இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 22   (pre – Final)

இப்படியான பெரும்பலம் படைத்த ஸ்ரீயின் பின்புலத்தை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை வைஷு. 

‘தனக்கு தகுதியானவள் தானா இவள்’ என்று ஸ்ரீ யோசித்ததற்கே அவன் மீது கோபம் கொண்டவள், இப்பொழுது அவனின் உயரம் அறிந்து அவனுக்கு தான் சரியானவளா? இணையானவளா? என்ற எண்ணம் அவளில் விஸ்வரூபம் எடுத்தது.

“வைஷு வா வீட்டுக்கு போகலாம்” அவன் அவளது கையை பிடித்து மீண்டும் இழுக்க,

உணர்வுக்கு வந்தவள் ஸ்ரீயை பார்த்தாள். அவள் முகம் மிகவும் கலக்கத்தைக் காட்ட, அவன்தான் தவித்துப் போனான்.

“நீ கலங்குற அளவுக்கு இதெல்லாம் ஒன்னுமே இல்லடி. எனக்கு நீ மட்டும் போதும்டி” அவன் கூறிக் கொண்டிருக்க,

மீண்டும் ராகவனே பேச்சை ஆரம்பித்திருந்தார்.

“உன் சித்தப்பாக்கு ஒரு வழி சொல்லிட்ட. அவரை நான் பாத்துக்கிறேன். ஆனா, உங்களையே நம்பி இருக்க தொழிலாளர்களை அப்படியே விட சொல்லுறியா? அவங்களுக்கும் எதாவது வழி சொல்லிடு அதையும் பண்ணிடுறேன். கம்பெனியை இழுத்து மூட சொல்லணும்னாலும் சொல்லு அதையும் பண்ணிடுறேன்” என்றார் காட்டமாய்.

அவ்வளவு நேரம் பதிலுக்கு பதில் பேசியவனால் இதற்கு பதில் சொல்லமுடியவில்லை. எப்படி அவனால் பதில் சொல்லமுடியும். இங்கு வயலில், ஆலையில் வேலைப் பார்க்கும் மக்களைப் போலவே தானே அவர்களும்.

‘தங்கள் குழந்தைகளுக்காக வேலைக்கு வந்திருக்கலாம், தன் காதலியை கரம் பிடிக்க வேலைக்கு வந்திருக்கலாம் இப்படி எத்தனையோ தேவைகளுக்காக வந்திருக்கலாம் அவர்களை அப்படியே விடமுடியுமா?’ அவனால் பதில் சொல்ல முடியவில்லை.

அவனது பதில் சொல்லா நிலையைப் பார்த்த ராகவனுக்கு நம்பிக்கை வந்திருந்தது. அவனை அங்கு அழைத்து செல்லலாம் என்று. அவனது சித்தப்பாவை மட்டும் பேசி அவனை அழைத்து செல்ல முடியும் என்று அவருக்கு நம்பிக்கை இல்லை. கொஞ்சம் கொஞ்சமாய் பேசி ஒரு நிலைக்கு கொண்டு வந்துவிட்டார். 

ஸ்ரீயின் மனம் படும்பாட்டை வைஷுவால் நன்கு உணர முடிந்தது. ‘இதற்கு தான் தான் நல்ல முடிவை எடுக்க வேண்டும்’ மனதைத் திடப்படுத்தியவள்.

“சார். ஒரு ரெண்டு நாள் டைம் குடுங்க இவர் உங்களுக்கு ஒரு நல்ல முடிவா சொல்லுவார்”

“இல்ல வைஷு. ரெண்டு நாள் இல்ல ரெண்டு வருஷம் ஆனாலும் என் முடிவு மாறாது. என்னால் அங்க போகமுடியாது” பிடிவாதமாகவே கூறினான்.

அவனை கண்டுக் கொள்ளாதவர், “ரொம்ப நன்றிம்மா. உன்னை நம்பி இப்போ நான் கிளம்புறேன். இங்க மதுரையில் தான் ஹோட்டல் எடுத்து தங்கப் போறேன்.  சரியா மூனாவது நாள் நான் இங்க இருப்பேன். அவனை ரெடியா இருக்க சொல்லு” என்றவர் அவனிடமும் கூறி வெளியே சென்றார்.

‘அவளை ஒரு பார்வைப் பார்த்தவன்’ நேராக அவனது வீட்டை நோக்கி நடந்தான்.

இத்தனை நேரம் அப்படியே நின்றிருந்தது, கால் மரத்துப் போனதுப் போல் இருக்க, அப்படியே பொத்தென்று அருகில் இருந்த ஷோபாவில் அமர்ந்தாள் வைஷு.

அவளுக்கு முன் ஸ்ரீ கரண் அமர்ந்திருந்தார். அவருக்கு இன்னும் நம்பமுடியவில்லை.

ஸ்ரீயின் உயரம் கண்டு பிரமித்து போயிருந்தார். சாதாரணமாக அவன் இங்கு இருந்தது அவரால் நம்ப கூட முடியவில்லை.

“என்ன முடிவு எடுக்க போற வைஷு?” அவர் அவளிடம் கேட்க,

“எதுனாலும் சீக்கிரம் பண்ணனும் தாத்தா. ஸ்ரீயை அப்படியே விடமுடியாது. அவனுக்கான உரிமையை அவனுக்கு கண்டிப்பா குடுக்கணும்” என,

அவருக்கும் அதுதான் சரியாகப்பட்டது.

“நல்லது வைஷு. நல்லா முடிவா அவனை எடுக்க வை”

“நான் அவனை பாக்குறேன்” என,

“சரிமா நான் சாயங்காலம் அங்க வாரேன்” என,

‘சரி’ என்றவள் வீட்டை நோக்கி நடந்தாள்.

***

ஸ்ரீயிடம் தங்களது குழந்தை வரவை சொல்லி அவனை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த வேண்டும் என்று எண்ணிய வைஷுவால் இப்பொழுது அவனிடம் கூறுவதா? வேண்டாமா? என்ற எண்ணம் வந்திருந்தது.

‘அவனிடம் எப்படி சொல்ல? என்ன சொல்ல?’ இப்படியான பலவாறான எண்ணம் அவளிடம்.

வீட்டுக்கு வந்து அவனைப் பார்க்க, கண்களை மறைத்தபடி படுத்திருந்தான். அவன் தூங்கவில்லை என்று நன்கு தெரிந்தது. ஏதோ யோசனையில் இருப்பது போல் தோன்றியது.

‘நன்றாக யோசிக்கட்டும்’ அவனை அப்படியே விட்டவள். சாப்பிட என்ன இருக்கிறது என்று கவனிக்க சென்றாள்.

அவளுக்காக இல்லை என்றாலும் குழந்தைக்காக கண்டிப்பாக நேரத்துக்கு உணவை எடுக்க வேண்டும்.

 மணி மூன்றை கடக்க, சாப்பாட்டுடன் அறைக்கு வந்தாள் வைஷு. அவனையே சிறிது நேரம் பார்த்திருந்தவள், “ஸ்ரீ” என அழைக்க,

கண்ணை திறந்தவன், ‘என்ன?’ என்று கண்ணால் வினவ,

“நேரம் ஆச்சு நீ இன்னும் சாப்டல”

வேண்டாம் என்று கூற வந்தவன், அவள் முகத்தில் என்னக் கண்டானோ “சரி கொண்டா” என கையில் வாங்கி அவளையும் தன் அருகில் அமர்த்திக் கொண்டான்.

‘எவ்வளவு பெரிய நிலையில் உள்ளவன் இவன்’ அவளால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

அவளது எண்ணவோட்டத்தை புரிந்துக் கொண்டவன், “பிளீஸ் வைஷு. இப்படிலாம் பார்க்காதே. நான் எப்பவும் உன்னோட ஸ்ரீ. இப்படி பார்த்து என்னை தள்ளிவச்சிடாதே நான் தாங்கமாட்டேன் வைஷு. எனக்குன்னு யார் இருக்கா நீ மட்டுமே தானே இருக்க” சாப்பாட்டு தட்டை அருகில் வைத்து அப்படியே அவளின் மடியில் படுத்து விட்டான் ஸ்ரீ.

அவனை தன் வயிற்றோடு அணைத்துக் கொண்டாள் வைஷு. “’இப்படிலாம் ஏன் நினைக்குற ஸ்ரீ. உனக்கு நான் இருக்கேன், நமக்கே நமக்குன்னு நம்ம பிள்ளை இருக்கும் இப்படிலாம் பேசாதடா’ அவளின் குரல் மனதில் மட்டுமே!

அவன் ஆசைப்பட்ட பிள்ளையை பற்றி அவளால் இப்பொழுது கூறிட முடியவில்லை.  ‘முதலில் அவன் எல்லா பிரச்சனையையும் கடந்து வரட்டும்’ என்று முடிவெடுத்தவள்,

“பசிக்குது ஸ்ரீ” எனவும்,

வேகமாக அவளில் இருந்து எழுந்தவன், அவளுக்கு ஊட்டி விட்டு தானும் உண்டான்.

‘பார்த்தியா நீ என் கிட்ட வந்ததும் முதல் சாப்பாடே அப்பாதான் ஊட்டுறாங்க’ குழந்தையிடம் மனதோடு பேசிக் கொண்டாள் வைஷு.

இருவரும் உண்டு வெளியே செல்ல வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் அப்படியே படுத்திருந்தனர்.

மாலையாகவும் ஸ்ரீ வீட்டினரும், வைஷு வீட்டினரும் வாசல் வந்து நிற்கவும் தெரிந்தது, விஷயம் வீட்டினருக்கும் தெரிந்து விட்டதென்று.

ஷிவானி அவள் அண்ணனையே தான் விடாமல் பார்த்திருந்தாள். பழைய பேச்சுக்கள் நினைவில் வந்து மோதின. கண்களில் நீர் கொட்டுவதுப் போல் தெரிய, கண்களை அழுந்த மூடித் திறந்தாள் ஷிவானி.

எல்லாரையும் பார்த்து அமைதியாய் இருக்கும் தன் மனைவியின் பக்கம் பார்வையை திருப்பினான் ஸ்ரீ.

அவளது கண்களோ இப்போவே அழுதுவிடவா என்னும் நிலையில் இருந்தது.

“வைஷு” இவன் தோள் தொட்டு அழைக்க,

“ஏன்டா இப்படி என்னை ஏமாத்தினா? நான் இப்போ என்னடா செய்யணும்? உன்னை போன்னு அவங்க கூட அனுப்பனுமா? இல்லை என்கூடவே இருன்னு வச்சுக்கணுமா?  எல்லாத்தையும் என்கிட்டே சொல்லுவியே இவ்ளோ பெரிய உண்மையை எதுக்குடா என்கிட்ட இருந்து மறைச்ச?எ… எனக்கு ரொம்ப பயமா இருக்குடா” என்ன நினைத்தும் அவளால் அழுகையை நிறுத்த முடியவில்லை.

“இங்க பாருமா வைஷு” அவன் அழைக்க, அவன் தோளில் இருந்து முகத்தை நிமிர்த்தவே இல்லை அவள்.

வைஷுவின் தாய், தந்தைக்கோ ஸ்ரீயின் மீதான பிரமிப்பைத் தாண்டி இனி தங்கள் மகளின் வாழ்க்கை என்னாகுமோ? என்ற பயம் அவர்களின் கண்களில் அப்பட்டமாக தெரிந்தது.

‘இவளை விரும்பி கஷ்டப்பட்டு திருமணம் செய்திருக்கிறேன்.  அப்படி இருக்கையில் எப்படி இவளை விட்டு செல்வேன்’ என்று அவர்கள் எண்ணலாம், கோபமாகவும் வந்தது அதே சமயம் அவர்களது பயத்தைப் பார்த்து சிரிப்பும் வந்தது.

எல்லாரையும் பார்த்து நான் பார்த்துக் கொள்கிறேன் என்னும் விதமாய் தலையசைக்க, திரும்பி திரும்பி பார்த்தபடி சென்றார் மாறன்.

அவர்கள் செல்லவே, “வைஷு” அவளை அழைக்க,

இன்னும் அவள் கண்களில் கண்ணீர் வருவதற்கான அறிகுறியாய் அவனது சட்டை ஈரத்தை உணர்ந்துக் கொண்டிருந்தது.

வலுகட்டாயமாக அவளை தன்னில் இருந்து பிரித்தவன், அவளது கண்ணீரை துடைத்து, “இங்க பாரு வைஷு. இப்போ எதுக்காக பயப்படுற? நான் உன்னை விட்டு போய்டுவேன்னா? அவ்ளோதான் என் வைஷுவுக்கு என்மேல் நம்பிக்கையா? நீ இல்லாம நான் இல்லைன்னு நீ உணரவே இல்லையாடி. எப்போ இங்க நீ வந்தியோ அப்போ இருந்து என் உலகம் உன்னை மட்டும் தாண்டி சுத்தி வந்திருக்கு” என அவனின் இடதுபக்கத்தை தட்டி கூற அவளின் கண்களில் வெந்நீர் ஊற்று.

அவன் பேசப்பேச அவளுள் ஒரு கோபம் அவள் என்ன அவனின் மீது நம்பிக்கை இல்லாமலா இருக்கிறாள். ‘உன் மேல நம்பிக்கை இல்லாமா உன் பிள்ளையை என் வயிற்றில் சுமக்கிறேன்’ அவனிடம் கேட்க வேண்டும் போல் இருந்தது.

ஆனால் அவளின் கவலை ‘அவன் சென்னை சென்று விட்டால் அவனை பிரிந்து தன்னால் இருக்க முடியுமா? அவன் கண்டிப்பாக அங்கு சென்றே ஆகவேண்டும். அவனது உரிமையை அவன் யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக் கொடுக்கவே கூடாது’ அவள் மனம் தீர்க்கமாக எண்ணியது.

அவனது குழந்தை ஆசை அவளுக்கு நன்கு தெரியும். இந்த உண்மை இப்பொழுதே அவனுக்கு தெரிந்தால் கண்டிப்பாக அவன் இங்கிருந்து ஒரு அடி கூட நகரமாட்டான் என்று அவளுக்கு நன்கு தெரியும். அவளை விட மிகவும் ஆர்வமாக குழந்தையை எதிர்பார்த்தவன் அவன்.

‘தன் கணவனின் அடையாளம், அவனது உரிமை, அவனுக்கான மதிப்பு எதையும் அவள் இழக்க தயாராய் இல்லை. பணம் இப்பொழுது பெரிதல்ல அவனுக்கான அடையாளம் அவனுக்கு கிடைத்தே ஆக வேண்டும்.

இத்தனையும் அனுபவிக்காமல் அவன் வாழ்ந்த ஜெயில் வாழ்க்கை இன்னும் அவளால் மறக்க முடியவில்லை. இதுக்காக வேணும் அவன் அவனது அடையாளத்தை அடைய வேண்டும் என்று எண்ணினாள்.

அது தன்னாலோ, தங்களது குழந்தையாலோ தடைபடக் கூடாது’ என்று எண்ணினாள்.

“நான் ஒன்னு சொன்னா கேட்பியா?”

“பிளீஸ் வைஷு. அதை பத்தி மட்டும் பேசாத. முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும். எனக்கு அங்க போகவும் பிடிக்கல. அதை நான் நினைச்சு பார்க்க கூட விரும்பல விட்டுடு”

“நீ சொல்லுறது சரியா ஸ்ரீ. அவர் உயிருக்கு போராடிகிட்டு இருக்கார்.  அதோட எல்லாம் உன்னோட அடையாளம் ஸ்ரீ. அதை நீ தக்க வச்சுக்க வேண்டாமா? உன்னோட அடையாளத்தை மறைச்சுட்டு ஸ்ரீயா இங்க இருக்க.

ஆனா உன்னோட அடையாளம் இது இல்ல. அது உனக்கே தெரியும். நீ சக்ரவர்த்தி!

உன்னோட அடையாளத்தை நீ சக்ரவர்த்தியாதான் காட்டணும். உன் அப்பாவோட ஆசையும் அதுவாதானே இருக்கும் அதுக்காகத்தானே அத்தனை போராடிருப்பாங்க. இப்போ எல்லாம் வேண்டாம்னு விட்டா அவங்க ஆத்மா சாந்தி அடையுமா?

அது மட்டும் இல்ல, உன்னையே நம்பி ஆயிரக்கணக்கான ஜனம் உனக்காக அங்க காத்துகிட்டு இருக்காங்க. அந்த கூட்டத்திலையும் என்னை போல ஆயிரம் வைஷு இருக்கலாம்.

என்னை போல ஆயிரம் வைஷு உருவாக அவளோட அப்பா அங்க காத்திருக்கலாம். நல்லா யோசி ஸ்ரீ. நாலு பேர் நல்லாருக்கனும்னு நாம நினைக்கனுமே தவிர . என்னால அவன் வாழ வேண்டாம்னு நினைக்க கூடாது. உனக்காக அங்க ஆயிரம் ஜனம் வாழ காத்திருக்கு” 

அவனே அவனுக்குள்ளே இத்தனை நேரம் கேட்டுக் கொண்ட கேள்வியை அவன் மனைவியே சொல்ல, அவளையேப் பார்த்திருந்தான்.

ஆனால் அவன் அனுபவித்த வேதனை… அதை அவனால் மறுக்க முடியுமா? இல்லை மறக்கத்தான் முடியுமா? இது ரெண்டுமே அவனால் முடியாதது.

அதே நேரம் வைஷுவுக்கு நல்ல கணவனாகவும், என் பிள்ளைக்கு நல்ல தகப்பனாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் வந்திருந்தது. இப்பொழுது அவன் மனதில் இருக்கும் மிக பெரிய போராட்டமே, வைஷுவை தனியே விட்டு எப்படி செல்வது என்பதே.

“என்ன யோசிக்குற?” அவன் சிந்தனையை அவள் கலைக்க,

“நீ சொல்லுறது எல்லாம் சரிதான் வைஷு. நியாயமானதும் கூட. ஆனா?” நிறுத்தியவன் எழுந்து நின்று இடையில் கை வைத்து திரும்பி நிற்க,

அவனது செய்கை வித்தியாசமாய் தெரிய, அவன் வருந்துகிறான் என்பது புரிய, எழுந்து சென்றவள்  அவன் முதுகில் சாய்ந்து அவனது இடையை அணைத்துக் கொண்டாள்.

“ரொம்ப யோசிக்காத ஸ்ரீ. உன்னோட வருத்தம், வேதனை என்னைத் தவிர வேற யாரு நல்லா புரிஞ்சுப்பா நீயே சொல்லு.  அங்க யாராவது ஒருத்தர் எல்லாம் பாக்குறதா இருந்தா எந்த பிரச்னையும் இல்லை ஸ்ரீ. எப்பவும் போல் பார்ப்பாங்க. ஆனா இப்போ சரியா பார்க்க யார் இருக்கா நீயே சொல்லு?

 நீதான் அங்க எல்லாம் சரி செய்யணும்! கட்டி ஆள ஆள் இல்லனா எல்லாம் வீணா போகும் ஸ்ரீ. உன்னால் தான் அதை சரியா வழி நடத்த முடியும். கண்டிப்பா நீ அங்க போகணும் ஸ்ரீ. அங்க போய் எல்லாம் ஒரு நிலை படுத்தி வந்துட்டா எல்லாம் உனக்கு பழகிடும்.” முடிவெடுத்தவளாக அவனிடம் உரைத்தாள்.

 ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குவது எத்தனை கடினம் என்றும் அவளுக்கு தெரியும், அதே சாம்ராஜ்யத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்குவது எத்தனை எளிது என்றும் அவளுக்கு தெரியும். இத்தனை வளர்ந்து நிற்கும் சாம்ராஜ்யத்தை அத்தனை சீக்கிரம் ஸ்ரீ கை விடமாட்டான் என்றும் அவளுக்கு தெரிந்தது.

அவன் மனதில் இருக்கும் வேதனை, வெறுப்பு அதை செய்ய விடாமல் தடுப்பதும் அவளுக்கு தெரியும். அவனை தன்னால் நிச்சயம் மாற்ற முடியும் என்றும் அவளுக்கு தெரியும்.

“ஸ்ரீ” அணைத்தவாக்கிலே அவள் அழைக்க,

“சொல்லுமா” என,

“என்ன பண்ணுற?”

“யோசிக்கிறேன்” என்றான் அவளை நோக்கி திரும்பி.

“நல்லா யோசி. கண்டிப்பா நீ நல்ல முடிவு எடுப்பன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு” அவள் உரைக்கவே,

அவளை இறுக அணைத்துக் கொண்டான் ஸ்ரீ சக்ரவர்த்தி!

***

  விம்மி தவிக்கும் மனதை அடக்க வழி தெரியாமல் தவித்தாள் வைஷு. அவள்தான் அவனை கட்டாயபடுத்தி அங்கு அனுப்புகிறாள் அதே சமயம் வேதனையும் கொள்கிறாள். அவள் மனது என்ன நினைக்கிறது என்று அவளால் அறிந்துக் கொள்ளவே முடியவில்லை.

குழந்தை பற்றி அவனிடம் கூறாமல் இருக்கிறோம் என்று தவிப்பாகவும் இருந்தது. அதே சமயம் அவனது தேவை அங்கு இப்பொழுது கட்டாயம் என்பதும் புரிய அவனது பிரிவை காட்டிக் கொள்ளவில்லை அவள்.

சரியாக மூன்றாவது நாள் காலை ஸ்ரீ கரண் வீட்டின் வாசலில் வந்து நின்றது ராகவன் கார். அதில் இருந்து இறங்கிய ராகவன் நேராக ஸ்ரீ கரண் வீட்டில் தான் நுழைந்தார்.

 காலையில் கோவிலுக்கு சென்று வந்துக் கொண்டிருந்த வைஷுவின் கண்கள் கலங்குவதுப் போல் இருந்தது. காலையில் அழைப்பு வரும் என்றுதான் எண்ணியிருந்தாள். ஆனால் இப்படி வந்து நிற்பார் என்று கொஞ்சமும் எண்ணவில்லை.

மனதை ஓரளவு திடப்படுத்தவே கோவிலுக்கு சென்றாள். வீட்டின் உள் நுழைந்ததும் ஸ்ரீ அவள் முகத்தையே தான் பார்த்திருந்தான்.

இரண்டு நாட்களுக்கு முன்பே சிவாவையும், வைஷுவின் அப்பாவையும் அழைத்து எல்லாம் கூறியாகி விட்டது. அவன் வரும் வரை எல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று. இந்த இரண்டு நாட்களும் பயங்கர வேலைதான் அவனுக்கு.

அவர்கள் வந்திறங்கவும் ஸ்ரீ கரண் இப்பொழுதுதான் அழைத்து கூறியிருந்தார்.

‘இப்போ நான் என்ன பண்ண?’ ஸ்ரீ முகத்தையே வைஷு பார்த்திருக்க,

‘நீதானே என்னை போக சொல்லுற?’ என்பதாய் அவளையே பார்த்தான்.

அதற்குள் மீண்டும் அவரிடம் இருந்து அழைப்பு வரவே, “இப்போ வாரேன் தாத்தா” அவரிடம் கூறியவன் அறைக்குள் நுழைந்தான்.

‘கண்டிப்பாக போய்தான் ஆகவேண்டும். இனி ஒன்றும் செய்ய முடியாது’ எண்ணியவன் கட்டிலில் வந்தமர்ந்த வைஷுவை ஏறிட்டான்.

‘அவளை தன்னோடு அழைத்து சென்று விடலாமா? என்று ஏக்கமாக இருந்தது’ அதே சமயம் தன் வேலையில் அவளை தன்னால் சரியாக கவனிக்க முடியாது என்றும் தோன்றியது.

அவன் சென்னைக்கும், மும்பைக்கும் அலைய வேண்டி இருக்கும். அங்கு இவளை அழைத்து செல்வதும் சரியாகாது. அவன் எண்ணத்தில் அவன் மூழ்கி இருக்க,

“இன்னும் என்ன யோசிக்கிற?” அவனது தோளில் வைஷு கை வைக்க,

“கிளம்பணும். நான் இல்லாமல் நீ இருப்பியா? நீ இல்லாம நான் எப்படி இருக்க போறேன்னு எனக்கு தெரியல. நான் எப்போ வருவேன்னும் எனக்கு தெரியாது. அங்க வேலை எப்படி இருக்கும்னு எனக்கு தெரியாது. உன்னை கையோடு  கூட்டிட்டு போகணும்னு ஆசையா இருக்கு. ஆனா எனக்கு எப்போ எங்க வேலை இருக்கும்னு தெரியாது. எல்லா இடத்துக்கும் உன்னை அலைக்கழிக்க முடியாது தானே?”

“உன்னை விட்டிட்டு எப்படி இருப்பேன்” புலம்பியவன் அவளை அணைத்து அவள் இதழில் மூழ்கிக் கொண்டான்.

“அங்க உனக்காக வெயிட் பண்ணுறாங்க” அவள் நினைவு படுத்தவே,

தலை கோதி, அவளை விட்டு எழுந்தவன், அவளை அழைத்துக் கொண்டு ஸ்ரீ கரண் வீட்டில் நுழைய, அத்தனை பேரும் அங்கு குழுமி இருந்தனர்.

எல்லாரிடமும் கூறி அவன் கிளம்ப கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்திருந்தது. அந்த ஒரு மணிநேரத்தையும் மிகவும் கஷ்டப்பட்டு கடத்தினாள் வைஷு. கண்ணீர் இப்போ விழவா? வேண்டாமா? என்றுக் கேட்டுக் கொண்டிருந்தது.

அவன் சென்றதும் தங்களது வீட்டுக்கு வந்தவள் ஒரு  மூச்சு கதறி அழுதாள். அவனை திருமணம் செய்த நாள்முதற்கொண்டு பிரிந்திருப்பது இதுவே முதல் முறையாகும். அவன் இல்லாமல் ஒரு நொடி கூட அவளால் இருக்க முடியாது என்பது இந்த கொஞ்ச நேரத்தில் உணர்ந்துக் கொண்டாள் வைஷு.

முதலில் சென்னை வந்திறங்கிய ஸ்ரீ காணச் சென்றது அவனது சித்தப்பாவை தான். உடல் மெலிந்து கறுத்து போய் காணவே முடியாதபடி இருந்தார்.

அவரிடம் கோபப்படவும் அவனால் முடியவில்லை அதே சமயம் அவரிடம் பேசவும் பிடிக்கவில்லை. வந்து பார்த்த மட்டும் அங்கயே தூரத்தில் அமர்ந்து அவரையே பார்த்திருந்தான்.

அவரது கண்கள் நொடிக்கொருமுறை அவனையே பதிந்து மீண்டது. கண்கள் கண்ணீரை மட்டும் விடாமல் பொழிய, அதை பார்க்க மாட்டாமல் அங்கு வந்த அஜயை அழைத்துக் கொண்டு கம்பெனிக்கு சென்றான்.

அவனது பேச்சுக்கள் அதிகம் அங்கு வராதபடி பார்த்துக் கொண்டார் லாயர். அவனுக்கு துணையாக தன் மகனையும் வைத்திருக்க வேலை தடையில்லாமல் நடந்தது ஸ்ரீக்கு.

அடுத்து வந்த நாட்கள் ஒவ்வொரு இரவை கடப்பதும் இருவருக்கும் மிகவும் சிரமமாக இருந்தது. ஒருநாள் கூட அவளை விட்டு அவன் பிரிந்து இருந்ததில்லை அவன். அவனை சுற்றியே வரும் அவளின் கொலுசின் ஓசையை மிகவும் மிஸ் செய்தான் ஸ்ரீ.

இரவில் விழிப்பு வந்து அருகில் அவளது கை அவனை துழாவுவதும், அவன் இல்லாமல் போவதும் எழுந்து வந்து அவனது சட்டையை எடுத்து அருகில் போட்டு படுப்பதும் அவள் வாடிக்கையாய் மாறிப் போனது.

அவன் சென்று ஒரு வாரம் கடந்த நிலையில் ஸ்கேன் எடுக்க மருத்துவமனைக்கு சென்றவள். ஸ்கேனில் முதல் முதலாக தன் குழந்தையை காணவும் சந்தோசம் வருவதற்கு பதிலால் கண்களில் கண்ணீர் வழிந்தது.

இருவரும் பார்த்து மகிழ வேண்டிய தருணம். அன்று இரவு அவன் அழைத்து அவனை பேச விடாமல் முத்த மழை பொழிய,

“என்னம்மா? என்ன வைஷு” அவன்தான் பதறிப் போனான்.

“நான் இன்னைக்கு உன்னை ரொம்ப மிஸ் பண்ணுனேன் ஸ்ரீ” சிறு கேவலுடன் அவனிடம் உரைக்க,

அந்த பக்கம் அவனுக்குத்தான் மிகவும் வருத்தமாகியது.

அவளிடம் பேசி, கொஞ்சி சிரிக்க வைத்து அவன் அழைப்பை நிறுத்தி மீண்டும் வேலையை தொடர்ந்துப் பார்த்து என்று இரவு பகல் பார்க்காமல் அஜய் உதவியுடன் வேலையை கற்றுக்  கொண்டும் செய்து கொண்டும் இருந்தான் ஸ்ரீ சக்ரவர்த்தி.

அடுத்த நாளில் இருந்து அவளோடு வந்து தங்கிக் கொண்டனர் வைஷு வீட்டினர். எல்லாம் ஸ்ரீயின் ஏற்பாடுதான். எத்தனை தடுத்தும் அவர்கள் வரவை நிறுத்த முடியவில்லை.

ஷிவானியால் முன்பு போல் இங்கு வரமுடியவில்லை. அவளது தொழிலும் அப்படியானதே அதனால் அவளை தொந்தரவு செய்யவில்லை வைஷு.

ஸ்ரீ சென்னை சென்று கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்து விட்டிருந்தது. வைஷுதான் மிகவும் தவித்துப் போனாள். அவனை காணாமல், குழந்தை விசயத்தைக் கூற முடியாமல் வீட்டினரிடம் மறைத்து என்று பெரும்பாடானது.

மேலும் ஒரு மாதம் கடந்த நிலையில் அன்று காலையில் எழுந்தது முதல் வைஷுவைப் பார்த்தே ஆக வேண்டும் போல் இருந்தது ஸ்ரீக்கு. நேற்று இரவு அவளிடம் பேசும் பொழுது கூட அப்படி இல்லை.

 ஆனால் இன்று காலையில் எழுந்தது முதல் ஆவல் அதிகரிக்க, அஜயை அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.

அப்பொழுதுதான் எழுந்து அமர்ந்திருந்தாள் வைஷு. கொஞ்ச நாட்களாக மகளின் முகம் சரியில்லாமல் இருக்கவே பெரும்பாலும் அவளை கோதை தொந்தரவு செய்வதில்லை.

அவளது அறைக்கே சாப்பாடு கொண்டு வந்துவிடுவார். அதிலும் சில நேரம் அவளது சோர்வைக் கண்டு ஒரு வேளை மகள் குழந்தையை சுமக்கிறாளோ? ஸ்ரீ இங்கு இல்லாததால் யாரிடமும் கூறாமல் இருகிறாளோ என்று சந்தேகமாய் இருந்தது.

ஆனாலும் அதை அவளிடம் காட்டிக் கொள்ளவில்லை. அவளேக் கூறுவாள் என்று அமைதிகாத்தார். ஆட்டோ அழைத்து அவள் வெளியே செல்வதையும் அவள் அறிந்துதான் இருந்தாள். ஆனால் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.

எப்பொழுதும் போல் இன்று காலையிலும் அவளுக்கு பாலை எடுத்து வந்தவர் மேஜையில் வைத்து செல்லவும், தங்களது குழந்தையின் ஸ்கேன் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘எப்போடா வருவ ஸ்ரீ?’ மனம் புலம்பிக் கொண்டிருந்தது.  

அவளது புலம்பல் கேட்டது என்பதுப் போல் கதவை திறந்துக் கொண்டு அவள் முன் வந்து நின்றான் ஸ்ரீ.

“வைஷு” அழைத்துக் கொண்டே அவன் அறைக்குள் நுழைய,

கையில் வைத்திருந்தவற்றை கட்டிலில் வைத்து விட்டு, “ஸ்ரீ…” என ஆவலுடன் அழைத்து நிற்க,

ஒரு நிமிடம் அவளை கண்களால் நிறைத்தவன் தாவி வந்து அணைத்துக் கொண்டான்.

“வைஷு… வைஷு” அவன் மனம் விடாமல் புலம்பிக் கொண்டிருந்தது.

காற்று புகாத அளவு, அவன் அவளை இடையோடு அணைக்க, மூச்சு முட்டியது அவளுக்கு.

‘ஐயோ குழந்தை’ அப்பொழுதுதான் குழந்தையின் நினைவு வர, அவனை விலக்க, அவனது பார்வை கட்டிலில் இருந்த ஸ்கேனில் நிலைக்க,

கைகள் தானாக அதை எடுத்துக் கொண்டது. அதை பார்த்தவனது முகம் பலவிதமான உணர்ச்சியை காட்ட,

அப்படியே மண்டியிட்டு அமர்ந்தவன் அவளது வயிற்றைப் பிடித்துக் கொண்டு அதில் முகத்தை அழுத்தினான்.

அவனால் பேசக் கூட முடியவில்லை “வைஷு… நி… நிஜமா… நம்… நம்ம குழந்தையா…” அவனால் கோர்வையாக பேசக் கூட முடியவில்லை. தொண்டை அடைத்து, கைகள் கூட நடுங்கியது.

‘தந்தை ஆகிவிட்டோம்’ என்ற உணர்வே அவனுள் பல மகிழ்ச்சியை உருவாக்கியது. சந்தோஷ மிகுதியில் கண்களில் கண்ணீர் கூட வழிந்தது.

அவனது கண்ணீரை அவள் உணர, “ஸ்ரீ” இவள் அவன் தலை கோத,

“ஏன்டி என்கிட்ட மறைச்ச?” மேலும் அணைக்க,

“ஸ்ரீ… அதுவந்து” அவள் எதுவோ சொல்ல போக,

“நீ எதுவும் என்கிட்டே சொல்லவேண்டாம்” அவளை தடுத்தவன்,

“எங்க பாக்குற, எந்த ஹாஸ்பிட்டல். எத்தனை மாசம். ரொம்ப கஷ்டபட்டியா, என்கிட்ட சொல்லிருக்கலாம்ல நான் அங்க போகாமலே இருந்திருப்பேனே? உன்னை, என் குழந்தையை விட அது எதுவும் எனக்கு முக்கியம் இல்ல.” அவன் பாட்டுக்கு புலம்ப,

“இதுக்குத்தான் நான் உன்கிட்ட அப்பவே சொல்லலை”  இவள் முறுக்க,

“வா… வா… ஹாஸ்பிட்டல் போகலாம்” இவன் அப்படியே அவளை அணைத்து தூக்க, இரு காலில் கிடந்த கொலுசும் ஒன்றை ஓன்று உரசி இனிய ஓசையை வெளியிட்டது.

இந்த முறை கொலுசின் ஓசையை ரசிக்காமல் தாய்மை அழகுடன் ஜொலிக்கும் தன் அழகு மனைவியை ரசித்தான் ஸ்ரீ சக்ரவர்த்தி.

”ஐயோ ஸ்ரீ என்ன பண்ணுற விடு… விடு… நான் நேத்துதான் ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்தேன். நம்ம குழந்தை உன்னை போலவே நல்லா இருக்கு” அவள் உரைக்க,

“இல்ல… இல்ல… வேண்டாம் நீ வா என் திருப்திக்கு நான் பார்த்தே ஆகணும்” அவன் வம்படியாக அவளை தூக்கிக் கொண்டு வெளியே செல்ல எத்தனிக்க,

“வைஷு இந்தா ஸ்வீட்”என அறைக்குள் நுழைந்தார் கோதை.

இவன் இவளை தூக்கி வைத்திருப்பதை எதிர் பார்க்காத கோதை, “ஐயோ!” என அப்படியே திரும்பி போகப் பார்க்க,

“நீங்க சொல்லுங்கத்தை” என இவன் அவரை நிறுத்த,

“மொத முறையா என் பொண்ணு ஒரு நல்ல விஷயம் சொல்லுறா அதை ஸ்வீட் தந்து சொல்லட்டும்னு கொண்டுவந்தேன் அதுக்குள்ள சொல்லிட்டா?” என,

“ம்மா… உனக்கு எப்படி தெரியும்?” என,

“அதெல்லாம் உன்னை பார்த்தே நான் கண்டு பிடிச்சுட்டேன்” கூறியவர் வெளியே செல்ல,

“யார் கிட்டயும் சொல்லலையா வைஷு” இவன் கேட்க,

“இல்ல உன்கிட்டதான் சொல்லனும்னு இருந்தேன் நீயே கண்டு பிடிச்சுட்ட” இவள் சிணுங்க.

அதன் பிறகென்ன, தாய்மையை ஒவ்வொரு நொடியும் இவள் ரசிக்க, தன் வைஷுவை ஒவ்வொரு நொடியும் தாங்கினான் ஸ்ரீ. வாரத்தில் இரண்டு நாட்கள் சென்னையிலும். மீதி நாட்கள் வைஷுவை பார்ப்பதிலும் வீட்டில் இருந்து தொழிலை கவனிப்பதுமாக அவனது நேரம் ரெக்கை கட்டி பறந்தது.

வாழ்க்கையை மிகவும், ரசித்து ருசித்து வாழ்ந்தனர் அத்தம்பதியினர்!