இதயம் – 25 (Final)

eiHJN6N67051-eb4f1a20

இதயம் – 25 (Final)
சக்தி தன் தலையிலும், கைகளிலும் சிறு சிறு கட்டுகள் போடப்பட்டவனாக அவனது அறையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்த வேளை பூஜா தன் கையில் சுடச்சுட, ஆவி பறக்க உணவு நிறைந்த தட்டு ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து அவனருகில் அமர்ந்து கொண்டாள்.

தன்னருகே யாரோ வந்து அமர்ந்து இருப்பதைப் போல உணர்ந்து கொண்டதால் என்னவோ சக்தி தன் கண்களைத் திறந்து பார்க்க, அங்கே பூஜா அவனருகில் புன்னகை முகமாக அமர்ந்திருந்தாள்.

அவளைப் பார்த்ததும் சிறு புன்னகையுடன் அவளது தோளில் சாய்ந்து கண் மூடி கொண்டவன், “பூஜாம்மா, எனக்கு இன்னமும் நடந்த எல்லாமே ஏதோ கனவு மாதிரி இருக்குடா” தன் கண்களைத் திறவாமலேயே கூற,

அவனைப் பார்த்து, “அப்படியா?” என்று கேட்டவள் சட்டென்று அவனது நெற்றியில் போடப்பட்டிருந்த கட்டினை அழுத்த,

அவனோ, “ஐயோ! அம்மா! ஏன் பூஜாம்மா உனக்கு இந்தக் கொலைவெறி?” என்றவாறே அவளைத் திரும்பிப் பார்த்து வினவினான்.

“பின்ன என்ன பண்ணுறதாம்? இதே கேள்வியை நீங்க இந்த மூணு நாளாக முந்நூறு தடவைக்கும் மேலே கேட்டுட்டீங்க. நானும் உங்களுக்கு பதில் சொல்லி சொல்லி களைச்சுப் போயிட்டேன், என்னால இதற்கு மேலே முடியல ப்பா” பூஜா சலித்துக் கொள்ளுவது போல சக்தியைப் பார்த்துக் கூற,

அவளைப் பார்த்து வாய் விட்டு சிரித்துக் கொண்டே அவளைத் தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன், “நீ உன் காதலை சொன்ன அந்த நிமிஷத்தை என்னால அவ்வளவு சீக்கிரமாக மறக்க முடியாது பூஜாம்மா. இன்னும் சொல்லப்போனால் அந்த நிமிஷம் என் ஐந்து வருடக் காத்திருப்புக்கான பரிசு. அப்படியான ஒரு அழகான தருணத்தை எத்தனை தடவை கேட்டாலும், நினைத்துப் பார்த்தாலும் எனக்கு சலிக்கவே சலிக்காது பூஜா” என்றவாறே தன் கண்களை மூடிக் கொள்ள, அவன் கண்களுக்குள் ஐந்து நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் காட்சியாக விரிந்தது.

**********
அந்த ரவுடிக் கும்பலின் தலைவனாக இருந்தவன் சக்தியின் வயிற்றில் தன் கையிலிருந்த கத்தியை இறக்கியிருக்க, ஒரு கணம் தனக்கு என்ன நடந்தது என்பதைக் கூட சக்தியால் உணரமுடியவில்லை.

அவன் வயிற்றிலிருந்து இரத்தம் சொட்டு சொட்டாக வழியத் தொடங்க, அவனோ மெல்ல மெல்ல தன் சுயநினைவை இழக்கத் தொடங்கியிருந்தான்.

சக்தி சுயநினைவை இழக்கத் தொடங்கியிருந்த நேரம் அந்தக் கும்பலின் தலைவன் மறுபடியும் சக்தியின் வயிற்றில் கத்தியை இறக்கப் பார்க்க, அதற்கிடையில் காவல்துறையினரும், சக்தியின் குடும்பத்தினரும் அந்த இடத்தை வந்து சேரந்திருந்தனர்.

தங்களின் இடத்தை போலீஸார் சுற்றி வளைத்து விட்டனர் என்பதை உணர்ந்து கொண்டவர்களாக அந்த ரவுடிகள் அங்கிருந்து தப்பிச் செல்லப் பார்க்க, அதற்குள் அவர்கள் அனைவரையும் போலீசார் பிடித்து வெளியே இழுத்துக் கொண்டு சென்றனர்.

ஒருபுறம் போலீசாருக்கும், ரவுடிகளுக்கும் பிரச்சினை நடந்து கொண்டிருக்க, மறுபுறம் சக்தியின் குடும்பத்தினர் சக்தி இருந்த நிலையைப் பார்த்து அதிர்ச்சியில் செய்வதறியாது விக்கித்துப் போய் நின்றனர்.

தன் உடலிலிருந்து இரத்தம் வடிய தன் சுயநினைவை இழக்கத் தொடங்கியிருந்த சக்தியைப் பார்த்ததும், “சக்தி!” என்றவாறே அலறிக் கொண்டு அவனருகில் ஓடி வந்த பூஜா அவனது கை மற்றும் கால் கட்டுகளை அவிழ்த்து விட, அவனோ தன் உடலிலிருந்த மொத்த சக்தியும் வடிந்து விட்டதைப் போல பூஜாவின் மேலேயே மயங்கி சரிந்தான்.

“ஐயோ சக்தி! சக்தி, எழுந்திருங்க சக்தி! நீங்க இப்படி எல்லாம் பண்ணவே கூடாது. என்னை இப்படி தனியாக விட்டுவிட்டு நீங்க போக முடியாது சக்தி. என் கூடவே எனக்கு எப்போதும் துணையாக இருப்பேன்னு வாக்கு கொடுத்துட்டு இப்படி என்னை நீங்க ஏமாற்றக் கூடாது சக்தி. சக்தி, ப்ளீஸ் சக்தி. என்னைப் பாருங்க சக்தி” என்றவாறே பூஜா தன் மேல் மயங்கி கிடந்த சக்தியின் கன்னத்தில் தட்டி அவனை எழுப்ப முயல, அதற்குள் வெற்றி ஆம்புலன்ஸை அந்த இடத்திற்கு வரவழைத்திருந்தான்.

ஆம்புலன்ஸ் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருந்த அடுத்த கணமே சக்திக்கு அவசர அவசரமாக முதலுதவி அளித்து விட்டு அவனை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றிருக்க, பூஜாவும், சக்தியின் குடும்பத்தினரும் அந்த ஆம்புலன்ஸைப் பின் தொடர்ந்து வைத்தியசாலையை நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.

இரண்டு, மூன்று மணி நேரமாக சக்திக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கொண்டிருக்க, பூஜா மாத்திரம் அவன் வைக்கப்பட்டிருந்த அறையின் வாயிலிலேயே கண்களில் கண்ணீர் வடிய நின்று கொண்டிருந்தாள்.

சக்திக்கு சிகிச்சை வழங்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்திற்குள் மீரா மற்றும் மலர்விழியுடன் பூஜாவின் பெற்றோரும் அங்கே வந்து சேர்ந்திருக்க, தன் பெற்றோரைப் பார்த்த அடுத்த கணமே பூஜா அவர்களை நோக்கி ஓடிச் சென்று அவர்களை அணைத்துக் கொண்டு மீண்டும் கண்ணீர் வடிக்கத் தொடங்கினாள்.

தங்கள் மகள் அழுவதைப் பார்த்து மனம் தாளாமல் அவளது கண்களைத் துடைத்து விட்ட பரசுராமன், “அழாதேம்மா பூஜா, சக்திக்கு எதுவும் ஆகாது. எத்தனையோ பிரச்சினைகள், எத்தனையோ கஷ்டங்கள்ன்னு உன் வாழ்க்கையில் நீ ரொம்ப கஷ்டப்பட்டுட்ட, இத்தனை வருடங்கள் கழித்து மறுபடியும் உன் முன்னாடி சக்தியை கொண்டு வந்த அந்த கடவுள் அவ்வளவு சீக்கிரத்தில் உங்க இரண்டு பேரையும் பிரிக்க மாட்டாரு ம்மா. நீ எதற்காகவும் இப்படி மனது உடைந்து போகக்கூடாது, தைரியமாக இருக்கணும் பூஜா” என்று கூற,

தன் தந்தையை சிறு குழப்பத்துடன் நிமிர்ந்து பார்த்தவள், “இத்தனை வருடங்கள் கழித்து மறுபடியும் சக்தி வந்தாங்களா? எனக்குப் புரியல. நீங்க என்ன சொல்ல வர்றீங்க ப்பா?” என்று கேட்க, அவளைப் பார்த்து நீண்ட பெருமூச்சு விட்டுக் கொண்டவர் இதற்கு மேலும் சக்தியைப் பற்றி அவளிடம் சொல்லாமல் இருப்பது சரியில்லை என்பதை உணர்ந்து கொண்டவராக சக்திக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பே பூஜாவைத் தெரியும் என்பதையும் அவளுக்காகத் தான் அவன் திருச்சி வந்து அத்தனை பிரச்சினைகளை எதிர்கொண்டான் என்பதையும் கூற, அவளோ அவர் கூறிய விடயங்களைக் கேட்டு அதிர்ச்சியடைந்தவளாக தடுமாற்றத்துடன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

சக்தி தன்னை நேசிக்கிறான் என்பது அவளுக்கு ஏற்கனவே தெரிந்த விடயமாக இருந்தாலும் அவன் தன் வாழ்வில் தனக்கென காதல் உணர்வு வருவதற்கு முன்பே தன்னை நேசித்திருக்கிறான் என்பது அவள் முற்றிலும் எதிர்பாராத விடயம்.

அதிலும் தன் காதலை சொல்ல தன்னை அவன் தேடி வந்த நேரம் தான் உயிருடன் இல்லை என்று அவனறிந்த செய்தி அவனை எந்த அளவிற்கு கஷ்டப்படுத்தியிருக்க கூடும் என்பதை அவள் நன்றாகவே உணர்ந்து கொண்டாள்.

தன் நினைவுகளை விட்டு விட்டு அவன் தன் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்லும் வேளையில் தன்னை இன்னொருவரின் மனைவியாக பார்த்த போது அவன் மனம் எவ்வளவு வேதனையில் துடித்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கும் போதே அவளுக்கு இன்னமும் மனம் வலிக்க ஆரம்பித்தது.

‘எப்படி சக்தி இவ்வளவு கஷ்டத்தை நீங்க சகிச்சுகிட்டு என் முன்னாடி வந்து நின்னீங்க? நான் இன்னொருவரின் மனைவின்னு தெரிந்த பிறகும் எனக்காக விஷ்வாவைக் காப்பாற்ற அந்த நேரத்தில் நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டீங்கன்னு நான் தானே என் கண்ணால் பார்த்தேனே. உங்க மனதில் அவ்வளவு வேதனை, வலி இருந்தும் எனக்காக எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு சாதாரணமாக இருக்கிற மாதிரி நீங்க நடந்து கொண்ட போது உங்களுக்கு எவ்வளவு மனது வலித்து இருக்கும்? இதெல்லாம் எதற்காக சக்தி? என் மேல் நீங்க வைத்திருக்கும் அந்த அளவில்லா காதலுக்காக தானே? உங்களோட இந்த அளவில்லா காதலுக்குப் பதிலாக நான் உங்களுக்கு கொடுத்தது வெறும் மன வேதனை மட்டும் தானே?
போகட்டும், இதுவரைக்கும் நடந்தது எல்லாம் போகட்டும் சக்தி, இது வரை நீங்க உங்க காதலுக்காக என்ன எல்லாம் செய்ய முடியுமோ, என்னவிதமான கஷ்டங்களை எல்லாம் தாங்க முடியுமோ தாங்கிக் கொண்டீங்க, ஆனால் இனிமேல் வரப்போகும் மீதி நாட்கள் எல்லாம் உங்களை என் காதலால் நான் சந்தோஷப்படுத்தணும் சக்தி. இத்தனை வருடங்களாக நீங்க எந்த விடயத்தைக் கேட்கணும், உங்க வாழ்க்கையில் எந்த விடயம் நடக்கணும்னு ஆசைப்பட்டு காத்திருந்தீங்களோ அந்த ஆசையை நான் கண்டிப்பாக நிறைவேற்றுவேன் சக்தி, கண்டிப்பாக நிறைவேற்றுவேன்’ சக்தி தன் மீது வைத்திருக்கும் அளவில்லா காதலை எண்ணி வியந்து போனவளாக பூஜா அமர்ந்திருந்த வேளை சக்திக்கு சிகிச்சை அளித்து விட்டு அந்த அறையில் இருந்து வைத்தியர் ஒருவர் வெளியேறி வந்தார்.

அந்த வைத்தியரைப் பார்த்ததும் சக்தியின் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அவரைச் சூழ்ந்து கொள்ள அவர்களை எல்லாம் சிறிது அமைதியாக இருக்கும் படி கூறியவர், “நீங்க எல்லாரும் கொஞ்சம் பொறுமையாக இருங்க. அவருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை, ஹீ இஸ் கம்ப்ளீட்லீ ஆல்ரைட். கொஞ்சம் பிளட் லாஸ், அன்ட் இரண்டு, மூன்று நாளாக சாப்பிடாமல் இருந்ததால் இப்போ நல்ல மயக்கத்தில் இருக்காங்க. நாங்க அது எல்லாவற்றிற்கும் ட்ரீட்மெண்ட் பண்ணிட்டோம். அவரு எப்படியும் இன்னும் ஒரு இரண்டு அல்லது மூணு மணி நேரத்திற்குள் மயக்கத்தில் இருந்து எழுந்துடுவாங்க, ஷோ அதற்கு அப்புறம் நீங்க அவரோட தாராளமாக பேசலாம், ஆனா இப்போ அவரை யாரும் தொந்தரவு பண்ண வேண்டாம். வேணும்னா ஒரு ஆள் அல்லது இரண்டு ஆள் உள்ளே போய் அவரைத் தொந்தரவு செய்யாமல் பார்த்துட்டு வாங்க. அன்ட் டோன்ட் வொர்ரி ஹீ இஸ் வெரி பெர்பெக்ட்” என்று விட்டு அங்கிருந்து சென்று விட, அவர் சென்ற அடுத்த கணமே சந்திரா மற்றும் சண்முக பிரகாஷ் சக்தி வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து கொண்டனர்.

அதன் பிறகு சக்தியின் குடும்பத்தினரும், பூஜாவின் பெற்றோர்களும் சக்தியைப் பார்த்து விட்டு வந்து இருக்க அனைவருக்கும் இறுதியாக பூஜா தன் சக்தியைக் காண அவனிருந்த அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

மருத்துவ உபகரணங்களின் சத்தத்தில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த சக்தியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டவள் சிறிது நேரம் அவனது முகத்தையே தவிப்போடு பார்த்துக் கொண்டிருந்து விட்டு பின்னர் சிறிது தயக்கத்துடன் அவன் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டாள்.

அதன் பிறகு வந்த நொடிப்பொழுதுகள் எல்லாம் அமைதியிலேயே கரைந்து செல்ல எதுவும் பேசாமல் சக்தியின் முகத்தை காதல் ததும்ப பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் நெற்றியில் தன் முதல் முத்தத்தைப் பதித்து விட்டு அங்கிருந்து செல்லப் பார்க்க, அவள் கைகளோ சக்தியின் கையால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தது.

தன் கைகளை சக்தி பிடித்திருக்கிறான் என்றால் அவனுக்கு மயக்கம் தெளிந்து விட்டது போல என்கிற சந்தோஷமான மனநிலையுடன் புன்னகை தவழ பூஜா அவனைத் திரும்பிப் பார்க்க, அதேநேரம் அவனும் தன் கண்களைத் திறந்து அவளைப் பார்த்து புன்னகை செய்த வண்ணம் படுத்திருந்தான்.

“சக்தி, நீங்க நீங்க நல்லா இருக்கீங்க தானே?” கண்கள் இரண்டிலும் கண்ணீர் திரள பூஜா சக்தியைப் பார்த்து வினவ,

அவளைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவன், “நான் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கேன் ம்மா” எனவும், சிறு புன்னகையுடன் அவனது நெற்றியில் தன் இதழ் பதித்தவள் அவசரமாக வெளியே சென்று அவனுக்கு சிகிச்சை அளித்த வைத்தியரை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள்.

மருத்துவரின் சிறிது நேரக் கண்காணிப்பின் பின் சக்தி பூரண ஆரோக்கியமாக இருக்கிறான் எனவும், இன்னும் ஒரு சில தினங்களுக்கு பின்னர் அவனை இங்கிருந்து அழைத்துக் கொண்டு செல்லலாம் எனவும் அந்த வைத்தியர் கூறி விட்டுச் சென்றிருக்க, அதன் பின்னரே அங்கிருந்த அனைவரது முகத்திலும் உண்மையான மகிழ்ச்சி குடி கொண்டிருந்தது.

சக்தியைச் சூழ அவனது ஒட்டுமொத்த குடும்பத்தினரும் நின்றிருந்தாலும் அவனது பார்வையோ அவர்களை எல்லாம் விட்டு சிறிது தள்ளி நின்று கொண்டிருந்த பூஜாவின் மீதே நிலைகுத்தி நின்றது.

சக்தியினதும், பூஜாவினதும் பார்வை ஒருவரை ஒருவர் ஏக்கத்துடன் தழுவியிருப்பதை உணர்ந்து கொண்ட பெரியவர்கள் மற்ற எல்லோரையும் அழைத்துக் கொண்டு அவர்கள் இருவருக்கும் சிறிது தனிமை கொடுத்து விட்டு சென்றிருக்க, அந்த தனிமையில் அவர்கள் இருவரும் பேச வார்த்தைகள் இன்றி அமைதியை தங்கள் துணையாக எடுத்திருந்தது போல இருந்தனர்.

தான் முழுமையாக மயக்க நிலைக்குச் செல்வதற்கு முன்னர் தன்னைப் பூஜா பார்த்த போது அவள் கண்களில் தெரிந்த ஏக்கத்தையும், இப்போது தனக்கு எதுவும் இல்லை என்று தெரிந்த பின்னர் அவள் முகத்தில் தெரியும் சந்தோஷத்தையும் வைத்தே அவள் தன் மேல் எந்தளவிற்கு நேசம் வைத்திருக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்திருந்தாலும் பூஜா தன் காதலை அவளாக சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு கட்டிலில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்த சக்தி அவளை தன் அருகே வரும்படி சைகை செய்ய, அவனது அழைப்பிற்காகவே காத்திருந்தது போல நின்று கொண்டிருந்தவள் கண்ணிமைக்கும் நொடியில் அவன் மார்பில் தஞ்சம் கொண்டிருந்தாள்.

“உங்க எல்லோரையும் ரொம்ப தவிக்க விட்டுட்டேன் போல. ரொம்ப ரொம்ப சாரிடா பூஜா” என்றவாறே சக்தி சிறு தவிப்புடன் பூஜாவின் கையை வருடிக் கொடுத்தபடி அமர்ந்திருக்க,

அவனைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவள், “அப்படி எல்லாம் எதுவும் இல்லை சக்தி, நான் தான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். ஐ யம் ரியலி ரியலி சாரி” என்று விட்டு மீண்டும் அவன் நெஞ்சோடு சாய்ந்து கொண்டாள்.

“அதெல்லாம் பரவாயில்லை டா பூஜாம்மா. நீ நல்லா இருக்க தானே?”

“நீங்க நல்லா இருந்தால் நானும் நல்லா இருப்பேன் சக்தி”

“அப்படியா? அடடா! எப்போ இருந்து இந்த ஞானோதயம் வந்தது?”

“போங்க சக்தி, என்னைக் கிண்டல் பண்ணுறீங்களா?”

“அய்யய்யோ! அப்படி எல்லாம் இல்லை பூஜா, நீ வேறு ஏதோ சொல்ல நினைக்கிற மாதிரி எனக்குத் தோணுது, அதுதான் அதை எப்படி சொல்ல வைக்கலாம்ன்னு யோசிக்கிறேன்” என்றவாறே சக்தி பூஜாவின் முகத்தை தன் புறமாக நிமிர்த்த, அவளோ சிறு வெட்கத்துடன் தன் முகத்தை வேறு புறமாகத் திருப்பிக் கொண்டாள்.

“பூஜா”

“ம்ம்ம்ம்ம்”

“ப்ளீஸ்டா, இதற்கு மேலேயும் என்னால் காத்திருக்க முடியாது. உன் மனதில் எனக்காக என்ன ஃபீலிங் இருக்குன்னு சொல்லிடும்மா” சக்தியின் கூற்றில் அவனை மெல்ல நிமிர்ந்து பார்த்தவள்,

“அதற்கு எல்லாம் முன்னாடி உங்க கிட்ட நான் சில விடயங்களைப் பற்றி பேசணும் சக்தி” என்றவாறே அவனை தயக்கத்துடன் நோக்க, அவனோ அவளை என்ன அது என்பது போல கேள்வியாக நோக்கினான்.

“அன்னைக்கு நாம இரண்டு பேரும் நம்ம ரூம் பால்கனியில் இருக்கும் போது நான் கண் கலங்கி நின்றதைப் பார்த்து தானே நீங்க கவலைப்பட்டு வீட்டை விட்டு போனீங்க”

“இப்போ எதுக்கு பூஜா அதெல்லாம்?”

“ஆமாவா? இல்லையா? சொல்லுங்க” பூஜாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவளது முகத்தையே தவிப்போடு பார்த்துக் கொண்டிருந்தவன் சிறிது நேரத்திற்கு பின்னர் ஆமென்று தலையசைத்தான்.

“அந்த நேரமே ஒரு வார்த்தை நான் ஏன் அழுதேன்னு உங்களுக்கு கேட்கத் தோணலயா சக்தி? எப்போ பாரு லொட லொடன்னு வாய் ஓயாமல் பேசிட்டு இருப்பீங்க, ஆனா முக்கியமான நேரத்தில் உங்க வாய்க்கு பூட்டு மாட்டிக்குவீங்க, அப்படித்தானே?”

“அப்படி இல்லை பூஜா. அந்த நேரம் நானும் கொஞ்சம் என் கன்ட்ரோலில் இல்லை, என்னை மீறி ஏதாவது நான் செய்து அதை உன்னைக் கஷ்டப்படுத்திடுமோன்னு தான் நான் அங்கே இருந்து போயிட்டேன்”

“நீங்க மட்டும் அன்னைக்கு என் கிட்ட பேசி இருந்தால் இன்னைக்கு உங்களுக்கு இந்த நிலைமையே வந்திருக்காது சக்தி” என்றவாறே பூஜா சக்தியின் முகத்திலும், கையிலும் போடப்பட்டிருந்த கட்டுக்களை மெல்லமாக வருடிக் கொடுக்க, சக்தி அவள் கைகளைப் பற்றி தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான்.

“எல்லாம் நன்மைக்குத் தான் பூஜா. என்ன இருந்தாலும் நான் உன் பக்கத்தில் இல்லாத போது தானே நீ என்னைப் பற்றி இவ்வளவு தூரம் புரிஞ்சுக்கிட்ட. அதற்கு அப்புறம் தானே இந்த மாற்றம் வந்து இருக்கு. அதனால இந்த பிரிவு கூட எனக்கு ஒரு வகையில் நல்லதைத் தான் தந்து இருக்கு”

“இல்லை”

“என்ன? இல்லையா? ஏன் இல்லை?”

“சொல்லுறேன் சக்தி, என் மனதில் என்ன இருக்குன்னு எல்லாவற்றையும் சொல்லுறேன். அதற்கு அப்புறம் உங்க எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்” என்றவாறே தன் கண்களை மூடி தன்னை சிறிது ஒருநிலைப் படுத்திக் கொண்டவள் பின்னர் சக்தியைப் பார்த்து தன் மனதில் இத்தனை நாட்களாக அவனிடம் பகிர்ந்து கொள்ள எண்ணியிருந்த விடயங்களை சொல்ல ஆரம்பித்தாள்.

“ஆரம்பத்தில் உங்களைத் திருச்சியில் வைத்துப் பார்க்கும் போது எனக்கு எந்த ஒரு எண்ணமும் இல்லை சக்தி. அந்த நேரம் என்ன நடந்ததுன்னு நமக்கு நல்லாவே தெரியும். நான் என் ஒட்டுமொத்த வாழ்க்கையும் வெறுத்துப் போன ஒரு நிலையில் தான் அந்த நேரத்தில் இருந்தேன், ஆனா அதற்கு அப்புறம் இங்கே கோயம்புத்தூர் வந்த பிறகு உங்க கிட்ட வேலை பார்க்க ஆரம்பித்த பிறகு உங்களைப் பார்க்கும் நேரமெல்லாம் என்னை அறியாமல் ஒரு பதட்டம் அடிக்கடி வந்துட்டே இருக்கும். அது ஏதோ நீங்க என் எம்.டி அப்படிங்குற ஒரு மரியாதையால் வந்ததுன்னு நினைச்சு என்னை நானே சமாதானப்படுத்திக்குவேன், ஆனா முதல் தடவை நான் உங்க வீட்டுக்கு வந்த போது உங்க அம்மா, மீரா, அப்பா, அண்ணா, அவங்க பசங்க எல்லோரும் என் கிட்ட நடந்து கொண்ட விதத்தைப் பார்த்த போது எனக்கும் இப்படியொரு குடும்பம் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்ன்னு நான் யோசிச்சேன், அப்போ தான் என் மனசு ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிறதுன்னு எனக்குள் நிறைய கேள்விகள் வர ஆரம்பித்தது. அந்த குழப்பத்தில் தான் நான் அங்கே இருந்து உடனடியாக போகணும்னு எவ்வளவோ முயற்சி பண்ணேன், ஆனா என்னை யாரும் விடல.
அதற்கு அப்புறம் அன்னைக்கு வந்த அந்த ஆன்டி சொன்ன விடயங்களை எல்லாம் கேட்டு நான் மொத்தமாக உடைந்து போயிட்டேன், எனக்கு ஆறுதல் சொல்லக் கூட யாருமே இல்லையேன்னு நான் கவலையோடு நிற்கும் போது தான் நீங்க அங்க வந்தீங்க. அங்கே உங்களைப் பார்த்ததும் எனக்கு வேறு எதுவும் தோணல, நீங்க எப்போதும் என் கூட இருப்பீங்கன்னு தோணுச்சு, அதுதான் என்னையும் அறியாமல் நான் உங்க கிட்ட ரொம்ப உரிமையாக நடந்துக்கிட்டேன். அதற்கு அப்புறம் தான் என்னோட நிதர்சனம் புரிய ஆரம்பித்தது. என் வாழ்க்கையில் எல்லாமே முடிஞ்சு போச்சு, அப்படி இருக்கும் போது நான் உங்க வாழ்க்கையில் வருவது கொஞ்சம் கூட சரியில்லை. நீங்க ரொம்ப நல்லவங்க, உங்களுக்கு உங்களை அன்பாக பார்த்துக் கொள்ளும் ஒரு பொண்ணு கிடைக்கணும், அதோடு நான் உங்களுக்கு எந்த விதத்திலும் சரியாக இருப்பேன்னு எனக்குத் தோணல, அதனால் தான் நான் உங்களை விட்டு விலகி விலகிப் போக ஆரம்பித்தேன். நான் உங்களை விட்டு விலகிப் போகும் நேரமெல்லாம் உங்க முகத்தில் தெரியும் கவலையைப் பார்த்து தினமும் நான் ஹாஸ்டலில் வைத்து அழுவேன், உங்களை அப்படி பார்க்கும் நேரமெல்லாம் எனக்கு வேதனையாக இருக்கும், உங்களை நினைத்து நான் ஏன் கவலைப்படணும்னு அப்போ இந்த புத்திக்கு விளங்கவே இல்லை.
அன்னைக்கு நீங்க உங்க காதலைச் சொல்லும் போது எனக்கு உங்களை மறுத்துச் சொல்ல இஷ்டம் இல்லைங்குறது தான் உண்மை, இருந்தாலும் என் மனசைக் கல்லாக்கிட்டுத் தான் உங்களை எனக்குப் பிடிக்காதுன்னு சொன்னேன், அதற்கு அப்புறம் உங்களை விட்டு தூரமாகிப் போயிடணும்னும் நினைத்தேன், ஆனா அந்தக் கடவுளோட விளையாட்டு அந்த ரவுடிங்க ரூபத்தில் வந்து உங்களையும், என்னையும் சேர்த்து வைச்சுடுச்சு.
ஆரம்பத்தில் நம்ம கல்யாணம் நடந்த விதமும், அந்த சந்தர்ப்பமும் உங்க மேல எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது என்னவோ உண்மைதான், ஆனால் என் மனதில் நான் மறைக்க நினைத்த உங்க மீதான காதல் அதை எல்லாம் தூரமாக்கிடுச்சு. நான் என் மனதைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி உங்க காதலைப் புரிந்து கொள்ள நினைத்து நேரம் தான் மறுபடியும் திருச்சியில் வசந்திம்மாவை சந்திக்க வைத்தீங்க. அதற்கு அப்புறம் தான் என் மனதில் என்ன இருக்குன்னு எனக்கே புரிய ஆரம்பித்தது. அதனால் தான் அன்னைக்கு நான் உங்களை மறுத்துப் பேசல, இத்தனை நாட்களாக இந்த காதலை மறைத்து நான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்தியிருக்க கூடாதுன்னு தான் அன்னைக்கு என் கண் கலங்கிடுச்சு, ஆனா நீங்க அவசரப்பட்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் போயிட்டீங்க. நீங்க மறுபடியும் எப்போ வருவீங்க, உங்க கிட்ட இதெல்லாம் எப்படி சொல்லணும்னு நான் நினைத்து இருந்தேன் தெரியுமா? ஆனா அதற்கிடையில் என்னன்னவோ எல்லாம் நடந்துடுச்சு” என்று விட்டு பூஜா சக்தியைப் பார்க்க, அவனோ அவளை வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தான்.

“உன் மனதில் இவ்வளவு விடயங்களை நீ மறைத்து வைத்திருந்தியா பூஜா? இதையெல்லாம் என் கிட்ட நீ மனம் திறந்து பேசி இருக்கலாமே?”

“எனக்கே என்னைப் புரிஞ்சுக்க இத்தனை நாள் தேவைப்பட்டிருக்கு சக்தி, அப்படி இருக்கும்போது எப்படி இதை நான் சொல்ல முடியும்? ஆனா இப்போ சொல்லுறேன் சக்தி, என் மனதில் இப்போ நீங்க மட்டும் தான் இருக்கீங்க, எப்போதும் நீங்க மட்டும் தான் இருக்கணும்” என்றவாறே பூஜா சக்தியின் தோளில் சாய்ந்து கொள்ள,

அவளது கரத்தை மெல்ல அழுத்திக் கொடுத்தவன், “நீ உன் மனதிலிருந்த எல்லா விடயங்களையும் சொல்லிட்ட, அதேமாதிரி நானும் ரொம்ப நாளாக ஒரு பெரிய விடயத்தை உன் கிட்ட இருந்து மறைச்சுட்டேன். அதை இப்போ சொல்லணும்னு ஆசைப்படுறேன் பூஜா” என்று விட்டு சிறு தயக்கத்துடன் அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“அது என்னன்னு எனக்குத் தெரியும்” பூஜா சக்தியின் தோளில் கண் மூடி சாய்ந்திருந்தவாறே பதிலளிக்க,

அவசரமாக அவளைத் தன்னை விட்டு விலக்கி அமர்த்தியவன், “தெரியுமா? எப்படி?” அதிர்ச்சியாக அவளைப் பார்த்து வினவினான்.

சிறிது நேரத்திற்கு முன்பு தனது தந்தை தன்னிடம் சக்தியைப் பற்றி பகிர்ந்து கொண்ட விடயங்களை எல்லாம் அவனிடம் ஒப்புவித்தவள், “அந்த விடயங்களை எல்லாம் கேட்ட அப்புறம் நான் இன்னமும் உடைந்து போயிட்டேன் சக்தி, உங்க மனது அந்த நேரம் எவ்வளவு துடிதுடித்துப் போய் இருக்கும்ன்னு எனக்கு நல்லாவே புரிந்தது, ஆனா அந்த விடயம் எனக்குத் தெரியாமல் விட்டிருந்ததாலும் உங்க மீதான என் காதல் மாறப் போவதில்லை சக்தி. அன்னைக்கு ராத்திரி நான் உங்க கிட்ட சொல்ல நினைத்த விடயத்தை இப்போ சொல்லுறேன் சக்தி, ஐ லவ் யூ. ஐ லவ் யூ சக்தி” என்றவாறே வெட்கம் தாளாமல் அவன் மார்பில் தஞ்சம் புகுந்து கொள்ள, சக்திக்கு நடப்பது எல்லாம் கனவு போலவே. இருந்தது.

இத்தனை வருடங்களாக எந்த விடயத்தை நினைத்து நினைத்து கற்பனையில் வாழ்ந்து கொண்டிருந்தானோ இன்று அந்த விடயம் தனக்கு கிடைத்து விட்ட ஆனந்தத்தில் தன் மேல் சாய்ந்திருக்கும் தன் மனம் கவர்ந்தவளை அணைத்துக் கொண்டவன் அந்த தருணத்தை தன் நினைவுகளுக்குள் பொக்கிஷமாக சேமித்து வைத்துக் கொண்டான்.

“என்ன சக்தி சார்? இன்னும் அதையே நினைச்சுட்டு இருக்கீங்களா?” தன் காதருகே கேட்ட பூஜாவின் குரலில் தன் பழைய நினைவுகளில் இருந்து வெளி வந்தவன் சிறு புன்னகையுடன் அவளைப் பார்த்து தலையசைக்க,

அவனது தோளில் சாய்ந்து கொண்டவள், “என்னை முதல் தடவை பார்த்ததுமே உங்களுக்கு அவ்வளவு பிடிச்சுடுச்சா?” என்று கேட்க,

அவள் முகத்தை தன் இரு கைகளிலும் ஏந்திக் கொண்டவன், “இந்த உலகத்தில் எத்தனையோ அழகானவங்க இருக்கலாம், அது எல்லாம் எனக்குப் பெரிய விடயம் இல்லை. இந்த முகம், அதில் இருக்கும் இந்த சிரிப்பு, அது எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கும் அவளோட நல்ல குணம், இதையெல்லாம் பார்த்து என்னோட இதயம் மொத்தமாக தொலைந்து போயிடுச்சு. ஒரு செக்கனில் என் இதயத்தை நீ திருடிட்ட, இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு நாளும் என் இதயத்தை நான் உன் கிட்ட தொலைச்சுட்டே தான் இருக்கேன், இனியும் இருப்பேன். அந்தளவுக்கு உன்னை எனக்குப் பிடிக்கும்” என்றவாறே அவள் நெற்றியில் முத்தமிட, பூஜா ஆனந்தக் கண்ணீர் திரள அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

பூஜாவின் வாழ்விலும் சரி, சக்தியின் வாழ்விலும் சரி பல குழப்பங்கள் நடந்திருந்தாலும் பூஜா சக்தியின் பூஜாவாகத் தான் இருக்க வேண்டும் என்றிருக்கும் போது எந்தவொரு தடையும் அவர்களைப் பிரித்து விடமுடியாது.

இப்போதும், எப்போதும் பூஜா மற்றும் சக்தி தங்கள் இதயத்தை ஒருவரிடம் ஒருவர் காதலினால் தொலைக்கத் தயாராகவே உள்ளனர்.

அதேபோல் இனி அவர்கள் வாழ்விலும் என்றென்றும் காதல் மாத்திரமே நிறைந்திருக்கும்.

**********
இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன்
எனக்குள் விழுந்தேன் உனக்குள் எழுந்தேன்
காதல் நீரிலே மூழ்கி போகிறேன்
கையை நீட்டவா கரையில் சேர்க்கவா
இவன் தானா இவன் தானா இவனோடு இணைவேனா
**********
**********முற்றும்**********