இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 1
பொன் மாலைப்பொழுதில் கதிரவன் விடைகொடுக்க, சந்திரனின் வருகைக்காக விண்ணுலகமே செந்நிற பார்வையில் காத்திருக்கும் அந்த மாலைப்பொழுதில்,
“எள்ளுப்பூ மூக்கு எழிற்குவளை பூக்கண்கள் 
இயல்பான அழகு வடிவம்
இனிய முகம் தாமரை, இருசெவிகள் செந்தாழை
இறைவி நிறம் நல்ல பவளம்
கள்ளிருக்கும் ரோஜாப்பூ” மெல்லிய இசையாய் மதுரை – மாரியூர், மாரியம்மன் கோவிலின் கோபுரத்தில் கட்டியிருந்த ஒலிபெருக்கியில் பாடிக் கொண்டிருந்தது.
அந்த பாடலை மெதுவாக முனுமுனுத்தபடி கோவில் பிரகாரத்தை மெதுவாகச் சுற்றிக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி.
நாளை அவளுக்கு, அவளது சி.ஏ ரிசல்ட் வருகிறது. ஓரளவு இவளை நம்பிதான் அவளது குடும்பம் இருக்கிறது. அந்த பயம்தான் அவள் முகத்தில் பிரதிபலித்தது.
பிரகாரத்தை சுற்றி முடித்து, கடவுளை மனதில் வணங்கியபடியே கண்களை மெல்ல திறந்தவளின் பார்வை, சற்று தொலைவில் தெரிந்த வேட்டி அணிந்தவனின் பாதங்களை கண்டதும் பதைப்பதைப்புடன் உயர்ந்தன.
எதிரில், அவனும் அவளையே கூர்மையாக பார்த்தபடி கம்பீரமாக நடந்து வந்துக்கொண்டிருந்தான்.
அவன் விழிகளின் ஸ்பரிஷத்தில், மனம் படபடக்க சட்டென்று விலகி நடந்தாள்.
தாவணி பாவாடை தரையை உரச, கால் கொலுசு சப்திக்க அவள் நடந்து சென்றுக் கொண்டிருந்தாள்.
அவள் சென்று வெகு நேரம் ஆன பின்னும், அவளின் கொலுசு சப்தம், அவன் இதயத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது!
அவன் ஸ்ரீ சக்ரவர்த்தி!
கருமை கலந்த மாநிறத்தில், ஆறடி உயரத்தில் கருத்தடர்ந்த பெரிய மீசையுடன், கூர்மையான விழிகளுடனும், தூய வெள்ளை வேட்டி சட்டை அணிந்து, அவன் கம்பீரமாக நடந்து வந்தாலே அந்த ஊரே பயப்படும். மிகவும் கோபக்காரனும் கூட.
வயலையும், தோப்பையும், அரிசி ஆலையையும் ஒற்றை ஆளாக நிர்வகித்து வருபவன்.
 அந்த ஊரின் பெரிய பணக்காரரும், கோவில் தர்மகர்த்தாவுமான ஸ்ரீகரணின் பேரன் அவன்.
ஸ்ரீகரணுக்கு, ஸ்ரீ சக்ரவர்த்தி, ஸ்ரீ ஷிவானி என்ற இரு பேர பிள்ளைகள். தான் பெற்ற மகனை ஒரு விபத்தில் பலிகொடுக்க, அவரின் வாரிசை வளர்க்கிறார். 
கோவிலை விட்டு வெளியில் வந்து, அந்த பாதையில் நடந்து சென்றுக்கொண்டிருந்தாள் வைஷ்ணவி.
பாதையில் நாலைந்து பையன்கள் இவளையே பார்த்தபடி அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை தாண்டி இவள் செல்ல முற்படவும்,
“நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?” ஒருவன் அவளை மறித்தபடி வந்து நின்றான்.
ஒரு நிமிடம் அதிர்ந்து, அவர்களைப் பார்த்தவள், “அதான் நீயே சொல்லிட்டல்ல, நகரு?” திமிராகவே சொல்லி நகர்ந்தாள் வைஷ்ணவி.
“என்னடி? எங்க ஏரியாக்குள்ளவே இருந்துகிட்டு எங்கக்கிட்டவே திமிர் காட்டுவியா நீ?” நெஞ்சை நிமிர்த்தியபடி வந்து நின்றான் மற்றொருவன்.
“உனக்கு என்ன பிரச்சனை இப்போ?”
“நீ பெரிய உலக அழகின்னு நினைப்பா உனக்கு?” மீண்டும் அவனே எகிறினான்.
“ஆமா, அப்படியே வைச்சுக்கோ” என்றாள் திமிராகவே.
யாருக்கும் பயப்படாமல், தைரியமிருந்தால் வந்து பார் என்றுதான் நிற்பாள். மிகவும் தைரியமாக இருப்பாள். இப்பொழுதும் அப்படிதான் நின்றாள்.
உண்மையில் மிகவும் அழகானவள் வைஷ்ணவி. அந்த அழகு என்றும் அவளில் பிரதிபலித்ததில்லை. மிகவும் ஏழ்மை குடும்பத்தில் பிறந்தவள். தன்னை அலங்கரிக்க நேரமும் இல்லை, அதற்கான  வருமானமும் இல்லை. அப்படி இருந்துமே அனைவரையும் கவர்ந்தாள்.
அவள் ஊர் மதுரையில் ஒரு கிராமம். படிப்பில் படுகெட்டி. பிளஸ்டூவில் நல்ல மதிப்பெண் கிடைத்திருக்க, சி.ஏ. படிக்க இடம் கிட்டியது.
அவளின் கிராமத்தில் இருந்து கல்லூரிக்கு தூரம் அதிகம்.  அவர்கள் இருந்த வீடும் வாடகை வீடுதான், சொந்தமாய் வீடு என்று எதுவும் இல்லை, எப்பொழுதும் வாடகை வீடுதான்.
படித்தது அரசு பள்ளியில், இப்பொழுது காலேஜ் ஃபீஸ், ஹாஸ்டல் ஃபீஸ் இவர்களின் இதர செலவு என எல்லாம் அவளின் அப்பா சம்பாத்யத்தில்தான் வரும். கண்டிப்பாக குடும்பத்தை நடத்த முடியாது. அவள் அப்பாவோ ஒரு ஏழை விவசாயி.
அதிலும் சொந்த இடம் இல்லை. ஒருவரின் வயலில் வேலை செய்கிறார். தேவைப்பட்டால் அவருக்கு டிரைவராகவும் மாறுவதுண்டு. இவள் போக இன்னும் ஒரு தம்பியும், ஒரு தங்கையும் உண்டு. இருவரும் இரட்டையர்கள்.
இருவரும் பத்தாம் வகுப்பு படிக்கின்றனர். அவரின் சம்பாத்தியம் முழுக்க முழுக்க செலவிடுவது வைஷ்ணவிக்கு மட்டுமே!
இப்பொழுது இவளின் படிப்பை கொண்டு கல்லூரி அருகில் வீடெடுத்து இருக்கின்றனர். கல்லூரிக்கு நடந்தே சென்று வருவாள் பத்து நிமிட நடைதான்.
‘அவளின் அப்பா சைக்கிள் வாங்கி தரவா?’ என்றதற்க்கு,
 ‘வேண்டாம், வீண் செலவு எதுக்கு, காலை, மாலை நடந்தாலே உடலுக்கு நல்லது’ என்று நடந்தே கல்லூரிக்கு சென்றவள்.
குடும்ப கஷ்டம் அறிந்து நடப்பவள். இவள் வேலை பார்த்து தம்பி, தங்கையை நிறைய படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. அதற்காகவே நன்றாகப் படிப்பாள்.
ரிசல்ட் வரும் முன் இப்பொழுது இரண்டு மாதமாக ஒரு ஆடிட்டரிடம் ஜூனியராக வேலை செய்கிறாள். 
அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவன்  இப்பொழுது அவள் முன் வந்து நின்றான்.
அவன் விக்ரம்!
அவனை பயங்கரமாக முறைத்தாள்.
சமீபமாக, இந்த இரண்டு மாதங்களாக அவன், அவளை தொடர்ந்து வருவதை உணர்ந்திருக்கிறாள்.
‘முன்பிருந்தே வருகிறானா? இல்லை இப்பொழுது தான் கவனித்த நாளில் இருந்து வருகிறானா?’ சந்தேகம் எழுந்தது.
அவளுக்கு தெரியவில்லை. அவளை, அவன் ஒரு வருடமாக தொடர்ந்து வருகிறான் என்று.
 படிக்கும் பொழுது இவளின் பி‌ன், தான் செல்கிறோம் என்று அறியாமல் தொடர்வான். இப்பொழுதுதான் அவள் படிப்பை முடித்து விட்டாளே என்ற தைரியத்தில் அவளுக்கு தெரியும்படி தொடர்கிறான் அவ்வளவே!
வேறு யாராக இருந்தாலும் “எதுக்கு வர்ற?” என்று நேரடியாய் எப்பொழுதோ கேட்டிருப்பாள். ஆனால் இவன் அவளது பேராசிரியரின் மகன். அவளுக்கு படிப்பில் உதவிகள் கூட செய்திருக்கிறார். அதனால் எப்படி கேட்பது என்று, கண்டும் காணாமல் விலகி நடந்தாள்.
 ஆனாலும் முடியாமல் நேற்று,  ‘என்ன ஆனாலும் சரி’ என்று அவனை பார்த்து நின்றுவிட்டாள்.
அவள் நிற்கவும் ஒரு நிமிடம் அதிர்ந்தான் அவன். ‘சரி எப்படியும் பேசித்தானே ஆகனும். இன்றே பேசுவோம்’ என்று அவள் முன் நின்றான், சற்று தைரியமாகவே!
“எதுக்கு என் பின்னாடி வர்றீங்க?”
“எனக்கு உன்னை பிடிச்சிருக்கு வைஷ்ணவி!”
“எனக்கு உங்களை பிடிக்கல, இனி இப்படி என் பின்னாடி வராதீங்க” நேரடியாகவே கூறினாள்.
“நான் உன்னை லவ் பண்ணுறேன், உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன்”
“எனக்கு இதெல்லாம் பிடிக்காது, இப்படி என் பின்னாடி வராதீங்க, அவ்ளோதான் நான் சொல்லுவேன்”
“நான் எங்க உன் பின்னாடி வாரேன், உன்னை ஏதாவது தொந்தரவு பண்ணுனேனா? இல்லைதானே, நான்பாட்டுக்கு போறேன் வாரேன். போற, வார வழியில உன்னை பாக்குறேன் அவ்ளோதான். அதுக்காக நீ என்னை வராதேன்னு சொல்லாத”
“பச்… வராதீங்க அவ்ளோதான், அப்புறம் பிரச்‌சனையில் நீங்கதான் மாட்டிப்பீங்க”
“எனக்கு பிரச்சனைன்னா அது உனக்கும்தான் பிரச்சனை, என் பேர் வந்தா, உன் பேரும்தான் வரும்” அசால்ட்டாக உரைத்தான்.
‘என்ன திமிர் இவனுக்கு’ முறைத்தவள்,
“அதுக்கெல்லாம் பயப்படமாட்டேன் நான், என்னை அவ்ளோ சாதாரணமா நினைச்சிட்டியா நீ? உன் பேர் கூட என் பேர் வந்தா அப்படியே உன் பின்னாடியே வருவேன்னு நினைச்சியா? அதுக்கு வேற ஆளைப்பாரு, இதுக்கு மேல என் பின்னாடி வந்த” ஒற்றை விரல் நீட்டி பேசியிருந்தாள்.
இந்த… இந்த… திமிர்தான் இவளை காதலிக்க தூண்டியது, இந்த துணிச்சல் இன்னும் அவள் மேல் காதலை அதிகப்படுத்தியது.
‘இவள்தான் தனக்கு மனைவி’ என முடிவெடுத்துக் கொண்டான் விக்ரம்.
செல்லும் அவளைப் பார்த்து சிரித்தபடியே நின்றான்.
காதல் என்ற வார்த்தை எப்பொழுதுமே அவளுக்கு பிடித்தமில்லை. வயதின் தாக்கம், இளமையின் தாக்கம் என்று பெண்பிள்ளைகள் பின்னால் சுற்றும் ஆண்களை கண்டால் அப்படி ஒரு கோபம் வரும் அவளுக்கு. அப்படிபட்ட ஆண்களை அவள் எட்டியே பார்க்கமாட்டாள். இப்பொழுது மட்டும் இவனை எப்படி எட்டிப் பார்ப்பாள்?
அதுவும் ஆண்கள் அவளைப் பொறுத்தவரை மிக மிக கண்ணியமாக நடக்க வேண்டும் என்று விரும்புவாள். அதற்காக ஆண்களுடன் பேசவேக்கூடாது என்ற எண்ணம் அவளுக்கு அறவே கிடையாது. அவளுக்குமே கல்லூரியில் ஆண் நண்பர்கள் உண்டு,  அதுவும் மிகவும் கண்ணியமான நண்பர்களே!
ஆனால் இவனை போன்றவர்களை பிடிக்காது. அதிலும் இப்படி பின்னால் சுற்றுபவனை சுத்தமாய் பிடிக்காது. அதைதான் நேற்று நேரடியாய் கூறினாள், இன்று ஆட்களுடன் வந்து நிற்கிறான்.
 “டேய் என்னடா நடக்குது இங்க?” ஒரு குரல் ஓங்கி ஒலித்தது.
 சத்தமிட்ட இளைஞர்கள் அனைவரும் ஒரு நிமிடம் அமைதியாகினர்.
அவர்கள் முன் வந்து நின்றான் ஸ்ரீ சக்ரவர்த்தி. 
வைஷ்ணவி அப்பொழுதுதான் அவனை திரும்பிப் பார்த்தாள்.  ‘இவனா?’ அதிர்ந்தவள் அவனை பார்ப்பதை தவிர்த்தாள். அதென்னமோ அவனது கூர் பார்வையை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை!
அப்பொழுதுதான் அவளையும் பார்த்தான் அவன், ‘அட நம்ம ஜல்ஜல்’ அவளின் கொலுசு சத்தத்திற்காக, அவன் அவளுக்கு இந்த பெயரை வைத்திருந்தான்.
தினமும் அவளை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறான். கல்லூரிக்கு நடந்துதான் செல்வாள், அதிலும் இவனது வீட்டை தாண்டிதான் அவள் வீடும் இருக்கிறது. சரியாக சொல்லப்போனால் அவனது வீட்டில்தான் அவர்கள் குடியிருக்கிறார்கள். அவளது அப்பா அவனது வயலில்தான் தற்பொழுது வேலை செய்கிறார்.
வாசலில் அமர்ந்திருந்து இவளையேதான் பார்திருப்பான். இவளை இல்லை… அதாவது அவளது கால்களைதான் பெரும்பாலும் பார்த்திருப்பான். இவள் வரும்முன்னே அவளின் கொலுசு சப்திக்கும். அதனால் பெரும்பாலும் அவன், அவளை கவனிப்பான்.
அவளின் பாதம் ஒவ்வொரு எட்டு எடுத்து வைக்கும் பொழுதும் அவன் பார்வையும் அந்த பாதம் பின்னே செல்லும். தரையை உரசும் அளவில் தாவணியின் பாவாடை இருக்கும். ‘ஜல்ஜல்ன்னு சத்தம் வரும் அளவுக்கு அப்படி என்ன கொலுசு போட்டிருப்பாள், சத்தம் அழகாக இருக்கிறதே?’  இதுதான் அவனது தினசரி ஆராய்ச்சியாய் இருக்கும். கிட்டதட்ட மூன்று வருடமாக கவனிக்கிறான் இன்னும் அவனது ஆராய்ச்‌சி முடிவுக்கு வரவில்லை.
எப்பொழுதும் பாவாடை தாவணிதான் அணிவாள். கல்லூரிக்கும் பாவாடை தாவணிதான். அதென்னவோ, அவளுக்கு இந்த சுடிதாரில் அவ்வளவு நாட்டமில்லை. பாவாடை தாவணி அல்லது சேலையில் அவளை பெரும்பாலும் காணலாம்.
“என்னடா பிரச்சனை?”
“ஸ்ரீண்ணா… இந்த பொண்ணு ராங்கா பேசுதுண்ணா”
“யாருடா ராங்கா பேசுறா?” எகிறினாள் இவள்.
“நீங்க வீட்டுக்கு போங்க” அமைதியாக அவளைப் பார்த்துக் கூறினான்.
அதென்னவோ, பெண்பிள்ளைகள் இப்படி வீதியில் நின்று சச்சரவில் ஈடுபடுவது அவனுக்குப் பிடிக்காது. அதுதான் அவளை கிளம்பக்கூறினான்.
அப்பொழுதுப் பார்த்து அவளின் அப்பா, “என்ன… என்ன பிரச்சனை?” பதட்டத்துடன் வந்திருந்தார். முகம் எல்லாம் வேர்த்திருந்தது ஓடி வந்திருப்பார் போலும்.
அவளின் தம்பிதான் அவரை அழைத்து வந்திருந்தான், “அப்பா, அங்க அக்கா கூட சண்டை போடுறாங்க” எனக் கூறவும்,
“சரி… நீ வீட்டுக்கு போ, நான் பாக்குறேன்” என்றவர் என்னதோ ஏதோ என்று பயந்து ஓடி வந்திருந்தார்.
“ஒரு பிரச்சனையும் இல்ல மாறன், நீங்க அவங்களை அழைச்சிட்டு போங்க” தன்மையாகத்தான் கூறினான்.
“ஸ்ரீண்ணா, என்ன நீங்க அவளை போக சொல்லுறீங்க, அந்த பொண்ணு என்னா திமிரா பேசுது தெரியுமா?”
“இல்ல… இல்ல… அவ அப்படி பேசமாட்டா கொஞ்சம் துடுக்கா பேசுவாதான் ஆனா திமிரா பேசமாட்டா, அவளுக்காக நான் மன்னிப்பு கேட்குறேன்”  
அவரை முறைத்தாள் அவள், ‘நான் என்ன தப்பு பண்ணுனேன்னு இந்தப்பா இவனுங்க கிட்ட மன்னிப்பு கேட்குறாங்க?’ என்பதாய் இவள் அவனுங்களைப் பார்த்து முறைக்க,
‘இந்த பொண்ணுக்கு ரொம்ப தைரியம்டா’ தன்னைப் போல எண்ணிக்கொண்டான் ஸ்ரீ.  
“நீங்க கிளம்புங்க நான் பாத்துகிறேன்”
“அப்பா நான் எதுமே பண்ணல இவனுங்கதான் என்னை வம்பு பண்ணுறாங்க”
“பேசாம வா பாப்பா” இழுத்துக் கொண்டு நடந்தார் அவர். என்ன பிரச்சனை என்று அவருக்கு முழுதாக தெரியவில்லை. ஏதோ பசங்க கேலி செய்ய இவள் பேசிவிட்டாள் என்றே எண்ணினார்.
அவளின் பின்னே ஒருவன் சுற்றுகிறான் என்று தெரிந்தால் வீட்டை விட்டு எங்குமே அனுப்பமாட்டார் மாறன். மிகவும் பயந்த சுபாவம் உடையவர். ஆனால், அவளோ இவருக்கு அப்படியே நேர்மார்.
இருவரும் அங்கிருந்து நகர்ந்ததும், இவர்களைப் பார்த்து முறைத்தான் அவன்.
“ண்ணா… எங்களை ஏன் முறைக்குற?” என்றனர் கோரசாக.
இந்த பையன்கள் மத்தியில் ஸ்ரீக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர்களுக்கு எந்த உதவி என்றாலும் தயங்காமல் செய்வான்.  
எந்த பிரச்சனை என்றாலும் அவர்களுக்கு துணை நிற்பான் ஸ்ரீ. அதனாலயே, இவனை காணும் நேரமெல்லாம் ஒரு “ண்ணா” போட்டுவிடுவார்கள்.
“என்னடா பண்ணிட்டு இருக்கீங்க நீங்க, ஒரு சின்ன பொண்ணை போய் மிரட்டிக்கிட்டு இருக்கீங்க?”
“ண்ணா… யாருண்ணா சின்ன பொண்ணு, அதுவா? அதை பத்தி சரியா தெரியல”
‘எனக்கா தெரியலை?’ மெலிதாக சிரித்துக் கொண்டான்.
“ண்ணா, நடந்த பிரச்சனை உனக்கு தெரியாது”
“எல்லாம் தெரியும்டா, நான் நேத்து விக்கிகிட்ட அந்த பொண்ணு பேசும் போது கேட்டுட்டுதான் இருந்தேன். அவளுக்கு பிடிக்கலன்னா விடு விக்கி. யாரையும் நாம ஃபோர்ஸ் பண்ணக் கூடாது” என்றான் விக்கியைப் பார்த்து.
சில நேரம் வைஷ்ணவிக்கு தெரியாமலே அவளைக் காவல் காக்கும் வேலையையும் செய்வான் ஸ்ரீ. அப்படிதான் நேற்று நடந்ததை பார்த்திருந்தான்.
“ண்ணா… அவளை இவனுக்கு ரொம்ப பிடிக்கும்ண்ணா, ரொம்ப நாளா லவ் பண்ணுறான். ரொம்ப சீரியஸ்ண்ணா”
“அப்படியாடா?” என,
“ஆம்” என தலையசைத்தான் விக்ரம்.
அவனை ஊன்றிப் பார்த்தான் ஸ்ரீ, “சரி… நீ இனி அவங்க பின்னாடி போகாத, நான் அவங்க வீட்டுல பேசுறேன்” மனதை மறைத்துக் கூறினான்.
“நிஜமாவண்ணா” குதுகலித்தான் விக்ரம்.
“நிஜமாடா, நான் பேசுறேன் அவங்க வேலை பார்க்கணும்னு ஆசைபடுறதா மாறன் சொல்லிருக்கார். அதுதான் உன்னை அவாய்ட் பண்ணுறாங்கன்னு  நினைக்குறேன், எதுக்கும் கேட்டு சொல்லுறேன். அதுவரை நீ அவங்களை ஃபாலோ பண்ணக்கூடாது” ஸ்ரிட்டாக கூறினான்.
“சரிண்ணா… சரிண்ணா” வேகமாக தலையாட்டினான் அவன்.
“சரி கிளம்புங்க” எனக் கூற எல்லாரும் இடத்தை விட்டு நகர்ந்தனர்.
செல்லும் அவர்களைப் பார்திருந்தான் ஸ்ரீ. பேச்சுவாக்கில் மாறனிடம் அவளை பற்றி நிறைய அறிந்து வைத்திருந்தான் ஸ்ரீ. ஏனென்றே தெரியாமல் அவளை பற்றி கேட்டிருந்தான். அவளைப் பற்றி மட்டுமே கேட்டால் நன்றாக இராது என்று எண்ணியே வீட்டைப் பற்றி கேட்டான். சில உதவிகளும் செய்திருக்கிறான். 
உண்மையில் ஸ்ரீக்கு அவளை மிகவும் பிடிக்கும். வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் அவன் அவளை தினமும் சைட் அடிக்கிறான்.
அவனது பார்வையில் அது ஒரு விதமான ரசிப்பு!
ரசிப்பு என்றால், அது அவளைப் பிடிக்குமான ரசிப்பு!
அதற்காக பெண்கள் பின்னால் சுற்றுபவன் கிடையாது. அழகை ரசிப்பவன் அவன். அப்படியே அழகான பெண்களையும் மிகவும் ரசிப்பான். அவளும் இவன் கண்ணுக்கு அழகா தெரிய தினமும் ரசிக்கிறான்.
இல்லையில்லை சைட் அடிக்கிறான்.  
அப்படிதான் இவளது நடையில் ஒலித்த ஓசையில் இவளை கவனிக்க, கவனிப்பு ரசிப்பாக மாற, ரசிப்பு சைட்டாக மாற… சைட் அடிக்க ஆரம்பித்தான். இப்பொழுதும் அடிக்கிறான்… இன்னும் அடிப்பான்… 
காதலா? என்று கேட்டால் தெரியாது, ஆனால் அவளை மிகவும் பிடிக்கும். அவளது நேர்கொண்ட பார்வையும், யாரையும் எதிர்த்து நிற்கும் தைரியமும் மிகவும் பிடிக்கும்.  
‘இந்த மாதிரி பொண்ணு தனக்கு மனைவியாய் அமைந்தால் நன்றாக இருக்கும்’ என்பதுப் போல இவளை பார்த்த அன்றே தோன்றியது.
ஆனால், அவர்களின் நிலைப்பார்த்து ‘நமக்கு இதெல்லாம் செட் ஆகாது’ என அவனே மனத்தைத் தேற்றிக் கொள்வான்.
தாவணி அணிந்திருந்தாலும், நிமிர்வும், அழகும் மிளிர்ந்தது. ஒருமுறை அவளை ரசித்த மனம் மீண்டும் மீண்டும் அவளையே ரசிக்கும்.
ஆனாலும் அவளைப் பார்க்கும் நேரம் எல்லாம் ஒரு கூர் பார்வை அவளை நோக்கி வீசுவான். அது ஒரு ஆராய்ச்சி பார்வையாக மட்டுமே இருக்கும்.
எங்கே? அவள் இவனை நிமிர்ந்துப் பார்த்தால் தானே? 
இவனைப் பார்த்தாலே ஒரு பயம் இவளில் உதித்து விடும். அது அவனது வசதியைப் பார்த்தா? இல்லை அவனின் முரட்டு தோற்றத்தைப் பார்த்தா? அவளே அறியாள்.
இவனுக்கு அவளைப் பிடிக்கும். அதுதான் ‘அவளை தொந்தரவு செய்யாதே நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று விக்ரமை அனுப்பினான்.
‘நமக்கெல்லாம் அது செட் ஆகாது, ஒருவேளை இவனுக்கு செட் ஆகலாம்’ என இவன் எண்ணிக் கொண்டிருக்கும்பொழுதே,
‘ஜெயிலுக்கு போனவனை எந்த பொண்ணுமே கட்டிக்காது’ இன்னொரு மனம் எடுத்துரைக்க அமைதியாக வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்து விட்டான்.
அதற்காக அவன் இதுவரை கவலைபட்டதில்லை, ஆனால் இவளை பார்த்த நொடியில் இருந்து கவலைபடவைத்தாள்.
அதனாலையே சில நேரம், ‘தனக்கு அவள் செட் ஆகமாட்டாள், என் தகுதியில் அவள் இல்லை’ என்று மனத்தைத் தேற்றிக் கொள்வான்.
ஆனாலும், அவன் இதயத்தில் ‘ஜல்ஜல்’ என்ற ஓசை ஒலித்துக் கொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!