இது என்ன மாயம் 19

by

in

 

பகுதி 19

காதல் கள்வனாய்

என் இதழோரம் வெட்கச் சிரிப்பை

திருடி செல்கிறாய் உன் மனதில்

என்று நான் மகிழும் வேளையில்…..

 

சூரியன் மெல்ல பூமி பெண்ணை தன் ஓர விழி பார்வையால், பார்த்து கொண்டிருந்த அந்த அதிகாலைப் பொழுது. அதை ரசித்த படி, மேல் மாடிக்கு ஏறி வந்த அவனின் பார்வை, அங்கு, வானத்து தேவதையோ? அல்லது புவியின் அழகு தாரகையோ? என்று எண்ணும் அளவிற்கு ஒரு பெண் அமர்ந்து வடகம் பிழிந்துக் கொண்டிருந்தாள்.

வேறு யார், நம் பிரஜி தான், நேற்று சஞ்சீவ் சாப்பிடாமல், மீதமாகி விட்ட சாதத்தை, புத்தகத்தில் படித்த சமையல் குறிப்பின் உதவியோடு, அதை இன்று வடகமாக்கி இருந்தாள். வெயில் ஏறும் முன் பிழிந்து விட்டு வருவோம் என்று அதிகாலையிலேயே, சஞ்சீவ் எழும் முன் மாடிக்கு வந்திருந்தாள். அவளை தான் ஒருவன் ரசித்துக் கொண்டிருந்தான்.

அவனோ “வாவ்… என்ன ஒரு அழகு, இப்படி ஒரு அழகை பார்த்ததே இல்லையே” என வியந்து, அவளுக்கு தமிழ் தெரியாது என்றெண்ணி, “அழகோ…. அழகு…. தேவதை….” என்று பாடலை பாடிக் கொண்டிருந்தான்.

பிரஜீயும் அதிகாலை எழுந்து முகம் மட்டும் கழுவி வந்ததால், நெற்றியில் ஒரு பொட்டை தவிர, குங்குமம் இடாமல் இருந்தாள். அதனால் அவளின் முகம், அவளுக்கு திருமணமானதை எடுத்து சொல்லவில்லை. அதனால், அவளின் முகம் பார்த்த அவனுக்கும், அவள் திருமணமான பெண் என்று தெரியவில்லை.

பாட்டு சத்தத்தைக் கேட்டு திரும்பி பார்த்தவள், அங்கு ஒரு புதியவன் நிற்பதைக் கண்டு திகைத்தாலும், ‘இங்கு இருப்பவன் போல… அல்லது யார் வீட்டிற்கும் வந்திருப்பான் போல’ என்றெண்ணி குனிந்து தன் வேலையைப் பார்த்தாள்.

அவன் மீண்டும் அதே பாடலை பாடவும், பிரஜி எரிச்சலாகி “சூ… சூ… இந்தக் காக்க தொல்ல தாங்கவே முடியல… சூ… சூ…” என இல்லாத காக்கைகளை விரட்டினாள்.

அதில் “அய்யயோ இவளுக்கு தமிழ் தெரியும் போலயே” எனப் புதியவன் அதிரும் சமயம், கீழிருந்து, “சசி…. ஏய்… சசி……..” என்று சங்கீயின் குரல் அழைக்கவும் சரியாக இருந்தது.

பிரஜீயோ சங்கீயின் குரலைக் கேட்டு, அவனைப் பார்க்க, அவனோ தலைமுடியைக் காதோரமாய் கோதி, சங்கடப்பட்டு ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு, கீழே சென்றான். பின் பிரஜி, “ஓ… சங்கீ வீட்டு விருந்தாளியா?” என எண்ணிக் கொண்டே தன் வேலையை முடித்துக் கொண்டு, கீழே சென்றாள்.

நேற்றே வந்திறங்கிய சசி குமாரை பார்த்த சங்கீ ‘வந்துட்டான் டா பாசமலர், இனி இந்த கபூர் ஃபாமிலியின் அலம்பல் தாங்க முடியாது’ என்று மனதுள்ளே புலம்பிய வண்ணம் தான், அவனை வரவேற்றாள். கீழே சென்ற சசி குமாரிடம், அதான் நம் சஞ்சய் குமாரின் தம்பியை “எங்க போன…? இந்தா டீ” எனச் சங்கீ டீ கப்பை அவனுக்கு கொடுக்க, அவனோ, அவளை முறைத்த வண்ணம், அப்போது தான் எழுந்து வந்த ஜெய்யிடம் “சஞ்சய்… இங்க பாரு டா, என்ன சசி சசின்னு உன் வைஃப் கூப்பிடுறா” என்று புகார் செய்ய,

சங்கீதாவோ “முத… என்ன அண்ணின்னு கூப்பிட சொல்லுங்க” என்று சஞ்சயிடம் சொல்ல, சசியோ “அண்ணியா……. இதையா…. நெவெர்…” என்று அவன் மறுக்க,

சங்கீயோ “நீ ஒன்னும் சொல்ல வேணாம், போ… போ… உனக்கு பொண்ணே சிக்காது” என்று சாபம் கொடுத்தாள்.

ஜெய்யோ “ஏன் டா……. ஏன்…. இத்தன நாளும், அத்தைக்கும், மருமகளுக்கும் இடைல பஞ்சாயத்து பண்ணேன், இனி உனக்கா… ஆள விடுங்க பா… என்ன…” என்று ஜெய், இத்தனை நாளும் சங்கீ, சந்தோஷிக்கு பஞ்சாயத்து பண்ணி ஓய்ந்தவன், இனி தன் தம்பிக்கும், தன் மனைவிக்கும் இடையே பஞ்சாயத்தா எனப் பயந்து விலகினான். ஏனென்றால், இருவரும் சண்டையிட்டால், அந்தச் சண்டைக்கு முடிவென்பதே கிடையாது, அவர்களாக களைத்து ஓய்ந்தால் தான் உண்டு.

சங்கீயும், சசி தன் அண்ணன் சபரியின் நண்பன் என்பதால், சபரியைப் போலவே அவனுக்கும் பெரிதாக மரியாதைக் கொடுக்க மாட்டாள். அதனால், சங்கீக்கு நாத்தனார் இல்லாத குறையை சசி பூர்த்தி செய்தான்.

இப்போது சசி குமாருக்கு, பெண் பார்க்கின்றனர். பாவம், சசிக்கு எந்த இடமும் அமையவில்லை. சசிக்கு பிடித்தால், பெண்ணுக்கு பிடிக்கவில்லை, பெண்ணுக்கு பிடித்தால் சசிக்கு பிடிக்கவில்லை. அதனால் சசி, தன் சுய முயற்சியினால், பெண் தேடலாம் என்று முடிவு செய்திருந்தான்.

ஒரு மாற்றத்திற்காகவும், ஊரைச் சுற்றி பார்ப்பதற்காகவும், தற்சமயம் தன் அண்ணன் வீட்டிற்கு வந்திருந்தான். சங்கீயின் சாபத்தைக் கேட்கவும் தான், சசிக்கு இப்போது பார்த்த பெண், ஞாபகம் வர, மெல்ல தன் போர்கொடியை இறக்கி, “சரி, சரி… என்ன டிபன் செய்யப் போறீங்க மேடம், மே ஐ ஹெல்ப் யூ” எனப் பணிவாகக் கேட்க,

அவளோ ‘என்னடா இது, சாமி மலை இறங்குது…… என்னமோ விஷயம் இருக்கு’ என்று ஒரு மார்க்கமாய் அவனைப் பார்த்து, ‘ஒரு வேள, நாம சாபம் கொடுக்கவும், பயபுள்ள பயந்திருச்சோ? இருக்கலாம்’ என்றெண்ணிக் கொண்டு “நீ ஒன்னும் செய்ய வேணாம், இந்தா… சந்தோஷி எந்திரிச்சுட்டா… அவளுக்கு பிரஷ் பண்ணி விட்டு, இந்த ஹார்லிக்ஸ ஆத்திக் கொடு” என்று ஹார்லிக்ஸை கலந்து இரு டம்ளர்களில், பாதி பாதியாய் ஊற்றி வைத்தாள்.

சசியும் சங்கீ சொன்ன வேலையை செய்து முடித்தவன், சந்தோஷியோடு வாயாடி சங்கீயின் அண்ணன்களான சபரி, ஷிவா பற்றி நலம் விசாரித்து, தெரிந்துக் கொண்டான்.

பின் சந்தோஷி, காலை உணவு சாப்பிட்டு விட்டு, வீட்டில் இருந்த சசியிடம் “மாமா… கடிக்கு போலாம், வாரியா?” எனக் கேட்டாள். சசி அவளைத் தூக்கி, “எந்த கடிக்கு செல்லம் போகணும்” என அவளைப் போலவே பேசி பதில் அளித்தான்.

“இம்ம்… சுபெர் மார்கிட் போகனுமா… நீ ஸும்மா வேதியா டான் இருக்கியாம், அதான் அத்த கூப்பித்த சொலுச்சு” என்று தன் மழலை மொழியில் கொஞ்ச, அதை புரிந்துக் கொண்ட சசிக்கு கோபம் வந்தது தான், ஆனாலும் காலையில் பார்த்த பெண்ணைப் பற்றி, விவரம் தெரிய வேண்டும் என்ற ஆர்வம் முன்னால் வர, கோபம் பின்னால் சென்றது.

“சரி போகலாம்” என்று கிளம்பினான். காலையிலேயே சங்கீ ஜெய்யிடம், இன்று கடைக்கு, வீட்டுப் பொருட்கள் வாங்க செல்வதால், அவன் காரை விட்டு செல்லுமாறு கூறியிருந்தாள்.

அந்தக் காரில் அனைவரும் கிளம்பி சென்றனர். பின் பொருட்களை வாங்கிக் கொண்டு, மதிய உணவை வெளியே முடித்து விட்டு, அப்படியே சந்தோஷிக்கு, சங்கீ புதிதாய் இரண்டு உடையும், அதற்குப்  பொருத்தமாய் அவளுக்கு வளையல், ஜடை மாட்டி, தோடு என வாங்கினாள். அப்போது பிரஜீயின் ஞாபகமும், அவள் கையில், எப்போதும் கைக்கு ஒன்றாக இரண்டு தங்கவளையல் மட்டுமே இருப்பது ஞாபகம் வர, அவளுக்கும் சேர்த்து வாங்கினாள்.

சந்தோஷியிடம், “பிரஜி ஆன்ட்டிகும், வளையல் வாங்குவோமா டா குட்டி?” எனக் கேட்டாள், அவளும் “சரி” என தலையாட்டி, சில பல வர்ண வளையல்களைக் காட்டி “இது… அத்த இது வாங்கு… அது அழகா இருக்கு” என அவள் சொன்னவற்றில் இருந்து இரண்டு அழகான செட்களை எடுத்து வாங்கினாள். பின் கல் வளையல் ஒரு ஜோடியும் வாங்கினாள். அந்த கல் வளையல் போலவே தனக்கும், சந்தோஷிக்கு குட்டி அளவில் வாங்கினாள். இவர்கள் சம்பாஷனையைக் கேட்ட சசி, “அது யாரு பிரஜி ஆன்ட்டி” எனத் தோளில் உறங்கும் ஸ்ரீயை வைத்துக் கொண்டு அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன், சின்னவளிடம் கேட்க,

சங்கீயோ “புதுசா குடி வந்திருக்கா சசி, நியூலி மேரிட் கப்பில்” என்று பதில் தந்தாள்.

“ஓ… ஆமா சங்கீ, கேக்கணும் நினச்சேன், இன்னிக்கு காலையில, மாடில ஒரு பொண்ண பார்த்தேன், வடகம் பிழிஞ்சிட்டு இருந்தா… அவ யாரு?” என்று தன் மனதை குடைந்த விஷயத்தைக் கேட்டான்.

“யாரு… நான் பார்க்கலியே… சரி எப்படி இருந்தா?”

“ஐயோ… அழகுனா அழகு… அவ்ளோ அழகு” என அவன் காலையில், தான், அவள் அழகை பார்த்து மயங்கிய நினைவில் கூற,

அவன் சொன்னதிலேயே சங்கீக்கு புரிந்து விட்டது, அவன் யாரை சொல்கிறான் என்று, ஆனால் மேலும் புருவத்தை உயர்த்தி, ஓரக் கண்ணால் அவனைப் பார்த்து, “இம்… அப்புறம், அந்த பொண்ணுக்கு தமிழ் தெரிஞ்சிருக்குமே…”

“ஹே ஆமா… உனக்கு தெரியுமா?”

“இம்… தெரியும், அவளையும் தெரியும், அவ புருசனையும் தெரியும், அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் ஆச்சுன்னு இப்போ நீ புரிஞ்சுக்கோ” என்று அவன் கேட்காததையும் சேர்த்தே சொன்னாள். அதைக் கேட்டு, “அய்யையோ…” என்று அதிர்ந்தான்.

சங்கீயோ “நில்லு பா, இதையும் சேர்த்து கேட்டுட்டு மொத்தமா அதிர்ச்சியாகு, அந்தப் பொண்ணு தான் பிரஜி, இப்ப வளையல் வாங்குனோம்ல அவளுக்கு தான். அப்புறம் அவ புருஷன் சும்மாவே உர்னு இருப்பான், நீ பார்த்த விஷயம் தெரிஞ்சுச்சு, அப்புறம் அவன் உராங்குட்டான்னா மாறி, உன்ன கடிச்சு வச்சிருவான், பார்த்து பத்திரமா இருந்துக்கோ” என்று அவனைப் பயமுறுத்தி வைத்தாள்.

பின் காரில் வரும் போது, தனக்கு மட்டும் பெண்ணே சிக்க மாட்டேங்குதே, தன் ராசி, அப்படி இப்படி என்று புலம்பிக் கொண்டே வந்தவன், “ஆமா சங்கீ, நான் அவகிட்ட, பேசாமலே அந்தப் பொண்ணுக்கு தமிழ் தெரியும்னு கண்டுபிடிச்சேன்னு, உனக்கு எப்படி தெரியும்?”

“ஆமா… இது பெரிய ரகசியம், நீ அவளப் பார்க்க மட்டுமா செஞ்சிருப்ப… பார்த்துட்டே அப்படியே ஏதாவது தமிழ் பாட்டு பாடியிருப்ப, அவ புரிஞ்சுகிட்டு உன்ன முறச்சிருப்பா”

“ஹீ..ஹீ… ஹீ” என அசட்டு சிரிப்பு சிரித்தான் சசி.

“அந்தக் காலத்துல இருந்து, இந்தக் காலம் வரைக்கும், பொண்ணுங்கள சைட் அடிக்க பசங்க கையாளுற ஒரே டெக்னிக் இதான… என்னப் பாட்டு தான் மாறுது, அப்போ இருந்தவங்க எம்.ஜி.ஆர் பாட்டு, அப்புறம் ரஜினி கமல் பாட்டு, இப்போ அஜித் விஜய் பாட்டு. அவ்ளோ தான்” எனப் பெரிய பிரசங்கமே செய்தாள் சங்கீ.

“நீ புத்திசாலி தான் சங்கீ…” என அவளைப் புகழ்ந்தான்.

“நான் நினைச்சேன் காலையிலேயே, என்ன டா இது என்னிக்கும் இல்லாம இன்னிக்கு ஹெல்ப் பண்ணவானு கேக்குறியே… இதுல கடைக்கு வேற டக்குனு வந்தியேன்னு நினைச்சேன்… இதுக்கு தானா? சரி பிரஜி என்ன பண்ணா? முறச்சாளா??? திட்டுனாளா??? இல்ல… செருப்பு கிறுப்பு காமிச்சாளா?” என வாய்க்குள்ளேயே சிரிப்பை பூட்டி வைத்து கேட்க,

அவனோ “அடிப்பாவி நீயே அந்தப் பொண்ணுக்கு, சொல்லிக் கொடுத்திருவ போலேயே… அந்தப் பொண்ணு சும்மா முறச்சுச்சு, அப்புறம் காக்காவ தான் பத்தி விட்டுச்சு” என அவன் உண்மையை உளற,

சங்கீயோ ஆச்சரியப்பட்டு “அது எப்படி காக்கா பத்தி விட்டதுல, அந்தப் பொண்ணு தமிழ் தான்னு கண்டுபிடிச்ச? எல்லா மொழிலேயும் காக்காவ சூ… சூ…ன்னு தான சொல்லி விரட்டுவோம்” என்று அறிவாளியாய் கேட்க,

“ஐயோ… எப்படியோ கண்டுபிடிச்சேன்… விட்ரு தாயே விட்ரு…”

“அப்போ… வேற ஏதோ நடந்திருக்கு… என்ன.. செம பல்ப்பா….” எனச் சங்கீ விடாமல், சுவாரசியமாய் கேட்க,

அவனோ “வேணாம்… அழுதிருவேன்…..” என்று கூற, அவன் அருகில் முன் சீட்டில் அமர்ந்திருந்த சந்தோஷியோ “அச்சோ… மாமா, பேட் பாய் தான் அலுமா… எங்க மிஸ் சொன்னாங்க… வேணாம் அலாடீங்க” எனக் கூற, சங்கீ சிரித்தே விட்டாள்.

வீட்டிற்கு வந்த பின்னும் அவனைப் பார்த்து பார்த்து சிரித்தாள். சசிக்கு, தன் தோழன் சபரியின் தங்கையாய் சங்கீ அறிமுகமான போதே, தங்கள் வீட்டில் இப்படி ஒரு தங்கை இல்லையே என்று தான் நினைத்தான். பின் அவள் தனக்கு அண்ணியாய் வரவுமே தனக்கு ஒரு செட் கிடைத்து விட்டது என்று சந்தோஷப் பட்டான். சசி, ஒரு அண்ணனை போல் அவளிடம் பாசமாக இருப்பான், சங்கீயும் அவனிடம் தன் அண்ணன் சபரியை காணவும், உரிமையாய் பேசி சண்டைப் போடுவாள். இருவரும் பாசமலர்களாய் இருந்தாலும், ஒருமையில் பேசி பழகுவதால், அவர்களிடையே நல்ல தோழமையும் உண்டு.

வீட்டிற்கு ஜெய் வந்த பின்னும், சசியை அவனிடமும் சொல்லி, கேலி செய்தே கொன்றாள். பின் மறுநாள், சங்கீ வளையலை பிரஜீயிடம் தந்து விட்டு, சசியை அறிமுகம் செய்து வைத்தாள். சசி “சாரி பிரஜி… நீங்க சின்னப் பொண்ணுன்னு நினச்சுட்டேன்” என்று நேற்று காலை நடந்ததற்கு மன்னிப்புக் கேட்க, சங்கீயோ “அவ சின்னப் பொண்ணு தான், இப்ப தான் காலேஜ் முடிச்சிருக்கா, ஆனா கல்யாணம் ஆகிருச்சு” என்று சிரித்து சசியை கடுப்பேற்ற,

அவனோ சங்கீயிடம் “சரி, ஒத்துக்கிறேன், தப்பு தான்.” பிரஜீயிடம் “சாரி பிரஜி, உங்களுக்கு கல்யாணம் ஆகலன்னு நினச்சுட்டேன்” என்று வெளிப்படையாய் மன்னிப்பு கேட்டான். பிரஜீயோ “பரவாயில்ல… இருக்கட்டும்” என்றாள்.

பின் மூவரும் வீட்டில் இருப்பதால் அடிக்கடிப் பேசிக் கொள்வார்கள், ஏன் கேரம், செஸ் என விளையாட ஆரம்பித்தார்கள், பிரஜீயை, சசி “சிஸ்டர்” என்று அழைத்தாலும், பிரஜி அவனைக் காணும் போதெல்லாம், தன் அண்ணனின் நினைவு வந்தாலும் அவனுடன் பேச தயங்கினாள்.

ஆனால் சங்கீ தான், மதியம் ஓய்வு நேரத்தில், கேரம், செஸ் விளையாட அழைப்பாள். அதுவும் எப்படி? “ஏய் பிரஜி வா… சும்மா தான வீட்ல வெறிச்சுகிட்டு உக்கார்ந்திருக்க… வா விளையாடலாம்” என்று உரிமையாய் அழைப்பாள். பிரஜி சசி நல்லவனாக இருந்தாலும், சங்கீக்கு தெரிந்தவன் என்றாலும், அந்நிய ஆணோடு எப்படி விளையாடுவது என்று சிந்தித்தாள். சஞ்சீவ் திடீரென வந்தாலும், யாரேனும் பார்த்தாலும் தவறாக எண்ணுவார்கள் என்று சங்கடப்பட்டாள்.

அப்படியும் அவள் சசி இருப்பதால் வர சங்கடப்பட்டால், சங்கீ “அப்போ… இந்தா இவனப் பார்த்துக்கோ, நானாவது ப்ரீயா விளையாடுறேன்” என்று ஸ்ரீயை கொடுத்து விட்டு, இரு வீட்டுக்கும் பொதுவில் இருக்கும் வராந்தாவில் அமர்ந்து சசியோடு விளையாடுவாள். சந்தோஷி அவர்கள் விளையாட்டை வேடிக்கைப் பார்ப்பாள், சில சமயம் தானும் விளையாடுவேன் என்று அடம் பிடிப்பாள்.

பிரஜீயும் வராந்தாவிலேயே அமர்ந்து அவர்கள் விளையாடுவதை, ஸ்ரீ குட்டியை வைத்துக் கொண்டு வேடிக்கைப் பார்ப்பாள். சில சமயம் யாருக்காவது ஐடியா கொடுப்பாள். பின் ஆர்வ மிகுதியில், அவளும் சில நாட்களில் தயக்கம் இல்லாமல் அவர்களுடன் விளையாட ஆரம்பித்து விட்டாள். அவர்கள் வெளியே தானே விளையாடுகிறார்கள், மேலும் இத்தனை நாள் பழக்கத்தில் சசி மீது நன்மதிப்பே ஏற்பட்டது பிரஜீக்கு.

இந்த விளையாட்டில் சங்கீ தோற்றால் அவ்வளவு தான், சசியை தான் குற்றம் சுமத்துவாள். அவன் ஏதேனும் நகைச்சுவையாய் அவ்வப்போது பேசுவான், அதைப் பிடித்துக் கொண்டு, சங்கீ “எல்லாம் உன்னால தான் சசி, நீ தான் பேசி பேசியே என்ன குழப்பி அவுட் ஆகிட்ட, உங்க ஃபாமிலியே இப்படித் தான், உங்க அண்ணனும் இப்படித் தான் பேசி பேசியே என்ன ஏமாத்திட்டார்” என்று இவ்வாறு போகும் அவள் குற்றச்சாட்டு.

அவனோ “ஏய் என்ன என்னவேணாலும் சொல்லு, எங்க அண்ணன சொன்னப் பார்த்துக்கோ” என்று அவன் அண்ணனுக்கு பரிந்துக் கொண்டு வாருவான், “ஆரமிச்சுட்டாங்க டா கபூர் ஃபாமிலி, பாசத்தப் பிழிய ஆரமிச்சுட்டாங்க” என்று மேலும் அவள் குறை கூற, இவர்களின் முற்று பெறாத சண்டைக்கு, சங்கீயின் மைந்தன் தன் தொண்டையைக் காண்பித்து முற்றுப் புள்ளி வைப்பான்.

நாட்கள் நகர, வாரக் கடைசியும் வந்தது, அன்று அதிகாலையிலேயே சஞ்சீவ் டீ குடிக்கும் போதே, சந்தோஷி அவர்களைத் தேடி வந்தாள். சஞ்சீவிடம் “மாம்மா…. பர்ஜி அத்த… எங்க?” எனக் கேட்டாள், அவனோ “ஹே சந்து மா, நீங்க குட் கேள்ளா சீக்கிரம் எந்திரிசுட்டீங்க?” எனக் கேட்க, “இம்… ஆமா” எனப் புன்னகைத்தவளிடம், “அத்த உள்ள கிட்சென்ல இருக்கா” என்றான்.

பிரஜீயிடம் சென்றவள், “அத்த… நாம வெளிய போலாமா… அத்த கேக்க சொன்னாக” எனக் கேட்டாள், “எங்க டா குட்டிமா” என்று வினவ, “அத சொல்லலையே, கேட்டு வாறன்” என்று ஓடி விட்டாள்.

இதைக் கேட்டுக் கொண்டே சமயலறைக்கு சென்ற சஞ்சீவ் “என்ன அடிக்கடி அவங்கக் கூட வெளிய போவ போல?” என்று வினயமாய், நான் சென்ற பின் ஊர் சுற்றுகிறாயா என்ற அர்த்தத்தில் கேட்டான்.

“அப்படில்லாம் போ மாட்டேங்க” எனப் பதில் கூறினாள். பின் சிறிது நேரத்தில் சங்கீயே வந்து அவளிடம், “சும்மா இங்க லால் பாக், இஸ்கான் டெம்பிள் னு போலாமா பிரஜி” என்று கேட்டாள், பிரஜீயோ சஞ்சீவைப் பார்க்க, சங்கீ மேலும் “நீங்களும், இங்க வந்து எங்கயும் சுத்தி பார்க்கலேல… எங்களோட வாங்களேன், சந்தோஷிக்கு ரொம்ப ஆசை, உங்களோட போகணும்னு. அதோட நாம அஞ்சு பேர் தான ஒரு சைலோவோ, டவேராவோ புக் பண்ணா கரெக்டா இருக்கும், நாம டிராவலிங் செலவ ஷேர் பண்ணிக்கலாம்” என ஐடியா தந்தாள். இவ்வளவு தூரம் வற்புறுத்திய பின் சஞ்சீவ் மறுக்காமல் கிளம்பினான்.

இரு பெண்களும் மதிய சாப்பாட்டை ஒரு மணிநேரத்தில் சமைத்துக் கொண்டு சென்றார்கள். சங்கீ சந்தோஷிக்கும், தன் மகனுக்கும் பருப்பு சாதமும், காரட் பொரியலும், செய்து தயிர் சாதமும் செய்து எடுத்துக் கொண்டாள். பிரஜீயோ தக்காளி சாதமும், சந்தோஷிக்கென உருளைக்கிழங்கு வருவலும், சோயா பருப்பு கூட்டும் தயார் செய்தாள்.

அவர்கள் புக் செய்த சைலோ காரும் வர, முன் இருக்கையில் ஓட்டுனர் அருகில் சசியும், பின்னாடி சஞ்சீவும், பிரஜீயும் அமர்ந்துக் கொள்ள அவர்களுடனே ஜென்னலோர இருக்கையில் சந்தோஷியும் அமர்ந்துக் கொள்ள, ஸ்ரீயின் பொருட்களுடன் சங்கீயும், ஜெய்யும் ஜோடியாக அதற்கும் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டனர். சஞ்சீவும் ஜெய்யும் ஏற்கனவே அறிமுகமாகி இருந்தனர், இப்போது செல்லும் முன், தன் தம்பி சசியை, ஜெய் சஞ்சீவுக்கு அறிமுகம் செய்தான்.

செல்லும் போது, ஸ்ரீராம் முழித்துக் கொண்டு, தானும் இருக்கிறேன் என்று குஷியோடு அவன் மொழியில் கத்திக் கொண்டும், சத்தமிட்டுக் கொண்டும் வர, அதனால் கவரப்பட்ட சந்தோஷி அவனைக் கேட்க, பின் ஜெய் அவனைச் சஞ்சீவிடம் தர, அவன் சிறிது நேரம் அவனை வைத்திருந்து பிரஜீயிடம் கொடுத்தான்.

பிரஜி நடுவில் இருக்க, இரு பக்கமும் சந்தோஷியும், சஞ்சீவும் அவள் மடியில் இருந்த ஸ்ரீயை கொஞ்சிக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த சங்கீ “பிரஜி சீக்கிரமே சஞ்சீவ் அண்ணனுக்கு ஒரு குழந்தையப் பெத்துக் கொடு, அங்க பார்… ஸ்ரீராம பார்க்கவும், உன்ன கூட மறந்துட்டார்.” என்று கிண்டல் செய்ய, பிரஜியோ வெட்கப்பட, சஞ்சீவுக்கு அப்போது தான், தனக்கும் பிரஜீக்கும் குழந்தைப் பிறந்தால், எப்படி இருக்கும் என்ற கற்பனை, நல்ல வேளை இப்போதாவது அவனுக்கு தோன்றியது. பிரஜீயின் அழகிற்கு நிச்சயம் குழந்தை அழகாக தான் பிறக்கும் என்று நினைத்து அவனும் அந்தக் கற்பனையில் புன்னகைப் புரிந்தான்.

பின் குழந்தை பிரஜீயின் மடியிலேயே உறங்கி விட, சங்கீ அவனைக் கேட்க, “இல்ல இருக்கட்டும் சங்கீதா, நானே வச்சிருக்கேன்” என்று கூற, சங்கீயும் விட்டு விட்டாள். சந்தோஷி இந்தப் பக்கம் வேடிக்கைப் பார்த்து, அலுத்து போக, அதனால் எழுந்து “நா…. மாமாக்கிட்ட… அங்கப் போறேன்…” என்று அடம் செய்ய, பின் குழந்தையோடு பிரஜி நகர, சந்தோஷியைத் தூக்கி தன் பக்கம் இருந்த ஜென்னலோரம் அமர்த்தினான்.

அப்போது பிரஜீயை உரசிக் கொண்டு தான் சின்னவளை தூக்கினான். மேலும் அவள் பக்கம் நகர்ந்து, அவளை இடித்துக் கொண்டு அமர, ஏற்கனவே சங்கீயின் பேச்சினால், வெட்கப்பட்டவள், மேலும் நாணம் மேலிட, அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல், வெட்கச் சிரிப்போடு தன் மடியில் உறங்கும் குழந்தையைப் பார்த்தாள்.

அப்படியே மெல்ல, அவனைத் தட்டிக் கொடுத்து, தடவிக் கொடுத்தாள். அவளின் நிலையைப் பார்த்தவன், வெட்கத்தில் அவள் அழகு மிளிர்வதைக் கண்டவன், அவளையே பார்த்த வண்ணம், அவள் தோளில் கைப் போடுவது போல் சென்று, இருக்கையில் கை வைத்தான். அதைப் பார்த்த அவளின் நெஞ்சம் படபடவென அடிக்க தொடங்கியது. பின் அவன் இருக்கையில் கை வைக்கவும் தான், படபடப்பு குறைந்தது.

“இஸ்கான்” என்று அழைக்கப்படும் ராதா கிருஷ்ணர் கோவிலும் வர, அனைவரும் இறங்கினர். இவர்கள் சென்ற நேரம் கோவிலில் பஜனை நடந்துக் கொண்டிருந்தது. அதனால் சசியிடம், உறங்கும் ஸ்ரீயை கொடுத்து விட்டு, சந்தோஷியோடு நால்வரும் தரிசனம் செய்ய உள்ளே சென்றனர். சசி “அடப்பாவிகளா, இதுக்கு தான் என்ன கூட்டிட்டு வந்தீங்களா?” எனப் புலம்ப,

ஜெய் “என்னடா சசி, இப்படி எல்லாம் பேசுற… நாளைக்கு உனக்கு ஒரு குழந்தை பிறந்தா… நாங்க பார்த்துக்க மாட்டோமா” எனச் சொல்ல, “டேய் ஏன்டா… ஏன்… இங்க கல்யாணம் பண்ணுறதுக்கே பொண்ண காணோமா… இதுல எனக்கு குழந்த எப்படி டா பிறக்கும்?”

“கவலப்படாத சசி, உனக்காக தான்…. ஐ மீன் உனக்குப் பொண்ணு கிடைக்கனும்னு தான் சாமிகிட்ட வேண்டப் போறேன்” என அவனை குளிப்பாட்டி, கொஞ்சி விட்டு சென்றான், தன் செல்லத் தம்பியை அந்த அண்ணன்.

பின் சசியும் அவர்களுக்காக காத்திருந்தான், ஆனால் உள்ளே சென்றவர்கள் வரவே இல்லை, உறங்கிய ஸ்ரீயும் விழித்து அழ, பொறுத்து பார்த்தவன், உள்ளே சென்றான். அங்கு பஜனையில் மெய் மறந்து பக்தர்கள் ஆட, ஜெய்யோ தன் மனைவியை இடித்துக் கொண்டு ஆட, சந்தோஷியும் ஒரு பக்கம் ஆட, அவர்கள் அருகே சென்ற சசி “அண்ணா சற்று கண்ணை திறந்து பாருங்கள். உங்களுக்கு திருமணமாகி, இதோ ஒரு குழந்தை இருக்கிறது” என்று வசனம் பேசவும், ஆட்டத்தை நிறுத்திய ஜெய்யோ “நான் இல்லன்னு சொல்லலையே” என்று பிரமாதமாய் பதில் கூற, அழும் ஸ்ரீயை சங்கீயிடம் தந்து விட்டு, “ஏய் ஓவரா பண்ணாத, அங்கப் பாரு புதுசா கல்யாணமானவங்க கூட எப்படி இருக்காங்கனு” என்று ஒரு ஓரமாய் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பிரஜீயையும், சஞ்சீவையும் காண்பித்தான்.

“டேய் அவங்க புதுசா கல்யாணமானவங்க, வெட்கப் படுறாங்க டா” என்று பதில் தந்தான் ஜெய்.

“இம்… உனக்குத் தான் வெட்கமே இல்லையே, கல்யாணமாகாத ஒரு தம்பியையும், ஒரு எல்கேஜி படிக்கிற புள்ளையையும் பக்கத்துல வச்சுகிட்டு, என்ன டூயட் வேண்டிக் கிடக்கு உனக்கு” என்று திட்ட,

“அதான் டா, உன்ன வெளிய விட்டுட்டு வந்தேன், சந்தோஷி… குழந்த டா”

“அடப்பாவி, எனக்குப் பொண்ணு கிடைக்கணும்னு, சாமி கும்மிடப் போறேன் சொல்லிட்டு, நீ இங்க டூயட் ஆடிட்டு இருக்கியா… போதும் டா, நீ எனக்காக சாமி கும்பிட்டது, கிளம்பு கிளம்பு” என்று எல்லோரையும் கிளப்பி, லால் பாக்கை அடைந்தனர்.

அங்கும் ஜெய் தன் மனைவியோடு தனியே ஒதுங்க, விழித்திருந்த ஸ்ரீயை, ஜெய் தன் தம்பியிடம் தர, அவன் கடுப்பாய் பார்க்க, “டேய் பார்க்காதடா, நாளைக்கு உனக்கு குழந்த…” என அவன் முடிக்கும் முன்னே, அவன் கையால் நிறுத்து எனச் செய்கையை செய்து “போதும்…. கிளம்பு…” எனச் சொல்ல, “இந்தா டா, இந்த பாக்ல ஸ்ரீ ராம்க்கு தண்ணி பாட்டில், பால் பாட்டில், கிளுகிளுப்ப எல்லாம் இருக்கு, அவன் அழுதா கொடு, என்ன” என்று எங்கே போன தடவை போல ஸ்ரீயை தூக்கி கொண்டு வராமல் இருக்க, ஒரு பையை அவன் கழுத்தில் தொங்க விட்டு சென்றான்.

சசியும் கையில் ஸ்ரீ ராமோடு, முன்னே சந்தோஷியை ஆளுக்கு ஒரு கையில் பிடித்து நடந்துக் கொண்டிருந்த சஞ்சீவ், பிரஜீயோடு சேர்ந்து கொண்டான். பிரஜி “சங்கீதாவ, அண்ணாவக் காணோம்” என்று கேட்க, அவனோ “அவங்களுக்கு பஜனப் பண்ணதுல கால் வலிக்குதாம், அதான்… அதோ ஒரு மல தெரியுதுல, அங்க உக்கார போயிருக்காங்க” என்று அங்கு நுழை வாயிலுக்கு சற்று தள்ளி ஒரு மலை இருந்ததைக் காண்பித்தான்.

உடனே பிரஜி “நல்லா இருக்குமா… நாமளும் போவம்ங்க” எனச் சஞ்சீவிடம் கேட்டு விட்டு நிற்க, உடனே அவன், அவள் காதருகில் குனிந்து “ஏய் அறிவில்லையா… பேசாம நட” என்று திட்ட,

பிரஜீயோ தன்னை ஏன் திட்டுகிறான் என்று புரியாமல் நடந்தாள். பின் சிறிது தூரம் சென்றதும் சந்தோஷி தூக்கச் சொல்ல, சஞ்சீவ் அவளைத் தூக்கிக் கொண்டு நடந்தான். பிரஜீயோ “கொஞ்ச நேரம் உக்கார்ந்துட்டு வரேன்” என்று அங்காங்கே மர நிழலில் போடப்பட்ட கல் இருக்கையில் அமர, சசியும் அவளோடே ஸ்ரீராமோடு உட்கார்ந்து விட்டான்.

சஞ்சீவும் அமரலாம் என்று போக, அப்போது சந்தோஷி “மாமா.. இனக்கு… ஐஸ்…” என அங்கு சிறிது தூரம் தள்ளி ஐஸ் விற்பதைப் பார்த்து கேட்க, சசி “ஸ்ரீ ராம, பிடிங்க பிரஜி” என எழப் போக, சஞ்சீவ் “நீங்க உட்காருங்க சசி, நான் வாங்கிட்டு வரேன்” என்று சந்தோஷியோடு சென்றான்.

அங்கு ஐஸ் விற்பவர், இரண்டு மூன்று ஐஸ் பாரை காட்ட, அவள் “இனக்கு… அது…இம்ஹும்… இது” என கை நீட்டி, ஆட்டி ஒரு வழியாய் ஒன்றை வாங்க, அவர்கள் இருவருக்கும் கப் ஐஸ் வாங்கி கொண்டு, சந்தோஷி சாப்பிடும் அழகைப் பார்த்தவன், அப்போது தான் அவள் கை வளையலை கவனித்தான்.

பிரஜி அணிந்திருப்பதை போலவே இவளும் கல் வளையல் அணிந்திருக்க “வளையல் புதுசா செல்லம்” என அவன் கேட்க, அவளோ ஐசை சப்பிக் கொண்டே “இம்ம்….” என தலையாட்ட, அடுத்த கேள்வியாய் “யார் டா வாங்கி கொடுத்தாங்க?” எனக் கேட்க, சின்னவளோ “இம்… சசி மாமா” என அன்று அவன் பணம் கொடுத்ததை நினைவில் வைத்து அவள் கூற, உக்கிரமானான்.

சஞ்சீவ் ‘அப்போ அவன் தான் பிரஜீக்கும் வாங்கி தந்தானா?’ என எண்ணி தன் மனைவியைப் பார்க்க, அங்கோ அவளும், சசியும் சேர்ந்து சிரித்து கொண்டிருப்பதைப் பார்த்தவன், மேலும் ரௌத்திரமானான்.

 

மாயம் தொடரும்…………..

error: Content is protected !!