இதயம் – 06

eiHJN6N67051-cb9bf37d

சக்தி பயத்தில் தன் முகத்தில் பூத்த வியர்வைத் துளிகளை துடைத்து விட்டபடியே தான் மறைந்திருந்த மரத்தின் பின்னாலிருந்து மெல்ல எட்டிப்பார்க்க, அங்கே அவன் கண்ட காட்சி அவனை மேலும் பதட்டமாக்கியது.

பூஜா பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல், கீழே விழுந்து அடிபட்டதில் ஏற்பட்ட வலியையும் பொருட்படுத்தாமல் அந்த நபர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அந்த ஆள் நடமாட்டம் அற்ற சாலையில் மூச்சு வாங்க ஓடி வந்து கொண்டிருக்க, அவளின் பின்னால் அவளை விரட்டி வந்து கொண்டிருந்தவர்களோ அவளை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அவளை விடாமல் விரட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தனர்.

ஒரு நிலைக்கு மேல் வலி தாளாமல் களைத்துப் போன பூஜா தன் வேகத்தை குறைத்து விட, அவளை விரட்டிக் கொண்டு வந்தவர்கள் ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்து சிரித்துக் கொண்டே அவளை நெருங்கி வரத் தொடங்கினர்.

அந்த இடத்தில் இருந்தும், அந்த நபர்களிடமிருந்தும் இனி தப்பிக்கவே முடியாது என்கிற எண்ணம் பூஜாவின் மனதில் எழத் தொடங்க விஷ்வா நின்று கொண்டிருந்த இடத்தை திரும்பி பார்த்தவள், ‘என்னை மன்னிச்சுடு விஷ்வா. உனக்கு செய்து கொடுத்த சத்தியத்தை என்னால் காப்பாற்ற முடியல. இன்னைக்கு உன்னோடு சேர்ந்து நானும் உன் கூடவே வந்துவிடப் போகிறேன். வாழ்வோ, சாவோ இரண்டு பேரும் ஒன்றாகவே இருப்போம்’ என்று எண்ணியபடியே கலங்கிப் போய் நிற்க,

சட்டென்று விஷ்வா தான் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து, “பூஜா அந்த கன்னை எடு” என்று சத்தம்‌போட, அவன் போட்ட‌ சத்தத்தில் எல்லோரது பார்வையும் அவனின் புறம் திரும்பியது.

எல்லோரது கவனமும் விஷ்வாவின் புறம் திரும்பிய அந்த நேரம், சக்தி பூஜாவை கண்ணிமைக்கும் நொடிக்குள் தன் புறம் இழுத்துப் பிடித்துக் கொண்டான்.

யாரோ தன்னை பிடித்து விட்டார்கள் என்கிற பயத்தில் சத்தமிடப் போன பூஜாவின் வாயில் தன் கையை வைத்து மூடியவன், “உஸ், சத்தம் போடாதீங்க. நான் உங்களை காப்பாற்ற தான் வந்து இருக்கேன். தயவுசெய்து சத்தம் போட்டு அவங்ககிட்ட காட்டிக் கொடுத்து விடாதீங்க” என்று கூற, அவளோ அவனை விழி விரித்து அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டு நின்றாள்.

“கன் இருந்தால் நாங்க பயந்து விடுவோமா?” என்றவாறே விஷ்வாவின் அருகில் அவனைப் பிடித்துக் கொண்டு நின்றவன் அவனது முகத்தில் ஓங்கி குத்த,

அவனோ, “அம்மா” என்றவாறே வலியில் முனங்கிக் கொண்டு நின்றான்.

அவனது நிலையைப் பார்த்து நக்கலாக சிரித்தபடியே பூஜாவை விரட்டிக் கொண்டு வந்தவர்கள் அவள் நின்று கொண்டிருந்த புறம் பார்க்க, அந்த இடமோ வெறுமையாக காணப்பட்டது.

அவளை‌ அங்கே காணாமல் பதட்டம் கொண்டவர்கள், “அண்ணே, அந்த பொண்ணைக் காணோம்ணே” என்று சத்தமிட,

“என்னங்கடா நீங்க? ஒரு பொண்ணை விரட்டிப் பிடிக்க முடியல, இந்த லட்சணத்தில் நீங்க‌ எல்லாம்‌ பெரிய ரவுடின்னு சொல்லிட்டு திரியுறீங்க. இதை எல்லாம் வெளியே சொன்னால் வெட்கக்கேடு. சரி, சரி. முதல்ல இவன் கதையை முடிப்போம் வாங்கடா, அதற்கு அப்புறம் அந்த பொண்ணை ஒரு வழி பண்ணுவோம், மிஞ்சி மிஞ்சிப் போனால் அவ இந்த திருச்சி ஜில்லாவை விட்டு எங்கே போயிடப் போறா? இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் அவளையும், அவ புருஷன் போகப்போகிற இடத்திற்கே அனுப்பி வைத்து விடலாம். வாங்கடா இங்கே” என்றவாறே விஷ்வாவைப் பிடித்து வைத்திருந்த அந்த நபர் தன் அருகில் நின்று கொண்டிருந்த நபரிடமிருந்து ஒரு பெரிய கத்தியை வாங்க, மரத்தின் மறைவில் நின்று கொண்டு அவற்றைப் பார்த்துக் கொண்டு நின்ற பூஜா அதிர்ச்சியில் சக்தியின் மேலேயே மயங்கி சரிந்தாள்.

“பூஜா, பூஜா” தன் மேல் மயங்கி விழுந்தவளை பார்த்து பதட்டம் கொண்ட சக்தி யாராவது தங்களைப் பார்த்து விடுவார்களோ என்கிற அச்ச உணர்வு மேலோங்க, சுற்றிலும் திரும்பி பார்த்தபடியே அவளது கன்னத்தில் தட்ட, அவளோ பேச்சு மூச்சின்றி மயங்கி கிடந்தாள்.

ஐந்து வருடங்கள் கழித்து பூஜாவை சந்திக்கும் போது எப்படி எல்லாம் பேச வேண்டும்? என்ன எல்லாம் பேச வேண்டும்? என்று இத்தனை நாட்களாக பல்வேறு வகையான ஆசைகளையும், கனவுகளையும் தன்‌ மனதில் சுமந்து வைத்திருந்த சக்தி இப்படி‌ ஒரு சந்தர்ப்பத்தில் அவளை சந்திக்க கூடும் என்று கற்பனையிலும் நினைத்திருக்கவில்லை.

பல வருடங்களாக தன்‌ மனதிற்குள் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவள் இப்போது தன் கையிலேயே சரிந்து கிடந்தாலும் அவளைத் தன் கை வளைவில் வைத்து நிற்பது கூட அவனுக்கு ஏதோ ஒரு பெரிய தவறான விடயத்தை செய்வது போல இருந்தது.

இப்போது பூஜாவை அங்கிருந்து அழைத்துக் கொண்டு செல்லவும் முடியாமல், அதேநேரம் உயிர் பிரியும் தறுவாயில் இருக்கும் விஷ்வாவைக் காப்பாற்றவும் முடியாமல்‌ தவிப்புடன் நின்று கொண்டிருந்த சக்தி அந்த அடியாட்கள் நின்று கொண்டிருந்த புறம் திரும்பிப் பார்க்க, அங்கே அவர்கள் விஷ்வாவை குற்றுயிரும் குலையுயிருமாக விட்டு விட்டு தங்கள் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றனர்.

அந்த கார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதும் பூஜாவைத் தயக்கத்துடன் நோக்கிய சக்தி சிறிது நேரம் தயங்கி நின்று விட்டு அவளைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டு விஷ்வா விழுந்து கிடந்த இடத்தை நோக்கி நடந்து சென்றான்.

முதுகிலும், நெஞ்சிலும் பல வெட்டுக்காயங்களுடன்‌ இரத்தத்தில் விழுந்து கிடந்த விஷ்வாவைப் பார்த்ததும் சக்திக்கு கை, கால் எல்லாம் உதறத் தொடங்க, அவனது பிடியிலிருந்து பூஜா நழுவி விழப் பார்த்தாள்.

அவள் விழுந்து விடக்கூடாது என்று சட்டென்று தன் பிடியை இறுக்கியவன்‌‌ முழங்காலிட்டு அமர்ந்து கொண்டு அவளைத் தன் தோளில் சாய்த்து விட்டு, விஷ்வாவின் முகத்தை திருப்பி அவனது கன்னத்தில் தட்ட அவனோ, உயிர் போகும் தறுவாயிலும் மெல்ல மெல்லத் தன் கண்களைத் திறந்து கொண்டான்.

“சார், சார். ஐயோ! இப்போ நான் என்ன பண்ணுவேன்? இங்கே பக்கத்தில் ஹாஸ்பிடல் எங்கே இருக்குன்னு கூடத் தெரியலையே. முன்ன பின்ன இந்த இடத்தைப் பார்த்தது கூட இல்லை. நான் என்ன பண்ணுவேன்?” விஷ்வாவை தட்டி எழுப்பியபடியே சக்தி தன் பார்வையை சுழல விட,

அந்த நேரத்திற்குள் விஷ்வா அவனது தோளில் சாய்ந்து இருந்த பூஜாவைப் பார்த்து விட்டு, “பூஜா” என்றவாறே தன் கையை நீட்ட, அவனது கையைப் பிடித்துக் கொண்டவன் அவனை மெல்ல நிமிர்ந்து அமரச் செய்தான்.

“பூஜா, பூஜா. கண்ணைத் திறந்து பாரும்மா” இரத்தம் தோய்ந்திருந்த தன் கரத்தினால் விஷ்வா பூஜாவின் கன்னத்தில் தட்ட, அவனது குரலைக் கேட்டதால் என்னவோ அவள் மெல்லமாக தன் மயக்கத்தில் இருந்து எழுந்து, கண் விழித்து சுற்றிலும் திரும்பி பார்த்தாள்.

தன் அருகில் அமர்ந்திருந்த அந்த புதியவனைப் பார்த்து சிறிது அச்சத்துடன் விலகி அமர்ந்தவள், தன் முன்னால் பாதி உயிரோடு அமர்ந்திருந்த தன் கணவனைப் பார்த்ததுமே, “விஷ்வா” என்றவாறே பெருஞ்சத்தத்துடன் அவனை எட்டிப் பிடிக்க, அவனோ கொஞ்சம் கொஞ்சமாக அவளை விட்டும், இந்த உலகத்தை விட்டும் பிரிந்து கொண்டிருந்தான்.

“விஷ்வா, விஷ்வா. என்னைப் பாரு விஷ்வா. உனக்கு எதுவும் ஆகாது விஷ்வா. நீ இல்லாமல் நான் எப்படி விஷ்வா இருப்பேன்? என்னைத் தனியாக விட்டுவிட்டு போயிடாதே விஷ்வா” பூஜா கதறி அழுதபடி விஷ்வாவின் முகத்தை தன் கைகளில் ஏந்திக் கொண்டு அமர்ந்திருக்க,

அந்த வலியிலும் அவளைப் பார்த்து புன்னகைத்தவன், “நீ தனியாக இருக்க மாட்ட‌ பூஜா. உன் அம்மா, அப்பாவோட ஆசைப்படி அவங்ககிட்டயே போயிடு. நிச்சயம் இல்லாத வாழ்க்கையை நம்பி உன் மனதில் ரொம்ப ஆசையைக் காட்டிட்டேன். இந்த தொழிலைச் செய்யும் ஒவ்வொருவருக்கும் இதுதான் முடிவுன்னு சொல்லுவாங்க, அப்படியிருந்தும் யாரும் நம்மளை எதுவும் பண்ணிட முடியாதுன்னு ரொம்ப வீராப்பாக இருந்துட்டேன். எத்தனையோ பேரை இதே கையால் வெட்டிப் போட்டு இருக்கேன், அதற்கு எல்லாம் சேர்த்து இன்னைக்கு எனக்கு இந்த நிலைமை. என்னால உன் வாழ்க்கை அநியாயமாக போவதைப் பார்க்க முடியாது பூஜா. நீ நல்லா இருக்கணும், எந்த பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக இருக்கணும்” என்று விட்டு,

அங்கே நடப்பது எதையும் புரிந்து கொள்ள முடியாமல் விக்கித்துப் போய் அமர்ந்திருந்த சக்தியின் புறம் திரும்பி, “சார், நீங்க யாரு, என்ன எதுவும் எனக்குத் தெரியாது. நீங்க இந்த ஊருக்கு புதிது போல இருக்கீங்க. வழி தெரியாமல் இந்த பக்கம் வந்து என் பூஜா உயிரைக் காப்பாற்றிட்டீங்க. உங்களை அந்த மரத்தின் பின்னால் பார்த்ததும் தான் நான் கன்னை எடுன்னு சத்தம் போட்டேன். கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தாலும் அவங்க பூஜாவை கொன்னு போட்டு இருப்பாங்க.
தப்பு பண்ண எனக்கு இந்த தண்டனை கிடைப்பதில் நியாயம் இருக்கு, ஆனா என்னை நல்லவனாக மாற்றணும்னு நினைத்த என் பூஜாவுக்கு எதுவும் ஆகக்கூடாது. அவங்க என்னை விட ரொம்ப மோசமானவங்களாக இருக்காங்க. அவங்க கண்ணில் பூஜா மறுபடியும் பட்டால் அவளுக்கு என்ன வேணும்னாலும் நடக்கலாம். தயவுசெய்து அவளை இங்கே இருந்து கூட்டிட்டு போயிடுங்க சார். இந்த ஊரிலிருந்து, என் அடையாளத்தை விட்டு அவளைக் கூட்டிட்டு போயிடுங்க. போங்க. ப்ளீஸ்” என்றவாறே அவனது தோளில் தன் கையை வைத்து தள்ளி விட்டான்.

“இல்லை விஷ்வா, நான் உன்னை விட்டு எப்படி விஷ்வா போவேன். நான் உன் கூடவே தான் இருப்பேன்” பூஜா விஷ்வாவின் கையைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து நகர மாட்டேன் என்பது போல அமர்ந்திருக்க,

அவளது கையை தன் கையிலிருந்து எடுத்து விட்டவன், “உனக்கு என் மேலே உண்மையான பாசம் இருந்தால் நான் சொன்னதை செய். உன் உயிருக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது. இது என் மேலே சத்தியம்” என்று கூற, அவளோ அவனை அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டு நின்றாள்.

“இல்லை விஷ்வா சார், உங்களுக்கு எதுவும் ஆகாது. நான் உங்களை காப்பாற்ற என்ன முயற்சி வேண்டுமென்றாலும் செய்வேன்” என்றவாறே சக்தி விஷ்வாவைத் தன் கைகளில் தூக்கிக் கொண்டு நடக்கத் தொடங்க, மறுபுறம் பூஜா தன் கண்களைத் துடைத்துக் கொண்டு அவனைப் பின் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தாள்.

நாற்பது, ஐம்பது நிமிடங்கள் நடைக்குப் பின்னர் பிரதான வீதியை வந்து சேர்ந்தவர்கள் அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவில் ஏறிக் கொண்டு அண்மையில் இருக்கும் ஹாஸ்பிடல் ஒன்றை நோக்கி செல்லுமாறு கூற, அந்த ஆட்டோ ஓட்டுனரோ சக்தியின் கையில் இரத்தத்தில் தோய்ந்திருந்த விஷ்வாவைப் பார்த்து விட்டு அவர்களை அங்கேயே இறக்கி விட்டு அவர்களைத் திரும்பியும் பார்க்காமல் புறப்பட்டுச் சென்றிருந்தான்.

“சே! என்ன மனுஷங்க இவங்க?” சக்தி சலிப்புடன் தன் காலைத் தரையில் உதைத்து விட்டு சுற்றிலும் நோட்டம் விட்டபடியே நடக்கத் தொடங்க, பூஜா அவனை வியப்பாகப் பார்த்துக் கொண்டே பின் தொடர்ந்தாள்.

விஷ்வாவின் உடல் எடையத் தாங்க முடியாமல் மூச்சு வாங்கியபடியே அரை மணி நேரம் விடாமல் நடந்து கொண்டிருந்த சக்தி ஒரு ஹாஸ்பிடல் வாயிலைக் கண்டு கொண்டு அதன் உள்ளே விரைந்து செல்ல, ஆரம்பத்தில் அவர்களை உள்ளே விடமாட்டோம் என்று முரண்டு பிடித்தவர்கள் விஷ்வாவின் முகத்தைப் பார்த்து விட்டு சிறிது தயக்கத்துடன் அவர்களை உள்ளே அனுமதித்து இருந்தனர்.

விஷ்வா இருந்த நிலையைப் பார்த்து விட்டு அவனுக்கு உடனடியாக சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டு விட கண்கள் கலங்க சக்தியின் முன்னால் வந்து நின்ற பூஜா, “நீங்க யாரு, என்ன எதுவும் எனக்குத் தெரியாது. முன்ன பின்ன தெரியாத எங்களுக்கு நீங்க ரொம்ப பெரிய உதவி பண்ணி இருக்கீங்க. என் உயிரைக் காப்பாற்றி, விஷ்வாவை ஹாஸ்பிடல் வரை தூக்கிட்டு வந்து, இதற்கெல்லாம் வெறும் நன்றின்னு சொல்லி முடித்து விட முடியாது. என் வாழ்நாள் வரைக்கும் உங்களை மறக்க மாட்டேன்” என்றவாறே இரு கரம் கூப்பி நன்றி தெரிவிக்க,

அவளைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவன், “பரவாயில்லைங்க. விஷ்வா சார் எந்த ஆபத்தும் இல்லாமல் வந்தால் போதும்” என்று கூற, சரியாக அந்த நேரம் பார்த்து வைத்தியர் ஒருவர் விஷ்வாவிற்கு‌ சிகிச்சை நடந்து கொண்டிருந்த அறையில் இருந்து வெளியேறி வந்தார்.

“டாக்டர், விஷ்வா நல்லா இருக்கான் தானே? அவனுக்கு எதுவும் இல்லைல்லே டாக்டர்?”

“சாரி மேடம், ஹீ இஸ் டெட். ரியலி சாரி” என்று விட்டு அந்த வைத்தியர் அவர்களைத் தாண்டி சென்று விட, மறுபுறம் பூஜா திக்பிரமை பிடித்தாற் போல உறைந்து நின்றாள்.

தான் இவ்வளவு தூரம் முயன்றும் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியாது போய்விட்டதே என்ற கவலையுடன் சக்தி நெற்றியை நீவி விட்டபடியே பூஜாவின் புறம் திரும்பி பார்க்க, அவளை அந்த நிலையில் பார்த்ததுமே அவனுக்கு தொண்டையை அடைப்பது போல இருந்தது.

அவளைப் பற்றிய தன் மன எண்ணங்கள் எல்லாம் மேலோங்கி வருவதைப் போல இருக்கவே சிரமப்பட்டு தன் மனதை அடக்கியவன் அவளின் அருகில் சென்று அவளது தோளில் தன் கையை வைக்கப் பார்த்து விட்டு பின்னர் தயக்கத்துடன் தன் கையை இறக்கி கொண்டான்.

“பூஜா” சக்தியின் குரலில் இயந்திரம் போல அவனைத் திரும்பிப் பார்த்தவள் தடுமாற்றமான நடையுடன் விஷ்வா வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து அங்கே உயிரற்ற உடலாக இருந்த விஷ்வாவின் அருகில் சென்று நின்றாள்.

இத்தனை நாட்களாக தன்னை சுற்றி என்ன நடந்தாலும் அவற்றை எல்லாம் வெகுவாக கண்காணித்து வருபவன் இன்று ஏதோ ஒரு சிறு இடத்தில் தன் கவனத்தை சிதற விட்டதனால் தன் உயிரையே பறி கொடுத்து விட்டானே என்கிற பச்சாதாபத்துடன் அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்ற பூஜா தன் நடுங்கும் கரங்களால் அவனது முகத்தை மெல்ல வருடிக் கொடுத்தாள்.

அவளது உடல் பாவனையை வைத்தே அவள் அவளது நிதானத்தில் இல்லை என்பதை புரிந்து கொண்ட சக்தி ஹாஸ்பிடலில் முடிக்க வேண்டிய வேலைகளை எல்லாம் முடித்து விட்டு, ‘விஷ்வாவை இந்த ஊரில் பல பேருக்கு பிடிக்காது. அவனைப் பிடித்த‌ ஒரே ஆள்ன்னா அது இந்த திருச்சியில் நானாக மட்டும் தான் இருப்பேன். நாங்க காதலித்துக் கொண்டிருந்த நேரம் ஒருநாள் விஷ்வாவிற்கு அடிபட்டதையே இந்த ஊரில் பலபேர் பங்ஷன் மாதிரி கொண்டாடினாங்க, அதைப் பார்த்து விஷ்வா ரொம்ப வருத்தப்பட்டான், இருந்தாலும் எனக்காக அதை எல்லாம் அவன்‌ வெளியே காட்டிக் கொள்ளவே இல்லை.
இப்போ விஷ்வா இறந்து போன விடயம் நிறைய பேருக்கு தெரிந்திருக்காது, அப்படி தெரிந்திருந்தாலும் அந்த தெரிந்தவர்களும் அதை கொண்டாடிட்டு இருப்பாங்க. மீதி இருக்கும் ஆட்களும் விஷ்வாவோட இறப்பைத் தெரிந்து கொண்டு அதைக் கொண்டாடுவதைப் பார்க்க என்னால் முடியாது. இப்போதைக்கு அவனுக்கு இருக்கும் ஒரே உறவு நான் மட்டும் தானே? அதனால விஷ்வாவுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் இங்கேயே நான் முடித்து விட்டு போகிறேன். தயவுசெய்து இந்த விடயத்தை மட்டும் செய்ய எனக்கு உதவி செய்யுங்க சார்’ என்ற பூஜாவின் கட்டளையின் படி அவனது உடலை அங்கேயே தகனம் செய்து விட்டு அவளை அவளது வீட்டில் விட்டுவிட்டுச் செல்ல எண்ணியவன் தன் தொலைபேசியை‌ எடுத்துப் பார்க்க, அதுவோ பல தடவை ஒலித்து ஓய்ந்து போய் இருந்தது.

தன் போனை எடுத்துப் பார்த்தவன் அதிலிருந்த விஷ்ணு மற்றும் வெங்கட்டின் அழைப்புகளின் எண்ணிக்கையைப் பார்த்து விட்டு தன் தலையில் தட்டிக் கொள்ள அவனை குழப்பமாக திரும்பி பார்த்த பூஜா, “என்ன ஆச்சு சார்?” என்று கேட்க,

“அது…அது ஒண்ணும் இல்லைங்க. நீங்க கொஞ்சம் இருங்க. நான் ஒரு கால் பண்ணிட்டு வர்றேன்” என்றவாறே அவளை விட்டு சிறிது தூரம் தள்ளி சென்று விஷ்ணுவிற்கு அழைப்பை மேற்கொண்டான்.

“டேய் சக்தி, எங்கடா இருக்க? எங்கடா போன? எவ்வளவு நேரமாக உன் போனுக்கு ட்ரை பண்ணுறோம்? ஏன்டா நீ போனை எடுக்கவே இல்லை? ஏதாவது பிரச்சினையா சொல்லு? எங்கடா இருக்க? உன்னைப் பஸ் ஸ்டாண்டில் தானே வெயிட் பண்ண‌ சொன்னோம், அதற்கிடையில் எங்கேடா போன? இரண்டு, மூணு மணி நேரமாக உன்னைத் தெரு தெருவாக தேடிட்டு இருக்கோம்டா. வீட்டில் இருந்து அம்மா வேறு கால் பண்ணி உன் போன் வேலை செய்யல என்ன ஆச்சுன்னு கேட்டுட்டு இருக்காங்க. ஏதோ சொல்லி சமாளித்து இருக்கோம். இப்போ நீ எங்கே இருக்க சொல்லு? “

“டேய், டேய். கொஞ்சம் பொறுமையாக பேசுடா”

“பொறுமை மண்ணாங்கட்டி. முதல்ல நீ எங்கேடா இருக்க சொல்லு”

“நான் இங்கே ****ஹாஸ்பிடல் கிட்ட இருக்கேன் டா”

“ஹாஸ்பிடலா? ஏன்டா, என்னடா ஆச்சு? சக்தி, உனக்கு ஒண்ணும் ஆகல தானே?”

“இல்லை டா, இல்லை. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை”

“அப்புறம் எதற்கு அவ்வளவு தூரம்‌ நீ தனியாக போன?”

“அது…வந்து…அது வந்து நான் இப்போ‌ பூஜா கூட இருக்கேன் டா”

“என்னது பூஜா கூடவா? என்னடா சொல்லுற?”

“ஆமாடா. ஒரு சின்ன பிரச்சினை. விஷ்வாவைக் கொன்னுட்டாங்க”

“என்னாது?” சக்தி சொன்ன‌ விடயத்தைக் கேட்டு அதிர்ச்சியான விஷ்ணு தன் நெஞ்சில் கை வைத்துக் கொள்ள,

அவனிடமிருந்து தொலைபேசியை வாங்கி ஸ்பீக்கரை ஆன்‌ செய்த வெங்கட், “டேய் சக்தி, விஷ்ணு கிட்ட என்னடா சொன்ன? அவன் இப்படி ஷாக் ஆகி இருக்கான். நீ எங்கேடா இருக்க?” என்று கேட்க, அவனோ சிறிது நேரத்திற்கு முன்பு நடந்து முடிந்திருந்த விடயங்களை எல்லாம் ஒன்று விடாமல் சொல்லி முடித்தான்.

சக்தி சொன்ன விடயங்களை கேட்டு விஷ்ணுவும், வெங்கட்டும் அதிர்ச்சியாகி நிற்க தன் தாடையை நீவி விட்டபடியே பூஜாவை ஒரு முறை திரும்பிப் பார்த்தவன், “ஹலோ விஷ்ணு, வெங்கட். நான் பேசுறது கேட்குதா?” என்று கேட்க,

மறுமுனையில் இருந்தவர்களோ, “நீ அங்கேயே நில்லு. நாங்க இரண்டு பேரும் கொஞ்ச நேரத்தில் அங்கே வர்றோம். மறுபடியும் எங்கேயாவது காணாமல் போய் எங்களை தேட வைத்துடாதே” என்று சிறிது கண்டிப்பாக கூறி விட்டு அழைப்பைத் துண்டித்திருந்தனர்.

தன் தொலைபேசியை மீண்டும் தன் சட்டைப் பாக்கெட்டில் போட்டு விட்டு பூஜாவின் முன்னால் வந்து நின்ற சக்தி கண்கள் கலங்க விஷ்வாவின் உடைமைகளை வருடிக் கொடுத்தபடி நின்றவளைப் பார்த்து விட்டு, “நான் உங்க கிட்ட ஒரு விடயம் கேட்கவா?” என்று கேட்க, மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தவள் என்னவென்பது போல நோக்கினாள்.

“இல்லை விஷ்வா சார் எப்படி பட்ட ஆள்ன்னு எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தெரியும். அவர்தான் எப்போதும் அவரோட ஆளுங்க இல்லாமல் வெளியே வர மாட்டாரே, அப்புறம் எப்படி? இன்னைக்கு…அது வந்து..அது…இப்படி? ஐ யம் சாரி, நான் கேட்டது தப்புன்னா ரியலி சாரி” என்று விட்டு தயக்கத்துடன் அவளது முகத்தைப் பார்க்க,

தன் முகத்தில் எந்தவொரு உணர்வையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நின்று கொண்டிருந்தவள், “நீங்க சொன்னது கரெக்ட் தான். நாங்க எப்போது வீட்டில் இருந்து வெளியே வந்தாலும் ஆளுங்க கூடத்தான் வருவோம். எப்போதும் போல இன்னைக்கும் நாங்க விஷ்வாவோட ஆளுங்க கூடத்தான் வெளியே வந்தோம். நாங்க வீட்டில் இருந்து கொஞ்ச தூரம் வந்ததுமே இந்த ஆளுங்க எங்களை விரட்டி வர ஆரம்பித்துட்டாங்க. அதேநேரம் இன்னும் இரண்டு, மூணு பேர்‌ விஷ்வாவோட ஆளுங்க வந்த ஜீப்பை லாரி வைத்து மொத்தமாக தரைமட்டமாக்கிட்டாங்க. நாங்க வந்த காரையும் அப்படி ஆக்சிடென்ட் பண்ணத்தான் ட்ரை பண்ணாங்க, ஆனா விஷ்வா அதிலிருந்து என்னையும், அவனையும் காப்பாற்றிட்டான். அப்படிக் காப்பாற்றியும் அவன் என்னைத் தனியாக தவிக்க விட்டுட்டு போயிட்டானே” என்றவாறே தன்‌ கையிலிருந்த விஷ்வாவின் உடைமைகளில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்…..

**********
உன் உறவும் இல்லை என் நிழலும் இல்லை
இனி என் காதல் தொலை தூரம்தான்
நான் சாம்பல் ஆனாலும்
என் காதல் வாழுமே
அந்த சாம்பல் மீதும் உனக்காக
சில பூக்கள் பூக்குமே
**********