இதயத்தின் ஓசைதான் காதல்!

இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 15

அந்த விடிந்தும் விடியாத காலை நேரம், வைஷு எண்ணம் முழுவதும் ஸ்ரீயே நிறைந்து இருந்தான்.

‘நேற்று இரவு அவன் கண்களில் இருந்தது என்ன? அவன் கண்கள் என்னிடம் கூறவந்த வார்த்தைதான் என்ன?’ இப்படியான எண்ணம் அவளிடம்.

அவனை மறுக்க எந்த காரணமும் அவளிடம் இல்லை, அதுதான்  மாறன் கூறியதும் சரி என்று விட்டாள். ஆனால்,  அவன் ஷிவானியிடம் பேசியது அவள் மனத்தை உறுத்திக் கொண்டிருந்தது.

அதே உறுத்தலுடன்தான் இப்பொழுது அவன் நேற்று இருந்த நிலையை சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

அவள் மனம் என்ன நினைக்கிறது என்றே அவளால் கணிக்க முடியவில்லை. அவனை திருமணம் செய்யப் பிடித்திருக்கிறதா என்றால் அவளுக்கு பதில் தெரியவில்லை. ஆனால், அவனோடான திருமணதிற்கு சரி என்று விட்டாள். இப்படியாக இருவரையும் பற்றிய யோசனையில் அவள் ஆழ்ந்திருக்க,

“வைஷு சீக்கிரம் குளிச்சு கிளம்பு” அப்பொழுதுதான் தூங்கி எழுந்த ஷிவானி அவளை அவசரப்படுத்த, எழுந்து குளிக்க சென்றாள்.  

***

இன்னும் விக்ரமால் ஜீரணிக்க முடியவில்லை. ஸ்ரீக்கும், வைஷ்ணவிக்கும் திருமணம் என்பதை கேட்டதில் இருந்து அவனால் அங்கு நிம்மதியாக இருக்க முடியவில்லை.

ஸ்ரீ மேல் பயங்கர கோபம் வந்தது. அவன் தன்னை நம்பவைத்து ஏமாற்றி விட்டதாகவே எண்ணினான்.

ஸ்ரீயின் சட்டையை பிடித்து கேட்க வேண்டும், ‘ஏன் என்னை நம்பவைத்து ஏமாற்றினான்’ அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

இப்பொழுது ஒரு பத்துநாட்களுக்கு முன்புதான் அவனுக்கு விசயமே தெரியும். அதிலும் அவனது நண்பர்கள் மூலமாய்தான் அறிந்துக் கொண்டான்.

அவனது வீட்டில் யாரும் ஒன்றும் கூறவேயில்லை. கேட்டதற்கு, “அவங்களுக்கு இஷ்டம் இல்லை” என்று கூறியிருந்தார் சிவராமன்.

“அன்னைக்கு அப்படி சொல்லவில்லையே?” என கேட்க,

அவரின் அமைதியும், அவர் இத்தனை நாட்கள் வைஷுவை பற்றி பேசாதது எல்லாம் யோசித்தவன், “உண்மையை சொல்லுங்கப்பா அவங்க வேண்டாம் சொன்னாங்களா? இல்லை நீங்க சொன்னீங்களா?” கடுமையாக கேட்க,

“அது…” என இழுத்தவரிடம் இருந்து போனை பறித்தார் அவனுடைய அம்மா.

“உனக்கு இப்போ என்னதுடா தெரியனும். எனக்கு அந்த பொண்ணை பிடிக்கல வேண்டாம் சொன்னோம். இப்போ என்ன உனக்கு  அவளை விட வசதியான நல்ல பொண்ணா பார்த்து நான் கட்டி வைக்கிறேன். நீ…” அதற்கு மேல் அவர் பேசுவதைக் கேட்ட அவன் லைனில் இருக்கவில்லை. அணைத்து வைத்திருந்தான்.

அதற்கு பிறகு அவர் போட்ட எந்த போன் காலுமே அவன் எடுக்கவில்லை.

அங்கிருந்து உடனே கிளம்ப முடியாத நிலை, மிகவும் கஷ்டப்பட்டு இங்கு சென்னை வந்திறங்கியவன் அன்றே மதுரைக்கு பயணப்பட்டான்.

இன்னும் அவனால் ஸ்ரீயின் செயலை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. ‘அவள் வீட்டில் பேசுகிறேன் என்றுக் கூறியவன் இப்பொழுது அவளுக்கு மணாளனாக மாறியிருப்பது’ அவனுள் கோபத்தை விதைத்திருந்தது.

***

  “கெட்டிமேளம்…‌ கெட்டிமேளம்…” ஐயரின் ஒலி அந்த மண்டபத்தை நிறைக்க மங்கள ஒலியோடு வைஷ்ணவியின் கழுத்தில் அந்த தங்கதாலியைக் அணிவித்தான் ஸ்ரீ சக்ரவர்த்தி.

இன்னும் அவனால் நம்பமுடியவில்லை. வைஷு அவனுக்கு மனைவியாக மாறியதை. ஏதோ ஒரு பரவச நிலையில் அமர்ந்திருந்தான்.

அலங்காரத்திற்கு இருந்த மலர்களின் சுகந்தமும், சந்தன வாசமும் அங்கே இருந்தவர்களின் மன மகிழ்ச்சிக்கு கூடுதல் இதம் சேர்த்தது.

தூரத்தில்  ஒதுங்கி நின்று தன் அக்காவையே கண்கொட்டாமல் பார்த்திருந்த வைஷாலியை கையை பிடித்து அழைத்து வந்து தன் அருகில் நிறுத்தியிருந்தாள் ஷிவானி.  

தன் அண்ணன் தலையில் இருந்த அட்சதையை துடைத்தவாறு ஷிவானியும், தன் தமக்கையின் சிகை அலங்காரத்தை சரி செயத்தவாறு வைஷாலியும் நின்றிருந்தனர்.

முழு அலங்காரத்தில் மிகவும் அழகாக இருந்தவளை, மாலையை சரி செய்வது போல் திரும்பி திரும்பிப் பார்த்தான் ஸ்ரீ.

 பட்டும், அரக்கு நிறமும் கலந்து நெய்யப்பட்டிருந்த அந்த பட்டு வைஷ்ணவிக்கு வெகு அழகாய் இருந்தது.

ஸ்ரீயின் அந்தஸ்து ஏற்கனவே நன்றாக தெரிந்தாலும் இன்று மிகவும் பிரமாண்டமாய் தெரிந்தது வைஷ்ணவியின் கண்களுக்கு.

அவள் கண்களில் தெரிந்த மிரட்சியை கவனிக்காமல் முழு நேரமும் வைஷ்ணவியின் அழகை அள்ளிப் பருகிக் கொண்டிருந்தான் ஸ்ரீ.

ஸ்ரீ கரண் பேரனின் கல்யாணத்தை வெகு கோலாகலமாக நடத்தி கொண்டிருந்தார். நகரின் அனைத்து முக்கிய வியாபாரிகள், அரசியல்வாதிகள் எனக் கூட்டம் நிரம்பி வழிந்தது.

வந்திருந்த ஜனத்திரளைப் பார்த்த ஸ்ரீ கரண் கொஞ்சம் அசந்துதான் போனார்.

ஸ்ரீக்கு இத்தனை அரசியல்வாதிகள் பழக்கம் உண்டா என்று ஆச்சரியத்தின் விளிம்பில் நின்றிருந்தார்.

அவர் அழைத்தது என்னவோ வியாபாரிகளைத்தான் ஆனால் இங்கு வந்ததோ பெரும்பாலும் அரசியல் புள்ளிகளே.   எங்குப் பார்த்தாலும் கரை வேஸ்டிகள்தான்.

‘இவனைப் பற்றி? இவன் யார் என்று அறியாமல் போனேனே’ காலம் கடந்து யோசித்தார் ஸ்ரீ கரண்.

அங்கு வந்திருந்தவர்கள் பெரும்பாலும் யார் என்றே தெரியவில்லை அவருக்கு. மரியாதை நிமித்தம் அனைவருக்கும் வணக்கம் வைத்து வரவேற்றுக் கொண்டிருந்தார்.

ஐயர் சொன்ன சடங்குகள் அனைத்தையும் முடித்து விட்டுப் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள் ஸ்ரீ – வைஷு தம்பதியினர்.

கோதைநாயகிக்கு அந்த கூட்டத்தைப் பார்க்கப் பார்க்க கண்கள் கலங்கியது.  மகள் அருகில் வரவும் வாரி அணைத்துக் கொண்டார்.

 ஏற்கனவே ஸ்ரீ மேல் நல்ல அபிப்ராயம் அவருக்கு இல்லை. இப்பொழுது கரடு முரடான அரசியல்வாதிகளைப் பார்க்கவும் தன்னைப் போல் பயம் வந்திருந்தது. 

சீர் என்று எதுவும் ஸ்ரீ கரண் அவர்களிடம் கேட்கவே இல்லை. இப்பொழுதும் திருமணத்தை மிக பிரமாண்டமாய் நடத்தவும் மிகவும் பயமாகியது. தன் மகளை நல்ல படியாக அங்கு பார்த்துக் கொள்வார்களா? என்ற பயம் வந்திருந்தது.

மாறனை பார்க்க, அவருக்கு எந்த பயமும் இருப்பதுப் போல் தெரியவில்லை. மகளையே கண்கொட்டாமல் பார்த்திருந்தார். ‘தன் மகள் இனி நன்றாக இருப்பாள். ஸ்ரீ தம்பி நன்றாக கவனித்துக் கொள்வார்’ என்ற நம்பிக்கை அவரிடம் மலையளவு இருந்தது.

ஸ்ரீ கரண் அன்றே கூறியிருந்தார் “என் பேரனின் ஆசைக்காக மட்டும்தான் உங்களிடம் பெண் கேட்கிறேன்” என்று. அதிலிருந்தே அவருக்கு சந்தோசம்தான். ஸ்ரீ கரணை பற்றி நன்கு தெரியும் அவருக்கு ஸ்ரீ செய்வது, சொல்வது சரி என்று விடுபவர்தான் ஸ்ரீ கரண். அதனாலேயே மகளைப் பற்றிய பயமில்லாமல் இருவரையும் பார்த்திருந்தார்.

“நீ எப்பவும் நல்லா இருக்கணும் வைஷுமா” கோதைநாயகியின் கண்கள் மிகவும் கலங்கிப் போனது.

 கோதையின் கண்ணீரை பக்கத்தில் நின்று பார்த்திருந்தார்  ஸ்ரீ கரண்.

“உங்க பொண்ணை என் பேரன் நல்லாப் பாத்துப்பான். நீ எதுக்கும் கவலைப் படாத கோதை” ஸ்ரீ கரண் கூற கொஞ்சம் நிம்மதியாய் உணர்ந்தார்.  

 ஆனாலும், மனம் தவித்துக் கொண்டிருந்தது. அவர்கள் பெரிய இடம். இவர்களோ அவர்களிடம் வேலைபார்பவர்கள். அவர்களுக்கும், இவர்களுக்கும் பழக்க வழக்கம், நிறைய நிறைய மாறுபடும். அவற்றுடன் பொருந்தி தன் மகள் நன்றாக வாழ வேண்டுமே என்ற எண்ணம் மலையளவு அந்த தாயின் மனதில் இருந்தது.

வைஷு மிகவும் பொறுப்பான, பொறுமையான பெண்தான். எல்லாவற்றையும் சமாளித்துக் கொள்வாள்தான். இருந்தாலும் கொஞ்சம் பயமாக இருந்ததென்னவோ உண்மைதான்.

அதே எண்ணத்துடன் அவளைப் பார்த்திருக்க, அவரின் கலக்கம் அறிந்தவள் அவரின் கைகளை அழுத்தி தட்டிக் கொடுக்க, அப்படியே பார்த்திருந்தான் ஸ்ரீ.

அவரின் வருத்தம் அவனுக்கும் புரிந்துதான் இருந்தது. இதெல்லாம் சொல்லி புரியவைப்பதல்ல, தாங்கள் வாழும் வாழ்கையை கண்டு புரிந்துக் கொள்வார்கள் என்று அமைதியாக நின்றுக் கொண்டான்.

 பெரியவர்கள் காலில் விழுந்து வணங்கி, வந்தவர்களைப் பார்த்து பேசி என்று நேரம் இறக்கை கட்டி பறந்திருந்தது.

வந்த பெரிய புள்ளிகள் பலரும் அவர்களிடம் கூறி கிளம்பியிருக்க, ஒரு பக்கம் பந்தியும் நடந்துக் கொண்டிருக்க, பெரும்பாலும் எல்லாரும் அங்கு சென்றிருக்க குடும்பத்தினரும், மற்றும் சிலரும் அங்கு நின்றிருந்தனர்.

அப்பொழுதுதான் ஃபோட்டோகிராபர் மணமக்களை சில ஃபோட்டோ எடுக்க மேடைக்கு அழைத்திருந்தார்.

அப்பொழுது வேகமாக அவர்கள் முன் வந்து நின்றான் விக்ரம்!

அவனை அங்கு கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை ஸ்ரீ!

எதிர்பார்க்கவில்லை என்பதல்ல அவனை சுத்தமாய் மறந்து விட்டிருந்தான். இப்பொழுது வரவும் வேகமாக வைஷு முகத்தைத்தான் பார்த்தான்.

அவளும் அப்பொழுது அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘இவன் ஏன் இங்க இப்போ வர்றான்?’ என்பதான யோசனை அவளிடம்.

‘இவன் எப்படி இப்போ இங்கே?’ என்பதான யோசனை அவனிடம்.

“என்னை நல்லா ஏமாத்திட்டல்ல? அவங்க வீட்டுல பேசுறேன் பேசுறேன்னு சொல்லி, நீ பேசி அவளை கட்டிகிட்டியா?” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.

‘ஐயோ! என்ன பேசுகிறான் இவன்?’ என்பதாய் ஸ்ரீ பார்த்திருந்தான்.

“என்ன பேசுற நீ? யாரு யாருகிட்ட பேசினா?” வைஷுவுக்கு புரியவேயில்லை.

“என்ன தம்பி என்ன பேசுறீங்க நீங்க?” என்றபடி மாறன் அவர்கள் முன்னே வர,

“ப்பா… நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க” அவரைத் தடுத்தவள் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

அவள் யாருக்கும் தெரியவேண்டாம் என்றுதான் அன்று ஸ்ரீயை தடுத்தாள், இன்று விக்ரம் எல்லார் முன் கூறவும் மிகவும் கோபம்வந்தது, “சொல்லு யாரு என்ன பேசினா?” என்றாள் கோபத்துடன்.

“இதோ நிக்குறானே ஸ்ரீ. இவன் கிட்டதான் நான் உங்க வீட்டுல பேச சொன்னேன், ஆனா அவன் என்னை பத்தி உங்க வீட்டுல பேசாம அவனைப் பத்தி பேசி இப்போ உன்னை கல்யாணம் பண்ணியிருக்கான். நான் உங்க வீட்டுல வந்து கேட்டும் நீ இவனை கட்டியிருக்க” என்றான் கோபத்துடன்.

எத்தனை வருட காதல் அத்தனையும் இவன் பறித்துவிட்டானே என்ற கோபம் அவனிடம் பிரதிபலித்தது.

இத்தனை நாள் ஸ்ரீ மேல் இருந்த மரியாதை எல்லாம் தானாக பறந்திருந்தது. இதெல்லாம் ஸ்ரீக்கு பிடிக்கவே செய்யாது. ஆனால், இன்று அமைதியாக நின்றிருந்தான்.

“இங்க பார், அன்னைக்கே நான் உன்கிட்ட சொல்லிட்டேன், என் பின்னாடி வராத உன்னை பிடிக்கலன்னு. இப்போ வந்து பிரச்சனை பண்ணுனா என்ன அர்த்தம்? எங்க வீட்டுல பேசினதும் எனக்கு தெரியாது. அப்படி பேசினாலும் நான் உன்னை ஏறிட்டுப் பார்த்திருக்கவே மாட்டேன்” அவனது கோபம் அவளுக்கு புரிந்திருந்தது அதே போல் அன்று நடந்த பிரச்சனையும் அவளுக்கு தெரியும் அதனால்தான் ஸ்ரீ அப்படி கூறியிருக்கலாம் என்று அவளே எண்ணிக் கொண்டாள். 

“என்ன… என்ன நடக்குது இங்க?” ஸ்ரீ கரண் ஒரு அதட்டல் போட்டார்.

ஸ்ரீ கரணுக்கு இந்த இவளது பேச்சு சுத்தமாக பிடிக்கவில்லை. அவரது முகம் ஒரு அதிருப்தியை காட்டியது.

அதிலும், மாறன் பேச வர அவரை தவிர்த்து வைஷு பேசியது அவர்க்கு பிடிக்கவில்லை.

“வைஷு கொஞ்சம் அமைதியாய் இரு” ஸ்ரீதான் அவளிடம் கூறினான்.

“நீங்க கொஞ்சம் பேசாம இருங்க, இது என் சமந்தபட்டது நான்தான் பேசணும்” அவனிடம் கூற, அவளையே பார்த்திருந்தான் அவன்.

எப்பொழுதும் பெண்கள் இப்படி சச்சரவில் ஈடுபடுவது அவனுக்கு பிடித்தமில்லாதது. அதிலும் இன்று அவர்களது திருமணம் இப்படி நடக்கவும் வருத்தமாகியது அவனுக்கு.

“கொஞ்சம் அமைதியா இரு வைஷு பிளீஸ்” அவன் கூற இப்பொழுது அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

அவன் பிளீஸ் போடவும் அவன் முகத்தைப் பார்க்க, அவன் முகம் கவலையாய் இருக்க சற்று தன்னை அமைதிப்படுத்தியவள்.

“ப்பா… இவன் என்னலாமோ சொல்லுறான் என்னனு கேட்டு சீக்கிரம் அவனை அனுப்புங்க” என்றவள் ஸ்ரீ கரண் அருகே சென்றாள்.

‘இந்த பெண் என்ன இப்படி திமிரா பேசுது,  அவளைப் பத்திதான் அவன் பேசுறான் இவ என்ன இப்படி பேசுறா?’ என்பதாக அவர் அவளையே பார்த்திருந்தார்.

அவர் அருகில் வந்தவள் அவளுக்கும் விக்ரமுக்கும் இடையில் அன்று நடந்ததைக் கூற அப்படியே கேட்டிருந்தவர். ‘இவள் மேல தப்பில்லை அதுதான் தைரியமா பேசுறா’ அவரே எண்ணிக் கொண்டார். கொஞ்சமாய் மனதில் அவளை மெச்சிக் கொண்டார்.

அதற்குள் மாறன் அவனை அழைத்துக் கொண்டு செல்ல, அவரின் பின்னே ஸ்ரீ கரணும் சென்றார். அவன் அப்பா வந்து பேசியது எல்லாம் கூற மிகவும் உடைந்து போனான் விக்ரம்.

பெற்ற தாய், தந்தையே ஏமாற்றிய பிறகு ஸ்ரீயை கூறி என்ன பயன் அப்படியே  அவன் வந்த வழியே திரும்பி நடந்தான் விக்ரம்.

ஆனாலும் உடனே அங்கிருந்து நகர முடியாதபடி அவனது காதல் அவனைத் தடுத்தது. கலைந்த தலையும், கசங்கிய தோற்றமாக இருவரையும் வெகுநேரம் பார்த்திருந்தான் விக்ரம். தாளமுடியாமல் மனம் ஊமையாய் அழுதது.

அவளுடனான வாழ்கைக்கு மிகவும் எதிர் பார்ப்புடன் காத்திருந்தான் அந்த காதலன்!

எப்படியும் தன் பெற்றோர் அவளுடன் தன்னை இணைத்து விடுவார்கள் என்று பெரும் கனவில் லண்டனில் வசித்திருந்தான்.

ஆனால், இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அவளுக்கு எல்லாமுமாக அவன் மாற ஆசைக் கொண்டான்.

ஆனால், அவளுக்கு எல்லாமுமாக இன்னொருவன் மாறிக் கொண்டிருந்தான்.

தான் லண்டன் செல்லாமல் இருந்திருந்தால் எப்படியாவது அவளை கை பிடித்திருக்கலாமோ? என்று மற்றொருவன் கை பிடித்தபின் சிந்தித்துக் கொண்டிருந்தான்.

  அது தவறு என்று தெரிந்தாலும் அவனால் அப்படி நினைக்காமல் இருக்க முடியவில்லை.

ஸ்ரீ சிரித்தபடியே யாரையோ அவளுக்கு அறிமுகப்படுத்த, சிரித்தபடியே அவர்களிடம் பேசிய வைஷுவை கண்களில் நீர் வழிய அவளைப் பார்த்திருந்தான்.

அந்த இடத்தில் இப்பொழுது தான் இருக்க வேண்டியது, என்ன தடுத்தாலும் அவனால் இப்படி நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அவளை கடைசியாக ஒரு முறை ஒரே ஒரு முறை மிக அருகில் மிக மிக அருகில் பார்க்க ஆசைக் கொண்டது மனது.

புறங்கையால் கண்களை அழுந்த துடைத்தப்படி மண மேடையை நோக்கி சென்றான் விக்ரம்.

அவன் கண்களை துடைத்து துடைத்து நடந்து வருவதைக் கண்ட ஸ்ரீயின் மனம் ஒரு நிமிடம் நின்று துடித்தது.

அருகில் மிக அருகில் வந்தவனது நடை ஒரு நிமிடம் தயங்கியது.

அவர்கள் இருவரையும் ஜோடியாகப் பார்க்க கலங்கியது நெஞ்சம்.

அருகில் மிக அருகில் வந்தவன் ஒரு நிமிடம் வைஷு முகத்தைப் பார்த்தவன் டக்கென்று ஸ்ரீ முன்னால் வந்தான்.

“அவங்களை நல்லா பார்த்துகோங்க ஸ்ரீ ண்ணா” என்றவன் அப்படியே இறங்கி நடந்தான்.

ஸ்ரீ ஏதோ பதில் சொல்லும் முன் வேகமாக மேடையை விட்டு இறங்கி இருந்தான் அவன்.

விக்ரமின் கைகள் கண்களில் வழிந்த நீரை துடைத்து சென்றது!

***

நேரம் கடக்கவே நல்ல நேரம் முடிவதற்குள் தம்பதியரை  அவர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

ஷிவானி ஆரத்தி எடுக்க வீட்டினுள் வலது காலை எடுத்து வைத்தாள் வைஷு. வைஷு  பல முறை வந்த வீடுதான்.

இன்றைய வருகை அவளது வாழ்வின் அடுத்த கட்டத்தை ஆரம்பிக்கும் வருகை. 

அந்த வீட்டின் மருமகளாக, ஸ்ரீ சக்ரவர்த்தியின் மனைவியாக… அவனது சாம்ராஜ்யத்தின் மகாராணியாக.

“வா வைஷு… வந்து விளக்கேத்து.” அங்கிருந்த பாட்டி ஒருவர் அழைக்க பூஜையறைக்குப் போனாள் வைஷு. அவள் அருகில் நின்றுக் கொண்டான் ஸ்ரீ.

அங்கிருந்த சாமி போட்டோவின் அருகில் தனி தனியாக மூன்று போட்டோ மாலைப் போட்டு வைக்கபட்டிருக்க,

“இதான் உன் மாமன் – மாமியார், இது உன் பாட்டி  நல்லா வேண்டிக்கோ” யாரோ உரைக்க அவர்களை கூர்ந்துப் பார்த்தாள் வைஷு.

மூவரின் சாயலிலும் ஷிவானி சாயல் ஒட்டியது. ஸ்ரீ சாயலில் அங்கு யாருமே இல்லை. யோசனையாக புருவம் உயர்த்தினாள் வைஷு.

“ஸ்ரீ இங்க வா” அதற்குள் ஸ்ரீ கரண் அழைக்க இருவரும் வெளியே வந்தனர்.

“ஷிவானி, அண்ணியை அறைக்கு கூட்டிட்டு போ” ஸ்ரீ அவளிடம் கூறி தாத்தாவை நோக்கி செல்ல,

“வைஷு நீயும் வாமா” என அவளையும் அழைத்தார் ஸ்ரீ கரண்.

இருவரும் யோசனையை அவர் முன் போய் நிற்க, அவன் கையில் ஒரு சாவியை திணித்த அவர், “ஸ்ரீ உனக்கு நான் இங்க பக்கத்துல ஒரு வீட்டை கட்டினோம்ல நீயும் வைஷுவும் இனி அங்க இருங்க” என,

“தாத்தா அது நாம ஷிவானிக்கு கட்டின வீடு”

“இல்லப்பா அது நான் உனக்கு கட்டினது. நீ உன் வீட்டில புது வாழ்கையை ஆரம்பி இது இந்த தாத்தா உனக்கு தர கல்யாண பரிசு”

மறுக்க தோன்றவில்லை அவனுக்கு, “சரி” என்று வாங்கிக் கொண்டான்.

அது ஒன்றும் அத்தனை தூரம் இல்லை. இவர்கள் வீட்டை தாண்டி மூன்றாவது வீடு. 

“சரி… அங்க போய் பால் காச்சுட்டு அப்படியே வைஷு வீட்டுக்கும் போயிட்டு சீக்கிரம் வாங்க”

அங்கு யாரோ, ‘கோவிலுக்கு செல்ல வேண்டும்’ என கூற,

“ஆமா ஸ்ரீ கோவிலுக்கு போகணும் சீக்கிரம் வாங்க, விசேஷ பூஜை வைக்க சொல்லிருக்கேன்” ஸ்ரீ கரண் கூறினார்.

மீண்டும் எல்லாரும் புது வீட்டுக்கு சென்று, அங்கு பால் காய்த்து, வைஷு வீட்டுக்கு சென்று அங்கிருந்து ஸ்ரீ கரண் வீட்டுக்கு வந்து சிவாவை விட்டு பொருட்கள் மாற்றி என்று நேரம் இறக்கை கட்டி சென்றது.

அதற்குள் வைஷுவும், ஸ்ரீயும் ஒரு சின்ன தூக்கம் போட்டு எழுந்திருக்க மணி ஆறை தொட்டிருந்தது.  

வைஷு அருகில் வந்த ஷிவானி அவளிடம் புது புடவை ஒன்றை கொடுக்க, யோசனையாகப் பார்த்தவளிடம்,

“கோவிலுக்கு போகணும், சீக்கிரம் கிளம்பு” எனக்கூறி வெளியே செல்ல, அடுத்த சில நிமிடங்களில் குளித்து கிளம்பியிருந்தாள். 

ஷிவானி கொடுத்திருந்த பிங்க் நிற புடவையை நேர்த்தியாக உடுத்தி தேவதையாக அவள் வெளியே வர,

ஸ்ரீ கரணுடன் நின்று பேசிக் கொண்டிருந்த ஸ்ரீ காதில் அவளது மெல்லிய கொலுசின் ஓசைக் கேட்க, அவளை நோக்கி திரும்பியவன் சுவாரஸ்யமாக ஒற்றை புருவம் ஏற்றி இறக்கி அவளை ரசித்தவனைக் கண்ட பொழுது, அவளை அறியாமல் அவளில் ஒரு நாணம் பூக்க முகத்தை குனிந்துக் கொண்டாள்.

“ஒரு நிமிஷம் வைஷு” அவளிடம் கூறியவள், அவளுக்கென்று வைத்திருந்த பூவை எடுத்து வந்து அவளது நீள கூந்தலுக்கு வைத்து விட்டாள்.

எப்பொழுதும் செல்லும் கோவில் நடந்து செல்லும் தூரம் ஆதலால் நடந்தே சென்றனர்.  ஸ்ரீயும் – வைஷுவும் அருகருகே நடந்து செல்ல, ஸ்ரீ அருகில் ஷிவானியும், வைஷு அருகில் வைஷாலியுமாக நடந்து சென்றனர்.

எப்பொழுதும் செல்லும் கோவில்தான் இருந்தாலும் இன்று ஸ்ரீயுடன், அவன் அருகில் உரிமையுடன் நடந்து செல்வது அவளுக்கு புது அனுபவமாக இருந்தது.

மனதுக்கு பிடித்தவள், மிகவும் விரும்பி மணந்தவள் அவன் அருகில் கைகள்  உரசும் அருகில் நடந்து வருவது அவனுக்கு புது அனுபவமாக இருக்க அந்த நிமிடத்தை ஆழ்ந்து அனுபவித்தான் ஸ்ரீ. 

கோவிலுக்கு சென்றதும் எதிர்பட்டவர்கள் எல்லாரும் ஸ்ரீக்கு ஒரு சிநேக வணக்கத்தை வைத்தனர். அவனைத் தொடர்ந்து வைஷுவைப் பார்த்தும் மெலிதாக சிரித்து வணக்கம் வைக்க,

அவளுக்கு கூச்சமாக இருந்தது.  ஸ்ரீ அருகில் நெருங்கி அவனது கையைப் பிடித்துக் கொண்டாள்.

அவளது செயல் அவனது மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சியை பறக்க வைத்திருந்தது. நேற்று கேட்ட கேள்விக்கு பதில் இப்பொழுது  அவனுக்கு தெரிந்தது மனம் மகிழ்ச்சியில் திளைத்தது.

 இவர்களுக்காக பூஜை செய்ய குருக்கள் எல்லாம் ரெடியாக வைத்திருக்க,   இவர்கள் வந்ததும் பூஜையை ஆரம்பித்திருந்தார்.

தெய்வத்தின் முன் கண்களை மூடி, ‘நான் இவளை எதற்கும் யாருக்காகவும் விட்டு போக கூடாது’ என்ற வேண்டுதல் ஸ்ரீயிடம் இருந்தது.

‘இதுதான் எனக்கான வாழ்க்கை, அவனை நன்கு புரிந்து மனமொத்து வாழ வேண்டும் என்ற வேண்டுதல்’ அவளிடம் இருந்தது. 

பூசாரி எல்லாருக்கும் விபூதி கொடுக்க, தனக்கும் வைத்து, அவளுக்கும் வைத்துவிட்டான் ஸ்ரீ. இதை பார்த்துக் கொண்டிருந்த கோதையின் மனது நிறைந்துப் போனது.

“போகலாமா?” என்றவன் அவளை கையை பிடித்து அழைத்து வந்தான். வீட்டுக்கு செல்லும் வரை ஸ்ரீ அவளது கையை  விடவே இல்லை.

 

ஸ்ரீ இப்பொழுது மட்டுமல்ல இனி எப்பொழுதும் அவளது கையை விடமாட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!