இது என்ன மாயம் 22

இது என்ன மாயம் 22

பகுதி 22

இத்தனை நாளும் உன் அருகில்

இருந்தும் இது போல் உணரவில்லை

இன்று இவ்வளவு அருகில் இருந்தும்

உணராமல் இருக்க முடியவில்லை

உந்தன் மீது நான் கொண்ட காதலை……

 

இந்தப் பக்கம், சங்கீ வீட்டில், மேல் மாடியில் படுத்திருந்த சசி, கடகடவென சிரித்தான். அவனருகே படுத்திருந்த சபரி, “டேய்… ஏன்டா இப்படி ராத்திரி நேரத்துல, தனியா சிரிக்கிற?” என்று கடுப்பாய் கேட்டான். சசியோ “இல்ல… ஒன்ன நினைச்சேன், சிரிச்சேன்” என்று தத்துவமாய் பேச,

சபரியோ, செல்வியோடு சிறிது நேரம் கூட பேச முடியாமல், இப்படி தனியாக மாடியில் படுக்க நேர்ந்த கடுப்பில், “ஏய்… வேணாம் டா… இங்க அவனவன் இருக்க நிலைமை தெரியாம கடுப்ப கிளப்பாத” என்று பொரிந்தான்.

சசி அடுத்து படுத்திருந்த ஜெய்யோ “டேய்… அப்படி என்ன டா நினச்ச?”

“ஹா ஹா ஹா… யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்” என்று எல்லோரும் இன்று அவனைப் போல, தனியாக படுத்த சந்தோஷத்தில் கூறினான். அதைக் கேட்ட ஜெய்யோ “டேய்… ஒரு சின்னப் புள்ளைய வச்சுக்கிட்டு, இப்படிலாம் பேசுற” என உட்கார்ந்து, அவனை தலையணைக் கொண்டு மொத்தினான்.

ஆம், ஜெய் வீட்டில் தங்கிய, சங்கீ அண்ணன்களும், மற்றும் ஜெய்யின் பெற்றோர்களும் தங்கி விட, பெண்கள் மற்றும், ஜெய்யின் பெற்றோர்கள் கீழே தங்க, மேல் மாடியில் ஆண்களான சசி, சபரி, ஜெய் மற்றும் ஷிவாவை மேலே படுக்க சொல்லி சங்கீயால் அன்போடு துரத்தி விடப்பட்டனர்.

சசியோ தன்னைப் போலவே அனைவரும், தனியாய் படுக்க வரவும் சந்தோஷத்தில் இருந்தான். பின் அவன் வயதில் இருக்கும் சபரி, கையில் ஒரு வயது குழந்தையோடு இருக்க, பாவம் இவன் மட்டும் தனியே இருப்பதாலும், அதுவும் பெண்ணே கிடைக்காத கடுப்பினால் வந்த வெளிப்பாடு தான், சசியை அவ்வாறு பேச வைத்தது.

சந்தோஷியோ தந்தையோடு தான் படுப்பேன், என அடம் பிடித்து, ஷிவாவோடு படுத்திருந்தாள். அதனால் தான் ஜெய் அப்படிக் கூறினான். ஆனால் சசியோ, ஜெய்யின் மொத்தை வாங்கிக் கொண்டே “டேய்… நல்லவனே நானாவாது பரவாயில்லடா, பேச தான் செய்யுறேன், இது குழந்தைக்கு கூட புரியாது, ஆனா நீ அந்த குழந்த முன்னாடியே டூயட் பாடல? அதுவும் கோவில்ல வச்சு” எனப் போட்டுக் கொடுக்க, பின் சபரி என்னவென்று விசாரிக்க, சசி விபரம் சொன்னான்.

அதற்குள், தன் மானம் போவதை உணர்ந்த ஜெய், உடனே “டேய்… படுங்கடா, இல்ல மச்சான் எந்திரிச்சு திட்டப் போறார்” என்று ஷிவாவை வைத்து மிரட்ட, சபரியோ “மாப்பிள்ள, நீங்க நல்லா பாருங்க, அவர் ஒன்னும் தூங்கிருக்க மாட்டாரு” எனச் சொல்ல, அவர்களை விட்டு சற்று தள்ளி, ஜெய்க்கு அடுத்து படுத்திருந்த ஷிவாவை நோக்கி, மெல்ல ஜெய் தவழ்ந்தான்.

ஷிவாவோ சந்தோஷியை தூங்க வைத்து விட்டு, அலைபேசியில் சிந்தாவோடு கடலைப் போட்டுக் கொண்டிருந்தான். அந்தப் பக்கம் சிந்தாவோடு படுத்துக் கொண்டிருந்த சங்கீயோ, பொறுமை இழந்து அலைப்பேசியை அவளிடம் இருந்து பிடுங்கி, “நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்சமயம், அவரின் நாத்தனாரோடு பிஸியாக இருப்பதால், தயவு செய்து ஒரு நாள் கழித்து தொடர்பு கொள்ளவும்” என அலைப்பேசியை அணைத்து விட்டாள்.

ஷிவாவை பார்த்த ஜெய்யோ, தலை வரை போர்த்திருந்த அவன் போர்வையில், ஏதோ ஒளிர்வதை கண்டுப் போர்வையை விலக்க, சரியாக அதே சமயம் சங்கீயிடம் டோஸ் வாங்கி அசடு வழிந்துக் கொண்டிருந்தான் ஷிவா.

ஜெய்யோ “மச்சான்… சொல்லவே இல்ல, இப்படி ஒரு ஐடியா இருக்குன்னு… கொடுங்களேன், நானும் கொஞ்ச நேரம் பேசிட்டு கொடுக்கிறேன்” என்று அவன் அலைப்பேசியை கேட்க,

ஷிவாவோ “ஐயோ… மாப்பிள்ள… இப்ப தான் உங்க வைஃப் கடுப்பாகி, சிந்துக்கிட்ட போன்ன வாங்கி, என்ன காச்சிட்டு ஆப் பண்ணினா” என்றான்.

இருந்தும் தன் மனைவியிடம் பேசும் ஆசையில் “பரவாயில்ல… நான்… கொஞ்சம் ட்ரை பண்ணி பார்க்கிறேனே” என்று சொல்ல, ஷிவாவும் அலைப்பேசியை கொடுத்தான். சபரியோ “விதி வலியது…” என்று சொல்லி விட்டு, போர்வையை தலை வரை இழுத்து மூடி தூங்கப் போனான்.

சசியோ “ஏன்டா… இப்படி சொல்லுற?” என்று புரியாமல் கேட்க, சபரியோ “இப்ப பாரு என் தங்கச்சி டென்ஷனாகி, ஒரு அணுகுண்ட இங்க வீசுனாலும் ஆச்சரியப் படறதுக்கு இல்ல டா” என சொல்ல, சசிக்கும் அவளைப் பற்றி தெரியும் என்பதால், அவனும் கப்சிப்பாகி உறங்க சென்றான்.

இங்கு கீழே, சங்கீ ஜெய்யின் பெற்றோரை ஒரு படுக்கை அறையிலும், குழந்தைகள் மூன்று பேரையும் மற்றொரு படுக்கை அறையில் சாந்தியம்மாவோடு படுக்க வைத்தாள். சிந்தாவின் மகனை மட்டும் தொட்டிலில் படுக்க வைத்தனர். பின் பெண்கள் மூவரும், வரவேற்பறையில் அரட்டை அடித்து, ஒருவரை ஒருவர் கேலி பேசிக் கொண்டு படுத்திருந்தனர்.

சிந்தாவிடம் இருந்து அலைபேசியைப் பிடுங்கி விட்டு, வெட்கப்பட்ட சிந்தாவை பார்த்த சங்கீ “நீங்க இப்படி இருக்கிறத பார்த்து, இப்போ தான் அண்ணி, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று மனதார சொல்லி விட்டு, தங்கள் அரட்டையைத் தொடர, அதற்குள் ஜெய்யோ, அவள் அலைபேசிக்கு அழைக்க, இப்பொழுது மற்ற இருவரும் அவளைப் பார்த்து சிரிக்க, அவளோ கடுப்பில் “ஏய்….. இப்போ எல்லோரும் தூங்குறீங்களா? இல்ல மயக்கமருந்து ஸ்ப்ரே எடுத்து வந்து அடிச்சிருவேன், அப்புறம் இரண்டு நாளானாலும் எந்திரிக்க மாட்டீங்க” என மிரட்ட, ஜெய் “அய்யய்யோ….” என்று கத்திவிட்டு அலைப்பேசியை அணைத்தே விட்டான்.

பின் அவனும் படுத்து விட, சபரியோ ‘சொன்னேன்ல’ என்பது போல சசியை பார்த்து சிரிக்க, பின்னர் இருவரும் ஜெய்யை ஓட்டியதைக் கேட்கவா வேண்டும்.

அதிகாலை வேளை, பொழுது மெல்ல, புலர்ந்துக் கொண்டிருந்த சமயம், சஞ்சீவுக்கு விழிப்பு தட்டியது. ஏனோ மனம் லேசாக, என்றுமில்லாமல் சந்தோஷமாய், என்னவென்று சொல்ல தெரியாத தித்திப்பில் (இனிமையான உணர்வு) இருந்தான். திரும்பி படுக்க முயன்றான், ஆனால் அது முடியாமல், பிரஜி அவன் மீது லேசாக ஒட்டிக் கொண்டு, அவன் நெஞ்சத்தில் தலை வைத்து, குழந்தைப் போல மென்மையாய் துயில் கொண்டு இருந்தாள்.

பிரஜீயை பார்த்த உடனே, அவன் நினைவுகள் மெல்ல, பின்னோக்கி அவர்களின் சங்கமத்தில் லயித்து, அதற்கும் முன் நடந்த நிகழ்வில், அது தான் பிரஜி சொன்ன வார்த்தையில் வந்து நின்றது. அதற்கு முன் பேசிய அவனது வார்த்தைகளோ, அவன் நண்பன் குமாரோ நினைவில் இல்லை. பிரஜி பேசிய வார்த்தையிலேயே உடும்பு பிடியாய் நின்றது அவன் நினைவு.

உடனே ரோஷம் எட்டிப்பார்க்க, அவளை தன் மீது இருந்து பிரித்தான். அவன் விலக்கியதில் விழித்தவள், அவன் முகம் பார்க்க நாணி, குனிந்து கொள்ள எத்தனிக்கும் வேளையில், அந்த வார்த்தை வந்து விழுந்தது.

படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தவன், அவள் நேற்றைய நிகழ்வில் நாணமேற்பட, செம்மையுறவும், கோபத்தில் “என் தகுதியை நிரூபித்து விட்டேன், இனி…” என சொல்லி அவளைக் கர்வத்தோடு, கேள்வியாய் ஒரு பார்வைப் பார்த்தான். அவனுக்கே, அவனது கர்வம் அவள் காலடியில் குனிந்து கெஞ்சப் போகிறது என்று அப்போது தெரியவில்லை.

அந்த வார்த்தைகளில் ஒரு நிமிடம் தன் செவிகளையே நம்பாதவள் போல், அவன் முகத்தைப் பார்க்க, அவனோ அவளை விட்டு எழுந்து சென்றான். அவனின் வார்த்தைகளை கிரகித்தவளுக்கோ, நேற்றைய இன்பத்தினால் குளிர்ந்த மேனியும், மனமும் எரிய தொடங்கிற்று. அழுவதற்கு கூட வலிமையற்றவள் போல், கண்ணீர் வற்றி, அப்படியே படுத்திருந்தாள்.

அவன் வெளியில் சென்று, நடை பயிற்சியை முடித்து வந்த பின்னும், அவள் எழ வில்லை. அவன் குளித்து விட்டு, இருவருக்கும் டீ போட்டு அவன் குடித்து முடிக்கும் வரை கூட அவள் எழவில்லை.

பின் சஞ்சீவ், அவளை தேடி சென்று, படுத்திருந்தவளிடம், “என்ன எந்திரிக்கலையா?” என்று கேட்டான். அவள் பதில் சொல்லவில்லை, அவன் உதட்டைக் கடித்து, “எனக்கு ஆபீஸுக்கு நேரமாச்சு” என்றான். அதற்கும் அவள் வாயே திறக்க வில்லை. அவனும் அதற்கு மேல் நிற்காமல், தனக்கு தெரிந்த மாக்கியை கிண்டி சாப்பிட்டு விட்டு, அவளுக்கும் கொஞ்சம் வைத்து விட்டு, தன்னிடம் இருக்கும் சாவியினால் வீட்டை பூட்டிவிட்டு சென்றான்.

மாலையும் வந்தது, மிகவும் உல்லாசமாய், ஒரு மகிழ்ச்சியோடு அலுவலகம் விட்டு கிளம்பி, பிரஜீக்கு பூ வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றான். தன் காலணிகளை கழற்றிக் கொண்டே “பிரஜி….. பிரஜி…” என அழைத்தான்.

இப்போதும் அவனுக்கு பதில் இல்லை. அவள் சமயலறையில் இருப்பாள் என்றெண்ணி, மீண்டும் “பிரஜி…” என அழைத்துக் கொண்டு சமயலறைக்கு சென்றான், அங்கும் அவள் இல்லை. சரி, படுக்கையறையில் இருப்பாள் என்று அங்கு சென்று பார்த்தான், அங்கும் இல்லை, ஒரு வேலை… குளியலறையில்? அங்கு சென்று கதவை தட்டி விட்டு, பதில் இல்லாமல் போகவும், திறந்து பார்த்தான், அங்கும் அவள் இல்லை எனவும், சஞ்சீவ் பயந்தே விட்டான். ‘எங்கே போனாள்?…. ஒரு வேளை கோபித்துக் கொண்டு எங்கேயும் சென்று விட்டாளா?’

‘உனக்கு கொஞ்சமாவாது அறிவிருக்கிறதா? நேற்று அவளுடன் இரவைக் கழித்து விட்டு, காலையில் திமிராகப் பேசினால், உன் பக்கத்தில் உட்கார்ந்தா கொஞ்சிக் கொண்டிருப்பாள்? அதான் விட்டுவிட்டு சென்று விட்டாள்.’ என்று மனசாட்சி அவனை இடிக்க, ‘ஐயோ கடவுளே அவள் எங்கேயும் சென்றிருக்க கூடாது… ஐயோ பிரஜி என்னை மன்னித்து விடு…. ப்ளீஸ் என்னிடம் வந்து விடு’ என்று மனதுள் பிரார்த்தித்துக் கொண்டே, அவளை எங்கே போய் தேடுவது என்று யோசிக்காமல் கூட கதவை பூட்டி விட்டு கிளம்பினான்.

அப்போது எதற்கோ வெளியே வந்த சங்கீயிடம், “சிஸ்டர் பிரஜீய… பார்த்தீங்களா?  அவ எங்கேயும் வெளியே போறேன்னு… சொன்னாளா உங்ககிட்ட?” என்று அவசரவசரமாய் கேட்டான். சங்கீயோ அவனின் பதற்றத்தை உணர்ந்து “என்னாச்சு… அண்ணா? நான் கூட இப்ப தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பால்கனில பார்த்தேனே” என்று சொல்லவும் தான், அவனுக்கு தான் பால்கனியில் தேடாதது ஞாபகம் வந்தது. “ஸ்… ஓ…” என பெருமூச்சு விட்டு, “ஒன்னும் இல்ல சிஸ்டர்” எனக் கூறி மீண்டும் வீட்டை திறந்து உள்ளே சென்றான்.

பால்கனிக்கு சஞ்சீவ் சென்று பார்க்க, பிரஜீயோ அங்கு கால்களை மடித்து, முட்டியில் கைகோர்த்து வானத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். குளித்திருந்தாள் போல, சுடிதார் அணிந்திருந்தாள். “பிரஜி…” என அழைத்தான், அவளுக்கு அவனின் அழைப்பு காதில் கேட்டும், அமைதியாய் இருந்தாள்.

பின் என்ன நினைத்தானோ? சமயலறைக்கு சென்றான், அங்கு அவன் கிண்டி வைத்த மாகி அப்படியே இருக்க, சமைத்ததற்கான அறிகுறியே இல்லாமல் இருக்க, ‘அடிப்பாவி, காலையில் இருந்து சாப்பிடாமலா இருக்கிறாள்’ என எண்ணி, பாலில் ஹார்லிக்ஸ் கலந்து அவளுக்கு கொண்டு சென்றான். “பிரஜி… இந்தா குடி, காலையில் இருந்து எதுவுமே சாப்பிடாமலா இருக்க?” என அவள் அருகில் சென்று கேட்டான்.

அவளோ “உனக்கேன் கரிசனம்?” என்பது போல், அவனைக் கீழ் கண்ணால் பார்த்தாலே ஒழிய, முட்டியில் இருந்து கையை எடுக்க வில்லை.

சஞ்சீவ் இவளிடம் பேசினால் வேலைக்கு ஆகாது என்று, ஹார்லிக்சை, மேஜையில் வைத்து விட்டு, அவள் முட்டிக்கடியில் கை விட்டு, அவள் தடுக்க தடுக்க, அவளைத் தூக்கி உள்ளே கொண்டு வந்து, கட்டிலில் அமர்த்தினான்.

அப்படியே ஹார்லிக்ஸை, அவன் நின்றவாறே அவள் வாயில் வைத்து, புகட்ட முயற்சிக்க, அவள் மறுக்க, இருந்தும் அவன் அவள் கைகளையும் தோளோடு சேர்த்து பிடித்து, வாயில் புகட்டினான். ஆனால் அவளோ அதைக் குடிக்காமல், வெளியே துப்பி விட்டாள். சஞ்சீவுக்கு கோபம் தலைக்கேறியது, இருந்தும் தன்னைக் கட்டுபடுத்தி வெளியே சென்று விட்டான்.

மீண்டும் அவன் வீட்டிற்கு வரும் போது, இரவு உணவு வாங்கி வந்திருந்தான். முன் போலவே, அவளுக்கு பிடித்த முட்டைப்பரோட்டா தான் வாங்கி வந்திருந்தான். ஆனால், இப்பொழுதோ சாப்பிட மாட்டேன் என்று சத்யாகிரகம் செய்தவளை, மீண்டும் வலுக்கட்டாயமாய், அவள் கன்னத்தை இடது கையில் பிடித்து ஊட்டி விட்டான். மீண்டும் முன் போலவே அவள் துப்புவதற்கு முன், இப்படி செய்வாள் என்பதை யூகித்து, அவன் கையால், அவள் வாயை மூடினான். அந்த நிலையிலேயே “ப்ளீஸ்… பிரஜி சாப்பிடு… உனக்கு என் மேல தான கோபம், அத சாப்பாடு மேல காட்டாத… ப்ளீஸ்” என அவன் கெஞ்சவும், அவள் விழுங்கவும் தான், அவன் தன் கையை அவள் வாயில் இருந்து எடுத்தான்.

அடுத்த வாய் ஊட்டும் போது, அவள் தன் இடது கரத்தால் அதைத் தடுத்து, தானே சாப்பிட்டு கொள்வேன் என்பது போல, உண்ண ஆரம்பித்தாள். எப்படியோ அவள் சாப்பிட்டால் போதுமென்று விட்டு விட்டான். பின் பிரஜி இரவு படுப்பதற்கு, வரவேற்பறையில் அவள் தன் போர்வையை விரிக்க, சஞ்சீவ் அவள் கையைப் பிடித்து தடுத்து, “இனிமே நீ கீழே படுக்க வேண்டாம், என் கூட வந்து படு” என்று சாதரணமாய் தான் சொன்னான்.

ஆனால் அவளோ, அவனை உக்கிரமாய் பார்த்து, தன் கையை அவன் பிடியில் இருந்து இழுக்கவும், “ஐயோ… நான் அந்த அர்த்தத்துல சொல்லல” என சொல்லும் போதே, அவனுக்கு லேசாக வெட்கம் எட்டிப்பார்த்தது.

பிரஜீயோ ‘பின்னே எந்த அர்த்தத்தில் சொன்னாய்’ என்பது போல பார்த்தாள். அதற்கு மேல் எதுவும் சொல்ல தெரியாமல், “ப்ளீஸ்… பிரஜி” என்றான். அவளோ “அது ஒன்னும் எங்கப்பா வாங்கி தரலையே” என்றாள்.

அவனோ புன்னகைத்து, “ஆமா, என் மாமனார் வாங்கி தரல தான்… ஆனா உன் மாமனார் வாங்கி கொடுத்தது தான” எனச் சொல்ல, அவளோ அவனை ஆச்சரியமாய் விழி பிதுங்கப் பார்க்க, அவனோ அவள் தலையில், தன் தலையால் முட்டி, “நான் உன் கணவன், அதனால் என் அப்பா உன் மாமனார் அல்லவா?” என பதில் தர, அவளோ முகம் சுருக்கி, “வேணாம்” என்று சொல்லிக் கொண்டே தலையை இடது, வலதுமாக ஆட்டினாள்.

“ப்ளீஸ் பிரஜி… நான்… ஒன்னும் செய்யமாட்டேன்… வா” என்று அவள் கைப்பிடித்து அழைத்து சென்று, கட்டிலில் படுக்க வைத்தான். பின் அவனும் அவள் அருகில் படுத்துக் கொண்டான்.

பிரஜீயோ ‘என்ன தான் ஆச்சு?… இவனுக்கு… காலையில் அமிலமாய் எரித்தான், இப்போது தேனாய் குழைகிறான்? ஒரு வேளை… நேற்று போல் இன்றும்… ஆனால் ஒன்றும் செய்யமாட்டேன் என்று வாக்களித்து இருக்கிறானே…’ என்றெண்ணி, மேலும் ‘வாக்கு? அதுவும் இது போன்ற விசயங்களில் எல்லாம், ஆண்கள் கொடுத்த வாக்கை, அதுவும் கட்டிய மனைவியிடம் காப்பாற்ற மாட்டார்கள்’ என்று மனசாட்சி பயமுறுத்த, இங்கு வந்து படுத்தது தப்போ என எண்ணினாள்.

இப்படியே பயந்துக் கொண்டும், குழப்பத்தோடும், நெற்றி சுருங்க அப்படியே படுத்துக் கொண்டாள். அவளருகே படுத்தவனோ, தன்னவளின் நெற்றி சுருங்கலைக் கண்டு, அவளின் நெற்றியை நீவி விட்டான். பின் அவள் இயல்பாய் உறங்கவும், அவள் நெற்றியில் குனிந்து முத்தமிட்டான்.

அதுவரை சாதரணமாய் தான் இருந்தான், ஆனால் அவளின் நெற்றியில் இருந்து தன் இதழை பிரித்தவனுக்கோ, நேற்று அவள் கண்ணீருக்கு தன் இதழ்கள் அணை போட்டது நினைவிற்கு வர, மெல்ல மெல்ல அந்த நினைவுகளில் சிக்குண்டான்.

இத்தனை நாளும், அவள் அருகில் இருந்தும் பெரிதாய் அவனை பாதிக்கவில்லை, ஆனால் நேற்றைக்கு பின் அவனால் முன் போல இருக்க முடியவில்லை. மனதில் ‘உப்ப்… இவ்வளவு அருகில் மனைவி இருந்தும்…..ஹும்… இதில் அவளை மேலே வேறு… வற்புறுத்தி வேறு… படுக்க சொல்லி… படுக்க சொன்னதும் இல்லாமல், பெரிய வள்ளல், வாக்கு வேறு கொடுத்து தொலைத்து விட்டேன்’ என நொந்து, தன்னைக் கட்டுப்படுத்திப் படுத்தான்.

காலையில் எழுந்து, பிரஜி டீ போட்டு, அவனுக்கு டம்ளரில் ஊற்றும் போதே, அவளை இடிக்காத குறையாய் அருகே சென்று, தனக்கான டீயை எடுத்து, அவளைப் பார்த்து புன்னகைத்து குடித்து முடித்தான்.

அவனுக்கு சாப்பாடு கட்டும் போதும், அவள் பின் புறம் வந்து “பிரஜி… சாப்பாடு கட்டிட்டியா?” எனக் கேட்டுக் கொண்டே, அவனும் தண்ணீரை பாட்டிலில் நிரப்புவதும், சாப்பாட்டு பையை எடுத்துக் கொடுப்பதுமாக இருந்தான். மேலும் காலை உணவை அவனுக்குப் பரிமாறும் போது, அவளையும் கை பிடித்து, தன்னருகே அமரவைத்து, அவளையும் சாப்பிட சொல்லி வற்புறுத்தி, இருவரும் ஒன்றாக உணவு உண்டனர். இவ்வாறாக தன் நெருக்கத்தை அவளிடம் காட்டினான்.

இவ்வாறே இரண்டு நாட்களும் செல்ல, பிரஜீயும் புது மாப்பிள்ளை போல் இருக்கும் சஞ்சீவை ஒன்றும் சொல்ல வில்லை. ஒரு வேளை அவளுக்கும், அவனின் நெருக்கம் இயல்பான கணவனாய் அவன் இருக்கவும், அவளுக்கு பிடித்ததோ? அல்லது அவள் கற்பனை செய்து, கனவு கண்டது எல்லாம் நிஜமாய் நடக்கவும், அந்த நிறைவில் அமைதியாய் இருக்கிறாளோ?

இந்த இரண்டு நாட்களில் சங்கீ வீட்டிற்கு வந்திருந்த ஷிவா, சபரி குடும்பம் மற்றும் ஜெய்யின் பெற்றோரும், சசியும் தங்கள் ஊருக்கு கிளம்பி விட்டனர். பிரஜிக்கு தான் சந்தோஷியை பிரிய கஷ்ட்டமாய் இருந்தது, அதனால் சிந்தாவிடம் “அக்கா… நீங்க பேசாம இங்கயே வந்திருங்களேன், இங்க இதே ப்ளாட்ல எல்லோரும் ஒன்னா இருக்கலாம்” என்றாள். தனிமை துயரையும், கூட்டுக் குடும்பத்தின் கலகலப்பையும் உணர்ந்து சொன்னாள்.

ஆனால் சிந்தாவோ புன்னகைத்து விட்டு, “இம்… நல்ல கதையா இருக்கு… நீங்க இரண்டு பேரும் தான் அங்க வரணும், சென்னை தான உங்களுக்கு சொந்த ஊரு, அதனால நீங்க தான வரணும்.” என்று சொல்லவும், தன் சிறுப்பிள்ளைத் தனமான பேச்சை எண்ணி, புருவத்தை சுருக்கி, கண்ணை சிறிதாக்கி, அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தாள். பின் சந்தோஷிக்கு முத்தமாரி பொழிந்து பிரியா விடை கொடுத்தாள்.

இன்று பிரஜீக்கு பொழுது போகாதாதால், சந்தோஷி இருந்தாலாவது, அவளோடு பேசியபடி, விளையாடி பொழுது போகும் என்றெண்ணி, ஸ்ரீ ராமை சிறிது நேரம் தூக்கி வந்து வைத்திருந்தாள். பின் அன்று வெள்ளிக்கிழமை ஆதலால், மாலை ஆகவும், முகம் கழுவி பொட்டிட்டு, தலை பின்னி விட்டு, விளக்கேற்றி சாமி கும்பிட்டாள். சிறிது நேரம் சென்ற பின், விளக்கை குளிர வைத்து விட்டு, வாசல் கதவை சாற்ற சென்றாள். அப்போது சரியாக சஞ்சீவ் உள்ளே நுழைந்தான்.

அவன் கையில் இனிப்பு பலகாரமும், பூவும் வைத்திருந்தான். அதை பிரஜீயிடம் தந்து விட்டு, அவள் வாசக்கதவருகே நின்றிருந்ததைப் பார்க்கவும், தனக்காகக் காத்திருந்தாள் போல, என்றெண்ணிக் கொண்டே சந்தோஷத்தோடு குளிக்க சென்றான்.

பின் ரெப்ரெஷ் செய்து விட்டு, இரவு உடை உடுத்தி விட்டு, பிரஜி இருக்கும் சமயலறைக்கு சென்றான். வழக்கம் போல, அவள் அருகில் நின்று டீயைக் குடித்தவன், அவன் வாங்கி வந்த பூ அங்கு சமையல் மேஜையில் இருப்பதைப் பார்த்து, “என்ன பிரஜி… பூ வச்சுக்கலையா?” என்று வினவினான். அவளோ அவன் வாங்கி வந்த பலகாரத்தை டப்பாவில் அடைத்து வைத்துக் கொண்டே, “சாமிக்கு கொஞ்சம் வச்சிட்டு, வைக்கணும்” என்றாள்.

ஆனால் அவனோ குடித்து முடித்த டீ டம்ளரை, சிங்க்கில் போட்டு விட்டு, “அதான் இன்னிக்கு சாமி கும்பிட்டு முடிச்சுட்டேல, நாளைக்கு புதுசா வாங்கி சாமிக்கு வச்சுக்கலாம்… இப்போ நீ வை” என்றான். பிறகு என்ன நினைத்தானோ “இம்… நீ வைக்கிறதுக்குள்ள விடிஞ்சிடும், திரும்பு” என்று அவளை திருப்பி, அவனே அவள் கூந்தலில் பூவை சூட்டினான்.

மேலும், தன் பக்கம் திருப்பி, அவளை அழகு பார்த்தான். குங்கும வர்ண சேலையில் தலை நிறைய பூவோடு, பார்க்க அழகு பெட்டகமாய் ஜொலித்தாள். சஞ்சீவே ‘இன்று என்னை கட்டுப்படுத்தி கொள்வது… ரொம்ப சிரமம் போலேயே…’ என்று மனதுள் பெருமூச்சு விட்டான்.

அதைப் போலவே, இரவு கட்டிலில், மெத்தை விரிப்பை சரி செய்தவளின் அருகே சென்று “பிரஜி…” என மயக்கும் குரலில் அழைத்தான். அவன் குரலின் வித்தியாசத்தை உணர்ந்து, திரும்பியவள், அவன் ஒயிலாய் புன்னகைத்து, கண்ணில் ஒளியோடு, அவளுக்கு மிக அருகே நெருங்கவும், தன்னிச்சையாய் பின்னே நகர்ந்தாள். ஆனால் அவள் பின்னேறி செல்ல செல்ல, இவன் முன்னேறி செல்ல, கடைசியில் கட்டிலுக்கும், மேஜைக்கும் இடையில் சிக்கி கொண்டாள் பிரஜி.

அவனோ புருவத்தை மேலேற்றி புன்னகை புரிய, அவளோ அவனின் மயக்கும் புன்னகையும், காந்தக் கண்களும், தன்னை எங்கே நிலைக்குலைய செய்திடுமோ என்று கண்களை இறுக மூடிக் கொண்டாள். ஆனால் அவளின் அந்த நிலை, தனக்கு அழைப்பு விடுப்பதாக எண்ணி, அவள் இதழ்களை நோக்கி குனிந்தான். ஆனால் அவனுக்கு வெற்றி தான் கிட்டவில்லை.

அவள் கண்களை இறுக்கி மூடும் பொழுதே, அவனின் நோக்கம் உணர்ந்தவள் போல், இதழ்களையும் இறுக்கமாய் மூடிக் கொண்டாள். இருப்பினும், தன் இதழ் எனும் திறவுக்கோலால் திறக்க முயன்றான், மீண்டும்… மீண்டும்… இம்ஹும்… அவனால் முடியவில்லை.

அதனால் அவள் காதில் “ப்ளீஸ்… பிரஜி” என ரகசியமாய் வேண்டுக்கோள் விடுத்து, மீண்டும் அவள் இதழ்களை நோக்கி குனிய, ஆனால் சிறிதும் அவள் மலரிதழ்கள் மலராமல், ஏன் அசையாமலே இருந்தன. மேலும் அவளிடம் கொஞ்சவோ, கெஞ்சவோ மனமின்றி, தான் வேண்டுக்கோள் விடுத்தும், தான் வேண்டியதை பெற முடியாத ஆற்றாமையினால் வந்த கோபத்தை, அவள் சாய்ந்திருந்த சுவற்றில், ஓங்கி தன் வலக்கையினால் குத்தி விட்டு, விலகி வீட்டை விட்டு வெளியேறினான்.

அவன் சென்றதும் அப்படியே மடங்கி அமர்ந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாய் வந்தது. தன்னை இதற்கு மட்டுமே நாடுகிறான் கணவன் என்ற வருத்தமா? அல்லது தான் அவனுக்கு ஒத்துழைக்க முடியாமல், தன் மனம் தடுக்கிறதே என்ற கோபத்தினால் விளைந்த கண்ணீரா என்றே அவளுக்கு புரியவில்லை.

நேரம் கடந்தது, வீட்டின் அழைப்பு மணியோசை கேட்கவும் தான், தன் எண்ணத்தில் இருந்து விடுப்பட்டவள், கண்களைத் துடைத்து எழுந்தாள். ‘ஆம், இந்த நேரத்தில் யார்? சஞ்சீவ் என்றால், அவனே கதவை திறந்திருப்பானே! ஏனென்றால், எப்பொழுது வெளியே சென்றாலும், தன்னோடு ஒரு சாவி கொண்டு செல்வான். சரி, யார் என்று பார்ப்போம்’ என்றெண்ணி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, கதவருகே சென்று, கதவில் பொருத்தப்பட்டிருந்த லென்ஸ் வழியே, வெளியே பார்த்தாள்.

நல்ல வேளை, சஞ்சீவ் தான் என்ற நிம்மதியில் கதவைத் திறந்தவள் மீது, தள்ளாடி கொண்டு, நிலைப்படியில் இடித்து கொண்டு வந்து விழுந்தான். தானியங்கி பூட்டு என்பதால், கதவு லேசாய் தள்ளவுமே, போய் பூட்டிக் கொண்டது. அவன் தன் மீது விழுந்ததும் தள்ளாடியவள், சமாளித்து நின்றாள். ஆனால் அவள் தோள் மீது விழுந்தவனோ “பிரஜி… சாரி… சாரி பிரஜி… ப்ளீஸ் பிரஜி… “ என்று மூச்சுக்கு முன்னூறு தடவை ‘பிரஜி பிரஜி’ என்று அவள் பெயரை சொன்னவன் மீதிருந்து மதுவின் துர்நாற்றம் வீசியது.

 

 

மாயம் தொடரும்…….

error: Content is protected !!