இதயம் – 16

eiHJN6N67051-3d6ebae0

தாயின் அரவணைப்பில் பாதுகாப்பை உணரும் குழந்தை போல தன் நெஞ்சோடு ஒன்றி நின்று அவனது நெருக்கத்தில் தன் பாதுகாப்பை உணர்ந்து கொண்டவளைப் போல கண் மூடி நின்ற பூஜாவைப் பார்த்து சக்தி முதலில் அதிர்ச்சியாகி நின்றாலும் தாங்கள் இருக்கும் சூழல் மற்றும் அங்கே நின்று கொண்டிருந்த நபர்களைப் பார்த்து அந்த இடத்தில் என்ன நடந்திருக்கும் கூடும் என்பது அவனுக்கு சிறிது தெளிவாகத் தெரிந்தது.

தன் மேல் பசை போட்டு ஒட்டியது போல அச்சத்தில் நடுங்கிக் கொண்டு நின்ற பூஜாவின் முகத்தை நிமிர்த்தி அவளது கண்ணீர் தடத்தை துடைத்து விட்டவன் தன் முன்னால் நின்று கொண்டிருந்த நபர்களைப் பார்த்து, “யாரு நீங்க எல்லாம்? எதற்காக பூஜாவை துரத்தி வர்றீங்க? உங்களுக்கு இந்த இடத்தில் என்ன வேலை?” பயத்தில் நடுங்கிய தன் குரலை வெளிக்காட்டி விடக்கூடாது என்பது போல சிறிது அதட்டலாக தன் குரலை உயர்த்திக் கேட்க, அவனது அதட்டலான குரல் கேட்டு திடுக்கிட்டு போனவளாக அவனை நிமிர்ந்து பார்த்த பூஜா அவனது அணைப்பில் வெகு நெருக்கமாக தான் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை அப்போதுதான் உணர்ந்தாள்.

தான் நின்று கொண்டிருந்த நிலையைப் பார்த்து முகம் சிவக்க அவனை விட்டு விலகி நின்றவள் தன் முன்னால் ஆயுதங்கள் ஏந்தியபடி நின்று கொண்டிருந்த நபர்களைப் பார்த்து மீண்டும் அச்சம் தலைதூக்க சக்தியின் கையைப் பிடித்துக் கொண்டு அவனது முதுகின் பின்னால் மறைந்து கொள்ள, அங்கே நின்று கொண்டிருந்த அந்த அடியாட்களின் தலைவனின் பார்வை அவர்கள் இருவரையுமே ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு இருந்தது.

“என்ன தம்பி மனதில் என்ன பெரிய ஹீரோன்னு நினைப்பா? ஒழுங்கு மரியாதையாக இந்த இடத்தை விட்டுப் போயிடு. எங்க கையில் இருக்கிறது ஒண்ணும் டம்மி துப்பாக்கி இல்லை, நிஜத் துப்பாக்கி. ஒரே புல்லட் நேராக பரலோகம் தான். வேணும்னா சாம்பிள் காட்டவா?” அங்கே நின்று கொண்டிருந்த அடியாட்களில் ஒருவன் சக்தியைப் பார்த்து நக்கலாக சிரித்தபடியே தன் கையில் இருந்த துப்பாக்கியை வானை நோக்கி சுட, அதிலிருந்து பாய்ந்து சென்ற தோட்டாவின் சத்தத்தில் பூஜா சக்தியின் முதுகோடு மேலும் நெருங்கி நின்று கொண்டாள்.

“பூஜா உனக்கு எதுவும் ஆகாது. பயப்படாதே. நான் இருக்கேன்” தன் கையைப் பிடித்திருந்த பூஜாவின் கையில் ஆதரவாக அழுத்திக் கொடுத்த சக்தி சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “உங்களுக்கு என்ன தான் வேணும்? பூஜா என்ன தப்பு பண்ணான்னு நீங்க இப்படி எல்லாம் பண்ணுறீங்க?” என்று கேட்க, அந்த கூட்டத்தின் தலைவன் தன் அடியாட்களை விலக்கி கொண்டு சக்தியின் முன்னால் வந்து நின்று, “இதோ பாரு ஹீரோ, சாரி, சாரி தம்பி. எங்களுக்கு இந்த பொண்ணு மேலே எந்த கோபமும் இல்லை. எங்க கோபம் ஒரே ஒருத்தன், இவ புருஷன் மேலே தான். விஷ்வாவோட பொண்டாட்டி என்கிற ஒரே ஒரு தப்பு தான் இன்னைக்கு இவளை இங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கு. அது சரி, உனக்கு விஷ்வா யாருன்னு தெரியாது இல்லை. சொல்லுறேன் கேளு.
விஷ்வா திருச்சியில் இருந்த ஒரு பெரிய ரவுடி. சின்ன வயதில் பிழைப்பு தேடி திருச்சிக்கு வந்த பயல் சின்ன சின்ன தப்புகளாக செய்யத் தொடங்கி கடைசியில் எங்களுக்கே எதிரியாகி வந்துட்டான். அதோடு அவன் அடங்காமல் என் அண்ணன் குடும்பத்தை மொத்தமாக அழிச்சுட்டான். அதற்கு பழிக்குப்பழி வாங்காமல் விட்டால் எப்படி அவங்க ஆத்மா சாந்தி அடையும்? அதுதான் திருச்சியில் வைத்து ஒரு ஆறு மாதங்களுக்கு முன்னாடி இவ புருஷனைப் போட்டு தள்ளிட்டோம். அந்த நேரம் ஒரு சின்ன கவனச்சிதறல் இவ தப்பிச்சுப் போயிட்டா. ஆனாலும் நாங்க விடுவோமா? அவன் செய்த அதே பலனை அவனுக்கு கொடுக்கத் தானே வேணும்? அது தான் அவனோட பொண்டாட்டியையும் இப்போ அவன் போன இடத்திற்கே அனுப்பி வைக்கப் போறோம்.
அதற்கு அப்புறம் அவனோட மாமனார், மாமியார் அதுதான் இவளோட அம்மா, அப்பா அதுங்களையும் தேடிக் கண்டுபிடித்து மொத்தமாக குடும்பத்தோடு கைலாசம் அனுப்பிடுவோம். அதோட இந்த கணக்கு முடிந்து விடும் இல்லையா? அதற்காக தான் இது எல்லாம் நடந்துட்டு இருக்கு. இப்போ இதை எல்லாம் நான் எதற்காக உன் கிட்ட சொல்லுறேன் தெரியுமா? நாளைக்கு என் வழியில் நீ குறுக்கே வந்தாலும் உனக்கும், உன் குடும்பத்துக்கும் இந்த நிலைமை தான் வரும்ன்னு உனக்கு தெரிந்து இருக்கத்தானே வேணும். அந்த ஒரு காரணத்திற்காக மட்டும் தான் இதை எல்லாம் விலாவரியாக உன் கிட்ட சொல்லிட்டு நிற்கிறேன்” என்று கூறியபடியே பூஜாவை இழுக்கத் தன் கையை நீட்ட,

அவளை மேலும் தன்னால் முடிந்த மட்டும் மறைத்துக் கொண்டவன், “அதுதான் அந்த விஷ்வாவே இல்லைன்னு ஆகிடுச்சு. அதற்கு அப்புறமும் எதற்காக உங்களுக்கு இந்த பழி வாங்கும் எண்ணம்? அந்த விஷ்வாவோட மனைவியாக இருந்தா என்கிற ஒரு காரணத்திற்காக இவ உயிரை வாங்கணுமா? விஷ்வாவே இல்லைன்னு ஆன பிறகு மனைவி, மாமனார், மாமியார் எல்லாம் மட்டும் இருக்குமா?” என்று கேட்க, அந்த நபர் தன் கைகளைக் கட்டிக் கொண்டு அவனை அமைதியாகப் பார்த்துக் கொண்டு நின்றான்.

“தம்பி கேட்கும் கேள்வியிலேயும் லாஜிக் இருக்குது தான். இல்லையா டா?” தன் பின்னால் நின்று கொண்டிருந்த அடியாட்களைப் பார்த்து அந்த நபர் கேட்க,

அவர்களும் அந்த நபரைப் பார்த்து, “ஆமாண்ணே. தம்பி சொல்றதும் நல்ல பாயிண்ட் தான்” என்று கூறினர்.

“அப்போ இவளை இப்படியே விட்டுடலாமா?” அந்த நபரின் அதட்டலான கேள்வியில் அந்த அடியாட்கள் தன் தலையைக் குனிந்து கொள்ள,

மீண்டும் சக்தியின் புறம் திரும்பிய அந்த நபர், “நீ சொல்றதை எல்லாம் கேட்டு இப்போ இவளை நான் விட்டுட்டு போறேன்னு வை, நாளைக்கு எனக்கு எதிரியான ஒருத்தனை தன் புருஷன் பேரைச் சொல்லி எனக்கு எதிராக இவ அனுப்பி விட மாட்டான்னு என்ன நிச்சயம்? இவ புருஷனைக் கொன்றதற்காக என்னைப் பழி வாங்க இவ என்ன வேணும்னாலும் செய்வா, ஏன்னா என்ன இருந்தாலும் இப்போ வரைக்கும் இவ அந்த விஷ்வாவோட பொண்டாட்டி தானே?” என்று கேட்க,

“இல்லை, இல்லை சார். நான் எப்படி எல்லாம் எதுவும் பண்ண மாட்டேன். விஷ்வாவே என் கூட இல்லை. அப்படி இருக்கும் போது நான் எதற்காக இதெல்லாம் பண்ணணும்? இதெல்லாம் பண்ணால் விஷ்வா திரும்பி வரப்போறது இல்லையே. சத்தியமாக உங்க வழியில் நான் வரவே மாட்டேன் சார்” சக்தியின் பின்னால் இருந்த பூஜா நடுங்கியபடியே தன் குரலை மட்டும் வெளிப்படுத்த, அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டே அந்த நபர் சிறிது நேரம் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு நின்றான்.

“அண்ணே, என்னண்ணே யோசிச்சுட்டு இருக்கீங்க? இவங்க வெட்டிப் பேச்சு எல்லாம் கேட்காமல் இரண்டு பேரையும் போட்டுத் தள்ளிடுங்கண்ணே. விஷயம் முடிந்துடும்” அங்கே நின்று கொண்டிருந்த அடியார்களில் ஒருவன் தன் தலைவனைப் பார்த்துக்கூற,

அந்த நபரைப் பார்த்து சிரித்துக் கொண்டபடியே சக்தியின் அருகில் வந்து நின்றவன் தன் கையிலிருந்த துப்பாக்கியை சக்தியின் நெற்றியை நோக்கி நீட்ட, “ஐயோ வேண்டாம்!” அவனின் முதுகின் பின்னால் மறைந்து நின்ற பூஜா அவசரமாக சக்தியின் முன்னால் வந்து நின்று கொண்டு அந்த நபரைப் பார்த்து கண்ணீர் மல்க தன் இரு கரம் கூப்பி நின்றாள்.

“தயவுசெய்து அவரை எதுவும் பண்ணிடாதீங்க. உங்களுக்கு என் உயிர் தானே வேணும்? என்னை என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க, அவரை எதுவும் பண்ண வேண்டாம். ப்ளீஸ், ப்ளீஸ்” தன் கண்களிலிருந்து இருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிய அந்த நபரைப் பார்த்து கெஞ்சலாக சக்தியைக் காப்பாற்ற வேண்டி கதறியழுபவளைப் பார்த்து சக்தியின் கண்களும் சட்டென்று கலங்கிப் போனது.

‘மனதில் இவ்வளவு பாசத்தை வைத்துக் கொண்டு எதற்காக என்னை வெறுப்பது போல நடிக்கிற பூஜா?’ தன் மனதிற்குள் எழுந்த கேள்வியை இப்போது கேட்க முடியாது என்று உணர்ந்து கொண்ட சக்தி அந்த இடத்தில் இருந்து எப்படி பூஜாவைக் காப்பாற்றி அழைத்து செல்வது என்று அவசர அவசரமாக யோசிக்க ஆரம்பித்தான்.

அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த அடியாட்களும், அவர்களின் தலைவனும் பூஜாவைக் கொன்றே ஆகவேண்டும் என்ற முனைப்போடு நிற்பதைப் பார்த்து அவனுக்கு மனதிற்குள் பெருமளவு அச்சம் இருந்தாலும் தன் பயத்தை எந்த நிலையிலும் வெளிக்காட்டிக் கொள்ளக்கூடாது என்று நினைத்துக் கொண்டவன் பூஜாவை தன் பக்கப்புறமாக இழுத்து நிறுத்தி விட்டு அந்த அடியாட்களின் தலைவனின் முன்னால் சென்று நின்று கொண்டான்.

“நீங்க என்ன சொன்னீங்க? பூஜா அந்த விஷ்வாவோட மனைவியாக இருந்தா என்கிற ஒரு காரணத்திற்காக மட்டும் தான் பூஜாவை கொலை பண்ணணும்னு இருப்பதாக சொன்னீங்க. அப்படித்தானே?”

“ஏன் உனக்கு என்ன காது கேட்காதா? எத்தனை தடவை சொல்றது? இவ விஷ்வாவோட பொண்டாட்டி, அந்த ஒரு தப்பு தான் இவளை இன்னைக்கு காவு வாங்கப் போகிறது”

“ஓகே, ஓகே. நீங்க சொல்றது எனக்குப் புரியுது, ஆனா இப்போ இவ விஷ்வாவோட மனைவியாக இல்லையே” சக்தியின் கூற்றில் அந்த நபர் மட்டுமின்றி பூஜாவும் அவனை குழப்பமாக திரும்பிப் பார்க்க,

தன் கண்களை மூடி தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அந்த நபரைப் பார்த்தவன் பூஜாவின் தோளில் தன் கையைப் போட்டு தன் தோளோடு சேர்த்து அணைத்தபடி, “பூஜா நான் காதலிக்கும் பொண்ணு. இவ என்னோட வருங்கால மனைவி. இன்னும் இரண்டு வாரத்தில் எனக்கும், பூஜாவுக்கும் கல்யாணம் ஆகப் போகிறது” என்று கூற, அவனது கை வளைவில் நின்று கொண்டிருந்த பூஜா தன் விழிகள் இரண்டும் வெளியே தெறித்து விழுந்து விடும் அளவுக்கு அதிர்ச்சியோடு அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

“ஏய்! என்ன எங்களைப் பூச்சாண்டி காட்டுறியா? நீ என்ன சொன்னாலும் நாங்க நம்பிடுவோம்ன்னு நினைக்குறியா என்ன?” அந்த அடியாட்களில் ஒருவன் சக்தியைப் பார்த்து தன் குரலை உயர்த்த,

அந்த நபரைப் பார்த்து, ‘போதும்’ என்பது போல தன் கையைக் காட்டியவன், “இன்னைக்கு நீங்க எப்படியும் பூஜாவைப் பின் தொடர்ந்து வந்து தானே இருப்பீங்க. அப்போ இன்னைக்கு ஆபிஸ் முடிந்து வரும் போது நானும், பூஜாவும் தனியாகப் பேசிட்டு இருந்ததை நீங்க யாரும் பார்க்கவே இல்லையா?” கேள்வியாக அவர்களைப் பார்த்து தன் புருவம் உயர்த்த அந்த அடியாட்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.

“ஆமாண்ணே. இந்த ஆளு சொல்ற மாதிரி இரண்டு, மூணு தடவை இந்த பொண்ணைப் பின் தொடர்ந்து போகும் போது இவங்க இரண்டு பேரும் அடிக்கடி ரொம்ப நெருக்கமாக பேசிட்டு இருந்து இருக்காங்க அண்ணே” என்றவாறே பூஜாவைப் பின் தொடர்ந்து சென்ற நபர்களில் ஒருவன் தன் தலைவனின் காதில் ரகசியமாக கூறுவது போல கூற, அந்த நபர் கூறியது சக்தியின் காதுகளிலும் தெளிவாக விழுந்தது.

“அதோடு யாரோ ஒரு பொண்ணு இப்படி ஒரு சூழ்நிலையில் இருந்தால் நான் எதற்கு இங்கே வரணும்? நான் கட்டிக்கப் போற பொண்ணுக்கு ஒரு பிரச்சினைன்னு வந்ததால் தான் நான் இங்கே வந்து நிற்கிறேன். வேணும்னா உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் இன்னும் இரண்டு நாளில் எங்க கல்யாணப் பத்திரிகை வந்ததற்கு அப்புறம் வந்து பாருங்க. நான் சொன்னது உண்மையா? இல்லையான்னு உங்களுக்கே தெரியும்”

“என்ன உன் மனதில் ரொம்ப புத்திசாலின்னு நினைப்பா? நீ ஏதாவது கதை சொல்லுவ, அதை நான் நம்பணுமா? ஊரில் இருக்கும் எல்லோரையும் ஏமாற்றும் ஆளு நான், எனக்கே காது குத்தப் பார்க்குறியா?” அந்த கூட்டத்தின் தலைவன் சக்தியின் நெற்றியில் தன் துப்பாக்கியை வைத்து அழுத்தப் பார்க்க,

தன் மொத்த பலத்தையும் கொண்டு அந்த நபரின் கையை தட்டி விட்டவன், “பூஜா, சீக்கிரமாக வா” என்றவாறே பூஜாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அந்த இடத்தில் இருந்த பழைய கோயில் கட்டடத்தை நோக்கி ஓடிச் சென்று அங்கிருந்த தூண் ஒன்றின் பின்னால் மறைந்து நின்று கொண்டனர்.

அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தன் பார்வையை சுற்றிலும் சுழலவிட்ட சக்தியின் மனதிற்குள், ‘நீ சொல்றதை எல்லாம் கேட்டு இப்போ இவளை நான் விட்டுட்டு போறேன்னு வை, நாளைக்கு எனக்கு எதிரியான ஒருத்தனை தன் புருஷன் பேரைச் சொல்லி எனக்கு எதிராக இவ அனுப்பி விட மாட்டான்னு என்ன நிச்சயம்? இவ புருஷனைக் கொன்றதற்காக என்னைப் பழி வாங்க இவ என்ன வேணும்னாலும் செய்வா, ஏன்னா என்ன இருந்தாலும் இப்போ வரைக்கும் இவ அந்த விஷ்வாவோட பொண்டாட்டி தானே?’ என்று அந்த அடியாட்களின் தலைவன் சொன்ன விடயமே மீண்டும் மீண்டும் எதிரொலிப்பது போல இருக்க, தன் கண்களை இறுக மூடி ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து விட்டுக் கொண்டவன் தாங்கள் மறைந்திருந்த தூணில் இருந்து வெளியே வந்து அந்த கோவில் சந்நிதானத்தில் நின்று கொண்டான்.

“பூஜா நீ என்னை நம்புற தானே? உனக்கு எந்த ஆபத்தும் வராமல் நான் பாரத்துக் கொள்ளுவேன்னு நீ நம்புற தானே?” சக்தி சிறிது தயங்கியபடியே பூஜாவைப் பார்த்து வினவ,

அவனைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவள், “இப்போதைக்கு எனக்கு இந்த உலகத்தில் நம்பகமான ஒரே ஆளு நீங்க தான் சக்தி, ஆனா இந்த பிரச்சினையில் உங்களுக்கு எதுவும் ஆகி விடக்கூடாது. எனக்கு இப்படித்தான் எல்லாம் நடக்கணும்னு இருக்கு போல, அதனால நீங்க இங்க இருந்து போயிடுங்க” என்று கூற,

அவளை முறைத்துப் பார்த்தவன், “உன்னை இப்படி பலி கொடுக்கவா அன்னைக்கு அவ்வளவு கஷ்டப்பட்டு காப்பாற்றினேன்?” என்றவாறே அவளை சிறு கண்டிப்புடன் நோக்கினான்.

“ஆனா சக்தி அந்த ரவுடிங்க…”

“உஸ்ஸ்ஸ்ஸ்ஸ். உனக்கு என் மேல் நம்பிக்கை இருக்கா? இல்லையா? அதை மட்டும் சொல்லு”

“நிறையவே இருக்கு. நான் என்னை விட உங்களைத் தான் அதிகமாக நம்புகிறேன்”

“அப்போ நான் எது பண்ணாலும் உன் நன்மைக்காகத் தான் பண்ணுவேன்னு நீ நம்புறியா?” சக்தியின் கேள்வியில் கண்கள் கலங்க அவனை நிமிர்ந்து பார்த்தவள் ஆமோதிப்பாக தலையசைக்க, சிறிது நேரம் அந்த இடத்தை சுற்றிலும் பார்வையிட்டவன், ‘இப்போ நான் செய்யப் போகும் காரியம் சரியா? தவறா? எனக்குத் தெரியாது, ஆனா நிச்சயமாக பூஜா உயிருக்கு எந்த ஆபத்தும் வரவிடமாட்டேன்’ என தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டபடியே அவளை நிமிர்ந்து பார்த்தான்.

அந்த கோவில் சந்நிதானத்தில் இருந்த கடவுளை வணங்குவது போல தன் இரு கரம் கூப்பி நின்றவன் அப்படியே பூஜாவின் புறம் திரும்பி அவளிடம் மன்னிப்பு யாசிப்பது போல நின்று விட்டு அந்த அடியாட்களும், அவர்களது தலைவனும் அவர்களைத் தேடி வரும் சத்தம் கேட்பதைப் புரிந்து கொண்டு தன் மனதிற்குள் நினைத்த செயலை அவள் சற்றும் எதிர்பாராத தருணத்தில் அவசர அவசரமாக செய்து முடித்திருந்தான்.

சக்தியின் நடவடிக்கைகளைப் பார்த்து பூஜா அங்கே என்ன நடக்கிறது என்று உணர்ந்து கொள்வதற்கு முதலே அந்த கோவிலின் முன்னால் திரிசூலத்தில் கட்டப்பட்டிருந்த தாலியில் ஒன்றை எடுத்து அவளது கழுத்தில் மூன்று முடிச்சுகளை இட்டவன் அவளைத் தன் மனைவியாக்கி கொண்டான்.

சக்தி செய்த செயலைப் பார்த்து பூஜா தன் உயிரே நின்று விட்டதைப் போல தன் கழுத்தில் கிடந்த தாலியை வெறித்துப் பார்த்தபடி நிற்க, அவளை மேலும் அதிர்ச்சியாக்குவது போல அந்த கோவிலின் மேடைப் பகுதியில் இருந்த குங்குமத்தை எடுத்து அவள் நெற்றி வகிட்டிலும், தாலியிலும் வைத்து விட்டவன் அவளை நேர் கொண்டு பார்க்க துணிவின்றி வேறு புறமாக திரும்பி நின்று தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டான்.

ஒரு சில நிமிடங்களுக்குள் எல்லாம் நடந்து முடிந்திருக்க, அவர்களை விரட்டிக் கொண்டே தேடி வந்த அந்த அடியாட்களின் தலைவனும், அடியாட்களும் அவர்கள் இருவரையும் அதிர்ச்சியாக மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நின்றனர்.

“இப்போ நம்புறியா? பூஜா என்னோட மனைவி. நீ கொன்று போட்ட விஷ்வாவோட மனைவி இல்லை. விஷ்வாவுக்கும், பூஜாவுக்கும் இருந்த எல்லாக் கணக்கும் முடிந்து போய் விட்டது. இப்போ இவ என்னோட மனைவி. மிஸஸ். பூஜா சக்தி பிரகாஷ்” பூஜாவை தன் தோளோடு சேர்த்து அணைத்தபடி அந்த நபர்களைப் பார்த்து சிறிதும் அச்சமற்றவனாக சக்தி நின்று கொண்டிருக்க, பூஜாவிற்கோ அங்கே நடப்பவற்றை எல்லாம் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

ஏதோ கனவுலகில் இருப்பவளைப் போல இமைக்க மறந்து நின்று கொண்டிருந்த பூஜாவைப் பார்த்து சக்திக்கு மனதிற்குள் ஏதோ ஒரு பெரிய பாறாங்கல்லை வைத்து அழுத்துவது போல இருந்தாலும் தங்கள் பிரச்சினையைப் பற்றி பிறகு தெளிவாகப் பேசி புரிந்து கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டவன் அவளது தோளில் இருந்த தன் கையை விலக்கி கொண்டு அந்த கூட்டத்தின் தலைவனின் முன்னால் வந்து நின்றான்.

“நீ எந்த காரணத்திற்காக பூஜாவைத் தேடி வந்தாயோ அந்த காரணம் இப்போ இல்லை. என்னுடைய மனைவி மீது உங்க யாரோட நிழல் விழுந்தால் கூட உங்க எல்லோரையும் ஒட்டுமொத்தமாக துவம்சம் பண்ணிடுவேன். இனி எங்க வழியில் யாரும் வரக்கூடாது, விஷ்வாவோட உன் பகை எப்போவோ முடிந்து போய் விட்டது. இப்போ இந்த இடத்தில் இருப்பது என்னுடைய மனைவி. அதனால ஒழுங்கு மரியாதையாக எல்லோரும் இங்கே இருந்து கிளம்பி போயிடுங்க” சக்தி பயத்தில் நடுங்கிய தன் கால்களை பிறர் கவனித்து விடக்கூடாது என்பதற்காக தன் ஒரு கையால் கம்பீரமாக பிடித்துக் கொண்டு நிற்பது போன்ற பாவனையோடு நின்று கொண்டு அவர்கள் எல்லோரையும் பார்த்து தன் விரல் நீட்டி எச்சரிக்கை செய்ய, அந்த கூட்டத்தின் தலைவன் கோபத்தில் முகம் சிவக்க சக்தியை முறைத்துப் பார்த்துக் கொண்டு நின்றான்.

“உனக்கு என்ன ரொம்ப புத்திசாலித்தனமாக நடந்து கொள்வதாக நினைப்பா? நீ இப்படி எல்லாம் எங்க முன்னாடி நாடகம் நடித்தால் நான் நம்பி விடுவேனா?”

“யாரு நாடகம் பண்ணா? பூஜா கழுத்தில் அந்த கடவுள் சாட்சியாக மூணு முடிச்சு போட்டு இருக்கேன், இனி எக்காரணத்தைக் கொண்டும் அவளை விட்டு நான் பிரியவே மாட்டேன், என்னை விட்டு அவளைப் பிரிந்து போகவும் விடமாட்டேன். என் உடம்பில் உயிர் இருக்கும் வரைக்கும் பூஜா தான் என்னோட மனைவி, இந்த சக்தி தான் அவளோட கணவன். மறுபடியும் தேவையில்லாத காரணத்தை எல்லாம் சொல்லிக் கொண்டு எங்களைத் தேடி வர்ற வேலையை வைத்துக் கொள்ளாதே” அந்த நபரைப் பார்த்து மிரட்டும் தொனியில் சக்தி பேசிக் கொண்டு நிற்கையில், திடீரென அந்த இடத்தில் சைரன் ஒலி கேட்க, அங்கே நின்று கொண்டிருந்த அந்த அடியாட்களும், அந்த அடியார்களின் தலைவனும் பதட்டத்துடன் அவசர அவசரமாக தங்கள் வாகனத்தை நோக்கி ஓடிச் சென்று ஏறி அமர்ந்து கொண்டனர்.

“டேய் போலீஸ் வந்துடப் போறாங்கடா, சீக்கிரமாக வண்டியை எடுடா” தன் அருகில் இருந்த நபரின் தோளில் அடித்தபடியே கூறிய அந்த கூட்டத்தின் தலைவன்,

சக்தி மற்றும் பூஜா நின்று கொண்டிருந்த புறமாகத் திரும்பி, “ஏய் பொடிப்பையா, இன்னைக்கு நீ அவளை எங்க கிட்ட இருந்து உன் கையால் தாலி கட்டி காப்பாற்றிட்டதாக நினைத்து ரொம்ப சந்தோஷப்படாதே. அவ அந்த விஷ்வாவோட பொண்டாட்டி, எப்போ வேணும்னாலும் உன் காலை வாரி விட்டு போயிட்டே இருப்பா. ஒருவேளை அவ அப்படி செய்யாமல் நீ இன்னைக்கு சொன்னது, செய்தது எல்லாம் பொய்ன்னு எனக்குத் தெரிய வருதுன்னு வை, அடுத்த நிமிஷம் அவளையும், அவ அம்மா, அப்பாவையும் மொத்தமாக காலி பண்ணிடுவேன். அதற்கு எல்லாம் முன்னாடி உன் உயிரையும் எடுத்துடுவேன். ஜாக்கிரதை” அவனைப் பார்த்து சத்தமிட்டு கத்தியபடியே தங்கள் வாகனத்தில் புறப்பட்டுச் சென்று விட, அப்போதுதான் அவனுக்கு நிம்மதியாக மூச்சே வெளிவந்தது.

ஏதோ ஒரு அவசரத்தில் தான் எடுத்த முடிவு பூஜாவின் உயிரைக் காப்பாற்றி விட்டது என்ற திருப்தி சக்தியின் மனதிற்குள் இருந்தாலும் இந்த முடிவை அவள் எப்படி எடுத்துக் கொள்ளக் கூடும் என்பதை இப்போது வரை அவனால் யூகித்துக் கொள்ளவே முடியவில்லை.

அந்த இடத்தில் மாலை மங்கி நிலவின் பவனி ஆரம்பித்திருக்க, தான் கட்டிய மஞ்சள் கயிற்றை தன் கையில் பிடித்தபடி சிலை போல நின்று கொண்டிருந்த பூஜாவைப் பார்க்க பார்க்க சக்திக்கு சொல்லிலடங்கா வேதனை தான் ஏற்பட்டது.

இன்னும் சிறிது நேரத்தில் அந்த இடம் முற்றிலும் இருட்டாகிப் போய் விடும் என்று புரிந்து கொண்ட சக்தி பூஜாவின் புறம் திரும்பி, “பூஜா” என்று அழைக்க, இயந்திரம் போல அவனைத் திரும்பிப் பார்த்தவள் எதுவும் பேசாமல் அந்த இடத்தை விட்டு வேகமாக நடந்து செல்லத் தொடங்கினாள்.

“பூஜா, பூஜா ப்ளீஸ் நில்லு. நான் வேணும்னே எதுவும் பண்ணல பூஜா. உன் உயிரை எப்படியாவது காப்பாற்றியே ஆகணும்னு தோணுச்சு. அதுதான் இப்படி பண்ணேன். நான் எது பண்ணாலும் உன் நன்மைக்காகத் தான் பண்ணுவேன்னு நீ நம்புறியான்னு கேட்டுத் தானே நான் பண்ணேன்?”

“அதற்கு இது ஒண்ணு தான் வழியா? கிடைத்த சந்தர்ப்பத்தை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திட்டேன்னு சொல்லுங்க, வேறு வழி இல்லாமல் பண்ணேன்னு மட்டும் பொய் சொல்ல வேண்டாம்”

“சரி. நீ எப்படி வேணும்னாலும் நினைச்சுக்கோ. எனக்கு உன் உயிர் முக்கியம், அதோடு உங்க அம்மா, அப்பா உயிரையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு” சக்தியின் கூற்றில் அந்த ரவுடிக் கும்பல் தன் அம்மா, அப்பாவையும் கொல்லப் போவதாக கூறியிருந்தது அவளுக்கு நினைவு வர,

சட்டென்று தன் நடையை நிறுத்தி விட்டு சக்தியின் முன்னால் வந்து நின்றவள், “என் அம்மாவும், அப்பாவும் எங்கே? அவங்களுக்கு என்ன ஆச்சு? நான் இப்போவே அவங்களைப் பார்க்கணும், நான் இப்போவே அவங்களைப் பார்க்கணும். நான் உடனே திருச்சிக்கு போகணும். ப்ளீஸ் சக்தி, ப்ளீஸ். என்னை எங்க அம்மா, அப்பா கிட்ட கூட்டிட்டு போங்க” அவனைப் பார்த்து தன் இரு கரத்தை எடுத்து கும்பிடப் போக, அவசரமாக அவளது கையை எட்டிப் பிடித்து, ‘வேண்டாம்’ என்பது போல தலையசைத்தவன் அவளது கையை விடாமலேயே அவளை அவளது ஹாஸ்டல் வாயில் வரை அழைத்துச் சென்றான்.

“இப்போ எதையும் பொறுமையாக கேட்கும் மனநிலையில் நீ இல்லை பூஜா. நான் நாளைக்கு காலையில் வந்து உன்னை என்… நம்ம வீட்டுக்கு அழைச்சுட்டு போறேன். அதற்கிடையில் நீ உன் பொருட்களை எல்லாம் பேக் பண்ணி வை. காலையில் நான் என் அம்மா, அப்பாவோடு வந்து உன்னை அழைச்சுட்டு போறேன். இந்த நேரத்தில் திடீரென அவங்க முன்னால் நாம இப்படி போய் நின்றால் உன்னைத் தான் நிறைய பேரு தப்பாக பேசப் பார்ப்பாங்க. எனக்கு என்ன கெட்ட பேரு வந்தாலும் பரவாயில்லை, ஆனா உன்னை யாரும் தப்பாக பேசி விடக்கூடாது. நம்ம கல்யாணம் தான் முறைப்படி பெரியவங்க ஆசிர்வாதத்தோடு நடக்கல. இனி வரப்போகும் நாட்களாவது பெரியவங்க ஆசிர்வாதத்தோடு முறைப்படி நடக்கட்டும். நீ போய் எல்லாம் ரெடி பண்ணு. நான் நாளைக்கு காலையில் நேரத்திற்கே உன்னை அழைச்சுட்டு போக வந்துடுவேன்” என்றவாறே சக்தி பூஜாவை உள்ளே செல்லும் படி அனுப்பி வைக்க, அவளோ அவனது முகத்தையே தவிப்போடு பார்த்துக் கொண்டு நின்றாள்.

அவளது தவிப்பிற்கான காரணத்தை புரிந்து கொண்ட சக்தி அவளருகில் வந்து அவளது கையை எடுத்து தன் இரு கைகளுக்கு நடுவிலும் பிடித்துக் கொண்டு, “நீ மட்டும் இல்லை, உன் அம்மாவும், அப்பாவும் எப்போதும் என் பொறுப்பு. எப்படி உன் உயிரைக் காப்பாற்ற நான் இவ்வளவு தூரம் போராடுறேனோ அதே அளவுக்கு தான் அவங்களையும் பாதுகாக்க நினைப்பேன். நான் உயிரோடு இருக்கும் வரைக்கும் உன் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் எதுவும் ஆக விடமாட்டேன். மீதி எல்லா விவரங்களையும் நாளைக்கு காலையில் பேசலாம். இப்போ நீ உள்ளே போ. அதோடு நான் வேறு என் வீட்டுக்கு போய் அங்கே உள்ளவங்களை எல்லாம் என் வழிக்கு கொண்டு வரணுமே” என்று கூற, அவளோ அவனை சிறிது கோபத்துடன் முறைப்பது போல பார்த்து விட்டு ஹாஸ்டலை நோக்கி நடந்து செல்ல, அவள் சென்று விட்டாள் என்பதை உறுதி செய்து விட்டே சக்தியும் அந்த இடத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றான்……..

**********
கொட்டும் மழையினில் காதலி
போனால் குடைபோல
செல்வன் கூட திருவடி
நடக்கையில் வலித்தாலே
தோளில் தாங்குவான்
வண்ண கூந்தலில்
காதலி சூட உயிர் பூவை
கேட்டால் கூட எடுத்துக்கொள்
பறித்துக்கொள் உயிர் தோழி
என்றே கூறுவான்
**********