இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 16

கோவிலுக்கு சென்று வந்ததில் இருந்து இருவர் மனதும் நிறைந்து இருந்தது. அவன் வீட்டில், அவனுடன் இருப்பது அவளுக்கு பெரிதாக எதுவும் தெரியவில்லை.

நன்றாக பழகிய வீடு என்பதால் அந்த எண்ணம் வந்ததா? இல்லை இங்கு யாரும் அவளை, அவர்களை விட குறைவாக பார்க்காததால் அந்த எண்ணம் வந்ததா? அவளே அறியாள்.

ஆனால், அவனுடன் இன்னும் சகஜமாக பேச வரவில்லை. ஏதோ ஒரு முள் மனதின் ஓரம் உறுத்திக் கொண்டிருக்கிறது. அது அன்று ஷிவானியிடம் அவன் பேசியதைக் கேட்டாதால் கூட இருக்கலாம்.  

   அப்படியே அங்கு அமர்ந்திருந்து நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அருகில் ஸ்ரீ அமர்ந்திருந்தான். அவளையேத்தான் பார்த்திருந்தான்.

அவள் ஏதோ யோசனையில் இருப்பதாகப்பட்டது. ‘என்ன?’ என்று கேட்க மனதில்லை. அப்படியே விட்டுவிட்டான்.

வீட்டில் ஷிவானி, சிவா இன்னும் இருவர் சேர்ந்து மதியம் கொண்டு வைத்திருந்த பொருட்களை செட் செய்துக் கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு பொருள் வைக்கும்பொழுதும் வைஷ்ணவியை ஒரு வார்த்தை கேட்டு கேட்டு வைத்தாள் ஷிவானி. பார்த்திருந்த கோதைக்கு மிகவும் சந்தோசமாகியது.

‘பெரிய வீட்டில் தன் மகள் வாழப்போகிறாள் எப்படி நடத்துவார்களோ?’ என்று பயந்து இருந்தவர் மனதில் கொஞ்சமாய் நிம்மதி பிறந்தது.

ஷிவானி தன் அண்ணனுக்காய் ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து செய்தாள். கூடுதலாய் வைஷ்ணவியை அவளுக்கு பிடித்திருந்தது.

அதற்குள் இரவு உணவு நேரம் வர, எல்லாரையும் சாப்பிட அழைத்தார் கோதை.

எல்லாம் புது வீட்டில்தான் நடந்தது. ஸ்ரீ வீட்டினரும், வைஷூ வீட்டினர் மட்டுமே இருந்தனர் அங்கு.  

ஹோட்டலில் இருந்துதான் சிவா ஆர்டர் செய்திருந்தான். எல்லாருக்கும் என்ன தேவை என்று கேட்டு ஆர்டர் செய்ய, இரவு நேரம் என்பதால் எல்லாரும் இட்லியே சொல்ல, ஷிவானி, வைஷாலி, வசந்த் மூவரும் பரோட்டா ஆர்டர் செய்தனர்.

அவர்களுக்குள் பேசியபடியே எல்லாரும் உணவை உண்ண, வைஷு தட்டை அளந்துக் கொண்டிருந்தாள். ஏதோ ஒரு இனம் புரியாத பயம் மனதை கவ்வ,  உண்ணாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

ஸ்ரீ அவளை முதலில் கவனிக்கவில்லை. பாதி உணவை உண்ட பின் அவளைப் பார்க்க, கைகளாய் அளந்துக் கொண்டிருப்பதை கண்டவன், நேரடியாக அவளிடம் எப்படி சொல்ல என்று சங்கடப்பட்டு,

அருகில் அமர்ந்திருந்த ஷிவானியிடம், “ஷிவானி, வைஷு சாப்டல ஏன்னு கேளு?” என்க,

“ஏன் நீ கேட்கமாட்டியா?”

“எல்லாரும் இருக்காங்க பாரு எப்படி கேட்க?”

“ஏன் உன் பொண்டாட்டி தானே நீ கேளு”

“பிளீஸ் ஷிவானி” என்க,

அவனை பார்த்தவள், அவளை நோக்கி திரும்பி “வைஷு சாப்டலியா?” என்க,

ஷிவானி கேட்பதை உணர்ந்து டக்கென்று அவள் ஸ்ரீயைப் பார்க்க, அவன் கண்களாய் ‘சாப்பிடு’ என்க,

“இல்… இல்ல… இதோ சாப்டுறேன்” தடுமாறி ஷிவானியிடம் உரைத்தாள்.

“ஷிவானி என்ன நீ வைஷுவை பேர் சொல்லுற அவ உனக்கு அண்ணி” ஸ்ரீ கரண் கூற,

“சரி தாத்தா” என்றாள்.

அதற்குள் எல்லாரும் சாப்பிட்டு முடித்திருக்க, அவர்களுடன் வைஷுவும் எழுந்துக் கொண்டாள். அவள் சரியாக சாப்பிடாததை கவனித்துதானிருந்தான்  ஸ்ரீ.

ஆயிரம் பத்திரம் கூறி, வைஷு குடும்பம் அவர்களிடம் விடைப் பெற, அவர்களுடன் ஸ்ரீ கரணும், ஷிவானியும் விடைப்பெற வாசல் வரைக்கும் வந்து விடை கொடுத்தனர் இருவரும்.

 இப்பொழுது தம்பதிகள் இருவரும் தனித்து விடப்பட்டனர். அவர்கள் உலகில் அவர்கள் மட்டுமாய் இப்பொழுது.

வைஷு மெதுவாக சமையல் அறைக்குச் செல்ல, அவளது கொலுசின் ஓசையும் அவளின் அவனும்!

அவளின் பின்னே அவனாக சென்றானா? இல்லை அவளது கொலுசொலி இழுத்துச் சென்றதா? அவன் மனம் மட்டுமே அறியுமதை!

இருவருக்குமான அவ்வீட்டின் அமைதியை கலைத்த அவளின் கொலுசொலி அதனின் ஆதிக்கத்தை நிலைநாட்டியது.

அவனின் இதயத்தை அவள் எடுக்கும் முன்னே அவளின் கொலுசு எடுத்துக் கொண்டதைப் போல், வீட்டின் ஆதிக்கத்தை அவள் தன் கையில் எடுக்கும் முன்னே கொலுசின் ஓசை எடுத்துக் கொண்டது!

அவர்களின் சத்தம் இல்லாத அந்த சமையல் அறையில் அவள் அங்கும் இங்கும் நடக்கும் ஓசை மட்டும் ஒலித்துக் கொண்டிருந்தது.

அவள் என்ன செய்யப்போகிறாள் என அறியத்தான் அவளின் பின்னே சென்றான். மதியம் காய்த்த பாலை அவள் சூடு செய்வதைக் கண்டவன், அப்படியே விலகி அறைக்கு சென்றான்.

அவள் அம்மா கூறியதைப் போல் பாலை சூடு செய்தவள், அதை செம்பில் ஊற்றி கையில் ஒரு டம்ளருடன் அறைக்கு சென்றாள். கோதை கூறியதை அப்படியே கடைபிடித்தவளுக்கு அவன் இருக்கும் அறைக்குச் செல்ல மிகவும் தயக்கமாய் இருந்தது.

‘என்ன வைஷு எவ்ளோ தைரியமா இருப்ப, இப்போ இப்படி ஆகிட்டியே!’ அவளே அவளுக்கு கேட்டுக் கொண்டாள்.

உண்மையை சொல்லப்போனால் இப்பொழுது கொஞ்ச நேரமாகத்தான் தயக்கத்தைக் காட்டுகிறாள் அவள்.

லேசாக திறந்திருந்த கதவின் அருகே சென்றாள் வைஷு. அவள் அறைக்குள்ளே செல்லும் முன் அவளது கொலுசின் ஓசை ‘நான் வருகிறேன்’ என்று அவனுக்குக் கூறியது!

‘கொலுசு சத்தம் கேட்டு வெகு நேரம் ஆகியும் ஆளை காணுமே?’ இவன் யோசித்திருக்க,

இவள் வெளியே நின்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

இவன் எழுந்து வெளியே வர, கையில் சொம்பை வைத்துக் கொண்டு இவள் யோசித்திருப்பதை கண்டவன்,

“வைஷு வா” என அழைத்து அவன் உள்ளே செல்ல, பின்னே இவளும் சென்றாள்.

அங்கிருந்த மேஜையில் பாலை வைத்தவள் அந்த அறையைப் பார்த்தாள். அவன் இவளைப் பார்த்திருந்தான்.

இருவருமே எதுவும் பேசவில்லை. அவன் ஏதாவது பேசுவான் என இவள் நினைத்திருக்க, அவள் ஏதாவது கேட்பாள் என இவன் பார்த்திருக்க. ரெண்டு பேரும் ஏதாவது பேசுங்க என்று நான் பார்த்திருக்க நேரம் கடந்ததுதான் மிச்சம். இருவருமே பேசவில்லை.

அவன் கட்டிலில் அமர்ந்திருக்க, இவள் அவன் முன் நின்று அவனைத் தவிர அறை முழுதும் பார்த்திருந்தாள்.

 அவனே பேச்சை ஆரம்பிக்க எண்ணினான், “ஏன் நீ சரியாவே சாப்டல, உனக்கு இட்லி பிடிக்காதா?” ஏதோ கேட்கவேண்டும் என்று எண்ணியவன் இப்படி கேட்க,

அவனைப் பார்த்தவள், “இல்லை” என இவள் தலையாட்டினாள்.

“அப்போ ஏன் சாப்டல, இப்போ பசிக்குதா? ஏதாவது சாப்டுறியா?”

“வேண்டாம்” என மீண்டும் இவள் தலையாட்ட,

“ஏதாவது கேட்டா வாய் திறந்தது பதில் சொல்லு” என்றான் அன்று போல் இன்றும்.

‘என்ன இவன் என்னையே மிரட்டுறான்’ இவள் முறைக்க,

அவளையேப் பார்த்தான் ஸ்ரீ. இப்பொழுது ஒரு பச்சை நிறத்தில் லேசாக கரையிட்ட காட்டன் பட்டு புடவை அவள் உடலை தழுவி இருந்தது. அவள் நேர்த்தியாக கட்டியிருந்த புடவைக் கட்டு ரொம்பவே பிடித்திருந்தது அவனுக்கு.

அவளைப் பார்க்க, அவளையும் மீறிய சோர்வு முகத்தில் தெரிய, ‘தங்களுடைய புதிய வாழ்கையை மெதுவாக ஆரம்பிக்கலாம்’ என எண்ணியவன் “தூங்குறியா வைஷு?” என,

“சரி” என இவள் வாய் திறந்து பதில் சொல்ல,

‘என்னடா நான் சொல்லுறதை இவ கேட்குறா?’ ஒரு நொடி யோசித்தவன், கட்டிலில் இருந்து எழுந்து அவளைப் படுக்கக் கூறியவன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துக் கொண்டான்.

 “நீ தூங்கலியா?”

‘அட! ஒரு நாளுல அக்கறை’ மனதில் எண்ணியவன், “இல்லை நீ தூங்கு நான் அப்புறம் தூங்குறேன்” என்று நாற்காலியை கட்டில் அருகே தள்ளிப் போட்டு காலை கட்டில் ஓரத்தில் வைத்து அவளையேப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

நேராக படுத்திருந்தவள், இவன் நாற்காலியை தள்ளுவதைப் பார்த்தவள், அந்த பக்கம் திரும்பி படுக்க,  அவளது கொலுசு மெல்லிய சிணுங்கலை வெளியிட்டது.

அவனது பார்வை அப்படியே அவளது கொலுசில் நிலைத்தது.

 வெகு நேரம் பார்த்திருந்தவன், தூங்கலாம் என எழ, அப்பொழுதுதான் அவள் கொண்டு வந்து வைத்திருந்த பாலைக் கண்டான்.

“வைஷு”

உடனே எழுந்துக் கொண்டாள் அவள். இந்த புடவையை கட்டி அப்படியே படுக்க அவளுக்கு தூக்கம் வரவில்லை.

வீட்டில் என்றால் இரவில் எப்பொழுதும் தாவணியின் பாவடையும் மேலே அவளது தம்பியின் சட்டையும் அணிந்துப் படுத்திருப்பாள் இன்று புடவையில் படுக்க சுத்தமாய் தூக்கம் வரவில்லை.

அந்த பக்கம் திரும்பி கண்களை திறந்தே வைத்திருந்தவள், அவள் அழைத்ததும் எழுந்துக் கொண்டாள்.

“இந்த பால் யாருக்கு?” தெரிந்தே கேட்டான். 

 அவனது கேள்விக்கு பதில் சொல்லாமல் ‘ஏன் உனக்கு தெரியாதா?’ என முறைக்க,

‘என்னடா இவ எல்லாத்துக்கும் சேர்த்து பழிவாங்குறாளா? இல்லை தெரியாம முறைக்குறாளா?’ இவன் யோசிக்க,

“உனக்குதான், அம்மா குடுக்க சொன்னாங்க” என்றாள் இப்பொழுது.

“அப்போ எடுத்து தரலாமே?”

கட்டில் மேல் ஏறி நின்று, நின்ற வாக்கிலே பாலை எடுத்து  தான் குடித்து மீதியை அவனிடம் நீட்ட,

‘என்னடா ஸ்ரீ, நீ நினைச்சதை விட பெரிய ஆளா, இருப்பா போலவே?’ எண்ணியபடியே அவளிடம் பாலை வாங்கி,

“எனக்கு இவ்வளவு வேண்டாம். நீ தான் ஒழுங்காவே சாப்டல நீ இன்னும் கொஞ்சம் குடி”

“சரி தா” என இவள் கையை நீட்ட,

“இல்ல நான் குடிச்சிட்டு தாரேன்” என இவன் குடித்து மீதியை கொடுக்க,

“எனக்கு வேண்டாம் போதும்” என்றாள் அவன் வாய் வைத்து குடிப்பதைப் பார்த்து.

“நீ ஒழுங்காவே சாப்டல, அப்புறம் காலையில் மயங்கி விழுவ, நான்தான் ஏதோ பண்ணிட்டேன்னு உங்கம்மா என்னை திட்டவா? நீ இப்போ குடிக்கிற… இல்லன்னா நான் உன்னை பிடிச்சு உன் வாயில ஊத்துவேன்” இவன் வாய் பேச,

 ‘எதற்குடா வீண் வம்பு’ என எண்ணியவள் அவனிடம் பாலை வாங்கி குடித்து சொம்பை அங்கு வைத்து அவன் படுக்கும் வரை அவள் கட்டிலை விட்டு இறங்கவில்லை.

அவளது செயலை சிரித்தபடியே பார்த்திருந்தவன், அவள் இன்னும் நிற்பதைக் கண்டு, “தூங்கலியா வைஷு” என,

“எனக்கு இந்த புடவை கட்டிட்டு தூங்க வரல”

“ஓ… வீட்டுல என்ன போடுவ அதையே போட்டு படு”

“அ… அதுவந்து வீட்டுல வேற புடவை கட்டுவேன்” தம்பி சட்டை போட்டு தூங்குவேன் என அவனின் சொல்ல முடியவில்லை அவளால்.

 “சரி… அப்போ கட்டிக்கோ” என,

“நீ இருக்கல்ல”

“சரி, நீ கட்டு நான் வெளிய இருக்கேன்” அவன் எழபோக,

“இல்லை… இல்லை… வேண்டாம் நீ அந்த பக்கம் திரும்பி படு நான் மாத்திப்பேன்” என,

“நான் ரொம்ப நல்லவன் இல்லை வைஷூ” என இவன் வாயடிக்க,

“நானும் ரொம்ப நல்லவள் இல்லை” என இவள் பதில் கொடுக்க,

 ‘எதுக்குடா வம்பு?’  என அவன் திரும்பிப் படுக்க,

இந்த புடவையை தவிர்த்து, சாதா புடவை ஒன்றை சுற்றியவள், அவனது அருகில் வந்து படுத்துக் கொண்டாள். அவன் அருகில் படுக்க அவளுக்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை. அவன் இருக்கும் பொழுது அவளுக்கு உடை மாற்ற எந்த தயக்கமும் இருக்கவில்லை.

இதுவே அவன் மனதில் ஒரு நம்பிக்கையை தந்திருந்தது. ‘அவளுக்கு அவனைப் பிடிக்கும்’ என்று.

அப்பொழுது கூட ‘அவனுக்கு அவளைப் பிடிக்கும்’ என்று சொல்ல தோன்றவில்லை.

 ***

அடுத்த நாள் விடியல் இருவருக்கும் ஒரு விதமான நிறைவான விடியலாய் இருந்தது.

இவன் எப்பொழுதும் போல் எழுந்துக் கொள்ள, அருகில் பார்க்க வைஷு இல்லை, ‘இவ காலையிலே எங்கே போனா? டீவில வர போல காலையிலே குளிச்சிட்டு தண்ணீ சொட்ட சொட்ட காபி கொண்டு வர போறாளா?’ யோசனையுடன் இவன் வாசலையேப் பார்த்திருக்க,

வாஷ் ரூம் கதவை திறந்து வந்தாள் அவள். முகத்தை கழுவி வந்திருப்பாள் போல, காலை தூக்க கலக்கத்துடன் அது ஒரு அழகை அவன் கண்களுக்கு தந்தது.

 ‘ஓ.. காஃபி இல்லையா?’ தலையை கோதியவன் அவளைக் கண்டு, “குட் மார்னிங் வைஷு” என,

நேற்று இருந்த பயம், சோர்வு எதுவும் இல்லாமல் இன்று இருந்தவள், ‘இவனுக்கு எதுக்கு குட் மார்னிங் சொல்லணும்? நான் இவனுக்கு சரி வரமாட்டேன்னு சொன்னவன் தானே, எவ சரி வருவாளோ அவளே சொல்லட்டும்’ எண்ணியவள் அவனை காணாதவள் போல் வெளியே சென்றாள்.

‘என்னடா இவ. ஒரு குட் மார்னிங் சொல்லாம போறா? அமைதிக்கு பின் புயல் வருமோ?’ யோசனையாக எழுந்து காலை கடனை முடித்து வெளியே வர,

ஹாலில் அமர்ந்திருந்து அவளுக்கான காஃபியை குடித்துக் கொண்டிருந்தாள் வைஷு.

அவள் முன்னே வந்தவன், அவளுக்கு முன் இருந்த டேபிளில் அவனுக்கான காஃபி இருக்கா? என்று பார்க்க, அது இல்லாமல் போக, ‘ஸ்ரீ ஏதோ இவ பழிவாங்குறா என்னனு சீக்கிரம் கண்டு பிடி’ மனம் எடுத்துரைத்தது.

“வைஷு காஃபி”

“உனக்கு நான் போடல ஸ்ரீ, நீ எப்படி குடிப்பன்னு எனக்கு தெரியாதுதானே, அதுதான் எனக்கு மட்டும் நான் போட்டுகிட்டேன். இன்னைக்கு ஒரு நாள் உனக்கு போட்டுக்கோ நான் நாளையில் இருந்து உனக்கும் சேர்த்து போடுறேன்” என நீளமாக பேசினாள்.

அவளைப் பார்த்தவன், “சரி” என அவளை விட்டு விலக,

“போயிட்டானா?” என இவள் கொஞ்சமாய் திரும்புவதற்க்குள்,

அவளின் பின்னோடு வந்து, அவள் கையை பிடித்து அவளது காபியை குடித்தான் அவன்.

“ஏய்… எச்சி” இவள் கூற,

“உன் எச்சி நான் குடிப்பேன், நீ வேணும்னா இதை குடிக்கிறியா?” என்றான் அப்பொழுதுதான் அவள் கையில் இருந்து பறித்த அவன் குடித்த காஃபியை நீட்டி.

   இவள் முறைக்க, ஒரே மூச்சில் மீதி இருந்த காபியை குடித்தவன் அறைக்கு ஓடிப் போனான்.

‘காலையில் அவளது வீட்டில் விருந்து’ என நேற்றே கூறியிருந்தார் ஸ்ரீ கரண்.

‘வைஷு வருவதற்குள் குளிக்கலாம்’ என பாத்ரூம் உள்ளே நுழைந்தான் ஸ்ரீ.

சமையல் அறையில் சில பொருட்களை அங்கும் இங்கும் மாற்றி வைத்தவள், ‘வீட்டுக்கு போகணும் வசந்த் வரதுக்குள்ள குளிக்கலாம்’ என அறைக்கு செல்ல, அங்கு ஸ்ரீ குளித்துக் கொண்டிருப்பதால் அங்கயே அமர்ந்திருந்தாள்.

இவனுக்கான டவல், சோப் எல்லாம் மற்றொரு அறை பாத்ரூமில் நேற்றே வைத்திருந்தாள் வைஷு. இவளது பொருட்கள் இவர்கள் அறையில் இருந்தது.

‘அவன் பொருட்கள் இல்லாமல் எப்படி இவன் குளிக்கிறான் வரட்டும் அவன்’ கருவியபடியே தான் அமர்ந்திருந்தாள்.

கொஞ்ச நேரத்தில் குளித்து இடையில் ஒரு டவலை கட்டி தலையை மற்றொரு டவலால் துடைத்தபடி வந்தான் ஸ்ரீ.

அவன் இடையில் கட்டியிருந்த அவளது டவல் அவளைப் பார்த்து சிரித்தது. அதிலும் அவளது சோப் வாசனை அவன் வெளியில் வரும் பொழுது வீச, கடுப்பாகியது அவளுக்கு.

‘சரி வராதுன்னு சொன்னவனுக்கு என் சோப், டவல் எல்லாம் சரி வருமா?’ கடுப்பாக,

“அங்கதான் உன் சோப் இல்லையே நீ எப்படி குளிச்ச?”

“இல்லையே அங்க சோப் இருந்திச்சே, நல்லா வாசமா வேற இருந்திச்சே” என்றான் அவள் கேட்க வருவது புரியாமல்.

“அது என் சோப், எதுக்கு நீ எடுத்த? உன் சோப், உன் டவல் எல்லாம் அந்த ரூம்ல இருக்கு” முறைக்க,

இப்பொழுது அவள் கேட்க வருவது புரிய, “உன்னையே நான் முழுசா எடுத்துப்பேன், அந்த சோப்பை விடுவனா என்ன?” மெதுவாக முணுமுணுக்க,

“என்ன சொன்ன நீ?” முறைக்க,

“நான் ஒன்னும்  சொல்லலியே, இப்போ நான் டிரஸ் மாத்தப் போறேன் இருந்துப் பாக்க போறியா? இல்ல…” என அவன் இழுக்க,

“உன்னை…” என்றபடி அங்கிருந்த தலையணையைத் தூக்கி அவன் மீது வீசி வெளியே சென்றாள் வைஷ்ணவி.

அவளை போலவே அவளது கொலுசும் அவன் மேல் செல்ல கோபம் கொண்டு அவளின் பின்னே ஓடியது.

செல்லும் அவளையே பார்திருந்தவன் முகத்தில் ஒரு ரகசிய புன்னகை. 

‘இவள் மட்டுதான் எனக்கு சரி வருவாள் என்று சொல்லாமல் சொல்லிய புன்னகை அது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!