இதயம் – 03

eiHJN6N67051-51140e4b

அன்றோடு பூஜா மற்றும் விஷ்வாவின் திருமணம் நடந்து முடிந்து ஒரு வாரம் நிறைவு பெற்றிருந்தது.

அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு அந்நியோன்னியமான உறவு நிலவிக் கொண்டிருந்தாலும், பூஜாவின் பெற்றோர்கள் மாத்திரம் அவர்கள் இருவரையும் ஏற்றுக் கொள்ளவே இல்லை.

ஒவ்வொரு நாளும் தன் பெற்றோர்கள் தன்னிடம் பேசுவார்கள் என்ற நம்பிக்கையுடனேயே பூஜாவின் நாட்கள் கழிந்து செல்ல, மறுபுறம் விஷ்வா அவனது வேலைகளை வழக்கம் போல செய்து கொண்டே தான் இருந்தான்.

அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பூஜா மற்றும் விஷ்வா வெளியே எங்கேயாவது செல்லலாம் என்று எண்ணிக் கொண்டு திருச்சியில் இருக்கும் பிரபல்யமான ஷாப்பிங் மால் ஒன்றை நோக்கி புறப்பட்டுச் சென்றனர்.

எப்போதும் போல அவனது அடியாட்கள் அவர்கள் இருவருக்கும் காவல் அரண்களைப் போல பின் தொடர, பூஜா புன்னகை முகமாக விஷ்வாவின் கையைப் பிடித்துக் கொண்டு கதை பேசிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தாள்.

அதே நேரம் அந்த ஷாப்பிங் மாலின் வெளிப்புறமாக பரசுராமன் மற்றும் செல்வி நின்று கொண்டிருக்க, அவர்களின் பார்வை பூஜாவை இலகுவாக கண்டு கொண்டது.

“என்னங்க பூஜா” செல்வி குரல் கம்ம தன் கணவரின் தோளில் கை வைக்க, அவரும் அந்த சமயத்தில் கண்கள் கலங்க தங்கள் மகளையே தான் பார்த்துக் கொண்டு நின்றார்.

பேபி பிங்க் நிற சேலை அணிந்து, இதமான ஒப்பனையுடன், விஷ்வா கட்டிய தாலியுடன், மிகவும் எளிமையான ஆபரணங்கள் அணிந்து முகம் கொள்ளாப் புன்னகையுடன் நடந்து செல்லும் தங்கள் மகளைப் பார்த்து பெரியவர்கள் இருவரும் வார்த்தைகளைப் பரிமாறிக் கொள்ள முடியாத ஒரு அமைதியான மனநிலையுடன், அதே நேரம் ஏக்கம் பொங்க அவளைப் பார்த்துக் கொண்டு நின்றனர்.

“என்னங்க, ஒரே ஒரு தடவை அவகிட்ட போய் நான் பேசிட்டு வரட்டுமா? இல்லைன்னா அவ பக்கத்தில் போய் ஒரேயொரு தடவை நல்லா பார்த்துட்டு சரி வரட்டுமாங்க?” என்றவாறே செல்வி தன் கண்களில் ஆவலைத் தேக்கி கேட்க,

அவர் அறியாமல் தன் கண்களைத் துடைத்து விட்ட பரசுராமன், “பரவாயில்லை செல்வி, நீ போய் பேசு. நானும் உன் கூட வர்றேன். நான் தள்ளி நிற்கிறேன், நீ போய் பேசிட்டு வா” என்று கூற, அவரோ முகம் கொள்ளாப் புன்னகையுடன் பூஜாவை நோக்கி ஆவலுடன் நடந்து செல்லத் தொடங்கினர்.

சுற்றிலும் அடியாட்கள் சூழ நடந்து செல்லும் பூஜாவை அவர்கள் நெருங்குவதற்கு இன்னும் ஐந்து, ஆறு அடி தூரமே வித்தியாசம் இருக்க, அதற்குள் சட்டென்று விஷ்வாவின் அடியாட்கள் யாரோ ஒரு நபரை அடித்து துவம்சம் செய்ய ஆரம்பித்தனர்.

திடீரென அந்த இடத்தில் களேபரம் ஆகி கூட்டம் போடத் தொடங்க, செல்வி சிறிது அச்சத்துடன் பரசுராமனின் கையைப் பிடித்துக் கொள்ள, அவரை அவசரமாக அந்த இடத்தில் இருந்து தள்ளி அழைத்துச் சென்றவர் பூஜா எங்கே இருக்கிறாள் என்று சுற்றிலும் தன் பார்வையை சுழல விட்டார்.

அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பூஜா மற்றும் விஷ்வா அந்த அடியாட்கள் களேபரம் செய்து கொண்டிருந்த இடத்தில் எதுவுமே நடவாதது போல பார்த்துக் கொண்டிருக்க, அதைப் பார்த்து அவரது மனம் தவிப்பாக அடித்துக் கொண்டது.

“இவ நம்ம பொண்ணு இல்லை செல்வி. சின்ன வயதில் இருந்தே ஒரு ஈ, எறும்புக்கு கூட தீங்கு செய்யக் கூடாதுன்னு வளர்ந்த நம்ம பொண்ணு பூஜா இவ இல்லை. பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும்னு சொல்லுவாங்க, ஆனா இங்கே அந்த ரவுடி கூட சேர்ந்து அவ மனதும் கல்லு மாதிரி ஆகிடுச்சு. யாரு, என்னன்னு தெரியாத ஒருத்தரை போட்டு அத்தனை பேரும் அந்த அடி அடிக்கிறாங்க, ஒரு வார்த்தை சொல்லி அதை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கிறாங்க. சேச்சே, இவ கிட்ட போய் பேச வந்தோமே என்னை சொல்லணும். முதல்ல இங்கே இருந்து கிளம்பலாம் வா செல்வி” என்றவாறே பரசுராமன் செல்வியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட, ஒரு தாயாக செல்வியின் மனம் தவியாய் தவித்தது.

‘உன்னைப் பழைய படி அப்பா கூட பேச வைக்கலாம்னு நான் முயற்சி பண்ணால், நீ திரும்பத் திரும்ப தவறான வழிக்கே போறியே பூஜா. உன்னைக் கஷ்டப்பட்டு வளர்த்து இப்படி தாரை வார்த்துக் கொடுக்க வைச்சுட்டியே. நீ எங்கே இருந்தாலும் சந்தோஷமாக இரு, சந்தோஷமாக இரு’ தன் மனதிற்குள் இருக்கும் கவலையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் செல்வி அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட, பூஜா மற்றும் விஷ்வா இதை எதையும் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.

********************

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கடந்து செல்ல அன்றோடு சக்தியின் லண்டன் வாழ்க்கை ஒரு நிறைவுக்கு வந்திருந்தது.

மேல் படிப்பிற்காக லண்டன் வந்து, பின்னர் அங்கேயே கிடைத்த வேலையை விடவும் முடியாமல், செய்யவும் முடியாமல் அவன் தவித்த தவிப்பை அவன் ஒருவனே அறிவான்.

தன் ஐந்து வருட லண்டன் வாழ்க்கையை அன்றோடு மூட்டை முடிச்சு கட்டி வைத்து விட்டு சென்னை வந்து சேர்ந்திருந்த சக்தி முதல் வேளையாக கோயம்புத்தூர் நோக்கி தன் பயணத்தை ஆரம்பித்தான்.

அவன் ஊரில் இல்லாத இந்த ஐந்து வருடங்களில் சில பல மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும், தன் சொந்த மண்ணில் கால் வைக்கும் போது ஏற்படும் ஒரு பரவசமான உணர்வு அந்த மாற்றங்களை பற்றிய வியப்பான உணர்வை எல்லாம் பின்நோக்கி தள்ளி வைத்து விட்டதைப் போலவே அவன் உணர்ந்திருந்தான்.

பல வருடங்கள் கழித்து தன் வீட்டுக்கு வந்து சேர்ந்த திருப்தியுடன் சக்தி காரில் இருந்து இறங்கி நிற்க, வீட்டு வாயிலில் அவனுக்காகவே காத்து நின்ற அவனது அண்ணனின்‌‌ குழந்தைகள் மற்றும் மீரா ஓடி வந்து அவனை கட்டிக்கொண்டனர்.

சக்தியின் அண்ணனின் குழந்தைகள் அவனை நேரில் பார்த்து இருக்காவிட்டாலும் ஒவ்வொரு நாளும் அவனோடு தொலைபேசியில் வீடியோ காலில் பேசியதை வைத்தே அவனுடன் அத்தனை தூரம் நெருக்கமாகி இருந்தனர்.

வெகு நாட்கள் கழித்து தன் உறவுகளைப் பார்த்த சந்தோஷத்திலேயே சக்தியின் அன்றைய பொழுது கழிந்து சென்றாலும் அவன் மனதிற்குள் இருந்த தவிப்பு மாத்திரம் அவனை விட்டு விலகவே இல்லை.

தான் ஊருக்கு வந்ததன் பிறகு பூஜாவைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று அவன் எண்ணியிருக்க, அவளை நேரில் பார்க்கும் வரை அல்லது அவளைப் பற்றி தகவல்கள் தெரியும் வரை அவனால் எதிலும் முனைப்புடன் ஈடுபட முடியவில்லை.

இரண்டு, மூன்று நாட்கள் தன் சொந்தங்களுடன் தன் நாட்களை கழித்து விட்டு அதன் பிறகு திருச்சிக்கு சென்று பூஜாவைப் பற்றி பேசலாம் என்று அவன் ஏதேதோ மனக் கோட்டை கட்டிக் கொண்டிருக்க, அந்த மனக்கோட்டை தவிடு பொடியாகும் தருணம் அவனைப் பார்த்து கை கொட்டி சிரித்துக் கொண்டு இருந்தது.

********************

அன்று வழக்கம் போல பூஜா சமையலறையில் நின்று கொண்டு தன் சமையல் வேலைகளைப் பார்த்துக் கொண்டு நிற்க, சட்டென்று இரு கரங்கள் அவளைப் பின்னால் இருந்து அணைத்துக் கொண்டது.

அந்த திடீர் அணைப்பில் அவளுக்கு தூக்கி வாரிப்போட்டாலும் சிறு புன்னகையுடன் அந்த கையை விலக்கி விட்டவள், “என்ன விஷ்வா சார்? இப்போ தான் எழுந்துரிச்சீங்களா? உங்களுக்காகத் தான் ஸ்பெஷலான ஸ்வீட் செய்துட்டு இருக்கேன்” என்று கூற,

அவளைத் தன் புறமாக திருப்பி அவளது நெற்றியில் விழுந்து கிடந்த முடிக்கற்றைகளை ஒதுக்கி விட்டவன், “ஸ்பெஷலான ஸ்வீட் செய்யும் அளவுக்கு இன்னைக்கு என்ன ஸ்பெஷல் மேடம்?” என்று கேட்டான்.

“இன்னைக்கு என்ன நாள்ன்னு கூடவா சார் உங்களுக்கு நினைவு இல்லை. அட கடவுளே! இன்னைக்கு உன் பர்த்டே டா” என்றவாறே பூஜா அவனது தலையில் செல்லமாக தட்ட,

“அட ஆமா. எனக்கு ஞாபகமே இல்லை பாரேன்” என்றவாறே வியப்பாக கூறிக் கொண்டு நின்றான்.

“பிறந்தநாள் கூட நினைவு இல்லாத அளவுக்கு அப்படி என்ன யோசனையோ?”

“நாம பண்ணுற தொழில் அப்படிம்மா. எப்போ, எவனை, எப்படி தூக்கலாம்? எங்கே தட்டுனா நம்ம காரியம் நடக்கும்? எந்த பிசினஸை நம்ம பக்கம் கொண்டு வர்றது? இப்படியான விடயங்களையே யோசிச்சுட்டு இருந்தா இதெல்லாம் எப்படிடா செல்லம்மா நினைவு இருக்கும்? இன்னும் சொல்லப்போனால் நீ என் வாழ்க்கையில் வந்த பிறகு தான் எனக்கு என் பிறந்தநாளே ஒரு விடயமாக கண்ணில் படும், மற்றபடி இதெல்லாம் நான் ஒரு பொருட்டாகவே எடுக்க மாட்டேன். நிச்சயம் இல்லாத வாழ்க்கையில் வயது போனால் என்ன? போகலேன்னா என்ன? என்று வாழ்ந்துட்டு இருந்தேன். நீ வந்ததற்கு அப்புறம் தான் இன்னும் நிறைய நாள் வாழணும்னு ஆசையே வந்து இருக்கு” விஷ்வா உணர்ச்சி வசப்பட்டவனாக பேசிக் கொண்டு செல்ல,

அவனின் மேல் சாய்ந்து நின்று கொண்டவள், “பர்த்டே அன்னைக்கு இவ்வளவு எமோஷனல் வேண்டாம் விஷ்வா. சரி, இப்போ சொல்லு, உனக்கு என்ன கிஃப்ட் வேணும்?” என்று கேட்க, அவளைப் பார்த்து கண் சிமிட்டியவன் அவள் காதில் ஏதோ சொல்ல அவளோ வெட்கத்துடன் அவன் தோளில் சட்டென்று அடித்து வைத்தாள்.

“அம்மா! ஏன் செல்லம்மா அடிச்ச? நீ தானே என்ன கிஃப்ட் வேணும்னு கேட்ட. அது தான் சொன்னேன்”

“போதும், போதும். விளையாடாமல் கேட்டதற்கு ஒழுங்காக பதில் சொல்லு விஷ்வா”

“நான் என்ன கேட்டாலும் கொடுப்பியா?”

“ஹ்ம்ம், என்னால் முடிந்தால் கண்டிப்பாக நான் செய்வேன்”

“நான் உயிரோடு இருக்கும் வரைக்கும் என்னை விட்டு எங்கேயும் போகாமல் இப்படியே என் கூட நீ எப்போவும் இருக்கணும். இதேமாதிரி என்னை நல்லபடியாக நீ பார்த்துக் கொள்ள வேண்டும். அப்புறம் உன் கூடவே என் வாழ்க்கை போகணும். எனக்கு என்ன ஆனாலும் நீ தைரியமாக இந்த உலகத்தை எதிர்த்து நின்று உன் தைரியத்தை எல்லோருக்கும் நிரூபிக்கணும். என் பூஜா எப்போதும் சந்தோஷமாக இருக்கணும், நான் இருந்தாலும், இல்லைன்னாலும். நான் சொன்னதை எல்லாம் செய்வாயா செல்லம்மா?” விஷ்வா பூஜாவின் முகத்தை தன் கைகளில் ஏந்திக் கொண்டு அவளைப் பார்த்து காதலோடு கேட்க, அவளும் அவனைப் பார்த்து புன்னகை முகமாக, ஆமோதிப்பாக தலையசைத்தாள்.

“எனக்கு நீ போதும் டா பூஜாம்மா. உன்னை விட பெரிய கிஃப்ட் எதுவுமே எனக்கு இனி கிடைக்கப் போறது இல்லை. இந்த உலகத்திலேயே எனக்கு கிடைத்த விலைமதிப்பில்லாத ஒரு பொக்கிஷம் நீ” என்றவாறே விஷ்வா அவளை அணைத்துக் கொள்ள,

“அண்ணே, அண்ணே” என்றவாறே அவனது அடியாட்கள் ஹாலில் நின்று அவனை சத்தம் போட்டு அழைக்க ஆரம்பித்தனர்.

“இவனுங்களுக்கு வேற வேலையே இல்லை. நேரம் கெட்ட நேரத்தில் தான் தொல்லை பண்ணுவாங்க. சரி, பூஜா நீ வேலையைப் பாரு” சிறு சலிப்புடன் பூஜாவை தன் அணைப்பில் இருந்து விடுவித்தவன் அவளது கன்னத்தில் தன் இதழைப் பதித்து விட்டு சென்று விட, அவளோ எப்போதும் போல காதலா ததும்ப அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

என்னதான் வெளியுலகிற்கு அவன் கெட்டவனாக தெரிந்தாலும் அவள் முன்னிலையில் அவன் எப்போதும் சிறு குழந்தையாகவே மாறிப் போய் விடுவான்.

காதல் ஒரு மனிதனை எந்தளவிற்கு மாற்றி வைத்து விடுகிறது என்பதை எண்ணி வியந்து போனவளாக பூஜா தன் வேலைகளைக் கவனிக்கத் தொடங்க, மறுபுறம் விஷ்வா கோபமாக தன் கை முஷ்டியை தன் அருகில் இருந்த சுவற்றில் ஓங்கி குத்திக் கொண்டு நின்றான்.

“அந்த துரைபாண்டியோட பையன் பொடிப்பயலுக்கு என்ன தைரியம் இருந்தால் என் மேலே கம்ப்ளெயிண்ட் பண்ணப் போவான்? அவன் அப்பனை அனுப்பி வைத்த மாதிரி அவனையும் கூட அனுப்பி வைக்காமல் விட்டது என் தப்பு தான். போனால் போகட்டும் சின்ன பையன்னு விட்டு வைத்தால் நாளைக்கு அவனே நமக்கு எமன் ஆகி விடுவான் போல இருக்கு. இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் அந்த பில்டிங் கான்ட்ராக்ட் தானே? அந்த பில்டிங் இருந்தால் தானே நான், நீ என்று எல்லோரும் போட்டி போடுவாங்க. இன்னும் ஒரு மணி நேரத்தில் அந்த இடத்தில் ஒரு செங்கல் கூட இருக்க கூடாது, மொத்தமாக எல்லாவற்றையும் தரைமட்டமாக்கிடுங்க.
இன்னும் இரண்டு வாரத்தில் திறப்பு விழா வைக்கணும்னு தானே அந்த கம்பெனி முதலாளி சொன்னான். இப்போ வெறும் தரைக்கு திறப்பு விழா வைக்கட்டும். நம்ம கிட்ட உதவி பண்ணுங்கன்னு சொல்லிட்டு வந்து பம்மிட்டு நின்னவன், அந்த பொடிப்பயல் பேச்சைக் கேட்டு நம்மளையே எதிர்த்து நிற்கப் போறானாம்மா? நம்மளை எதிர்த்தால் என்ன நடக்கும்னு மறந்துட்டாங்க போல. அந்த பொடிப்பயலை அந்த வெற்றுத் திடலில் கட்டித் தொங்க விடுங்க, அப்போதான் எல்லோருக்கும் புத்தி வரும். அப்புறம் இன்ஸ்பெக்டர் கிட்ட பேசி அந்த கம்ப்ளெயிண்டை என்ன செய்ய முடியுமோ பண்ண சொல்லுங்க. நாளை காலைக்கு முதல் இந்த பிரச்சினை எல்லாம் ஒண்ணும் இல்லாமல் ஆகி இருக்கணும். புரியுதா?” விஷ்வா போட்ட சத்தத்தில் அங்கு நின்று கொண்டிருந்த அவனது அடியாட்கள்,

“சரிண்ணே, சரி” என்றவாறே அவசரமாக அங்கிருந்து நகர்ந்து சென்று விட, மறுபுறம் சமையலறை வாயிலில் நின்று கொண்டிருந்த பூஜா கலக்கத்தோடு அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

‘இன்னும் எத்தனை நாளைக்கு இதையெல்லாம் நீ பார்த்து சந்தோஷமாக இருக்கப் போற?’ தான் விஷ்வாவைத் தான் திருமணம் செய்வேன் என்று விட்டு அவள் வீட்டில் இருந்து வெளியேறி வரும் போது அவளது அன்னை அவளைப் பார்த்து கேட்ட கேள்வி இப்போது அவளது காதில் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்க, தன் காதுகளை இறுக மூடிக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்து கொண்டவள் ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து விட்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள்.

“நோ பூஜா, நோ. எதற்காகவும் நீ இப்படி பயப்பட கூடாது. விஷ்வாவிற்கு எந்த பிரச்சனையும் வராது, வரவும் கூடாது” என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டவள் முயன்று தன்னை இயல்பாக வைத்துக் கொண்டு அன்றைய நாளுக்குரிய மீதி வேலைகளைப் பார்க்கத் தொடங்கினாள்.

********************

ஏற்கனவே சக்தி திட்டம் போட்டு இருந்ததைப் போல இரண்டு, மூன்று நாட்கள் தன் சொந்தங்களுடன் தன் நேரத்தை செலவிட்டு விட்டு பூஜாவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அன்று திருச்சியை நோக்கி புறப்பட்டுச் சென்றான்.

தான் திருச்சிக்கு வரும் விடயத்தை தன் நண்பர்களிடம் கூட சொல்லாமல் புறப்பட்டுச் சென்றவன் அவர்கள் இருவருக்கும் ஒரு ஆனந்த அதிர்ச்சி வழங்கலாம் என்று நினைத்திருக்க, உண்மையான அதிர்ச்சி அவனுக்கு தான் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை அவனுக்கு யார் சொல்லுவர்?

திருச்சி வந்து சேர்ந்ததும் முதல் வேளையாக உச்சிப் பிள்ளையார் கோவிலை நோக்கி சென்றவன், ‘என் மனதிற்குள் இருக்கும் ஆசைகளை எல்லாம் எப்படியாவது நிறைவேற்றி விடு’ என்று கடவுளிடம் மனதார வேண்டி விட்டு தன் நண்பர்களுக்கு அழைப்பு எடுக்கப் பார்த்து விட்டு, பின்னர் ஏதோ நினைத்தவனாக இப்போது எதுவும் சொல்ல வேண்டாம் என்று எண்ணிக் கொண்டு பூஜாவின் வீட்டை நோக்கி புறப்பட்டுச் சென்றான்.

தன் நண்பர்களை சந்தித்து அவர்களிடம் பேசி பூஜா பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு முன்பு அவளின் முன்னால் சென்று நின்று அவளிடம் தன்னைப் பற்றி கூறினால் அவள் எந்தளவிற்கு ஆச்சரியம் அடையக் கூடும் என்ற யோசனையுடனேயே சக்தி அவளது வீட்டை நோக்கி புறப்பட்டுச் செல்ல எண்ணியிருந்தான்.

அந்த இடங்கள் எல்லாம் ஐந்து வருடங்களுக்கு முன்பு அவன் வந்து சென்ற இடமாக இருந்தாலும் அவை எல்லாம் அவன் ஆழ் மனதில் பதிந்து போன இடங்கள் என்பதால் என்னவோ எந்த தடுமாற்றமும் இன்றி பூஜாவின் வீட்டை வந்து சேர்ந்தவன் அந்த வீட்டு வாயிலிலேயே தயங்கித் தயங்கி நின்றான்.

இவ்வளவு தூரம் தைரியமாக வந்தாயிற்று, அடுத்து என்ன செய்வது என்ற யோசனையுடன் சக்தி தன் கையைப் பிரிப்பதும், கோர்ப்பதுமாக நிற்க, வீட்டிற்குள் இருந்து வெளியேறி வந்த பரசுராமன் தங்கள் வீட்டின் முன்னால் ஒரு நபர் நிற்பதைப் பார்த்து விட்டு, “யாரு தம்பி அது? என்ன வேணும்?” என்று கேட்க,

அவரது குரல் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவன், “அது வந்து சார், என் பேரு சக்தி, நான் கோயம்புத்தூரில் இருந்து வர்றேன். உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று கூற, அவனை சிறிது நேரம் ஏற இறங்கப் பார்த்தவர் உள்ளே வரும்படி சைகை செய்தார்.

‘ஐயோ சக்தி! அவசரப்பட்டு தனியாக வந்துட்ட போல இருக்கேடா. பேசாமல் இப்படியே திரும்பி ஓடி விடுவோமா?’ என்று பலவாறான சிந்தனைகளுடன் அவரைப் பின் தொடர்ந்து சென்றவன் வீட்டிற்குள் நுழைந்து, அவர் காண்பித்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

“சொல்லுங்க தம்பி. யாரு நீங்க? என்ன விடயமாக என்னைப் பார்க்க வந்தீங்க?”

“நான் உங்களைப் பார்க்க வரல சார்”

“என்ன?” சக்தியின் கூற்றில் பரசுராமன் அவனைக் குழப்பமாக பார்க்க,

தன் நாக்கை கடித்துக் கொண்டு தன் தலையில் தட்டியவன், “இல்லை சார், அது வந்து நான் என்ன சொல்ல வந்தேன்னா, அது வந்து, நான் முதலில் என்னைப் பற்றி சொல்லி விடுகிறேன் சார். என்னோட பேரு சக்தி, இங்கே கோயம்புத்தூரில் தான் இருக்கேன். எம்.காம் வரை கோயம்புத்தூரில் படிச்சுட்டு அதற்கு அப்புறம் மேலே படிக்க லண்டன் போன நான் அங்கேயே வேலை கிடைத்து கடந்த ஐந்து வருடங்களாக அங்கேயே வேலை பார்த்துவிட்டு ஒரு வாரத்திற்கு முன்னாடி தான் ஊருக்கு வந்தேன். இப்போ இங்கே கோயம்புத்தூரில் பிரகாஷ் இன்டஸ்டீரீஸ் என்று ஒரு கம்பெனி ஆரம்பிக்க இருக்கேன்” என்று கூற,

அவரோ, “சரி தம்பி, இதெல்லாம் எதற்கு என் கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க. ஒரு வேளை உங்க கம்பெனி ஸ்டார்ட் பண்ண லோன் ஏதாவது பேங்கில் சொல்லி ஏற்பாடு பண்ணணுமா? ஆனா அது முடியாதே. கோயம்புத்தூரில் செய்யப் போற பிசினஸிற்கு திருச்சி பேங்கில் எப்படி லோன் அப்ளை பண்ணுறது? அதற்கு நிறைய வேலைகள் பார்க்கணுமே” சிறிது குழப்பமாக தன் பின்னால் நின்று கொண்டிருந்த தன் மனைவியைப் பார்த்து விட்டு அவனின் புறம் திரும்பி கேள்வியாக தன் புருவம் உயர்த்தினார்.

“ஐயோ அங்கிள், நான் லோன் எல்லாம் கேட்டு வரல”

“பின்ன வேறு எதற்காக வந்தீங்க?”

“உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டு கேட்டு வந்து இருக்கேன்” வெகு சிரமப்பட்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சக்தி தன் மனதில் இருக்கும் விடயத்தை கூறி இருக்க, மறுபுறம் பரசுராமன் மற்றும் செல்வி அவன் சொன்ன விடயத்தை கேட்டு அதிர்ச்சியில் ஷாக் அடித்தாற் போல எழுந்து நின்றனர்.

வெகு நேரமாக பரசுராமனிடமிருந்தும் சரி, செல்வியிடம் இருந்தும் எந்த ஒரு பதிலும் வராது போகவே சிறிது தயக்கத்துடன் அவரது தோளில் சக்தி கை வைக்க, எந்தவொரு உணர்வையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவனைத் திரும்பிப் பார்த்தவர், “என் பொண்ணை உங்களுக்கு எப்படி தெரியும் தம்பி?” என்று கேட்க, அவனோ பூஜாவை ஐந்து வருடங்களுக்கு முன்பு அவளது காலேஜில் வைத்து சந்தித்ததைப் பற்றி விலாவரியாக கூறினான்.

அவன் சொன்ன விடயங்களை எல்லாம் கேட்டு விரக்தியாக புன்னகைத்துக் கொண்டவர், “நீங்க ரொம்ப தாமதம் பண்ணிட்டீங்க தம்பி. நீங்க தேடி வந்தவ அதோ அங்கே இருக்கா” என்று கை காட்ட, அவர் கை காண்பித்த புறமாக திரும்பி பார்த்தவன் பூஜாவின் ஆளுயுயர புகைப்படத்திற்கு மாலை போடப்பட்டு, விளக்கு ஏற்றப்பட்டிருந்ததைப் பார்த்து பிரமை பிடித்தாற் போல சிலையென உறைந்து நின்றான்…..

**********
என் உயிர் காதலை உந்தன் காதோரம்
ஒரு முறையாவது சொல்ல நீ வேண்டும்
எந்தன் ஆசை முத்தங்கள் உன்னை சேருமோ
இல்லை காதல் யுத்தங்கள் இன்னும் நீளுமோ
**********