இதயம் – 23

eiHJN6N67051-d6647a36

இரவு வானில் நிலவும், நட்சத்திரங்களும் போட்டி போட்டு ஜொலித்துக் கொண்டிருக்க, தங்கள் அறைப் பால்கனியில் அந்த வானத்து நிலவை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்றாள் பூஜா.

இன்று காலை சக்தியுடன் திருச்சி சென்று திரும்பியதிலிருந்து அவள் மனம் ஒருநிலையில் இல்லை.

அதிலும் அந்த ஆசிரமத்துப் பொறுப்பாளராக, தனக்கு இன்னொரு தோழியாக, அன்னையாக இருந்த வசந்தி கூட சக்தியைப் பற்றி நல்லவிதமாக அவளிடம் எடுத்துச் சொல்லியிருக்க, அவளுக்கு இன்னமும் தன் மனதில் இருக்கும் குழப்பங்கள் எல்லாம் அதிகரித்தது போலவே இருந்தது.

சக்தியின் காதலை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவள் இத்தனை நாட்களாக நினைத்திருக்க, இன்று அந்த மனநிலை மெல்ல மெல்ல அவளை விட்டு விலகிச் செல்வதைப் போல இருந்தது.

தன் மனதிற்குள் என்ன இருக்கிறது என்பதை சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் கவலையும், குழப்பமும் சூழ பூஜா நின்று கொண்டிருந்த வேளை அவளைத் தேடி தங்கள் அறையை நோக்கி வந்த சக்தி நிலவொளி வெளிச்சத்தில் பளிங்கு சிலையைப் போல நின்று கொண்டிருந்த தன் மனம் நிறைந்தவளைப் பார்த்து ஒரு நொடி பிரமித்துப் போய் நின்றான்.

சக்தியின் காதல் கொண்ட மனது அவளின் அருகில் செல்லும் படி அவனைத் தூண்ட, அவன் கால்களும் மனதின் ஆணையை ஏற்றுக் கொண்டபடி அவளை நோக்கி நகர்ந்து சென்றது.

பூஜா மறுபக்கமாக திரும்பி நின்று வானைப் பார்த்துக் கொண்டு நின்றதனால் சக்தி அவள் பின்னால் நடந்து வந்ததை அவள் கவனிக்கவில்லை.

ஐந்து வருடங்களாக அவளுடன் தன் கற்பனையிலேயே பல கனவுகளைப் பகிர்ந்து கொண்டவனுக்கு இப்போது நனவிலும் அந்த கற்பனைகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று ஆவல் எழுந்தாலும் வெகு சிரமப்பட்டு தன் அலை பாயும் மனதைக் கட்டுப்படுத்தியவன், “பூஜா” மென்குரலில் அவளை அழைத்தான்.

வெகு நேரமாக வானையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்ற பூஜா தன்னருகே கேட்ட சக்தியின் குரலில் அவன் புறம் திரும்பி பார்க்க, அதேநேரம் சக்தியும் அவளது முகத்தை காதலுடன் பார்த்துக் கொண்டு நின்றான்.

சக்தியின் கண்களில் தெரிந்த காதலைப் பார்த்ததும் பூஜாவின் மனது படபடவென்று அடித்துக் கொள்ள, அவள் கண்களோ சட்டென்று தன் பார்வையை தாழ்த்திக் கொண்டது.

இதற்கு முன் ஒரு சில தடவைகள் சக்தியின் காதல் பார்வையை அவள் நேர்கொண்டு சந்தித்திருக்கிறாள், ஆனால் இன்று அவனை நேர் கொண்டு சந்திக்க அவளால் முடியவில்லை.

அதற்கு காரணம் இன்று நடந்த சம்பவங்களின் தாக்கமா? இல்லை இதற்கு முன்னரும் அவள் மனதிற்குள் அவன் மீதிருந்த இனம் புரியாத உணர்வா? அவளால் என்ன காரணம் என்று சரியாக பிரித்தறிய முடியவில்லை.

இங்கே பூஜா வெவ்வேறு விதமான மனநிலையுடன் சக்தியின் முன்னால் வெட்கத்துடன் அவனை நேர் கொண்டு பார்க்க முடியாமல் தவிப்போடு நிற்க, மறுபுறம் சக்தியின் மனதோ அவளது மாற்றங்களைப் பார்த்து வானில் இறக்கையின்றி பறந்து கொண்டிருந்தது.

அவளது முகத்தில் தெரிந்த மாற்றங்களைப் பார்த்ததுமே அவனது மனதிற்குள் ஏதேதோ ஆசைகள் எழ, அவன் கைகளோ தயங்கித் தயங்கி அவளது தாடையை மெல்லப் பற்றி நிமிர்த்தியது.

சக்தியின் தீண்டலில் பூஜா தன் இமைகளைத் தாழ்த்திக் கொள்ள, அவனது காதல் மனது அவளது அருகாமையை வெகுவாக ரசிக்கத் தொடங்கியது.

சக்திக்கும், பூஜாவிற்கும் இடையே இரண்டு அடி இடைவெளியே இருக்க, அந்த இடைவெளி கூட வெகு தூரம் போல சக்தியின் மனதில் பட அவளை நோக்கி மேலும் சற்று நகர்ந்து நின்றவன் தன் இரு கைகளினாலும் அவளது முகத்தை ஏந்திக் கொண்டான்.

சக்தியின் நெருக்கத்தில் பூஜாவின் உடலிற்குள் ஏதேதோ மாற்றங்கள் நிகழ்வதைப் போல இருக்க, சிறிது தடுமாற்றத்துடன் சக்தியின் தோளைப் பிடித்துக் கொண்டவள் அவனைக் கண் திறந்து பார்க்கவே வெகுவாக தயங்கி நின்றாள்.

“பூஜா” சக்தியின் காதலான அழைப்பில் அவனை மெல்ல விழி திறந்து பார்த்தவள் அவனது முகத்தை அத்தனை நெருக்கத்தில் பார்த்ததுமே வெட்கம் சூழ மீண்டும் தன் இமைகளை மூடிக் கொண்டாள்.

“பூஜா, ஒரு தடவை என்னைப் பாரேன்” சக்தி ஏக்கத்துடன் பூஜாவைப் பார்த்துக் கூற, தன் கண்களைத் திறவாமலேயே மறுப்பாக தலையசைத்தவள் சிறு புன்னகையுடன் அவனை விட்டு விலகிச் செல்லப் போக, கண்ணிமைக்கும் நொடிக்குள் சக்தி அவளைத் தன் கைவளைவிற்குள் சிறைப்பிடித்துக் கொண்டான்.

சக்தியின் கரங்கள் இரண்டும் பூஜாவின் இடையை சுற்றி வளைக்க, அவனது தொடுகையில் உடல் சிலிர்க்க அவனை நிமிர்ந்து பார்த்தவள் சட்டென்று அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள்.

பூஜாவின் ஒவ்வொரு அசைவிலும் சக்தியின் காதல் மனது அவளது காதலை உணர்ந்து கொள்ள, மேலும் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன் அந்த ஏகாந்தமான தருணத்தை கண் மூடி ரசிக்கத் தொடங்கினான்.

ஒரு சில நாட்களாக சக்தியின் காதலினால் அவன் புறம் தன் மனதை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருந்த பூஜாவும் அன்றைய நாள் முழுவதும் நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தால் தன் மனதிற்குள் அவன் மேல் கொண்ட காதலை உணரத் தொடங்கியதால் என்னவோ அவனது அணைப்பில் இருந்து விலகி நிற்க எண்ணவேயில்லை.

சக்தியும், பூஜாவும் ஒருவரை மறந்து ஒருவர் தங்கள் காதலில் மூழ்கிப் போயிருந்த வேளை திடீரென வானில் இடி இடிக்கும் சத்தம் கேட்கவே பதட்டத்துடன் சக்தியை விட்டு விலகியவள் அங்கிருந்து செல்லப் பார்க்க, அவனோ அவளை சிறிதும் தன்னை விட்டு விலக அனுமதிக்கவில்லை.

அவளை மீண்டும் தன் அணைப்பிற்குள் கொண்டு வந்து நிறுத்தியவன் ஒரு கையால் அவள் இடையைப் பிடித்துக் கொண்டு மறுகையால் அவள் முக வளைவை அளந்து கொண்டு நின்றான்.

சக்தியின் ஒவ்வொரு விரல் தீண்டலிலும் பூஜாவின் மனது பந்தயக் குதிரையை விட வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

அவனது தொடுகையை முழுமையாக ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் ஒட்டுமொத்தமாக விலக்கவும் முடியாமல் தவிப்போடு நின்று கொண்டிருந்தவள் சிறிது தயக்கத்துடன் சக்தியை நிமிர்ந்து பார்த்தாள்.

பூஜாவின் பார்வை தன் மேல் இருப்பதை உணர்ந்தவனாக மேலும் தன் அணைப்பை இறுக்கியவன் தன் முதல் காதல் முத்திரையை அவள் நெற்றியில் பதித்தான்.

சக்தியின் இதழ் தீண்டலில் தன் கண்களை மூடிக்கொண்ட பூஜா அவனை விட்டு விலகிச் செல்ல நினைத்த போதும் அவள் கால்கள் இரண்டும் அந்த இடத்தை விட்டு அசையமாட்டேன் என்பது போல இருந்தன.

பூஜாவின் அமைதி சக்தியின் காதல் மனதை இன்னமும் தூண்ட அவளது கன்னங்கள் இரண்டிலும் தன் இதழைப் பதித்தவன் இறுதியாக அவள் இதழில் இளைப்பாறத் தொடங்கினான்.

ஒரு நிலைக்கு மேல் சக்தியை தன்னை விட்டு முழுவதும் விலக்கி வைக்க முடியாது என்று புரிந்து கொண்ட பூஜா அவன் இதழ்களின் கட்டளைக்கு இசைந்து போக, அந்த நிலவொளி சாட்சியாக பூஜா சக்தியின் முழு உரிமையாகிப் போனாள்.

இதழ்களின் ஆட்டத்தில் களைத்துப் போனவளாக சக்தியின் மார்பில் பூஜா சாய்ந்து கொள்ள, மெல்ல அவளது முகத்தை நிமிர்த்தியவன் அவளது குடை போன்ற இரு இமைகளிலும் இதழொற்றி விட்டு மீண்டும் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

கிடைக்கவே கிடைக்காது என்று அவன் நினைத்திருந்த பொக்கிஷம் இன்று அவன் கைச்சிறைக்குள் அவனுக்கே முழு உரிமையாகி கிடைத்து விட்டது என்று சந்தோஷமான உணர்வுடன் அவளது தலையை மெல்ல வருடிக் கொடுத்தவன் தன் மார்பில் ஈரம் படிவதை உணர்ந்தவனாக பூஜாவை விலக்கி நிறுத்த, அவளோ கலங்கிய தன் கண்களை அவன் கவனிக்கக் கூடாது என்பது போல தலை குனிந்து நின்றாள்.

பூஜாவின் கலங்கிய தோற்றத்தைப் பார்த்ததும் சக்தியின் மனம் சொல்லொணா வேதனையில் துடிதுடித்து போக, ‘சக்தி, நீ ரொம்ப அவசரப்பட்டுட்டடா. பூஜாவோட முழு சம்மதம் இல்லாமல் அவளது குழப்பமான மனநிலையை நீ உனக்கு சாதகமாக பயன்படுத்திட்டியே டா. இப்போ அவளை எப்படி நீ தைரியமாக எதிர் கொள்ள முடியும்? அவளோட அனுமதி இல்லாமல் இப்படி அத்துமீறிட்டியே சக்தி, இப்படி அவசரப்பட்டுட்டியேடா’ பூஜாவின் கண்ணீருக்கு தன் நடவடிக்கைகள் தான் காரணம் என்று எண்ணிக் கொண்டு தன்னைத் தானே கடிந்து கொண்டவனாக சக்தி அவளை விட்டு மெல்ல மெல்ல விலகிச் செல்ல ஆரம்பித்தான்.

சக்தி தன்னை விட்டு விலகிச் செல்வதைப் பார்த்து விட்டு அவசரமாக தன் கண்களைத் துடைத்துக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்த பூஜா, “சக்தி, நீங்க?” என்று கேட்க போக, அதற்கிடையில் சக்தி, “ஐ யம் சாரி பூஜா, நான் ஏதோ ஒரு நினைவில் இப்படி எல்லாம். ஐ யம் ரியலி சாரி பூஜா. ஐ யம் ரியலி சாரி” என்றவாறே அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றிருந்தான்.

“சக்தி, நில்லுங்க” பூஜா அவனது நடவடிக்கைகளைப் பார்த்து சிறிது குழப்பத்துடன் அவனைப் பின் தொடர்ந்து செல்ல, அதற்குள் சக்தி தன் காரை எடுத்துக் கொண்டு வேகமாக அவர்கள் வீட்டைவிட்டு புறப்பட்டு சென்றிருந்தான்.

‘சக்திக்கு என்ன ஆச்சு? இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்தாங்க?’ சக்தியின் கார் சென்ற வழியையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்ற பூஜா தன் கண்களை மெல்ல துடைத்து விட, அப்போதுதான் அவளுக்கு அவனது இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் புரிந்தது.

‘நான் கண் கலங்கியதைப் பார்த்து சக்தி அவர் நடந்து கொண்ட விதம் பிடிக்காமல் தான் நான் அழுவதாக நினைத்துக் கொண்டாரா? ஐயோ! சக்தி, உங்களுக்கு கொஞ்சம் கூட பொறுமையே இல்லையா? இத்தனை நாட்களாக நான் உங்களை, உங்க காதலைப் புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டேனே என்று என் மேல் கோபம் கொண்டு தானே நான் கண் கலங்கி நின்றேன். அதை நான் சொல்வதற்கு இடையில் இப்படி அவசரமாக எங்கே கிளம்பி போயிட்டீங்க சக்தி? உங்க கிட்ட நானும் என் மனது விட்டு பேசணும்னு எவ்வளவு ஆசையா இருந்தேன், ஆனா நீங்க என்ன, ஏதுன்னு கூட கேட்காமல் போயிட்டீங்க. நீங்க திரும்பி வாங்க உங்களுக்கு இருக்கு கச்சேரி’ தங்கள் அறையில் மாட்டப்பட்டிருந்த சக்தியின் புகைப்படத்தை முறைத்துப் பார்த்தபடியே அவனை எச்சரிப்பது போல பேசிக் கொண்டு நின்றவள் சிறிது நேரம் கழித்து சிரித்துக் கொண்டபடியே அங்கிருந்த சாய்வு நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டாள்.

“என்னைச் சுற்றி இருந்த எல்லோரும் சொன்னது உண்மைதான். சக்தி ரொம்ப ரொம்ப நல்லவங்க, என் மேல் ரொம்ப ரொம்ப பாசம் வைத்து இருக்காங்க, என் மேல் பாசம் இல்லேன்னா சண்டை, ரவுடிங்க மேல பயம் இருந்தும் இரண்டு தடவை என் உயிரைக் காப்பாற்ற வந்து இருப்பாங்களா? முதல் தடவை நடந்தது வேணும்னா தற்செயலாக நடந்து இருக்கலாம், ஆனால் இரண்டாம் தடவை நடந்தது தற்செயலாக நடந்தநு இல்லை. என்னைக் காப்பாற்ற, எனக்காகவே என்னைத் தேடி வந்து இருக்காங்க. ஐ யம் சாரி சக்தி, உங்களை, உங்க காதலைப் புரிந்து கொள்ள எனக்கு இத்தனை நாட்கள் தேவைப்பட்டு இருக்கு.
ஆரம்பத்தில் உங்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஏற்படும் படபடப்பு உங்க மேலே எனக்கு இருந்த காதலினால் தான் என்கிற உண்மை எனக்கு இப்போ தான் புரியுது. இந்த உண்மையைப் புரிய வைத்தது வசந்திம்மா தான், அவங்க மட்டும் இன்னைக்கு உங்களை விட்டு போகும் படி என்கிட்ட சொல்லி இருக்கேலேன்னா எனக்கு என் மனதில் என்ன இருக்குன்னு கூட தெரிந்து இருக்காது.
ஒரு பேச்சுக்கு உங்களை விட்டு விலகிப் போக சொன்னதையே என்னால் தாங்கிக் கொள்ள முடியாத போது என்னால் எப்படி உங்களை விட்டு முழுமையாக விலகிப் போக முடியும்? எப்படி என்னால் உங்களை விட்டு விலகிப் போக முடியாதோ அதே மாதிரி உங்க நெருக்கத்தையும் என்னால் தவிர்த்து போக முடியாது சக்தி” சிறிது நேரத்திற்கு முன்பு சக்தியுடன் தான் செலவிட்ட அந்த நெருக்கமான பொழுதுகளை நினைத்துப் பார்த்தபடி தன் தலையில் தட்டிக் கொண்டவள்,

“எப்போ சக்தி நீங்க திரும்பி வருவீங்க? நீங்க திரும்பி வந்ததும் உங்க கிட்ட என் மனதில் இருக்கும் என்னோட காதலை சொல்லணும் சக்தி. என் காதலை சொல்லும் போது உங்க முகத்தில் வர்ற சந்தோஷத்தை நான் பார்க்கணும் சக்தி. ப்ளீஸ் சக்தி, சீக்கிரமாக வந்துடுங்க” என்றவாறே சுவற்றில் இருந்த கடிகாரத்தைப் பார்ப்பதும், தங்கள் அறையின் வாயிலைப் பார்ப்பதுமாக அமர்ந்திருந்தாள்.

இங்கே பூஜா சக்தியின் மீதான தன் காதலை உணர்ந்து விட்ட சந்தோஷத்தில் அவனது வருகையை எண்ணி எதிர்பார்த்துக் காத்திருக்க, மறுபுறம் சக்தியின் கார் கதவுகள் எல்லாம் திறந்த நிலையில் ஒரு தெரு ஓரமாக ஆள் நடமாட்டம் இல்லாத பாதையில் அவனின்றி தனியாக நின்று கொண்டிருந்தது.

**********
காலை நேரம் பறவைகளின் கீச்சொலி சத்தத்தில் தன் துயில் கலைந்து எழுந்து அமர்ந்த பூஜா அப்போதுதான் தான் அமர்ந்திருந்த நிலையிலேயே உறங்கியிருக்கிறோம் என்பதைக் கண்டு கொண்டாள்.

“ஐயோ! அப்படியே தூங்கிட்டேன் போல” சிறு கண்டிப்புடன் தனது தலையில் தட்டிக் கொண்டவள் தங்கள் அறையைச் சுற்றி தன் பார்வையை சுழல விட, அங்கே சக்தி வந்து சென்றதற்கான எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை.

“சக்தி ராத்திரி பூராவும் வீட்டுக்கு வரலயா?” சற்றே குழப்பத்துடன் தன் தொலைபேசியை எடுத்துப் பார்த்தவள் அதில் அவனிடமிருந்து எந்தவொரு அழைப்பும், குறுஞ்செய்தியும் வரவில்லை என்பதை உணர்ந்து கொண்டவளாக கலக்கத்துடன் தன் கையிலிருந்த தொலைபேசியை வெறித்துப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.

“இப்போ என்ன ஆச்சுன்னு அவருக்கு இவ்வளவு கோபம்? ஒரு வார்த்தை நான் ஏன் அழுதேன்னு கேட்டால் அவருக்கு குறைந்தா போயிடும்? வீட்டுக்கு அவங்க வரட்டும், கவனிச்சுக்கிறேன்” குரல் கம்ம தன் தொலைபேசியைப் பார்த்து பேசிக் கொண்டு நின்றவள் சிறிது சலிப்புடன் அதை அங்கிருந்த மேஜை மீது வைத்து விட்டு தன் மாற்றுடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

குளித்து முடித்து விட்டு வந்து தன் தொலைபேசியை எடுத்துப் பார்த்தவள் அப்போதும் சக்தியிடமிருந்து எந்தவொரு தகவலும் வரவில்லை என்பதை பார்த்து விட்டு, “ஒருவேளை அவருக்கு ஏதாவது பிரச்சினையாக இருக்குமோ? சேச்சே! அப்படி எல்லாம் எதுவும் இருக்காது” தன் மனவோட்டத்தை எண்ணி தன்னைத் தானே கடிந்து கொண்டவளாக, தன் கோபத்தை கை விட்டு விட்டு சக்தியின் எண்ணிற்கு அழைப்பை மேற்கொள்ள, மறுமுனையில் அவனது தொலைபேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது.

மீண்டும் மீண்டும் அவனது எண்ணிற்கு அழைப்பை மேற்கொண்டவள் ஒரு கட்டத்திற்கு மேல் சோர்ந்து போனவளாக அப்படியே தரையில் முழங்காலிட்டு அமர்ந்து கொள்ள, அவளைச் சாப்பிட அழைத்துச் செல்ல வந்த மீரா அவளது அந்த நிலையைப் பார்த்து விட்டு, “அண்ணி, என்ன ஆச்சு?” என்றவாறே அவளை நோக்கி வேகமாக ஓடி வந்து நின்றாள்.

மீராவை அங்கே பார்த்ததும் தன் தவிப்பும், படபடப்பும் ஒன்று சேர எழுந்து நின்று அவளைத் தாவி அணைத்துக் கொண்டவள், “சக்தி, சக்தி எங்கே மீரா?” விசும்பிக் கொண்டே அவளைப் பார்த்து வினவ,

அவளோ, “சக்திண்ணாவையும், உங்களையும் சாப்பிட அழைச்சுட்டு போகத் தானே நான் வந்தேன். நீங்க என்னடான்னா என் கிட்ட சக்திண்ணா எங்கேன்னு கேட்குறீங்க?” என்றவாறே பதட்டத்துடன் அவளைப் பார்த்து வினவினாள்.

“என்ன சக்தி கீழே இல்லையா?” மீராவின் கேள்வியில் குழப்பத்துடன் அவளை விட்டு விலகி நின்றவள்,

“அப்போ சக்தி எங்கே போனாங்க?” தன் குழப்பம் மாறாமல் மீண்டும் அவளைப் பார்த்து வினவினாள்.

“என்ன அண்ணி ஆச்சு உங்களுக்கு? சக்திண்ணா யாருகிட்டேயும் சொல்லாமல் அப்படி எங்கே தான் போனாங்க? உங்களுக்கும், அவருக்கும் ஏதாவது பிரச்சினையா?”

“அது நேற்று நைட் பால்கனியில் வைத்து நான் அவர் மேலே சாய்ந்து நிற்கும் போது…” சட்டென்று தான் சொல்ல வந்த விடயத்தை நிறுத்தி விட்டு பூஜா திருதிருவென விழித்துக் கொண்டு நிற்க,

அவளைப் பார்த்து சத்தமாக சிரித்துக் கொண்ட மீரா, “என்ன அண்ணி? ஏதோ சொல்ல வந்தீங்க போல இருக்கு” என்று கேட்க, அவளோ வெட்கத்துடன் கன்னங்கள் இரண்டும் சிவந்து போக தன் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.

“சரி, சரி அண்ணி. ரிலாக்ஸ். இது ஏதோ கணவன், மனைவி கூடல் போல. இதையெல்லாம் பெரிய பிரச்சினையா எடுத்துக் கொள்ளலாமா? விடுங்க அண்ணி. அண்ணா வந்து விடுவாரு, நீங்க வாங்க சாப்பிட போகலாம்”

“கண்டிப்பாக வந்துடுவாங்க தானே?”

“அண்ணாவோட கோபம் எல்லாம் கொஞ்ச நேரம் தான் அண்ணி, அதுவும் உங்க மேலே நிச்சயமாக அவன் கோபப்படவே மாட்டான், அதனால இப்போ நீங்க சமத்துப் பொண்ணு மாதிரி கீழே வருவீங்களாம், நாம சாப்பிட போகலாமாம், சரியா? போகலாமா?” பூஜாவின் கன்னத்தைப் பிடித்து ஆட்டி விட்டு அவளது கையைப் பிடித்தபடியே மீரா படியிறங்கி செல்ல, அவளும் சக்தி வந்து விடுவான் என்ற நம்பிக்கை உணர்வுடன் அவளைப் பின் தொடர்ந்து நடந்து சென்றாள்.

மீராவும், பூஜாவும் படியிறங்கி வருவதைப் பார்த்து விட்டு தன் கையிலிருந்த பாத்திரத்தை சாப்பாட்டு மேஜை மீது வைத்து விட்டு அவர்கள் இருவருக்கும் முன்னால் வந்து நின்று கொண்ட சந்திரா, “என்ன மீரா நீங்க இரண்டு பேரும் மட்டும் தான் வர்றீங்க, சக்தி வரலயா?” என்றவாறே அவர்கள் இருவரையும் தாண்டி தன் பார்வையை சுழல விட,

சிறு புன்னகையுடன் பூஜாவைப் பார்த்து, “நான் சமாளிக்கிறேன்” என்று விட்டு தன் அன்னையின் அருகில் வந்து நின்று கொண்ட மீரா,

“அம்மா, அண்ணாக்கும், அண்ணிக்கும் சின்னதாக செல்ல சண்டை போல, அதுதான் அண்ணா நேரத்திற்கே கிளம்பி போயிட்டாங்க. நம்ம சக்தி சாரோட கோபத்தைப் பற்றி நமக்குத் தெரியாதா என்ன? கொஞ்ச நேரத்தில் அவரே வந்துடுவாங்கம்மா, நீங்க வாங்க. வந்து எல்லோருக்கும் சாப்பாடு எடுத்து வைங்க” என்றவாறே அவரை சாப்பாட்டு மேஜை வரை அழைத்துக் கொண்டு செல்ல, அவரோ மீராவின் பேச்சைக் கேட்டதிலிருந்து இனம் புரியாத ஒரு பதட்டமான உணர்வுடன் அனைவருக்கும் உணவு பரிமாறத் தொடங்கினார்.

‘சக்தி ஒரு நாளும் தன் கோபத்தை சாப்பாட்டின் மீது காண்பிக்க மாட்டானே, என்னதான் வேலையாக இருந்தாலும் சரி ஒரு வாய் சரி சாப்பிடாமல் அவன் எங்கேயும் வெளியே போகவே மாட்டான். இத்தனை வருடங்களாக அவனது நடவடிக்கைகளைப் பற்றி பெற்று வளர்த்த அம்மா எனக்குத் தெரியாது இருக்குமா? கடவுளே, என் பையனுக்கு எந்தவொரு பிரச்சினையும் வராமல் பார்த்துக்கொள்ளுப்பா’ சக்தியை எண்ணி தன் மனதிற்குள் ஏற்பட்ட கவலையுணர்வை நீக்க இயலுமானவரை தன் இஷ்ட தெய்வத்தை எல்லாம் சந்திரா தன் மனதிற்குள்ளேயே வேண்டிக்கொண்டு அமர்ந்திருக்க, அவரின் முக மாற்றங்களை வைத்தே ஏதோ சரியில்லை என்பதை பூஜா உணர்ந்து கொண்டாள்.

‘அத்தை முகம் சரியாகவே இல்லை, அவங்களும் சக்தியை நினைத்துத் தான் கவலையாக இருக்கிறாங்க போல. இப்படி எல்லோரையும் கவலைப்பட செய்து விட்டு எங்கே சக்தி போனீங்க?’ தன் தொலைபேசி திரையில் தெரிந்த சக்தியின் நிழல் படத்தைப் பார்த்து பேசிய படியே அந்த வீட்டின் தோட்டப்புறமாக சென்று அமர்ந்து கொண்டவள் அவனது எண்ணிற்கு மீண்டும் அழைப்பை மேற்கொள்ள இப்போதும் அவனது தொலைபேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதாகவே சொல்லப்பட்டது.

‘கடவுளே! சக்திக்கு எதுவும் ஆகி இருக்கக் கூடாது. எப்படியாவது அவங்களை மறுபடியும் வீட்டுக்கு வர வைத்துடுங்க. எனக்கு சக்தியை இப்போவே பார்க்கணும் போல இருக்கு. ப்ளீஸ் சக்தி, திரும்ப வந்துடுங்க’ சக்தியை எண்ணிக் கவலை கொண்டவளாக அங்கிருந்த கல் நாற்காலியில் பூஜா சாய்ந்து அமர்ந்து கொள்ள, மறுபுறம் சக்தி முகத்தில் இருந்து இரத்தம் சொட்ட சொட்ட அரை மயக்கத்தில் ஒரு நாற்காலியில் கயிற்றினால் கட்டி வைக்கப்பட்டிருந்தான்………

**********
கண்களில் சோகம் என்ன
காதலால் காவல் செய்வேன்
கண்மணி உன்னை தேண்டும்
காற்றுக்கும் வேலி செய்வேன்
ஆயிரம் தடை தாண்டியே
உன்னை பாதுகாப்பேன் நானே நானே
**********