இது என்ன மாயம் 26

 

பகுதி 26

முதல் காதல் என் நெஞ்சத்தை இனிக்க செய்ய

முதல் குற்றஉணர்வு நெஞ்சத்தை குறுகுறுக்க செய்ய

முதல் குழந்தை என் நெஞ்சத்தை நிறைக்க செய்ய

முதல் வெறுப்பு நெஞ்சத்தை அரிக்க செய்ய

இத்தனையும் ஒரே சமயத்தில்

என் நெஞ்சத்தை தாக்கினால்

நான் என்ன செய்யட்டும் அன்பே?

வீடு வந்து சேர்ந்த சஞ்சீவ், பொருட்கள் இருந்த பைகளை சுமந்து வந்து வரவேற்பறையில் வைத்து விட்டு, இப்பொழுது சந்தித்த அரவிந்தன், அவனைத் தொடர்ந்து, குமார் என கடந்த கால நினைவுகளில் மூழ்கியவன், அப்படியே பிரஜீயை பார்க்காமல் குளியலறைக்கு சென்றான். நினைவுகள் பின்னோக்கி வலம் சென்றாலும், ஆனால் அவன் அனிச்சை செயலாய், தன் வேலைகளைச் செய்தான். வெளியில் சென்று வந்த பின், உடல் சுத்தத்திற்காக குளித்து முடித்த பின் தான், பிரஜீயைத் தேடினான்.

அவளோ படுக்கையறையில் ஒரு சுவரோரமாய் அமர்ந்து, எதையோ வெறித்துக் கொண்டிருந்தாள். சஞ்சீவ் அவளருகே சென்று “என்ன பிரஜி? டிரஸ் மாற்றலையா?” என்று தான் கேட்டான். அதன் பின் அவள் கண்ணில் இருந்து கடகடவென கண்ணீர் வர, “எனக்கு அம்மா வேணும்” என அழுதாள்.

சஞ்சீவுக்கு ஒன்றும் புரியவில்லை, ‘திடீரென “அம்மா வேண்டும்” என்கிறாள், என்னயாயிற்று இவளுக்கு?’ என எண்ணியவன், அவளருகே முட்டியிட்டு, “பிரஜி…” என தோளைத் தொட, “எனக்கு அம்மா வேணும்….. எனக்கு எங்கம்மா வேணும்…” என அழுதாள்.

மெல்ல, மெல்ல அழுதவள், பெருங்குரலெடுத்து, முகத்தை மூடிக் கொண்டு, தன் அம்மா புலம்பலையும் விடாமல், அழுகையையும் தொடர்ந்தாள். சஞ்சீவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அப்படி அவன் புரியாமல் நின்ற நேரத்தில் ஆபத்பாந்தவளாக சங்கீதா “பிரஜி…” என வரவேற்பறையில் இருந்து குரல் கொடுத்தாள்.

எப்பொழுதும் வெளியே சென்று வீட்டிற்கு வந்தால், பிரஜி தான், வாயில் கதவைப் பூட்டுவாள். ஆனால் இன்று நடந்த நிகழ்ச்சியின் அதிர்ச்சியினால், தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று தெரிந்த அதிர்வில், வீட்டைக் கூட பூட்டாமல், நேரே படுக்கையறைச் சென்று, குத்துகாலிட்டு அமர்ந்துக் கொண்டாள். தன் சிந்தனையில் இருந்த சஞ்சீவும் இதைக் கவனிக்கவில்லை. அதனால் பிரஜீயின் அழுகை குரல், வீட்டை தாண்டி, அண்டை வீடான சங்கீ வீடு வரை கேட்டது.

சங்கீ வீட்டிலும், ஜெய், வீட்டிற்கு வந்து ஸ்ரீராமோடு விளையாடிக் கொண்டு வரவேற்பறையில் அமர்ந்திருக்க, சங்கீயும் அங்கிருந்த டிவியில் ஆழ்ந்திருக்க, பிரஜீயின் அழுகுரலில் இருவரும் கலைந்தனர். ஜெய் ஸ்ரீராமை தூக்கிக் கொண்டு, கேள்வி குறியோடு மனைவியைப் பார்த்தான். அவளும் எழுந்து பிரஜி வீட்டை எட்டிப்பார்க்க, அது திறந்தே இருக்கவும், கணவனையும் அழைத்துக் கொண்டு, பிரஜி வீட்டில் நுழைந்தாள். ஆனால் ஜெய், பிரஜி வீட்டு வாசலிலே, வெளியே பொது வராந்தாவிலே, ஸ்ரீராமோடு நின்று கொண்டான்.

சங்கீயின் குரலில் வெளியே வந்த, சஞ்சீவ் “வா….வாங்க… சிஸ்டர்” என்று தடுமாறினான். ஆனால், சங்கீயோ “பிரஜி” எனக் கேள்வியாய் நோக்கவும், “உள்ள தா இருக்கா… வாங்க” என அழைத்து சென்றான்.

சங்கீ திரும்பி கணவனிடம் ஒரு பார்வை செலுத்த, ஜெய்யோ “போ” என்பது போல் தலையாட்டவும், அவர்களின் படுக்கையறைக்குள் சென்றாள். ஆனால் சஞ்சீவ் இருந்த மனநிலையில், இதையெல்லாம் கவனிக்கவில்லை.

சங்கீதா உள்ளே சென்று, அழுதுக் கொண்டிருந்த பிரஜி அருகே சென்று, முட்டியிட்டு அமர்ந்து, அவள் தோள் தொட்டு “பிரஜி இங்க பாரு, என்ன ஆச்சு” என்று வினவ, ஆனால் அவளோ காது கேளாதவள் போல், தன் சிந்தனையிலேயே கண்ணை மூடி, முட்டியில் இருந்த சேலையை கையால் கசக்கி, தன் புலம்பலையும், அழுகையும் தொடர்ந்தாள். சங்கீயும் பல கேள்வி கேட்க, அவளோ எல்லாவற்றுக்கும் “எனக்கு அம்மா வேண்டும்” என்று ஒரே பதிலை சொன்னாள்.

சங்கீக்கு அவர்கள் கடைக்கு சென்ற விஷயம், காலையில் பேச்சு வாக்கில், பிரஜி சொல்லி தெரியும் என்பதால், சஞ்சீவிடம் “கடைல… சொந்தக்காரவங்க யாரையாவது பார்த்தாளா என்ன?” எனக் கேட்டாள்.

அவனோ “இல்லையே…” என அவளுக்கு தலையாட்டி விட்டு, இவன் யோசிக்க, மேலும் சங்கீ, “அண்ணா…” என அவனைக் கலைக்க, அவன் “என்ன சிஸ்டர்?” எனக் கேட்டான்.

சங்கீயோ “சாரி… ண்ணா” எனச் சொல்லி விட்டு, அவன் “எதற்கு?” என கேட்பதற்குள், பக்கத்தில் சிறு குழந்தையாய், விடாமல் புலம்பிக் கொண்டு, “நை நை” என அழுதுக் கொண்டிருந்தவளுக்கு, ஒரு அறை விட்டாள்.

இந்த அதிர்ச்சி வைத்தியத்தில், பிரஜி அடி வாங்கிய தன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அமைதியானாலும், “ம்ம்ஹூம்… ஹா… ம்ம்….” என தேம்பலை நிறுத்தவில்லை. ஆனால் சஞ்சீவோ “சிஸ்டர்…” எனக் கத்தியே விட்டான், அந்தச் சத்தத்தில் ஜெய்யும் உள்ளே நுழைந்து விட்டான்.

பின்னர் சஞ்சீவிடம் திரும்பி, சங்கீதா “ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் வெளியே இருங்களேன்” எனச் சொல்ல, சஞ்சீவும் ஜெய்யும் வெளியே சென்றனர்.

பின் சங்கீதா, தேம்பிக் கொண்டிருந்த பிரஜீயிடம் திரும்பி, அவளை தன் நெஞ்சத்தில் சாய்த்து, அவள் தலையை வருடி விட்டாள். மேலும் ஒரு பத்து நிமிடம் அப்படியே செல்ல, தன் தேம்பலையும் நிறுத்தி, தன் தலை கோதிய சங்கீயின் கைகளைப் பற்றிக் கொண்டே, அவள் மடியில் தலை வைத்து சுருண்டு படுத்துக் கொண்டாள் பிரஜி.

சங்கீக்கு அவளைப் பார்க்கவே பாவமாய் இருந்தது. தாய் தந்தையை விட்டு விட்டு, கணவனை நம்பி வந்த பெண். வரும் போது சிறிது சோகமாய் இருந்தாலும், இப்போது மலர்ந்த முகமாகவே தானே இருக்கிறாள்.

அதுவும் தன் அண்ணன் அண்ணிகள் வந்து சென்ற பின், சந்தோஷமாய் தானே இருந்தாள்… பின் ஏன் இன்று திடீரென்று தன் அன்னையை தேடுகிறாள்? ஒரு வேளை அன்னையின் ஞாபகம் ஏதேனும் வந்து விட்டதோ? அதற்காக இப்படியா?… என யோசித்தவள், ஒரு வேளை… என சந்தோஷத்தோடு தன் எண்ணத்தை நிறுத்தினாள்.

‘தான் ஸ்ரீராமை வயிற்றில் சுமந்த சமயம், என்ன தான் ஜெய் கவனித்துக் கொண்டாலும், இப்படி தான் நாமும் நம் அன்னையை நினைத்து சோகமாய் இருந்தோமே’ எனச் சங்கீதாவின் மூளையில் உதிக்க, உடனே ஆர்வமாய் “பிரஜி… ஏய்…” என சந்தோஷத்தில் வார்த்தை வராமல் திக்கி, தன் மடியில் இருந்தவளை அணைத்து, தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள்.

ஆனால் பாவம் பிரஜி, அழுது அழுது களைத்து, உண்மை தெரிந்ததில் அதிர்ந்து, தன் அன்னையின் நினைவில் சோர்ந்து, சங்கீயின் மடியில் அடைக்கலமானவள், அப்படியே உறங்கியும் விட்டாள்.

“சரி, இதை அவளே, அவள் கணவனிடம் சொல்லட்டும்” என நினைத்து விட்டு சங்கீ, சோர்வில் உறங்கியவளைத் தொந்தரவு செய்யாமல், அப்படியே தன் மடியில் தலை வைத்திருந்தவளைத் தரையில் கிடத்தி விட்டு, கட்டிலில் இருந்த தலையணை ஒன்றை எடுத்து வந்து, பிரஜீயின் தலைக்கு வைத்து விட்டு, அறையை விட்டு வெளியே சென்றாள்.

பின் சஞ்சீவிடம், “அண்ணா… பிரஜி தூங்கிட்டா, பயப்படாதீங்கண்ணா ஏதோ சோர்வு போல, நீங்க எதுக்கொன்னும், உங்கம்மாவ வர சொல்லுங்க, வந்து ஒரு வாரம் இருக்க சொல்லுங்க அண்ணா. பிரஜீக்கு ஒரு மாற்றமா இருக்கும்” என்று பெரிய மனுசியாய், ஒரு தீர்வைச் சொல்லிவிட்டு சென்றாள்.

சங்கீ சொன்னவுடன், தன் அன்னைக்கு அழைக்க, அவன் அலைப்பேசியை தேட, சங்கீயும், ஜெய்யும் அவனிடம் விடைப்பெற்று தங்கள் வீட்டிற்கு சென்றனர். பின் அலைப்பேசியில் தன் அன்னையிடம், எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம், நாளை நேரமாய் கிளம்பி வரச் சொன்னான். அவன் அன்னை காரணம் கேட்டதற்கு, பிரஜீக்கு உடம்பு முடியவில்லை, என மொட்டையாய் தான் முடிக்க முடிந்தது. ஏனென்றால் அவனுக்கே என்னவென்று தெரியாதே!

பின் தங்கள் அறைக்கு சென்று, தரையில் படுத்திருந்த பிரஜீயை தூக்கி, கட்டிலில் படுக்க வைத்து விட்டு, அவள் இரவு உணவு உண்ணாமலே உறங்கி விட்டதை எண்ணி, சரி பாலையாவது சுட வைத்து தருவோம் என நினைத்து சமையலறைக்குச் சென்றான்.

பாலைச் சூடுப் படுத்தி எடுத்துக் கொண்டு வந்தவன், அவளை எழுப்பி “பிரஜி… பிரஜி… இந்தா இத குடிச்சிட்டு தூங்கு பிரஜி” எனக் கூறி, தன் மீது சாய்த்து டம்ளரை அவள் வாயில் வைக்க, அசதியில் கண்ணைத் திறவாமலே குடித்து முடித்து உறங்கி விட்டாள்.

ஆனால் அவளருகே படுத்த சஞ்சீவுக்கு தான் உறக்கம் வரவில்லை. ஏனெனில் அரவிந்தனைப் பார்த்ததும் பழைய நினைவுகளில் இருந்தவன், தற்சமயம் பிரஜீயின் இந்த ஆர்ப்பாட்டத்தினால், அதெல்லாம் பின்னுக்கு செல்ல, பிரஜீக்கு என்னாயிற்றோ என்ற கவலையே முன்னே இருந்து அவன் மனதை கலக்கம் அடைய செய்தது.

அவள் பக்கம் திரும்பி, உறங்கியிருந்தவளைப் பார்க்கவும், தவறான கணிப்பில் அவளை வருத்தியது, இன்று அதிகமாய் நினைவு வர, அன்பாய் அவள் தலைக் கோதி விட்டான். அவளுக்கு ஒன்றும் ஆகியிருக்கக் கூடாது என்று மனம் புலம்ப, கை அவள் தலைக் கோத, அப்படியே உறக்கமும் அவனைத் தழுவியது.

காலையில், சூரிய வெளிச்சம் கண்ணில் பட, பிரஜி கண்களைக் கசக்கி கொண்டு எழுந்தாள். எழுந்தவுடனே தலைச் சுற்ற, அப்படியே மீண்டும் படுக்கையில் படுத்து, நேற்று நிகழ்ந்தவற்றை எல்லாம் அசைப்போட்டுக் கொண்டே சுருண்டுக் கொண்டாள்.

காலையில் அவளுக்கு முன் எழுந்த சஞ்சீவ், டீ போட்டுக் கொண்டு வந்து, பிரஜீதாவிடம் வந்தவன், “பிரஜி… பிரஜி… எந்திரி மா… என்ன ஆச்சு? உடம்பு முடியலையா?” எனக் கேட்டுக் கொண்டே அவளை எழுப்பி, அவள் எழுந்துக் கொள்ள, அவள் கை பிடித்து உதவியும் செய்தான். பிரஜீயும் எழுந்து சாய்வாய், கட்டிலில் சாய்ந்து, மௌனமாய் அமர்ந்துக் கொண்டாள்.

அவள் பதிலளிக்க வில்லை என்பதை தெரிந்தும், ‘சோர்வில் அப்படி இருக்கிறாள் போல’ எனத் தனக்கு தானே சமாதானம் செய்துக் கொண்டு, “இந்தா பிரஜி… டீ குடி… கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணுவ” என்று டம்ளரை அவள் முகத்திற்கு நேரே நீட்டி, அவள் அமைதியாய் இருக்கவும், அவள் வாய் அருகே கொண்டு சென்றான்.

ஆனால் பிரஜீயின் உடல் நிலையால், அந்த டீயை குடிக்காமலே, அதன் நறுமணத்திலேயே அடி வயிற்றில் இருந்து பிரட்டிக் கொண்டு வர, அவனை விலக்கி தள்ளி, குளியலறைக்கு வேகமாய் சென்றாள்.

தன்னை தள்ளி, டீ சிந்தியதுமே, சஞ்சீவுக்கு சிறிது கோபம் எட்டிப் பார்த்தது. ஆனால் அவள் குளியலறையில் எடுத்த வாந்தியின் சத்தத்தைக் கேட்டதும் மறைந்து போய்விட, “பிரஜி…” என அழைத்துக் கொண்டு அவளிடம் ஓடி சென்றான். ஆனால் அதற்குள் தன்னைச் சுத்தம் செய்து, வெளியே வந்தவள், நிற்க கூட தெம்பில்லாதவள் போல், சுற்றும் தன் தலையை ஒரு கையால் பற்றிக் கொண்டு, வெளிப்புற குளியலறை சுவற்றில் சாய்ந்து, அப்படியே மடங்கி அமர்ந்து விட்டாள்.

“ஹே… பிரஜி… இந்தா… முத இந்த தண்ணிய குடி” என்று குடி நீரை கொண்டு வந்து தந்தான். அதை முழுவதுமாகக் குடித்தவள், சற்று தெம்பாக உணர்ந்தாள்.

ஆனால் அதற்குள் பொறுமையற்று, அவள் நீரைக் குடிக்கும் போதே, “பிரஜி… என்னாச்சு? உடம்புக்கு என்ன பண்ணுது? வா… டாக்டர்கிட்ட போலாம்” எனத் தொடர்ந்து அக்கறையாய் பேசியவனை, தண்ணீர் குடித்து முடித்த கையோடு, தன் வலக்கையை உயர்த்தி நிறுத்துமாறு செய்கை செய்து, பெருமூச்சு விட்டாள்.

பின் நிதானமாய் அவனைப் பார்த்து, “என் தகுதியை… நான் நிரூபித்து விட்டேன்” எனச் சொல்ல, அதைக் கேட்ட சஞ்சீவுக்கோ ஒன்றும் புரியில்லை. அதனால் நெற்றி சுருக்கி, “என்ன பிரஜி… என்ன சொல்லுற? ஒன்னும் புரியல” எனப் புரியாமல் அவன் கேட்க,

நேற்று இரவு சாப்பிடாமல், உடல் சோர்ந்து, நேற்றைய நிகழ்வில் அதிர்ந்து, மனமும் சோர்ந்தவள், மேலே பேசமுடியாமல், இடக்கையால் தன் தலையை பிடித்துக் கொண்டு, தன் வலக்கை ஆள் காட்டி விரலால், அவனை சுட்டிக் காட்டி, பின் தன் வயிற்றில் கை வைத்துக் கொண்டவள், தன் தலையை சுவற்றில் சாய்த்து கண்களை மூடிக் கொண்டாள்.

ஆனால் அவள் வயிற்றில் கை வைக்கவுமே… நிமிடத்தில் புரிந்துக் கொண்டவன், சந்தோஷத்தில், அதற்கு முன் அவள் சொன்ன பதிலை ஆராயாமல், அதைப் பின்னுக்கு தள்ளி விட்டு, அவளை அப்படியே இரு கைகளிலும் அள்ளிக் கொண்டு, அப்படியே இறுக அணைத்துக் கொண்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டு, படுக்கையில் சாய்வாய் படுக்க வைத்து, தானும் அவள் அருகில் அமர்ந்துக் கொண்டு, அவளை தன் நெஞ்சத்தின் மீது சாய்த்து அவள் தலையை வருடினான்.

நொடியில் அவன் எல்லாவற்றையும் செய்யவும், அவளால் அவனை தடுக்கவும் முடியவில்லை, அவனை எதிர்க்க உடலும் ஒத்துழைக்கவில்லை. அவனை எதிர்க்க தற்போதைய அவள் ஆயுதம் அவள் வாய் தான் என்பதை உணர்ந்து, அப்போதே அவனை வருத்த ஆயத்தமானாள்.

அவன் நெஞ்சத்தில் தலைச் சாய்த்திருந்தவள், “எனக்கு, அம்மா வேணும்” என்று கேட்க, எங்கே பழையபடி ஆரம்பிக்கப் போகிறாளோ என நினைத்து “இம்ம்… நேற்றே வர சொல்லிட்டேன் பிரஜி, இன்னிக்கு மத்தியத்துக்குள்ள, வந்திருவாங்க மா” என பதில் சொல்ல,

அவளோ “நான்… எங்கம்மாவ சொன்னேன்” என வித்தியாசமாய் சொல்ல, அவனோ குழம்பினாலும், ‘சரி இந்த மாதிரி சமயத்தில், பெண்கள் தங்கள் அன்னையை தேடுவார்கள் போல’ என நினைத்து, “சரி பிரஜி… நான் அத்த, மாமாட்ட பேசி பார்க்கிறேன், அதுக்கு முன்ன, டாக்டர போய் பார்ப்போம். அப்படி அவங்க வரலேன்னா, நான் உன்னக் கூட்டிட்டுப் போறேன். இம்ம்…” என அவளுக்கு ஆறுதலாய் சொன்னான்.

ஆனால் அவளோ “நான் மட்டும், எங்க வீட்டுக்கு போறேன், அதுக்கு முன்னாடி, நீங்க சொன்ன மாதிரி ஹாஸ்பிட்டல் போகணும், ஏன்னா தேவையில்லாத சுமைகளச் சுமந்துட்டு, எங்க வீட்டுக்குப் போக, நான் விரும்பல” என முகத்தில் அடித்தார் போல, அவன் குழந்தையை “தேவையில்லாத சுமை” எனக் குறிப்பிட்டு, அமைதியாய் சொன்னாலும், அவளின் வார்த்தைகள் தெளிவாய், நிதானமாய் இருந்தன.

அம்மா வீட்டிற்கு எப்படிப் போவது? என்று அவள் அதைப் பற்றி கவலைப்படவில்லை, ஆனால் அவனைத் துன்புறுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக எதையும் யோசியாமல் சொன்னாள்.

அவளின் இந்த வார்த்தைகளைக் கேட்டவன், அதிர்ந்து, அம்பிலிருந்து விடுப்பட்ட நாண் போல, அவளை விடுத்து, விறைப்பாய் நிமிர்ந்து அமர்ந்தான். மேலும் “பிரஜி…” எனக் கர்ஜித்து, தன் அதிர்வை காட்டினான்.

ஆனால் எதற்கும் அசராதவள் போல், அவள் அப்படியே அமர்ந்து இருந்தாள். தன் வாழ்க்கையே… இல்லை இல்லை தன் உயிராய் நினைத்த காதலே பொய்த்து போய் விட்டது. இனி வாழ்க்கை இருந்தால் என்ன? போனால் என்ன? இனி யாரும் கத்தினால் என்ன? பாசம் காட்டினால் என்ன? அதனால் தனக்கு ஒரு பாதிப்பும் இல்லை என்பது போல் உணர்ச்சி துடைக்கப்பட்ட முகத்தோடு அமர்ந்திருந்தாள்.

எதற்கும் அசையாமல் பொம்மைப் போல் அமர்ந்திருந்தவளை பார்த்தவன், ‘என்ன பேசுகிறாள்? ஒரு வேளை… இவளுக்கு… உண்மை தெரிந்து விட்டதோ? நான் இவளைக் காதலித்த நோக்கம் பற்றி தெரிந்து விட்டதோ? நேற்று நான் அரவிந்தனோடு பேசியதை கேட்டிருப்பாளோ’ என தனக்குள் குழம்பியவாறே, அவள் முன்னே சென்று, அவள் முகத்தைப் பார்த்து “நேற்று நான் அரவிந்தனோட பேசுனத கேட்டியா?” எனக் கேட்டான்.

அவள் அதற்கும் அசையவில்லை, மேலும் “ஓ… அப்போ உனக்கு உண்மை தெரிஞ்சிருச்சு. ஆமா பிரஜி, உன்ன துடிக்க வைக்கணும்ன்னு தான் காதலிச்சேன், அதையும் மீறி நீ என்ன கல்யாணம் பண்ணவும், நீ நிம்மதியா இருக்கக் கூடாதுன்னு தான், நான் முடிவு பண்ணேன். ஆனா…” என மேலும் அவன் தன்னிலை விளக்கம் அளிப்பதற்குள், தன் கையால் அவனை நிறுத்துமாறு சொன்னவள்,

“இதுக்கு மேல எதுவும் சொல்லாதீங்க, ப்ளீஸ்…..” என தன் காதுகளை, இரு கையால் பொத்திக் கொண்டு கண்ணீர் விட்டாள்.

 

மாயம் தொடரும்……..