இதயம் – 09

eiHJN6N67051-86bf0122

தங்கள் வீட்டின் முன்னால் கார் சென்று நின்றதைக் கூட உணராதவனாக சக்தி தன் கண்களை மூடி அமர்ந்திருக்க அவனது தோளில் தட்டிய கார் ஓட்டுனர், “சார், வீட்டுக்கு வந்தாச்சு” என்று கூற, அவரது குரல் கேட்டு தன் கண்களை திறந்து கொண்டவன் காரிலிருந்து தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு இறங்கி நின்றான்.

வீட்டிற்கு வெளியே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டதும் வாயில் கதவருகே நின்று அது யாராக இருக்கும் என்று பார்த்துக் கொண்டு நின்ற மீரா சக்தியைப் பார்த்ததும், “அம்மா, சக்திண்ணா வந்துட்டாங்க” என்று கூச்சலிட,

“என்ன இவ? நம்மளைப் பார்த்ததற்கு இவ்வளவு சந்தோஷப்படுறா. ஒருவேளை நான் ஊரில் இல்லாத நேரம் என்னை மிஸ் பண்ணி இருப்பாளோ? அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பு இல்லையே” அவளது குரல் கேட்டு குழப்பம் கொண்டவனாக நடந்து சென்றவன்,

“சக்தி ண்ணா வந்துட்டாங்க ம்மா. நான் கட்டிய பெட்டில் ஜெயிச்சுட்டேன்” என்ற மீராவின் குரலில் தன் தலையில் அடித்துக் கொண்டான்.

“அது தானே பார்த்தேன். என்னடா நம்ம பாசமலருக்கு நம்ம மேலே இவ்வளவு பாசமான்னு. நான் வீட்டுக்கு வருவேனா? மாட்டேனா? என்று பெட் கட்டி விளையாடுற அளவுக்கு போயிடுச்சா? இன்னைக்கு எல்லோருக்கும் இருக்கு” என்றவாறே தன் கையிலிருந்த பெட்டியை ஓரமாக வைத்தவன் தன் சட்டைக் கையை முழங்கை வரை இழுத்து மடித்துக் கொண்டு,

“அம்மா, யம்மோவ், மீரா” என்றவாறே சத்தமிட்ட படி சமையலறையை நோக்கி நடந்து சென்றான்.

சமையலறை வாயிலில் நின்று கொண்டிருந்த சந்திராவை வழிமறித்தவாறு நின்று கொண்டிருந்த மீரா, “எடுங்க ம்மா, எடுங்க. பணத்தை எடுங்க. நான் தான் அண்ணா இன்னைக்கு சொன்ன மாதிரி வந்துடுவான்னு சொன்னேன் தானே?” என்று கூறியபடி நிற்க,

அவளின் பின்னால் வந்து நின்று அவளது காதைப் பிடித்துக் கொண்டவன், “இங்கே ஒருத்தன் ஒரு வாரம் ஊரில் இருந்துட்டு வந்து இருக்கான். அதைப்பற்றி கவலை இல்லாமல் நீ பெட் கட்டி விளையாடுறியா?” என்று கேட்க,

மறுபுறம் சந்திரா, “அதுதானே நல்லா கேளு சக்தி” என்றவாறே அவனின் பக்கமாக வந்து நின்று கொண்டார்.

“என்ன நல்லா கேளு சக்தி? ம்மா நீங்களும் இவ கூட சேர்ந்து இப்படி எல்லாம் பண்ணலாமா?” சக்தி தன் நெஞ்சில் கை வைத்துக் கொண்டு அதிர்ச்சியாகி நிற்பவனைப் போல நின்று கொண்டிருக்க,

அவனது கையைத் தட்டி விட்டவர், “பின்ன வேற என்னடா பண்ண சொல்லுற? திருச்சிக்கு பிரண்ட்ஸைப் பார்க்கப் போறேன்னு சொல்லிட்டு போயிட்டு அடுத்த நாளே நான் ஊருக்கு வர்றேன்ம்மான்னு போன் பண்ணி சொன்ன, நானும் பையன் நம்மளை விட்டுப் பிரிந்து இருக்க முடியாமல் தான் உடனே வர்றான் போலன்னு ஆவலாக காத்து இருந்தா, போன் பண்ணி நான் இன்னைக்கு வரல இன்னும் இரண்டு, மூணு நாள் கழித்து வர்றேன்னு சொன்ன. சரின்னு விட்டுட்டேன். மறுபடியும் இரண்டாவது தடவை போன் பண்ண, அப்போ என்ன சொன்ன? அம்மா, அம்மா நான் பஸ் ஸ்டாண்டில் இருக்கேன் பஸ் புறப்பட்டதும் உனக்கு சொல்லுறேன்ம்மான்னு சொன்ன. சரி இந்த தடவை நம்ம பையன் சொன்ன மாதிரி வந்துடுவேன்னு நினைச்சா ரொம்ப நேரம் கழித்து போன் பண்ணி பஸ்ஸை மிஸ் பண்ணிட்டேன், நாளைக்கு வீட்டுக்கு வர்றேன்னு சொன்ன.
அதேமாதிரி இன்னைக்கு காலையில போன் பண்ண, மறுபடியும் அதே வசனத்தை சொன்ன, பஸ் ஸ்டாண்டில் இருக்கேன், ஊருக்கு வரப் புறப்பட்டுட்டேன்னு சொன்ன. ஆனா நான் அதை நம்பல, எப்படியும் மறுபடியும் கொஞ்ச நேரம் கழித்து நீ போன் பண்ணி அம்மா, அம்மா, இன்னைக்கும் நான் வரலம்மான்னு சொல்லுவேன்னு தான் நினைச்சேன், ஏன்னா மேல் படிப்பிற்காக லண்டன் போறேன்னு சொல்லிட்டு போய் அப்படியே ஐந்து வருடம் அங்கேயே இருந்தவன் தானே நீ?” என்று விட்டு கோபமாக தன் முகத்தை திருப்பிக் கொள்ள சக்தியும், மீராவும் அவரை வாயடைத்துப் போனவர்களாகப் பார்த்துக் கொண்டு நின்றனர்.

“என் செல்ல அம்மா, சாரிம்மா. இப்படி எல்லாம் நடக்கும்னு நான் கூட எதிர்பார்க்கல. என் செல்ல அம்மா இல்லையா? இந்த சின்னக் குழந்தையை மன்னிக்க கூடாதா?”

“யாரு நீ குழந்தையா?” மீராவின் கேள்வியில் சட்டென்று அவளது தலையில் கொட்டியவன்,

சந்திராவின் புறம் திரும்பி, “சரி, சரி. சாரி, ஆயிரம் தடவை சாரிம்மா. என்னம்மா நீங்க ரொம்ப நாள் கழித்து பையன் மறுபடியும் வீட்டுக்கு வந்து இருக்கான், இப்படியா கோபப்பட்டு நிற்கிறது? சரி, போனது போகட்டும், அப்புறம் இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?” என்று கேட்க,

அவரோ, “இன்னைக்கு நீ வருவேன்னு நான் தான் எதிர்பார்க்கவில்லையே, அதனால் வெறும் ரசமும், சாதமும் தான் வைத்து இருக்கேன்” என்று விட்டு அவனைப் பார்த்து புன்னகை செய்தார்.

“ம்மா, என்னம்மா சொல்லுறீங்க?”

“பின்ன என்னடா பண்ண சொல்லுற? ஒவ்வொரு தடவையும் போன் பண்ணி வர்றேன்னு சொல்லிட்டு வராமல் இருந்தால் நான் என்ன பண்ணுவேன்? முதல் தடவை நீ வர்றேன்னு சொன்ன நேரம் நல்ல இள ஆடு ஒன்றை தேடிப் பிடித்து உனக்காக மட்டன் பிரியாணி செய்து வைத்தேன், நீ வரல. இரண்டாவது தடவை மறுபடியும் வர்றேன்னு சொன்ன நேரம் ரொம்ப தேடித் தேடி நாட்டுக் கோழி எடுத்து அதை அடிச்சு குழம்பு வைத்தேன், அப்போவும் நீ வரல. அது தான் இந்த தடவை எதுவும் பண்ணல” என்று கூறிய சந்திராவின் பின்னால் நின்று கொண்டிருந்த மீரா சக்தியைப் பார்த்து,

“பொய், பொய் நம்பாதே” என்று ஜாடை காட்ட,

அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டவன் தன் அன்னையின் கன்னத்தை பிடித்து ஆட்டி விட்டு, “என் செல்ல அம்மா, நான் இல்லாமல் இதெல்லாம் செய்து இருக்கவே மாட்டீங்க. அப்படியே செய்திருந்தாலும் என்னை விட்டுட்டு சாப்பிட்டு இருக்கவே மாட்டிங்க. அதோடு நான் கோயம்புத்தூர் பஸ் ஸ்டாண்டில் நிற்கும் போதே எனக்கு நம்ம வீட்டில் இன்னைக்கு சிக்கன் பிரியாணி செய்யும் வாசம் வந்துடுச்சே” என்று கூறவும், அவனது தோளில் செல்லமாக தட்டியவர் அவனது தலையை பாசமாக வருடிக் கொடுத்தார்.

“என்னைப் பற்றி எல்லாம் நல்லாவே தெரிந்து வைத்து இருக்க, ஆனா நீ தான் என்ன பண்ணுறேன்னு எனக்குப் புரியவேயில்லை. ஏதோ இரகசியமாக வேலை பார்த்து இருக்கேன்னு மட்டும் தெரியுது. அது என்னன்னு நீயாக சொன்னால் சேதாரம் இருக்காது, ஒரு வேளை நான் கண்டுபிடித்தால் அப்புறம் உன்னை ஒரு வழி பண்ணிடுவேன்” சக்தியை எச்சரிக்கை செய்வது போல சந்திரா பேச,

அவரைப் பார்த்து சத்தமிட்டு சிரித்துக் கொண்ட மீரா மற்றும் சக்தி, “நீங்க இப்படி ரொம்ப பயங்கரமாக எல்லாம் நடிக்க வேணாம் ம்மா. உங்களுக்கு செட்டே ஆகல” என்று கூற,

அவரோ, “அட போங்கடா, வாலுப் பசங்களா” என்று விட்டு மீண்டும் சமையலறைக்குள் நுழைந்து கொண்டார்.

தன் அன்னையைப் பார்த்து சிரித்துக் கொண்டு நின்ற சக்தியின் தோளில் இடித்த மீரா, “என்ன ப்ரதர், அம்மா சொல்லுற மாதிரி ஏதாவது இருக்கா என்ன?” என்று கேட்க,

அவளை முறைத்துப் பார்த்தவன், “ஆமா, உன்னைத் தங்கச்சியாக வைத்துக் கொண்டு யாராவது இரகசியமாக ஏதாவது பண்ணிட முடியுமா?” என்றவன்,

பின்னர் ஏதோ நினைவு வந்தவனாக, “ஆமா, அது எப்படி நீ மட்டும் நான் இன்னைக்கு வீட்டுக்கு வந்துடுவேன்னு அவ்வளவு உறுதியாக சொன்ன?” கேள்வியாக அவளை நோக்கினான்.

“அது என்ன பெரிய விடயமா? என்னதான் பெரிய உயிரைக் கொடுக்கும் அளவுக்கு பிரண்ட்ஸாக இருந்தாலும் கல்யாணம் ஆகிடுச்சுன்னா இரண்டு, மூணு நாள் அவங்க பிரண்ட்ஸை வீட்டில் தங்க வைப்பதே பெரிய விஷயம், இதில் நீ பஸ் ஏறுவதும், இறங்குவதுமாக ஒரு வாரம் தங்கியிருந்தால் அவங்க என்ன தான் பண்ணுவாங்க? தன்னோட சொந்த காசைப் போட்டு சரி உன்னைப் பார்சல் பண்ணி இருப்பாங்க, அதனால்தான் இன்னைக்கு நீ வருவேன்னு நான் நூறு சதவீதம் உறுதியாக சொன்னேன். அதேமாதிரி நடந்தும் போச்சு” மீரா தன் சுடிதார் காலரை உயர்த்தி விட்டபடியே கூற,

அவளைப் பார்த்து தன் கைகளைத் தட்டியவன், “இந்த மூளையை உன் க்ளாஸ் எடுக்கும் நேரம் பயன்படுத்தி இருந்தால் அரியர்ஸ் வைக்கும் பசங்க எல்லாம் பாஸ் பண்ணி இருப்பாங்க” என்று கூற, அவளோ கோபமாக அவனது கழுத்தை நெறிப்பது போல தன் கைகளைக் கொண்டு சென்று விட்டு பின்னர் அதே கோபத்துடன் தன் கையை உதறிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.

கோபமாக நடந்து செல்லும் மீராவைப் பார்த்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டவன் தன் அன்னையிடமும், தங்கையிடமும் பேசிய பிறகு ஒருவித அமைதி கிடைத்ததைப் போல உணர்ந்தவனாக, அதே நிம்மதியான மனநிலையுடன் தன்னறைக்குள் வந்து தஞ்சம் அடைந்து கொண்டான்.

கிட்டத்தட்ட ஒருவார காலமாக இந்த சின்ன சின்ன சேட்டைகள் செய்யாமல் மனதிற்குள் பல்வேறு விதமான உணர்வுக் குவியலின் தாக்கத்தினால் தன்னை மறந்திருந்த சக்தி இப்போது தனது பழைய புத்துணர்வு கிடைத்து விட்ட திருப்தியோடு தன் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கி விட, மறுபுறம் பூஜா விஷ்வா இறுதியாக அணிந்திருந்த அந்த இரத்தக்கறை படிந்திருந்த அவனது சட்டையை தன்னோடு சேர்த்து அணைத்தபடி அமர்ந்திருந்தாள்.

“விஷ்வா, ஏன் இப்படி பண்ண? எதற்காக என்னை இப்படி தனியாக விட்டுட்டு போன? நீ இல்லாமல் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு விஷ்வா. அப்பா கூட என்னை வீட்டில் சேர்த்துக்கவே இல்லை தெரியுமா? யாருமே இல்லாமல் தனிமரமாக நான் நிற்கிறேன் விஷ்வா. நீ என் கிட்ட என்ன சொன்ன? கடைசி வரைக்கும் என் கூடவே இருப்பேன்னு தானே சொன்ன, ஆனா என்னை இப்படித் தனியாக விட்டுவிட்டு ஏன் விஷ்வா போன? என்னையும் உன் கூடவே கூட்டிட்டு போய் இருக்கலாமே விஷ்வா? இப்படி அனாதையாக வந்து கஷ்டப்படுவதை விட அன்னைக்கு அந்த ரவுடிங்க கையால் செத்துப் போய் இருக்கலாம், ஆனா என் உயிருக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாதுன்னு அந்த நேரத்திலும் என்னைப் பற்றித் தானே விஷ்வா நீ யோசிச்ச?
அந்த நேரத்தில் சக்தி சார் மட்டும் அங்கே வரலேன்னா என் நிலைமை என்ன ஆகி இருக்கும்? யாரு, என்னன்னு தெரியாத என்னையும், உன்னையும் காப்பாற்ற அவர் எவ்வளவு உதவி பண்ணி இருக்காரு? எந்த ஒரு துணையும் இல்லாமல் நான் நிர்க்கதியாக நின்ற நேரம் எதையுமே யோசிக்காமல் எனக்காக எவ்வளவு பெரிய உதவி பண்ணி இருக்காரு, என் உயிர் இருக்கும் வரைக்கும் அவர் செய்த உதவியை எல்லாம் நான் மறக்கவே மாட்டேன்” விஷ்வாவைப் பற்றி எண்ணி தனக்குள்ளே பேசிக் கொண்டிருந்த பூஜா இப்போது அவளையும் அறியாமல் சக்தியைப் பற்றி நினைத்துக் கொண்டு அமர்ந்திருக்க, காலம் அதன் விளையாட்டை சிறப்பாக ஆரம்பித்திருந்தது.

***************
அன்றோடு பூஜா கோயம்புத்தூருக்கு வந்து ஒரு வாரம் நிறைவு பெற்றிருந்தது.

இந்த ஒரு வாரத்திற்குள் ஹாஸ்டல் வாழ்க்கைக்கு தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டவள் தனக்கு எதுவும் தேவையிருந்தால் மாத்திரம் வெளியே கடைகளுக்கு சென்று விட்டு வருவாள்.

விஷ்வாவுடன் இருந்த நேரம் பூஜாவின் தேவைகளுக்கென அவன் தனியாக ஒரு வங்கிக் கணக்கை உருவாக்கியிருக்க, அதில் அவன் சேர்த்து வைத்திருந்த பணமே இப்போது அவளது வாழ்க்கை நாட்களைக் கடத்தும் ஒரு ஊன்றுகோலாக மாறியிருந்தது.

அன்று முதன்முதலாக வேலைக்குச் செல்லப் போகிறோம் என்கிற பரபரப்புடன் பூஜா தயாராகிக் கொண்டு நிற்க, மறுபுறம் சக்தி தன் வீட்டில் எப்போதும் போல தனது குறும்புத்தனத்தைக் காட்டியபடியே தனது கம்பெனி திறப்பு விழாவிற்காக தயாராகிக் கொண்டு நின்றான்.

தன்னுடைய பலநாள் கனவு இன்று நனவாகப் போகிறது என்கிற ஆவலுடன் சக்தி தன் புதிய கம்பெனியை நோக்கிப் பயணிக்க, அங்கே வேலைக்கென சேர்க்கப்பட்டிருந்த நபர்கள் எல்லாம் ஏற்கனவே அவனது வருகைக்காக காத்து நின்றனர்.

ஒரு சிறிய பூஜையுடன் அந்த கம்பெனியின் முதல் நாள் பணிகள் ஆரம்பித்து விட சக்தி மற்றும் அவனது குடும்ப உறுப்பினர்கள் அந்த கட்டடத்தின் ஒவ்வொரு பகுதியாக சென்று பார்த்துக் கொண்டு நின்றனர்.

இதற்கிடையில் பூஜா வரவேண்டிய பேருந்து சிறிது தாமதித்து விட்டதால் எல்லோரும் வேலைக்கு வந்து சேர்ந்த பின்னர் இருபது நிமிடங்கள் கழித்து அரக்கப் பறக்க ஓடி வந்தவள், “ஐயோ! முதல் நாளே வேலைக்கு லேட்டா வந்து இருக்கியே பூஜா. சக்தி சார் கண்ணில் பட முதல் நம்ம இடத்திற்கு போய் சேர்ந்துடணும், ஆனா நான் இருக்கப் போகும் இடம் எங்கே இருக்குன்னு தெரியலையே. யாருகிட்ட போய் கேட்பேன்” என்றவாறே தன் பார்வையை சுழல விட திடீரென ஒரு கரம் அவள் தோளைப் பிடித்தது.

‘அச்சச்சோ! லேட்டா வந்ததற்காக யாரும் கேள்வி கேட்கப் போறாங்களோ?’ தன் மனதிற்குள் எழுந்த படபடப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பூஜா தயங்கி தயங்கி திரும்பிப் பார்க்க, அங்கே அவளது வயதிலும் இரண்டு, மூன்று வருடங்கள் பெரியவள் போல ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள்.

“நீங்க?” பூஜாவின் கேள்வியான பார்வையில் புன்னகைத்துக் கொண்ட அந்த பெண்,

“நான் சுலோச்சனா. இங்கே தான் சைல்ட் டிரெஸ் செக்ஷனில் அக்கௌன்ட்டனாக சேர்ந்து இருக்கேன். நீங்க?” என்று கேட்டாள்.

“நானும் அக்கௌன்ட்டனாக தான் ஜாயின் பண்ணி இருக்கேன், ஆனா வேறு செக்ஷன் போல”

“அப்படியா? சரி, வாங்க. ஏன் இங்கேயே நிற்குறீங்க? பூஜை எல்லாம் முடிந்து எல்லோரும் அவங்க, அவங்க பிரிவுக்கு போயிட்டாங்க. வாங்க, நாமும் நம்ம இடத்திற்கு போகலாம். முதல் நாளே நமக்கு வேலை இருக்காது தான், இருந்தாலும் நம்ம வேலையில் என்னென்ன செய்யணும்னு நாம பார்க்கத் தானே வேணும்?” பல நாட்கள் பேசிப் பழகியது போல சுலோச்சனா இயல்பாக பூஜாவுடன் பேசிக் கொண்டே நடந்து செல்ல, அவளுக்கு தான் அந்த புதிய இடத்தில் ஒரே நாளில் ஒன்றிப் போக முடியவில்லை.

மூன்று மாடிகளைக் கொண்ட அந்த கட்டடத்தின் மேல் பகுதி அலுவலக வேலைகளுக்கு எனவும், கீழ்ப்பகுதிகள் இரண்டும் பொருட்களை உற்பத்தி செய்யும் பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டிருக்க, கீழ்த்தளத்தை முழுமையாக மேற்பார்வை செய்த சக்தி சிறிது நேரம் கழித்து மேல் தளத்திற்கு செல்ல, அங்கே அவனது விழிகளுக்குள் வந்து வீழ்ந்தது என்னவோ பூஜாவின் விம்பம் தான்.

ஆகாய நீல நிறத்தில் காட்டன் சுடிதார் அணிந்து, எந்தவிதமான ஒப்பனையும், ஆபரணமும் இல்லாமல் நெற்றியில் ஒரு சிறிய ஸ்டிக்கர் பொட்டு, அதற்கு மேல் கொஞ்சமாக விபூதி வைத்து நின்றவளைப் பார்க்கும் போது சக்தியின் மனம் அவளை இன்னமும் பார்த்துக் கொண்டே நிற்க வேண்டும் என்பது போல அவனைத் தூண்டியது.

சக்தியின் மனம் ஏதேதோ எண்ணங்களினால் அலை பாய்ந்து கொண்டிருந்த வேளை, “அண்ணா, என்ன இங்கேயே நிற்குற?” என்ற மீராவின் குரல் அவன் செவிகளை வந்து சேர,

சட்டென்று தன் பார்வையை பூஜாவை விட்டுத் திருப்பிக் கொண்டவன், “எல்லோரும் வேலைக்கு வந்தாச்சான்னு பார்த்தேன் ம்மா” என்று விட்டு அங்கிருந்து வேகமாக நடந்து சென்றான்.

“இப்போ நான் என்ன கேட்டுட்டேன்னு இவ்வளவு அவசரமாக ஓடுறான் இந்த சக்தி ண்ணா? ஏதோ சரியில்லை” தன் அண்ணனின் வித்தியாசமான நடவடிக்கைகளைப் பார்த்து சிந்தனை வயப்பட்டவளாக அவனைப் பின் தொடர்ந்து சென்ற மீரா அங்கே ஒரு மேஜையின் அருகில் நின்று கொண்டிருந்த பூஜாவைப் பார்த்ததும் சட்டென்று தன் நடையை நிறுத்திக் கொண்டாள்.

மீரா தன் பின்னால் தான் வருகிறாள் என்று எண்ணி ஏதோ பேசிக் கொண்டு சென்ற சக்தி வெகுநேரமாக அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லையே என்கிற யோசனையுடன் தன் பின்னால் திரும்பிப் பார்க்க, அங்கே அவள் பூஜா நின்று கொண்டிருந்த இடத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றாள்.

“இவ ஏன் பூஜாவை இப்படி பார்க்குறா? ஒருவேளை திருச்சியில் வைத்து மீரா பூஜா கூட பேசி இருப்பாளோ? ஏற்கனவே அவளுக்கு என் மேல் ரொம்ப சந்தேகம், இப்போ நான் திருச்சியில் பண்ண வேலை எல்லாம் தெரிந்தால் மீரா என்னை உண்டு, இல்லைன்னு பண்ணிடுவா. பூஜா கிட்ட போய் அவ ஏதாவது கேட்பதற்கு இடையே நாம போய் அவளைக் கூட்டிட்டு வந்துடலாம்” என்று எண்ணியபடியே வேக வேகமாக மீராவின் அருகில் சென்று நின்ற சக்தி,

அவளது தோளில் தட்டி, “இங்கே என்ன பார்க்கிற?” என்று கேட்டான்.

சக்தியின் கேள்வியில் பூஜாவின் புறமாக ஜாடை காட்டியவள், “அந்த பொண்ணு நம்ம ஊரா? இதற்கு முதல் இங்கே பார்த்த மாதிரி இல்லையே, ஆனாலும் அந்த முகத்தை எங்கேயோ பார்த்த மாதிரியும் இருக்கு” என்று கூற,

“இப்போ அந்த பொண்ணை பார்த்து இருக்கேன்னு சொல்லுறியா? இல்லை, பார்க்கலேன்னு சொல்லுறியா?” சக்தி சிறிது சலித்து கொண்டபடியே அவளைப் பார்த்து வினவினான்.

“அது தான் எனக்கும் புரியல சக்தி ண்ணா. வேணும்னா நான் போய் அவங்க கிட்ட பேசிட்டு வரவா?”

“ஆமா, உன் ஊர்க்கதை பேசத்தான் இவ்வளவு கஷ்டப்பட்டு நான் எல்லாம் செய்து இருக்கேன் பாரு. உன் சொந்தக்கதை, சோகக்கதை எல்லாம் அப்புறம் பேசலாம், இப்போ அவங்களை வேலையை செய்ய விடு” என்றவாறே சக்தி மீராவை அங்கிருந்து அழைத்துக் கொண்டு செல்லப் போக,

“குட் மார்னிங் சார்” என்ற பூஜாவின் குரல் கேட்டு அவனது பிடி மெல்ல தளர்ந்தது.

“ஆஹ், ஹான். குட் மார்னிங் பூஜா” என்றவாறே அவளின் புறம் திரும்பிய சக்தி தன் தங்கையை திரும்பிப் பார்க்க,

அவளோ, “ஏதோ இருக்கு” என்று அவனைப் பார்த்து ஜாடையில் கூறி விட்டு தங்கள் முன்னால் நின்று கொண்டிருந்த பூஜாவைப் பார்த்து சிறிது புன்னகைத்துக் கொண்டாள்.

“ரொம்ப நன்றி சக்தி சார். நீங்க மட்டும் சரியான நேரத்திற்கு வந்து உதவி பண்ணலேன்னா எனக்கு இப்படி ஒரு நல்ல வேலை கிடைத்தே இருக்காது. ரொம்ப ரொம்ப நன்றி சார். உங்களைப் போல நல்ல மனிதர்கள் இருப்பதால் தான் இன்னும் இந்த உலகத்தில் நல்ல விடயங்கள் எல்லாம் நடக்கிறது. உங்க நல்ல குணத்திற்கு நீங்க கண்டிப்பாக சந்தோஷமாக, நீங்க ஆசைப்பட்ட மாதிரியே ஒரு வாழ்க்கை கிடைத்து நிம்மதியாக இருக்கணும் சார்” பூஜா சக்தியைப் பார்த்து இயல்பாக புன்னகைத்துக் கொண்டே கூற, அவர்கள் அருகில் நின்று கொண்டிருந்த மீரா தன் அண்ணனைப் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டாள்.

தன் தங்கையின் பார்வை தன் புறம் இருப்பதை உணர்ந்து கொண்ட சக்தி சிறிது தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, “தாங்க்ஸ் எல்லாம் நான் எதிர்பார்க்கல பூஜா. உங்களுக்கு கொடுத்த வேலையை எந்த பிழையும் இல்லாமல் நீங்க செய்தால் அதுவே எனக்கு போதும்” என்றவன்,

தன் தங்கையின் முறைப்பில், “பை த வே, இது என் தங்கை இறா, சாரி, சாரி மீரா” என்றவாறே அவளிடம் ஒரு சில அடிகளையும் இலவசமாக வாங்கிக் கொண்டு நின்றான்.

“அண்ணா எப்போதும் இப்படித்தான்ங்க என் கிட்ட வம்பு பண்ணிக்கிட்டே இருப்பான், அதெல்லாம் நீங்க ஒண்ணும் தப்பாக எடுக்க வேண்டாம். என் பேரு இறா, ஐயோ! இவன் கூட சேர்ந்து எனக்கும் வாய் உளறுது பாருங்க. என்னோட பேரு மீரா” என்றவாறே மீரா தன் கையை பூஜாவின் புறம் நீட்ட,

சிறு புன்னகையுடன் அவளது கையைப் பற்றிக் கொண்ட பூஜா, “என்னோட பேரு பூஜா” என்று கூற,

தன் தங்கையின் கையை பூஜா கவனிக்காத விதமாக மெல்ல இழுத்து விலக்கி விட்ட சக்தி, “ஓகே பூஜா. யூ கேரி ஆன்” என்றவாறே மீராவை அந்த இடத்தில் இருந்து இழுக்காத குறையாக அழைத்துக் கொண்டு சென்றான்.

அத்தனை நேரம் ஏதோ ஒரு உள்ளுணர்வில் தன் அண்ணனின் மேல் சந்தேகம் கொண்டிருந்த மீரா இப்போது அவனது அனைத்து நடவடிக்கைகளையும் யோசித்துப் பார்த்து விட்டு, ‘பயபுள்ள ஏதோ கோல்மால் பண்ணுது. என்னன்னு நான் கண்டுபிடிக்கிறேன்’ என தனக்குள் சிந்தித்துக் கொண்டபடி அவனை அமைதியாகப் பின் தொடர்ந்து சென்றாள்…..

**********
இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது
நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
**********