இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 23 (Final)

இரண்டு வருடங்களுக்கு பிறகு,

ஷிவானியின் திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தான் ஸ்ரீ சக்ரவர்த்தி. அவனது ஒரே தங்கையின் திருமணம் மிகவும் விமர்சையாக ஏற்பாடாகிக் கொண்டிருந்தது.

திருமணத்தை நடத்துவதே ஸ்ரீதான். எல்லாம் தன் கண் பார்வையில் நடக்க வேண்டும் என்று ஒரு வாரம் முன்பே இங்கு  வந்திருந்தான்.

எல்லாம் அவனது  மேற்பார்வையில் நடக்க,  வீட்டின் முன் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தான் ஸ்ரீ.

மெல்லியதான ஜல் ஜல் ஓசை அவன் காதை வந்தடைய முகத்தில் புன்னகை தோன்ற ஓசை வந்த திசையை திரும்பிப் பார்த்தான் ஸ்ரீ.

அவனது பெண் மகவு விஹாஷினி அவனை நோக்கி வந்துக் கொண்டிருந்தாள்.

   வைஷுவை போல் அவளுக்கும் கறுப்பு மணிகள் கோர்த்த கொலுசை வாங்கி அணுவித்து விட்டிருந்தான்.

மெல்லியதாக ஒலிக்கும் இவ்வோசை ஸ்ரீ மனதில் புன்னகையை வரவைக்கும்.    

 “ப்பா… ப்பா” அவனை நோக்கி வர அள்ளி அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டான் ஸ்ரீ.

“நானு… நானு” என்று அவனது கன்னத்தைப் பிடித்து முத்தமிட்டாள் விஹாஷினி.

இது எப்பொழுதும் அவர்கள் வீட்டில் நடக்கும் ஒன்று. ஸ்ரீ வைஷுவுக்கு முத்தமிட்டால் உடனே ‘நானு… நானு’ என்று வந்துவிடுவாள் குட்டி.

இப்பொழுதும் அப்படி முத்தமிட்டவளை கட்டியணைத்து வீட்டின் உள்ளே தூக்கி வந்தான் ஸ்ரீ.

அவனின் எதிரே வைஷு வர, அவளையே ரசித்துப் பார்த்திருந்தான் ஸ்ரீ. இப்பொழுது அவள் ஐந்தாம் மாதத்தில் இருந்தாள்.

என்னவோ இப்பொழுது வைஷுவின் அழகு மிகவும் கூடுதலாக தெரிந்தது. அவள் மட்டுமல்ல அவர்களது வாழ்கையிலும் மகிழ்ச்சி கூடித்தான் இருந்தது.

“உங்களை கூட்டிட்டு வர சொல்லி இவளை விட்டா இவ்ளோ நேரம் கழிச்சு வரீங்க” வைஷு முறைக்க,

“அதுக்கு இப்படிதான் நீ நடந்து வருவியா? நாங்க வரமாட்டோமா? உன்னைத்தான் எங்கேயும் நடக்க கூடாதுன்னு சொல்லிருகேன்ல.”

“சரி இனி நடக்கல” சமாதானத்துக்கு வர,

“உனக்கு என்ன வேணும்னாலும் என்கிட்ட சொல்லு நான் பாத்துக்கிறேன்னு சொல்லிருக்கேன். அப்படியும் நீ இவ்ளோ தூரம் வந்திருக்க”

“உங்களைத் தேடித்தான் வந்தேன்”

“இதோ நான் வந்துட்டுதானே இருக்கேன்”

“சரி… இப்போ என்னை தூக்குங்க. உங்களை தேடி அலைஞ்சு எனக்கு கால் எல்லாம் வலிக்குது” அவள் கூறவே,

“இதுக்குதான் உன்னை அதிகம் அலையாதேன்னு சொன்னேன். கேக்குறியா நீ” முறைக்க,

“அதெல்லாம் எனக்கு தெரியாது இப்போ என்னை தூக்குங்க”

“இங்கயா?” இவன் முழிக்க,

“இங்க வச்சுதானே என்னை திட்டுறீங்க இங்கதான் தூக்கணும்” என,

  “இவளை வச்சுக்கிட்டு எப்படி டி உன்னை தூக்குறது”

“இவளை வச்சுக்கிட்டுதானே என்னை திட்டுனீங்க. இவளை வச்சுகிட்டே தூக்குங்க”

“இம்சை பண்ணுற டி”

“இதெல்லாம் திட்டுறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்”

அந்த நேரம் அங்கு ஷிவானிக்கு கையில் மருதாணி வைக்க ஆட்கள் வரவே. அவர்களை அழைக்க ஷிவானி அறையில் இருந்து வெளியே வர,

ஷிவானியை அழைத்து அவளிடம் விஹாவை கொடுத்தவன், அவர்கள் சென்றதும், இவளை தூக்கிக் கொண்டு அறைக்குள் நுழைந்தான்.

“வர வர உனக்கு ரொம்ப ஏத்தமாகிப் போச்சுடி” என்றபடியே அவளை அணைக்க,

“யாருக்கு ஏத்தம் கூடிப் போச்சு, உங்களுக்கா? எனக்கா?”

“உனக்குத்தான்” என,

 “அப்படியா? எனக்கா” அவனை விட்டு விலகி இடுப்பில் கை வைத்து முறைக்க,

அவளின் தோற்றம் அவனைக் கவர, “சரி எனக்குதான்” என்றபடி அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் ஸ்ரீ சக்ரவர்த்தி.

***

அன்று வைஷுவை மருத்துவமனைக்கு அழைத்து சென்று வந்த ஸ்ரீ அதன் பிறகு சென்னை செல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் அவளின் பின்னே சுற்றினான்.

 அவளது சின்ன சின்ன உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதன்படி நடப்பான் ஸ்ரீ. அவளோடு அவன் இருந்த நாட்கள் அவளுக்கு மற்றொரு தாயாக இருந்தான் என்று சொல்லலாம்.

இப்படியாக ஒரு வாரம் கடந்த நிலையில் மிகவும் வற்புறுத்தி மீண்டும் சென்னை அனுப்பினாள் வைஷு.

“இல்லை… உன்னை இங்க இப்படி விட்டுட்டு என்னால அங்க நிம்மதியா இருக்க முடியாது வைஷு. நான் போகல” அடம்பிடித்து அவள் பின்னோடு சுற்றிக் கொண்டிருந்தவனை,

“நீ இப்படி இருந்தா சரி வர மாட்ட?” என்று அஜயை வர சொல்லி அவனோடு வலு கட்டாயமாக அனுப்பி வைத்தாள்.

அவன் சென்ற பிறகு இவள்தான் மிகவும் தவித்துப் போனாள்.

அவளின் ஆசைக்காக செல்பவன், அடிக்கடி இங்கு வந்துவிடுவான். அவன் இங்கு வரும் நாட்கள் அவனையே சின்ன சிரிப்புடன் பார்த்திருப்பாள் வைஷு.

அவன் வரும் வரை மிகவும் சோர்வாகவும், டென்சனாகவும் சுற்றும் வைஷு அவன் வந்து விட்டால் அப்படியே மாறிவிடுவாள்.

அவன் வரும் நாட்கள் மிகவும் அழகாகவே கழியும் அவளுக்கு.

இப்போழுதெல்லாம் ஷிவானி வேலை செய்யும் மருத்துவமனையில் தான் வைஷுவை அழைத்து செல்கிறான்.

இங்கு இருக்கும் வரை அவளது ஒவ்வொரு செக்கப்புக்கும் இங்கு எப்படியாவது வந்து விடுவான் ஸ்ரீ.

அவளுக்கு ஸ்கேன் எடுக்கும் இடத்தில் அவனது கரத்தைப் பிடித்துக் கொண்டு இருப்பாள் வைஷு. தன் குழந்தையை கண்டு அதன் அசைவை உணரும் நேரங்கள்தான் அவன்  மிகவும் ரசிக்கும் நொடிகள்.

    வைஷுவின் ஏழாவது மாதத்தில் வெகு விமர்சையாக வளைகாப்பு வைத்திருந்தான் ஸ்ரீ. வளைகாப்பிற்கு ஊரையே அழைத்திருந்தான். அவனை பற்றிய உண்மைகள் பெரும்பாலும் அனைவரும் அறிந்திருந்தனர். அவனைப் பார்க்கும் பொழுது தானாக ஒரு மரியாதை எல்லாரிடமும் வந்துவிடும்.

தாய்மை அழகுடன் ஜொலித்த வைஷுவை பார்த்துப்  பார்த்து ரசித்தான் ஸ்ரீ. அத்தனை ஆட்களுக்கு மத்தியில் அவளை நேரடியாக பார்ப்பதே பெரும் பாடாக இருக்க அங்கும் இங்கும் நின்றுப் பார்த்திருந்தான்.

‘வைஷுவிடம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன்’ என்று ஒவ்வொரிடமும் ஒவ்வொரு காரணம் கூறி அவளையே சுற்றி வந்தான்.

ஷிவானி கூட பயங்கர கிண்டல். “ண்ணா… அண்ணி இங்கதான் இருக்காங்க எங்கயும் போகல” என,

“வைஷு” என அழைத்தபடியே அவளிடம் எதுவோ கூறுவதுப் போல் ஷிவானியிடம் இருந்து தப்பி வரும் ஸ்ரீ மீண்டும் அவளைப் பார்த்து நிற்பான்.

‘என் வாழ்கையை அழகாக்க வந்தவள்’ நீ என்ற எண்ணம் எப்பொழுதும் அவன் கண்களில் வழியும்.

இருவரின் கண்களில் வழியும் காதலையும் அழகாக தூரத்தில் நின்று கேமராவில் பதிவு செய்துக் கொண்டிருந்தான் வசந்த்.

இப்பொழுதெல்லாம் நல்ல விவரம். எல்லாம் அவனின் மாமாவைப் பார்த்து கற்றுக் கொண்டவை. சிறு குழந்தை போல் பேச்சு, நடை எதுவும் அவனிடம் கிடையாது. 

அஜய், ராகவன் இருவரும்  வந்திருந்தனர். அஜய் கண்கள் அவ்வபோது ஷிவானியை நோக்கி பாயப் பார்த்தும் பார்க்காதது போல் நின்றிருந்தான் ஸ்ரீ.

இங்கு அஜய் வரும் நாட்களில் ஷிவானிக்கும், அஜய்க்கும் இடையில் நல்ல நட்பு உருவானது.

நலுங்கு வைத்து, எல்லாரும் வளையல் போட்டு விட, வசந்த் கையில் இருந்த கேமராவை வாங்கிய ஸ்ரீ வைஷுவையே சுற்றி சுற்றி வந்தான்.

அவளுக்கு வளையல் போட, அவனை அழைக்கவே கேமராவை அஜய் கையில் கொடுத்து வைஷுவை நோக்கிப் போனான்.

 சந்தனத்தை குழைத்து அவள் கன்னங்களில் பூசியவன் மனம் அத்தனை மகிழ்ச்சி அடைந்தது. அவை வார்த்தைகளில் விவரிக்க முடியாதவை!

சுற்றி அத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதையும் மறந்து, அவளின் கன்னங்களை பிடித்து ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதிக்க, அஜய் கையில் இருந்த கேமரா அழகாக கிளுக்கியது.

இதை பார்த்திருந்த மாறனுக்கும் – கோதைக்கும் பயங்கர மகிழ்ச்சி. வைஷாலியும், ஷிவானியும் சேர்ந்திருந்து அங்கு இங்கு வேலைகள் செய்ய பார்த்திருந்த அத்தனை பேருக்கும் மனது நிறைந்தது.

வளைகாப்பு முடிந்து சம்பிரதாயத்துக்கு மட்டும் வைஷு அவள் வீட்டுக்கு சென்றவள் மாலையே இங்கு வந்துவிட்டாள். வசந்தும், வைஷாலியும் ஹாஸ்ட்டலில் தங்கி படிப்பதால் கோதையையும், மாறனையும் தங்கள் வீட்டுக்கு அழைத்திருந்தான்.

இன்று காலையில் தான் அஜய் பற்றி ஸ்ரீ கரணிடம் கூறியிருந்தான் ஸ்ரீ. அவரை பொறுத்தவரை ஸ்ரீ, ஷிவானிக்கு நல்லதே செய்வான் என்று நன்றாகவே தெரியும் என்பதால் ‘உன் இஷ்டம் போல் செய் ஸ்ரீ’ என்று விட்டார்.

ஷிவானியும் மேல் படிப்பு படிக்க ஆசைப்படுவதால் கொஞ்ச நாட்கள் கழித்து திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டான் ஸ்ரீ.

‘அதற்குள் ஷிவானி மனதில் நான் இடம் பிடிக்கிறேன்’ என்று கூறிவிட்டான் அஜய்.

தங்களது அறைக்கு வந்து உடை மாற்றிக் கொண்டிருந்தவனை பின்னோடு அணைத்தாள் வைஷு.

“ஏய் பார்த்து” இவன் அவளை நோக்கி திரும்ப,

இரண்டு கன்னத்திலும் சந்தனம் பூசி பேரழகுடன் ஜொலித்தவளை முழுதாக ரசித்தான்.

“அதெல்லாம் நாங்க பாத்துக்குவோம்” என்றபடி அவனது நெஞ்சில் சாய்ந்தவள்.

“நான் ரொம்ப லக்கி தெரியுமா ஸ்ரீ?”

“ஏன்?” இவன் கேட்டிருக்க,

“நீ எனக்கு கிடைசிருக்கல்ல”

“இல்லை நான் தான் லக்கி. தேவதை மாதிரி நீ எனக்கு கிடைச்சிருக்க”

“இல்லை நான்தான்” இவள் கூற,

“இல்லை நாம மூனு பேருமே லக்கி” என்றவன் அவனின் குழந்தையை வருட,

“ஆம்” என்றவள் அவன் கையோடு கை கோர்த்துக் கொண்டாள்.

 அவளது ஒன்பதாவது மாத தொடக்கத்தில் வெளிநாடு செல்ல வேண்டிய வேலை வந்திருக்க, ,மிகவும் கஷ்டப்பட்டுதான் கிளம்பினான் ஸ்ரீ.

அவனை கிளப்புவதற்குள் ஒரு வழியாகிப் போனாள். ‘குழந்தை பிறக்கும் போது நான் இங்க தான் இருப்பேன். என் கையில் தான் முதலில் ஏந்துவேன்’ இப்படி பல காரணங்கள் கூறி மறுத்தவனை வலுகட்டாயமாக அனுப்பி வைத்தாள் வைஷு.

 அவன் செல்லும் வரை அஜயை இங்கு பார்த்துக் கொள்ளும் படி கூறி சென்றான் ஸ்ரீ.

ஸ்ரீ சென்று ஒரு வாரத்தில் அவளுக்கு வலி வர, அஜய், ஸ்ரீக்கு அழைத்து கூற.

“நான் சென்னை வந்துவிட்டேன். இதோ வந்து விடுகிறேன்” என்றவன் வேகமாய் வந்திருந்தான்.

பிரசவ அறைக்கு உள்ளே செல்லும் அந்த நொடி, ‘ஸ்ரீ அருகில் இருந்தால் நன்றாக இருக்கும்’ என்று யோசித்த அந்த நொடி, வைஷுவின் கைகளைப் பிடித்திருந்தான் ஸ்ரீ.

அந்த நேரம் அவள் அடைந்த மகிழ்ச்சியையும், ஆறுதலையும் வார்த்தையால் விவரிக்க முடியாதவை.

அடுத்த மூன்று மணிநேரத்தில் ஒரு பொன் மகளை பெற்றாள் வைஷு.

“பொண்ணு பொறந்திருக்கு” சிஸ்டர் வந்து கூற ஸ்ரீ அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

“சிஸ்டர் வைஷு எப்படி இருக்கா?” என,

“நல்லா இருக்காங்க இன்னும் கொஞ்ச நேரத்துல ரூம் மாத்திடுவாங்க” கூறி அவள் செல்ல கொஞ்ச நேரத்தில் அவனது மகளை அவன் கையில் கொடுத்தார் மருத்துவர்.

அவளை கையில் ஏந்திய அந்த நொடி மிகவும் மகிழ்ந்தான் ஸ்ரீ. அவனது வாரிசு, அவனது ரத்தம் அவனுக்கே அவனுக்கான சொந்தம்!

அவன் குழந்தையை ஸ்ரீ கரண் கையில் கொடுக்க, அந்த பெரியவருக்கு மிகவும் சந்தோசம்! அப்படியே உச்சி முகர ரசித்து பார்த்திருந்தான் ஸ்ரீ!

கொஞ்ச நேரத்தில் வைஷுவை அறைக்கு மாற்ற, பின்னோடு சென்றான் ஸ்ரீ. இன்னும் மயக்கத்தில் தான் இருந்தாள் வைஷு.

அவள் அருகில் ஒரு நாற்காலியை போட்டு அமர்ந்திருந்த ஸ்ரீ. மிகவும் கவனமாக கையில் குழந்தையை வைத்திருந்தான்.

மற்ற எல்லாரும் அப்பொழுதுதான் வெளியே சென்றிருக்க, இவன் இங்கு அமர்ந்துக் கொண்டான்.           

வைஷு கண்விழிக்கும் பொழுது, குழந்தையையே கண்  கொட்டாமல் பார்த்திருக்கும் ஸ்ரீயே தெரிய அவனையே பார்த்திருந்தாள். ‘தான் மிகவும் லக்கி’ என்று மனம் கூறிக் கொண்டிருந்தது.

குழந்தை பிறந்து இரண்டு மாதம் கழியவும், இருவரையும் அழைத்துக் கொண்டு மும்பை சென்று விட்டான் ஸ்ரீ.

மும்பையில் தாய்க்கும், மகளுக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தை பார்த்து ரசித்திருப்பான் ஸ்ரீ.

ஒவ்வொரு விசயத்துக்கும் அவளை ஓட விடுவாள் அவளது மகள்.

“என்னை உன் பின்னாடி எப்படி சுத்தல்ல விட்ட அதை எல்லாம் இப்போ என் பொண்ணு செய்யுறா” பெருமையாக கூறி அவளிடம் ஒரு முறைப்பை பரிசாக பெற்று, மகளை அள்ளியணைத்து அவள் முன் நிற்பான் ஸ்ரீ.

அந்த நொடி மகளில் முகத்தில் இருக்கும் பூ சிரிப்பை ரசித்துப் பார்த்திருப்பர்.

இங்கிருந்த பொறுப்பை ஸ்ரீ கரண் & மாறன் கையில் ஒப்படைக்க எப்பொழுதும் போல் சிவாவை வைத்து பார்த்துக் கொண்டார் ஸ்ரீ கரண். மாதத்தில் ஒரு நாள் இங்கு வருவதை வழக்கமாய் வைத்திருந்தான் ஸ்ரீ.

***

திருமணத்தை மிகவும் விமர்சையாக ஏற்பாடு செய்திருந்தான் ஸ்ரீ. அதற்குள் ஷிவானி தன் மேற்படிப்பையும் முடித்திருந்தாள்.

சரியாக ஷிவானி மேற்படிப்பை முடித்த அன்று அவளை நோக்கி வந்தான் அஜய்.

அவளை காலேஜில் இருந்து அழைத்து வர சென்றான் அஜய்.

“கொஞ்சம் நேரம் பேசியிருந்துட்டு போகலாமா ஷிவானி?” அவன் அவளிடம் கேட்க,

“எனக்கும் கொஞ்சம் டீ குடிச்சா நல்லாருக்கும் போல இருக்கு” எனவும்,

அருகில் இருந்த டீ ஷாப்பில் காரை நிறுத்தினான் அஜய்.

இருவருக்கும் டீயும், சமோசாவும் ஆர்டர் செய்தவன், அவளிடம் எப்படி கூறுவது என அவள் முகத்தைப் பார்ப்பதும், ஃபோன் பார்ப்பதுமாக தவித்துக் கொண்டிருந்தான் அஜய்.

அதற்குள் ஆர்டர் அவர்களை நோக்கி வந்திருக்க, இருவரும் ஆளுக்கொன்றாய் எடுத்துக் கொண்டனர்.

“உங்க கிட்ட ஒன்னு சொல்லணும் ஷிவானி” மெதுவாக பேச்சை ஆரம்பித்தான் அஜய்.

“சொல்லுங்க அஜய்” முன்னமே இருவருக்கும் நல்ல நட்பு  என்பதால் சாதரணமாகவே கேட்டாள்.

“நான் சுத்தி வளைக்காம நேரடியா விஷயத்துக்கு வாரேன் ஷிவானி. உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் நேரடியாக கேட்டான் அஜய்.

அவனது நேரடியான கேள்வி அவளை கொஞ்சம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று அவளுக்கு சுத்தமாக தெரியவில்லை.

அவனை பிடிக்கும், ஆனால் திருமணம் என்று கேட்டால் அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

‘ஸ்ரீ சொல்லுபவனைதான் திருமணம் செய்வேன்’ என்று அவள் அவனிடம் கூறியிருக்க,  இப்பொழுது இவனிடம் என்ன சொல்வது.

யோசனையாக அவனைப் பார்த்தவள், “வீட்டுக்கு போகலாமா?” என்றாள் அவனிடம்.

‘கேட்டதுக்கு பதில் சொல்லலியே?’ என்பதாய் இவன் பார்த்திருக்க,

“லேட் ஆகிட்டு தாத்தா தேடுவாங்க?” உரைக்கவே அவளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டான்.

வீட்டுக்கு வந்தவள் உடனே ஸ்ரீக்கு அழைத்து சொல்ல, அவன் ஸ்ரீ கரணிடம் சொல்ல என்று ஒரு வாரத்தில் அஜய்க்கு பதில் சொல்லி விட்டாள் ஷிவானி.

இதோ இப்பொழுது இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டிருந்தது. இத்தனை நேரம் மேடையில் அவர்களுக்கு அருகில் நின்றிருந்த ஸ்ரீ தன் மனைவியுடன் கீழே வந்து அமர்ந்திருந்தான்.

அவன் மடியில் ராஜகுமாரியாய் அவன் மகள். அருகில் மகாராணியாய் மனைவி இருக்க மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தான் ஸ்ரீ சக்ரவர்த்தி!

அப்பொழுது அருகில் வந்தார் ஷிவானி உறவுக்கார பாட்டி, வைஷுவை நிறைய பிடிக்கும் அவருக்கு.

“ராஜாவாட்டம் ஒரு இளவரசனை பெத்துக் குடுடி ராசாத்தி” கன்னம் தொட்டு கூற,

“சரிங்க பாட்டி” என்றாள் வைஷு வெட்கத்துடன்.

“இப்படிதான் போனமுறையும் சொன்ன”

“பாட்டி” இவள் அழைக்க,

“எனக்கு தெரியும் நீ பெத்து குடுப்ப” கூறி அவர் சென்றார்.

“ஐ! டம்பி” விஹாஷினி கை கொட்டி சிரிக்க,

இருவரும் புன் சிரிப்புடன் மகளை பார்த்திருக்க,

அதே நேரம் ஸ்ரீ கரண் இருவரையும் அழைக்க,

வைஷு முன்னால் செல்ல, மகளை கையில் பிடித்தபடி பின்னே சென்றான் ஸ்ரீ.

இருவரின் கொலுசின் ஓசையும் ஒன்றை ஒன்று தொட்டு அவன் இதயத்தை நிறைத்துக் கொண்டிருந்தது.

எப்பொழுதும் காதல் ஓசை அவன் காதில் ஒலித்துக் கொண்டிருக்கும் என்ற நம்பிக்கையில் நாமும் விடை பெறுவோம்!