இது என்ன மாயம் 27

இது என்ன மாயம் 27

 

 

பகுதி 27

என் மீதான உன் காதலை

உன் ஆழ்ந்த அன்பின் மூலம்

உன் ஆத்ம கவனிப்பின் மூலம்

நான் அறிந்து மகிழ்ந்து உணர்ந்து

உன்னை ஆராதிக்கும் வேளையில்

என்னை தூரத்தே நிறுத்தி விட்டாயே… என் கண்மணியே…

தாய் தந்தையைப் பிரிந்து, அவர்களை வருத்தி காதல் மனம் புரிந்தவர்கள், ஏதேனும் ஒரு கட்டத்தில் அவர்களை எண்ணி வருந்துவார்கள் போல. அது பெற்றவர்களின் வருத்தத்தை, அவர்களுக்கும் உணர்த்த வேண்டும் என்று இறைவன் நடத்தும் நாடகமா? அல்லது நியூட்டனின் விதிப் படி, எல்லா வினைகளுக்கும், அதற்கு சமமாய் எதிர் வினையும்  அமையும் என்பது போல, பிள்ளையை நினைத்து அழும், பெற்றோர்களின் பிள்ளைகளும், அவர்களை (பெற்றோரை) நினைத்து வருந்துவார்கள் போலும்.

இதே மனநிலையில் தான் பிரஜீயும் இருந்தாள். அதாவது, தான் தன் பெற்றோரை தவிக்க விட்டு, அவர்களை வருத்தம் கொள்ள செய்து விட்டு, எந்தக் காதலைப் பெரிதென நம்பி, தன்னை காதலித்த… இல்லை இல்லை காதலிப்பதாய் நடித்தவனோடு வாழ வந்தாளோ, அந்தக் காதலே தன்னை பதம் பார்க்கும் என்று அவள் எண்ண வில்லை.

இதற்கெல்லாம் காரணம், தான், தன் தாய் தந்தையை துன்புறுத்தியதனால் தான் போல, என தன் தாயை நினைத்து பார்த்தவள், அப்படியே தன் தாய், தந்தையோடு வாழ்ந்த உலகத்திற்கு சென்று விட்டாள்.

அதனின் வெளிப்பாடு தான், தன் தாயைப் பார்க்க வேண்டும் என்று வாய் விட்டு, அழுது தீர்த்தாள். மேலும் தாய்மைக் கோலம் கொண்ட பெண்ணாகவும் இருந்ததனால், நிரம்பவும் அவள் மனம், அவள் தாயை தேடியது.

மேலும் காலையில், தன் காதலைப் பயன்படுத்திக் கொண்டு, தன்னை பழி வாங்க எண்ணியவன் என்று தன் கணவனின் மீது கோபம் திரும்பியது. தன் துயரத்தையும், வருத்தத்தையும் மறைத்து, தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய அவனைச் சும்மா விடுவதா என்ற முன் கோபத்தில், அது அவன் குழந்தை மட்டுமல்ல தன் குழந்தையும் தான் என்பதை எண்ணி பாராமல், அவனை வருத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு சொல்லி விட்டாள்.

அதன் பின்னும், சஞ்சீவ் தன்னிலை விளக்கம் அளிக்க முற்படும் போது, “உன்னைத் துடிக்க வைக்க வேண்டும், நீ நிம்மதியாய் இருக்கக் கூடாது” என்ற அவனின் இந்த வாக்கியங்களைக் கேட்டதுமே, பிரஜீயின் காதல் மனம் சில்லு சில்லாய் உடைந்து விட்டது.

அவள், அவன் மீது காதல் வயப்படுவதற்கு முன் தொடங்கி, அவனை அனுஅனுவாய் ரசித்து, காதலித்து, அவனோடுச் சந்தோஷமாய் வாழப்போகும் நாட்களை எண்ணி எண்ணி உருவாக்கிய காதல் மலை, இன்று சல்லி சல்லியாய் சிதறிப் போவதை தாங்க முடியாமல், காதுகளைப் பொத்திக் கொண்டு அழுதவள், திடீரென நெஞ்சத்தில் சுருக்கென வழி தைக்க, நெஞ்சத்தைப் பிடித்துக் கொண்டு, அப்படியே அமர்ந்திருந்த கட்டிலில், கண்கள் இருட்ட மயங்கி சரிந்தாள்.

அவள் காதுகளை பொத்திக் கொண்டு அழுகவுமே, அவளை நெருங்கவும் முடியாமல், அவள் கண்ணீரை பார்த்து பொறுக்கவும் முடியாமல், நெஞ்சில் வலியோடு, கண்கள் நிரம்ப செய்வதறியாது நின்றான்.

மேலும், அவள் நெஞ்சத்தை பிடித்து சரியவும், “பிரஜி…” என பதறி, அவளின் அருகே சென்று, அவளை தன் மடியில் தாங்கிக் கொண்டான். “பிரஜி… என்ன ஆச்சு? பிரஜி…” என அவள் கன்னத்தைத் தட்டினான். அவள் கண் திறவாமல் இருக்க, தண்ணீரை எடுத்து வந்து, அவளைத் தன் மடி மீது படுக்க வைத்து, துண்டின் ஒரு நுனியை தண்ணீரில் முக்கி, அவள் கண்களில் மெதுவாய் ஒற்றி, நனைத்து பார்த்தான்.

கண் மூடிய நிலையிலேயே, அவளின் கண் மணிகள் அசையவும், சஞ்சீவ் “பிரஜி… கண்ண திறந்து பாரு டி…” எனக் கண்ணீர் சிந்தக் கதறினான்.

பிரஜீயும் நெற்றி சுளித்து கண் திறந்தாள். அதற்காகவே காத்திருந்தவன் போல, தன் மடியில் படுத்திருந்தவளை, தன் இடது கையால் அவளைத் தோளோடு தன் நெஞ்சத்தில் புதையுமாறு அணைத்துக் கொண்டான்.

“பிரஜி… அது அப்போ, ஆனா… இப்போ நீ தான் என் உயிரோடு, உணர்வோடு ஒன்றி விட்டாய் பிரஜி… ஒன்றி விட்டாய்” என மேலும் இறுக அணைத்து, அவள் நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்தான்.

பின் தன் இறுக்கத்தை தளர்த்தினாலும், அவளை நெஞ்சத்திலேயே சாய்த்து, வலது கரத்தால், அவள் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு, “சாரி பிரஜி… ப்ளீஸ்… என்ன மன்னிச்சிடு பிரஜி… ப்ளீஸ்…” என அவள் தலையில், தன் கன்னம் சாய்த்து கண்ணீரைப் பெருக்கினான்.

அவளும் தன் கன்னத்தை பற்றிய அவன் கரத்தை, தன் இருக் கரங்களால் பற்றிக் கொண்டு, அவளும் கண்ணீர் விட, அங்கே இரு ஜீவன்களும் தங்கள் உயிர் கரைய, மற்றவரின் காதலை உணர்ந்து, ஊனுருகி, உயிர் கசிந்தனர்.

சிறிது நேரம் சென்ற பின், தெளிந்த சஞ்சீவ், “பிரஜி… போதும்… ப்ளீஸ்… அழாத டா” எனக் கெஞ்ச, ஆனால் அவளோ “நமக்கு… குழந்த… பிறக்க… போறத கூட, என்ன… சந்தோஷமா… அனுபவிக்க விடாம, இப்படி அழ… வச்சுட்டீங்கள” என மீண்டும் அழுதாள்.

அப்பொழுது தான் சஞ்சீவ் ‘ஐயோ நேற்று ஏன் தான் அந்த அரவிந்தனை பார்த்தேனோ’ என்று நொந்தவன், அவளின் கன்னத்தில் வைத்திருந்த கையை அழுத்தி, மேலும் தன் நெஞ்சத்தோடு சாய்த்து, அவளின் வலியை தன் நெஞ்சத்தினுள் புகுத்தி விடுபவன் போல, “பிரஜி… அதெல்லாம் அப்போ பிரஜி… இப்ப நான் அப்படி இல்ல பிரஜி… ப்ளீஸ்… டா… அழாத டா… மா…” எனக் கெஞ்சி, அவள் தலையை வருடி தன் அன்பை வெளிப்படுத்தினான்.

ஆனாலும் “ம்ம்ஹீம்… அது… அப்போ… ன்னாலும்… ஹீம்… அது… உண்மை… தான… ம்ஹீம்… நீங்க… என் காதல… பணயமா வச்சு… தான… ம்ஹீம்… என்ன… பழி வாங்க… ம்ஹீம்… நினச்சீங்க…” என்று அழுதுக் கொண்டே கேட்க, சஞ்சீவால் பதில் சொல்ல முடியவில்லை.

அவள் சொல்வது உண்மை தானே. அவள் காதலைப் பணயமாய் வைத்து, அவளைத் துடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்து, திட்டமிட்டு செயல்படுத்தியது உண்மை தானே. இப்பொழுது அன்பை காட்டிவிட்டால், அது இல்லை என்றாகிவிடுமா? அல்லது பொய்யாகி விடுமா? அவள் கேட்பது நியாயம் தானே என்று மௌனமாய் இருந்தான்.

பின் மெல்ல, மெல்ல அவள் தேம்பல் தேயவும், அவளைப் பிரித்து “பிரஜி… படுத்திருக்கியா? நான் போய் டிபன் வாங்கிட்டு வரேன்” என்று இனி டிபன் செய்து சாப்பிட நேரமாகி விடும், நேற்றும் இவள் சாப்பிடவில்லை என எண்ணி கேட்டான்.

ஆனாலும் அவள் பதில் சொல்ல வில்லை, ஏன் சரியென தலையைக் கூட ஆட்டவில்லை. அதனால் மேலும், அவன் “பிரஜி… நம்ம குழந்தைக்காகவது, நீ சாப்பிடனும் பிரஜி… ப்ளீஸ்” எனச் சொல்லி விட்டு, மனமே இல்லாமல், இட்லி வாங்க, முகத்தை கழுவி விட்டு, சட்டை அணிந்துக் கொண்டு செல்லும் போதே…

இந்த நிலையில் அவளைத் தனியே விட்டு செல்லலாமா? அவளாக ஏதேனும் நினைத்து, ஏதாவது செய்து கொண்டாள்? ஏனெனில் இவனுக்காக திடீரென கையை அறுத்துக் கொண்டவள் ஆயிற்றே. மேலும், தன் மீது உள்ள கோபத்தில், வீட்டை விட்டு சென்று விடுவாளோ? என்று எண்ணி குழம்பினான்.

ஆனாலும் இப்பொழுது சாப்பாடு வாங்க வேண்டுமே என்ன செய்ய? என எண்ணி தவித்துக் கொண்டிருந்த வேளையில், ஸ்ரீராமின் அழுகுரல் கேட்டது. உடனே அவனுக்கு சங்கீதாவிடம் உதவி கேட்கலாம் என எண்ணம் ஏற்பட, திறந்திருந்த அவள் வீட்டு வாசலில் நின்று, அழைப்பு மணியை அழுத்தினான். அப்பொழுது தான் ஜெய் வேலைக்கு சென்றிருக்க, ஸ்ரீராமை சமாதானம் செய்தப் படி திரும்பியவள், சஞ்சீவைக் கண்டதும் எழுந்து வந்தாள்.

“என்ன அண்ணா? இப்ப பிரஜீக்கு பரவாயில்லையா?” எனக் கேட்டுக் கொண்டே வந்தாள்.

“இம்… இப்ப பரவாயில்ல சிஸ்டர். நான்… நான் டிபன் வாங்க வெளியே போறேன், கொஞ்சம்… பிரஜீய பார்த்துக்குறீங்களா?” எனக் கேட்டான்.

அவளோ “ஏன் அண்ணா? பிரஜீக்கு இன்னும் சரியாகலையா?” எனக் கேட்க, அவனோ ஆம் என்பது போல தலையாட்ட, “என்ன டிபன் அண்ணா வாங்க போறீங்க? நான் வேணும்னா இட்லி சுட்டிருக்கேன் தரவா?” என அடுக்கடுக்காய் கேள்வி கேட்டாள்.

அவனோ “ஐயோ உங்களுக்கேன் சிரமம் சிஸ்டர்” என மறுக்க, “அதெல்லாம் ஒன்னும் இல்ல, உடம்பு முடியாதவங்களுக்கு ஹோட்டல் சாப்பாடு சேராது, இருங்க ண்ணா…” என்று அவன் ஒப்புதலை கூட கேட்காமல், உள்ளே சென்றே விட்டாள்.

பின் இரண்டு நிமிடம் கழித்து, இடுப்பில் ஸ்ரீராமோடு, ஒரு மூடிய பாத்திரத்தை எடுத்து வந்தவள், “முத இத பிரஜீக்கு கொடுங்க அண்ணா, இன்னும் கொஞ்சம் இட்லி ஊத்தியிருக்கேன், அத எடுத்து கொண்டு வரேன்” என்று கொடுத்து விட்டாள்.

சங்கீ கொடுத்து விட்ட இட்லியை, பிரஜீக்கு கொடுக்க, அவளோ “வேண்டாம்” என மறுத்து படுத்தே இருந்தாள். சஞ்சீவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

முன் போல தூக்கி பிடித்து வலுக்கட்டாயமாய் உணவு கொடுக்கவும், சஞ்சீவுக்கு பயமாய் இருந்தது. ஏனெனில் அவளுக்கு எதுவும் ஆகி விடுமோ? வயிற்றில் பிள்ளை வேறு இருக்கிறதே! என எண்ணி தயங்கினான். இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறாளே, இவளை என்ன செய்ய?

“பிரஜி… சாப்பிடு பிரஜி, உனக்காக சங்கீதா தந்திருக்காங்க, சாப்பிடு… ப்ளீஸ்…”

“பிரஜி… உனக்கு பசிக்கலேன்னாலும்… குழந்தைக்கு பசிக்கும் பிரஜி… ப்ளீஸ்… சாப்பிடு”

“வேணும்ன்னா என்ன பழி வாங்கிக்கோ, அதுக்காக ப்ளீஸ்… நம்ம குழந்தைய பழி வாங்காத”

“உனக்கு ஆசையில்லையா? உன் குழந்தை மேல அன்பில்லையா?” என விதவிதமாய் கேட்டு, அவளைச் சாப்பிட வைக்க முயன்று பார்த்தான். இம்ஹும்… அவள் அசைவேனா என்றிருந்தாள்.

மேலும் “பிரஜி…” எனச் சங்கீதா அவர்கள் வீட்டு வாயிலில் நின்று குரல் கொடுத்தாள்.

அதைக் கேட்டவன், “இப்படி சாப்பிடாம பிடிவாதம் பண்ணி, எல்லார் முன்னாடியும் என்ன அசிங்கப்படுத்தணும்ன்னு நினச்சிருக்கேல, சரி… உன் இஷ்டப்படியே செஞ்சுக்கோ” என வெளியேறினான்.

வெளியே இடுப்பில் ஸ்ரீராமோடு நின்றிருந்த சங்கீயை, “வாங்க சிஸ்டர்” என வரவேற்று அவள் தந்த பாத்திரத்தை வாங்கிக் கொண்டு “உங்களுக்கு சிரமம் தந்துட்டேன்” எனச் சங்கடப்பட்டான்.

பின் அவள் பிரஜீயைக் கேட்க, “அவ படுத்திட்டு இருக்கா சிஸ்டர்… உள்ள வாங்க” என அழைத்தான். சங்கீ மூலமாவது பிரஜி சாப்பிடுவாளோ? என்று ஒரு நப்பாசை தோன்றியது. அதனால் உள்ளே அழைத்தான். அவளோ ஸ்ரீயை இறக்கி விட்டுவிட்டு, “இவனப் பார்த்துக்கோங்கண்ணா, வீட்ட பூட்டிட்டு வரேன் அண்ணா” எனச் சென்ற அரை நிமிடத்தில் வந்தாள்.

ஸ்ரீராமோடு சஞ்சீவ் வெளியே வரவேற்ப்பறையில் விளையாட்டு காண்பிக்க, சங்கீ உள்ளே சென்றாள். அங்கே தன் கணவனை மற்றவர் முன்னிலையில் அசிங்கப்படுத்த விரும்பாத பிரஜி, சங்கீ கொடுத்து விட்ட இட்லியை, சட்னியோடு தொட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

சங்கீ “என்ன பிரஜி? இப்போ எப்படி இருக்க? நல்லா இருக்கியா?” என அவளைப் பார்த்து கேட்டாள்.

அவளோ “வாங்க சங்கீதா” என எழ முயல, “ஹே… உட்காரு, சாப்பிடு” என அவளை அமர்த்தினாள். பின் இரண்டு இட்லியோடு எழுந்தவளை, “என்ன இரண்டு தான் சாப்பிடுற? இன்னும் இரண்டு சாப்பிடு” என அதட்ட, அவளோ “இல்ல சங்கீ… ஓமட்டுடு…” எனச் சொல்லிவிட்டு, தன்னை யோசனையாய் பார்த்தவளிடம் பதறி “அய்யோ… நான் இட்லிய சொல்ல வரல” என எங்கே தன்னை தவறாக எண்ணி விடுவாளோ எனப் பதறினாள். ஆனாலும் தன் நிலையை எப்படிச் சொல்வது எனத் தயங்கினாள்.

ஆனால் சங்கீயோ அதைப் பற்றி கவலைப் படாமல், “ஹே… அப்போ… நான் கெஸ் பண்ணது கரெக்டா… என்ன? அம்மா வேணும்னு அழற இந்த பிரஜி பாப்பாக்கு ஒரு குட்டி பாப்பா வரப் போகுதா?” எனக் கேலியாய் கேட்டாள்.

பிரஜீயோ உதட்டைக் கடித்து, மெல்ல “ஆம்” எனப் புன்னகைத்து தலைக் குனிந்துக் கொண்டாள். “கங்கிராட்ஸ் மா” எனக் கண் சிமிட்டி தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தாள்.

பின் கை கழுவி வந்தவளிடம், “பிரஜி… அண்ணனுக்கு டிபன் எடுத்து வை, நான் கிளம்பறேன்” என்று சொல்ல, ஆனால் சஞ்சீவோ “சிஸ்டர்… நீங்க கொஞ்ச நேரம் பேசிட்டு இருங்க, நான் சாப்பிட்டுக்கிறேன்” என ஸ்ரீராமை தன் மனைவியிடம் தந்தான்.

ஸ்ரீராமும், சங்கீயும் இருந்தாலாவது, பிரஜி தன்னை துன்புறுத்தும் எண்ணத்தில் இருந்து விடுபடுவாள் என்றெண்ணி தான் இவ்வாறு சொன்னான்.

சஞ்சீவ் நினைத்தது போல், ஓரளவு அவள் எண்ணங்களில் இருந்து விடுப்பட்டிருந்தாள். பின்னே மழலை முகந்தன்னை பார்த்தால், யார் தான் கவலைப்பட்டு கொண்டிருப்பார்கள்? அது தன் செய்கையிலும், சிரிப்பிலும் எதிரே இருப்பவரை, கவர்ந்து இழுத்து விடும் அல்லவா? உலகத்திலேயே கடவுள் காந்தத்திற்கும், மழலைக்கும் தான் கவர்ந்து இழுக்கும் ஈர்ப்பு சக்தியை தந்திருக்கிறார் போலும். காந்தம் கூட இரும்பை மட்டும் தான் கவர்ந்திழுக்கும், ஆனால் மழலை செல்வம் சிறியவர் முதல் பெரியவர் வரை, என எல்லோரையும் கவர்ந்திழுக்கும் என்று சொன்னால், அது மிகையாகாது.

ஸ்ரீராமும் இப்பொழுது தான் தத்தக்கா, பித்தக்கா என்று நடக்க ஆரம்பித்திருந்தான். அதனால் இருவரும் தரையில் அமர்ந்து, அவனை நடக்க விட்டிருந்தனர். அவனின் பூ போன்று அசைந்து ஆடும் நடையில் மயங்கிய பிரஜி, அவனை தன்னை நோக்கி வரவழைப்பதும், விளையாட்டு காட்டுவதுமாக சங்கீயிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

பின் நடந்து நடந்து களைத்து போன குட்டி பையனின் கண்களில் உறக்கம் குடிக் கொள்ள, அப்படியே அமைதியாய் பிரஜி மடியில் அமர்ந்தவன் உறங்கி விட்டான்.

உறங்கிய மகனை தூக்கிக் கொண்டு சங்கீயும் சென்று விட, “மதிய சாப்பாடுக்கு என்ன செய்யலாம் பிரஜி?” என்று அவளிடம் வந்து வினவினான்.

ஆனால் அவளோ பதில் பேசாமல், கூந்தலைக் கொண்டையாய் முடிந்துக் கொண்டு, எழுந்து சமயலறைக்கு சென்றாள். அவனும் அவள் பின்னேயே சென்று “பிரஜி அம்மாவும், அண்ணனும் வர்றாங்க. அதுனால அவங்களுக்கும் சேர்த்து சமைக்கணும். என்ன சமைக்கணும்ன்னு சொல்லு, நானே பண்ணிக்கிறேன், நீ போய் ரெஸ்ட் எடு” என்று சொன்னான்.

அவளோ “எனக்கு ஒன்னும் ஆகல, நான் நல்லா தான் இருக்கேன்” என்று பின்னே வந்தவன் பக்கம் திரும்பாமலே கூறியவள், சங்கீயின் பாத்திரங்களை கழுவி எடுத்து வைத்தாள். மேற்கொண்டு சமைக்க தேவையான காய்கறிகளை எடுத்து, கழுவி நறுக்க ஆயத்தமானாள்.

ஆனால் சஞ்சீவோ மனைவி தன் பேச்சை கேட்காமல், பணி செய்யவும், வீட்டில் இருந்த மாதுளம் பழங்களை நறுக்கி, உதிர்த்து, மின் அரைவையில் (மிக்சி) அடித்து பழச்சாறு செய்து, அவளுக்காக ஒரு பெரிய டம்ளரில் ஊற்றி, காய் நறுக்கி கொண்டிருந்தவள் முன் நீட்டினான்.

அவள் வேண்டாம் என்று சொல்லியும், சமையலறையிலேயே இருந்து பழச்சாறு போடவும், நமக்கென்ன எதுவும் செய்து விட்டு போகிறான் என்று தன் வேலைகளைப் பார்க்க தொடங்கினாள். ஆனால் அவன் தனக்காக பழச்சாறு தரவும், அவன் அன்பில் உள்ளம் குளிர்ந்து தான் போய் விட்டாள்.

ஏனெனில் அன்பான கணவன், மனைவி தாய்மை அடைந்தால், இப்படி செய்வது வழக்கம் தான். ஆனால், இவனோ முன்பு… என்ன? கல்யாணமானதில் இருந்தே எப்பொழுதும் அதிகாரம் செய்தே பழகியவன், எப்பொழுதேனும் அவள் கோபமாய் இருந்தால் மட்டும், இடி, மின்னல்களோடு ஆர்ப்பாட்டமாய் வரும் கோடை மழை போல, திடுதிடுப்பென அன்பை பொழிவான்.

முன்பிருந்த சஞ்சீவ், இப்பொழுது இப்படி மாறி பாசத்தை பொழிகிறானே என்று நினைத்ததுமே, அவள் மனதில் இன்னொன்றும் தோன்றியது. இவன் இயல்பு இது தான் போல, அப்படியென்றால், முன்பு என்னை தவறாக எண்ணி, வேண்டுமென்றே என்னிடம் கடுமையாய் நடந்துக் கொண்டானா? நினைக்க நினைக்க மனம், எரிமலையாய் குமுறியது. அதனால் அவள் “வேண்டாம்” என்றாள்.

ஆனால் அவனோ “ப்ளீஸ்… பிரஜி குடி, பார்த்தாலே தெரியுது, நீ டயர்டா இருக்கன்னு” என்று சொல்ல, “டயர்டா தான இருக்கேன்… ஒன்னும் சாக கிடைக்கலையே…” என அவள் வார்த்தையை விட, “பிரஜி…” என துடித்து போய் விட்டான்.

ஆனால் அவளோ வெறுப்பு மண்ட, “இப்ப உங்க குழந்தைய நான் சுமக்கவும், என் மேல பாசமா இருக்க மாதிரி நடிக்க வேண்டாம், ப்ளீஸ்… போங்க… எனக்கு உங்கள பார்த்தாலே வெறுப்பா இருக்கு” எனச் சொன்னவளை, இதற்கு முன் காதல் புறாக்களாய் வாழ்ந்த ஒரு மாத காலத்தை மறந்தவள் போல் பேசுகிறாளே என்று கண்ணில் வேதனையோடு பார்த்தான்.

அப்படியென்றால் தன் காதலை அவள் உணரவில்லை என்று தானே அர்த்தம் என்று அவன் மேலும் வேதனையடைந்து, பழச்சாறு நிரம்பிய டம்ளரை அங்கேயே வைத்து விட்டு, விலகி சென்றான்.

பிரஜி, அவன் விலகியதும் திருப்தியாய் உணராமல், அவனைக் காயப்படுத்தி விட்டோமே என்று நெஞ்சம் கனக்க கண்ணீர் விட்டாள். பின் அவன் வைத்து விட்டு சென்ற பழச்சாறை, மனம் கேட்காமல் எடுத்து பருகியவள், சிறிது தெம்பாய் உணர்ந்தாள். மேலும் படட்டும், தன்னை எப்படியெல்லாம் காயப்படுத்தினான் என்றெண்ணியவள், இன்னும் நன்றாக பட வேண்டும் என்று எண்ணம் கொண்டாள்.

தன் அன்னையை அழைக்க ஸ்டேஷன் போவதாக, சமையல் செய்துக் கொண்டிருந்தவளிடம் கூற வந்தவனின் முகம் புன்னகையால் மலர்ந்தது. எதற்கோ திரும்பிய பிரஜி, அவன் மலர்ந்த முகத்தையும், அவன் பார்வை சென்ற இடத்தையும் பார்க்க, தன் தவறு புரிந்தது.

அனிச்சை செயலாய் நாக்கைக் கடித்தவள், ‘ம்ச்சு… ஜூசை குடித்து விட்டு, சமையல் செய்யும் அவசரத்தில் டம்ளரை அங்கேயே வைத்து விட்டு, வந்து விட்டேனே’ என்று காலியான டம்ளரை பார்த்து நொந்தாள். ஆனாலும், விடாமல் “வேஸ்ட்டா போயிடுமேன்னு தான் குடிச்சேன். வேற எதுவும் கற்பனைப் பண்ணிக்க வேண்டாம்” என்று இறுக்கமாகவே. குரலை வரவழைத்து சொன்னாள்.

 

மாயம் தொடரும்…….

error: Content is protected !!