இதயம் – 05

eiHJN6N67051-f25df1ea

வாகனங்கள் வேகமாக அந்த சாலையில் கடந்து சென்று கொண்டிருக்க, அந்த வீதியோரத்தில் இருந்த ஒரு மரத்தின் கீழ் நின்று கொண்டிருந்த சக்தியை என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் அவனது நண்பர்கள் இருவரும் கை கட்டி அமைதியாக நின்று கொண்டிருந்தனர்.

தாங்கள் என்ன எல்லாம் நடந்து விடக்கூடாது என்று நினைத்து இருந்தார்களோ அவை எல்லாமே அவர்கள் எதிர்பாராத விதமாக நடந்து முடிந்திருக்க, அந்த சம்பவங்களினால் ஏற்பட்ட அதிர்ச்சியின் வீரியம் அவர்களுக்கு இடையே இன்னும் குறைந்தபாடில்லை.

பூஜா இன்னும் இறக்கவில்லை, உயிரோடு தான் இருக்கிறாள் என்று எண்ணி சந்தோஷம் கொள்வதா? இல்லை அவளது வாழ்க்கை இப்படி அமைந்துவிட்டதே என்று எண்ணி கவலை அடைவதா? என்று புரியாமல் சக்தி குழப்பமாக நின்று கொண்டிருந்தான்.

“சக்தி, இன்னும் எவ்வளவு நேரத்திற்கு இப்படியே இருக்கப் போற?” விஷ்ணு கேள்வியாக சக்தியை நோக்க,

அவனோ, “தெரியலைடா விஷ்ணு. பூஜாவை இப்படி ஒரு நிலைமையில் பார்ப்பேன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. அதுவும் இப்படி ஒரு ரவுடியோட மனைவியா…” தான் சொல்ல வந்த விடயத்தை சொல்லி முடிக்க தைரியமின்றி தன் கண்களை மூடிக் கொண்டான்.

“நாங்க என்ன எல்லாம் நடக்கக்கூடாது என்று நினைத்தோமோ அது எல்லாம் நடந்துடுச்சு. இதில் யாரு மேலேயும் தப்பு சொல்ல முடியாது. நீ வீணாக உன் மனதைப் போட்டு அலட்டிக் கொள்ளாமல் இங்கே இருந்து கிளம்பு. இப்போவே ரொம்ப லேட் ஆகிடுச்சு, இதற்கு அப்புறம் பஸ் ஏறி நீ வீட்டுக்கு போக ரொம்ப லேட் ஆகிடும். இனி நாளைக்கு வர்ற பஸ்ஸில் ஊருக்கு போகலாம், இப்போ வீட்டுக்கு கிளம்பலாம் வா” என்றவாறே வெங்கட் சக்தியின் தோளில் தன் கையை வைத்து அவனை அங்கிருந்து அழைத்துக் கொண்டு செல்ல, மறுபுறம் விஷ்ணுவும் தன் நண்பனை எண்ணி சொல்லொணா வேதனையுடன் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றான்.

காலத்தின் விளையாட்டில் என்னன்னவெல்லாம் நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அவை எல்லாம் நடந்தே ஆக வேண்டும், அது தான் அந்த காலத்தின் நியதி.

ஐந்து வருடங்களுக்கு முன்பு பூஜாவை சக்தி சந்திக்க வேண்டும் என்பதும், இப்போது ஐந்து வருடங்கள் கழித்து அவளை இன்னொருவனின் மனைவியாக பார்க்க வேண்டும் என்பதும் காலத்தின் கட்டாயமாக இருக்கும் போது யாரால், என்ன செய்து விட முடியும்?

நண்பர்கள் மூவரும் ஒவ்வொரு விதமான மனநிலையுடன் விஷ்ணுவின் வீட்டை வந்து சேர்ந்திருக்க, அவர்களை மறுபடியும் அங்கே பார்த்த ஆச்சரியத்தில் விஷ்ணுவின் மனைவி லதா, “என்னங்க இது? கோயம்புத்தூர் போறேன்னு சொன்னிட்டு கிளம்புனீங்க. இப்போ மறுபடியும் வீட்டுக்கே வந்துட்டீங்க. ஏதாவது பிரச்சினையா?” என்று கேட்க,

“இல்லை தங்கச்சி. பஸ்ஸை மிஸ் பண்ணிட்டேன். அது தான் நாளைக்கு போகலாம்னு திரும்பி வந்தோம்” விஷ்ணு பதிலளிக்க முன்பு சக்தி அவசரமாக அவளது கேள்விக்கு பதில் அளித்திருந்தான்.

“ஓஹ், அதுவும் நல்லதுதான். வந்து இரண்டு, மூணு நாள் கூட இங்கே இருக்காமல் அவசரமாக போறீங்களேன்னு அப்போவே கேட்டேன், நல்ல வேளை அந்த கடவுள் இன்னும் சில நாள் நீங்க இங்கேயே இருக்கணும்னு நினைத்து இப்படி பண்ணிட்டாரு போல. சரி, சரி, எல்லோரும் முதலில் உள்ளே வாங்க. நான் போய் சாப்பிட ஏதாவது செய்து கொண்டு வர்றேன்” என்று விட்டு லதா வீட்டிற்குள் சென்று விட, மறுபுறம் சக்தி முயன்று தன் கவலையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பது போல் நடமாடிக் கொண்டிருந்தான்.

இரவு தூங்கச் செல்லும் வரை நண்பர்கள் யாரும் வெளியே நடந்த விடயங்களைப் பற்றி தங்களுக்குள் பேசிக் கொள்ளவே இல்லை.

வெங்கட் நாளை வந்து அவர்கள் இருவரையும் சந்திப்பதாக சொல்லி விட்டு தனது வீட்டுக்கு கிளம்பி சென்று விட, மறுபுறம் விஷ்ணுவும், சக்தியும் அந்த வீட்டின் மொட்டை மாடியில் வானைப் பார்த்தபடி அமைதியாக படுத்திருந்தனர்.

“சக்தி, இன்னும் இரண்டு, மூணு நாள் கழித்து நீ ஊருக்கு போகலாமேடா. உனக்கு உண்மை எதுவும் தெரிந்து விடக்கூடாதுன்னு தான் நாங்க நீ அவசரமாக ஊருக்கு போகணும்னு சொல்லும் போது தடுக்கல. இப்போ தான் நிலைமை மாறிடுச்சே, இன்னும் இரண்டு, மூணு நாள் இங்கேயே இருக்கலாமே?” விஷ்ணு சிறிது தயக்கத்துடன் சக்தியைப் பார்த்து வினவ, சிறு புன்னகையுடன் அவனைத் திரும்பிப் பார்த்தவன் பதில் எதுவும் பேசாமல் ஆமோதிப்பாக தலையசைத்தான்.

“ஏன்டா சக்தி எதுவும் பேசாமல் இருக்க? என் மேல் எதுவும் கோபமா? நான் பண்ணது தப்பு தான் மச்சான். உண்மையை உன் கிட்ட மறைத்தது தப்பு தான், அதற்காக நாலு அடி வேணும்னா அடி, ஆனா இப்படி பேசாமல் இருக்காதேடா” என்றவாறே விஷ்ணு சக்தியின் கையைப் பிடித்துக் கொள்ள,

அவனது கையில் தன் கையை வைத்து அழுத்திக் கொடுத்தவாறே மெல்ல எழுந்து அமர்ந்தவன், “உன் மேலேயோ, வெங்கட் மேலேயோ எனக்கு எந்த கோபமும் இல்லைடா. பூஜா ஏன் இப்படி தப்பான முடிவு எடுத்தான்னு கவலை. அவ்வளவு தான்” என்று கூற விஷ்ணு சலிப்போடு தன் முகத்தை திருப்பிக் கொண்டான்.

“இன்னும் எத்தனை நாளைக்கு அந்த பொண்ணைப் பற்றியே நினைச்சுட்டு இருக்கப் போற? அவ இன்னொருத்தனோட மனைவி, நீ காதலிக்கும் பொண்ணு இல்லை. அவ உயிரோடு இல்லைன்னு நினைத்தாலாவது நீ உன் மனசை மாற்றிப்பேன்னு தான் அவளுக்கு கல்யாணம் ஆன விடயத்தை உன் கிட்ட நாங்க சொல்லல, ஆனா இப்போ நீ பேசுவதைப் பார்த்தால் எனக்குப் பயமாக இருக்குடா. நீ நினைக்கிற மாதிரி சாதாரண ஒரு கட்டப்பஞ்சாயத்து பண்ணுற, படத்தில் வர்ற மாதிரி ரவுடி இல்லை அந்த விஷ்வா. அவனோட முரட்டுத்தனம்! அதை எல்லாம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நீ அந்த பொண்ணை மறந்துடு மச்சான். உன் நல்லதுக்கு தான் சொல்லுறேன்”

“நினைத்த உடனே மனதிலிருந்து அழிக்க அது ஒண்ணும் காகிதம் இல்லையேடா. ஐந்து வருடங்களாக எவ்வளவோ கற்பனை பண்ணி வாழ்நதுட்டேன், அது தான் சட்டுன்னு மாற்ற முடியல, ஆனா இனி நான் பூஜா சாரி மிஸஸ் பூஜா விஷ்வாவைப் பற்றி நினைக்க மாட்டேன். நாளாக, நாளாக எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புகிறேன். அந்த கடவுள் இதையாவது எனக்கு செய்து கொடுக்கிறாரான்னு பார்க்கலாம்” என்று விட்டு சக்தி தன் கண்களை மூடித் தூங்க ஆரம்பிக்க, அவனைப் பார்த்து பெருமூச்சு விட்டபடியே தன் நண்பனின் வாழ்க்கையில் இனிமேலாவது நிம்மதி கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையோடு விஷ்ணுவும் கண் மூடி உறங்க ஆரம்பித்தான்.

இரண்டு, மூன்று நாட்கள் ஏனோதானோ என்று இல்லாமல், அதற்காக முழுமையாக எல்லா விடயங்களிலும் ஒன்றிப் போக முடியாமல் தன் நண்பர்களுடன் தன் நேரத்தை செலவிட்ட சக்தி அன்று தன் ஊருக்கு கிளம்பிச் செல்வதற்காக தயாராகிக் கொண்டு நின்றான்.

“டேய் சக்தி, நான் வேணும்னா பாதி தூரம் வரைக்கும் வர்றேன் டா”

“ஆமாடா சக்தி, கொஞ்ச தூரம் வரைக்கும் வந்து உன்னை அனுப்பிட்டு நாங்க திரும்பி வர்றோமேடா” என்றவாறே விஷ்ணுவும், வெங்கட்டும் சக்தியின் இருபுறமும் நின்று கொண்டு அவனது தாடையைப் பிடித்து கெஞ்சலாக கேட்டுக் கொண்டு நிற்க,

அவர்கள் இருவரது கையையும் தட்டி விட்டவன், “அடச்சீ, கையை எடுங்கடா. நான் என்ன சின்ன குழந்தையா? இதற்கு முதல் நான் தனியாக எங்கேயும் போனது இல்லை பாரு. கோயம்புத்தூரில் இருந்து திருச்சி வந்த எனக்கு திரும்பி இங்கே இருந்து அங்கே போகத் தெரியாதா என்ன? வீணாக எதற்கு டா நீங்க இரண்டு பேரும் அலையணும்?” அவர்கள் இருவரையும் பார்த்து கேள்வியாக நோக்கினான்.

சக்தி சில நாட்கள் தன் நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு விட்டு தன் ஊருக்கு செல்வதற்காக வேண்டி தயாராகிக் கொண்டிருக்க, அவனைத் தனியே அனுப்பி வைக்க மனமில்லாமல் அவனோடு சேர்ந்து ஊருக்கு செல்வதற்காக வேண்டியே விஷ்ணுவும், வெங்கட்டும் இப்போது அவனிடம் பல்வேறு விதமாக கெஞ்சிக் கேட்டுக் கொண்டு நின்றனர்.

“சும்மா ஒரு பாசம் தான் டா சக்தி. நாங்களும் உன் கூட வந்தால் உனக்கு டயர்டே தெரியாது டா”

“ஐயோ, ராசா. ஏற்கனவே உங்க பாசத்தில் ரொம்ப மூழ்கிட்டேன். இதற்கு மேலேயும் மூழ்கினால் மூச்சு முட்ட ஆரம்பித்து விடும், அதனால ஆளை விடுங்க டா சாமி” என்றவாறே தன் நண்பர்கள் இருவரையும் பார்த்து தலைக்கு மேல் கையெடுத்து கும்பிட்டவன்,

“நீங்க பயப்படுற மாதிரி எனக்கு ஒண்ணும் ஆகாது டா. நான் நல்ல படியாக ஊருக்கு போயிட்டு உங்களுக்கு கால் பண்ணுறேன். எனக்காக நீங்க இரண்டு பேரும் ரொம்ப கஷ்டப்பட்டுடீங்கடா, அதுதான் இன்னும், இன்னும் உங்களுக்கு சிரமத்தை தர நான் விரும்பல” என்று கூற,

அவனது தோளில் அடித்த விஷ்ணு, “உனக்கு உதவி பண்ணுறது எங்களுக்கு கஷ்டமா? இன்னொரு தடவை இப்படி பேசுன மவனே பல்லைத் தட்டி கையில் தந்துடுவேன்” என்றவாறே அவனைப் பார்த்து எச்சரிப்பது போல கூறினான்.

“இந்த திருச்சியில் இருக்கும் எல்லாப் பசங்களும் ரவுடி மாதிரி தான் பா இருக்காங்க. ஆ, ஊன்னா அடிக்க கிளம்பிடுறானுங்க” விஷ்ணுவைப் பார்த்து வேண்டுமென்றே பயப்படுவது போல நடித்துக் காண்பித்த சக்தியைப் பார்த்து மற்றைய இருவரும் சிரிக்க ஆரம்பிக்க, வெகு நாட்களுக்கு பிறகு மனம் விட்டு பேசி சிரித்தபடியே, அடுத்து வரவிருக்கும் பிரச்சினை பற்றி அறியாதவனாக சக்தி தன் நண்பர்களுடன் இணைந்து பேருந்து நிலையத்தை நோக்கி புறப்பட்டுச் சென்றான்.

இதற்கு முன்னர் இதேபோல் பேருந்து நிலையத்திற்கு வந்து, அதன் பிறகு என்ன வகையான விடயங்கள் எல்லாம் நடந்தது என்பது பற்றி சக்தியின் மனம் சிந்திக்க ஆரம்பிக்க, வெகு சிரமப்பட்டு தன் மனதை அடக்கி வைத்தவன் இந்த இடத்திலேயே பூஜா பற்றிய எண்ணங்களையும், நினைவுகளையும் விட்டு விட்டு சென்று விட வேண்டும் என்று நினைத்திருக்க, கடவுளோ அவனுக்கு அவன் எதிர்பாராத விடயங்களை அள்ளிக் கொடுக்க நினைத்திருந்தார்.

அத்தனை நேரமும் சூரியனின் வெம்மையால் அத்தனை மக்களையும் ஆராதித்துக் கொண்டிருந்த வானம் திடீரென கருமேகங்களால் சூழ்ந்து இருட்டி விட அந்த சடுதியான வானத்தின் மாற்றத்தில் விஷ்ணுவும்,வெங்கட்டும் சக்தியைப் பதட்டத்துடன் நோக்கினர்.

“என்னடா சக்தி இது? வானம் திடீர்னு இருட்டிடுச்சு? இன்னைக்கும் நீ ஊருக்கு போகக்கூடாதுன்னு இருக்கோ?” வெங்கட் நக்கலாக சிரித்துக் கொண்டே சக்தியைப் பார்த்து வினவ,

அவனது தோளில் மெல்லமாக அடித்தவன், “ஏன்டா ஏன்? உன் வாயில் நல்ல வார்த்தையே வராதா? ஊருக்கு கிளம்பும் போதே இப்படி கேட்குற? முதலில் உன் வாயை பினாயில் போட்டுக் கழுவு” என்று கூற, விஷ்ணு அவனைப் பார்த்து தன் வாயை மூடிக்கொண்டு சிரித்தபடி நின்றான்.

“நல்லா சிரிடா. உனக்கு இப்போ குளுகுளுன்னு இருக்குமே?” விஷ்ணுவைப் பார்த்து முறைப்பது போல நின்று கொண்டிருந்த வெங்கட் சட்டென்று தங்களை வேகமாக கடந்து சென்ற ஒரு காரைப் பார்த்து விட்டு,

“இது அந்த விஷ்வாவோட கார் தானே? எதற்காக இவ்வளவு வேகமாக போறான்?” என்று கேட்க, விஷ்வா என்ற பெயரைக் கேட்டதுமே சக்தியின் முகத்திலிருந்த புன்னகை துடைத்து விட்டாற் போல மறைந்திருந்தது.

சக்தியின் முக மாற்றத்தைப் பார்த்து விட்டு தன் நண்பனை சிறு கண்டிப்புடன் நோக்கிய விஷ்ணு தங்கள் பேச்சை திசை திருப்ப எண்ணி, “சக்தி மழை வர்ற மாதிரி இருக்கு. நீ உள்ளே போய் உட்காரு டா. நான் உனக்கு போய் தண்ணீர் பாட்டில் வாங்கிட்டு வர்றேன்” என்று விட்டு வெங்கட்டையும் தன்னோடு அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றான்.

வெங்கட் மற்றும் விஷ்ணு அந்த இடத்தில் இருந்து சென்று ஒரு இரண்டு நிமிடங்கள் கடந்திருந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு தங்களைக் கடந்து சென்ற விஷ்வாவின் கார் இப்போது மீண்டும் அவனை வேகமாக கடந்து செல்ல சிறிது கோபத்துடன் அந்த காரைப் பார்த்தவன் அதற்குள் பதட்டத்துடன் அமர்ந்திருந்த பூஜா மற்றும் விஷ்வாவைப் பார்த்து விட்டு ஏதோ சரியில்லை என்பதை மட்டும் உணர்ந்து கொண்டான்.

அவர்கள் கார் சென்ற புறமாக ஓடிச்சென்ற சக்தி என்ன நடக்கிறது என்று பார்க்க, திடீரென எங்கிருந்தோ வந்த இன்னொரு கார் அவனை இடிப்பதற்கு நூலிழை இடைவெளி இருக்கும் என்கிற நிலையில், அதி வேகத்துடன் கடந்து சென்றது.

இரண்டு கார்களும் வேகமாக கடந்து செல்வதை வைத்தே ஏதோ பெரிய பிரச்சினை ஒன்று நடக்கப் போகிறது என்று யூகித்த சக்தி அங்கே நின்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்றில் ஏறிக் கொண்டு அந்த கார் இரண்டும் சென்ற புறமாக செல்ல கட்டளையிட்டான்.

சக்தி தன் மனதிற்குள் பூஜாவைப் பற்றிய எண்ணங்களை அழித்து விட வேண்டும் என்று எண்ணியிருந்தாலும், காரணமே இல்லாமல் அவன் மனதில் காதலை வளர்த்து விட்ட அந்த இறைவன் இப்போது அதற்கு ஒரு முடிவையும் காண்பிக்க எண்ணியிருந்தான்.

எதற்காக அவர்களைப் பின் தொடர்ந்து செல்கிறோம் என்றே தெரியாமல் சக்தி அந்த கார்களைப் பின் தொடர்ந்து செல்ல, மறுபுறம் ஆள் நடமாட்டம் இல்லாத, பெரிய பெரிய மரங்களும், புதர்களும் சூழ்ந்த ஒரு காட்டுப்பகுதி போன்ற சாலையில் அந்த கார் இரண்டும் வேகமாக உள் நுழைந்தது.

விஷ்வாவின் காரை மற்றைய கார் நெருங்குவதற்கு கொஞ்ச தூரமே இருந்த நிலையில் திடீரென எங்கிருந்தோ வந்த லாரி ஒன்று விஷ்வாவின் காரை நேர் எதிராக மோதப் பார்க்க, காரை வேறு புறம் திருப்ப முடியாமல் தடுமாறிப் போனவன் நொடி நேரத்திற்குள் தன்னை சுதாரித்துக் கொண்டு பூஜா அணிந்திருந்த சீட் பெல்ட்டைக் கழட்டி விட்டு அவளை வெளியே தள்ளி விட்டான்.

விஷ்வா தன்னை தள்ளி விடுவான் என்று எதிர்பாராத பூஜா, “விஷ்வா” என்றவாறே பெருங்குரலெடுத்து சத்தமிட, அவசர அவசரமாக தன்னுடைய சீட் பெல்ட்டையும் கழட்டியவன் மற்றைய புறமாக பாய, அதற்குள் எதிரே வந்த லாரி அவர்கள் வந்த காரை தவிடு பொடியாக்கி இருந்தது.

அதே நேரம் அவர்களைப் பின் தொடர்ந்து வந்த கார் அந்த லாரியைத் தாண்டி சென்று விட, இவற்றை எல்லாம் வெகு தூரத்திலிருந்தே பார்த்துக் கொண்டு வந்த சக்தி தான் வந்த ஆட்டோ டிரைவரிடம் தன் கைக்கு வந்த பணத்தை அள்ளி கொடுத்து விட்டு வேகமாக பூஜா விழுந்த இடத்தை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான். விஷ்வாவும், பூஜாவும் வெளியே விழுந்ததில் ஏற்பட்ட சிறு சிறு சிராய்ப்புக்களோடு ஒருவரை நோக்கி ஒருவர் வெகு சிரமப்பட்டு நடந்து வர, “விஷ்வா” பூஜா கண்கள் கலங்க அவனை அணைத்துக் கொண்டு கண்ணீர் வடிக்க, அவளை அந்த நிலையில் பார்த்ததும் சக்தியின் கால்கள் பிரேக் அடித்தாற் போல சட்டென்று நின்றது.

“விஷ்வா, எனக்குப் பயமாக இருக்கு. இங்கே இருந்து போயிடலாம் வா விஷ்வா” என்றவாறே பூஜா விஷ்வாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து செல்லப் போக, சரியாக அந்த நேரம் பார்த்து அவர்களைப் பின் தொடர்ந்து வந்த கார் அவர்களை இடிப்பது போல வந்து நின்றது.

“பூஜா!” அந்த கார் பூஜாவை மோதி விடக்கூடாது என்பது போல அவளைத் தன் புறமாக இழுத்துக் கொண்டவன் அவளைத் தன் பின்னால் வந்து நிற்கச் செய்ய, அந்த காரில் இருந்து நான்கைந்து நபர்கள் கையில் பெரிய கத்தியுடனும், துப்பாக்கிகளுடனும் இறங்கி நின்றனர்.

அந்த நபர்களைப் பார்த்ததுமே பயத்தில் பூஜா விஷ்வாவின் தோளை இறுகப் பற்றிக் கொள்ள அவளது கையில் அழுத்திக் கொடுத்தவன், “என்னங்கடா நேருக்கு நேர் மோத தைரியம் இல்லாமல் இப்படி பின்னால் இருந்து தாக்குறீங்களா? உங்க அண்ணன் துரைபாண்டிக்கும், எனக்கும் தான் பிரச்சினை, அவனோடு இந்த பிரச்சினை முடிந்து போய் விட்டது, அதனால தேவையில்லாமல் என் வழியில் நீ குறுக்க வர வேண்டாம். என் வழியில் குறுக்கே வந்தால் என்ன நடக்கும்னு உனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். மரியாதையாக சொல்லுறேன், இங்கே இருந்து போயிடு, இல்லைன்னா அதற்கு அப்புறம் உன் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது” கோபமாக தன் முன்னால் நின்றவர்களைப் பார்த்து சத்தமிட, அவர்களோ அவனைப் பார்த்து ஏளனமாக சிரித்துக் கொண்டு நின்றனர்.

இதற்கிடையில் ஆயுதங்களுடன் வந்து நின்ற நபர்களைப் பார்த்து விதிர்விதிர்த்துப் போன சக்தி அங்கிருந்த மரம் ஒன்றின் பின்னால் மறைந்து நின்று கொள்ள, அவன் இதயமோ பந்தயக் குதிரையை விட வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

விஷ்வாவையும், பூஜாவையும் மாறிப் மாறிப் பார்த்துக் கொண்டிருந்த அந்த நபர்களில் ஒருவன், “இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி சொல்லி சொல்லியே எல்லோரையும் மிரட்டப் போற விஷ்வா? எங்க அண்ணன், அவ பையன்னு ஒருத்தரை விடாமல் என் அண்ணன் குடும்பத்தை அழிச்சுட்ட, அதற்கு பழிக்குப்பழி வாங்காமல் விட்டால் எப்படி? உன் உயிரைப் பறிக்காமல் இங்கே இருந்து நான் போக மாட்டேன். உன்னுடன் சம்பந்தப்பட்ட ஒருத்தரை விடாமல் உன் கண்ணு முன்னாடி கொன்னு போடுவேன் டா. இதோ இப்போவே உன் கண்ணு முன்னாடி உன் பொண்டாட்டியை போட்டுத் தள்ளுறேன், அதைப் பார்த்து நீ துடிதுடிக்கும் போதே உன்னையும் போட்டுத் தள்ளுறேன்” என்றவாறே அவளை நோக்கிச் செல்ல,

அந்த நபரை தங்களை நெருங்க விடாமல் தள்ளி விட்டவன், “இதோ பாரு, பிரச்சினை உனக்கும், எனக்கும் தான். தேவையில்லாமல் என் மனைவியை ஏதாவது பண்ண பார்த்தேன்னு வை, அப்புறம் ஒருத்தன் கூட இங்கே இருந்து உயிரோடு போக மாட்டீங்க” என்று எச்சரிக்க, அவனோ இவனது பேச்சை சிறிதும் சட்டை செய்யாமல் அவனது முகத்தில் ஓங்கி அடித்து விட்டு பூஜாவை எட்டிப் பிடிக்க தன் கையை நீட்டினான்.

ஏற்கனவே காரில் இருந்து பாய்ந்து விழுந்ததில் ஏற்பட்ட வலியினால் நிலையாக நிற்க முடியாமல் தடுமாறிய விஷ்வா இப்போது அவனது அடியின் தாக்கத்தில் சுருண்டு விழப் போக, அதற்குள் பூஜா அவனை விழ விடாமல் தாங்கிக் கொண்டாள்.

“பூஜா, எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை, உனக்கு எதுவும் ஆகக்கூடாது. நீ இங்கே இருந்து போ, போ!” என்றவாறே விஷ்வா பூஜாவை அங்கிருந்து போகச் சொல்லி கட்டளையிட, அவளோ கண்கள் கலங்க மறுப்பாக தலையசைத்தாள்.

“உன்னை விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன் விஷ்வா. எது நடந்தாலும் நான் உன் கூடவே தான் இருப்பேன்”

“சொன்னால் கேளு பூஜா. இந்த தொழில் செய்யும் எனக்கு இப்படித்தான் முடிவு வரும்னு தெரிந்தும் நான் என் வாழ்க்கையில் உன்னை சேர்த்தேன், அது தப்பு தான். எனக்கு என் வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லைன்னு இப்போ புரியுது. முதலில் அம்மா, அப்பா, இப்போ நீ. ப்ளீஸ் பூஜா, தயவுசெய்து எனக்காக இங்கே இருந்து போ. எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை, நீ உயிரோடு இருக்கணும், அது தான் என் ஆசை, ஏன் கடைசி ஆசைன்னே வைத்துக்கோ. முதல்ல இங்கே இருந்து போ பூஜா. என் மேல் உனக்கு உண்மையான அக்கறை இருந்தால் இங்கே இருந்து போ. எனக்கு என்ன முடிவு வந்தாலும் சரி, நீ உயிரோடு இருக்கணும், இது என் மேல் சத்தியம். தயவுசெய்து இங்கே இருந்து போ, போ!” என்றவாறே அவளது கையைத் தன் தலை மீது வைத்து விட்டு அவளைத் தன் பலம் கொண்ட மட்டும் தள்ளி விட,

அவர்கள் இருவரையும் பார்த்து வாய் விட்டு சிரித்துக் கொண்டு நின்ற அந்த நபர், “என்ன ஹீரோ சார்? பேச வேண்டியதை எல்லாம் பேசியாச்சா? இப்போ நான் செய்யப் போறதைப் பார்க்க ரெடியா?” என்றவாறே அவளை நோக்கி வர, அவளோ பயத்துடன் பின்னால் மெல்ல மெல்ல நகர்ந்து செல்ல ஆரம்பித்தாள்.

அந்த நபர் அவளை கோபத்துடன் நெருங்கி வரத் தொடங்க, தன் கையை இறுகப் பிணைத்துக் கொண்டவள் சுற்றிலும் தன் பார்வையை சுழல விட்டபடியே வேகமாக அங்கிருந்து ஓடத் தொடங்க, “ஏய் நில்லு!” என்றவாறே அங்கிருந்த நபர்களில் இருவர் துப்பாக்கியை அவளை நோக்கி குறி வைத்தபடி அவளைப் பின் தொடர்ந்து விரட்ட ஆரம்பித்தனர்…….

**********
நான் பயணம்
போகும் வாழ்க்கையை
ஏன் பணயம் கேட்கிறாய்
உன் வருகை காண வாசலில்
ஏன் காக்க வைக்கிறாய்
**********