இதயம் – 18

eiHJN6N67051-ccf4a824

காலை விடியலை வெகு நேரமாக காத்திருந்து அதை அடைந்து விட்ட திருப்தியோடு தன் தூக்கத்தில் இருந்து எழுந்து அமர்ந்து கொண்ட சக்தி மனம் முழுவதும் நிறைந்த உற்சாகத்துடன் வேகமாக தயாராகி தன்னறையில் இருந்து வெளியறி செல்ல, அவனது வருகைக்காக ஹாலில் காத்து நின்ற மீரா அவனது அந்த உற்சாகத்தைப் பார்த்து நக்கலாக சிரிக்க, அவனோ அதை எல்லாம் கண்டு கொள்ளாதது போல பூஜா தங்கியிருக்கும் ஹாஸ்டலை நோக்கி வெகு ஆவலுடன் தன் பெற்றோர் மற்றும் மீராவுடன் இணைந்து புறப்பட்டுச் சென்றான்.

வெற்றி மற்றும் மலர்விழி குழந்தைகளுடன் வீட்டிலிருந்து ஏனைய வேலைகளைக் கவனிப்பதாக சொல்லியிருக்க, சக்தியும் தன் அண்ணன் மற்றும் அண்ணி தன் பெற்றோரைப் போல முழு மனதுடன் நடந்தவற்றை எல்லாம் முழுமையாக ஏற்றுக் கொண்டனர் என்று நம்பியிருந்தான்.

ஆனால் உண்மையில் மலர்விழி இந்த திருமணத்தை முழுமையாக மனதார ஏற்றுக் கொண்டாளா? இல்லையா? என்பது நாளடைவிலேயே எல்லோருக்கும் தெரிய வரும்.

பூஜா தங்கியிருக்கும் ஹாஸ்டல் செல்லும் வழி முழுவதும் சக்தியின் மனம் அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்க, இனி தன் வாழ்நாள் முழுவதும் அவளோடு தான் எனும் அளவில்லாத ஆனந்தம் நிறைந்த மனதுடன் அந்த ஹாஸ்டல் வாயிலில் தன் காரை நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கி நின்றவன் தன் தொலைபேசியை எடுத்து பூஜாவிற்கு அழைப்பை மேற்கொண்டான்.

பூஜா அழைப்பை எடுத்ததும் தன் அன்னையையும், மீராவையும் அவளோடு அனுப்பி வைத்து அவளை சிறிது சமாதானம் செய்து விட்டு அதன் பிறகு அவளது உடைமைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்படலாம் என்று அவன் நினைத்திருக்க, அவன் நினைப்புக்கு மாறாக பூஜா அவனது அழைப்பை எடுக்கவே இல்லை.

இரண்டு, மூன்று, நான்கு முறைகள் என சக்தி தொடர்ந்து பூஜாவின் எண்ணிற்கு அழைப்பை விடாமல் எடுத்துக் கொண்டேயிருக்க, அவனது பொறுமையை சோதிப்பது போல அவளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

நேரம் வேறு வேகமாக நகர்ந்து சென்று கொண்டேயிருக்க, அவன் அந்த இடத்தை வந்து சேர்ந்து முப்பது நிமிடங்கள் கடந்திருந்தது.

சக்தியின் பதட்டம் நிறைந்த தோற்றத்தைப் பார்த்து காரிலிருந்து இறங்கி வந்த சண்முக பிரகாஷ், “என்னாச்சு சக்தி? பூஜா போனை எடுக்கவில்லையா?” என்று கேட்க,

அவரைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவன், “இல்லைப்பா. இங்கே வந்து இறங்கிய நேரத்தில் இருந்து அவ போனுக்கு ட்ரை பண்ணுறேன். ஒரு தடவை கூட எடுக்க மாட்டேங்குறா. என் மேல் இருக்கும் கோபத்தில் இப்படி எல்லாம் செய்யுறாளா? தெரியலை” எனவும்,

“கண்டிப்பாக அது தான் காரணமாக இருக்கும்” என்றவாறே மீரா அவனின் முன்னால் வந்து நின்று கொண்டாள்.

“மீரா, தேவையில்லாமல் கடுப்பாக்காதே”

“இப்போ எதற்கு நீ இவ்வளவு கோபப்படுற? பூஜா உன் போனை அட்டன்ட் பண்ணலேன்னா என்ன நான் போன் பண்ணுறேன், இரு” சக்தியைப் பார்த்து பொறுமையாக இருக்கும் படி சைகை காட்டி விட்டு மீரா தன் தொலைபேசியை எடுத்து பூஜாவிற்கு அழைப்பை மேற்கொள்ள அப்போதும் அவளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

“என் போனையும் அவங்க எடுக்கலையே” மீரா கவலையுடன் சக்தியை நிமிர்ந்து பார்க்க,

சிறிது நேரம் தன் தலையைக் கோதிவிட்ட படி அமைதியாக நின்றவன் பின்னர் சட்டென்று ஏதோ நினைவு வந்தவனாக, “ஒரு வேளை அந்த ரவுடி கும்பல் மறுபடியும் வந்து இருப்பாங்களோ?” பதட்டத்துடன் தன் தந்தையைப் பார்த்து கேட்டு விட்டு அவரது பதிலைக் கூட எதிர்பாராமல் வேகமாக ஹாஸ்டல் வார்டன் அறையை நோக்கி ஓடிச் செல்ல, மீராவும் அவனைப் பின் தொடர்ந்து ஓடிச் சென்றாள்.

சக்தியை அந்த ஹாஸ்டல் வார்டனிற்கு ஏற்கனவே நன்றாகத் தெரியும் என்பதோடு, பூஜாவை அழைத்து வந்ததற்கு பிறகும், அதற்கு முதல் அவன் கோயமுத்தூரில் இருந்த போதும், கடந்த ஐந்து வருடங்களாக இங்கே இல்லாத போதும் அந்த இடத்திற்கு அவன் பல உதவிகளை செய்து இருக்கிறான் என்கிற நன்றி கலந்த மரியாதை உணர்வும் ஒன்று சேர, அவனை அந்த இடத்தில் பார்த்த திருப்தியில் முகம் நிறைந்த புன்னகையுடன் அவனைப் பார்த்தவர், “சக்தி, வாங்க, வாங்க. என்ன திடீர்னு இந்த பக்கம்? பூஜாவைப் பார்க்க வந்தீங்களா?” என்றவாறே இன்முகத்துடன் அவனை வரவேற்றார்.

அவரது புன்னகை முகத்திற்கு பதிலாக சிறு புன்னகையை பதிலாகக் கொடுத்தவன், “ஆமா மேடம், நான் பூஜாவை இப்போவே பார்க்கணும். அவ போனுக்கு ரொம்ப நேரமாக ட்ரை பண்ணுறேன், அவ எடுக்கவே இல்லை. கொஞ்சம் நீங்க அவங்களை அவசரமாக வரச் சொல்லுங்க மேடம்” என்று கூற,

அவரோ, “ரிலாக்ஸ் சக்தி. அவங்க போனில் சைலண்டில் போட்டு இருக்காங்களோ என்னவோ? கொஞ்சம் இருங்க, தானே போய் பூஜாவை அழைச்சுட்டு வர்றேன்” என்று விட்டு பூஜா தங்கியிருக்கும் அறையை நோக்கி நகர்ந்து சென்றார்.

அவர் சென்ற வழியையே சக்தி கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு நிற்க, அதற்கிடையில் சந்திரா மற்றும் சண்முக பிரகாஷ் அவன் நின்று கொண்டிருந்த அந்த இடத்தை வந்து சேர்ந்திருந்தனர்.

சிறிது நேரத்தில் வருவதாக சொல்லி விட்டு சென்றிருந்த அந்த ஹாஸ்டல் வார்டன் இருபது நிமிடங்களுக்கு மேலாகியும் இன்னும் திரும்பி வராமல் இருக்க, சக்திக்கு இதயத் துடிப்பு தாறுமாறாக எகிறத் தொடங்கியது.

“அம்மா, பூஜாவுக்கு…” தன் வாய் வரை வந்த வார்த்தைகளை முழுமையாக சொல்ல முடியாமல் சக்தி தவிப்போடு சந்திராவின் கையைப் பிடித்துக் கொள்ள, அதேநேரம் அந்த ஹாஸ்டல் வார்டன் பதட்டத்துடன் மூச்சிறைக்க அவர்களை நோக்கி வேகமாக நடந்து வந்தார்.

“சக்தி, சக்தி”

“என்னாச்சு மேடம்? பூஜா எங்கே? அவளுக்கு என்ன ஆச்சு?”

“சக்தி, பூஜா இவ்வளவு நேரமாக தட்டியும் கதவைத் திறக்க மாட்டேங்குறா. எனக்கு என்னவோ பயமாக இருக்குப்பா, நேற்று கூட வேலை முடிந்து வர்ற நேரம் ரொம்ப கவலையாக இருந்தா, நைட் சாப்பிடக்கூட வரல. நான் போய் ஏதாவது பிரச்சினையான்னு கேட்டதற்கும் ஒண்ணும் இல்லைன்னு சொன்னா. நானும் ஏதோ வேலை டென்ஷன்னு அவளை தொந்தரவு பண்ணல, ஆனா இப்போ எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்தால் எனக்கு என்னவோ பயமாக இருக்கு சக்தி. ப்ளீஸ் சக்தி ஏதாவது பண்ணுங்க. நீங்க வேணும்னா ஒரு தடவை வந்து பூஜாவைக் கூப்பிடுங்க, ப்ளீஸ். நீங்க கூப்பிட்டா ஒரு வேளை அவ வரலாம் இல்லையா? நீங்க முன்னாடி போங்க, நான் வெளியே நிற்கும் செக்யூரிட்டி இரண்டு பேரையும் கூட்டிட்டு வர்றேன்” மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவனைப் பார்த்துக் கூறி விட்டு ஹாஸ்டலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த செக்யூரிட்டிகளை அழைத்துக் கொண்டு வர அவர் சென்று விட, அந்த ஹாஸ்டல் வார்டனின் வார்த்தைகளைக் கேட்டு சக்திக்கு முதுகுத்தண்டு சில்லிட்டுப் போனது.

‘இல்லை, இல்லை. பூஜாவுக்கு எதுவும் ஆகாது. அவளுக்கு எதுவும் ஆக விடமாட்டேன்’ அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த தன் அன்னை, தந்தையை விலக்கிக் கொண்டு வேக வேகமாக படியேறி பூஜா தங்கியிருக்கும் அறையை நோக்கி ஓடியவன் அவளது அறைக்கதவின் முன்னால் குவிந்து நின்ற எல்லோரையும் தள்ளிப் போகும் படி சொல்லி விட்டு வேகமாக அந்த அறைக் கதவைத் தட்டத் தொடங்கினான்.

அவனது அழைப்புக்கு அந்த அறைக்குள் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை என்பது இன்னமும் அவனது பதட்டத்தைக் கூட்ட, “பூஜா கதவைத் திற பூஜா. பூஜா, பூஜா” என்றவாறே அந்த கதவு உடைந்து விடும் அளவுக்கு தன் இரு கைகளாலும் அந்த கதவை படபடவென்று தட்டத் தொடங்க, அவன் அந்த கதவைத் தட்டிய வேகத்தில் அவன் கைகள் இரண்டும் இரத்தம் கன்றி சிவந்து போக ஆரம்பித்தது.

அவனது நிலையை எண்ணிக் கவலையுடன் அவனது கையைப் பிடித்துக் கொண்ட சந்திரா, “சக்தி வேண்டாம் பா” என்று விட்டு கண்கள் கலங்க, அவர் கைகளிலிருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு மீண்டும் அந்த கதவில் தட்டப் போனவன் அந்த அறைக் கதவு திறந்து கொண்டு பூஜா வந்து நின்றதைப் பார்த்ததும் நொடியும் தாமதிக்காமல் அவளைத் தாவி அணைத்துக் கொண்டான்.

அவளுக்கு என்ன ஆயிற்றோ? ஏது ஆயிற்றோ? என்கிற பதட்டத்துடன் இந்த ஒரு மணி நேரமும் அவன் அடைந்த பதட்டம் மொத்தமும் நீங்கிச் செல்லும் அளவுக்கு அவனது அணைப்பு அவளை இறுக்க, அவனது செய்கையில் முதலில் சிறிது நேரம் தன்னை மறந்து நின்ற பூஜா உடனே தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அவனை தன்னிடம் இருந்து தன் பலம் கொண்டு தள்ளி விட்டாள்.

“சக்தி நீங்க என்ன பண்ணுறீங்க? நீங்க எந்த ஒரு விடயத்தையும் கொஞ்சம் கூட யோசித்துப் பண்ண மாட்டீங்களா?”

“இல்லை பூஜா, நீ…”

“போதும். நீங்க எனக்கு இதுவரைக்கும் பண்ண எல்லாமே போதும். முதல்ல இங்கே இருந்து…” சக்தியின் பின்னால் நின்று கொண்டிருந்த தன் ஹாஸ்டல் வார்டன், அவனது பெற்றோர், மீரா மற்றும் அந்த ஹாஸ்டலில் தங்கியிருக்கும் மற்றைய எல்லாப் பெண்களையும் பார்த்து விட்டு அவள் சட்டென்று அமைதியாகி விட,

அவள் அமைதியாக நின்று கொண்டிருந்த அந்த நேரத்திற்குள் அந்த வார்டன் பெண் அங்கே நின்று கொண்டிருந்த ஏனைய பெண்களை எல்லாம் அனுப்பி வைத்து விட்டு அவள் முன்னால் வந்து நின்று, “கிட்டத்தட்ட அரைமணி நேரமாக உன் ரூம் கதவைத் தட்டுறோம், அதோடு ஒருமணி நேரமாக உன் போனுக்கு மாறி மாறி கால் பண்ணுறோம். ஆனா நீ எதற்குமே பதில் சொல்லாமல் இங்கே வந்து இவர் மேலே கோபப்படுற. இது உனக்கே நியாயமா பூஜா? உனக்கு என்னாச்சோ, ஏதாச்சோன்னு நாங்க எல்லோரும் எவ்வளவு பதறிப்போயிட்டோம் தெரியுமா?” என்று கேட்க,

அவளோ, “ஒருமணி நேரமா?” குழப்பத்துடன் அவர்களை எல்லாம் பார்த்துக் கொண்டபடியே தன் தொலைபேசியை எடுத்துப் பார்த்தாள்.

அதில் சக்தியிடமிருந்தும், மீராவிடமிருந்தும், இன்னும் பல எண்களிலிருந்தும் பல அழைப்புகள் வந்து இருக்க, “இது எப்படி எனக்கு கேட்காமல் போச்சு?” தன் நெற்றியை தேய்த்து விட்டபடியே சிறிது சங்கடத்துடன் அவர்களை எல்லாம் நிமிர்ந்து பார்த்தவள்,

“சாரி, நான் வேணும்னே இப்படி பண்ணல. கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன் போல, அதுதான்” என்று இழுக்க, அவள் சொன்னவற்றைக் கேட்ட பின்னரே சக்தி சிறிது நிம்மதியாக மூச்சை இழுத்து விட்டான்.

“மறுபடியும் உனக்கு ஏதாவது பிரச்சினையோன்னு நான் ரொம்ப பயந்து போயிட்டேன் பூஜா” அவளுக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என்கிற நிம்மதியான உணர்வோடு தன் தலையைக் கோதிவிட எண்ணி சக்தி தன் கையை தலையில் வைக்க, ஏற்கனவே கதவை வேகமாக தட்டியதனால் இரத்தம் கன்றிப் போயிருந்த அவனது கை சுள்ளென்று முள்ளால் குத்தியது போல் வலிக்க ஆரம்பித்தது.

தன் கையில் ஏற்பட்ட வலி தாளாமல் சக்தி, “ஐயோ அம்மா!” என்றவாறே அவன் தன் கையை உதறிவிட்டுக் கொள்ள,

அவனின் அலறலில் பதட்டத்துடன் அவனருகில் வந்து அவனது கையைப் பிடித்துக் கொண்ட சந்திரா, “பார்த்தியா? இதற்காகத் தான் நான் அப்போவே சொன்னேன். என் பேச்சை நீ கேட்கவே இல்லை” சிறிது கண்டிப்போடும், கோபத்தோடும் அவனது தோளில் அடித்து விட்டு, “இங்கே பர்ஸ்ட் எயிட் பாக்ஸ் ஏதாவது இருக்கா?” என்றவாறே அந்த இடத்தில் முதலுதவி பொருட்கள் ஏதாவது இருக்கிறதா என்று தன் பார்வையை சுழல விட்டார்.

அவரது தேடலை உணர்ந்து கொண்டவளாக உடனே தன்னறைக்குள் சென்று அங்கேயிருந்த முதலுதவி பெட்டியை எடுத்து வந்து அவரிடம் கொடுத்து விட்டு சக்தியின் கையை எட்டிப் பார்த்த பூஜா அவை இரண்டும் இருந்த நிலையைப் பார்த்து விட்டு அதிர்ச்சியாக சக்தியின் புறம் திரும்பிப் பார்த்தாள்.

தன் அன்னை தன் காயத்திற்கு மருந்திடும் போது அவனுக்கு வலி இன்னமும் அதிகமாகுவது போல் இருக்க தன் பல்லைக் கடித்துக் கொண்டு அவன் வேறு புறம் திரும்பியிருக்க, அவன் நிலையை எண்ணிக் கவலை கொண்டவளாக தன் ஹாஸ்டல் வார்டன் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு சிறிது தூரம் தள்ளிச் சென்றவள், “மேடம், இங்கே என்ன நடக்குது? எனக்கு சத்தியமாக எதுவுமே புரியலை. ப்ளீஸ் இங்கே என்னதான் நடந்ததுன்னு சொல்லுங்க. அவர் கை இப்படி இரத்தம் கன்றிப் போகும் அளவுக்கு அப்படி இந்த இடத்தில் என்ன தான் நடந்துச்சு? எதற்காக எல்லோரும் என் ரூம் முன்னாடி வந்து நின்னாங்க?” என்று கேட்க,

அவளைப் பார்த்து நீண்ட பெருமூச்சு விட்டுக் கொண்டவர், “காலையில் ஒன்பது மணிக்கு இங்கே சக்தி தம்பி அவங்க அம்மா, அப்பா, தங்கையோடு வந்து நின்று உனக்கு கால் பண்ணி இருக்காங்க, நீ அவங்க போனை எடுக்கல. உனக்கு ஏதாவது பிரச்சினையோ தெரியலைன்னு என் கிட்ட வந்து உன்னை அழைச்சுட்டு வரச் சொல்லவும் நான் பதினைந்து, இருபது நிமிடங்களாக உன் ரூம் கதவைத் தட்டினேன், நீ திறக்கல. எனக்கு என்ன செய்யுறதுன்னு தெரியாமல் சக்தி கிட்ட போய் சொன்னேன். அந்த தம்பியும் கொஞ்சமும் யோசிக்காமல் உன் கதவைத் தட்டி உன்னைக் கூப்பிட்டாரு. உன்னைக் காணோம்னு ரொம்ப பதறிப் போய் அந்த தம்பி தன்னைப் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் இப்படி பண்ணி இப்போ அவரோட கை இருக்கும் நிலைமையைப் பாரு” என்று கூற, அவளுக்கோ அவனது நிலையை எண்ணி சிறிது கவலை ஏற்படுவது போல இருந்தது.

‘இல்லை பூஜா, இல்லை. அவ்வளவு சீக்கிரம் நீ மனது மாறி விடக்கூடாது. சக்தி நேற்று பண்ண வேலையை அவ்வளவு சீக்கிரமாக மன்னிக்கவும் முடியாது. அம்மாவும், அப்பாவும் நல்லபடியாக இருக்காங்களா? எங்கே இருக்காங்கன்னு தெரிந்து கொண்டதற்கு அப்புறம் இவங்க யாரோட கண்ணிலும் படாத ஒரு இடத்திற்கு போய் விடலாம். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையாக தான் இருக்கணும். எனக்குத் தேவையான விடயங்களை தெரிந்து கொள்ளும் வரை நான் பொறுமையாக இருந்து தான் ஆகணும். அதோடு அந்த ரவுடிங்க வேற சக்தியோடு இல்லாமல் நான் தனியாக இருந்தால் அம்மாவையும், அப்பாவையும் ஏதாவது பண்ணிடுவாங்களோன்னு பயமாக இருக்கு. எதுவாக இருந்தாலும் நிதானமாக யோசித்து தான் பண்ணணும்.
சக்தி அவரோட சுயநலத்திற்காக நேற்று நடந்த சம்பவத்தைப் பயன்படுத்திட்டாங்க, அதேமாதிரி நானும் எனது தேவைக்காக இனி வரப்போகும் நாட்களைப் பயன்படுத்திக் கொள்ளுவேன். ஒருவேளை இந்த எல்லாக் குழப்பங்களும் ஒரு நாள் தீர்ந்தாலும் சக்தியை மட்டும் மன்னிக்கவே கூடாது, அவன் மேல் எனக்கு எந்த அபிப்பிராயமும் வந்து விடக்கூடாது’ சக்தியின் புறம் மெல்ல சாய்வது போல இருந்த தன் மனதை தடுப்பு வேலி போட்டு அடைப்பது போல தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவள் சிறிது நேரத்தில் தன் உடைமைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு அவர்களுடன் புறப்பட்டுச் செல்ல தயாரானாள்.

பூஜா சக்தியின் குடும்பத்தினருடன் புறப்பட்டுச் செல்ல தயாராகும் வேளை இத்தனை நாட்களாக அவளைத் தன் குடும்பத்தை சேர்ந்த ஒருத்தியாக பார்த்து வந்த அந்த ஹாஸ்டல் வார்டன் அவள் புறப்படும் நேரத்தில் அவளருகில் வந்து, “நீயும், சக்தியும் கல்யாணம் பண்ணிக்கிட்ட விடயத்தைக் கேட்டதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது பூஜா. உனக்காக சக்தி என்ன வேணும்னாலும் செய்வாங்க, அதை இன்னைக்கு இந்த ஹாஸ்டலில் இருந்த எல்லோருமே அவங்க கண்ணால் பார்த்து இருப்பாங்க. உன் வாழ்க்கையில் இதற்கு முதல் என்ன நடந்ததுன்னு நீ மேலோட்டமாக என்கிட்ட சொல்லி இருக்க, அந்த நேரத்தில் நான் இந்த விடயத்தை உன் கிட்ட சொல்லல, ஏன்னா நீ அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்னு எனக்குத் தெரியும்” என்று கூற,

அவளோ, “அப்படி என்ன விடயம்?” குழப்பமாக அவரைப் பார்த்து வினவினாள்.

“இதற்கு முதல் நீ வாழ்ந்த வாழ்க்கை நிச்சயமாக உனக்கு காத்திருந்த வாழ்க்கை இல்லை. அது நீயாக ஏதோ ஒரு விதத்தில் அவசரமாக ஏற்படுத்திக் கொண்ட வாழ்க்கை. நான் சொல்வதைக் கேட்டு உனக்கு கோபம் வரலாம், ஆனா நீயே எல்லாவற்றையும் நிதானமாக யோசித்துப் பாரு. நான் சொன்னது தப்பில்லைன்னு நீ புரிஞ்சுக்குவ. அப்புறம் உன்னைத் தன்னோட உயிராக நேசிக்கிற உண்மையான காதலை அந்த கடவுள் எங்கே இருந்தாலும் நிச்சயமாக உன்கிட்ட கொண்டு வருவாங்க. இதை மட்டும் எப்போதும் மனதில் வைத்துக்கொள் பூஜா” சிறு புன்னகையுடன் அவளது தலையை வருடிக் கொடுத்த வார்டன் அவள் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் வரை அவளுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுத்து விட்டு அவளது வாழ்க்கையில் இனி வரும் நாட்களில் எப்போதும் சந்தோஷமே இருக்க வேண்டும் என்று மனதார அந்த இறைவனிடம் வேண்டிக் கொண்டபடியே தன் மற்றைய வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினார்.

அவர் தன் வேலைகளைப் பார்க்கச் சென்ற அதேநேரம் மறுபுறம் பூஜா தன் வாழ்க்கையில் வந்து விட்டாள் என்கிற பூரிப்புடன் சக்தி தன் காரை செலுத்திக் கொண்டிருக்க, அவனின் அருகிலிருந்த இருக்கையில் சண்முக பிரகாஷும், பின்னால் இருந்த இருக்கையில் பெண்கள் மூவரும் அமர்ந்திருந்தனர்.

அந்த காரில் ஏறி அமர்ந்து கொண்ட நொடி முதல் பூஜா எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்க, அவளை இயல்பாக வைத்துக் கொள்ள எண்ணி சந்திரா மற்றும் மீரா மாறி மாறி அவளிடம் ஏதாவது கேள்விகள் கேட்டுக் கொண்டும், அவளைப் பேச வைத்துக் கொண்டும் இருந்தனர்.

பூஜா ஆரம்பத்தில் அவர்களுடன் உடனடியாக பேசி ஒன்றிப் போக முடியாமல் சிறு தவிப்போடு இருந்திருந்தாலும் நேரம் செல்லச் செல்ல அவர்களின் பேச்சில் முழுமையாக இணைந்து கொண்டாள்.

அவர்களுடன் பேசத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஏதோ காலம் காலமாக பழகிய தன் உறவினர்களைப் போல அவர்களை அவள் மனது ஏற்றுக் கொள்ள, சிறிது நேரத்திற்கு முன்பு சக்தியை வெறுப்பாக எண்ணியிருந்த அவள் எண்ணம் கூட சிறிதே மாறியிருந்தது என்றால் மிகையாகாது.

ஏற்கனவே தாங்கள் பூஜாவுடன் புறப்பட்டு வந்து கொண்டிருக்கும் விடயத்தை தன் அண்ணி மலர்விழியிடம் மீரா கூறியிருக்க, ஏதோ கடமைக்காக அவளை வரவேற்க ஆராத்தி தட்டை எடுத்து வைத்தவள் அவர்கள் எல்லோரும் வீடு வந்து சேரும் வரை தன் புலம்பலை நிறுத்தவில்லை.

அவளது புலம்பலைக் கேட்க முடியாமலும், என்ன செய்வது என்று புரியாமலும் காலையில் இருந்து தவியாய் தவித்துக் கொண்டிருந்த வெற்றி ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவள் முன்னால் வந்து நின்று, “இப்போ என்ன ஆச்சு மலர் உனக்கு? எதற்காக காலையில் இருந்து விடாமல் புலம்பிட்டே இருக்க? அதுதான் வீட்டில் எல்லோரும் நடந்த விடயங்களை எல்லாம் ஏற்றுக் கொண்டாங்க தானே? உனக்கு மட்டும் என்ன பிரச்சினை?” சற்று கோபமாக தன் குரலை உயர்த்திக் கேட்க,

அவனைப் பார்த்து தன் இடுப்பில் கை வைத்து கொண்டு முறைத்தவள், “ஏன், சாருக்கு எதுவுமே தெரியாதா? அன்னைக்கு என் தங்கச்சிக்கு தான் உங்க தம்பியைக் கல்யாணம் பண்ணி வைப்பேன்னு தலையில் அடித்து சத்தியம் பண்ணாத குறையாக சொல்லிட்டு இன்னைக்கு யாரோ ஒரு பொண்ணு இரண்டாம் தாரமாக கல்யாணம் பண்ணிட்டு வர்றான்னு சொன்னதும் அப்படியே எல்லோரும் ‘ஈ’ன்னு பல்லைக் காட்டிட்டு இருக்கீங்க? அப்படி என் தங்கச்சிக்கு என்ன குறை? அழகு இல்லையா? குணம் இல்லையா? இல்லை படிப்பு இல்லையா? என் தங்கச்சி கிட்ட உங்க தம்பி இப்போ கட்டிக்கிட்டு வர்றவளை விட எல்லாமே அதிகமாகவே இருக்கு” எனவும்,

அவனோ, “ஆமா, ஆமா. எல்லாம் அதிகமாகவே இருக்கு. வாயும் பத்து முழத்திற்கு அதிகமாகவே இருக்கு” தன் தாடியை நீவி விட்டுக் கொள்வது போல அவள் கேட்காத வண்ணம் தனக்கு மாத்திரம் கேட்கும் வகையில் முணுமுணுத்துக் கொண்டு அவளைப் பரிதாபமாக பார்த்துக் கொண்டு நின்றான்.

“என்ன பிரச்சினைன்னு மட்டும் கேட்பீங்க. பிரச்சினையை சொன்னால் வாயில் கொழுக்கட்டை வைச்சுட்டு இருக்குற மாதிரி உம்முன்னு இருக்குறீங்க. உங்க கிட்ட பேசுவதற்கு பதிலாக எங்கேயாவது சுவரில் போய் முட்டிக்கலாம்” வெற்றியைப் பார்த்து தன் தலையில் அடித்துக் கொண்டபடியே மலர்விழி வெளியேறி செல்லப் போக,

அவசரமாக அவளது கையை எட்டிப் பிடித்துக் கொண்டவன், “ஐயோ மலர்! வெளியே சுவர் எல்லாம் ரொம்ப கரடுமுரடாக இருக்கும். நீ முட்டிக்கிட்டேன்னா அப்புறம் தலையில் ஏதாவது பெரிதாக அடிபட்டுடும்மா. அதனால வெளியே போய் முட்டிக்காதேம்மா” என்று கூற, அவளது பார்வை இப்போது அவனை முற்றாக எரித்து விடுவது போல நோக்கியது.

“ஓஹ், சாருக்கு அந்த எண்ணம் எல்லாம் வேறு இருக்கா? எப்போடான்னு தான் காத்துட்டு இருக்குறீங்க போல? சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னால் உடனே நீங்களே கூட்டிட்டு போய் தலையை சுவரில் முட்ட வைத்துடுவீங்க போல இருக்கே”

“இது உனக்குத் தேவையாடா வெற்றி? ஏதோ ஒரு பாசத்தில் அவ சொன்னதை உண்மைன்னு நம்பி பாவம் பார்த்து அவளைத் தடுத்தா கடைசியில் அது எனக்கே பாவம் பார்க்க வேண்டிய நிலைமையை ஏற்படுத்திடுச்சு” வெற்றி தன் நிலையை எண்ணிப் புலம்பியபடியே அங்கிருந்து நழுவிச் செல்ல வாய்ப்பு தேட, அவனைக் காப்பாற்றுவது போல அவனது குழந்தைகள் இருவரும் விளையாடி முடித்து விட்டு அவர்கள் இருவரையும் நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தனர்.

“மலர் அங்கே பாரு. பசங்க விளையாடிட்டு வர்றாங்க. போம்மா, போய் அவங்களைப் பாரு” என்றவாறே தன் குழந்தைகளின் புறம் அவளது பார்வையை திரும்பச் செய்து விட்டு அங்கிருந்து விலகிச் சென்று விட, அப்போதும் மலர்விழியின் புலம்பல் நிற்கவே இல்லை.

“நல்ல வேளை என் தம்பி அந்த வாயாடிக்கிட்ட இருந்து தப்பிச்சுட்டான்னு நானே சந்தோஷமாக இருக்கேன், அது இவளுக்கு பொறுக்காதே. எப்போ பாரு தங்கச்சி, தங்கச்சின்னு அவ பாட்டையே பாடி கழுத்தை அறுத்துக்கிட்டு” மலர்விழி அந்த இடத்தில் இல்லை என்று நினைத்துக் கொண்டு வெற்றி சிறிது சத்தமாக தன் புலம்பலை ஆரம்பிக்க,

“எக்ஸ்கியூஸ் மீ சார் வெற்றி. நீங்க என்ன சொன்னீங்கன்னு எனக்கு நல்லாவே கேட்டுச்சு. இன்னைக்கு நைட் உங்களுக்கு இருக்கு கச்சேரி” என்றவாறே அவனின் முன்னால் வந்து நின்று தன் சேலை முந்தானையை உதறியபடி தன் இடுப்பில் சொருகி கொண்டு அவள் அங்கிருந்து நகர்ந்து செல்ல, அவனோ தன் நிலைமையை எண்ணி கவலையோடு அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து நின்றான்.

“வெற்றி நல்லா மாட்டிக்கிட்டடா. இன்னைக்கு காதில் இரத்தம் வந்தாலும் அவ உன்னை விடமாட்டா. சிறப்பான விஷயம் உனக்காக வெயிட்டிங் கண்ணா” தன்னை நினைத்து புலம்பியபடியே வெற்றி வானை நோக்கி பார்த்து பேசிக் கொண்டு நிற்க, சரியாக அந்த நேரம் சக்தியின் கார் அவர்கள் காம்பவுண்டின் முன்னால் வந்து நின்றது.

“மலர், மலர். அவங்க எல்லோரும் வந்துட்டாங்க. சீக்கிரமாக வா” வெற்றி தன் குடும்பத்தினரைப் பார்த்த சந்தோஷத்தில் வீட்டை நோக்கி குரல் கொடுத்தபடியே அவர்களை நோக்கி செல்ல, சிறிது நேரத்தில் மலர்விழி ஏற்கனவே ஒழுங்குபடுத்தி வைத்திருந்த ஆராத்தி தட்டுடன் அவர்களை நோக்கி நடந்து வந்தாள்.

“பரவாயில்லையே அண்ணி, ஏற்பாடு எல்லாம் பலமாக இருக்கு. என்ன இப்போவே ஐஸ்ஸா?” மீராவின் கேலியான பேச்சைக் கேட்டு சிரிப்பது போல முயன்று தன்னைக் காட்டிக் கொண்ட மலர்விழி தன் கோபத்தை மறைத்துக் கொண்டபடி சக்தி மற்றும் பூஜாவிற்கு ஆராத்தி எடுக்கப் போக, திடீரென ஒரு கரம் குறுக்கே வந்து அந்த தட்டை தள்ளி விட்டது.

“யாரு இப்படி அபசகுனமான வேலை பண்ணது?” நல்ல விடயம் நடக்போகும் நேரத்தில் அதை தடுப்பது போல நடந்த சம்பவத்தைப் பார்த்து அளவில்லா கோபத்துடன் அந்த கரத்தின் உரிமையாளரைத் திரும்பிப் பார்த்த சக்தியின் குடும்பத்தினர் அந்த நபரைப் பார்த்து அதிர்ச்சியாகி நிற்க, பூஜாவோ அங்கே நடந்த விடயம் எதையும் கவனித்தில் கொள்ளாது யார் வீட்டு விருந்தோ என்பது போல நின்று கொண்டிருந்தாள்…….

**********
என் பெயரை
யாரும் கேட்கையில்
உன் பெயரை சொல்கிறேன்
நம் பெயரை ஒன்று சோ்க்கவே
உன்னை நானும் கேட்கிறேன்
**********