இதயத்தின் ஓசைதான் காதல்!

இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 11

அன்று புதன்கிழமை…

நல்லநாள் ஆதலால், அந்தப் பெண்ணைப் பார்க்க எண்ணினார் ஸ்ரீ கரண்.

அன்று ஜோசியரை சந்தித்ததில் ஸ்ரீகரணுக்கு பரம திருப்தி. சீக்கிரமே ஸ்ரீக்குத் திருமணம் நடக்கும் என்று ஷிவானி ஜாதகத்தில் இருப்பதால், உடனே பெண் தேடும் வேட்டையில் இறங்கி விட்டார்.

ஸ்ரீ கரண் போன்ற பெரிய வீட்டுக்குப் பெண் கொடுக்க நீ, நான் என்று போட்டிப் போட்டுப் பெண் வீட்டினர் வர, அதில் சிலர், முதல் பார்த்த பெண் ஓடிப்போனதை அறிந்து யோசனையாகவும் இருக்க,

அவர்களை எல்லாம் தவிர்த்து, நல்ல வரனை தேடி பிடித்தார். அப்படித் தேர்ந்தெடுத்ததுதான் பிரபல ஜவுளி கடை வைத்திருக்கும் சோமசுந்தரத்தின் பெண் மேக்னா.

இரண்டே நாளில் எல்லாம் விசாரித்து, இன்று பெண்ணைப் பார்க்க கிளம்புகிறார். முன் எச்சரிக்கையாக அவர் மட்டுமே கிளம்புகிறார்.

போன முறை போல் நடக்கக் கூடாது என்ற எண்ணத்தில்.

ஸ்ரீயும், அந்தப் பெண்ணும் ஃபோட்டோவில் பார்த்து பிடித்தால், கோவிலில் இருவரும் நேரில் பார்த்து பேசட்டும் என்பதுபோல அவர் எண்ணியிருக்கிறார்.

எப்பொழுதும்போல் பதினோரு மணிக்கு போல் வீட்டை நோக்கி வந்தான் ஸ்ரீ.

ஸ்ரீ கரண் கிளம்பி ஹாலில் அமர்ந்திருப்பதைக் கண்டவன், “என்ன விஷயம் தாத்தா, எங்கையாவது போகணுமா?” அவரைப் பார்த்து கேட்க,

“ஆமாப்பா கொஞ்சம் அவசர வேலையா வெளிய போகணும், என்னைக் கூட்டிட்டு போறியா?”

“எங்க தாத்தா?”

“இங்க தான் மதுரை”

“சரி, நானும் பேங்க் போகணும் வாங்க கொண்டு விடுறேன்” என்றவன் அறைக்குச் சென்று கிளம்பி வந்தவன்,

“வைஷ்ணவி” என அழைக்க,

“பாஸ்” அவன் முன் வந்து நிற்க,

“பேங்க் போகணும், என்கூடக் கொஞ்சம் வா”

“நானா?” முழிக்க,

“நீதான் வேற யாரு, கிளம்பு”

அவளின் பார்வை அப்படியே ஸ்ரீ கரண் பக்கமாய் நகர, அவரும் யோசனையாகதான் பார்த்திருந்தார்.

“தாத்தாவை ஏன் பாக்குற, நீ பேங்க்ல நான் சொல்லுற வேலையைப் பாரு, நான் தாத்தவை அவங்க போற இடத்துல விட்டுட்டு வாரேன், எனக்கும் மத்த வேலைகள் அங்க இருக்கு முடிச்சிட்டு நாம எல்லாரும் வர சரியா இருக்கும்” என,

அவன் கூறுவதும் அவருக்குச் சரியாகப்பட, “வாம்மா” என்றவர் எழுந்து கொள்ள,

அவளைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் முன்னே செல்ல,

‘வசந்த் வேற ரொம்ப நாளா பேட் கேட்கிறான். கடைக்குப் போகணும்னு நேரமே வீட்டுக்கு போகலாம்னு பார்த்தா இவன் விடமாட்டான் போலவே’ அவனை முறைத்துப் பின் தொடர்ந்து சென்றாள் வைஷ்ணவி.

முதலில் அவளைப் பேங்க் வாசலில் இறக்கி விட்டவன், “வைஷ்ணவி இங்க வேலை முடிஞ்சதும் கொஞ்சம் வெயிட் பண்ணு நான் தாத்தாவை விட்டுட்டு வாரேன்” என்றபடி அவன் கிளம்பினான்.

அவன் கிளம்பிய சிறிது நேரத்தில் இவளுக்கு வேலை முடிய, அப்படியே வெளியே வந்தாள்.

வந்தவள் கண்களில் எதிரே இருந்த ‘சிறுவர்கள் விளையாட்டு உலகம்’ கடை கண்களில் தெரிய வேகமாய்க் கடையில் நுழைந்து விட்டாள்.

அங்கே செல்ல சிறுவர்களுக்கான அத்தனை விளையாட்டு பொருட்களும் இருக்க, அவனுக்கு ஒரு சைக்கிள் வாங்க நினைத்தாள்.

வைஷாலியும், வசந்த்தும் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருப்பதால், வாங்கலாம் என்ற எண்ணம் பல நாளாக மனதில் இருக்க இன்று வாங்க எண்ணினாள்.

‘நல்லவேளை அவன் கூட்டிட்டு வந்தான்’ அவனுக்கு ஒரு நன்றியையும் இட்டுக் கொண்டாள்.

காலையில்தான் ஸ்ரீ கரண் கொடுத்த சம்பள பணம் கையில் இருக்க, மிகவும் நல்லதாகியது. உண்மையாகவே நல்ல சம்பளம் அளித்தான் ஸ்ரீ. அவள் எண்ணியதை விட அதிகம்.

 ‘என்ன மாடல் வாங்கலாம்’ எனக் கோதைக்கு அழைத்துக் கேட்க எண்ணி, ஃபோனை எடுக்க அது சுத்தமாய்ச் சார்ஜ் இல்லாமல் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்தது.

வைத்திருப்பது ஒரு டப்பா ஃபோன். சார்ஜ் நிற்காமல் அடிக்கடி இறங்கிக் கொண்டே இருக்கும். டச் ஃபோன் மாடல்தான் ஆனால் அதர பழைய மாடல்.

‘பாஸ் வீட்டுக்கு போய் அம்மாகிட்ட சொல்லிக்கலாம்’ என்று எண்ணிக் கொண்டாள்.

இவள் இங்குச் சைக்கிள் மாடல் பார்த்திருக்க, தாத்தாவை விட்டு, உரக்கடைக்குச் சென்று உரம் கொண்டு வரக்கூறியவன் இவளை அழைக்கப் பேங்க் வந்தான்.

வந்தவன் பேங்கில் அவளைத் தேட அவளைக் காணாமல் போக, ‘அதுக்குள்ள எங்க போனா இவ?’ யோசனையுடன் அருகில் இருந்த கடை பக்கம் சென்று பார்க்க எங்கும் இல்லை அவள்.

‘சரி ஃபோன் பண்ணலாம்?’ என அவளை அழைக்க,

‘தாங்கள் அழைத்த எண் தற்பொழுது ஸ்ட்விச் ஆஃப் செய்யபட்டுள்ளது’ எனக் கூற மிகவும் டென்ஷன் ஆகிவிட்டான் ஸ்ரீ.

‘இவளை வச்சிக்கிட்டு ஒரு வேலையும் பண்ணமுடியல’ மனதில் புலம்பியவன் பேங்க் வாசலில் கொஞ்ச நேரம் அப்படியே நின்றிருந்தான்.

கிட்டத்தட்ட அரைமணிநேரம் கடந்த பின்னும் அவள் வராமல் போக மனதை பயம் கவ்வியது.

‘இவ எங்க போனா?’ யோசனையுடன் மீண்டும் பேங்க் உள்ளே சென்றுப் அங்கு ஒன்றிரெண்டு பேரைத் வேறு யாரும் இல்லாமல் போக, வேகமாய் வெளியே வந்தவன் பக்கத்துக் கடைகளில் ஏறி இறங்க எங்கும் அவளைக் காணவில்லை.

“என்னை விட்டு எங்கடி போன?” மனம் புலம்பியது. அடுத்து என்ன செய்வது என்று சுத்தமாக அவனுக்குத் தெரியவில்லை.

அப்பொழுதுதான் நியாபகம் வந்தவன் போல் ஷிவானிக்கு அழைக்க,

“சொல்லுண்ணா?”

“எங்க இருக்க நீ?”

“இப்போதான் காலேஜ் விட்டு வெளிய வாரேண்ணா. என்ன விஷயம்?”

“ஒன்னும் இல்ல ஷிவானி, கார் எடுத்துட்டு நான் வெளிய வந்துட்டேன் இன்னைக்குப் பஸ்ல வந்திடு”

“இதுக்கா கால் பண்ணுன, சரி நான் பாத்துகிறேன்” என அழைப்பை நிறுத்த,

அப்படியே தலையைப் பிடித்தபடி பேங்க் வாசலில் இருந்த சேரில் அமர்ந்துவிட்டான் ஸ்ரீ.

‘ஷிவானிகிட்ட, வைஷு பத்தி கேட்டா ரொம்ப டென்ஷன் ஆகிடுவா. இப்போ என்ன பண்ணுறது, அவ வீட்டுக்கு போய்ட்டாளா? யார் கிட்ட கேட்க’ மனம் தவிக்க அடுத்து என்ன செய்வது என்று அறியாமல் அமர்ந்துவிட்டான் ஸ்ரீ.

வைஷ்ணவி என்று வந்தால் அவனையே அவன் இழப்பது போல் இப்பொழுதும் இழந்து கொண்டிருந்தான்!

‘என்னடா ஸ்ரீ நீ, தகுதி தகுதின்னு உன் கையில வந்தவளை தொலைச்சிட்டு நீக்குறியே? இனி அவளை எங்க போய்த் தேட போற’ மனம் கேள்வி எழுப்ப தடுமாறிவிட்டான்.

கண்களை அங்கும் இங்கும் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தவன் கண்களில் விழுந்தாள் வைஷு.

‘சக்ரா சைக்கிள்’ நல்ல சைக்கிள் என அங்கிருந்த ஒருவர் கூற மிகவும் பேமஸ் கம்பெனியான சக்ரா சைக்கிள் சிகப்பு நிறத்தை செலக்ட் செய்தவள் வீட்டின் அட்ரெஸ் கொடுத்து, பணத்தையும் கொடுத்துவிட்டு வெளியே வந்தாள்.

ரோட்டுக்கு எதிரே இருந்த நான்காவது கடையில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தாள் வைஷ்ணவி.

அவள்தானா எனக் கண்களைக் கசக்கிப் பார்க்க, காஞ்சுபோன போன கண்களுக்கு ஐஸ்பார் வைத்தது போல் கண்களில் விழுந்தாள் வைஷு.

அது ஒரு இருவழி சாலை என்றும் பாராமல் அவளை நோக்கி வேகமாய் ஓடினான்.

அவளை அருகில் பார்த்த அந்த நொடி, இத்தனை நாள் பார்த்த தகுதி, ஜெயிலுக்குச் சென்று வந்தவன் என்ற எண்ணம் எல்லாம் மறைய, “எங்க போன வைஷு? நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா சாரி… சாரி” தவிப்புடன் அவளை இறுக்க அணைத்துக்கொண்டான் ஸ்ரீ. நடுரோடு என்றும் பார்க்காமல்.

அவன் வந்த வேகத்தைப் பார்த்து பயந்தவள் “பாஸ்” என அழைப்பதற்குள் அவளைக் கட்டியணைத்திருக்க, ஒரு நொடி தடுமாறிவிட்டாள் அவள்.

‘இப்பொழுது தான் என்ன செய்யவேண்டும்’ என்ற யோசனைக் கூட இல்லாமல் அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டாள்.

அங்கும் இங்கும் செல்லும் வண்டிகளில் ஹாரன் ஒலியில் சுரணை வந்தவள் “பாஸ்” என வேகமாய் அழைக்க,

அவளை விட்டு விலகியவன் அவளின் கையைப் பிடித்துக் கொண்டு வேகமாய்ச் சாலையைக் கடந்து சென்றான்.

“ஏய்! செம லவ் ஒண்ணு ஒடுனதை பார்த்தீங்களாடி” என அந்தப் பக்கமாய் நின்ற கல்லூரி மாணவிகள் இவர்களைப் பார்த்துக் கூற,

“யப்பா… இப்படி இருக்கணும்ய்யா லவ்னா… அந்தப் பொண்ணை அந்தப் பக்கம் பார்த்ததும் இந்த அண்ணன் முகத்தைப் பார்க்கணுமே அப்படி ஒரு தவிப்பு… அப்படி ஒரு காதல்!

அந்தப் பக்கம் இந்தப் பக்கம் வந்த எந்த வண்டியும் பார்க்காம என்னா வேகமா ஓடி போறாங்க, அந்த அக்காதான் பாவம் இந்த அண்ணன் ஓடி வரதைப் பார்த்து பயந்துட்டாங்க” இத்தனை நேரம் நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த மாணவி ஒருத்தி மற்றவர்களுடன் கூறிக் கொண்டிருக்க,

டக்கென்று கையில் இருந்த போனில் இருவரையும் படம் எடுத்துக் கொண்டாள் அந்தக் குறும்புக்காரி!

கார் கதவை திறந்து அவளை முன்னால் அமரக் கூறியவன் அமைதியாய் காரை கிளப்பினான்.

‘வேண்டாம் ஸ்ரீ அவகிட்ட எதுவும் பேசாத அமைதியா வா, அன்னைக்கு அவளை ஒரு வார்த்தை சொன்னதுக்கே பாளார்னு ஒன்னு விட்டா, இன்னைக்கு நீ கட்டி வேற பிடிச்சிருக்க, கம்முன்னு, இல்லன்னா காருக்குள்ளையே வைச்சி கும்மிடுவா’ அவளைப் பார்த்தும், சாலையைப் பார்த்தபடியும் காரை செலுத்தி வந்தான் ஸ்ரீ.

அவளை வீட்டில் விட்டவன், “நான் வரும் வரைக்கும் வீட்டுக்கு போகாதே” என்றவன் உடனே வந்த வழியே திரும்பி சென்றான்.

***

“அக்கா… உனக்கு இன்னைக்கு ஒரு சூப்பர் லவ் கதை சொல்லுறேன்” என்றபடியே ஓடிவந்தாள் சோமசுந்தரத்தின் இளைய மகள் மனோ.

“சத்தம்” இங்கிருந்து அவளின் அப்பா கையைக் காட்ட அமைதியாக வந்து அமர்ந்துக் கொண்டாள்.

மெதுவாக வீட்டின் உள்ளே வர, அங்கு ஸ்ரீகரணை கண்டவள் அமைதியாய் உள்ளே நுழைந்துக் கொண்டாள்.

“ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க, அவ அம்மா இல்லன்னதும் கொஞ்சம் செல்லம் அதிகம், தினமும் இப்படிதான் காலேஜ் போயிட்டு வந்ததும் அங்க நடக்குறதை எல்லாம் இங்க வந்து சொல்லுவா” தர்மசங்கடமாய் அவர் உரைக்க,

“ரொம்ப நல்ல பழக்கம் இது. வெளியில் நடக்குறதை வீட்டுல சொல்லுறது ரொம்ப நல்லது” என்றவர், ஸ்ரீயின் ஃபோட்டோவை அவர் கையில் கொடுத்து, மேக்னா ஃபோட்டோ ஒன்றும் வாங்கிக் கொண்டு வெளியே வர அவருக்காகக் காத்திருந்தான் ஸ்ரீ.

காரில் ஏறி அமர்ந்தவர் அருகில் சிறு பாக்ஸ் இருக்க, அதைக் கையில் எடுத்தவர், “இது என்னப்பா ஸ்ரீ?” என,

“ஃபோன் தாத்தா”

“ஃபோன் இப்போ யாருக்குப்பா?”

“அதான் தாத்தா, நம்ம வைஷு இருக்கால்ல அவளுக்கு”

‘நம்ம வைஷுவா?’ அதிர்ந்தவர், “அவளுக்கு ஏன் புரியலியே?”

“அது கணக்கு ஏதும் தெரியலன்னா, சிவாவை கால்பண்ணி அழைக்குறா தானே, அதுதான் ஒரு ஃபோன் வாங்கிக் குடுத்தா அவனுக்கு வாட்சப் பண்ணி கேட்டுப்பாதானே அதுதான் வாங்கினேன்” என்றான் உண்மையாக.

“சரி ஸ்ரீ, நான் எங்க போனேன்னு கேட்கமாட்டியா?”

“எனக்குத் தெரியணும்னா நீங்களே சொல்லுவீங்களே”

“ஹா… ஹா… உனக்கு முக்கியமான விஷயம்தான். இந்தா இந்தக் கவர் பிரிச்சு பாரு” அவன் கையில் அந்தக் கவரை கொடுக்க,

வாங்கி டாஷ்போர்டில் வாங்கி வைத்தவன், “வீட்டில் போய்ப் பாக்குறேன் தாத்தா” என்றவன் மனம் பல யோசனைக்குச் சென்றது.

‘சீக்கிரம் வைஷு பற்றி வீட்டில் கூறவேண்டும்’ என்று எண்ணிக் கொண்டான்.

***

வீட்டுக்கு வந்தவன் நேராக வைஷ்ணவியை நோக்கி சென்றான். சிவாவுடன் சேர்ந்து ஏதோ கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருந்தாள் அவள் அருகில் ஷிவானியும் சேர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

சிவாவை அங்குப் பார்த்ததும், அவன் முதலில் முறைத்தது வைஷ்ணவியைதான்.

‘இந்த அண்ணன் ஏன் எப்பவும் இவளையே முறைக்கிறான்’ யோசனையாக அவனைப் பார்த்திருந்தாள்.

ஷிவானியின் பார்வையைக் கண்டவன் பார்வையை மாற்றி. “என்ன சிவா?”

“ஏதோ டீடெயில் கேட்டா அதுதான் வந்தேன்”

“தோட்டத்துக்கு இப்போ உரம் வந்திடும் கொஞ்சம் போய்ப் பாரு சிவா” என அவனை அனுப்பினான்.

‘ஓஹோ… பொசஷிவ்நெஸ்’ எண்ணிக்கொண்டாள் ஷிவானி.

“வைஷு உன்னோட ஃபோன் தா?”

“ஏன் பாஸ்”

“கேள்வி கேட்காம உன் ஃபோன் தா” முறைக்க,

‘வைஷு ஃபோன் இவனுக்கு எதுக்கு’ என்பதாய் ஷிவானி பார்த்திருந்தாள்.

“சார்ஜ் போட்டிருக்கேன்” கூறியவள் அதை எடுத்துக் கொடுக்க,

அதை முன்னாடி பின்னாடி திருப்பிப் பார்த்தவன், அதைப் பார்ட் பார்ட்டாகக் கழட்ட,

“பாஸ்… பாஸ் என்ன பண்ணுறீங்க”

“உன் ஃபோனுக்கு ஆபரேஷன் பண்ணிட்டு இருக்கேன்” என்றவன் அவளது சிம் எடுத்துப் புதுப் போனில் போட்டு, அவளிடம் நீட்டினான்.

“என்ன இது” வைஷ்ணவி முறைக்க,

‘பாருடா முறைக்குறா’ சிரித்தவன் “இது உனக்கு வாங்கித்தாரேன்னு மட்டும் நினைச்சிடாத, இது வொர்க் யூஸ்க்கு வச்சிக்க”

‘அண்ணன் நல்லாவே மாறிட்டான்’ சிரிப்புடன் அவர்களையே பார்த்திருந்தாள் ஷிவானி.

“அதுதான் இங்க ஃபோன் இருக்கே” வைஷு கேட்க.

“இனி சிவாவை சும்மா சும்மா இங்க கூப்டாத அவன் அங்க வேலை பார்க்க வேண்டாமா, உனக்கு என்ன டவுட்னாலும் வாட்சப்ல கேளு. இங்க வேலை பாக்குற வரை இது வச்சுக்கோ ” என்றவன். அப்பொழுதுதான் அவளை முழுதாகப் பார்த்தான்.

வேறு ஒரு தாவணி அணிந்திருந்தாள்.

‘ஓஹோ நான் கட்டிபிடிச்சதும் மேடம் தாவணி வேற மாத்திட்டு வந்துட்டாங்களா? அவ்ளோ வேண்டாதவனா போயிட்டனா நான்’ முறைத்தவன்,

‘இதுக்காகவே உன்னைக் கட்டிக்கணும்னுடி… உன்னைக் கட்டி நீ எப்பவும் என்னைக் கட்டிபிடிச்சிட்டே இருக்க மாதிரி பண்ணுறேன்’ சபதம் எடுத்துக் கொண்டான்.

‘டிரஸ் போட்டுட்டு கட்டிபிடிச்சதுக்கே தாவணி மாத்துற நீ, டிரஸ் போடாம கட்டிபிடிச்சா நீ என்ன பண்ணுறன்னு நானும் பாக்குறேன்’ வில்லங்கமாக யோசித்தவன், அவளை வில்லங்கமாகப் பார்த்துச் சென்றான்.

அவன் கட்டிபிடித்ததில் அவனது வாசம் அவளது சுவாசத்தில் கலந்து அவளை என்னவோ செய்ய, வேகமாக வந்து அமர நாற்காலியில் லேசாக வெளியே நீட்டிக்கொண்டிருந்த ஆணியில் அவளது தாவணி மாட்டி கிழிய உடனே வீட்டுக்குப் போய்த் தாவணியை மாற்றிவிட்டாள்.

‘தாவணியை மாற்றினால் மட்டும் போதுமா?’ என்பதுபோல், அவனது கைகளின் அழுத்தம் அவள் உடல் முழுவதும் பரவியிருந்தது.

அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்த அவனது தாடியின் குறுகுறுப்பை இன்னும் அவளது கழுத்து உணர்த்திக் கொண்டிருந்தது.

அவளில் சின்னச் சின்ன மாற்றத்தை ஏற்படுத்தியது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!