இதயத்தின் ஓசைதான் காதல்!

இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 5

தனக்கான காஃபியை அப்பொழுதுதான் கலக்கிக் கொண்டிருந்தான் ஸ்ரீ. அவன் அருகில் நின்று தாத்தாவுக்கான காஃபியை கலக்கி கொண்டிருந்தாள் ஷிவானி.

“நான் அன்னைக்கு வேணும்னே பண்ணல, உண்மையாவே அவன் அப்படிப்பட்டவன்னு எனக்குத் தெரியாது. அதுக்கு நீ இவ்ளோ பெரிய தண்டனை தரவே வேண்டாம்.

வீட்டுக்கு வந்த பிறகு நீ தாத்தாகிட்ட சொல்லி நாலு அடி அடிச்சிருந்தா கூட நான் சந்தோஷமா இருந்திருப்பேன். இப்போ என்னால முடியலண்ணா, எனக்கு ஒன்னுன்னா நான் யார்கிட்ட போவேன், உங்கிட்டதான வருவேன். நீயே இப்போ என்கிட்ட பேசாம இருந்தா எப்படிண்ணா,

என்னோட பத்து வயசுல இருந்து எனக்கு எல்லாமே நீ தான பண்ணுற, உன் குட்டி தங்கச்சியை மன்னிக்கவேமாட்டியா?

நீ எப்பவும் போல என்கிட்ட பேசு, நீ என்ன சொன்னாலும் நான் கேட்டுகிறேன். நீ சொல்லுற பையனை கூட நான் கட்டிக்கிறேன். நீ என்கிட்ட பேசுண்ணா” கண்கள் கலங்க அவனிடம் கூறி அவனது கையைப் பிடிக்க வர,

கண்கள் கலங்குவது போல் இருந்தது ஸ்ரீக்கு, அவன், அவளது கையை விலக்கி தன்னறையில் புகுந்து கொண்டான்.

செல்லும் அவனைக் கண்கள் கலங்க பார்த்திருந்தாள் ஷிவானி.

கிட்டதட்ட எட்டு வருடங்களாகத் தனியாக நாட்களைக் கழித்த ஸ்ரீக்கு, இந்தக் குடும்பத்தில் வந்தது பெரும் பாக்கியம் என்றே எண்ணினான்.

அவனை விட அவளை மிகவும் நேசித்தான் என்றே கூறலாம். அவளுக்காக ஒவ்வொன்றும் பார்த்து பார்த்துச் செய்தான் ஸ்ரீ.

ஆனால் அவள்தான் இவனைக் கண்டு கொள்வதேயில்லை. அவனைக் காணும் நேரம் அவள் கண்களில் ஒரு அலட்சியம் இருக்கும். சில நேரம் நீ ஒரு அனாதைதானே, நீ ஒரு பிச்சைக்காரன்தானே நேரடியாகப் பார்வையில் வெளிபடுத்துவாள் ஷிவானி.

அந்த நாட்களில் மனம் மிகவும் வலிக்கும். நாள் செல்லச் செல்ல அவனே அவனைத் தேற்றிக் கொண்டான்.

தான் யார் கண்களுக்கும் ஏளனமாகத் தெரியக்கூடாது என்றே நிறைய நிறைய மாறினான்.

அவனே அவனுக்கு ஆசான்! தனக்குத் தானே ஆசான் என்பது மிகப் பெரிய விஷயமே!

“சக்ரவர்த்தி” என்ற தன்னுடைய பரம்பரை பெயரை “ஸ்ரீ சக்ரவர்த்தி” என்று அவனே மாற்றிக் கொண்டான்!

அதிலும் அவன் ஜெயிலில் இருந்து வந்தவன் என்பதைக் கொஞ்சமும் வெளியில் காட்டமாட்டான்!

அவனின் பேச்சும் பெரிய மனிதர்களிடம் மட்டும்தான் இருக்கும். ஸ்ரீ கரணிடம் வந்து சேர்ந்த பிறகு அவனது பழக்க வழக்கமும் அவரைப் போல அப்படியே மாறின.

சொந்த சித்தப்பாவை கொலை செய்தான் என்று சிறார் சிறையில் அடைக்கபட்டான் ஸ்ரீ. அதுவும் பத்து வயதில்.

அதன் பிறகு போதை பொருள் கடத்தல் என்று சில வருடங்கள் சென்றன எதுவும் அவன் அறிந்து செய்யவில்லை.

இது அவன் மேல் வலுக்கட்டாயமாகத் திணிக்கபட்ட பொறுப்புகள் அதுவும் சட்டம் தெரிந்தவர்களால் திணிக்கப்பட்டவை!

எல்லாம் சட்டத்துக்குப் புறம்பானவை என்று தெரியும், ஆனாலும் செய்தான். ஆனால் எதிலும் மாட்டினதில்லை. அதற்கும் காரணம் உண்டு!

இதெல்லாம் வெளியில் தெரிந்தால் அவனால் தலைநிமிர்ந்து நடக்க முடியுமா என்ன, இல்லை இல்லவேயில்லை.

அதனால்தான் தகுதிப் பார்த்துப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான். தன் குறை வெளியில் தெரியாமல் இருக்க அவனே அவனுக்குத் தகுதி ஏற்றிக் கொண்டான்.

இப்பொழுதெல்லாம் அவனை யாரும் ஒரு சொல் கையை நீட்டி பேசமுடியாது. பேசவிட்டதில்லை. இனியும் விடமாட்டான்.

அதனால்தான் வைஷ்ணவியைப் பிடித்தாலும் வெளியில் சொல்லமுடியவில்லை அவனுக்கு. சொல்வானா என்பதும் கேள்விக் குறியே?

தன் வீட்டில் நடப்பது வெளியே தெரியக்கூடாது, வெளியில் நின்று அனாவசிய பேச்சு இப்படி நிறைய அவனுக்குப் பிடிக்காதவை.

ஸ்ரீ கரணும் அவ்வளவு சீக்கிரத்தில் யாரையும் வீட்டில் விடுவதில்லை!

தான் என்றும் பெரியவர்கள் என்ற எண்ணம் மனதில் எப்பொழுதும் உண்டு. ஸ்ரீயும் அப்படி இருக்க அவனை மிக மிகப் பிடிக்கும் அவருக்கு.

அதனால்தான் வைஷ்ணவி மேல் உள்ள காதலும் அப்படியே அவனுள் மூழ்கிப் போயின!

***

“ண்ணா” காலையிலையே ஸ்ரீ வீட்டை நோக்கி வந்திருந்தான் விக்ரம்.

‘இவன் எதற்காக வந்திருக்கிறான்?’ என்ற யோசனையுடனே, “உள்ள வா விக்கி” என,

உள்ளே வந்தவன் தயக்கத்துடன் அவனைப் பார்த்தபடியே இருக்க,

“என்ன விஷயம் விக்கி?” என்றான் அவனது தயக்கத்தைப் பார்த்து.

“அது வந்து எனக்கு வெளிநாட்டுல இருந்து ஆஃபர் வந்திருக்கு, இன்னும் ரெண்டு மாசத்துல நான் அங்க போகணும்…”

“சரி… அதுக்கு?” ஸ்ரீக்கு அவன் சொல்ல வருவது சுத்தமாகப் புரியவில்லை.

“அது வந்து வைஷு வீட்டுல பேசினீங்களாண்ணா? நீங்க பேசினா நான் வீட்டுல சொல்லி ஒரு முடிவெடுக்க ஈசியா இருக்கும்”

அப்பொழுதான் புரிந்தது, மறந்தது நினைவில் வந்தது, மனம் மறைந்தது!

“அவங்க வேலை பாக்கணும்னு சொன்னாங்களே? இப்போதான் படிப்பை வேற முடிச்சிருக்காங்க?” வைஷு மேல் மரியாதை தானாக வந்திருந்தது ஸ்ரீக்கு.

மாற்றானுக்கு மனைவியாகப் போறவங்களை மரியாதை இல்லாமல் பேச அவனுக்கு மனதில்லை.

அதேநேரம் அன்று அவள் அழைத்த டேய்யும் அழையாய் விருந்தாளியாய் வந்து தலையை நீட்டியது.

“வைஷு எத்தனை வருஷம்னாலும் வேலை பாக்கட்டும், நான் இப்போ போனா டூ இயர்ஸ் கழிச்சிதான் வருவேன். கல்யாணத்தைப் பண்ணிட்டு நான் அங்க போறேன் அவ இங்க இருந்து வைஷூ ஆசைபடி வேலைக்குப் போகட்டும் நானோ, எங்க வீட்டிலையோ ஒண்ணும் சொல்லமாட்டாங்க?”

“இல்லை இப்போதான் படிப்பை முடிச்சிருக்காங்க, அதுதான் யோசிக்கிறேன்?”
தாடையை வருடி யோசனையில் ஆழ்ந்தான் ஸ்ரீ.

அவன் யோசனையைத் தடை செய்தது, அவன் ரசிக்கும் அதே கொலுசின் ஓசை!

கண்கள் அவனையும் அறியாமல் எங்கும் சுழன்றது!

இப்பொழுது ஓசை மிக அருகே கேட்டது!

இப்பொழுது அவனது கைகள் அவனையும் அறியாமல் அவன் நெஞ்சை நீவி கொள்ள,

ஓசை மெல்லமாய் அடங்கியது!

அவன் மனதில் ஆழி பேரலை உருவானது!

“நான் அவங்க கிட்ட பேசிட்டு சொல்லுறேன் விக்கி, எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு?” என்பதாய் அவன் எழுந்து கொள்ள,

“சரிண்ணா” என்பதாய் அவனும் கிளம்பினான்.

ஸ்ரீக்கு மனம் ஒரு நிலையில் இல்லை, சட்டையை எடுத்து மாட்டியவன் நேராக வயலை நோக்கி சென்றான்.

‘அவள் எப்படி என் மனதில் வரலாம்?’ என்ற எண்ணம்தான் முதலில் அவன் மனதில் உதித்தது.

‘நீதானா விடாம அவளைப் பார்த்துட்டு இருந்த?’ மனம் கேள்வி எழுப்ப,

‘நான் அவளைப் பாக்கல, அவளோட கொலுசை மட்டும்தான் பார்க்க ஆசைபட்டேன்.’

‘அவ கொலுசைப் பார்த்தா, அவளை நினைக்க மாட்டியா?’

‘மாட்டேன்’

‘அப்போ சீக்கிரம் அவ கொலுசை பாக்குற வேலையைப் பாரு’

‘அதெல்லாம் எனக்குத் தெரியும், பேசாம கிளம்பு’ எனக் கடுப்பாக உரைத்தவன், பைக்கை நிறுத்தி அதில் அமர்ந்திருக்க,

அங்கிருந்த ஒருவரை அழைத்து, “மாறன் எங்கே?” எனக்கேட்க,

“லோடு கொண்டு போயிருக்காங்க தம்பி” என,

“ஒரு இளநீர் கொண்டுவாங்க மணி” என,

அவனுக்கு ஒரு இளநீர், ஸ்ராவுடன் குடுக்க அமைதியாக அதைக் குடிக்க ஆரம்பித்தான்.

ஆனாலும், மனம் அவளின் கொலுசின் ஓசையை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது!

***

மாலை 5 மணி,

“என்னப்பா ஸ்ரீ… எப்போ கல்யாணம் பண்ணுறதா இருக்க?” வீட்டு ஹாலில் அமர்ந்திருந்து ஃபோன் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீயை நோக்கி கேட்டார் ஸ்ரீ கரண்.

அவரை நிமிர்ந்துப் பார்த்தான் ஸ்ரீ.

வெள்ளை கலரில் கை வைத்த பனியனும், வெள்ளை வேஷ்டியும் கழுத்தில் ருத்ராட்ச மாலையுமாக எப்பொழுதும் போல் பக்தி மயமாக அமர்ந்திருந்தார் ஸ்ரீ கரண்.

ஸ்ரீயின் பதிலை கேட்க ஆவலுடன் அவன் முகத்தையே பார்த்திருந்தாள் ஷிவானி.

“என்ன பாக்குற ஸ்ரீ… வயசு இருபத்தி ஒன்பது முடிய போகுது… இன்னும் எத்தனை நாளுக்கு இப்படியே சுத்த போறதா உத்தேசம்.

இந்த வருஷம் பண்ணுனாதான் நல்லது, இல்லன்னா இன்னும் இரண்டு வருஷம் கழிச்சிதான் பண்ணமுடியும்”

“சீக்கிரம் கல்யாணம் பண்ணுண்ணா, அண்ணி வந்த பிறகு என்கிட்ட நீ நல்லா பேசுவதான?”

“ஏன் அதுக்கு முன்னாடி நான் பேசினா, நீ பேசமாட்டியா?” என்றான் முகத்தில் புன்னகை பரவ,

“நீதான்…” என ஏதோ சொல்லவந்தவள் அப்பொழுதுதான் அவன் கூறியதின் முழு அர்த்தம் தெரிய,

“ஹையோ… ண்ணா நீ என்கிட்ட பேசிட்ட” ஷிவானி சந்தோசத்தில் குதிக்க,

“வாலு” என அவள் தலையைச் செல்லமாய்த் தட்டினான்.

“ண்ணா, சீக்கிரம் கல்யாணம் பண்ணுண்ணா, அப்போதானே ஜாலியா இருக்கும்… நீயும் அண்ணியும் எப்பவும் கூடவே இருப்பீங்க” குதுகலிக்க,

சந்தோஷமாக அவள் முகத்தையே பார்த்திருந்தார் ஸ்ரீ கரண்.

“சொல்லுப்பா ஸ்ரீ, உன் மனசுல யாராவது இருக்காங்களா? சொல்லு பேசி முடிச்சிடலாம்”

வைஷ்ணவியின் முகம் மனதில் மின்னி மறைய, வலுக்கட்டாயமாக அவற்றைப் புறம் தள்ளி ஷிவானியைப் பார்த்தான்.

“ஷிவானிக்கு முடிச்‌சிட்டு எனக்குப் பார்க்கலாம் ஐயா”

“நான் உனக்குக் கேட்டேன்ப்பா, அவளுக்கு இல்ல”

“ஆமாண்ணா, நீ சீக்கிரம் முடி உனக்குத்தான் வயசு ஏறிட்டே போகுது” தன்னையறியாமல் கூற,

அன்று கோவிலில் வைத்து வைஷ்ணவியும் இப்படிதானே கூறினாள் என்ற எண்ணம் மனதில் ஓடியது.

அவனை அறியாமலே அவன் மனது எல்லாத்துக்கும் வைஷ்ணவியை ஒப்பிட்டது.

‘இதென்னாடா வம்பாபோச்சு’ என்ற எண்ணமும் வந்தது.

“என்னவோ செய்ங்க” என எழ போக,

“என்னப்பா இப்படிச் சொன்னா எப்படி” என,

“நீங்க சரியாத்தான் செய்வீங்க ஐயா” என்றபடி எழுந்து தன்னறைக்குச் சென்றான்.

‘நீ என்ன பண்ணிட்டு இருக்க ஸ்ரீ, ஒரு பொண்ணை மனசுல சுமந்துட்டு இன்னொரு பொண்ணை எப்படிக் கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லுற நீ? அது அந்தப் பொண்ணுக்கு பண்ணுற துரோகம் இல்லையா?’ அவன் மனம் சாடியது.

“நீ என்ன செஞ்சிட்டு இருக்க ஸ்ரீ, எப்பவும் அவ நினைப்பாவே இருக்க, ஆனா வேற பொண்ணைப் பார்க்க சொல்லுற?” இவனே இவனுக்குச் சத்தமாகக் கேட்டுக் கொண்டான்.

அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை.

ஸ்ரீ எப்பொழுதுமே மிகவும் புத்திசாலி. இப்பொழுது தன் பிரச்சனை என்ன? என்று ஆராய முற்பட்டான்.

கொஞ்ச நேரத்தில் அவனின் பிரச்சனைக்குப் பதிலும் கிடைத்தது.

அவனின் பிரச்சனைக்கு மூலக் காரணம் அவனது காதல்.

அதைச் சொல்லமுடியாமல் தடுத்து வைத்திருப்பது அவனது தகுதி.

இதைத் தாண்டி அவனால் எப்பொழுதும் வரமுடியாது. வரவும் விரும்பமாட்டான்.

அப்படி வந்தால், சாதாரண மனிதர்களைப் போல அவனது பழைய வாழ்க்கை அலசி ஆராயப்படும். அது அவனுக்குப் பிடிக்காது… பிடிக்காது என்பதல்ல விரும்பமாட்டான்.

அதேபோல் வைஷ்ணவியை அவன் மணந்தாலும், பலர் பேச்சுக்கு ஆளாகக் கூடும். அதை அவன் விரும்பவில்லை.

அவன் காதலை அவன் உணரும் முன்னே அந்தக் காதலுக்கு அவனே எதிரி ஆனான், அதை நினைத்து அவன் கொஞ்சமும் வருந்தவில்லை.

‘எதற்கு இந்தத் தேவையில்லாத போராட்டம், அவளைப் பார்ப்பதை நாம் தவிர்த்தாலே போதும்’ எண்ணியவன் வெளியே சென்றிருந்தான்.

***

இரவு 8 மணி…

அரிசி ஆலையில் அமர்ந்திருந்தவன், எதிரே அமர்ந்திருந்து ஸ்ரீயின் முகத்தைப் பார்த்திருந்தான் சிவா.

ஸ்ரீயின் முகம் இன்று படு யோசனையில் இருந்தது.

‘கேட்டாலும் சொல்லமாட்டான் பாவி’ அவனைத் திட்டியபடியே கன்னத்தில் கைவைத்து அவன் முன் அமர்ந்திருந்தான்.

அந்த நேரம் ஸ்ரீயின் ஃபோன் அழைக்க, எடுத்துப் பார்த்தான் ஸ்ரீ, ஷிவானிதான் அழைத்திருந்தாள் முகத்தில் தானாகப் புன்னகை வந்தமர்ந்தது.

“ண்ணா, கிளம்பிட்டியா?”

“இல்ல, கொஞ்சம் லேட் ஆகும்”

“கொஞ்சம் வீட்டுக்கு வாங்களேன்?”

“ஏன்?’

“சீக்கிரம் வாங்களேன்” என்றாள் கெஞ்சலாய்.

சிரித்தவன், “சரி வரேன்” என்று, சிவாவைப் பார்க்க,

கன்னத்தில் கைவைத்தபடி இவனையே பார்த்திருந்தவனைக் கண்டு, “டேய், சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு வீட்டுக்குக் கிளம்பு” எனக் கூறிக் கிளம்பினான்.

வீட்டின் உள்ளே சென்றால், ஸ்ரீ கரணும், ஷிவானியும் ஹாலில் அமர்ந்திருந்தனர்.

“என்னாச்சு, ரெண்டு பேரும் இங்க உக்காந்து இருக்கீங்க” என ஷிவானி அருகில் வந்து அமர்ந்தவனிடம்,

“இந்தா பாரு” என அவன் கையில் ஒரு கவரைக் கொடுத்தார் ஸ்ரீ கரண்.

“என்னதிது?” யோசனையாக அவரைப் பார்க்க,

“நம்ம சொந்ததுல ஒரு பொண்ணு இருக்கு, இங்க மதுரைதான். நல்ல படிப்பு, முக்கியமா நம்ம தகுதிக்கு அவங்க ஏத்தவங்க, பொண்ணு பார்க்க ரொம்ப அழகா இருக்கா, உனக்கு ரொம்ப சரியா இருப்பா, இப்போ போட்டோல பாரு, உனக்குப் பிடிச்சா நாளைக்குப் போய் நேர்ல பார்க்கலாமா?”

“இவ்வளவு அவசரமா பாக்கணுமா?”

“இதுல என்ன அவசரம் இருக்கு, என்னைக்கு இருந்தாலும் பாக்கதான் செய்யணும், அதை இப்போவே பாக்குறோம், முதல்ல நீ போட்டோவைப் பாரு… பிடிச்சா இதைப் பாக்கலாம் இல்லன்னா வேற பாக்கலாம்”

“அது எப்படிப் பார்த்தா பிடிக்கும்?”

“அதெல்லாம் பிடிக்கும்ண்ணா, உனக்குன்னு ஒரு ஆசை முகம் இருக்கும்ல, அதை மனசுல வச்சிட்டு இந்தப் பொண்ணைப் பாரு மனசுக்கு பிடிச்சா மேற்கொண்டு பார்க்கலாம், இல்லன்னா விட்டிடலாம்” என்றாள் ஷிவானி.

‘சுத்தம், இப்படிப் பார்த்தா பிடிக்கவே செய்யாதே?’ மனம் அலறியது,

ஆனாலும் கவரைப் பிரித்து அந்தப் பெண்ணைப் பார்த்தான்.

பார்க்க… பார்க்க… மீண்டும் பார்க்க தோன்றியது ஸ்ரீக்கு.

மிகவும் அழகாக இருந்தாள். உடனே மனம் வைஷ்ணவியையும், இந்தப் பெண்ணையும் ஒப்பிட்டுப் பார்த்தது.

வைஷ்ணவியை விட மிக அழகாக இருந்தாள். ஆனால் வைஷ்ணவியிடம் இருக்கும் ஏதோ ஒன்று இவளிடம் இல்லை.

மீண்டும் மீண்டும் வைஷ்ணவி முகமே அவனிடம் தோன்ற,

போட்டோவை ஷிவானி கையில் கொடுத்தவன் “பொண்ணு பார்க்க போகவேண்டாம், இதையே பேசி முடிங்க” என்றபடி தன்னறைக்குச் சென்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!