இதயம் – 02

eiHJN6N67051-28d7b410

ஹரிங்கே நகரம் – லண்டன்

இரவு நேர மின்விளக்குகள் வெளிச்சத்தில் ஹரிங்கே நகரம் முழுவதும் பொன்னிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்க, தன் கோர்ட்டை கழட்டி கையில் எடுத்தபடியே ஒரு அபார்ட்மெண்டின் முன்னால் நின்று கொண்டிருந்தான் சக்தி என்கிற சக்தி பிரகாஷ்.

சக்தி மாநிறத்திற்கும் சற்று குறைவான நிறத்தில், கட்டுக்கோப்பான உடலோடு இருக்கும் இருபத்தெட்டு வயது நிரம்பிய ஒரு நவீன காலத்து இளைஞன்.

சென்னையில் இருக்கும் கல்லூரி ஒன்றில் தனது எம்.காம் படிப்பை படித்து முடித்து, மேல் படிப்பிற்காக ஹரிங்கே நகரிற்கு வந்தவன் தன் படிப்பை முடித்த கையோடு அங்கே உள்ள பிரபல்யமான ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில் அசிஸ்டன்ட் மேனேஜராக கடந்த மூன்று வருடங்களாக பணிபுரிந்து வருகிறான்.

சக்தியின் தந்தை சண்முக பிரகாஷ் கோயம்புத்தூரில் சிவில் எஞ்சினியராக பணி புரிந்து வருவதோடு, அவரது மனைவியும், சக்தியின் அம்மாவுமான சந்திரா இல்லத்தரசியாக இருக்கிறார்.

சக்தியுடன் உடன்பிறந்தவர்கள் இருவர்.

ஒருவன் வெற்றி பிரகாஷ், சக்தியை விட இரண்டு வயது பெரியவன். கோயம்புத்தூரில் வைத்தியசாலை‌ ஒன்றில் ஹவுஸ் சர்ஜனாக பணி புரிந்து வர, அவனது மனைவி மலர்விழி கோயம்புத்தூர் காலேஜில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.

அவர்கள் இருவருக்கும் நான்கு வயதில் ஷாலினி என்று ஒரு மகளும், இரண்டு வயதில் நந்தா என்று ஒரு மகனும் உள்ளனர்.

சக்திக்கு அடுத்ததாக இருப்பவள் அவனது தங்கை மீரா, சக்தியை விட மூன்று வயது இளையவள்.

தன்னுடைய எம்.எஸ்.சி படிப்பை முடித்து விட்டு இப்போது அவளும் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறாள்.

அவளுக்கு திருமணம் செய்து கொடுக்காமல் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று சக்தி உறுதியாக கூறி இருக்க, மீராவுக்காக வரன் பார்க்கும் படலம் இப்போது வெகு மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் அவன் தன் திருமணத்தை தள்ளிப் போட செய்ததன் பிண்ணனியில் இருக்கும் காரணத்தை அவன் ஒருவனே, இல்லை, இல்லை அவனது நெருங்கிய நண்பர்கள் இருவரும் அறிவர்.

சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு மீரா ஒரு பரீட்சை விடயமாக சக்தியை திருச்சி வரை அழைத்துச் சென்றிருந்தாள்.

அவளுக்கு பரீட்சை நடந்த அந்த ஒரு வார காலத்திற்குள் அவனது வாழ்வில் ஒரு பெரும் மாற்றமே நிகழ்ந்து முடிவடைந்திருந்தது.

அந்த சம்பவத்தின் தாக்கமே இப்போது வரை அவனை திருமணத்தைப் பற்றி சிந்திக்க செய்யாமல் அவனைப் பிடித்து இழுத்து வைத்திருக்கிறது என்றால் மிகையாகாது.

இருளில் மூழ்கிக் கிடந்த தன் அபார்ட்மெண்டை விளக்குகளைப் போட்டு வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவன், தன் உடைமைகளை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து விட்டு, இரவுணவை சமைப்பதற்காக வேண்டி சமையலறைக்குள் நுழைந்து கொண்டான்.

தோசை மாவை எடுத்து தோசைக் கல்லில் ஊற்றியவன் அதற்கு போதுமான அளவில் தக்காளி சட்னியும் செய்து எடுத்துக் கொண்டு டைனிங் டேபிளில் அமர்ந்து கொள்ள, சரியாக அந்த நேரத்தில் அவனது தொலைபேசி ஒலிக்க ஆரம்பித்தது.

அதன் திரையில் ஒளிர்ந்த, ‘அம்மா’ என்ற பெயரைப் பார்த்ததுமே அவன் முகத்தில் புன்னகை வந்து ஒட்டிக் கொள்ள, அதே நிறைவான மனநிலையுடன் அந்த அழைப்பை எடுத்தவன், “வணக்கம் தாய்க்குலமே. எப்படி இருக்கீங்க?” என்று கேட்க,

மறுமுனையில் சந்திரா, “இந்த தாய்க்குலம் அவங்க மகனைப் பார்க்காமல் ரொம்ப ஏங்கிப் போய் இருக்காங்க மகன்குலமே” எனவும் அதைக்கேட்டு சக்தி வாய் விட்டு சிரித்துக் கொண்டான்.

“அந்த மீரா கூட சேர்ந்து நீங்களும் நல்லா பேசக் கத்துக்கிட்டீங்கம்மா”

“என் பொண்ணு என் பக்கத்தில் இருந்து இதை சரி எனக்கு சொல்லித் தர்றாலே, அது வரைக்கும் சந்தோஷம். உன்னை மாதிரி மேல் படிப்பிற்காக லண்டன் போயிட்டு அங்கேயே ஐந்து வருடம் டேரா போடல” சந்திரா சிறிது கண்டிப்பாக பேச,

மறுபுறம் தன் சாப்பிடும் வேலையை கடமை தவறாமல் செய்து கொண்டிருந்த சக்தி, “அம்மா, ஏன்மா? எனக்கு மட்டும் இங்கேயே இருந்து இப்படி கஷ்டப்படணும்னு ஆசையா என்ன? ஏதோ ஒரு டிரெயினிங்காக இந்த கம்பெனியில் ஜாயின் பண்ணேன், ஆனா இந்த முதலாளி என்ன நினைத்தானோ தெரியலை, மூணு வருடம் கான்ட்ராக்ட் போட்டு சைன் வாங்கிட்டான். நானும் வேலை கிடைத்த‌ ஆர்வத்தில் எதையும் சரியாக கவனிக்கல. இன்னும் இரண்டு மாதம் தான்மா, அதற்கு அப்புறம் உங்க பையன் உங்க கூடவே தான் இருப்பான். நீங்களாக போடான்னு சொன்னாலும் போக மாட்டேன்” என்று கூற மறுமுனையில் அமைதியே நிலவியது.

“ம்மா, லைனில் இருக்கீங்களா?”

“இருக்கேன், இருக்கேன். இதோ பாருடா சக்தி, இன்னும் இரண்டு மாதம் தான். அதற்கு அப்புறமும் நீ வரல”

“என்னம்மா பண்ணுவீங்க?”

“ஆஹ், உன் கம்பெனியை இடிச்சு தரை மட்டமாக்கிட்டு உன்னைக் கூட்டிட்டு வந்துடுவேன்”

“யம்மோவ்! என்னம்மா இப்படி ரவுடி மாதிரி பேசுறீங்க?” சந்திராவின் பேச்சைக் கேட்டு சிரித்தபடியே தன் கையை கழுவி விட்டு வந்தவன்,

“ஐந்து வருடம் உங்க எல்லோரையும் பார்க்காமல் ரொம்ப மிஸ் பண்ணுறேன்மா. ஊருக்கு வந்ததும் செய்ய வேண்டிய, முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு, அதனால நீங்க எதையும் யோசித்து கவலைப்படாமல் நிம்மதியாக இருங்கம்மா. இப்போவே இங்கே நைட் ஒன்பது மணி ஆகிடுச்சு, அங்கே எப்படியும் நைட் இரண்டு மணி இருக்கும் இல்ல?” என்று கேட்க,

“ஆமா டா சக்தி. இரண்டு மணி தான்” என சந்திரா சிறிது சோர்வாக அவனுக்கு பதிலளித்தார்.

“பாருங்க, உங்களுக்கு எத்தனை தடவை சொல்லுறது? ரொம்ப நேரம் கண் முழிக்காமல் தூங்குங்கம்மா. நான் கூடிய சீக்கிரம் உங்க எல்லோரையும் பார்க்க வரத் தான் போறேன்”

“சரி டா சக்தி. பார்த்து பத்திரமாக இருந்துக்கோப்பா” என்று விட்டு சந்திரா அழைப்பைத் துண்டிக்க, தன் தலையை கோதி விட்டபடியே அங்கிருந்த ஷோபாவில் சென்று விழுந்தவன் கண்களை மூடிக் கொள்ள, அவன் மூடிய விழிகளுக்குள் பூஜாவின் முகமே மாறி மாறி வந்து சென்றது.

கல்லூரி ஒன்றின் முன்னால் பூஜா நடந்து செல்வதைப் போலும், அவளைப் பின் தொடர்ந்து சக்தி செல்வதைப் போலவுமே காட்சிகள் மாறி மாறி வந்து சென்று கொண்டிக்கையில், சட்டென்று அவன் முன்னால் பூஜா வந்து அவனைப் பார்த்து கையசைப்பதைப் போல இருக்க, திடுக்கிட்டு எழுந்து அம்ந்தவன் கடிகாரத்தை திருப்பி பார்க்க அதுவோ நள்ளிரவு இரண்டு மணியைக் காட்டிக் கொண்டு இருந்தது.

“பூஜா, நீ எங்கே இருக்க?” தன் தூக்கம் தன்னை விட்டு தொலை தூரம் போய் விட்ட கவலையில் தன் நெற்றியை நீவி விட்டு கொண்டவன் தன் தொலைபேசியை எடுத்து ஒரு எண்ணிற்கு அழைப்பை மேற்கொண்டான்.

மறுபுறம் அவனது பொறுமையை சோதிக்காமல் நான்கு, ஐந்து செக்கன்களிலேயே அவனது அழைப்பு எடுக்கப்பட்டு விட, “ஹலோ விஷ்ணு, எப்படிடா மச்சான் இருக்க?” என்றவாறே சக்தி உற்சாகமாக பேச ஆரம்பித்தான்.

“டேய் மாப்பிள்ளை சக்தி. நான் நல்லா இருக்கேன்டா. நீ எப்படிடா இருக்க?”

“யாஹ், நானும் நல்லா தான்டா இருக்கேன். அப்புறம் எங்க உன் ஜிகிரி தோஸ்து வெங்கட்?”

“அது என்ன என் ஜிகிரி தோஸ்து? அவன் உனக்கும் தோஸ்து தான். இப்போ அவன் அவன் வீட்டில் இருப்பான் டா. அப்புறம் மாப்பிள்ளை என்ன விஷயம்? இந்த காலங்கார்த்தாலேயே போன் பண்ணி இருக்க?” சக்தி தன் நண்பனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தயங்க,

“டேய் சக்தி, எதுவும் பிரச்சினையாடா?” விஷ்ணு சிறிது குழப்பத்தோடு அவனிடம் வினவினான்.

“பிரச்சினைன்னு இல்லைடா. விஷ்ணு நீ எனக்கு ஒரு உதவி பண்ணணுமே”

“என்னடா உதவி அது, இதுன்னு சொல்லிட்டு. என்ன பண்ணணும் சொல்லு?”

“எனக்கு பூஜாவோட அப்பாவோட போன் நம்பர் வேணும் டா. பூஜா உங்க ஊர் தானே டா. அவங்க வீட்டு அட்ரஸ் எல்லாம் எனக்குத் தெரியும் தான், ஆனாலும் அவளுக்கு இப்போதைக்கு கல்யாணம் நடந்து இருக்காதுன்னு நம்பிக்கையில் இத்தனை வருடங்களாக இருந்துட்டேன். இனியும் அப்படியே இருக்க முடியாது இல்லையா? அதுதான் அவங்க அப்பா மூலமாக பேசலாம் என்று பார்த்தேன்” என்று சக்தி கூற, மறுமுனையில் விஷ்ணு தன் நெற்றியை நீவி விட்டுக் கொண்டு நின்றான்.

‘அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆன விடயத்தை இவன் கிட்ட எப்படி சொல்லுறது? அவன் இதை எல்லாம் மறந்து இருப்பான்னு இல்லையா நான் நினைத்து இருந்தேன். இத்தனை வருடம் கழித்தும் அவன் எல்லாவற்றையும் ஞாபகம் வைத்து பேசுறானே. இப்போ இவன் கிட்ட உண்மையை சொல்லி ஏதாவது ஏடாகூடமாக பண்ணிட்டான் என்றால் அவன் பக்கத்தில் கூட இல்லை. என்ன பண்ணுறது?’ விஷ்ணு பலத்த சிந்தனையுடன் நின்று கொண்டிருக்க,

மறுமுனையில் சக்தி, “விஷ்ணு, விஷ்ணு” என அவனது பெயரை அழைத்து களைத்துப் போய் இருந்தான்.

“சாரிடா சக்தி. நான் சரியாக கவனிக்கல. நான் பூஜா பற்றி டீடெயில்ஸ் எடுத்து வைக்கிறேன்டா சக்தி, நீ ஒண்ணும் யோசிக்க வேண்டாம். அப்புறம் நீ எப்போ ஊருக்கு வரப்போற?” விஷ்ணு தன் குழப்பத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இயல்பாக பேச,

“இன்னும் இரண்டு மாதத்திற்குள்ளே வந்துடுவேன்டா. ஊருக்கு வந்ததும் முதல் வேளை பூஜா வீட்டில் போய் பேசுவது தான்” மறுமுனையில் சக்தி முன்பிருந்ததை விட இன்னும் உற்சாகமாக பேச ஆரம்பித்தான்.

“அப்போ நான் பூஜா பற்றி எல்லாத் தகவல்களையும் எடுத்து வைக்கப் பார்க்கிறேன் சக்தி. நீ ஊருக்கு வந்ததும் நேரில் நாம இதைப் பற்றி பேசுவோம். சரி தானே?”

“டபுள் ஓகே டா மச்சான்” தான் நினைத்த விடயம் நடக்கப் போகிறது என்கிற சந்தோஷமான மனநிலையுடன் சக்தி உற்சாகமாக பேசிக் கொண்டிருக்க, அவனுக்கு உண்மை நிலவரங்கள் எல்லாம் தெரிய வரும் போது என்னவெல்லாம் நடக்குமோ? அந்த இறைவன் ஒருவனே அறிவான்.

சிறிது நேரம் சக்தியுடன் பொதுவான விடயங்களைப் பேசி விட்டு தன் அழைப்பைத் துண்டித்த விஷ்ணு தன் தொலைபேசியில் இன்னொரு அழைப்பை மேற்கொண்டான்.

“ஹலோ வெங்கட்” விஷ்ணு ஒரு வித தயக்கத்துடன் தன் பேச்சை ஆரம்பிக்க,

மறுமுனையில்,”சொல்லுடா விஷ்ணு. என்னடா இந்த காலங்காத்தால போன் பண்ணி இருக்க?” அவனால் வெங்கட் என்று அழைக்கப்பட்ட நபர் தூக்கத்தில் இருந்து எழுந்து தன் கண்களை கசக்கிக் கொண்டபடியே பேச ஆரம்பித்தான்.

“சக்தி கால் பண்ணான் டா”

“என்னடா சொன்னான்?”

“அவன் இன்னும் அந்த பொண்ணை மறக்கலடா. நாம ஏதோ ஒரு க்ரஸில் தான் அவன் அந்த பொண்ணைப் பார்ப்பதாக நினைத்துட்டு இருந்தோம், ஆனா அவன் உண்மையாகவே அந்த பொண்ணை விரும்புகிறான் போல இருக்கு டா மச்சான்”

“இப்போ என்னடா பண்ணுறது?” விஷ்ணு சொன்ன விடயங்களை கேட்டு வெங்கட்டும் கலங்கிப் போக,

அவனோ, “அது தான் டா எனக்கும் புரியல” என்றவாறே தன் தலையில் கை வைத்துக் கொண்டு நின்றான்.

“பேசாமல் அவன் கிட்ட உண்மையை சொல்லி இருக்கலாமேடா”

“எப்படிடா சொல்ல முடியும்? அவன் நம்ம பக்கத்தில் இருந்தால் சரி அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சொல்லி புரிய வைக்கலாம், ஆனா அவன் பல மைல் தூரத்தில், நினைத்தால் கூட போக முடியாத ஒரு தூரத்தில் இல்லையா இருக்கான்.

நாம உண்மையை சொல்லி அவன் ஏதாவது அவசரப்பட்டு செய்தான் என்றால் யாரு பொறுப்பு?”

“நீ சொல்றதும் சரி தான் விஷ்ணு, ஆனா இன்னும் எத்தனை நாளைக்கு இதை எல்லாம் மறைக்குறது?”

“இன்னும் இரண்டு மாதத்தில் சக்தி ஊருக்கு வந்துடுவேன்னு சொன்னான். நானும் அவன் நேரில் வந்த பிறகு இதைப் பற்றி பேசலாம்னு இருக்கேன். ஒரு வேளை அவன் உன் கிட்ட இதைப் பற்றி கேட்டாலும் நீயும் விசாரிக்கிறேன்னு சொல்லு. அவசரப்பட்டு உண்மையை உளறிடாதே” என்று விஷ்ணு கூற, மறுமுனையில் வெங்கட் அவனுக்கு ஆமோதிப்பாக பதிலளித்து விட்டு தன் அழைப்பைத் துண்டித்தான்.

வெங்கட்டிடம் பேசி விட்டு தன் தொலைபேசியை தன் முன்னால் இருந்த மேஜை மீது வைத்த விஷ்ணு அன்றைய நாளிதழைப் புரட்ட அதில் பூஜா மற்றும் விஷ்வா மாலையும், கழுத்துமாக புன்னகை முகமாக நின்று கொண்டிருந்தனர்.

அந்த புகைப்படத்தை பார்த்ததுமே விரக்தியாக புன்னகைத்து கொண்டவன், “இந்த பொண்ணை நினைத்து சக்தி அங்கே தவியாக தவித்துப் போய் இருக்கிறான், ஆனா இந்த பொண்ணுக்கு சக்தின்னு ஒருத்தன் இருக்கான் என்கிற விடயமாவது தெரிந்து இருக்குமோ தெரியலை. ஒரு வேளை தெரிந்து இருந்தாலும் என்ன பயன்? அது தான் அந்த பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிட்டாளே, அதுவும் சாதாரணமான ஒரு ஆளாக இருந்தாலும் பரவாயில்லை. இவன் திருச்சி மொத்தத்தையும் ஆட்டிப் படைக்கும் ஒரு ரவுடி, அவனைப் போய் கல்யாணம் பண்ணி இருக்கே இந்த பொண்ணு. எப்போ எவன் வந்து போட்டுத் தள்ளுவானோன்னு பயந்து பயந்தே பாதி வாழ்க்கை போயிடும், இதில் கல்யாணம் வேறு. எல்லாம் தலைவிதி. நல்லவேளை இது லோக்கல் பேப்பரில் வந்த போட்டோவா போயிட்டு. ஒருவேளை சக்தி இதெல்லாம் பார்த்து இருந்தால் என்ன ஆகி இருக்குமோ?” பூஜா மற்றும் விஷ்வாவின் புகைப்படத்தைப் பார்த்து புலம்பியபடியே விஷ்ணு அங்கிருந்து எழுந்து செல்ல, மறுபுறம் சக்தி பலவிதமான கற்பனைகளை எண்ணி கனவில் மிதந்தபடியே தூக்கத்தை தழுவி இருந்தான்.

அதே நேரம் திருச்சியில்…..

முதன்முதலாக தன் மனம் கவர்ந்தவனுடன், அவனது மனைவியாக நிற்கும் தன் நிலையை எண்ணிப் பூரித்துப் போனவளாக பூஜா தங்கள் அறைப் பால்கனியில் நின்று கொண்டிருக்க, அவளின் இடையோடு தன் கரத்தை வளைத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டபடி வந்து நின்றான் விஷ்வா.

அவனது ஸ்பரிசத்தில் கூச்சத்தோடு நெளிந்தவள் பின்பு அவனோடு ஒன்றிப் போக அந்த காலை விடியல் அவளுக்கும் சரி, அவனுக்கும் சரி ஏகாந்தமான விடியலாக மாறிப் போனது.

“விஷ்வா”

“சொல்லு செல்லம்மா”

“நேற்று யாரு அப்படி பண்ணது?”

“யாரு‌‌ என்ன பண்ணாங்க?”

“விளையாடாதே விஷ்வா. நேற்று நாம அம்மா, அப்பாவை பார்த்துட்டு வரும் போது சூட் பண்ணாங்கலே. யாரு அது?” பூஜாவின் கேள்வியில் விஷ்வாவின் பிடி இறுக, அந்த இறுக்கத்தை வைத்தே அவன் கோபமாக இருக்கிறான் என்பதை அவள் நன்றாக உணர்ந்து கொண்டாள்.

“யாருன்னு கண்டுபிடிச்சாச்சா விஷ்வா?”

“ஆமா”

“யாரு?”

“வேற யாரு? என் கிட்ட போன வாரம் அடி வாங்கி ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனானே அந்த எம்.எல்.ஏ துரைபாண்டி, அவன் சொல்லி அனுப்பிய ஆளுங்க தான். அவ்வளவு அடி வாங்கியும் அவன் திமிரு குறையவே இல்லை. என்னைப் போட்டுத் தள்ள ஆள் அனுப்புறான். ப்ளடி ராஸ்கல்”

“அய்யய்யோ! எனக்குப் பயமாக இருக்கு விஷ்வா. மறுபடியும் ஏதாவது பிரச்சினை வந்து விடுமா?” பூஜா தவிப்போடு விஷ்வா திரும்பிப் பார்க்க,

சிறு புன்னகையுடன் அவளது நெற்றியில் முத்தமிட்டவன், “அதெல்லாம் ஒண்ணும் ஆகாது செல்லம்மா. இனி அவன் நம்ம வழியில் குறுக்கே வர மாட்டான். ஒருதடவை போனால் போகட்டும் என்று விட்டால் ரொம்ப தான் துள்ளுறான். அது தான் மொத்தமாக ஒரு பெரிய பரிசு கொடுத்தாச்சு. அநேகமாக இந்நேரத்திற்கு மேலோகத்தில் நிம்மதியாக தூங்கிட்டு இருப்பான்” என்று கூற,

அவளோ, “விஷ்வா!” என்றவாறே அதிர்ச்சியாக அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

“என் வழியில் யாரு குறுக்கே வந்தாலும் அவங்களுக்கு இது தான் நிலைமை. இதைப்பற்றி எல்லாம் உனக்கு முன்னாடியே தெரியும் தானே பூஜா? இப்போ ஏதோ புதிதாக கேட்கிற மாதிரி பார்க்கிற” விஷ்வாவின் கேள்வியான பார்வையில் முயன்று வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் பூஜா அவன் மேல் சாய்ந்து கொள்ள, அவள் மனமோ பதட்டத்தில் தாறுமாறாக அடித்துக் கொண்டிருந்தது.

அவனது காதலியாக இருந்த போது அவனது இந்த தைரியத்தையும், முரட்டுத் தனத்தையும் ரசித்து, விரும்பிய தன் மனது இப்போது அவன் மனைவியான பின்பு அதைப் பூரணமாக ஏற்றுக் கொள்ள முடியாமல் ஏனோ முரண்டு பிடிக்க ஆரம்பித்தது.

நேற்று தான் ஒரு நொடி தாமதித்து இருந்தாலும் விஷ்வாவின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு இருக்கும் என்ற உண்மை நிலையை அவள் எண்ணிப் பார்க்கும் போதே அவளது உடல் முழுவதும் நடுக்கம் பரவ, அவள் உடல் நடுக்கத்தில் அவளது முகத்தை நிமிர்த்திய விஷ்வா, “பூஜா ஆர் யூ ஆல்ரைட்?” என்று வினவ,

தன் கவலையையும், பயத்தையும் மறைத்துக் கொண்டு அவனைப் பார்த்து புன்னகை செய்தவள், “நீ என் கூட இருந்தால் நான் ரொம்ப ரொம்ப ஆல்ரைட்டாக இருப்பேன் விஷ்வா. சரி, அதெல்லாம் போகட்டும். இன்னைக்கு நான் என் கையால் சமைத்து என் விஷ்வாவிற்கு தரப் போறேன். உனக்கு என்ன வேணும் சொல்லு?” தற்காலிகமாக தங்கள் பேச்சை வேறு புறம் திருப்பினாள்.

“உனக்கு சமைக்க எல்லாம் தெரியுமா செல்லம்மா?”

“ஹேய், என்னைப் பற்றி என்னை நினைச்ச விஷ்வா? நான் விதம் விதமாக சமைப்பேன் தெரியுமா?”

“சமைக்கிறது சரிம்மா, ஆனா யாரும் சாப்பிடுவாங்களா?”

“ஏய்” விஷ்வாவின் நக்கல் பேச்சில் அவனை முறைத்துப் பார்க்க முயன்ற பூஜா அவனது முகபாவனையைப் பார்த்து சட்டென்று சிரித்து விட, அவனோ அவளைத் தன் கைவளைவிற்குள் சிறை செய்து கொண்டான்.

“என் செல்லம்மா என்ன சமைத்தாலும் நான் சாப்பிடுவேன்டா. இன்னும் சொல்லப்போனால் நீ விஷத்..”

“விஷ்வா” அவனை‌ மேலே பேசவிடாமல் சட்டென்று அவனது வாயில் தன் கையை வைத்து மூடியவள், ‘வேண்டாம்’ என்பது போல தலையசைக்க அவனோ சிறு புன்னகையுடன் அவளது கையை இறக்கி விட்டான்.

“சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னால் ஒண்ணும் ஆகி விடாது பூஜா”

“இல்லை. ஒரு‌ பேச்சுக்கு கூட நீ இனிமேல் இப்படி பேசக்கூடாது”

“சரிடா செல்லம்மா, சாரி. போதுமா” பூஜாவின் நெற்றியில் மெல்லமாக முட்டியபடி விஷ்வா வினவ,

வெட்கம் கலந்த புன்னகையுடன் அவனது கழுத்தில் தன் கையை மாலையாக போட்டுக் கொண்டவள், “நீயும், நானும் ரொம்ப வருடங்களுக்கு ஒன்றாக சந்தோஷமாக வாழணும் விஷ்வா. நம்ம குழந்தைங்க, அவங்களோட குழந்தைங்க, அவங்களோட குழந்தைங்கன்னு எல்லோரையும் நாம தான் வளர்க்கணும். நம்ம பேரப் பசங்க கல்யாணத்தை எல்லாம் நாம தான் முன்னின்று நடத்தி வைக்கணும். இப்படி நான் எவ்வளவு ஆசை வைத்து இருக்கேன், நீ என்னடான்னா லூசுத்தனமாக உளர்ற” என்று கூற, அவளது பேச்சில் வாய் விட்டு சிரித்துக் கொண்டவன் அவளை மேலும் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

“இந்த திருச்சி மொத்தமும் என்னைப் பார்த்து பயப்பட்டாலும் நீ மட்டும் எவ்வளவு தில்லாக என் கூட பேசுற. நான் ரொம்ப தப்பானவன். இதற்கு முதல் பல தப்பான விடயங்கள் செய்திருக்கேன், ஏன் இப்போவும் செய்துட்டே இருக்கேன். அப்படியிருந்தும் நீ என்னை இவ்வளவு தூரம் நம்பி வந்து இருக்கியே செல்லம்மா. ஏன்டா?”

“எங்க அம்மா ஒரு விடயம் அடிக்கடி சொல்லுவாங்க. என்னதான் பார்க்க வெளித்தோற்றத்திற்கு ஒருத்தங்க முரடன் மாதிரி தெரிந்தாலும் அவங்க உண்மையிலேயே மனதளவில் ரொம்ப மென்மையான குணம் உள்ளவங்களாக இருப்பாங்களாம். அந்த குணம் உன் கிட்ட நிறைய இருக்கு விஷ்வா. நீ நிறைய தப்பு செய்து இருக்க, ஆனால் அந்த தப்புக்கு பின்னால் ஏதாவது ஒரு நியாயமான காரணம் இருக்கும். நீ இது வரைக்கும் எவ்வளவோ தப்பு பண்ணாலும் பொண்ணுங்க கிட்டயோ, இல்லை சாதாரண ஆளுங்க கிட்டயோ எந்தவொரு பிரச்சினையும் பண்ணது இல்லை. நீ பண்ணுற சில சில முரட்டுத் தனமான விடயங்கள் தான் உன்னை ரொம்ப கெட்டவனாக காண்பித்து இருக்கு. நீ வெளியே எந்தளவிற்கு கோபக்காரனாக இருக்கியோ அதே அளவிற்கு உள்ளே ரொம்ப மென்மையானவன். அந்த குணம் தான் உனக்காக எல்லாவற்றையும் விட்டுட்டு என்னை இவ்வளவு தூரம் வர வைத்து இருக்கு” என்றவாறே பூஜா விஷ்வாவின் அணைப்பில் தன்னை மறந்து நிற்க, மறுபுறம் ஹரிங்கே நகரில் சக்தி பூஜாவின் நினைப்பில் மெய் மறந்து உறங்கிக் கொண்டிருந்தான்……

**********
உன் பார்வையில்
விழுந்த நாள் முதல் என்
துன்பங்கள் மறந்து போனது
உன் கைவிரல் சேர துடிக்குது
அன்பே அன்பே
**********