இதயம் – 20

eiHJN6N67051-10d0c64d

பூஜா சிறிது நேரத்திற்கு முன்பு நடந்த விடயங்களைப் பற்றி சிந்தித்தபடியே தங்கள் அறைக்குள் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருக்க, அவள் சொல்லி விட்டுச் சென்ற விடயங்களைக் கேட்டு அதிர்ச்சியாகி நின்ற சக்தி உடனே தன்னை சுதாரித்துக் கொண்டு அவளைக் காண விரைந்து சென்றான்.

பூஜாவிற்கு மேலும் மேலும் கஷ்டங்களைக் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக தான் தன் தந்தையின் ஆசையைக் கூட தள்ளி வைக்க அவன் எண்ணியிருந்தான், அப்படியிருக்கையில் அவளே இந்த ரிசப்ஷன் நிகழ்வுக்கு சம்மதம் சொன்னது அவனுக்கு இப்போது கூட நம்பமுடியாத விடயமாகவே இருந்தது.

ஒருவேளை தனது குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்காக அவள் சம்மதம் சொல்லியிருக்க கூடும் என்று எண்ணிக் கொண்டவன் அதைப்பற்றி அவளிடம் பேசிவிடலாம் என்று எண்ணியபடி தங்கள் அறைக்கதவைத் தட்டி விட்டு உள்நுழைய, அவனை அங்கே பார்த்ததும் பூஜாவின் முகம் கோபத்தால் சட்டென்று சிவந்து போனது.

“பூஜா”

“இப்போ எதற்கு இங்கே வந்தீங்க? இன்னும் என்ன செய்து என்னைக் கஷ்டப்படுத்தப் போறீங்க?”

“நான் உன்னை எந்தவிதத்திலும் கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு இப்போ உன்னைப் பார்க்கவே வந்தேன்”

“ஓஹ். என்னைப் பற்றி எல்லாம் நீங்க யோசிக்குறீங்களா?”

“ஏன் பூஜா இப்படி எல்லாம் பேசுற? நான் உன் விருப்பத்தைக் கேட்காமல் அப்படி பண்ணது தப்பு தான், இல்லைன்னு சொல்லல, ஆனா அதற்காக நீ எல்லா விடயங்களையும் உன் விருப்பம் இல்லாமல் பண்ணணும்னு எந்த அவசியமும் இல்லை. இந்த ரிசப்ஷன் எல்லாம் உன் பூரண சம்மதம் இல்லாமல் மற்றவங்க கட்டாயத்தின் பேரில் நடக்க வேண்டாம்”

“அப்படியா? அப்போ இந்த ரிசப்ஷன், மற்ற மற்ற விடயங்கள் எல்லாம் மட்டும் தான் என் சம்மதப்படி நடக்கணும் இல்லையா? நீங்க என் கழுத்தில் தாலி கட்டியதோ, என் நெற்றியில் குங்குமம் வைத்து விட்டதோ, என்னை உங்க மனைவியாக மாற்றிக் கொண்டதோ என் சம்மதப்படி நடக்கத் தேவையில்லை. அப்படித்தானே?” பூஜா கோபத்தால் சிவந்து போன முகத்துடன் சக்தியைப் பார்த்து கோபமாக வினவ, அவனுக்கோ அவளது கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.

தான் செய்த விடயம் அவளை கோபப்பட வைக்கும் என்பது அவனுக்குத் தெரியும், ஆனால் இந்தளவிற்கு கோபப்படுத்தக் கூடும் என்பது அவனுக்கு தெரியவில்லை.

“நீ என் மேலே எவ்வளவு வேண்டுமானாலும் கோபப்படு பூஜா, அதற்கு உனக்கு எல்லா உரிமையும் இருக்கு, ஆனால் நான் ஒரே ஒரு விடயத்தை மட்டும் உன்கிட்ட சொல்ல ஆசைப்படுறேன். நேற்று நான் உன் சம்மதத்தை கேட்காமல் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது உன் உயிரைக் காப்பாற்றணும் என்கிற ஒரு காரணத்திற்காக மட்டும் தான், மற்றபடி நீ சொன்ன மாதிரி கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளணும்னு இல்லை. நேற்று நான் அப்படி பண்ணேலேன்னா உனக்கு மட்டும் இல்லை, உன் அம்மா, அப்பாவுக்கும் ஆபத்து வந்திருக்கும். ஆனால் இப்போ அவங்க இரண்டு பேரும் ரொம்ப பாதுகாப்பாக இருக்காங்க. எனக்கு அந்த நேரத்தில் சரி, தப்பு எதுவும் தெரியலை, ஒரேயொரு விடயம் மட்டும் தான் தெரிந்தது” என்று விட்டு சக்தி பூஜாவை நிமிர்ந்து பார்க்க, அவளும் அந்த சமயத்தில் அது என்ன விடயம் என்பது போல அவனையே தான் பார்த்துக் கொண்டு நின்றாள்.

அவளின் பார்வையின் அர்த்தம் புரிந்தவனாக அவளைப் பார்த்து புன்னகை செய்தவன், “அந்த ஒரு விடயம் நீ தான் பூஜா. நீ மட்டும் தான். எனக்கு என் உயிரைப் பற்றியோ, மற்ற விடயங்களைப் பற்றியோ எந்த கவலையும் இல்லை. உன்னைக் காப்பாற்றணும், உன் உயிருக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது. இந்த விடயங்கள் மட்டும் தான் எனக்கு முக்கியமாக தெரிந்தது, அதனால அப்படி பண்ணேன். ஒவ்வொரு நாளும் இப்படி ஒரு ஆபத்தான சூழ்நிலையில் உன்னைத் தனியாக சிக்க வைக்க என்னால் முடியாது, ஏன்னா நீ என்னோட வாழ்வில் ரொம்ப ரொம்ப முக்கியமானவ. அதுதான் உன் நிழலாக இருந்து உன்னைக் காப்பாற்றணும்னு முடிவு பண்ணிட்டேன். நான் உன்னை என் மனைவியாக்கிக் கொண்டதனால நான் உன் மேல் அந்த உரிமை எடுத்துக் கொள்ளுவேன்னு நீ பயப்பட வேண்டாம். நான் என்னுடைய கடைசி மூச்சு வரைக்கும் உனக்கு ஒரு நல்ல ஃபிரண்டாக இருப்பேன். இதற்கு மேல் உன் கிட்ட என்ன சொல்லுறதுன்னு எனக்குத் தெரியலை” என்று விட்டு அங்கிருந்து வெளியேறிச் செல்லப் பார்த்து விட்டு பின்னர் மீண்டும் அவள் முன்னால் வந்து நின்று,

“நாளைக்கு ஒரு முக்கியமான இடத்திற்கு போகணும், அதனால் காலையில் நேரத்திற்கே தயாராகி இரு. அப்புறம் அது என்ன இடம்ன்னு மட்டும் கேட்காதே, சின்ன சர்ப்ரைஸ்” என்றவாறே அந்த அறையை விட்டு வெளியேறிச் சென்று விட, பூஜாவிற்கு தான் அவனைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

சில நேரங்களில் அவனைப் பார்க்கும் போதெல்லாம் கோபம் கோபமாக வரும், அதேபோல் சில நேரங்களில் அவன் பேசுவதைக் கேட்கும் போது மனதிற்குள் என்னவோ அவனது பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது போல தோன்றும்.

தன் மனது எதைத் தான் எதிர்பார்க்கிறது என்று தெரியாமல் தன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவள் அப்படியே உறங்கிப் போய் விட, தனது வேலைகளை எல்லாம் முடித்து விட்டு தங்கள் அறைக்குத் திரும்பிய சக்தி ஷோபாவில் அமர்ந்திருந்த நிலையிலேயே உறங்கிக் கொண்டிருந்த பூஜாவைப் பார்த்து அவளருகிலேயே தயங்கி நின்றான்.

இப்படியே இரவு முழுவதும் தூங்கினால் அவளுக்கு உடல் வலி வந்து விடுமே என்று கவலை கொண்டவன் அவளிடம் எப்படி இதைச் சொல்வது என்று தெரியாமல் தயங்கியபடியே அவள் முன்னால் முழங்காலிட்டு அமர்ந்து கொள்ள, அவளோ தூக்கக் கலக்கத்தில் புரண்டு படுப்பதாக எண்ணி சாய்ந்து கொள்ளப்போக, அவளது தலையில் ஷோபாவின் கைப்பிடி அடி பட்டு விடாமல் தன் கையால் அவளது தலையைப் பிடித்துக் கொண்டவன் மெல்லமாக அவளை சாய்ந்து படுக்கச் செய்தான்.

அவளை நேராக தூங்க வைத்து விட்டு அந்த இடத்தில் இருந்து எழுந்து கொள்ளப் போனவனின் கை இன்னமும் பூஜாவின் தலையின் கீழேயே இருக்க, அதை விலக்கி எடுக்க முயற்சி செய்தவன் அவனது கையசைவில் அவள் விழித்துக் கொள்வதைப் போல இருக்கவும் தன் கையை அசையாமல் அப்படியே வைத்திருந்தான்.

‘என்னால் பூஜா பலவிதமான மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டாள், இந்த நிலையில் அவளுக்கு இந்த தூக்கத்தையாவது எந்தவிதமான தொந்தரவும் இல்லாமல் கொடுத்து விடலாம்’ என்று எண்ணியபடி தன் கையை சிறிதும் அசைக்காமல் அவளது தலையின் கீழ் வைத்திருந்தவன் அங்கே கிடந்த ஒரு முக்காலி ஒன்றில் தன் தலையை சாய்த்து படுத்துக் கொண்டு அவளது முகத்தைப் பார்த்துபடியே மெல்ல மெல்ல தூக்கத்தைத் தழுவிக் கொண்டான்.

காலை நேரப் பறவைகளின் சத்தம் இனிய சங்கீதமாய் தன் செவிகளை வந்து சேர, தன் தூக்கத்தில் இருந்து மெல்ல கண் விழித்த பூஜா முதலில் பார்த்தது தன் முன்னால் தரையில் அமர்ந்திருந்தவாறு முக்காலி ஒன்றில் தலை சாய்த்து தூங்கிக் கொண்டிருந்த சக்தியைத் தான்.

அவனை இவ்வாறு தனக்கு வெகு அருகில் பார்த்ததுமே அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தவள் கோபமாக அவனை எழுப்ப தன் கையை அவனருகில் கொண்டு சென்று விட்டு பின்னர் ஏதோ நினைவு வந்தவளாக அவன் அமர்ந்திருந்த நிலையைப் பார்த்து விட்டு தன் தலையில் தட்டிக் கொண்டாள்.

நேற்று இரவு முழுவதும் தன் தலையின் கீழ் சக்தியின் கை இருந்து இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டவளாக அவனது தூக்கத்தைக் கலைக்காமல் மெல்ல எழுந்து நின்றவள் அவனது கையைப் பார்க்க, அதுவோ இரத்தம் கன்றி சிவந்து போயிருந்தது.

ஏற்கனவே நேற்று தன்னை ஹாஸ்டலில் இருந்து அழைத்து வர வந்த வேளையும் தன் அறைக்கதவைத் தட்டி அவனது கை இரத்தம் கன்றிப் போயிருந்ததை அவள் பார்த்துத்தானிருந்தாள்.

இப்போது மீண்டும் அதே போல் அவனது கை இரத்தம் கன்றிப் போயிருந்ததைப் பார்த்து அவளுக்கு என்னவோ போல் இருக்க, சிறிது கவலையுடன் அவனது கையைப் பிடித்துப் பார்த்தவள் அதை இலேசாகத் தொட அந்த தொடுகை கூட சக்திக்கு வலியைக் கொடுத்ததோ என்னவோ? தூக்கத்தில் கூட வலியால் அவனது புருவங்கள் இரண்டும் சுருங்கியது.

‘ஏன் சக்தி இப்படி எல்லாம் பண்ணுறீங்க? உங்களை நீங்களே வருத்திக்கிட்டு இப்படி எல்லாம் எதற்காக கஷ்டப்படணும்? நீங்க எவ்வளவு சந்தோஷமாக வாழ வேண்டியவங்க, இப்படி தேவையில்லாமல் உங்க வாழ்க்கையை வீணாக்கிட்டீங்களே. என்னைப் பற்றி உங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை? என்னை நீங்க பார்த்து ஒரு வருடம் கூட இருக்காது, என்னைப் பற்றி உங்களுக்கு அப்படி என்ன தெரியும்? என்னைப் பற்றி எதுவுமே முழுமையாக தெரியாமல் எதற்காக இப்படி எல்லாம் ஆசையை வளர்த்தீங்க சக்தி?’ தன் மனதிற்குள் எழுந்த கேள்விகளை எல்லாம் அவன் முன்னால் கேட்கத் துணிவின்றி தனக்குள்ளேயே அவனிடம் கேட்பது போல கேட்டுக் கொண்டவள் சக்தியின் தூக்கம் கலைவது போல இருக்கவே அவசரமாக தன் மாற்றுடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

பூஜா குளித்து முடித்து விட்டு வெளியே வந்த நேரம் சக்தியும் தன் தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்திருக்க, அவனை நிமிர்ந்து பார்க்கவே சங்கடம் கொண்டவளாக வேகமாக அவனைக் கடந்து செல்லப் போன வேளை, “பூஜா ஒரு நிமிடம்” என்ற சக்தியின் குரலில் ஆணியடித்தாற் போல தான் நின்று கொண்டிருந்த இடத்தில் அப்படியே நின்றாள்.

சக்தி தன் முன்னால் வந்து நின்று கொண்டிருக்கிறான் என்று தெரிந்தும் பூஜா அவனை நிமிர்ந்து பார்க்காமல் இருக்க, பெருமூச்சு விட்டபடியே அவளைப் பார்த்துக் கொண்டு நின்றவன், “இன்னைக்கு ஒரு முக்கியமான இடத்திற்கு போகணும்னு நேற்று சொன்னேனே, ஞாபகம் இருக்கா?” என்று கேட்க, அவளோ அவனை நிமிர்ந்து பாராமல் ஆமோதிப்பாக தலையசைத்தாள்.

அவள் தன்னைப் பார்க்கவே தயங்கி நிற்கிறாள், ஒரு வேளை தன் மேல் இன்னமும் கோபமாக இருக்கிறாளோ என்று எண்ணியபடி “ம்ம்ம்ம்ம், ஒரு இருபது நிமிடம் வெயிட் பண்ணும்மா. நான் குளிச்சிட்டு ரெடியாகிட்டு வர்றேன்” என்றவாறே அவளைப் பார்த்துக் கூறி விட்டு சக்தி குளியலறையை நோக்கி சென்று விட, பூஜா எதுவும் பேசாமல் அமைதியாக பால்கனியில் சென்று நின்று கொண்டாள்.

தனது வாழ்க்கையில் இதுவரை நடந்த நிகழ்வுகளை எல்லாம் நினைத்துப் பார்த்தபடியே அவள் நின்று கொண்டிருந்த நேரம் திடீரென சக்தியின் அலறல் கேட்கவே பதட்டத்துடன் அறைக்குள் ஓடிச் சென்றவள் அங்கே அவன் நின்று கொண்டிருந்த நிலையைப் பார்த்து சத்தமாக சிரித்து விட, அவனோ பாதி தலையை மறைத்து அணிந்திருந்த டீசர்டின் வழியாக அவளைப் பாவமாகப் பார்த்துக் கொண்டு நின்றான்.

வெகுநாட்களுக்குப் பிறகு பூஜாவின் முகத்தில் சிரிப்பைப் பார்த்ததும் சக்தியின் காதல் மனது அவன் அனுமதியின்றி குத்தாட்டம் போடத் தொடங்க, முயன்று தன் மனதை அடக்கி வைத்தவன், “ஏன்மா சிரிச்சது போதும், கொஞ்சம் உதவி பண்ணும்மா. கையை அசைக்க முடியல” என்றவாறே பூஜாவைப் பார்த்து கெஞ்சலாக கேட்க,

அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டபடியே அவனது தலையில் சிக்கியிருந்த அவனது டீசர்டை இழுத்து விட்டவள், “ஏன் சார் உங்களுக்கு இன்னும் ஒரு சட்டை கூட ஒழுங்காகப் போடத் தெரியாதா?” என்று கேட்க, அவனோ அவளைப் பார்த்து தன் கையை உயர்த்திக் காட்டினான்.

“இந்த நிலைமையில் கையை வைத்துக் கொண்டு இவ்வளவு பண்ணதே பெரிசும்மா. நீ வேற” சக்தியும் இயல்பாக சிரித்துக் கொண்டே பூஜாவைப் பார்த்துக் கூற, அவனது கூற்றில் அவளது முகத்தில் இருந்த புன்னகை சட்டென்று துடைத்து விட்டாற் போல மறைந்து போனது.

அவளது முகமாற்றத்தைப் பார்த்து தயக்கத்துடன் அவளைப் பார்த்தவன், “பூஜா” என்று அழைக்க, அவளோ அவனைக் கண்கள் கலங்க நிமிர்ந்து பார்த்தாள்.

“ஹேய் பூஜா, ஐ யம் சாரி. நான் உன்னை கஷ்டப்படுத்தணும்னு எதுவும் சொல்லல. ஏதோ வழக்கம் போல பேச்சு வாக்கில் சொல்லிட்டேன்” அவளது கலங்கிய முகத்தைப் பார்த்து மனம் கேளாதவனாக அவள் முன்னால் தயங்கி நிற்க,

தன் கண்களைத் துடைத்து விட்டபடியே அவனை நிமிர்ந்து பார்த்தவள், “எதற்காக சக்தி இப்படி எல்லாம் பண்ணுறீங்க? நான் உங்களுக்கு ஏன் இந்தளவிற்கு முக்கியமாக இருக்கேன்? நான் யாரு, என் வாழ்க்கையில் என்ன நடந்தது எதுவாச்சும் உங்களுக்கு தெரியுமா? என்னைப் பற்றி எதுவுமே தெரியாமல் எதற்காக உங்க மனதில் இவ்வளவு ஆசையை வளர்த்து வைத்து இருக்கீங்க? சரி, அந்த ஆசை எல்லாம் ஒரு பக்கம் இருக்க, எனக்காக ஏன் நீங்க இவ்வளவு கஷ்டப்படணும் சக்தி? இரண்டு தடவை உங்க உயிரைப் பணயம் வைத்து என்னைக் காப்பாற்றி இருக்கீங்க, அது மட்டுமில்லாமல் உங்க கை இரண்டு தடவை இரத்தம்…” தான் சொல்ல வந்த விடயத்தை சொல்லி முடிக்க முடியாதவளாக தடுமாறி நிற்க, சக்தி அவளது தோளில் கை வைக்கப் பார்த்து விட்டு பின்னர் சட்டென்று தன் கையை பின்னிழுத்துக் கொண்டான்.

“ஐயோ பூஜா, அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை ம்மா. இது சின்ன காயம் தான். இதையெல்லாம் நீ பெரிதாக எடுத்துக்க வேண்டாம்மா”

“நான் இந்தக் காயத்தை வைத்து மட்டும் கேட்கல சக்தி. இதுவரைக்கும் நடந்த எல்லவற்றையும் தான் கேட்கிறேன். சொல்லுங்க சக்தி ஏன்?”

“பூஜா உன் கேள்விக்கு என் கிட்ட பதில் இருக்கு, ஆனா அதை சொல்ல இது சரியான நேரமான்னு எனக்குத் தெரியலை. நான் ஏன் இதெல்லாம் பண்ணுறேன்னு உனக்குப் புரியலையா? இல்லை புரிந்தும் புரியாத மாதிரி இருக்குறியான்னு எனக்குத் தெரியலை. நான் என் மனதில் என்ன இருக்குன்னு உன் கிட்ட தெளிவாக சொல்லிட்டேன், அதற்கு அப்புறமும் இந்த கேள்வி அவசியம் தானா? எனக்குத் தெரியாது. நான் இந்தளவிற்கு எல்லாவற்றையும் தாங்கி கொள்ள ஒரே காரணம், உன் மேல் நான் வைத்து இருக்கும் காதல்.
என் காதலுக்கு முன்னால் இந்த வலி எல்லாம் ஒண்ணுமே இல்லை. அதற்காக நீ என்னைப் பதிலுக்கு காதலித்தே ஆகணும்ன்னு நான் சொல்ல மாட்டேன். ஏன்னா காதல் கட்டாயப்படுத்தி வரவைக்கும் விடயம் இல்லை. அது மனது சம்பந்தமான ஒரு அழகான உணர்வு. அதை நம்ம தான் உணரணும், அடுத்தவங்களுக்காக வர வைக்க கூடாது, அப்படி வரவும் முடியாது. இப்போ நான் உனக்கு ஒரு வாக்கு தர்றேன். என்னோட காதல் ஒரு நாளும் உன்னை எந்த விதத்திலும் காயப்படுத்தாது. இது சத்தியம்” என்று விட்டு தன் கையை இறுக மூடிக் கொண்டு சக்தி அங்கிருந்து வேகமாக வெளியேறிச் சென்று விட, பூஜா அவனது பேச்சைக் கேட்டு விக்கித்துப் போய் நின்றாள்.

‘இது கொஞ்சம் கூட சரியில்லை. சக்தி தன்னோட வாழ்க்கையை என்னால் இப்படி வீணாக்குவது கொஞ்சம் கூட சரியில்லை. என்னால் அவங்க வாழ்க்கை அழிந்து போவதைப் பார்க்க முடியாது. விஷ்வா போனதற்கு அப்புறம் எனக்கு ஒரு புதிய பாதையை காட்டித் தந்தவங்க சக்தி, அப்படியானவங்க வாழ்க்கையில் என்னால் பிரச்சினை வரவே கூடாது. இதற்கு எல்லாம் சீக்கிரமாகவே ஒரு முடிவு எடுக்க வேண்டும். அதற்கு முதலில் அம்மா, அப்பா இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கணும்.
அவங்களை ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்து விட்டு அவங்ககூடவே இனி வரப்போகும் என் வாழ்க்கையை நான் வாழணும். அவங்க என்னைத் திட்டினாலும் சரி, இல்லை அடித்தாலும் சரி, அவங்களை விட்டு இனி நான் எங்கேயும் போக மாட்டேன்’ சக்தியின் வாழ்க்கையில் தன்னால் எந்தவித பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்று உறுதியாக முடிவெடுத்துக் கொண்ட பூஜா அடுத்து என்ன செய்வது என்று தனக்குள் வேகமாக திட்டம் தீட்டத் தொடங்கினாள்.

முதலில் தன் பெற்றோர் இருக்கும் இடத்தை சக்தியிடம் இருந்து கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டவள் அவன் இன்று ஏதோ ஒரு முக்கியமான இடத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறியிருந்ததனால் அந்த இடத்திற்கு சென்று வந்த பிறகு அவனிடம் இதைப் பற்றி பேசலாம் என்று எண்ணியபடியே அவனுடன் இணைந்து புறப்பட்டுச் சென்றாள்.

சக்தி மற்றும் பூஜா காரில் ஏறி அமர்ந்து கொண்ட நொடி முதல் இப்போது வரை ஒருவரிடம் ஒருவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, மாறாக இருவரது பார்வையும் அந்த கார் பயணித்துக் கொண்டிருந்த சாலையிலேயே நிலைத்து நின்றது.

சக்தியின் வீட்டிலிருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் பிரதான பாதையிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு குறுகலான பாதையில் தன் காரை நிறுத்தியவன், “பூஜா இறங்கி வா” என்றவாறே காரிலிருந்து இறங்கி கொள்ள, அவளோ அந்த இடத்தை சுற்றிப் பார்த்தபடியே காரிலிருந்து இறங்கி நின்றாள்.

அந்த பாதை குறுகலான சிறு பாதையாக இருந்தாலும் அந்த பாதையின் இருபுறமும் நாகலிங்க மரங்கள் வரிசையாக காவலர்களைப் போல வீற்றிருக்க, அந்த சாலை முழுவதும் நாகலிங்க பூக்கள் இளஞ்சிவப்பு நிறக் கம்பளத்தை விரித்து விட்டது போல கொட்டிக் கிடந்தது.

சுற்றிலும் இயற்கை அரண்கள் சூழ இருந்த அந்த இடத்தைப் பார்த்து தன் மனதில் இருந்த இறுக்கம் மறைய சக்தியைத் திரும்பிப் பார்த்த பூஜா, “இங்கே எதற்காக வந்து இருக்கோம்?” என்று கேட்க,

அவளைப் பார்த்து புன்னகை செய்தவன், “சொல்லுறேன் ம்மா. என் பின்னாடியே வா” என்று விட்டு அந்த பாதையின் வழியே நடக்கத் தொடங்கினான்.

“எங்கே கூட்டிட்டு போறீங்க சக்தி?” சக்தியைப் பார்த்து சலித்துக் கொண்டே அவனின் பின்னால் நடந்து சென்றவள் அந்த பாதையில் சிறிது தூரம் நடந்து சென்ற பின் ஒரு வீட்டின் முன்பு அவன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்து விட்டு, “இங்கே யாரு இருக்காங்க? இப்போதாவது சொல்லுங்களேன்” என்றவாறே அவனைப் பார்த்து வினவ, அவனோ அவளை அந்த வீட்டைத் திரும்பி பார்க்குமாறு ஜாடை காட்டினான்.

“தேவையில்லாத நேரத்தில் எல்லாம் நல்லா பேசிட்டு, தேவையான நேரத்தில் எதுவும் பேசாமல் இருக்குறது” அவனைப் பார்த்து சிறிது சத்தமாக முணுமுணுத்தபடியே அந்த வீட்டைத் திரும்பி பார்த்தவள் அங்கே நின்று கொண்டிருந்த தன் அன்னை செல்வி மற்றும் தன் தந்தை பரசுராமனைப் பார்த்து அதிர்ச்சியாகி நிற்க, சக்தி அவளது முகமாற்றத்தைப் பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டு நின்றான்.

“அம்மா! அப்பா!” கிட்டத்தட்ட அரை வருடங்களுக்கு மேலாக தன் அன்னை, தந்தையைப் பார்க்காதிருந்த ஏக்கத்தில் அவள் கண்கள் கண்ணீரை தாயை தாரையாக பொழிய, பரசுராமன் அவளை நோக்கி தன் கையை நீட்டவும் நொடியும் தாமதிக்காமல் அவரது கைவளைவுக்குள் நுழைந்து கொண்டவள் அவரது நெஞ்சில் சாய்ந்து நின்று தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள்.

பூஜா அழுவதைப் பார்த்ததும் சக்தியின் மனம் சொல்லொணா வேதனையில் துடிக்க, அவளுக்கும் அவளது பெற்றோருக்கும் சிறிது தனிமை கொடுத்து விட்டு சற்று தள்ளி சென்று நின்று கொண்டவன் தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு நின்றான்.

வெகு நாட்களுக்குப் பிறகு சந்தித்த தன் அன்னை, தந்தையுடன் பூஜா மனம் விட்டுப் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டவன் தன் தொலைபேசியை எடுத்துப் பார்த்துக் கொண்டபடியே அந்த இடத்தில் இருந்த ஒரு கற்பாறையில் அமர்ந்து கொண்டிருந்த நேரம், “சக்தி” என்ற பூஜாவின் குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்து நின்றவன் அவளது குரல் வந்த திசையை நோக்கி வேகமாக நடந்து சென்றான்.

“என்னாச்சு பூஜா? ஏதாவது பிரச்சினையா? உனக்கு ஒண்ணும் இல்லை தானே? அம்மா, அப்பா எங்கே? அவங்களுக்கு எதுவும் இல்லை தானே? என்னாச்சு ம்மா? ஏதாவது பேசு டா” சக்தி பதட்டத்துடன் பூஜாவை மேலிருந்து கீழாக ஆராய்ச்சியாகப் பார்த்தபடியே வினவ, அவனைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவள் அவன் எதிர்பாராத தருணம், “சக்தி” என்றவாறே அவனைத் தாவி அணைத்துக் கொண்டாள்……

**********
நீ என்னைக்கேட்டபோது காதலில்லை
நான் காதல் உற்ற போது நீயுமில்லை
ஒற்றைக் கேள்வி உன்னைக்கேட்கிறேன்
இப்போதும் எந்தன் மீது காதல் உள்ளதா
ஹார்மோன்களின் சத்தம் கேட்குதே
உன் காதிலே
என்று கேட்கும் இந்த சத்தம்
**********