இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 19

கடந்த சிலமணி நேரத்தில் எத்தனை எத்தனை அதிர்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக தாக்க அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தாள் வைஷு.

தன் வாழ்க்கையை நினைத்து மிகவும் பயமாக இருந்தது அவளுக்கு. ‘தன் வாழ்க்கையில் என்னதான் நடந்துக் கொண்டிருக்கிறது’ அவளுக்கு புரியவே இல்லை.     

கண்களில் கண்ணீர் அவளையும் அறியாமலே கொட்டிக் கொண்டிருந்தது. ‘அவன் என்ன செய்து வைத்திருப்பான்’ நினைக்கும் பொழுதே மிகவும் பயமாக இருந்தது.

இருவரும் ஒவ்வொரு நினைவில் தவித்துக் கொண்டிருந்தனர். ‘அவன் என்ன செய்து அங்கு சென்றான் என்று இவளும்,

‘தன் கடந்த காலத்தை சொன்னா அவள் என்ன நினைப்பாள், தன்னை விட்டு போய்விடுவாளோ?  என்ற அலைப்புறுதலில் அவனும் அமர்ந்திருந்தனர்.

அவனின் சிந்தனைகள் மேலும் தறிக்கெட்டு ஓடிக்கொண்டிருந்தது. சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வாளோ என்ற பயம் ஒரு பக்கம் இருந்தாலும் அவளோடான தன் வாழ்வைப் பற்றிய பயம் ஒரு புறம் இருக்க அவனின் ரகசியம் அது வெளிபட்டால் அதனால் ஏற்படும் விளைவு,

இவளிடம் சொல்லி, இவள் வேறு யாரிடமும் அவளது அம்மா, அப்பா,  தாத்தா இப்படி யாரிடமாவது கூறி அவர்கள் இவனை விமர்சித்தால். தன் உறவுகளே ஆனாலும் தன்னை விமர்சித்தால் தன்னால் அதை கடந்து வர முடியுமா?   அவனுக்கான கேள்விகள் அவன் மனதில் விலைவாசிப் போல் ஏற்றம் கொண்டிருந்தது.

ஏற்கனவே நடந்து முடிந்த ஒரு நிகழ்வு இப்பொழுது அவளிடம் கூறி அது வேறு பிரச்சனையை கிளப்பினால் என்ன செய்வது, யோசனையாகவும் இருந்தது.

‘என்ன ஆனாலும் சரி இனியும் அவளிடம் விசயத்தை மறைக்க வேண்டாம்’ எண்ணியவன் கண்ணீரை துடைத்தெறிந்து விட்டு அவளைப் பார்த்தான்.

அவளது கண்களில் நீர் வழிய அமர்ந்திருந்த தோற்றம் அவனை பலமாகத் தாக்கியது.

‘அவள் இல்லையேல் தான் இல்லை. தன்னைப் பற்றிய முழுவதும் அவள் அறிந்திருக்க வேண்டும்’ எண்ணியவன் மண்டியிட்டு அமர்ந்த வாக்கிலே,

“வைஷு” என மிக மிக மெதுவாக அழைத்தான் அவன்.

இன்னும் அவள் கண்களில் கண்ணீர் வழிவதைக் கண்டவன், எழுந்து அவள் அருகில் சென்று அமர்ந்து அவள் கண்களில் வழிந்த நீரை துடைத்தான்.

அவளது நிலை அவனுக்கும் புரிந்துதான் இருந்தது. அவள் மடி மேல் வைத்திருந்த அவளது கையை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள, அவனை ஏறிட்டுப் பார்த்தாள் அவள்.

இன்னும் அவள் கண்களில் நீர் வழிந்துக் கொண்டிருந்தது. ஒரு கையால் அதை துடைத்தவள், ‘அழாதே’ என்னும் விதமாய் தலையசைக்க, தன்னையறியாமல் இன்னொரு கையால் கண்களை துடைத்து அவனைப் பார்த்தாள்.

“நான் சொல்லுறதை நீ புரிஞ்சிக்கணும் வைஷு. இது உனக்கு ரொம்பவே அதிர்ச்சியான விசயம்னு எனக்கு தெரியும். ஆனா, நான் இதை உன்கிட்ட வேணும்னே மறைக்கலை, நானே மறக்க நினைக்கிற விஷயம். என் வாழ்க்கையில் மறுபடியும் நினைக்கவே கூடாதுன்னு நினைக்கிற விஷயம்”

அவன் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே இடையிட்டாள்.

“நீ ஏன் ஜெயிலுக்கு போன, ஏதாவது பெரிய தப்பு பண்ணிட்டியா மறுபடியும் உன்னை போலீஸ் பிடிச்சுட்டு போய்டுவாங்களா? நீ என்னை விட்டு போய்டுவியா?” என்றாள் கலக்கத்தை கண்களில் தேக்கி.

தன்னவளின் ஒற்றைக் கேள்வியிலே அவனுள் ஏதோ ஒரு வித உணர்வு. ஒருநிமிடம் அமைதியானான் ஸ்ரீ. தன் மேல் எந்தளவு பாசம் வைத்திருந்தால் இப்படி கேட்பாள்.

‘தன் கணவன் ஜெயிலுக்கு சென்று வந்திருக்கிறான் என்ற விசயத்தை எந்த பெண்ணால் தான் தாங்கிக் கொள்ள முடியும்’

கோபம் வர வேண்டிய இடத்தில், ‘நீ என்னை விட்டு போய்டுவியா?’ என்று கேட்கும் வைஷுவின் நேசம் அவன் கண்களை நிறைத்தது.

‘எந்த அளவுக்கு என்மேல் காதல் இருந்தால் இப்படி என்னை விட்டு போய்டுவியா என்று கேட்பாள்’ சந்தோசம் ஒரு கரையில் இருந்தாலும் அவளது கண்ணீர் அவனை தாக்கியது.

அவனுக்கு எல்லாமே அவள்தான், அவள் மேல் அவன் உயிரையே வைத்திருக்கிறான். அவளது கண்ணீர் அவனை தாக்காமல் இருந்தால்தான் அதிசயம்.

“அதெல்லாம் இப்போ ஒரு பிரச்சனையும் இல்லை வைஷு” என்றான் அவளது கண்ணீரை துடைத்து.

 “இல்ல நீ உன்னை பற்றி முழுசா சொல்லு, நீ எப்பவும் ஒரு மர்மமாவே எனக்கு தெரியுற. ஷிவானி டாக்டர் படிச்சுருக்கா, நீ படிக்கல. அதே போல வீட்டுல இருக்க போட்டோல நீ யாரை மாதிரியும் இல்லை.

உனக்கும் இந்த குடும்பத்துக்கும் சமந்தம் இல்லாத மாதிரியே எனக்கு ரொம்ப நாளா தோணுது. இப்பவாது உண்மையை சொல்லு ஸ்ரீ. நீ யாரு? 

 சொல்லு ஸ்ரீ, நான் உன்னை பத்தி எல்லாம் தெரிஞ்சிக்கணும். நான் உன்னை பத்தி தெரிஞ்சிக்க கூடாதா? இன்னும் நான் உனக்கு சரி இல்லைன்னு யோசிக்கிறியா?” என்றாள் அவனை நேராகப் பார்த்து. 

“எதுக்கு இப்படி எல்லாம் பேசுற என்னைப் பத்தி உனக்கு தெரியணும் அதுதானே நானே சொல்லுறேன்.” என்றவனின் குரல் அப்பட்டமான வலியை வெளியிட்டது.

மெதுவாக தனது கடந்த காலத்துக்குள் நுழைந்தான் ஸ்ரீ.

 “எனக்கு அம்மா இல்ல. விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து கிடையாது நான் பொறக்கும் பொழுதே இறந்துட்டாங்களாம். என் ரெண்டு சித்தப்பாவும் சொல்லுவாங்க. என் அப்பா, என் அம்மா பத்தி பேசுனதே இல்லை. காரணம் இப்போ வரைக்கும் தெரியாது.

அப்பா நல்லா பாசமாத்தான் இருப்பாங்க. ஆனா வீட்டுல எப்பவும் இருக்க மாட்டாங்க. என்னை பாத்துக்கிறது எல்லாமே வீட்டுல வேலைப் பார்த்த ஆயாதான்.

எனக்கு நல்லா நியாபகம் இருக்கு. என்னோட ஒவ்வொரு தேவைக்கு ஒவ்வொருத்தர் இருந்தாங்க. நான் படிச்சது கூட பெரிய ஸ்கூல்தான். ஒரு அழுக்கு கூட என் மேல பட விடாம அப்படி பார்த்துகிட்டாங்க. அப்பா இங்க வர நாள் எல்லாம் என்கூடவேதான் இருப்பாங்க. அவ்ளோ பாசம் அவருக்கு.

அவர் எங்க போவார், என்ன வேலை செய்தார் இப்படி எதுவுமே எனக்கு தெரியாது. அது நான் தெரிஞ்சுக்கிற வயசும் இல்ல. நான் ரொம்ப சின்ன பையன் இல்லையா இதெல்லாம் கவனிக்கல.

எனக்கு ஒரு பத்து வயசு இருக்கும் போது அப்பா படுக்கையில் விழுந்துட்டாங்க. இதுக்கு காரணம் என் சித்தப்பாங்க தான்னு எல்லாரும் சொல்லுவாங்க அப்போ நான் நம்பவே இல்லை. மனுஷங்களை எடை போடுற வயசும் அப்போ எனக்கு இல்லை.

அன்னைக்கு மாடில நின்னு ரெண்டு பேரும் பேசினதை கேட்டேன். என் அப்பாவையும், என்னையும் கொல்ல போறதா பேசிக்கிட்டாங்க.

எனக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியல. ‘என் அப்பாவையே நீங்க கொல்லுவீங்களான்னு’ நான் என் சித்தப்பாவை தள்ளிதான் விட்டேன்.

ஆனா, என் சித்தப்பா கீழ விழுறதுக்குள்ள இன்னொரு சித்தப்பா வந்து, அவங்களைப் பிடிக்கிற மாதிரி பிடிச்சு மாடில இருந்து தள்ளிவிட்டுடாங்க. என் சித்தப்பா என் கண்ணு முன்னாடியே மாடில இருந்து விழுந்து செத்துட்டாங்க. பழி என் மேல விழுந்திச்சு.

சித்தப்பான்னு நான் மாடில இருந்து எட்டி பார்க்க, கீழ இருந்தவங்க நான் தான் தள்ளிவிட்டேன்னு நினைச்சுட்டாங்க, சாட்சி எல்லாம் எனக்கு எதிராக இருக்க என்னை பிடிச்சு ஜெயில்ல போட்டுடாங்க.

 லாயர் அங்கிளுக்கு மட்டும் உண்மை தெரியும். ஆனாலும் அப்பா முடியாம இருக்க நிலையில் என்னை பாதுகாக்க முடியாதுன்னு இங்கயே இருக்க சொல்லிட்டாங்க. என் மேல கொலை பழியும் விழுந்துட்டு.

“சொத்துக்காக உன்னை ஏமாத்திட்டாங்களா? நீ ரொம்ப கஷ்டப்பட்டுடியா?” என்றாள் அவனது வருத்தம் கண்டு.

“இந்த பணக்காரங்களே இப்படிதான் ஸ்ரீ. அவங்க தேவைக்கு யார வேணாலும் கொலைப் பண்ணிடுவாங்க. பயன்படுத்திப்பாங்க. நமக்கு இந்த பணக்காரங்க சகவாசமே வேண்டாம்” என்றவள் அவனைப் பார்க்க.

‘இதையே இப்படி சொல்லுறா? என்னைப் பற்றி முழுதாக தெரிந்தால்?’ யோசித்தவன். அதை அந்த நொடியே விட்டுவிட்டான். அவனுக்கு ‘இந்த வைஷுவுடனான வாழ்க்கையே போதும்’ என்று முடிவெடுத்துக் கொண்டவன் மேலும் தொடர்ந்தான்.

“ஜெயில்ல இருந்து மாசம் ஒரு நாள் வெளிய போக அனுமதி உண்டு என்னை யாராவது தேடி வரும் பட்சத்தில்.

அப்போதான் ஒருநாள் ஒரு போலீஸ்கார் வந்து லாரிக்கு கிளீனரா போறியான்னு வந்து கேட்டாங்க. எனக்கு  அந்த நேரம் அது தேவையா இருக்க அவங்க கூட போனேன்.

அதுக்கு பிறகு மாசம் அவர் கூட போவேன்.

பதினெட்டு வயசுவரை நான் எது பண்ணி மாட்டினாலும் எனக்கு பெரிய தண்டனை கிடையாது. இதுனாலையே நான் நிறைய வேலை பண்ணுனேன்.

அங்க போலீஷ்காரருக்கு தெரிஞ்ச அரசியல்வாதிகளின் கடைக்கு சரக்கு நைட்டோட நைட்டா மாத்தி விட்டிருக்கேன். இப்படி நிறைய. எதிலையும் நான் மாட்டினதில்லை. அவங்க என்னை மாட்ட வச்சதில்லை. நான் அவங்களுக்கு தேவை என்னை பதினெட்டு வயசுவரை பயன்படுத்திகிட்டாங்க. அதுக்காக நான் ஒருநாளும் வருத்தப்பட்டதில்லை.

இவங்க எல்லாரும் ஒரு வகையில என்னை நல்லா பாத்துக்கிட்டவங்கன்னு சொல்லலாம். என் இரத்த சொந்தத்தை விட இவங்க நல்லவங்கதான். அதுதான் நம்ம கல்யாணத்துக்கு இவங்களை எல்லாம் கூப்டிருந்தேன். 

நான் செய்த வேலையில் வர பணம் என்னை மாதிரி அப்பா, அம்மா இல்லாத பசங்க அங்க என் கூட இருப்பாங்க அவங்களுக்கு செலவு பண்ணினேன். ஒரு காலத்துல என் அப்பாவும் இப்படிதான் இருந்தாங்க”

 “ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு என் அப்பா இறந்துப் போயிட்டதா லாயர் அங்கிள் வந்து சொல்லி என்னை அங்க கூப்ட்டாங்க எனக்கு அங்க போக பிடிக்கல. என் அப்பா இன்னும் உயிரோடதான் இருக்காங்கன்னு சொல்லிட்டு பேசாம போயிட்டேன்.

சில நேரம் நான் இன்னும் உயிரோடுதான் இருக்கன்னு அவங்க கிட்ட சொல்லனும்னு என் மனசு ஒரு பக்கம் துடிக்கும். சில நேரம் நான் பிறந்து வளர்ந்த இடத்தை பார்க்கணும், என் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாதுன்னு அவங்க கிட்ட போய் கத்தனும்னு எல்லாம் மனசு துடிக்கும். 

ஆனா அதே சமயம் அங்க போய் நான் என்ன பண்ண என்ற யோசனையும் இருக்கு. எனக்கு இங்க ஒரு அழகான குடும்பம் இருக்கு இனி எனக்கு எதுக்கு வேற குடும்பம். இப்போ அதை பத்தி யோசிக்கிறதே இல்லை.

எனக்கும் பதினெட்டு வயசு முடிஞ்சு நானும் வெளிய வந்தேன். எனக்கு அங்க சென்னையில் இருக்க பிடிக்காம எங்க போறதுன்னு தெரியாம ரோட்டில சுத்திகிட்டு இருக்கும் பொழுதுதான் ஸ்ரீ கரண் தாத்தாவைப் பார்த்தேன்.

லண்டன்ல இருந்த அவங்க பையன் குடும்பம் ஒரு அக்ஸிடென்ட்ல இறந்து போயிட்டதா சொன்னாங்க, அங்க இருந்து ஷிவானியை அழைச்சுட்டு வரும் போதுதான் என்னை பார்த்து கையேடு இங்க கூட்டிட்டு வந்தாங்க.

ஷிவானிக்கு ஒரு அண்ணன் இருந்தான் போல அவனும் விபத்துல போய்ட்டான். அவன் போட்டோ கூட இங்க இருக்காது. அவன் இடத்துல நான் இருக்கேன். இப்போ வரைக்கும் அவங்க என்னை நீ யார்ன்னு கேட்டதில்லை. நான் ஸ்ரீயா இங்க இருக்கேன்.

பதினெட்டு வயசு வரை அங்க இருக்கவங்களுக்கு உழைத்தேன். இப்போ இந்த வயசுவரை ஸ்ரீ கரண் தாத்தாவுக்காக இருந்தேன். இனிதான் நான் என்னுடைய வாழ்கையை வாழனும் வைஷு.

இதுவரை என் வாழ்க்கை அடுத்தவங்கதான் முடிவு பண்ணாங்க வைஷு. நான் ஜெயிலுக்கு போகணும்னு சித்தப்பா, ஜெயில்ல இருந்தா தான் பாதுகாப்பா இருப்பேன்னு லாயர் அங்கிள், சில தப்புகளுக்காக அரசியல்வாதிங்க, அதிகாரிகள்ன்னு என் வாழ்க்கை அடுத்தவங்க ஆட்டுவிக்கும் பொம்மையை மாறிட்டு. 

விதிவிலக்கா தாத்தா என்னை ஏத்துகிட்டாங்க அவருக்கு என்னால் ஆனா தேவைன்னு எதுவும் இல்ல. எதை வச்சு என்னை ஏத்துகிட்டார்ன்னு தெரியாது. ஆனா நான் அவருக்கானவனா மாறிப் போனேன். அப்படிதான் என் பழக்க வழக்கம் மாறிப் போச்சு. 

 “யாரும் இல்லன்னு பல நாள் அழுதிருக்கேன் இப்போ எனக்கே எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு அதை நினைச்சா சந்தோசமா இருக்கு. இதே சந்தோசம் கடைசி வரைக்கும் எனக்கு போதும்னு இருக்கு” என்றவன் அவனின் வேதனை படிந்த முகத்தினை கண்டு அவளது கைகளைப் பற்றினான்..

“எப்படி இருந்தாலும் அதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி உள்ளது வைஷு. இனி உனக்கு எந்த கவலையும் வேண்டாம். எல்லாத்தையும் மறந்து மன்னிச்சிடு. எனக்கு நீ மட்டும்தான் இருக்க அதை மட்டும் நினைவில் வச்சுக்கோ. நீ இல்லாம நான் இல்லை வைஷு.

உனக்கு ஒரு குடும்பம் இருக்கு. ஆனா எனக்கு நீ மட்டும்தான் இருக்க. எனக்கு வாழ்க்கை குடுத்திருக்க வைஷு. அதை மட்டும் நினைவில் வச்சுக்கோ. மீதி எல்லாம் மறந்து, மன்னிச்சிடு.”

“இப்போ கொஞ்சம் சாப்ட்டு தூங்கு, ரொம்ப நேரமா நாம பேசிட்டு இருக்கோம்” அவன் கூற,

 ‘பழைய வாழ்க்கை எப்பொழுதும் எங்களைப் பாதிக்க கூடாது’ என்ற வேண்டுதல் மட்டுமே அவள் மனதில் இருந்தது.

அவளையே வெகு நேரம் பார்த்திருந்தான் ஸ்ரீ. ‘அவள் மனதில் என்ன ஓடுகிறது?’ என்று அவனால் அறிய முடியவில்லை.

‘பெண்கள் மனதின் யோசனையை அறியமுடியாதுடா ஸ்ரீ. அதில் உன் வைஷுவும் அடக்கம்’ மனம் எடுத்துரைக்க, அவளைப் பார்த்தபடிப் படுத்திருந்தான் ஸ்ரீ.

காலையில் எழுந்துப் பார்க்க அவன் அருகில் அவள் இல்லை. ‘எங்கே சென்றாள் இவள்’ யோசனையுடன் வீடு முழுக்க தேடிப் பார்க்க அவளை காணவில்லை.

“என்னை விட்டு போயிட்டாளா? நான் வேணாம்ன்னு போயிட்டாளா?” அவனால் தாங்கமுடியவில்லை.

அங்கும் அவள் இல்லாமல் போக மிகவும் பயந்து விட்டான் ஸ்ரீ.

அவனது மனவோட்டங்கள் தாறுமாறாக இருந்தது. அவள் தன் கடந்த காலத்தை தன் உறவுகளுக்கு சொல்லி இருப்பாளா? அவனை குறித்த அவர்களின் எண்ணவோட்டம் எப்படி இருக்கும்? இது போலான கேள்வி எதுவும் இல்லை அவனிடத்தில்.

அவனவள் இல்லை இனி தனக்கு எதிர்காலமும் இல்லை. அவனின் உலகம் அவளோடே சென்றது போல ஒரு மாய தோற்றம்.

அடுத்து என்னவென்று அறியா திக்கு தெரியா காட்டில் நிற்பது போலான அவனின் நிலை மயக்கமோ, தடுமாற்றமோ ஏதோ ஒன்று அவனுள் நிலை தடுமாறி வீழ்ந்தவனை தாங்கிக் கொண்டது அங்கிருந்த இருக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!