இதயம் – 04

eiHJN6N67051-8149f2c6

விஷ்ணு மற்றும் வெங்கட் தங்கள் கைகளை கட்டிக் கொண்டு தங்கள் முன்னால் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்த சக்தியைப் பார்த்துக் கொண்டு நிற்க, அவனோ எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.

ஒரு சில நிமிடங்கள் மௌனத்திலேயே கரைந்து செல்ல வெங்கட்டைத் திரும்பி பார்த்த விஷ்ணு சக்தியின் அருகில் நின்று அவனது தோளில் கை வைக்க, அவனது தொடுகையில் சட்டென்று அவனின் மேல் சாய்ந்து கொண்ட சக்தி குலுங்கி குலுங்கி அழ, அவனது நிலையைப் பார்த்து அவனது நண்பர்கள் இருவரும் வெகுவாக கலங்கிப் போயினர்.

“டேய் மாப்பிள்ளை சக்தி, அழாதேடா. சொன்னால் கேளு மாப்பிள்ளை, தயவுசெய்து அழாதேடா. இப்போ என்ன ஆச்சுன்னு நீ இப்படி அழுவுற?” சக்தியின் முகத்தை வலுக்கட்டாயமாக நிமிர்த்திய விஷ்ணு அவனைப் பார்த்து சிறிது கண்டிப்புடன் வினவ,

தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தவன், “நான் பூஜா வீட்டுக்கு போய் இருந்தேன்” என்று கூற, விஷ்ணு மற்றும் வெங்கட் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியாக திரும்பிப் பார்த்துக் கொண்டனர்.

“என்னடா எதுவும் பேசாமல் இருக்கீங்க?” வெகு நேரமாக தன் நண்பர்கள் இருவரும் அமைதியாக இருப்பதைப் பார்த்து சக்தி குழப்பமாக வினவ,

உடனே தன்னை சிறிது நிதானப்படுத்திக் கொண்ட வெங்கட், “என்னடா நீ? நீ எதற்கு தனியாக அங்கே எல்லாம் போன? எங்க கிட்ட சொல்லி இருந்தால் நாங்க இதெல்லாம் செய்ய மாட்டோமா? நீ ஏன்டா தனியாக கஷ்டப்படுற? உன் பிரண்ட்ஸ் தானே நாங்க?” என்று கேட்க சக்தியிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

“சரி, போனது போகட்டும். அவங்க வீட்டில் போய் பேசுனியே, என்ன சொன்னாங்க?” விஷ்ணு சிறிது தயக்கத்துடன் சக்தியைப் பார்த்துக் கேட்க,

கண்கள் கலங்க தன் முகத்தை மூடிக் கொண்டவன், “பூஜா இப்போ என்ன நிலைமையில் இருக்கான்னு சொன்னாங்க” என்று கூற, அவனுக்கோ அவனது கூற்றைக் கேட்டு பதட்டம் தொற்றிக் கொண்டது.

‘ஐயோ! அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆன விடயம் இவனுக்கு தெரிந்து விட்டது போலவே. இப்படி இவன் உடைந்து போய் விடக்கூடாதுன்னு தானே நான் அவ்வளவு தூரம் இந்த விடயத்தை அவசரப்பட்டு சொல்லி விடக்கூடாது என்று நினைத்து இருந்தேன். இப்போ இவனை நான் என்ன சொல்லி தேற்றுவேன்?’ என்ற யோசனையுடனே சக்தியின் தோளில் கை வைத்த விஷ்ணு,

“விடு சக்தி. அந்த இறைவன் என்ன எழுதி வைத்தானோ அது தான் நடக்கும். நீ இப்படி உடைந்து போய் விடக்கூடாதுன்னு தான் நான் இந்த விடயத்தை ஆரம்பத்திலேயே உன் கிட்ட சொல்லல. நீ ஊருக்கு வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சொல்லலாம்னு தான் நான் நினைத்து இருந்தேன், ஆனா இப்போ எல்லா விடயங்களையும் நீயாகவே தெரிந்து கொள்ள வேண்டிய நிலைமை வந்துடுச்சு. இந்த விடயத்தை சொல்லாமல் விட்டதற்கு சாரிடா” என்று கூற,

அவனைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவன், “நீ எதுக்கு மச்சான் சாரி சொல்லுற? எல்லாம் என் துரதிர்ஷ்டம். நான் ஆரம்பத்திலேயே அவகிட்ட என் மனதில் இருப்பதை சொல்லி இருக்கணும், சொல்லாமல் விட்டது என் தப்பு தான். நாள் இருக்குத் தானேன்னு எல்லாவற்றையும் விளையாட்டாக நான் எடுத்தேன், அது கடைசியில் இப்படி ஆகிடுச்சு. நான் தாமதித்த ஒவ்வொரு நாளும் எனக்கே பாதகமாக போயிடுச்சு. அதுவே கடைசியில் பூஜாவை என் கிட்ட நெருங்க விடாமல் செய்துடுச்சு. இனி நான் நினைத்தாலும் அவளைப் பார்க்க முடியாது இல்லை. அட்லீஸ்ட் அவ என்னை வேண்டாம்னு சொல்லி வேறு யாரையாவது கல்யாணம் பண்ணி இருந்தாலும் பரவாயில்லை, அவளை நினைச்சுட்டே என் வாழ்க்கையை ஓட்டி இருப்பேன், ஆனா இப்படி அவளை இனி பார்க்கவே கூடாது என்பது போல இந்த உலகத்தை விட்டே போயிட்டாளேடா” என்று தன் பாட்டில் பேசிக் கொண்டு செல்ல அவன் சொன்ன விடயங்களை கேட்டு விஷ்ணுவும், வெங்கட்டும் ஒருவரை ஒருவர் குழப்பமாக பார்த்துக் கொண்டனர்.

“சக்தி நீ என்னடா சொல்லுற?” வெங்கட் சக்தி சொன்ன விடயங்களை முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல் அவன் முன்னால் வந்து நின்று கேட்க,

விரக்தியாக புன்னகைத்த படி அவனை நிமிர்ந்து பார்த்தவன், “எதற்கு டா சும்மா நடிக்குற? பூஜாவோட அப்பா எல்லாவற்றையும் புரிய வைத்துட்டாங்க. பூஜா இறந்து போயிட்டான்னு அவரே அவர் வாயால் சொல்லிட்டாரு” என்று கூற, அப்போதுதான் அவர்கள் இருவருக்கும் அங்கே என்ன நடந்து இருக்கும் என்பது கொஞ்சம் கொஞ்சமாக பிடிபட ஆரம்பித்தது.

பூஜா அவள் பெற்றோரை எதிர்த்து விஷ்வாவை திருமணம் செய்து கொண்டதனால் அவர்கள் அவள் மீது உள்ள கோபத்தில் அவள் இறந்து போய் விட்டதாக கூறியிருக்க, அதை உண்மை என நினைத்து தான் சக்தி இவ்வளவு உணர்ச்சிகரமாக பேசிக் கொண்டு இருக்கிறான் என்று புரிந்து கொண்ட விஷ்ணு மற்றும் வெங்கட் அப்போதுதான் சிறிது நிம்மதியாக உணர்ந்தனர்.

“சக்தி அப்படி…” வெங்கட் சக்தியிடம் உண்மையை எடுத்துச் சொல்ல முயல, அதற்குள் அவனது கையைப் பிடித்துக் கொண்டு, ‘வேண்டாம்’ என்பது போல தலையசைத்த விஷ்ணு சக்தியின் புறம் திரும்பி, “சக்தி, கொஞ்ச நேரம் நீ ஓய்வு எடு. எதையும் யோசிக்காமல் ஒரு பத்து நிமிடம் கண்ணை மூடித் தூங்கு. கொஞ்ச நேரம் கழித்து நாம பேசலாம்” என்று விட்டு வெங்கட்டைப் பிடித்து இருந்த தன் கையை விடாமல் அவனை அங்கிருந்து அழைத்துச் சென்றவன் யாரும் இல்லாத ஒரு அமைதியான இடத்தில் சென்று நின்று கொண்டான்.

“விஷ்ணு ஏன்டா என்னை தடுத்த? அவன்கிட்ட உண்மையை சொல்ல வேண்டியது தானே?”

“சொல்லி என்ன செய்யப் போற? சொல்லுடா என்ன செய்யப் போற? அவன் கடைசியாக என்ன சொன்னான்னு கேட்டியா? அவ என்னை வேண்டாம்னு சொல்லி வேறு யாரையாவது கல்யாணம் பண்ணி இருந்தாலும் பரவாயில்லை, அவளை நினைச்சுட்டே என் வாழ்க்கையை ஓட்டி இருப்பேன்னு சொல்லுறான் அவன். இந்த நிலையில் அவன் கிட்ட எல்லாவற்றையும் விலாவாரியாக சொல்லப் போறியா? இப்போதாவது பரவாயில்லை, அவ உயிரோடு இல்லை, நம்ம வாழ்க்கையில் இனி அந்த பொண்ணு வரமாட்டான்னு அவன் முன்னேறிப் போக வாய்ப்பு இருக்கு,
அப்படி இருக்கும் போது இப்போ பூஜா வேறு ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டா, அதுவும் இந்த திருச்சி ஜில்லாவையே ஆட்டிப்படைக்கும் ஒரு ரவுடியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு சொன்னா அவன் நிலைமையை யோசித்துப் பார்த்தியா? அவன் ஏதாச்சும் தப்பாக யோசிக்கக் கூடாதுடா. உனக்கு அந்த விஷ்வா எப்படிபட்டவன்னு நல்லாவே தெரியும், அவன் வேலை விடயத்தில் யாரும் குறக்கே வந்தாலே அவங்களைப் பரலோகம் அனுப்பி விடுவான், அப்படியிருக்கும் போது அவன் பொண்டாட்டியை இவன் விரும்புகிறான்னு மட்டும் அவனுக்கு தெரிஞ்சதுன்னு வை, என்ன ஆகுமோ?அதனால்தான் வெங்கட் நான் ஒவ்வொரு விடயத்தையும் ரொம்ப யோசிச்சு, நிதானமாக பண்ணணும்னு பார்க்கிறேன்”

“சாரி மச்சான், நானும் அதை யோசிக்கல தான், ஆனா இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொய் சொல்லி அவனை சமாளிப்பது?”

“சமாளிக்கணும் தான் டா, வேறு வழியில்லை. பூஜா இனி வரப்போறது இல்லைன்னு அவனுக்கு தெரியும், அதனால் இனி அவன் திருச்சி வர்றதுக்கு முயற்சி பண்ணவும் மாட்டான். நாளாக நாளாக அவனே இந்த நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டு வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு போயிடுவான், இல்லைன்னா நாம போக வைக்கணும். அதற்கு அப்புறம் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புகிறேன்.
அதோடு மச்சான் தயவுசெய்து நீ எதையும் உளறி வைத்து விடாதே, ப்ளீஸ். இரண்டு, மூணு நாள் அவன் திருச்சியில் தங்கி இருந்துட்டு போகும் வரைக்கும் எந்தவொரு பிரச்சினையும் வராமல் நாம தான் அவனைக் காப்பற்றி பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைக்கணும்டா” என்று விஷ்ணு கூற, அவனது தோளில் தன் கையை வைத்த வெங்கட், “கவலைப்படாதே மச்சான். எந்தப் பிரச்சினையும் வராமல் நாம சமாளிப்போம்” என்று கூறியிருக்க, அவர்கள் யாருமே எதிர்பாராத ரூபத்தில் அடுத்த பிரச்சினை வருவதற்கு வெகு ஆவலுடன் தயாராகிக் கொண்டிருந்தது.

தன் மனதிற்குள் சூழ்ந்து இருக்கும் வெறுமையான உணர்வை அகற்ற முடியாமல் தவிப்போடு அமர்ந்திருந்த சக்தியை அவனது நண்பர்கள் இருவரும் ஏதேதோ கதை பேசி இயல்பாக்க வெகுவாக முயன்று கொண்டிருந்தனர்.

தன் நண்பர்கள் இருவரும் தனக்காக இவ்வளவு தூரம் ஏதோ ஒரு வகையில் தன்னை இலகுவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்ட சக்தி ஏதோ கடமைக்காக தன்னை இயல்பாக காட்டிக் கொள்ள முயல, அங்கிருந்த மூவருக்குமே அந்த செயற்கையான சூழ்நிலையுடன் முழுமையாக ஒன்றிப் போக முடியாவில்லை.

நாம் நினைப்பது எல்லாம் நடக்க வேண்டும் என்றிருந்தால் இந்த உலகத்தில் பிரச்சினைகளே உருவாகாது, அந்த நிதர்சனம் நம்மில் பலபேருக்கு புரிய வரும் போது எல்லாமே முடிவடைந்து இருக்கும்.

சக்தி அவன் வாழ்க்கையின் நிதர்சனத்தை உணரும் போது காலம் கடந்து போய் விடுமா? இல்லையா? காத்திருந்து பார்க்கலாம்.

திருச்சியில் இரண்டு, மூன்று நாட்கள் தங்கி இருந்துவிட்டு செல்லலாம் என்ற எண்ணத்தோடு தான் சக்தி தன் ஊரிலிருந்து புறப்பட்டு வந்திருந்தான், ஆனால் அவன் நினைத்தது ஒன்று, நடந்தது இன்னொன்றாக இருக்க இனியும் இங்கேயே இருப்பது சரியில்லை என்பதை உணர்ந்து கொண்டவன் அடுத்த நாளே தங்கள் ஊருக்கு திரும்பி செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து இருந்தான்.

தான் ஊருக்கு திரும்பி செல்லப் போகும் விடயத்தை சக்தி தன் நண்பர்களிடம் கூறியிருக்க, அவர்களுக்கோ அவனை அனுப்பி வைக்கவும் மனமில்லை, இங்கேயே இன்னும் சில நாட்கள் அவனைத் தங்கியிருக்க சொல்லி வற்புறுத்தவும் மனமில்லை.

தங்களின் இரு தலைக் கொள்ளி எறும்பு போன்ற நிலையை எண்ணித் தவித்துப் போனவர்கள் சக்தி இருக்கும் நிலையில் அவனை தனியாக அனுப்பி வைப்பது சரியில்லை என்று நினைத்து அவனை அவனது ஊரில் தாங்களே வந்து விட்டு செல்வதாக கூற அவனும் அதற்கு சம்மதம் தெரிவித்திருந்தான்.

பல வருடங்கள் கழித்து சந்தித்த நண்பர்களுடன் எப்படியெல்லாம் தன் நேரத்தை செலவிட வேண்டும் என்று பல்வேறு கற்பனைகளுடன் வந்திருந்த சக்தி அது எதுவுமே நடக்காது போன கவலையுடன் கோயம்புத்தூர் செல்லும் பேருந்தில் ஏறி கண் மூடி அமர்ந்திருக்க, அவனின் இருபுறமும் அவனது நண்பர்கள் அவனுக்கு ஆறுதலாக அமர்ந்திருந்தனர்.

சக்தி மனம் கனக்க அமர்ந்திருந்ததைப் போல, அந்த பேருந்தும் ஆட்கள் கனக்க அங்கிருந்து மெல்ல மெல்ல நகர்ந்து செல்ல ஆரம்பித்தது.

திருச்சி நகரை விட்டு அந்த பேருந்து தாண்டிச் செல்ல இன்னும் பத்து முதல் பன்னிரண்டு கிலோமீட்டர் தூரமே இருந்த நிலையில் திடீரென எங்கிருந்தோ வந்த நபர் ஒருவர் முதுகிலும், நெஞ்சிலும் வெட்டுக் காயங்களுடன் அந்த பேருந்தில் மூச்சு வாங்க ஓடி வந்து ஏற, பரீட்சை நடக்கும் மண்டபம் போல அமைதியாக இருந்த அந்த பேருந்து ஒரே நொடியில் காய்கறி விற்கும் சந்தை போல கூச்சலால் நிறைந்து போனது.

அந்த நபரின் நிலையைப் பார்த்து அங்கிருந்த எல்லோரும் பாவமாக அவனைப் பார்க்க, அதற்குள் நான்கைந்து அடியாட்கள் போன்று இருந்தவர்கள் அந்த நபரை துரத்தி வந்து பிடித்துக் கொண்டு அந்த பேருந்தில் இருந்து இறங்கி செல்ல இதையெல்லாம் பார்த்து சக்தி விதிவிதிர்த்துப் போய் அமர்ந்திருந்தான்
.
சிறு வயது முதலே சக்தி வெகு மென்மையான சுபாவம் கொண்டவன், கோபத்தில் கூட யாரையும் வார்த்தைகளால் நோகடித்து விடக்கூடாது என்பது தான் அவனது எண்ணம்.

அது மட்டுமில்லாமல் திரைப்படத்திலோ, அல்லது வேறு எங்கேயுமோ சண்டைக் காட்சிகள் வந்தால் அந்த இடத்திலேயே அவன் இருக்க மாட்டான்.

திரைப்படத்தில் அவ்வாறான காட்சிகள் வந்தால் அந்த சேனலை மாற்றி விடுவான், இல்லை என்றால் டிவியை ஆஃப் செய்து விடுவான்.

இப்படியான பயந்த சுபாவம் கொண்ட சக்தி இப்போது நேரடியாக ஒரு சண்டைக் காட்சியைப் பார்த்தால் அவனது நிலையை வார்த்தைகளால் விவரிக்கத் தான் முடியுமா என்ன?

சக்தி அந்த நபர்களை எல்லாம் பார்த்து தன்னருகே அமர்ந்திருந்த விஷ்ணுவின் கைகளை இறுகப் பற்றிக் கொள்ள, அதற்குள் அந்த பேருந்தின் முன்னால் நான்கைந்து கார்களும், ஜீப்களும் வந்து வழிமறித்தவாறு நின்று கொண்டது.

அதை எல்லாம் பார்த்து விஷ்ணு மற்றும் வெங்கட் பயத்துடன் ஒருவரை ஒருவர் திரும்பி பார்க்க, அங்கே நின்று கொண்டிருந்த ஒரு காரில் இருந்து விஷ்வா இறங்கி நின்றான்.

விஷ்வாவைப் பார்த்த அடுத்த கணமே விஷ்ணு அதிர்ச்சியாக தன் நண்பர்கள் இருவரையும் பார்க்க, வெங்கட்டின் நிலையோ பார்ப்பதற்கு வெகு பாவமாக இருந்தது.

விஷ்வா மட்டும் தானே அங்கே வந்திருக்கிறான், அது வரை பரவாயில்லை என்ற எண்ணத்தோடு விஷ்ணு தன் நெஞ்சை நீவி விட்டுக் கொள்ள, அவனுக்கு மேலும் பதட்டத்தை அளிப்பது போல விஷ்வா இறங்கி நின்ற காரின் உள்ளே பூஜாவும் அமர்ந்திருந்தாள்.

யாரைப் பார்த்து விடக் கூடாது என்று சக்தியை அவர்கள் திருச்சியில் இருந்து அவசர அவசரமாக அனுப்ப நினைத்தார்களோ அவளே இப்போது அவர்கள் கண் முன்னால் வந்து நிற்க, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விஷ்ணுவும், வெங்கட்டும் ஒருவரை ஒருவர் பார்த்து திருதிருவென விழித்துக் கொண்டு இருக்க, மறுபுறம் சக்தியின் கண்கள் தான் காண்பது கனவா? நனவா? என்று தெரியாமல் அதிர்ச்சியில் விரிந்து போய் இருந்தது.

“பூஜா” சக்தியின் உதடுகள் அவள் பெயரை ஆச்சரியத்தோடு உச்சரிக்க, விஷ்ணுவிற்கோ நிலைமை தங்கள் கையை மீறிப் போய் கொண்டு இருக்கிறது என்பது மெல்ல மெல்ல பிடிபடத் தொடங்கியது.

பூஜாவைப் பார்த்ததும் சக்தி அவளை நெருங்கி சென்றால் அது அவன் உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடுமே என்று பதட்டத்துடன் சக்தியின் கையை இறுகப் பற்றிக் கொண்ட அவனது நண்பர்கள் இருவரும், “டேய் சக்தி, இப்போ அவசரப்பட்டு எதையும் பண்ணிடாதேடா. இந்த ஆளுங்க எல்லாம் போனதும் எல்லாவற்றையும் விளக்கமாக சொல்லுறேன், அது வரைக்கும் கொஞ்சம் பொறுமையாக இருடா” என்று கூற, அவனோ அதை எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை.

அவனது எண்ணம், பார்வை, மனம் என ஒட்டுமொத்தமும் பூஜாவை நோக்கியே இருக்க, தன் கையை வலுக்கட்டாயமாக பிரித்து எடுத்துக் கொண்டு அங்கிருந்து எழுந்து சென்றவன், “பூஜா” என்றவாறே சத்தமிட்டுக் கொண்டு செல்ல, அங்கே நடந்து கொண்டிருந்த களேபரத்தில் அவனது குரல் யாரின் செவிகளுக்கும் சரியாக சென்று சேரவில்லை.

சக்தி ஏதாவது அவசரப்பட்டு செய்வதற்குள் அவனைத் தடுத்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு விஷ்ணு அவசரமாக ஓடிச் சென்று அவனைத் தன் புறமாக இழுத்து நிறுத்தப் பார்க்க, அவனோ அதை எதையும் கவனிக்கவே இல்லை.

இங்கே இவர்கள் எல்லோரும் வேறுவிதமான மனநிலையுடன் நின்று கொண்டிருக்க, மறுபுறம் விஷ்வாவும், அவனது அடியாட்களும் தாங்கள் விரட்டிக் கொண்டு வந்த நபரை சரமாரியாக அடித்து துவம்சம் செய்து கொண்டிருந்தனர்.

காரினுள் அமர்ந்திருந்த பூஜா அதை எல்லாம் பார்த்து தன் முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்திருக்க, அந்த அடி வாங்கிய நபரை குற்றுயிரும் குலையுயிருமாக விஷ்வாவின் அடியாட்கள் அங்கிருந்து தூக்கிக் கொண்டு சென்றனர்.

அவன் யார்? என்ன செய்தான்? என்பது அங்கிருந்த யாருக்குமே தெரியாது, ஆனால் அவன் விஷ்வாவிற்கு எதிராக ஏதோ செய்திருக்கிறான் என்பது மட்டும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

அவனை எதிர்த்த ஒருவனுக்கே இந்த நிலைமை என்றால் சக்தி ஏதாவது பேசச் சென்றால் அவனது நிலைமை என்ன ஆகுமோ என்கிற எண்ணமே விஷ்ணுவை நடுக்கம் கொள்ளச் செய்தது.

தன்னால் முடிந்த மட்டும் சக்தியை விஷ்வா கண்டு கொள்ளாதபடி பிடித்து வைத்திருந்த விஷ்ணு, வெங்கட்டை பேருந்தில் இருந்து தங்கள் உடைமைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு இறங்கி வரச் சொல்லி இருந்தான்.

அங்கே நடந்து கொண்டிருந்த விடயங்களை எல்லாம் பார்த்து உறைந்து போய் நின்ற வெங்கட் எப்படியாவது அங்கேயிருந்து உயிரோடு திரும்பினால் போதும் என்ற எண்ணத்தோடு தங்கள் உடைமைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு இறங்கி, சக்தியை ஒரு பெரிய மரத்தின் பின்னால் இருக்கும் மறைவான பகுதியில் நிற்கச் செய்ய, அவனுக்கோ அவர்களை எல்லாம் தள்ளி விட்டு விட்டு பூஜாவின் அருகில் செல்ல வேண்டும் என்கிற எண்ணம் மாத்திரம் தான் மனம் முழுவதும் வியாபித்து இருந்தது.

பூஜா இறந்து விட்டாள் என்று இந்த இருபது மணித்தியாலங்களும் அவன் பட்ட அவஸ்தை அவன் ஒருவனே அறிவான்.

இனி பார்க்கவே முடியாது என்று நினைத்திருந்த தன் காதலை மீண்டும் தன் கண் முன்னால் பார்க்கும் போது ஏற்படும் அந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியுமா? என்ன?

தன் இருபுறமும் தடுப்பு சுவர் போல தன்னைப் பிடித்திருந்த தன் நண்பர்களை தன்னால் முடிந்த மட்டும் பலம் கொண்டு தள்ளி விட்ட சக்தி தான் தன் நண்பர்களைக் காயப்படுத்தி கொண்டிருக்கிறோம் என்ற உண்மையைக் கூட உணராதவனாக பூஜாவை நோக்கி ஓடிச் செல்ல, அதற்குள் அவளே அவள் அமர்ந்திருந்த காரில் இருந்து இறங்கி நின்றாள்.

விஷ்வா தன் கையில் பட்டிருந்த இரத்தக்கறையை உதறி விட்டுக் கொண்டே பூஜாவை நோக்கி செல்ல, அவனுக்கு கையைத் துடைக்க ஒரு துண்டை எடுத்துக் கொடுத்தவள் அவனைப் பார்த்து ஏதோ பேசிக் கொண்டு இருப்பதைப் பார்த்து சக்தியின் நடையின் வேகம் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது.

சக்தியின் வேகம் குறைவதைப் பார்த்ததும் தங்கள் மேல் படிந்திருந்த இலைச்சருகுகள் மற்றும் தூசினை தட்டி விட்டு அவனின் அருகில் வந்து நின்ற விஷ்ணு மற்றும் வெங்கட், “டேய் சக்தி, சொன்னால் கேளுடா. இங்கே எல்லாம் நாம நிற்கக் கூடாதுடா” என்றவாறே அவனது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு செல்ல,

அவர்களது கையை தட்டி விட்டவன், “அந்த ஆளு யாரு? அவனுக்கும், பூஜாவுக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டான்.

“சொல்லுங்க டா. யாரு அவன்?” சக்தி விஷ்ணுவின் தோளைப் பற்றி உலுக்கி கேட்க,

அவனைப் பார்த்து தன் பார்வையை தாழ்த்திக் கொண்டவன், “அவனோட பேரு விஷ்வா. இந்த ஒட்டுமொத்த திருச்சியையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெரிய ரவுடி. இந்த திருச்சியில் அவனைப் பார்த்து பயப்படாதே ஆளே கிடையாது.ஒட்டுமொத்த போலீஸ், கவர்ன்மென்ட் ஆபிசர்ஸ் எல்லோருமே அவன் கன்ட்ரோல் தான். இந்த திருச்சியில் அவன் வைத்தது தான் சட்டம், அவன் செய்வது தான் சரி, அவன் தான் எல்லாமே” என்று கூற,

“அவனுக்கும், பூஜாவுக்கும் என்ன டா சம்பந்தம்?” சக்தி குழப்பத்துடன் அவனைப் பார்த்து வினவினான்.

“வெங்கட் நீ சொல்லுடா? பூஜாவுக்கும், அவனுக்கும் என்னடா சம்பந்தம்?” விஷ்ணுவின் அமைதியான தோற்றத்தில் வெங்கட்டின் புறம் திரும்பி சக்தி வினவ,

கண்கள் கலங்க அவனை நிமிர்ந்து பார்த்தவன், “சக்தி நாம இங்கே இருந்து போயிடலாம். வாடா” என்றவாறே அவனது கையைப் பிடிக்கப் போக, அவனோ அந்த இடத்தை விட்டு அசையாமல் நின்றிருந்தான்.

“தயவுசெய்து சொல்லுடா விஷ்ணு. எனக்கு இதை எல்லாம் பார்க்க பார்க்க தலையே வெடித்துவிடும் போல இருக்கு. இப்படிப்பட்ட ஒரு கெட்டவனோடு பூஜா எதற்கு டா இருக்கா?”

“ஏன்னா பூஜா அவனோட மனைவி” விஷ்ணு தான் இழுத்துப் பிடித்து வைத்திருந்த தன் பொறுமையை தூக்கி தூரப் போட்டவனாக சக்தியைப் பார்த்துக் கூற, அவன் சொன்ன விடயத்தைக் கேட்டு சக்திக்கு உலகமே இரண்டாகப் பிளந்தது போன்று இருந்தது……

**********
மௌனமான மரணம் ஒன்று
உயிரைக் கொண்டு போனதே
உயரமான கனவு இன்று
அலையில் வீழ்ந்து போனதே
இசையும் போனது, திமிரும் போனது
தனிமை தீயிலே வாடினேன்
நிழலும் போனது, நிஜமும் போனது
எனக்குள் எனையே தேடினேன்
**********