இதயம் – 08

eiHJN6N67051-39697a6f

ஒரேநாளில் ஒட்டுமொத்தமாக தன் வாழ்வு முற்றிலும் மாறிவிட்ட நிலையை எண்ணி பூஜா கலக்கத்தோடு கண்களை மூடி அமர்ந்திருக்க, அவளை விட்டு ஒரு இருக்கை தள்ளி அமர்ந்திருந்த சக்தியின் கண்களோ அவளையே நொடிக்கு ஒரு தடவை தழுவி மீண்டது.

தான் அவளை முதன்முதலாகப் பார்த்தபோது எத்தனை கற்பனகளை எல்லாம் தன் நெஞ்சில் சுமந்திருந்தோம் என்று எண்ணியபடியே தான் அமர்ந்திருந்த இருக்கையில் சாய்ந்து கொண்ட சக்தி தன் கண்களை மூடிக் கொள்ள, அவன் நினைவுகளோ அவனை ஐந்து வருடங்களுக்கு முன்பு அழைத்துச் சென்றது.

ஐந்து வருடங்களுக்கு முன்பு கோயம்புத்தூரில்…..

“அண்ணா, அண்ணா, ப்ளீஸ் ண்ணா. ஒரே ஒரு வாரம் தானே? தயவுசெய்து வாண்ணா”

“முடியாது, முடியாது, முடியாது. ஒருவாரம், அப்படின்னா ஏழு நாள். அவ்வளவு நாள் எல்லாம் என்னால வர முடியாது” என்றவாறே ஷோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி அமர்ந்திருந்த சக்தி தன் தங்கை மீராவின் கெஞ்சல்களை எல்லாம் கவனிக்க மாட்டேன் என்பது போல அமர்ந்திருக்க, அவளோ அவனிடம் காலில் விழுந்து கேட்காத குறையாக கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

“நான் என்ன ஊர் சுற்றிப் பார்க்கவா உன்னை திருச்சிக்கு கூப்பிடுறேன்? எக்ஸாம் எழுதத்தானே சக்திண்ணா கூப்பிட்டேன். ப்ளீஸ்ண்ணா கூட வா ண்ணா. தனியாக என்னை திருச்சிக்கு போக அம்மா விடவே மாட்டாங்க. ப்ளீஸ் ண்ணா”

“ஏன் உனக்கு நம்ம ஊரிலேயே எக்ஸாம் எழுத ஆகாதா? திருச்சிக்கு தான் போய் எழுதணுமா? என்னால எல்லாம் வர முடியாது” என்று விட்டு எழுந்து நின்ற சக்தி அவள் எதிர்பாராத தருணம் சட்டென்று அங்கிருந்து ஓடி விட,

மறுபுறம் மீரா தன் கால்களை தரையில் உதைத்துக் கொண்டு, “அண்ணா, நில்லு ண்ணா” என்றவாறே அவனைப் பின் தொடர்ந்து ஓட்டமும் நடையுமாக சென்றாள்.

சக்தி அப்போது தான் தன் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு தன்னுடைய மேல் படிப்பிற்காக வெளிநாட்டிற்குச் செல்ல சில இடங்களில் விண்ணப்பித்திருந்தான்.

வெளிநாட்டில் தன்னுடைய மேல் படிப்பை ஓரிரண்டு வருடங்கள் செய்து விட்டு வந்தால் அது தனக்கும், தன்னுடைய எதிர்கால வேலைத்திட்டங்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று எண்ணியே அவன் இந்த முடிவை பல தடவைகள் யோசித்து எடுத்திருந்தான்.

பல இடங்களில் அவ்வாறான மேல் படிப்பிற்காக அவன் விண்ணப்பித்திருந்ததனால் தனக்கு எப்போது வேண்டுமானாலும் அந்த இடங்களிலிருந்து அழைப்பு வரலாம் என்று அவன் நினைத்திருக்க, அவனது தங்கை மீராவோ ஒரு போட்டிப் பரீட்சை ஒன்றிற்காக ஒரு வாரத்திற்கு திருச்சி செல்ல அவனை அழைத்திருந்தாள்.

தான் ஊரில் இல்லாத சமயத்தில் ஏதாவது அழைப்புகள் வந்துவிட்டால் தனக்கு அது சிரமமாகி விடும் என்று எண்ணிய சக்தி மீராவின் கெஞ்சல்களை எல்லாம் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் அவளை சுற்றலில் விட, அவளோ அவனை எங்கு சென்றாலும் விடமாட்டேன் என்பது போல அவனின் பின்னாலேயே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தாள்.

“சக்தி ண்ணா, ஏன் ண்ணா இப்படி பண்ணுற? உன் ஒரே தங்கச்சிக்காக இதைக் கூட பண்ண மாட்டியா?” மீராவின் பிடியில் சிக்கி விடக் கூடாது என்று தங்கள் வீட்டை சுற்றி சுற்றி வலம் வந்து கொண்டிருந்தவன் அவளது கேள்வியில் சட்டென்று தன் நடையை நிறுத்தி விட்டு அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“என் பாசமலரே! நீங்க இப்போ என்ன ராஜாத்தி கேட்டீங்க?”

“அது…அது…”

“சொல்லுங்க கண்ணா. என்ன கேட்டீங்க? உன் ஒரே தங்கச்சிக்காக இதைக் கூட பண்ண மாட்டியா? அப்படித்தானே கேட்டீங்க என் பாசமலரே?”

“ஆமா, இப்போ அதற்கு என்ன?”

“அதற்கு என்னவா? அடிங். எதாவது காரியம் ஆகணும்னா மட்டும் எத்தனை தடவை அண்ணா, அண்ணான்னு பின்னாடியே வர்ற. இதுவே நான் ஏதாவது ஒரு உதவி கேட்டால் நீ செய்திருக்கியா? அதெல்லாம் விடு, ஒரு நாள், ஒரே ஒரு நாள் பாசமாக இந்த அண்ணணுக்கு ஒரு காஃபி போட்டுத் தந்து இருக்கியா? ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து தந்து இருக்கியா? அட்லீஸ்ட் உன் பிரண்ட்ஸ் கிட்ட என்னைப் பற்றி நல்லதாக ஏதாவது சொல்லி இருக்கியா?” மீராவின் முறைப்பில் சட்டென்று தன் பேச்சை மாற்றியவன்,

“இப்படி எதுவுமே பண்ணாமல் எவ்வளவு தைரியமாக வந்து உதவி கேட்கிற?” என்று கேட்க,

அவளோ, “இப்போ என்ன உனக்கு காஃபி போட்டுத் தரணும் அவ்வளவுதானே? சரி நான் போட்டுத் தர்றேன். என் கூட திருச்சிக்கு வா ண்ணா” என்றவாறு சக்தியின் தாடையைப் பிடித்துக் கெஞ்சலாக கேட்டுக் கொண்டு நின்றாள்.

சிறு புன்னகையுடன் அவளது கையை தன் தாடையிலிருந்து எடுத்து விட்டவன், “நீ போட்டுத் தர்ற காஃபியை குடிக்கிறதும் ஒண்ணு தான், அதோ அந்த தொழுவத்தில் இருக்கும் மாடுகளுக்கு வைக்கும் கழனித்தண்ணீரை குடிக்கிறதும் ஒண்ணு தான். என்ன அந்த கழனித்தண்ணீர் கொஞ்சம் டேஸ்டாக இருக்கும்” என்று கூற,

அவளோ, “அப்போ நீ அந்த கழனித்தண்ணீரை எல்லாம் குடிச்சுப் பார்த்து இருக்கியா?” என்று கேட்டு விட்டு அவனது முறைப்பில் சட்டென்று தன் வாயை மூடிக்கொண்டாள்.

“என் தங்கச்சி, என் பாசமலர், என் இரத்தத்தின் இரத்தமே! நீங்க இப்போ என்ன கேட்டீங்க?”

“ஒண்ணும் இல்லையே, ஒண்ணுமே இல்லை. அதெல்லாம் விடுண்ணா. நான் கேட்டதற்கு சரின்னு சொல்லுண்ணா. திருச்சியில் உன் காலேஜ் பிரண்ட்ஸ் எல்லாம் இருக்காங்க தானே? அங்கே போனால் உனக்கு உன் பிரண்ட்ஸை சந்தித்த மாதிரி ஆகிடும். நீ தான் பாரின் போகப் போற, அப்படிப்போனால் திரும்ப எப்போ அவங்களை எல்லாம் சந்திக்க கிடைக்குமோ? இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதைப் பயன்படுத்தி கொள்ளணும்னா. பிரண்ட்ஸ் எல்லாம் சந்திக்க கிடைக்கும் வாய்ப்பு ரொம்ப ரொம்ப அரிது தெரியுமா?” மீரா பாவமாக தன் முகத்தை வைத்துக் கொண்டு சக்தியை நிமிர்ந்து பார்க்க,

அவளது தலையில் செல்லமாக தட்டியவன், “இந்த எமோஷனல் பிட்டு எல்லாம் என்கிட்ட வேண்டாம். நீ என்ன சொன்னாலும் என் பதில் முடியாது தான்” என்று கூறி விட்டு அங்கிருந்த தூண் ஒன்றில் வாகாக சாய்ந்து நின்று கொண்டான்.

இங்கே இவர்கள் இருவரும் மாறி மாறிப் பேசிக் கொண்டு நிற்பதைப் பார்த்து சமையலறையில் இருந்து வெளியேறி வந்த அவர்களது அன்னை சந்திரா, “சக்தி, அது தான் மீரா இவ்வளவு கெஞ்சிக் கேட்கிறாளே. போயிட்டு வாப்பா” என்று கூற,

அவரைப் பார்த்து உடனடியாக தன் தலையை அசைத்தவன், “இதோ இப்போவே என் திங்க்ஸ் எல்லாம் எடுத்து வைக்கிறேன்ம்மா. நீங்க சொல்லி நான் கேட்காமல் இருப்பேனா?” என்று கூறவும்,

மறுபுறம் அவன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியாகி நின்ற மீரா, ‘அடப்பாவி அண்ணா. அம்மா சொன்ன உடனே ஓகே சொல்லுவேன்னு தெரிந்திருந்தால் நான் அவங்க கிட்டயே பேசி இருப்பேனே. காலையில் இருந்து என்னை இவ்வளவு நேரம் அலைய விட்டுட்டியேடா பாவி அண்ணா’ என்றவாறே அவனை தன் மனதிற்குள் தாறுமாறாக திட்டிக் கொண்டு நின்றாள்.

தன் தங்கையின் அமைதியான தோற்றத்தில் அவளைப் பார்த்துக் கேள்வியாக தன் புருவம் உயர்த்தியவன், “நீ இப்போ என்ன நினைக்கிறேன்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியுது. நீ கேட்ட உடனே ஓகே சொன்னால் என் கெத்து என்ன ஆகுறது? எங்களுக்கும் ஒரு கெத்து இருக்கு கண்ணா. அதைக் காட்ட வேணாமா? அது தான் ஒரு சின்ன பில்டப்” என்று கூற,

அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டு நின்றவள் தன் கையை அருகிலிருந்த சுவற்றில் குத்தி விட்டு அங்கிருந்து செல்லப் போக, “சிஸ்டர் அந்த காஃபியை மறந்துடாதீங்க. நீங்க போட்டுத் தர்றேன்னு சொன்னீங்களே அந்த காஃபி” என்ற சக்தியின் குரலில் தன் தலையில் அடித்துக் கொண்டாள்.

“என்னாச்சு பாசமலரே? இப்போவே தலையில் தட்டி இருக்கும் மண்ணை எல்லாம் கொட்டிடாதேம்மா, திருச்சிக்கு போன பிறகும் அங்கே பாவிக்க கொஞ்சம் வேணும்” சக்தி அவள் முன்னால் வந்து நின்று அவளது தலையின் மேல் தூசு தட்டி விடுவது போல பாவனை செய்ய,

அவனைப் பார்த்து தன் அனைத்துப் பற்களும் வெளியே தெரியும் படி சிரித்தவள், “ரொம்ப நன்றி அண்ணா” என்றவாறே அவனைத் தள்ளி விட்டு விட்டு கோபமாக அங்கிருந்து நடந்து சென்றாள்.

கோபமாக நடந்து செல்லும் மீராவைப் பார்த்து பெருமூச்சு விட்டபடியே தன் நெஞ்சில் கை வைத்தவன், “ஹப்பாடா. இன்னைக்கு செய்ய வேண்டிய காரியத்தைக் கணக்கச்சித்தமாக முடிச்சாச்சு. மீராவை நல்லா கோபப்படுத்தி விட்டாச்சு, அதனால் இன்னைக்கு நிம்மதியாக தூங்கலாம் பா” என்றவாறே பாடல் ஒன்றை ஹம் செய்தபடி தன்னறைக்குள் சென்று நுழைந்து கொண்டான்.

இது தான் சக்தியின் இயல்பு. என்னதான் வீட்டில் எல்லோரிடமும் கலகலப்பாக பேசி சிரித்துக் கொண்டு இருந்தாலும் தன் செல்லத் தங்கையிடம் வம்பு வளர்க்கா விட்டால் அவனுக்கு அன்றைய நாள் ஏனோ அரைகுறையாக இருப்பது போலவே தோன்றும்.

இப்போதும் தான் நினைத்ததை முடித்து விட்ட திருப்தியோடு திருச்சி செல்வதற்காக வேண்டி தனக்குத் தேவையான பொருட்களை எல்லாம் சக்தி ஒழுங்கு படுத்திக் கொண்டு நின்றான், அவன் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப் போகும் தருணத்தை அந்த இறைவன் அவனுக்கு திருச்சியில் ஏற்பாடு செய்து வைத்திருந்ததை அறியாமலேயே.

ஒருவழியாக சின்ன சின்ன செல்ல சண்டைகளுடன்‌ திருச்சி வந்து சேர்ந்திருந்த சக்தி மற்றும் மீரா விஷ்ணுவின் வீட்டில் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க, தங்கள் பயணக் களைப்பு போகும் வரை ஒரு நாள் அங்கே ஓய்வு எடுத்துக் கொண்டவர்கள் அடுத்த நாள் பரீட்சை நடக்கும் கல்லூரியை வந்து சேர்ந்திருந்தனர்.

மீரா வரும் வரை அங்கேயே நிற்பது சலிப்பாக இருக்கும் என எண்ணிய சக்தி வெளியே எங்காவது தன் நண்பர்களுடன் சென்று விட்டு பரீட்சை முடிவடையும் நேரத்திற்கு மீண்டும் கல்லூரிக்கு வரலாம் என்றெண்ணி அங்கிருந்து புறப்படத் தயாரான வேளை சில பெண்கள் சிரிக்கும் சத்தம் கேட்க, அவனது கவனம் அந்தப் பக்கமாகத் திரும்பியது.

அந்த இடத்தில் நான்கைந்து பெண்கள் நின்று கொண்டு ஏதோ பேசி சிரித்துக் கொண்டு நிற்க, அந்த பெண்களின் நடுவே நின்று கொண்டிருந்த இன்னொரு பெண்ணின் முகம் அவன் கண்களை அங்குமிங்கும் நகர விடாமல் தன் மேல் நிலைத்து நிற்கச் செய்தது.

மெலிதாக மை தீட்டப்பட்டிருந்த அவள் விழிகள் இரண்டும் தன் தோழிகளின் பேச்சைக் கேட்டு சிரிக்கும் போது பல்வேறு பாவனைகளைக் காட்ட, அவள் முகம் முழுவதும் ஒருவித ஜொலிப்பு கொட்டியிருந்ததைப் போல இருந்தது.

நொடிக்கொரு தடவை தன் காதோரம் விழுந்து கிடக்கும் முடியை அவள் கைகள் இலாவகமாக எடுத்து விட்டுக் கொண்டிருக்க, சக்தியின் மனமும் அவள் கையசைவின் பின்னாலேயே தறி கெட்டு ஓட ஆரம்பித்தது.

இதற்கு முன்னர் அவளை விட அழகான பல பெண்களை அவன் தன் வாழ்க்கையில் சந்தித்திருந்தாலும் இந்த ஒரு முகம் மாத்திரம் ஏனோ அவன் மனச்சிறைக்குள் அனுமதியே இல்லாமல் வந்து அடைந்து கொண்டது.

எவ்வளவு நேரமாக அந்த பெண்ணின் முகத்தையே பார்த்துக் கொண்டு நிற்கிறோம் என்பது அவனுக்கே தெரியாது, அவள் செல்லும் இடமெல்லாம் அவளறியாமல் அவளைப் பின் தொடர்ந்து சென்றவன் அவர்களது பேச்சு வாக்கில் அவளது பெயர் பூஜா என்று அறிந்து கொண்டான்.

தான் இந்த திருச்சியில் இருக்கப் போவது வெறும் ஏழு நாட்கள் தான் என அவனது மூளை அவனுக்கு அறிவுறுத்தினாலும், அவன் மனமோ அவளைப் பற்றி இன்னும் இன்னும் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவனைத் தூண்டி விட்டுக் கொண்டே இருந்தது.

அன்றைய நாளின் பின்னர் வந்த ஆறு நாட்களும் மீராவைப் பரீட்சை எழுத அனுப்பி வைப்பவன் பூஜாவைப் பின் தொடரும் பணியை செவ்வனே செய்து வந்தான்.

அந்த ஏழு நாட்களில் அவன் பூஜாவைப் பற்றி அறிந்து கொண்ட விடயங்கள் எல்லாம் அவனின் மனதிற்குள் சுகமான நினைவுகளாக பதிந்து போனது என்பது தான் உண்மை.

தன் தாய், தந்தையுடன் அவள் செய்யும் சேட்டைகள் எல்லாம் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருக்கும் சக்திக்கு தெளிவாகவே கேட்கும், அப்போதெல்லாம் அவளது குறும்புத்தனத்தை எண்ணி தனக்குள்ளேயே அவன் சிரித்துக் கொண்டு நிற்பான்.

வீதியில் தனியாக நின்று கொண்டு சக்தி சிரிப்பதைப் பார்த்து ஒரு சிலர் அவனை விசித்திரமாக பார்த்தாலும் காதல் மயக்கத்தில் இருப்பவனுக்கு அவை எல்லாம் ஒரு பொருட்டாகவே படவில்லை.

பூஜா ஒவ்வொரு நாளும் தன் கல்லூரி முடிந்து வீடு திரும்புவதற்கு முன்பு உச்சிப் பிள்ளையார் கோவிலின் அருகே இருக்கும் ஒரு அனாதை ஆசிரமத்திற்கு சென்று அன்று தன் செலவு போக மீதி இருக்கும் பணத்தை அந்த ஆசிரமத்தின் முன்னால் இருக்கும் உண்டியலில் போட்டு விட்டு செல்லுவாள், அது மட்டுமின்றி யார் தன்னிடம் வந்து உதவி கேட்டாலும் நொடியும் யோசிக்காமல் அவர்களுக்காக தான் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை அப்படியே விட்டுவிட்டு செல்லக் கூட அவள் தயங்கியதில்லை.

அவளைப் பின் தொடர்ந்து சென்ற அந்த ஏழு நாட்களும் அவளைப் போலவே தன்னால் முடிந்த மட்டும் அந்த ஆசிரமத்திற்கு பண உதவி செய்து வந்தவன் இப்போது வரை அந்த பணியைக் கை விடவேயில்லை.

முதல் பார்வையில் காதல் வருவது எல்லாம் நம் வாழ்க்கையில் நடக்கப் போகிறதா என்ன? என்று இத்தனை வருடங்களாக இருந்து வந்தவனுக்கு ஒரே பார்வையில் தன்னை வீழ்த்தியவளைப் பார்க்கப் பார்க்க சலிக்கவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

பூஜாவைப் பற்றி சக்தி அறிந்து கொள்ள எடுத்த நேரம் என்னவோ ஒரு குறுகிய காலமாக இருந்தாலும், அந்த குறுகிய கால நினைவுகளே அவனுக்கு அவனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாட்களாக மாறிப் போனது.

அன்றோடு மீராவின் பரீட்சை முடிவடைந்து விட ஊருக்கு செல்வதற்காக தன் பொருட்களை எல்லாம் அடுக்கி வைத்துக் கொண்டு நின்ற மீரா எந்த ஒரு ஆயத்தமும் செய்யாமல் அமர்ந்திருந்த தன் அண்ணனைப் பார்த்து, “என்ன சக்தி, நீ ஊருக்கு வரலயா?” என்று கேட்க,

அவளைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவன், “இந்த திருச்சியை விட்டு வரவே எனக்கு மனசு இல்லை மீரா” என்று கூறினான்.

“பாரு, நான் கோயம்புத்தூரில் இருந்து கிளம்பும் போது உன் கிட்ட சொன்னேன் தானே, இங்கே வந்த அப்புறம் உன் பிரண்ட்ஸை எல்லாம் சந்தித்தால் நீ இப்படித்தான் சொல்லுவேன்னு நான் தான் அடிச்சு சொன்னேனே. இப்போ அதே மாதிரி ஆகிடுச்சா?”

“ஆமாம்மா, நீ சொன்னது எல்லாம் உண்மை தான்” என்றவாறே சிறு சலிப்புடன் தன் போனை எடுத்துப் பார்த்தவன் அதில் ஏதோ புதிதாக மெயில் ஒன்று வந்திருக்க,

அதை திறந்து பார்த்து விட்டு சந்தோஷம் தாளாமல் துள்ளிக் குதிக்க அவனது சத்தம் கேட்டு அதிர்ச்சியாக அவனைத் திரும்பிப் பார்த்த மீரா, “என்ன ஆச்சு சக்தி ண்ணா?” சிறிது படபடப்புடன் அவனைப் பார்த்து வினவினாள்.

“என் ஹையர் ஸ்டடிஸ்க்கு கால் பண்ணிட்டாங்க. இன்னும் இரண்டு வாரத்தில் நான் லண்டன் போறேன். யாஹூ!”

“ஹையோ! வாழ்த்துக்கள் அண்ணா. அப்புறம் லண்டன் போயிட்டு ஏதாவது பாரின் பொண்ணைப் பார்த்துட்டு அப்படியே அங்கேயே தங்கி இருந்துட மாட்டியே” என்று கேட்ட மீராவின் தலைமுடியைக் கலைத்து விட்டவன்,

“இங்கே எனக்கு முக்கியமான, மனதுக்குப் பிடித்த, ரொம்ப நெருக்கமான விடயங்கள் எல்லாமே இருக்கும் போது நான் எப்படி மீரா அங்கே இருப்பேன்” கனவுலகில் இருப்பவனைப் போல கூற, அவளோ அவனது கூற்றில் அவள் அவனை விசித்திரமான ஒரு பொருளைப் பார்ப்பது போல பார்த்துக் கொண்டு நின்றாள்.

அவளது பார்வை மாற்றத்தை உணர்ந்து கொண்டது போல சட்டென்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன், “அது வந்து நான் என்ன சொல்ல வந்தேன்னா அம்மா, அப்பா, அண்ணா, நீ எல்லோருமே இங்கே இருக்கும் போது நான் எப்படி அங்கேயே செட்டில் ஆகப் போறேன்? அதோடு உன்னோடு சண்டை பிடிக்காமல் என் நாள் பூரணமாகதே” என்று கூற,

அவனது தோளில் தட்டிய மீரா, “அதுதானே பார்த்தேன். என் கிட்ட வம்பு வளர்க்காமல் உனக்கு தான் தூக்கம் வராதே. சரி, சரி. சீக்கிரம் கிளம்புண்ணா. பஸ்ஸுக்கு நேரம் ஆகுது” என்று விட்டு தன் பொருட்களை எல்லாம் மீண்டும் அடுக்குத் தொடங்க, மறுபுறம் சக்திக்கு தான் வெகுநாட்களாக காத்திருந்த விடயம் நடக்கப் போகிறது என்று சந்தோஷப்படுவதா? இல்லை இந்த ஒரு வாரத்தில் தனக்கு தன் வாழ்க்கையின் இன்னொரு அழகான பக்கத்தைக் காண்பித்த பூஜாவை விட்டு பிரிந்து செல்வதை எண்ணி கவலை கொள்வதா? என எதுவுமே புரியவில்லை.

இருமனதோடு ஊருக்கு செல்வதற்காக தன் பொருட்களை எல்லாம் எடுத்து வைத்தவன் கோயம்புத்தூருக்கு செல்வதற்கு முன்பு தன் நண்பர்கள் விஷ்ணு மற்றும் வெங்கட்டிடம் இந்த ஒரு வாரத்தில் பூஜாவைப் பார்த்ததையும், அவளை மெல்ல மெல்லத் தான் நேசிக்க ஆரம்பித்து இருப்பதையும் கூற, அவர்கள் இருவரும் அது ஏதோ ஒரு வயதுக் கோளாறு என நினைத்து அவனை அதைப் பற்றி எல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டாம் என்று விட்டு ஊருக்கு வழியனுப்பி வைத்திருந்தனர்.

கோயம்புத்தூர் வந்த பிறகு தன் மேல் படிப்பிற்காக லண்டன் செல்லும் வேளையில் அவன் மனமும், மூளையும் மூழ்கிப் போய் விட, பூஜாவைப் பற்றிய எண்ணங்கள் எதுவும் அப்போது அவனுக்கு தோன்றவில்லை.

நாட்கள் மெல்ல மெல்ல அதன் பாட்டிற்கு நகர்ந்து செல்ல ஆரம்பிக்க, அவ்வப்போது பூஜாவைப் பற்றிய எண்ணங்கள் அவனை வந்து இம்சிக்க ஆரம்பித்தது.

அந்த எண்ணங்கள் வரும் போதெல்லாம் தன்னை வேறு வேலைகளில் மூழ்கடிக்க அவன் முயன்றாலும் அவன் ஆழ் மனதில் பதிந்து போன அவளது நினைவுகள் அவனை அத்தனை சுலபத்தில் அதைக் கடந்து செல்ல அனுமதிக்கவில்லை.

காலப்போக்கில் பூஜா தான் தன் வாழ்க்கைத் துணையாக வர வேண்டும் என்று அவன் மனம் முடிவு செய்திருக்க, அவன் எதிர்பார்த்ததை அத்தனை சுலபமாக அந்த இறைவன் அவனிடம் கொடுத்து விடுவாரா என்ன?

“சார், சக்தி சார்” தன் பழைய நினைவுகளில் கண் மூடி அமர்ந்திருந்த சக்தி பூஜாவின் குரலில் மெல்ல கண் விழிக்க,

“ஊருக்கு வந்தாச்சு” என்ற அவளது கூற்றில் தன் முகத்தை துடைத்துக் கொண்டு தங்கள் பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு அந்த பேருந்தில் இருந்து இறங்கி நின்றான்.

சிறிது நேரத்தில் அந்த இடத்திற்கு ஒரு கார் வர அதில் ஏறி அமர்ந்து கொண்டவர்கள் பூஜாவை அவள் செல்ல வேண்டிய ஹாஸ்டலில் இறக்கி விட்டு விட்டு அங்கே செய்ய வேண்டிய நடைமுறைகளை எல்லாம் முடித்துக் கொண்டனர்.

“அடுத்த வாரம் கம்பெனி திறப்பு விழா நடக்கும் பூஜா. அது வரைக்கும் இந்த புது இடம் உங்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. அப்புறம் என்ன உதவி தேவைப்பட்டாலும் தயங்காமல் எனக்கு கால் பண்ணுங்க. இதுதான் என் நம்பர்” என்று விட்டு அவளது கையில் தன் விசிட்டிங் கார்டை வைத்தவன் சிறு புன்னகையுடன் அவளைப் பார்த்து தலையசைத்து விட்டு அங்கிருந்து வெளியேறி சென்று விட, தனக்கென கொடுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்து கொண்ட பூஜா அத்தனை நேரமாக தன் மனதிற்குள் அடக்கி வைத்திருந்த ஒட்டுமொத்த கவலையும் தீர்ந்து போகும் வரை கதறியழ ஆரம்பித்தாள்.

பூஜாவை ஹாஸ்டலில் விட்டு விட்டு தன் வீட்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சக்தியின் மனம் முழுவதும் அவளது ஞாபகங்களும், நேற்று திருச்சியில் நடந்த நினைவுகளுமே மாறி மாறி அலை மோத, அந்த நினைவுகளின் தாக்கத்துடன் இனி வரப்போகும் நாட்களை எல்லாம் எப்படி கடத்தப் போகிறோம் என்ற யோசனையுடன் சக்தி தன் கண்களை மூடி சாய்ந்து அமர்ந்து கொண்டான்…..

**********
நினைவே நீ தானடி
நீங்காதே நீங்காதே வான் நீயே நீயே
கனவே நீ தானடி
நீ இன்றி நான் போகும் என் பாதை தீயே
மனமே என் ஆனதோ
வாடாதே வாடாதே கண்ணீரும் ஏனோ
உலகே பொய் ஆனதோ
சேராதோ சேராதோ மெய் காதல் தானோ
**********