இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 4

“டேய் சிவா, இந்த மூட்டை எல்லாம் கரெக்ட்டாக் கடையில் இறக்கி, கணக்குப் பார்த்துட்டு வீட்டுக்கு வாடா, ஐயா நிறையக் கணக்குப் பாக்கணும்னு சொன்னாங்க,

அடுத்த வாரம் நம்ம ஆடிட்டர் வேற வாரார் எல்லாம் பக்காவா இருக்கணும், இல்லன்னா மனுஷன் கடிச்சு குதறிவார்” அரிசி ஆலையில் அமர்ந்திருந்து, தன் முன்னால் அமர்ந்திருந்த சிவாவை பார்த்துக் கூறினான் ஸ்ரீ.

அவன் முன்னால் அமர்ந்திருந்தவனோ கண்களை மூடி பூம்பூம் மாட்டைப் போல் தலையாட்டிக் கொண்டிருந்தான்.

“டேய் சிவா, உன்னைத்தான்” இவன் ஒரு அதட்டல் போட,

“என்ன ஸ்ரீ… ஏன் இப்படிக் கத்துற, எவ்ளோ அழகான பாட்டு தெரியுமா?” ஹெட்ஸெட்டை கழட்டியபடியே அவனைப் பார்க்க,

“அப்போ இவ்ளோ நேரம் நான் பேசினதை நீ கேட்கல?”

“ஆமா, கேட்கல”

“என்னை நல்லாப் பார்த்து சொல்லு, நான் சொன்னதை நீ கேட்கலியா?”

“கேட்டிச்சி அதுக்கு என்ன இப்போ, என்னால இனி கணக்கு பார்க்க முடியாது, உங்க வீட்டு கணக்கு நீயே பாரு எத்தனை நாள்தான் இப்படி வீம்பா சுத்த போற”

“பச்… புரியாம பேசாத சிவா, கணக்கை பாருன்னு சொன்னா பாரு. அதைத் தவிர எதுவும் பேசாத புரியுதா”

“நான் அப்படிதான் பேசுவேன், என்னால இனி கணக்கு பார்க்க முடியாது, அப்படியும் நீ ஃபோர்ஸ் பண்ணுனா உன் வேலையும் வேண்டாம், நீயும் வேண்டாம்னு கிளம்பி போய்ட்டே இருப்பேன்”

“பச்… படுத்தாத சிவா, நான் வெளிய போகும் போது யாரும் எந்தக் கணக்கும் என்கிட்ட கேட்க கூடாது, அது எனக்குப் பிடிக்கவும் செய்யாது…

நான் நானா இருக்கணும் சிவா, நான் எப்பவும் வேற சிவா, நான் ஃபர்ஸ்ட் வந்த இடத்துக்கு எப்போனாலும் திரும்பி போக வேண்டிய சூழ்நிலை வரும், அதுக்காக எந்தக் கணக்கும் என்னைச் சார்ந்து இருக்கக் கூடாது அதுதான் சொல்லுறேன், ஐயாகிட்ட கணக்கை சொல்லு,

அவங்க கேட்கலன்னா நாளைக்கு எல்லாத்தையும் பாத்துக்கப் போற ஷிவானிகிட்ட சொல்லு” இதுக்குமேல் என்னால் முடியாது கேட்பதும் கேட்காததும் உன் விருப்பம் என்பது போல் எழுந்து வெளியே சென்றுவிட்டான் ஸ்ரீ.

‘இவனைத் திருத்தவே முடியாது, ஷிவானி அன்னைக்குப் பேசினதை இன்னும் பிடிச்சுத் தொங்குறான். அது சின்னப் பிள்ளை தெரியாம பேசினா மன்னிச்சு விடமாட்டானாமா இவன்’ கடுப்புடன் அவனே எண்ணிக் கொண்டான் சிவா.

இவனால் எண்ணமட்டுமே முடியும். அதுதான் எல்லாவற்றையும் எண்ணத்தோடு நிறுத்திக் கொள்வான் சிவா.

‘நீ வந்த இடம்னா எது? ஜெயிலா? மீண்டும் அங்கையா போகப்போற?’ ஸ்ரீயின் மனம் கேள்வி எழுப்ப எப்பொழுதும் போல் அதைப் புறம் தள்ளியவன் பைக் எடுத்துக் கொண்டு வீடு நோக்கி சென்றான்.

ஸ்ரீக்காகக் காத்திருந்த ஸ்ரீகரண் அவன் வரவும், கோவில் செலவுக்கான பணத்தையும் செய்ய வேண்டிய வேலையையும் அவனிடம் கூற, அவரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு கோவிலை நோக்கி சென்றான்.

தூரத்தில் வரும் பொழுதே அங்கு விக்ரமை கண்டான் ஸ்ரீ.

“என்ன விக்ரம், இங்க என்ன பண்ணுற?”

“இல்லண்ணா, வீட்டுல நேரம் போகல அதுதான் அப்படியே கோவிலுக்கு வரலாம்னு வந்தேன்”

மற்ற நாட்களில் என்றால் வைஷ்ணவியைப் பார்க்க கிளம்பிவிடுவான். ஆனால் இப்பொழுது போக முடியாதுதானே? அதுதான் கோவிலுக்கு வந்துவிட்டான்.

முகத்தில் ஒரு புன்னகையைப் படரவிட்டவன், ஒரு தலையாட்டலை வழங்கி அவனைக் கடந்து உள்ளே சென்றான்.

காரணமே இல்லாமல் ஸ்ரீ மனதை எதுவோ உறுத்தியது!

***

வீட்டுக்கு வந்து கொண்டிருந்த வைஷ்ணவி முகம் புன்னகையில் மலர்ந்திருந்தது. அவள் எதிர் பார்த்ததை விட அதிக மதிப்பெண் பெற்றிருந்தாள்.

அவள் வேலை பார்க்கும் ஆடிட்டரிடம், தன்னுடைய மதிப்பெண்ணைக் கூற மிகவும் மகிழ்ந்தார் பெரியவர்.

“சீக்கிரமே உனக்கு ஒரு பெரிய இடத்தில நல்ல சம்பளத்தில்  வேலை வாங்கிதாரேன் பாப்பா” என்றிருந்தார் அவர்.

அந்த மகிழ்ச்சியும் அவள் முகத்தில் தாண்டவமாடியாது.

இவளைப் பார்த்து வியந்த மனிதர் அவர். இந்த வயதில் அத்தனைப் பொறுப்பு. படிப்பிலாகட்டும் செய்யும் வேலையில் ஆகட்டும். வீண் அலட்டல் இல்லாத உழைப்பாளி.

சந்தோஷமாக ஒரு பாக்ஸ் ஸ்வீட் வாங்கிக் கொடுத்திருந்தார்.

வழியில் எப்பொழுதும் தொடர்ந்து வரும் விக்ரமை கூட இன்று காணவில்லை.

அதுவும் ஒருபுறம் சந்தோஷமாக இருக்க, கையில் இருந்த ஸ்வீட் கவரை வீசி வீசி நடந்து வந்தாள்.

அது ஒரு சந்தோஷ மனநிலையில் குதித்து வரும் ஒரு துள்ளலாக இருந்தது அவளது நடை!

தூரத்தில் அவளையும், அவளது வித்தியாசமான நடையையும் கவனித்தபடி வந்து கொண்டிருந்தான் ஸ்ரீ.

அந்த நொடி மனத்தை உறுத்திய ஒன்று அவனை விட்டு அகலுவதைப் போல் உணர்ந்தான்.

அவளையே பார்த்தபடி வந்தவன் கையில் பைக் தானாக மெதுவாக ஊர்ந்தது!

இவனைக் கண்டதும், வீசிய கை டக்கென்று நிற்க, அவனைப் பார்த்தாள்.

அவனது கண்கள் அவனையும் அறியாமல், அவள் கையில் இருந்த கவர்மேல் படிய,

கவரை விட்டு, கீழே தொங்கும் பாக்ஸை கையில் பிடித்துக் கொண்டு நடக்க,

இவனும் அவளையே பார்த்தபடி நகர, அவளும் அவனைப் பார்த்தபடி நகர்ந்தாள்.

“என்ன வைஷூ, அவன் அப்படிப் பாக்குறான், நீயும் அப்படியே பாக்குற?” சத்தமாக இவளே, அவளைக் கடிய,

“அது ஒரு நன்றி நவில்தல்”

“இதெல்லாம் சரியில்லடி… உனக்குப் பொறுப்பு நிறைய நீதான் உன் குடும்பத்தைப் பாத்துக்கணும்” மனம் எடுத்துரைக்க,

“என்னடி நீ இப்படிப் பண்ணிட்ட” தலையில் ஒரு தட்டு தட்டியவள் அவன் வெகு தூரம் சென்ற பிறகும் அவன் யோசனையோடு வீட்டுக்கு வர,

“அக்கா” என்ற கூவலுடன் வைஷாலி ஓடி வந்து வைஷ்ணவியைக் கட்டியணைத்தாள்.

“அப்பா சொன்னாங்களா?” வைஷாலியின் சந்தோசத்தைப் பார்த்துக் கேட்க,

“ஆமாக்கா, மதியம் சாப்ட வரும்போது சொன்னாங்க” கூடவே, “நாங்க உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கோம்” என்றனர் வசந்தும், வைஷாலியும்.

‘இரண்டும் என்ன வேலை பண்ணி வச்சிருக்குதுங்க’ என்பதாய் கோதைநாயகி பார்த்திருக்க,

“டொட்டோடொயிங்க்” என்றபடி வைஷ்ணவி கையில் அந்தப் பெரிய பாக்ஸ் நீட்டினாள் வைஷாலி.

“என்ன இது?”

“உனக்கு ரொம்பப் பிடிச்ச கிஃப்ட்கா, கையில வாங்கிப் பாரு”
கையில் வாங்கிய வைஷ்ணவி அதை ஆவலுடன் திறக்க, அவளைப் பார்த்துக் கண்களை உருட்டியபடி படுத்திருந்தது அந்தக் குட்டி பப்பி.

“வாவ்! எங்க இருந்து பிடிச்சுட்டு வந்த வைஷாலி?” என,

“அக்கா, அது நான் கொண்டு வந்தேன்” என்றான் வசந்த் முதல் ஆளாய்.

“எங்க இருந்துடா தூக்கிட்டு வந்த?” கோதைநாயகி முறைக்க,

“ம்மா, விடும்மா” என்றவள் ஆசையுடன் அந்தப் பப்பியை தூக்கி கொஞ்ச,

“எவ்ளோ நேரம்தான் வெளிய நிப்ப, உள்ள வா” கோதைநாயகி அழைக்க,

பப்பியை வாயிலில் விட்டவள் உள்ளே செல்ல,

வைஷாலி சின்னக் கிண்ணத்தில் பால் எடுத்து வர, அவளை நன்றியுடன் பார்த்து வயிற்றை நிரப்ப ஆரம்பித்தது குட்டி பப்பி.

***

அன்று வெள்ளிக்கிழமை எப்பொழுதும் போல் கோவிலுக்குக் கிளம்பினாள் வைஷ்ணவி. செவ்வாய், வெள்ளி கிழமைகளில் ஐந்து மணிக்கே வீட்டுக்கு கிளம்பி விடுவாள். மற்ற நாள்களில் அவள் வீட்டுக்கு வர ஆறு மணிக்கு மேல் ஆகிவிடும்.

இன்றும் தாவணிதான் அணிந்திருந்தாள். ஒரே ஒரு வித்தியாசமாகத் தலையில் மஞ்சள் ரோஜா ஒன்று புதிதாகக் குடிவந்திருந்திருந்தது… பார்க்கவே அத்தனை அழகாக இருந்தது.

அவளுக்குப் பின்னே அவன் வந்துக்கொண்டிருந்தான். எப்பொழுதும், எந்நொடியும் அவளது கொலுசின் ஒசையில் தன்னைப் பறிக்கொடுப்பவன் இன்று

அவளது அந்த ஒற்றை ரோஜாவில் தன்னைப் பறிக்கொடுத்தான்.

‘காதல் வந்தால் காதலி சப்பிபோட்ட மாங்கொட்டைக்கூடக் கவிதையாய் தெரியுமாம்’ அவனது மனசு கடித்துத் துப்ப,

எப்பொழுதும் போல் அதைப் புறந்தள்ளி அவளைப் பின் தொடர்ந்தான். ‘நான்தான் அவளைக் காதலிக்கவே இல்லையே… இன்னைக்கு இந்த மஞ்சள் ரோஜா வைச்சு அம்சமா இருக்கிறாள் அதுதான் சைட் அடிக்கிறேன்’ தோளைகுலுக்கியபடியே வேஸ்டி நுனியை ஒருகையால் பிடித்தப்படி நடந்து வந்தான்.

அவனுக்கு முன்னே வந்தவர் ஒருவர் அவனைக்கண்டு, பவ்யமாய் வணக்கம் வைக்க, மெதுவாய் திரும்பிப்பார்த்தாள் வைஷ்ணவி.

அவனிடம் பேச, அவனிடம் நன்றி சொல்ல, அவள் அவனுக்காக நிற்க அவளைக் கவனிக்காதவன் போலக் கடந்து சென்றான்.

“இவனை எப்படிக் கூப்டுறது?

எல்லாரையும் போல அண்ணா சொல்லுவமா?

இல்லை வேண்டாம். அது இவனைக் கூப்ட என்னவோ போல இருக்கு,

வேற எப்படிக் கூப்டலாம் அப்பாவைப் போலத் தம்பி சொல்லுவோமா?

இல்லை… இல்லை… இவன் எனக்குத் தம்பி போலவா இருக்கான்?” இவ்வாறு அவனை எப்படி அழைப்பது என்ற ஆராய்சி‌ச்‌சி செய்து முடிப்பதற்க்குள் அவன் இவளை விட்டுபல அடிகள் நடந்து விட்டான்.

இப்பொழுது அவனைப் பார்க்க, அவன் தூரத்தில் செல்வது தெரிய,

“டேய் ஸ்ரீ” கத்தி அழைத்தாள் வைஷ்ணவி.

எல்லாரையும் அப்படியே அழைத்துப் பழகியவளுக்கு அவனையும் அப்படியே அழைக்கத் தோன்றியது.

“டேயா… யாருடா அது?” அவன் திரும்ப,

தன் தாவணியை இருகைகளாலும் பிடித்தப்படி ஒடிவந்தாள் அவனது ஒசைக்காரி!

டக்கென்று அவனது கண்கள் அவனையும் அறியாமல் அவளது காலடியில் விழ, இவள் அவன் அருகில் வந்து நிற்கவும் எப்பொழுதும் போல் இப்பொழுதும் கொலுசை மறைத்தது அவளது பாவடை.

“யாரை பாத்து டேய் சொன்ன?” அவன் முறைக்க,

“உன்னைப் பாத்துதான்” என்றாள்.

“என்னைப்பாத்தா!”

“ஆமா… உன்னைப்பாத்துதான்…”

“பெரியவங்களுக்கு மரியாதை குடுக்கணும்னு தெரியாதா உனக்கு… நீ எப்பவுமே இப்படிதான் திமிரா இருப்பியா?”என்றான் அவனறியாமலே.

அவனை ஒருநொடி கூர்ந்துப்பார்த்தவள், “நீ என்ன அவ்ளோ பெரியவனா? ஐ திங் டுவென்டி ஏஜ் ஃடிப்ரெண்ட்?” யோசிப்பது போல் கேட்க,

“எதுக்குக் கூப்ட்ட?” என்றான் டக்கென்று.

‘விட்டா தாத்தா ஆக்கிருவா’ என்ற எண்ணம் மனதில் ஓடியது.

‘இவள் இப்படி எல்லாம் பேசுவாள்’ என அவன் எதிர்பார்க்கவில்லை…

கூடவே ‘இப்படிப் பேசுனா எத்தனை பேரை வேணாலும் ஒத்தையா சமாளிப்பாள்’ என்ற எண்ணமும் வந்தது.

“அது… தேங்க்ஸ்”

“ஏன்” ஒற்றைச்சொல்.

“அது விக்ரம் என் பின்னாடி வரதில்லை… அதுதான்”

“ஓ”

“அப்புறம் இன்னொன்னு”

“என்ன?”

“அப்பாகிட்ட இதுபத்தி எதுவும் சொல்லாதீங்க… அப்புறம் என்னை வெளியவே விடமாட்டாங்க”

“ஏன்?”

“அது நான் சண்டை போடுவேன்னு பயப்படுவாங்க”

“ம்ம்… உண்மைதான்” தன்னை அறியாமல் கூறியிருந்தான்.

அவனை ஊன்றிப்பார்க்க,

“என்ன?”என்றான் எப்பொழுதும் போல் அவளைக் கூர்மையாகப் பார்த்தபடி.

அவனின் பார்வையில் ஏதோ இனம் புரியாத படபடப்பு ஏற்பட அவனை விட்டு விலகி நடந்தாள்.

செல்லும் அவளை… அவளின் கொலுசின் மெல்லிய ஒசையை இதயம் ஏற்க அப்படியே நின்றிருந்தான் ஸ்ரீ.i