்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறியான்னா கேட்க போற?” முறைக்க,

“ண்ணா, இல்லண்ணா ஏன் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதம் சொன்னாங்கன்னு தெரிஞ்சிக்கணும்ல?”

“ஆமாப்பா ஸ்ரீ கோவப்படாம இரு, என்னனு விசாரிப்போம்”

“நான் அவங்க வீட்டுக்கு ஃபோன் போடுறேன் தாத்தா?” ஷிவானி ஃபோனை எடுக்க,

“வேண்டாம்… வேண்டாம்… வீட்டுல சொல்லவேண்டாம். என்னை அப்புறம் உங்க அண்ணனுக்கே கல்யாணம் பண்ணிவச்சிடுவாங்க”

“ஏன்… ஏன் பண்ணிவைப்பாங்க?”

‘அதான ஏன் பண்ணுவாங்க?’ வைஷ்ணவி யோசிக்க,

“இவர் விக்னேஷ். எங்க வீட்டு டிரைவர் பையன். நானும் இவரும் ரொம்ப வருஷமா லவ் பண்ணுறோம். வீட்டுல எங்க கல்யாணத்துக்குச் சம்மதிக்கல.

கேட்டா அவங்க தகுதில இவர் இல்லையாம். காதல் தகுதி பார்த்தா வரும். அவங்களுக்குக் காதல் பணம் பார்த்து வரணுமாம்.

அதுதான் வீட்டை விட்டு வெளிய வந்துட்டேன். இப்போ எங்களைத்தான் தேடிட்டு இருக்காங்க. நான் அவங்களுக்குக் கிடைச்சா என்னை மிரட்டி மறுபடியும் ஸ்ரீக்கே கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க”

“நீங்க எப்போ வீட்டை விட்டு வெளியே வந்தீங்க?” ஷிவானி தான் கேள்வியை வைக்க,

“நாங்க வீட்டை விட்டு வந்து ஒரு வாரம் மேல ஆகுது. இவருக்குச் சென்னையில் வேலை கிடைச்சிருக்கு. இன்னைக்கு நைட் சென்னைக்குக் கிளம்புறோம். அதுதான் ஷாப்பிங் வந்தோம்” மெதுவாக உரைக்க,

‘இப்போ ஷாப்பிங் ரொம்ப முக்கியம்’ ஷிவானி மனதில் நொடித்துக் கொண்டாள்.

‘நீ என்னடா காதல் பண்ணுற?’ மனம் காறித் துப்ப,

“இவங்க கதையைக் கேட்டாச்சுதானே இப்போ கிளம்புங்க” ஸ்ரீ காரை நோக்கி கிளம்ப, அவனின் பின்னே எல்லாரும் கிளம்பினர்.

‘இன்னும் கீர்த்தனா வீட்டுல இருந்து ஏன் ஒன்னும் சொல்லலை. நான் என்ன அவ்ளோ ஏமாளியா?’ ஸ்ரீ கரண் மனம் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

அவர்களைச் சும்மா விடும் எண்ணம் இல்லை அவருக்கு!

வீட்டுக்கு வந்த ஸ்ரீ காரை நிறுத்தி தன்னறையில் புகுந்து கொள்ள, ஷிவானி அப்படியே ஹால் ஷோபாவில் பொத்தென்று அமர்ந்துக் கொண்டாள்.

காரை எடுத்துக் கொண்டு சென்றார் ஸ்ரீ கரண்.

‘நான் வீட்டுக்கு கிளம்பவா? இல்லை வேலையைப் பார்க்கவா?’ என்பதாய் வைஷ்ணவி கையைப் பிசைந்து கொண்டு நிற்க,

திடீரென்று அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே வந்த ஸ்ரீ, “நீ வீட்டுக்குக் கிளம்பு நாளைக்கு வேலைக்கு வந்தா போதும்” ஒன்றும் நடக்காதது போல் கூறி பைக் எடுத்துக் கொண்டு வெளியே செல்ல,

“ண்ணா எங்க போற?” பின்னாடியே ஷிவானி செல்ல,

“தாத்தா அந்தப் பொண்ணு வீட்டுக்குதான் போறாங்க போல, நான் பார்த்துட்டு வாரேன்” வேகமாய்ச் சென்றான்.

‘ஒரு வருத்தம் கூட இல்லாம இவன் எப்படி இப்படி இருக்கான். அங்க அந்தக் குதி குதிச்சிட்டு, இங்க சண்டையைச் சமாதான படுத்தப்போறான், இவன் மனசுல எண்ணதான் ஓடுது ஆண்டவா ரொம்பப் புலம்ப வைக்கிறானே இவன்’ தலையைப் பிய்த்துக் கொண்டாள் ஷிவானி.

***

“ம்மா… ம்மா” தாயை அழைத்துக் கொண்டே வீட்டின் உள்ளே நுழைந்தாள் வைஷ்ணவி.

“ஏண்டி இப்படி வந்ததும் வராததுமா கத்திக்கிட்டே வார?” கோதைநாயகி முறைக்க.

“ம்மா, ஏன் அக்காவை முறைக்க?” பப்பியை கொஞ்சியபடியே உள்ளே வைஷாலி நுழைந்தாள்.

“நீ அந்த நாயோட வீட்டுக்குள்ள வரணும்னு இருந்தா, அப்படியே வெளிய போயிடு”

“ம்மா, பப்பி உன்னை என்ன பண்ணிச்சு அதையே எப்பவும் திட்டிட்டே இருக்க”

“இங்க இருக்க நாலு நாய் மேய்க்கவே தெம்பில்லை, இதுல அஞ்சாவது ஒன்னு தேவையா?”

“அதெல்லாம் விடுமா, நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லுறேன்?”

“என்ன பாப்பா என்ன விஷயம்” என்பதாய் மாறன் வர,

“என்னப்பா இன்னைக்குச் சீக்கிரம் வந்துட்டீங்க?”

“தம்பி கல்யாணத்துக்கு ஜவுளி எடுக்கப் போயிருக்கு, காலையிலையே வேலையை முடிச்சுட்டுக் கிளம்பச் சொல்லிட்டுதான் போனாங்க, அதுதான் சீக்கிரமே வேலையை முடிச்சுட்டு வந்துட்டேன்.”

“ப்பா… அது பத்திதான் சொல்ல வந்தேன்”

“என்ன வைஷு?”

“பாஸுக்கு பார்த்த பொண்ணு ஓடி போய்ட்டாம்மா?”

“பாப்பா… இப்படித் தெரியாம ஏதும் பேசக்கூடாது?” கண்டிக்க,

“ப்பா, தெரியாம எதுவும் சொல்லல, நானே என் கண்ணால பார்த்தேன்?”

டக்கென்று அவள் வாயை அடைத்த வைஷாலி, “ஐயோ! அக்கா இப்படிச் சத்தமா சொல்லாத?”

“ஏண்டி?”

“பெரிய வீட்டு விஷயம் எல்லாம் இப்படிச் சத்தமா பேசக்கூடாதுன்னு அம்மா சொல்லுவாங்கதான அதுதான் அவங்களுக்கு முன்னாடியே நான் சொல்லிட்டேன்.”

“சரி நான் மெதுவாவே சொல்லுறேன்” என்றவள்,

“இன்னைக்கு என்னையும் அவங்க கூட ஜவுளி கடைக்குக் கூட்டிட்டு போனாங்கம்மா. அங்க போனா ரொம்ப நேரமா அந்தப் பொண்ணு வீட்டுல இருந்து யாருமே வரல, ஷிவானி ஒருபக்கம், தாத்தா ஒருபக்கம், பாஸ் ஒருபக்கம்னு அவங்களுக்கு ஃபோன் பண்ண யாருமே எடுக்கல,

எதுக்கு ஃபோன் எடுக்காம இருக்காங்கன்னு எல்லாரும் யோசிச்சிட்டு இருந்தா, கடை பக்கமா அந்தப் பொண்ணு போயிருக்கு,

ஷிவானிதான் பார்த்தா, அங்க போய் விசாரிச்சாதான் தெரிது, அந்தப் பொண்ணு அவங்க வீட்டு டிரைவர் பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டாம். பண்ணி ஒரு வாரம் ஆச்சாம்.

இவங்க கிட்ட யாருமே சொல்லல, பாஸுக்குப் பயங்கரக் கோவம் அந்தப் பொண்ணை அடிக்கப் போயிட்டாங்க அப்புறம் தாத்தாவும், ஷிவானியும்தான் பிடிச்சு கூட்டிட்டு வந்தாங்க.

ஆனா, அந்தப் பொண்ணு ரொம்ப அழகும்மா, பாஸுக்கு ரொம்பப் பிடிச்சு போயிட்டு போல” கதையாய் கூறினாள்.

“அதெப்படி பொண்ணு பார்த்து முடிச்சுதான் நாள் இருக்குமே, அந்தப் பொண்ணு இவன் கிட்ட சொல்லாமலா இருந்திருக்கும்? ரெண்டுபேரும் பேசிருப்பாங்களே”

“அது தெரியலம்மா” வைஷு இழுக்க,

“பெரிய வீட்டு விஷயம் நமக்கெதுக்கு வைஷு… பெரிய வீட்டுப் பசங்களை நாம நம்பவே முடியாது. இவன் மேல ஏதாவது தப்பிருக்கும் அதுதான் அந்தப் பிள்ளை ஓடிபோயிருக்கும்” என்பதாய் கோதைநாயகி கூற,

‘அவன் என்னையே எப்படித் திட்டினான். அந்தக்கா வேற பொம்மை மாதிரி அழகா இருக்கு ஒரு வேளை இவன் ஏதாவது சொல்லிருப்பானோ?’ இவள் யோசிக்க, மனமோ ‘இருக்கும் இருக்கும்’ என ஒத்து ஊதியது.

“கோதை, அந்தத் தம்பியை பத்தி உனக்கு என்ன தெரியும். அது நல்ல தம்பி” மாறன் சப்போர்டுக்கு வர,

அமைதியாக அமர்ந்துக் கொண்டாள் வைஷ்ணவி. அவளையும் திட்டினான் தானே, அதனால் அமைதியாகிக் கொண்டாள்.

“நீங்க இப்படிதான் சொல்லுவீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும், சரி இவ்வளவு வசதி வாய்ப்பு இருந்தும் இந்தப் பையன் ஏன் படிக்கலியாம்?”

“அதுதான் தம்பி 12 வரை படிச்சிருக்கு தானே, அது போதாதா?”

“என்ன போதாதா? எவ்ளோ சொத்து இருக்கு அதை எல்லாம் அது கணக்குப் பாக்காதாம், ஷிவாதான் பாக்குறானாம், இந்தப் பையன் படிச்சிருந்தா அவனே பார்த்திருப்பான் தானே, எனக்கென்னமோ இந்தப் பையதான் சரியில்லை போல இருக்கு”

‘பாஸ் 12 வரைதான் படிச்சுருக்காரா, ஷிவானி டாக்டர் படிக்கிறாளே? எங்கையோ உதைக்குதே?’ தீவிர ஆராய்ச்சிக்கு சென்றுவிட்டாள் வைஷ்ணவி.

“உனக்கு இதெல்லாம் யார் சொன்னா?” மாறன் முறைக்க,

“வேற யார் சொல்லுவா, நாம இங்க வந்த புதிசில நம்ம வீட்டுக்கு தண்ணி எடுக்க வருவாங்களே அவங்க சொன்னதுதான்” நொடித்துக் கொள்ள,

“இங்க சொன்ன மாதிரி வேற யார் கிட்டையும் சொல்லாத கோதை. இதெல்லாம் தம்பிக்கு பிடிக்காது”

“சொல்லுறமாதிரி இருந்தாதான் சொல்லுவோமே? இங்கதான் ஒன்னும் இல்லையே”

“சரி… சரி… அவங்க கதை நமக்கெதுக்குப் போ காஃபி கொண்டு வா”

“உங்க தம்பி கதையைப் பேசிடக்கூடாதே” நொடிக்க,

“ம்மா… பெரிய வீட்டு விஷயம் பேசக்கூடாதுன்னு எங்களைச் சொல்லுற ஆனா, நீ நிறையத் தெரிஞ்சு வச்சிருக்கியே?” வைஷாலி யோசிக்க,

“பேசாம போடி” முறைத்து உள்ளே சென்றார் அவர்.

“என்னவோ போமா” என்றபடி வைஷாலியும் செல்ல,

வைஷ்ணவி தீவிர யோசனையில் இருந்தாள்!

***

“வாங்க சம்மந்தி… வாங்க… வாங்க” நல்ல வரவேற்பு கீர்த்தனா வீட்டினில் ஸ்ரீ கரணுக்கு.

ஸ்ரீ கரண் உள்ளே நுழைய, “உட்காருங்க, என்ன சாப்டுறீங்க சம்மந்தி?”

“உங்க பொண்ணு எங்க. ஜவுளி கடைக்கு ஏன் வரல?” நேரடியாக விஷயத்துக்கு வந்தார் ஸ்ரீ கரண்.

“அ… அது நாங்க அங்க தான் கிளம்பிக்கிட்டு இருக்கோம் சம்மந்தி”

“அப்படியா, வாங்க கிளம்பலாம்?” அவர் எழ,

“அதில்லை சம்மந்தி. என் பொண்ணு இங்க இல்லை. அவ சித்தி வீட்டுக்கு போயிருக்கா?” தயங்கி கூற,

“சித்தி வீட்டுக்கா இல்லை, மாமியார் வீட்டுக்கா?”

“சம்மந்தி அது?”

“என்ன அது நாங்க என்ன அவ்ளோ ஏமாளியா? அவ்ளோ இளக்காரமா போயிட்டோமா? ஓடி போன பொண்ணை என் பேரன் தலையில் கட்ட பாக்குறீங்க?”

“அதில்லை சம்மந்தி…”

“என்ன அதில்லை. உன் பொண்ணு லட்சணம் அங்க மதுரை பஸ் ஸ்டாண்ட்ல கொடி கட்டி பறக்குது, எங்க கண்ணுல சிக்காம உங்க கண்ணுல பட்டிருந்தா என்ன பண்ணிருப்பீங்க அந்தப் பையனை விரட்டி விட்டுட்டு என் பேரனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிருப்பீங்க அப்படிதானே?”

“தாத்தா… தாத்தா… விடுங்க தாத்தா” அவரை வந்து தடுத்தான் ஸ்ரீ.

“நீ சும்மா இருடா உனக்கு என்ன தெரியும், கொஞ்சம் பேசாம இரு” முறைக்க,

“விடுங்க தாத்தா, அவங்களே பொண்ணு காணாம போன சோகத்துல இருப்பாங்க, நீங்க இங்க வந்து மேலும் பேசுறீங்க?”

“என்ன பேசுற ஸ்ரீ?”

“விடுங்க தாத்தா?” என்றவன்,

“இதோட எல்லாம் முடிச்சுக்கலாம்” என்றபடி தத்தாவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

மனமோ விடாமல் கீர்த்தனாவுக்கு நன்றி சொல்லி கொண்டு இருந்தது.

இந்த முறை அவளது பெயரை சரியாக நினைவில் வைத்திருந்தான் ஸ்ரீ சக்ரவர்த்தி!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!