இது என்ன மாயம் 24 – சாரா @ Sara Dhiya

இது என்ன மாயம் 24 – சாரா @ Sara Dhiya

பகுதி 24

பெண்ணே !

உன் மீதான காதலை உணரும் தருணம்

உன்னோடு சேர்ந்து உன் குணங்களும்

என்னோடு கலந்து விட்டதோ!

உன் தாயாய் மாறி

நான் தாங்குகிறேன் என்று

நீ சொன்ன போது உணர்ந்தேன்

உன்னுள் இருக்கும் தாய்மை குணம்

என்னுள்ளும் கலந்து விட்டது என்று…..

 

பிரஜி பயத்தோடு இருந்ததாலோ என்னவோ? அவள் மனதும் சோர்ந்தது. ஆனால் சஞ்சீவ் பத்திரமாய் செல்ல வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டே, அவன் போனுக்காக, சாப்பிடாமல் காத்திருந்தாள்.

அவள் காத்திருந்ததற்கு பலனாக, சஞ்சீவும் பதினோரு மணியளவில் மீட்டிங்கை முடித்து விட்டு, சாப்பிட செல்லும் போது, தன் மனைவிக்கு அழைத்தான்.

“ஹலோ பிரஜி”

“இம்… சொல்லுங்க, பத்திரமா போய்டீங்களா?” என்றாள் அமைதியாய்.

“இம்… மீட்டிங் முடிஞ்சிடுச்சு, நான் இப்ப தான் சாப்பிட போறேன். ஆமா நீ சாப்பிட்டியா?”

“ஓ! நான்….. இன்னும்….. சாப்பிடல…” என்று இழுத்து இழுத்து, அவன் திட்ட போகிறான் என்றெண்ணி தோளை தூக்கி, கண்ணை மூடிய படி சொல்ல, அதைப் போலவே அவனும் “ஏய்… இன்னுமா சாப்பிடாம இருக்க? உனக்கு அறிவிருக்கா??? இம்ச்சு…. என்ன பண்ண இவ்வளவு நேரம்?”

அவள் பதில் சொல்லாமல் அமைதியாய் இருக்கவும், “சரி நீ போய் சாப்பிடு பிரஜி, அப்போ தான் நான் சாப்பிடுவேன் “

இப்பொழுது மட்டும் “இல்ல நீங்க போய் சாப்பிடுங்க….. நான் சமைச்சு தான் சாப்பிடனும், லேட் ஆகும்” என்று எடுத்துரைத்தாள்.

அவனோ “பரவாயில்ல, எவ்ளோ லேட் ஆனாலும், நீ சாப்பிட்டன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமாவே சாப்பிடுறேன்” என வைத்து விட்டான்.

அவன் அன்பில் நெகிழ்ந்தவள், சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தவள்.

‘எவ்வளவு அன்பாக இருக்கிறான்! இத்தனை நாளும் இந்த அன்பை எங்கே வைத்திருந்தானாம்?…. இம்???’ என தனக்கு தானே கேட்டு, அழகாய் வாயை சுளித்து, நொடித்துக் கொண்டாள்.

ஆனால் அவள் மனதோ ‘அவன் எப்போதும் உன் மீது அன்பாய் தான் இருக்கிறான், முன்பு ஏதோ கோபம், அதாவது அவன் அண்ணன் இருக்கும் போது, அவனை நிர்பந்தப்படுத்தி கல்யாணம் செய்து, எல்லோர் முன்னும், முக்கியமாய் அவன் தந்தை, எந்நேரமும் திட்டுபவர் முன், மேலும் வசதியாய் அவனைக் குற்றவாளியாக்கிவிட்டாய் அல்லவா? அது தான் கோபம்,  அவ்வளவு தான். நடந்ததைப் பற்றி யோசிக்காமல், இன்று நடக்கும் விசயங்களைப் பார். அவன் உன் மீது அளவு கடந்த அன்பை வைத்த்ருக்கிறான் அல்லவா? அது போதும் எவ்வளவு பிரச்சனை வந்தாலும், அவனின் காதலோடு நீ ஜெயிக்கலாம்’ என்று எடுத்து கூறியது.

‘இம்… அதுவும் உண்மை தான், முன்பும் தான் கோபித்துக் கொண்டு, சாப்பிடாமல் இருந்ததற்கு உருகினானே. இம்… அவன் காதல் மட்டும் துணை இருந்தாலே போதும், எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும், தாங்குவேன், எதிர் கொண்டு வெற்றியும் காண்பேன்’ என்று எண்ணிக் கொண்டே, தனக்கு மட்டும் என்பதால், வக்கனையாய் எதுவும் செய்யாமல், ஓட்ஸ் காய்ச்சி குடித்துக் கொண்டாள். அது தான் இன்னும் சிறிது நேரத்தில் சமைத்து விடுவோமே என்று எண்ணி செய்தாள்.

பின் அவனிடம் அவள் சாப்பிட்டு விட்டதாக, போன் செய்து சொன்ன பிறகே அவன் சாப்பிட சென்றான். அப்போது, காத்திருந்து சாப்பிடுவது கூட, அதுவும் தன் மனதுக்கு பிடித்தவளுக்காகக் காத்திருப்பது… அதுவும் அவள் அருகில் இல்லையென்றாலும், அவள் சமைத்திருப்பாளா? இந்நேரம் சாப்பிட்டிருப்பாளோ? இல்லை சாப்பிடாமல் தனக்காக சாப்பிட்டேன் என்று பொய்யுரைப்பாளோ? என்று அவளைப் பற்றியே சிந்தித்து காத்திருந்த நிமிடங்களில் கூட ஒரு சுகம் இருக்க தான் செய்தது.

இவ்வாறெண்ணிய சஞ்சீவ், அவளின் அழைப்பு வரும் வரை, அவளை நினைத்து புன்னகை முகத்துடன் இருக்க, அந்த வழியே சென்ற அலுவலக நண்பனோ “என்ன சஞ்சீவ்? சாப்பிடலையா? சாப்பிடப் போகணும்ன்னு சொல்லிட்டு, இன்னும் இங்கயே உட்கார்ந்திருக்க?” என்று வினவ,

அதே சமயம் பிரஜீயும் அழைக்க, அவன் காதில் வைத்துக் கொண்டே “கிளம்பிட்டேன்” என்று நண்பனுக்கு புன்னகைக்க, அந்த நண்பனோ “இம்… இம்… புது மாப்பிள்ள, புது வைஃப், புது கல்யாணம்… இம்… இம்… கேரி யான், கேரி யான்…” என்று கேலி செய்ய, அவனோ பிரஜீயிடம் பேசிக் கொண்டே, அவனைத் தோளில் தட்டி அடித்து விட்டு, அப்படியே தன் மனைவியிடம் பேசிக் கொண்டே கான்டீன் சென்று விட்டான்.

பின் மாலையில் அலுவலகம் விட்டு வந்த சஞ்சீவ் மிகவும் சந்தோஷத்தோடு, “பிரஜி… பிரஜி…” என்று வழக்கம் போல கூவிக் கொண்டே உற்சாகத்தோடு வந்தான். தன் காதல் மனைவியோடு சேர்ந்து ஊர் சுற்றுவதற்கு, நாளை ஞாயிரோடு சேர்ந்து திங்கள், செவ்வாய், என இரண்டு நாட்களும் விடுமுறை எடுத்துக் கொண்டு, மூன்று நாள் சுற்றுலாவுக்கு மனதில் திட்டமிட்டுக் கொண்டு வந்திருந்தான். அப்படியே அதை ஒரு குட்டி தேனிலவாக மாற்றவும் எண்ணம் கொண்டிருந்தான். அது தான் உற்சாகம் கரைப் புரந்தோட வந்திருந்தான்.

ஆனால் அவனின் உற்சாகத்திற்கு நேர்மாறாய், பிரஜீயோ சுருண்டு படுத்திருந்தாள். அவளைத் தேடிக் கொண்டு வந்தவன், படுக்கை அறையில், தரையில் அவள் இன்னமும் படுத்திருப்பதைப் பார்த்து, அவள் அருகில் சென்றான். அவன் அழைத்ததிலேயே விழிப்பிற்கு வந்தவள், அவன் அவளை எட்டுமுன் எழுந்திருந்தாள்.

“என்னாச்சு பிரஜி?….. உடம்பு முடியலையா?” என்றான் அக்கறையாய்.

அவளோ “ஒன்னும் இல்லங்க… சும்மா தான்” என்று அமர்ந்தபடி சொன்னாள். பிரஜீக்கு மாதமாதம் வரும் பெண்கள் பிரச்சனை தான். சென்ற இரண்டு மாதமாய் பெரிதாக இல்லை, சமாளித்து விட்டாள். ஆனால் இப்பொழுது வெயில் காலமாதலால், உடம்பில் சூடும் சேர்ந்துக் கொண்டு அவளின் வயிற்றுவலியை இந்த தடவை அதிகப்படுத்தியிருந்தது.

அதனால் அவளின் சோர்வு, அவள் முகத்திலும் தெரிய, அதைக் கண்டுக் கொண்டவன், “பொய் சொல்லாத பிரஜி, உன் முகத்தப் பார்த்தாலே தெரியுதே,….. உனக்கு உடம்பு முடியலன்னு. என்னன்னு சொல்ல மாட்டியா?” என்று கண்டிப்போடு சொன்னான்.

அவளோ இவனிடம் எப்படிச் சொல்வது என்று யோசித்து, மறைமுகமாய் “வீட்டுக்கு விலக்காகிட்டேன்” எனச் சொல்ல,

சஞ்சீவ் வீட்டில் அண்ணன், தம்பியாய் ஆண்களாய் வளர்ந்ததால், இதைப் பற்றி தெரியாததால், “என்ன விலக்கு… ஒன்னும் புரியல” என்றான்.

அவளோ மேலும் எப்படி சொல்வது என்று யோசித்து, தன் கை விரல்களில், இரண்டு விரல்களை மடக்கி, மூன்று விரல்களை காண்பித்து, “இது தான்” என்று அவனிடம் சொல்ல, அவனோ “ஏய்… பிரஜி என்ன இப்படி எல்லாம் காமிக்கிற? எனக்கு ஒன்னும் புரியல, என்ன தான் பிரச்சனை? ஒழுங்கா சொல்லப் போறியா இல்லையா?” என்று அவன் பொரிய, பின் கஷ்டப்பட்டு அவனுக்கு மீண்டும் சொல்லி புரியவைக்க, “ஓ… இப்ப என்ன டா பண்ணுது? ரொம்ப வலிக்குதா?” என உருக…

“இம்… அம்மா இருந்தா, கைவைத்தியம் பண்ணுவாங்க எனக்கு சரியாகிடும்” எனத் தன் தாயின் நினைவிலும், வலியினாலும் மிகவும் சோர்ந்து சொன்னாள்.

அவனோ உதட்டை இறுக்கமாய் மடித்து, “எல்லாம் சரியாகிடும் டா… நான் வேணா மெடிக்கல்ல கேட்டு மாத்திர வாங்கிட்டு வரவா?” என ஆறுதலாய் கேட்டான்.

“இல்ல வேணாம்… அதுவா சரியாகிடும்ங்க… இருங்க உங்களுக்கு டீ போட்டு கொண்டு வரேன்” என்று எழப் போனவளை தடுத்து, “நீ படுத்துக்கோ, நான் போய் போட்டுக் கொண்டு வரேன்” என்று சமையலறை சென்று, அவளுக்கும் சேர்த்து டீ போட்டுக் கொண்டு வந்தான்.

அவளுக்கு ஒன்றை கொடுத்து விட்டு, அவளருகே சுவரோரமாய், தரையில் கால் நீட்டி அமர்ந்து, சரிந்து அவள் தோளில் தலைவைத்து, டீ குடித்துக் கொண்டே, “பிரஜி… நாம ரெண்டு பேரும் இங்க மைசூர், இல்ல எங்கயாவது, உன்னோட மூணு நாளைக்கு டூர் போலாம்னு, நான் ஆபீஸ்க்கு, இரண்டு நாள் திங்கள், செவ்வாய் லீவ் போட்டுட்டேன்” என்று கூறினான்.

மேலும் “உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னு உன்கிட்ட கேக்காம, நாளைக்கு சண்டே தானே, அதோடு சேர்த்து இரண்டு நாள் லீவ் போட்டு போலாம்னு நினைச்சேன். ஆனா உனக்கு இப்படி உடம்பு முடியாம போச்சு” என்று அவன் வருத்தப்பட,

அவனின் ஆசையும், அது நிறைவேற முடியாத அவனின் வருத்தமும் அவளை வாட்ட, “வேணா… நாம மைசூர் போயிட்டு வரலாம்ங்க… நான் அட்ஜஸ்ட் பண்ணி வந்திர்றேன்” எனக் கூற,

“ஹே… வேணாவேணாம், உடம்பு முடியாம அங்க போய் அலைஞ்சு ஏதாவது ஆகப்போகுது. இந்த தடவ போகலேன்னா என்ன? அடுத்த தடவ போகலாம். முத உனக்கு சரியாகட்டும்” என்று சொன்னான்.

“சரிங்க…” என்று அவளும் ஆமோதித்தாள். பின் இருவரும், ஒரே நேரம் “சாப்பிட்டியா?” என அவனும், “சாப்பிட்டீங்களா?” என அவளும் கேட்டு, இருவரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் புன்னகைத்தனர்.

அவள் புன்னகைக்கும் போது, வலிக்கவும் வயிற்றில் கை வைத்து, “ஸ்ஸ்ஸ்…” எனச் சமாளித்தாள். “என்னாச்சு?… ரொம்ப வலிக்குதா?…பிரஜி” எனக் கேட்டு, என்ன செய்வது என்று தெரியாமல், அவளைப் பார்க்க, அவளோ “இம்ஹும்… கொஞ்சமா … தான்” என்றாள்.

உடனே ஏதோ யோசனை வந்தவன் போல, “ஹே… எங்கம்மா வயிறு வலிச்சா… பன்னீர் சோடா வாங்கி குடிக்கச் சொல்வாங்க, நான் வேணா வாங்கிட்டு வரவா? குடிச்சு பார்க்கிறியா? இரு… வாங்கிட்டு வரேன் பிரஜி…” என்று அவளிடம் கேள்வி கேட்டு, அவனே அவளுக்குப் பதிலாய், பதிலும் சொல்லி கிளம்பி சென்றான்.

 

பின் பன்னீர் சோடா குடிக்கவும், சிறிது வலி குறைந்தது போல் உணர்ந்தாள். மேலும் சஞ்சீவ் வேறு அவளைத் தோளில் சாய்த்துக் கொண்டு, தன் சிறு வயது கதைகளையும், சேட்டைகளையும் சொல்லி, அவளின் சிறு வயது சேட்டைகளையும் கேட்டு அறிந்துக் கொண்டிருந்தான். இப்படியே சிரிக்க சிரிக்க பேசியதில், பிரஜீக்கு வயிற்று வலி எல்லாம் மறந்து போயிற்று. இரவு அவள் சமைத்து வைத்திருந்த, எளிமையான சாப்பாட்டை சஞ்சீவே தட்டில் போட்டு வந்து, அவளுக்கு ஊட்டியும் விட்டான், தானும் உண்டான்.

இரவில் அவள், தான் தரையிலேயே படுத்துக் கொள்கிறேன் என்று சொல்ல, உடனே சஞ்சீவும் “சரி, அப்போ நானும் உன் பக்கத்திலேயே படுத்துக்கிறேன்” என்று சிறுப்பிள்ளை போல் சொல்லி, அவனும் அவளின் அருகே படுத்துக் கொண்டான்.

மேலும், அவளுக்கு இன்று தாயின் நினைவு அதிகரித்து, அவளை வாட்டுவதை உணர்ந்தவன் போல், அவள் தலையை வருடி, தன் நெஞ்சத்தில் சாய்த்து, “எல்லாம் சரியாகிடும் பிரஜி… நீ கவலைப்படாத” என்று ஆறுதலாய் கூறி, அப்படியே அவள் முதுகில் தட்டிக் கொடுத்து, அவளை உறங்க வைத்தான்.

காலையில் எழுந்து சஞ்சீவ், அவளுக்கும் சேர்த்து டீ போட்டு கொடுத்து விட்டு, அவளை உட்காரவைத்து, அவளிடம் கேட்டு, கேட்டு காலை உணவை சமைத்து, இருவரும் உண்டனர்.

பின் மதியமும் “நான் தான் சமைப்பேன்” எனச் சமைக்க வந்தவளிடம் அடம் பிடித்து, அவள் காய்களை மட்டும் நறுக்கி தர, மறுபடியும் அவளிடம் சமையல் குறிப்பு கேட்டு, கேட்டு அவள் மேற்பார்வையில் சமைத்தான்.

உணவின் ருசி முன்னேபின்னே இருந்தாலும், கணவனின் இந்த அன்பில், அந்த ருசிக் கூட தேவாமிர்தமாய் இனித்தது. அதனால் ஒரு பிடி அதிகமாய் உண்டவளைப் பார்த்து, “பார்த்தியா அய்யாவோட சமையல், உன்ன விட ஜெட் வேகத்துல…ஒரே நாளுல கத்துகிட்டேன்” என்று பனியன் அணிந்த கழுத்தில், இல்லாத காலரைத் தூக்கி விட்டான்.

அவளும் “இம்… இம்… ரொம்ப ஸ்மார்ட் தான் நீங்க… ஏன்னா நீங்க என் புருஷனாக்கும்… அதான்” என்று அவனை ஒரே வார்த்தையில் சாய்த்து விட, “அடிப்…பாவி, இப்படி கவுன்ட்டர் கொடுத்திட்டியே” எனச் சொல்லி, இருவரும் சிரித்துக் கொண்டனர்.

பின் மாலையில் சஞ்சீவ் தன் அம்மாவிடம் அலைப்பேசியில் பேச, பிரஜீயும் பேச, இருவரின் சந்தோஷத்தையும் அவர்களது பேச்சில் உணர்ந்து, சரஸ் மகிழ்ந்தார்.

சஞ்சீவோ “அம்மா… உன் மருமக என்ன ரொம்ப கொடும படுத்துறா மா… சண்டேன்னா சமைக்கச் சொல்லுறா, இதுல லீவ் வேற போட்டு சமைக்கச் சொல்லுறா” என புகார் சொல்ல,

சரஸோ “ஆமா… ஞாயிற்றுக்கிழம தான, நீ வெட்டியா தான இருக்க, செய்ய வேண்டியது தான” என்று அவரும் அவனைக் கவிழ்க்க, ஸ்பீக்கர் மோடில் அவரின் பதிலைக் கேட்ட பிரஜீயோ, சிரித்துக் கொண்டே “ஹேய்… அம்மான்னா… அம்மா தான். நல்லா சொல்லுங்கம்மா… ஒழுங்காவே சமைக்க தெரியலமா இவருக்கு… இதுல பெரும வேற, ஒரே நாளுல சமைச்சுட்டேன்” என்று அவன் தோள் மீது சாய்ந்துக் கொண்டே சொன்னாள்.

சரஸோ “அதான… என் மருமக மாதிரி எல்லோரும் ஒரே வாரத்துல, அதுவும் மணமா சமைச்சுடுவாங்களா?” எனச் சொல்ல, சஞ்சீவோ “எம்மா… எம்மா… போதும், உன் மருமகளுக்கு ஐஸ் வச்சது. கவலைப்படாத அவ உனக்கு நாளைக்கு சோறு போடுவா, அதுக்காக இப்படி ஐஸ் வைக்காத மா” என்றான். அப்படியே பிரஜி கையினால் கொட்டும் வாங்கினான்.

சரஸ் “உனக்கேன்டா இவ்ளோ பொறாம எங்க ஒற்றுமையப் பார்த்து “

சஞ்சீவ் “சரி, சரி … நீ நல்லா இருக்கியாமா? நான் முடிஞ்சா அடுத்த வாரம் வரேன் மா” என்று சொல்ல, பிரஜி “அம்மா… மாமா நல்லா இருக்காங்களா? மதன் மாமா நல்லா இருக்காங்களா? நாங்க கேட்டோம்ன்னு சொல்லுங்க மா” என்று கணவன் அவர்கள் மீது கோபம் கொண்டிருந்தாலும், அவன் சார்பாய் அவள் பேசினாள்.

சரஸ் “எல்லோரும் நல்லா இருக்கோம் மா… நீங்க சந்தோஷமா இருக்கீங்கள? எனக்கு அது போதும் மா” என்று அவர் சந்தோசப்பட்டுக் கொண்டே, மேலும் சஞ்சீவின் அண்ணன் மதனுக்கு, அவன் அத்தை பெண்ணைப் பேசி முடித்து உறுதி செய்து விட்டதாகக் கூறினார்.

மேலும் ரங்கன், சரஸ், அடிக்கடி தன் மகன் சஞ்சீவிடம் பேசிக் கொள்வதைக் கண்டும் காணாமல் இருந்தார். ஆயிரம் தான் இருந்தாலும், தாய்க்கு, மகன் பாசம் இல்லாமல் போகுமா? அதனால் போகட்டும் எப்படியோ பேசிக் கொண்டு இருக்கட்டும் என்று விட்டு விட்டார். மேலும் சஞ்சீவ் தாயைப் பார்க்க மாதம் ஒரு முறை வருவதும், வரும் போதெல்லாம் அவருக்கு செலவுக்கு ஐந்தாயிரம், முடிந்தால் அதற்கு மேலும் தந்து விட்டு செல்வான்.

அப்படி வந்தால், ஒரே நாளில் காலை வந்து, மதியம் தாயின் கையால் சாப்பிட்டு விட்டு, தந்தை எதிரே கூட வராமல், உடனே கிளம்பி விடுவான். அதனால் அவனும் குடும்பப் பொறுப்பாய் இருப்பதால், ரங்கனும் இப்போதெல்லாம் அவனை எதுவும் சொல்வதில்லை.

பின் இரண்டு நாட்களும், பிரஜீயை தங்க தட்டில் வைத்து தாங்காத குறையாய், இதே போல் சமைத்துக் கொடுத்துக் கவனித்துக் கொண்டான்.

பிரஜி கூட, “எனக்கு சரியாகிடுச்சுங்க”,

“நீங்க எதுக்கு லீவ்வ வேஸ்ட் பண்றீங்க? ஆபிஸ்க்கு போங்க, நான் சமாளிச்சுக்குவேன்” என்று சொன்னதையோ,

“இப்ப பராவாயில்ல, நானே சமைக்கிறேன்ங்க” என்று சொன்ன எதையும் அவன் காதில் வாங்கவே இல்லை. அவனுக்கு இது ஒரு புது அனுபவமாய் இருந்தது. தன் தாய் தன்னைச் சிறு வயதில் கவனித்துக் கொண்டது போல், பிரஜீயை ஒரு குழந்தை போல, அவன் ஒரு தாயாய் மாறி கவனித்தான்.

அவனுக்கே வியப்பாய் இருந்தது, எதற்கெடுத்தாலும் அவசரமாய் கோபப்படும் நானா? இவ்வளவு பொறுப்பாய், பொறுமையாய் இவளைக் கவனித்துக் கொள்கிறேன். ‘இல்லை இல்லை, பிரஜி உன்னை கவனித்துக் கொண்டதை வைத்து, அவளை நீ கவனிக்கிறாய்’  என்றது அவன் மனது.

அவனும் ‘ஆமாம், ஆமாம், அவள் தான் எனக்கு எல்லாம் கற்றுக் கொடுத்தாள். அவளின் அளவில்லாத காதல் மூலம், அன்பு, அக்கறை, பாசம், பொறுப்பு, பொறுமை, என ஒவ்வொன்றாய் எனக்கு கற்றுக் கொடுத்தாள். சமையலறைப் பக்கமே செல்லாதவள், தனக்காக தன் மீது கொண்ட காதலுக்காக, ஒரே வாரத்தில்… அதுவும் மணக்க மணக்கக் கற்றுத் தேறினாள்.

என் குடும்பத்தை விட, உயர்மட்ட நடுத்தர குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தவள், தனக்காக, தன்னுடன் வந்து வசதி குறைந்த வீட்டில், எவ்வளவு அழகாய் வாழ்கிறாள். தான் அவள் மீது கொண்ட தவறான கருத்தினால் கோபப்பட்டாலும்… அதுக் கூட தெரியாமல்… காரணம் தெரியாத கோபத்தை நான் காட்டினாலும் கூட… அவள் அன்பால், காதலால், என்னையே மாற்றி விட்டாளே!

இவ்வளவு மகத்துவமான அவளின் காதல், அவள் மூலம் என்னுள்ளும் வந்து நிறைந்து விட்டது. அவளின் காதலுக்காக இந்த மூன்று நாட்கள் என்ன? என் உயிர் உள்ளவரை, அவளுக்கு தாயாய், தந்தையாய், தோழனாய், கணவனாய் என எல்லாமுமாக இருந்து பார்த்துக் கொள்வேன்’ என்று உறுதி எடுத்துக் கொண்டான்.

செவ்வாய் அன்று, பிரஜி சிறிது நன்றாக உணர்ந்தாள், மேலும் தன் கணவன் தாயாய் மாறி தன்னைத் தாங்கியதில் தெம்பாகவும் உணர்ந்தாள். தன் கணவன் ஆசையாய் எடுத்த விடுமுறை வீணாய் போயிற்றே என்று மனம் வருந்தி, இன்று தன் உடல்நிலை நன்றாக தான் இருக்கிறதே, எங்கேனும் வெளியே செல்லலாமா என்று கணவனிடம் கேட்டுப் பார்ப்போம் என எண்ணினாள்.

மதியம் உணவிற்கு பின், ஓய்வாய் படுத்திருந்த போது, முழங்கையை ஊன்றி, அவனைப் பார்த்தவாறு படுத்து, “என்னங்க… சாயங்காலம் வேணா … எங்கயாவது வெளிய போயிட்டு வரலாமா?” என்றாள்.

 

சஞ்சீவ் “இன்னிக்கு தான் நீ நல்லா ஆகிருக்க, அதுக்குள்ள வெளிய போகனுமா? ஏன் பிரஜி எனக்காகப் பார்க்கிறியா? லீவ் வேஸ்ட்டா போச்சேன்னு, நான் ஒன்னும் கவலைப்படல, உன் கூட மூணு நாளும் சந்தோஷமா தான் இருந்தேன். டூர் போயிருந்தாக் கூட, இவ்ளோ சந்தோஷமா இருந்திருக்க மாட்டேன் போல” என்று மனமுவந்து கூறினான். மேலும் தனக்காக பார்க்கிறாளே என்று சந்தோஷமாய் உணர்ந்தான்.

பிரஜீயோ அவன் அன்பில் நெகிழ்ந்து, “நீங்க மூணு நாள் என்ன பார்த்துக்கிட்டதுல இல்ல இல்ல என்ன தாங்கனதுல, எனக்கு உடம்பு சரியாகிடுச்சுங்க. நான் நல்லா இருக்கேன், எங்கம்மா கூட, இப்படி கவனிச்சது இல்ல… உண்மையிலேயே நான் ரொம்ப ரொம்ப கொடுத்து வச்சிருக்கேன்ங்க” என அப்படியே, அவன் நெஞ்சத்தின் மீது சாய்ந்து, உணர்ச்சி மிகுதியில் கண்ணீர் விட்டாள்.

“ஸ்…. ஸோ… ஏய் என்ன சின்னப்பிள்ள மாதிரி, அழுதிட்டு இருக்க பிரஜி… இது என் கடமை… இதுக்கு போய் பெரிய வார்த்தை எல்லாம் சொல்லி அழுதிட்டு இருக்க…” என்றான்.

மேலும், அவள் முகத்தை நிமிர்த்தி, கண்ணீரை துடைத்து விட்டு, “இனி எக்காரணம் கொண்டும் நீ அழவே கூடாது பிரஜி… சொல்லிட்டேன்…” என கண்டித்து, பின் புன்னகைத்து “சரி, சரி அழாத … நான் வெளிய கூட்டிட்டு போறேன்… அப்புறம் பாப்பாக்கு பிடிச்ச குச்சி ஐஸ், பலூன், சாக்லேட் எல்லாம் வாங்கி தரேன்… என்ன?” என அவளைக் கிண்டல் செய்ய,

அவளோ நெற்றி சுருக்கி, பின் அவனின் கிண்டலை புரிந்து, உதட்டை மடக்கி, “ம்ஹும்… இம்…இம்… போங்க” எனச் சிணுங்கி, அவனுக்கு முதுகை காட்டி திரும்பி படுத்துக் கொண்டாள்.

அவன் அவள் முதுகில், கைகளால் ஓவியம் வரைந்து, அவளை நெளிய வைத்து, திரும்ப வைத்து, சிரிப்போடு அவளை அணைத்துக் கொண்டான்.

“சீ… நீங்க ரொம்ப மோசம்” என அவன் அணைப்பில் இருந்தவள், செல்லமாகக் கூற, இனி நிஜமாகாவே, அவன் மோசம் என கோபமாக சொல்லப் போகும் நாள் வருமென, தெரியாமலே கூறிக் கொண்டிருந்தாள்.

 

மாயம் தொடரும்……

error: Content is protected !!