இதயம் – 24 (Pre-final)

eiHJN6N67051-8f0d4e38

 

முகத்தில் பல இடங்களில் இருந்து இரத்தம் சொட்டு சொட்டாக தரையில் விழுந்து கொண்டிருக்க, தன் கண்களை பாதி திறந்தும் திறவாமலும் அமர்ந்திருந்த சக்தி தானிருந்த இடத்தைச் சுற்றி நோட்டம் விடத் தொடங்கினான்.

பாதி இருள் சூழ்ந்திருந்த அந்த இடத்தில் பல வெற்று அட்டைப் பெட்டிகள் இறைந்து கிடந்ததோடு, சுற்றிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில மூட்டைகளும் சிதறிக் கிடந்தன.

‘இந்த இடத்திற்கு நான் எப்படி வந்தேன்? இது எந்த இடம்?’ தனக்கு என்ன நேர்ந்தது என்ற யோசனையுடன் தன் கைகளை சக்தி தூக்க முயல, அவனால் அவனது கைகளை அசைக்கவே முடியவில்லை.

‘ஏன் என்னால் இந்த இடத்தை விட்டு அசைய முடியாமல் இருக்கிறது?’ குழப்பத்துடன் சக்தி தன் கைகளை குனிந்து பார்க்க, அவை இரண்டுமோ அவன் அமர்ந்திருந்த நாற்காலியின் கைப்பிடியுடன் சேர்த்து இறுக்கமாகக் கட்டி வைக்கப்பட்டிருந்தது.

‘யாரு என்னைக் கட்டி வைத்தது? எனக்கு என்ன தான் ஆச்சு? இது எந்த இடம்? நான் என் காரில் தானே இருந்தேன், அப்புறம் எப்படி நான் இங்கே? யாரு இப்படி எல்லாம் பண்ணது? எத்தனை நாளாக நான் இப்படி இந்த இடத்தில் கட்டி வைக்கப்பட்டிருக்கேனோ தெரியலையே? அம்மா, அப்பா என்னை நினைத்து ரொம்ப கவலையாக இருப்பார்களே? ஐயோ! என்னைச் சுற்றி என்ன தான் நடக்குது?’ சக்தியின் மனதிற்குள் பல கேள்விகள் சூழ்ந்து கொள்ள, தன் பார்வையை அந்த இடத்தை சுற்றிலும் அவன் நோட்டம் விடும் வேளை திடீரென அந்த இடத்தின் ஒருபுறமிருந்து அவன் கண்களைக் கூசச் செய்யும் அளவிற்கு வெளிச்சம் பாய, தன் கண்கள் இரண்டையும் இறுக மூடிக் கொண்டவன் சிறிது நேரம் கழித்து தன் கண்களை மெல்லத் திறந்து பார்த்தான்.

நான்கு, ஐந்து நபர்கள் தங்கள் கைகளைக் கட்டிக்கொண்டு அவனின் முன்னால் நின்று கொண்டிருக்க, அந்த நபர்களை எல்லாம் தாண்டிக் கொண்டு வந்து நின்ற அந்த நபரைப் பார்த்து அவனுக்கு அதிர்ச்சியில் சப்தநாடிகளும் உறைந்து போனது.

**********
தன் கண்கள் இரண்டிலும் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிய அதைத் துடைத்து விடும் எண்ணம் கூட தோன்றாதவர் போல அமர்ந்திருந்த சந்திராவைப் பார்த்து அந்த வீட்டில் இருந்த அனைவரும் வெகுவாக கலங்கிப் போயினர்.

சக்தி அவன் வீட்டில் இருந்து காணாமல் போய் அன்றோடு முழுமையாக மூன்று நாட்கள் நிறைவு பெற்றிருந்தது.

இந்த மூன்று நாட்களில் அவர்களுக்கு அவனைப் பற்றி எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை, மாறாக அவனது கார் ஆள்நடமாட்டம் அற்ற ஒரு சாலையில் தனித்து நின்று கொண்டிருந்ததது என்ற செய்தி மாத்திரமே கிடைத்திருந்தது.

அதோடு அவனது தொலைபேசி கூட அந்த காரின் உள்ளேயே சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்ததாக கூறப்பட்டிருக்க, அவனது குடும்பத்தினருக்கு அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை.

காவல் நிலையத்தில் அவர்கள் புகார் கொடுத்திருந்தும் இன்று வரை சக்தியைப் பற்றி எந்தவொரு தகவலையும் அவர்களால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

சக்தியைக் கடத்திச் செல்லும் அளவிற்கு அவனுக்கு எதிரிகள் யார் இருக்கக்கூடும் என்று அவனது ஒட்டுமொத்த குடும்பத்தினரும் குழப்பத்தில் மூழ்கியிருக்க, பூஜாவின் மனதிற்குள் விஷ்வாவைக் கொலை செய்த அந்த ரவுடிகள் மறுபடியும் வந்து விட்டார்களோ என்கிற அச்சவுணர்வு அடிக்கடி வந்து செல்ல ஆரம்பித்தது.

தங்கள் திருமணம் நடந்து முடிந்து கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கடந்திருக்கும் நிலையில் இதுவரையில் அந்த ரவுடிகளால் எந்தவொரு பிரச்சினையும் வந்திருக்கவில்லை, எல்லாம் மிகவும் சுமூகமாக தான் சென்று கொண்டிருந்தது.

அப்படியிருக்கையில் அந்த ரவுடிகள் மறுபடியும் திடீரென வந்திருந்தால் அவர்கள் வருவதற்கு என்ன காரணமாக இருக்கக் கூடும் என்கிற யோசனையுடன் பூஜா தன் தொலைபேசித் திரையில் தெரிந்த சக்தியின் நிழல் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்க, அவளின் அருகில் அமர்ந்திருந்த அவளது அன்னை செல்வி அவளது தலையை மெல்ல வருடிக் கொடுத்தபடி அமர்ந்திருந்தார்.

யாருக்கு யார் ஆறுதல் சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் அமர்ந்திருக்க, அவர்கள் எல்லோரையும் விட்டு சிறிது தூரம் தள்ளி நின்று கொண்டிருந்த வளர்மதியின் முகத்தில் அத்தனை ஆனந்தம் பரவியிருந்தது.

‘எல்லோரும் ரொம்ப ஃபீல் பண்ணுறாங்க போல இருக்கே. அதுவும் நல்லதுதான். அன்னைக்கு அந்த சக்தி இந்த பூஜாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நின்னப்போ அவனோட அம்மா என்னை எப்படி எல்லாம் பேசுனாங்க, இன்னைக்கு நல்லா எல்லோரும் அழுது தீர்க்கட்டும், ஏன்னா எனக்கு கிடைக்காத சக்தி வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது’ என தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டபடியே வளர்மதி சக்தியின் குடும்பத்தினரைப் பார்த்து ஏளனமாக சிரித்துக் கொண்டே அங்கிருந்து வெளியேறிச் செல்ல, அவள் நின்று கொண்டிருந்த இடத்திற்கு எதிர்ப்புறமாக தன் அன்னையின் தோளில் சாய்ந்து அமர்ந்திருந்த பூஜா வளர்மதியையும், அவளது முகத்தில் தெரிந்த சந்தோஷத்தையும் பார்த்து விட்டு சிறிது குழப்பத்துடன் அவளைப் பின் தொடர்ந்து நடந்து சென்றாள்.

தன் பின்னால் யாராவது வருகிறார்களா என்று நோட்டம் விட்டபடியே பதுங்கி பதுங்கிச் செல்லும் வளர்மதியைப் பார்த்ததும் பூஜாவின் மனதிற்குள் ஒரு இனம்புரியாத பதட்டம் தொற்றிக் கொண்டது.

‘இந்த பொண்ணு எதற்காக இப்படி ஒளிந்து ஒளிந்து போகணும்? ஒருவேளை சக்தி காணாமல் போனதற்கும், இவளுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ?’ வளர்மதியின் வித்தியாசமான நடவடிக்கைகளைப் பார்த்து சந்தேகம் கொண்டவளாக அவள் அறியா வண்ணம் அவளைப் பின் தொடர்ந்து வந்த பூஜா அங்கிருந்த ஒரு பெரிய மரத்தின் பின்னால் நின்று கொள்ள, அதேநேரம் வளர்மதி தன் தொலைபேசியை எடுத்து ஒரு எண்ணிற்கு அழைப்பை மேற்கொண்டாள்.

“ஹலோ, அந்த சக்தி கண்ணு முழிச்சுட்டானா? இல்லை, இன்னும் மயக்கத்தில் தான் இருக்கிறானா?” அவளது கேள்விக்கு மறுபுறம் இருந்து என்ன பதில் வந்ததோ தெரியவில்லை, ஆனால் அந்த பதிலைக் கேட்டதும் அவளது முகத்தில் எதையோ சாதித்து விட்ட வெற்றிக் களிப்பு நிறைந்து போய் இருந்தது.

அவளது முகத்தில் தெரிந்த சந்தோஷத்தைப் பார்த்த பின்னர் தான் பூஜாவிற்கு எல்லாம் பிடிபடத் தொடங்கியது.

‘அப்படின்னா இவ தன் சக்தியை கடத்தி வைத்து இருக்காளா? ஆனால் ஏன்? ஒருவேளை சக்தி அவளைக் கல்யாணம் பண்ணிக்கலைன்னு கோபத்தில் இப்படி எல்லாம் பண்ணிட்டாளா? சே! என்ன மாதிரி பொண்ணு இவ? முதல்ல இவளை வீட்டில் இருக்கும் எல்லோர் முன்னிலையிலும் வைத்து விசாரிக்கணும், அப்போதுதான் என்னோட சக்தியை கண்டுபிடிக்க முடியும்’ என்று நினைத்துக் கொண்டபடியே தான் மறைந்திருந்த மரத்தின் பின்னால் இருந்து பூஜா வெளியேறி வந்து நிற்க, அவளை அந்த இடத்தில் பார்த்ததும் வளர்மதிக்கு வேர்த்துக் கொட்ட ஆரம்பித்தது.

“பூஜா! நீ, நீ இங்கே எப்படி?” வளர்மதி பதட்டத்துடன் அவசரமாக தன் தொலைபேசியை தன் பின்னால் மறைத்துக் கொள்ள,

அவளது கையிலிருந்த தொலைபேசியை வலுக்கட்டாயமாக பறித்து எடுத்துக் கொண்ட பூஜா, “என்ன வளர்மதி இது எல்லாம்? நீ சின்ன பொண்ணுன்னு எல்லோரும் நினைத்து இருந்தால் நீ என்ன வேலை பார்த்து வைத்து இருக்க? சக்திக்கு இப்படி ஒரு கெடுதலைப் பண்ண உனக்கு எப்படி மனசு வந்தது? அவங்க குடும்பத்தில் உள்ளவங்க உனக்கு இதுவரைக்கும் ஒரு கெடுதலாவது நினைத்து இருப்பாங்களா? அவங்களுக்கு போய் இப்படி ஒரு பாவத்தை செய்து வைத்து இருக்கியே. நீ எல்லாம் ஒரு பொண்ணா?” சிறிது அதட்டலுடன் அவளைப் பார்த்து வினவ, தன் கைகளைப் பிரிப்பதும், கோர்ப்பதுமாக நின்று கொண்டிருந்தவள் பதில் எதுவும் பேசாமல் தலை குனிந்து நின்றாள்.

“ஏன் வளர்மதி இப்படி எல்லாம் பண்ண? உனக்கு இப்படி ஒரு காரியம் பண்ண எங்கே இருந்து தைரியம் வந்தது?” பூஜா அவளது தோளைப் பற்றி கோபமாக உலுக்க, அவர்கள் இருவரையும் தேடி வெளியே வந்த மலர்விழி பூஜாவின் கோபமான தோற்றத்தையும், தன் தங்கையின் பதட்டமான தோற்றத்தையும் பார்த்து விட்டு அவசரமாக அவர்கள் இருவருக்கும் நடுவில் வந்து நின்று கொண்டார்.

“இங்கே என்ன நடக்குது? பூஜா, நீ எதற்காக வளர்மதி கிட்ட இப்படி கோபமாக பேசுற? தேவையில்லாமல் உன் கோபத்தை எல்லாம் என் தங்கை கிட்ட நீ காட்ட வேண்டாம்” என்றவாறே மலர்விழி பூஜாவைத் தாண்டி தன் தங்கையை அழைத்துக் கொண்டு செல்லப் போக,

அவர்கள் இருவருக்கும் முன்னால் வழி மறித்தவாறு வந்து நின்று கொண்டவள், “என் சக்தி எங்கே இருக்காங்கன்னு சொல்லாமல் இந்த இடத்தை விட்டு இவளை நகர நான் விடமாட்டேன். எனக்கு என் சக்தி எங்கே இருக்காங்கன்னு தெரிந்தே ஆகணும். அவ போன் என் கையில் இருக்கு, இதில் அவளோட உண்மை எல்லாமே இருக்கு. இதற்கு மேலேயும் அவ பொய் சொன்னால் இந்த போனை போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்து விசாரிக்குற மாதிரி விசாரித்து உண்மையை வரவைப்பேன்” என்று கூற, அவளது கூற்றில் மலர்விழி அதிர்ச்சியாக வளர்மதியைத் திரும்பிப் பார்த்தாள்.

“ஏய் வளர்மதி, இந்த பூஜா என்ன என்னென்னவோ எல்லாம் சொல்லுறா? சக்தி எங்கே இருக்காங்கன்னு உனக்குத் தெரியுமா என்ன?” மலர்விழி சிறிது அச்சத்தோடு அவளைப் பார்த்து வினவ,

இதற்கு மேலும் தன்னால் அங்கிருந்து தப்பிக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்ட வளர்மதியும் அவளைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தாள்.

“அடிப்பாவி! மூணு நாளாக இந்த வீட்டில் என்ன என்ன எல்லாம் நடந்ததுன்னு தெரிந்தும் ஏன்டி நீ ஒரு வார்த்தை கூட சொல்லல”

“அவ எப்படி சொல்லுவா? சக்தியைக் கடத்திக் கொண்டு போக வைத்ததே உங்க தங்கை தானே” என்றவாறே பூஜா முகம் சிவக்க வளர்மதியைப் பார்த்துக் கொண்டு நிற்க,

மீண்டும் அதிர்ச்சியாக தன் நெஞ்சில் கை வைத்தபடி வளர்மதியைத் திரும்பிப் பார்த்த மலர்விழி, “இவ சொல்லுறது உண்மையா வளர்மதி? சக்தி காணாமல் போனதற்கு நீ தான் காரணமா? சொல்லுடி நீ தான் காரணமா?” கோபமாக அவளது தோளைப் பற்றி உலுக்க, அவளோ தன் உதட்டை கடித்துக் கொண்டபடி அவளைப் பார்த்து ஆமென்று தலையசைத்தாள்.

“அடிப்பாவி! ஏன்டி இப்படி பண்ண? ஏன்டி இப்படி பண்ண?” தன் ஒட்டுமொத்த கோபமும் தீரும் வரை மலர்விழி அவளை சாரமாரியாக அடிக்கத் தொடங்க,

அவர்கள் இருவரையும் விலக்கி விட்ட பூஜா, “இப்போ கோபப்பட்டு உங்க தங்கையை அடிப்பதற்கு எல்லாம் நேரம் இல்லை அக்கா, சக்தியை முதலில் அழைச்சுட்டு வரணும். சக்தியைப் பார்க்காமல் வீட்டில் எல்லோரும் ரொம்ப தவித்துப் போய் இருக்கோம், முதலில் அவங்க எங்க இருக்காங்கன்னு கேளுங்க, அது போதும்” என்று கூறவும், தன் தங்கையை கோபமாக முறைத்துப் பார்த்தவள் அவளது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அந்த வீட்டின் ஹாலில் சென்று நின்று கொண்டாள்.

திடீரென தங்கள் முன்னால் நின்று கொண்டிருந்த மலர்விழி மற்றும் வளர்மதியை சக்தியின் குடும்பத்தினர் எல்லோரும் குழப்பமாகப் பார்க்க, அவர்கள் எல்லாவற்றையும் பார்த்து தன் இரு கரம் கூப்பி நின்ற மலர்விழி, “முதல்ல எல்லோரும் என்னை மன்னிச்சுடுங்க. இந்த வீட்டில் மூணு நாளாக நாம எல்லோரும் இப்படி இருக்க காரணம், இதோ என் தங்கச்சி வளர்மதி தான். இவ தான் சக்தியை யாரோ ஆளுங்களை வைத்துக் கடத்தி இருக்கா, பாவி. அவளுக்கு சக்தியைக் கல்யாணம் பண்ணி வைக்கலேன்னு கோபத்தில் இப்படி ஒரு வேலையை அவ பண்ணிட்டா அவ செய்த தப்புக்கு நான் உங்க எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்கிறேன். தயவுசெய்து மன்னிச்சிடுங்க” என்று கூற, அவள் கூறியதைக் கேட்டு சந்திரா அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க, மற்ற அனைவரும் வளர்மதியைக் கோபமாக முறைத்துப் பார்த்துக் கொண்டு நின்றனர்.

தன் அதிர்ச்சியில் இருந்து வெளிவந்தவராக வளர்மதியின் முன்னால் வந்து நின்ற சந்திரா, “என்னதான் நான் உன்னைக் கோபமாக பேசினாலும் இப்போ வரைக்கும் நான் உன்னை என் பொண்ணு மாதிரி தான் நினைத்து இருந்தேன், அது மட்டுமில்லாமல் நீ சின்ன பொண்ணுன்னு தான் இத்தனை நாளாக நினைத்து இருந்தேன், ஆனா அது எல்லாவற்றிற்கும் நீ நல்ல கைம்மாறு பண்ணிட்டம்மா, நல்ல கைம்மாறு பண்ணிட்ட. உன்னையும் ஒரு ஆளாக நினைத்தோமே எங்களை சொல்லணும்”

“அத்தை!”

“போதும். நிறுத்து” அவரது கூற்றுக்கு பதில் சொல்ல போன வளர்மதியைப் பார்த்து வேண்டாம் என்பது போல தன் கையைக் காண்பித்தவர்,

“என் சக்தி எங்கேன்னு சொல்லு” சிறிது அதட்டலுடன் அவளைப் பார்த்து வினவினார்.

“அது…அது….”

“சொல்லுன்னு சொன்னேன்லே”

“அத்தை சத்தியமாக நான் வேணும்னே இப்படி எல்லாம் பண்ணல அத்தை. அந்த ரவுடிங்க தான் சக்தி அத்தானை கொஞ்ச நாளாக பாலோ பண்ணி வந்துட்டு இருந்தாங்க. அவங்க சக்தி அத்தானை கடத்தணும்னு பேசிட்டு இருந்ததை நான் ஒரு நாள் கேட்டேன், அவங்க அப்படி பேசிட்டு இருந்ததைக் கேட்ட அப்புறம் தான் நான் எனக்கு சக்தி அத்தான் கிடைக்கலேன்னு கோபத்தில் அவங்க சக்தி அத்தானைக் கடத்த உதவி பண்ணேன், மற்றபடி நான் வேணும்னே இப்படி எல்லாம் பண்ணல அத்தை, என்னை நம்புங்க. அக்கா நீயாவது என்னை நம்பு க்கா” வளர்மதி கண்ணீர் மல்க தன் தமக்கையின் கையைப் பிடிக்க, அவளோ கோபமாக தன் கையை உதறிக் கொண்டாள்.

தன் நிர்க்கதியான நிலையை எண்ணிக் கலங்கியவளாக பூஜாவின் அருகில் வந்து நின்றவள், “பூஜா நீயாவது என்னை நம்பு. நான் தெரிஞ்சே இப்படி எல்லாம் பண்ணல. ஏதோ ஒரு கோபத்தில் இப்படி பண்ணிட்டேன், ப்ளீஸ் பூஜா” என்றவாறே கண்ணீர் விட,

அவளது கண்களை மெல்லத் துடைத்து விட்டவள், “சரி, அந்த ஆளுங்க யாருன்னு சொல்லு?” என்று வினவினாள்.

“அவங்க யாருன்னு எனக்குத் தெரியாது பூஜா. இதற்கு முதல் நான் அவங்களை நம்ம ஊரில் பார்த்தது கூட இல்லை”

“யாருன்னே தெரியாத ஆளுங்களுக்கு போய் இப்படி ஒரு வேலை பார்த்தியா?” வெற்றி தன் பற்களைக் கடித்துக் கொண்டு கோபமாக வார்த்தைகளை விட, அவனது கேள்வியில் அமைதியாக நின்றவள் பூஜாவின் கைகளை எட்டிப் பிடித்துக் கொண்டாள்.

“சத்தியமாக எனக்கு அவங்களைத் தெரியாது பூஜா, அவங்க ஏதோ திருச்சி ஆளுங்கன்னு தான் பேசிட்டு இருந்தாங்க. விஷ்வாவோட குடும்பத்து ஆளுங்களைக் கண்டுபிடிக்கணும், அதற்கு முதல் சக்தியைப் பிடிக்கணும், இப்படி எல்லாம் தான் அவங்க பேசிட்டு இருந்தாங்க. எனக்கு இதைத் தவிர அவங்களைப் பற்றி வேறு எதுவும் தெரியாது” என்று விட்டு வளர்மதி பூஜாவை நிமிர்ந்து பார்க்க, அவளோ கண்கள் இரண்டும் சொருக தொப்பென்று மயங்கி கீழே வீழ்ந்தாள்.

“ஐயோ பூஜா!”

“பூஜாம்மா!” செல்வியும், பரசுராமனும் மயங்கி விழுந்த தங்கள் மகளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு அவளை மயக்கத்தில் இருந்து எழுப்ப முயல, அதற்குள் மீரா சிறிது தண்ணீர் தெளித்து அவளை மயக்கத்தில் இருந்து எழுந்திருக்க செய்தாள்.

“பூஜா, உனக்கு ஒண்ணும் இல்லை தானே டா” பரசுராமனின் கேள்வியில் அவரைத் தாவி அணைத்துக் கொண்டவள்,

“அப்பா, சக்தி! சக்தி ப்பா. அவங்க சக்தியைக் கொன்னுடுவாங்கப்பா, என் சக்தியைக் கொன்னுடுவாங்கப்பா. என்னால சக்தியோட உயிருக்கு ஆபத்து வந்துடுச்சேப்பா. அன்னைக்கு அந்த ரவுடிங்க சக்தியைக் கொன்னுடுவேன்னு மிரட்டிட்டு போன மாதிரியே மறுபடியும் வந்துட்டாங்கப்பா. அப்பா, அப்பா சக்தியை எப்படியாவது காப்பாற்றுங்கப்பா. அவங்களுக்கு என் உயிர் தானே வேணும்? என்னை அவங்க கொல்லட்டும், ஆனா சக்திக்கு எதுவும் ஆகி விடக்கூடாது ப்பா. ப்ளீஸ் பா, சக்தியைக் காப்பாற்றுங்க ப்பா” என்றவாறே கண்ணீர் விட்டுக் கதறியழ, அவள் சொன்ன விடயங்களை வைத்தே சக்தியைக் கடத்திச் சென்றவர்கள் யாராக இருக்கக்கூடும் என்பது அங்கே நின்று கொண்டிருந்தவர்களுக்கு புரியத் தொடங்கியது.

“என்னங்க நம்ம பையன்!” சந்திரா கவலையும், அச்சமும் சூழ தன் கணவரின் கைகளை இறுகப் பற்றிக் கொள்ள, மறுபுறம் வெற்றி சிறிதும் தாமதிக்காமல் வளர்மதியிடம் சக்தி இருக்கும் இடத்தைப் பற்றி விசாரித்து விட்டு காவல்துறையினர் சகிதம் அந்த இடத்தை நோக்கிச் செல்லத் தயாராகினான்.

அவன் சக்தியைக் காணப் புறப்பட்டுச் செல்லும் வேளை சந்திரா மற்றும் பூஜாவும் அவனுடன் வரவேண்டும் என்று பிடிவாதமாக இருக்க, வேறுவழியின்றி அவர்களையும், தன் தந்தையையும் காரில் ஏற்றிக் கொண்டவன் சக்தியைக் காண விரைந்து சென்றான்.

**********
சக்தி தன் முன்னால் நின்று கொண்டிருந்த அந்த நபரைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அமர்ந்திருக்க, அவனது அதிர்ச்சியான தோற்றத்தைப் பார்த்து வாய் விட்டு சிரித்துக் கொண்ட அந்த நபர், “என்ன தம்பி, என்னை இன்னும் நீ மறக்கல போல இருக்கு? என் முகத்தைப் பார்த்ததுமே உன் முகத்தில் ஏக்கர் கணக்கில் அதிர்ச்சி தெரியுதே?” என்றவாறே அவனது முகத்தில் ஓங்கி குத்த, அவனோ வலி தாளாமல் தன் கண்களை மூடிக்கொண்டான்.

“நான் தான் அன்னைக்கே சொன்னேனே? வீணாக என் வழியில் குறுக்கே வராதேன்னு உன் கிட்ட எத்தனை தடவை சொன்னேன், நீ தான் பெரிய இவனாட்டம் அவளைத் தாலி கட்டி கூட்டிட்டு போன, ஆனா அவ உன்னை மதிக்கவே இல்லையே. இந்த அஞ்சு மாசமாக உன்னைத் தூக்கணும்னு எவ்வளவு எல்லாம் பிளான் பண்ணேன் தெரியுமா? ஆனா ஒரு தடவை கூட உன்னைப் பிடிக்க முடியல, ஆனாலும் அந்த கடவுள் கொஞ்சம் என் பக்கமும் அவன் பார்வையைத் திருப்பிட்டான்பா, அதனாலதான் தானாகவே ஒருத்தி வந்து உன்னைக் கடத்திக்கிட்டு போக உதவி எல்லாம் பண்ணா” அந்த நபர் சொன்னதைக் கேட்டு சக்தி குழப்பத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தான்.

“என்ன யாரு அந்த பொண்ணுன்னு பார்க்குறியா? எல்லாம் உன் சொந்தக்காரங்க தான், உன் அண்ணியோட தங்கச்சி”

“வளர்மதி?”

“என்ன மதியோ? அவ பண்ண ஒரு உருப்படியான வேலை நீ எங்க கிட்ட சிக்கிட்ட. இந்த தடவை உன்னை தப்பிக்க விடவே மாட்டேன். நீ இருக்கேன்னு தைரியத்தில் தானே அந்த விஷ்வாவோட பொண்டாட்டியும், அவனோட மாமனார், மாமியாரும் தைரியமாக இருக்காங்க. முதல்ல உன்னைப் போட்டுத் தள்ளுறேன், அதற்கு அப்புறம் அவங்களுக்கு இருக்கு கச்சேரி”

“பூஜா என்னோட மனைவி, அவங்க என்னோட அத்தை, மாமா. அவங்களுக்கு ஏதாவது கெடுதல் பண்ண நினைச்ச உன்னை சும்மாவே விடமாட்டேன்” சக்தி தன் வலியையும் பொருட்படுத்தாமல் அந்த நபரைப் பார்த்து கோபமாக சத்தமிட, அந்த நபரோ அவனது முகத்தில் சாரமாரியாக அடிக்கத் தொடங்கினான்.

“இவ்வளவு அடி வாங்கியும் உனக்கு கொழுப்பு குறையல இல்லையா? எனக்கு வர்ற கோபத்திற்கு உன்னை இப்படியே கொன்னு போடணும் போல தான் இருக்கு, ஆனா அவ்வளவு சீக்கிரமாக உன்னை கொல்ல மாட்டேன். என்னை இத்தனை நாளாக அலைய வைத்ததற்கு உன்னை கொஞ்சம் கொஞ்சமாக தான் கொல்லுவேன். டேய்! அந்த கத்தியைக் கொண்டு வாடா” தன் அடியாட்களைப் பார்த்து அந்த நபர் குரல் கொடுக்க, அந்த கூட்டத்தில் ஒரு நபர் வெளியே ஓடிச்சென்று ஒரு பெரிய கூரிய கத்தியை எடுத்துக் கொண்டு வந்து நின்றான்.

“நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி தம்பி, ஏன் தெரியுமா? இதே கத்தியால் தான் அன்னைக்கு விஷ்வாவைப் போட்டுத் தள்ளினேன். அதேமாதிரி இன்னைக்கு அதே கத்தியால் உன்னையும் அவன் போன இடத்திற்கு அனுப்பி வைக்கப் போறேன், அதற்கு அப்புறம் அவனோட பொண்டாட்டி, ஆஹ்! இல்லை, இல்லை. உன்னோட பொண்டாட்டி அவளையும் அனுப்பி வைக்கிறேன். அதற்கு அப்புறம் மூணு பேரும் சேர்ந்து சந்தோஷமாக இருக்கணும். அங்கே போய் அடிச்சுக்கக் கூடாது, சரியா?” என்றவாறே அந்த நபர் சக்தியின் வயிற்றில் தன் கத்தியை இறக்கினான்…….