இது என்ன மாயம் 28

பகுதி 28

கோவிலிலே கிடைத்த பிரசாதத்தை

தவற விட்ட சிறுவனாய்

நான் ஏங்கி நிற்கிறேன்

உன் காதலை யாசித்து…..

சஞ்சீவ் அவளின் பேச்சை கேட்டு வருந்தினாலும், எப்படியோ பாழாகி போய்விடும் என்றாவது குடித்தாலே என்று எண்ணி சமாதானமானான். தன்னிடம் வெறுப்பு காட்டட்டும், கோபிக்கட்டும், ஏனென்றால் தான் முன்பு அவளுக்கு செய்த பாவத்திற்கு தண்டனை என எண்ணி தாங்கிக் கொள்வேன்.

மேலும் தன்னிடம் கோபம் கொள்ள அவளுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது, வேறு எவருக்குமில்லை என்று நினைத்தான். முடிவாக, அவள் தன் மீது உள்ள கோபத்தை, தன் வயிற்றின் மீதோ அல்லது வயிற்றில் வளரும் அவன் குழந்தை மீதோ காட்டாமல் இருந்தால் சரி, என்றெண்ணி பெருமூச்சு விட்டான்.

அது தான், ஏற்கனவே இரண்டு தடவைக் கோபத்தைச் சாப்பாட்டிடம் காட்டி இருக்கிறாளே என்ற பயம் தான் பெருமூச்சிற்கு காரணம். அதுவும் இப்பொழுது காலையில் கூட, இட்லியை சாப்பிடுவதற்குள் எவ்வளவு அடம், எவ்வளவு கோபம், அப்பப்பா கடவுளே, நீ தான் எனக்கு துணை நிற்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டு சென்றான்.

பின் தன் அன்னையை வீட்டிற்கு அழைத்து வருவதற்கு சென்றான். வழி நெடுகிலும், தன் அன்னையிடம் நன்றாக நடந்துக் கொள்வாளா? அல்லது தன்னிடம் உள்ள கோபத்தால், எதுவும் சொல்லி, தாக்கி விடுவாளோ? இல்லை நடந்ததை சொல்லி, அழுது முறையிடுவாளோ? என்று பல்வேறு கேள்விகள் அவன் மனதுள் எழுந்தது.

மேலும் அவளுக்கும் அவன் அன்னைக்கும் உள்ள நல்லுறவால் சொல்லி விடுவாளோ? அல்லது உணர்ச்சி வசப்பட்டு பொங்குவாளே, அது போல் எதுவும் செய்து விடுவாளோ? என்று அவளைப் பற்றி அவனால் எதையும் கணிக்க முடியவில்லை.

சரி எது எப்படியாகினும், அவள் முன் என்ன? அவள் கண்ணில் கூட படாமல், மாமியாராயிற்று மருமகளாயிற்று என்று ஒதுங்கி விடுவது தான், தனக்கு நல்லது என்று முடிவு செய்து, ரயிலில் வந்திறங்கிய அன்னையையும், அண்ணனையும் வரவேற்று, அவர்கள் கொண்டு வந்த இரண்டு பைகளில் ஒன்றை தூக்கிக் கொண்டான்.

அவர்கள் இருவரையும் ஆட்டோவில் ஏற்றி அனுப்பி விட்டு, அவர்கள் பின்னேயே இவனும் இரு சக்கர வாகனத்தில் சென்று வீட்டை அடைந்தான். பிரஜி “அம்மா…. வாங்க” என அவர் கைப்பிடித்து வரவேற்றாள். மதனிடம் “வாங்க மாமா…” எனச் சிரிப்போடு நிறுத்திக் கொண்டாள்.

சரஸ் “என்ன மா ஆச்சு? உனக்கு உடம்பு முடியலன்னு போன் பண்ணான். நான் என்னவோ, ஏதோன்னு பயந்து போய், வழியெல்லாம் கடவுள வேண்டிக்கிட்டே ஓடி வந்தேன்” என்று பாசமாய் அவளை விசாரித்தார்.

பிரஜி “உக்காருங்க மாமா, உக்காருங்க மா, இதோ வரேன்” எனத் தண்ணீரும், சஞ்சீவ் செய்து வைத்த பழசாறை, இரு குவளையில் நிறைத்துக் கொண்டு வர சென்றாள்.

ஆனால் சரஸ் உட்காராமல், மனம் கேளாமல் அவள் பின்னோடேயே சென்று “ஏய் பிரஜி, என்ன மா ஆச்சு உனக்கு?” என்று பதறிய அந்த தாயுள்ளத்தைக் கண்டு, தனக்காகப் பதறி, தன்னிடம் பாசம் காட்ட இந்த ஒரு உள்ளம் போதும் என எண்ணி ஆறுதல் அடைந்தாள்.

“ஹையோ… அம்மா எனக்கு ஒன்னுமாகல, உங்க பையன் தான் பயந்து போய், இப்படி உங்கள வர வச்சிட்டார்.” என்று அவன் மீது குற்றம் சுமத்தியவளை, அவர் குழப்பமாகப் பார்க்க, “அம்மா… அது… வந்து” என்று மூச்சை நெருக்கி பிடித்து, வெளியிட்டு, என்ன தான் அவனிடம் குழந்தை பற்றி பேசி சண்டையிட்டாலும், இப்பொழுது என்னவோ புதிதாய் வெட்கம் தடுத்தது.

ஆனாலும் சொல்லி தானே ஆக வேண்டும்! வெட்கம் மேலிட “நீங்க … நீங்க… பாட்டி ஆகிட்டீங்க மா” எனச் சொல்லி விட்டு, அவர் தோளை அணைத்து, அவர் தோளிலேயே முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

இதைக் கேட்ட சரசுக்கு உள்ளமே குளிர்ந்து விட்டது, தன் தோளில் சாய்ந்திருந்த மருமகளின் தலையை பரிவாய் தடவி விட்டு, பின் அவள் முகத்தை நிமிர்த்தி நெட்டி முறித்தார். அதன் பின், அவர் காலில் விழுந்து “அம்மா… என்ன ஆசீர்வாதம் பண்ணுங்கமா” எனக் கேட்டு கொண்டாள்.

சரஸோ “நல்லா இரு டா மா” என வாழ்த்தி, அவளை எழுப்பி, ‘நல்லப்படியா என் மருமகள், பிள்ளையை பெற்று எடுக்க வேண்டும் கடவுளே’ என மருமகளைப் பார்த்தப்படியே கடவுளிடம் வேண்டிக் கொண்டார்.

அதற்குள், உள்ளே தண்ணீர் எடுக்க சென்றவர்கள், இவ்வளவு நேரமாகியும் காணோமே என்று சஞ்சீவ், “அம்மா… குடிக்க தண்ணீ கொண்டு வா… மா” என்றான்.

சஞ்சீவ் கேட்டப்படி, தண்ணீரும், பழசாறும் தந்தவர், மதனுக்கும் விஷயத்தை தெரியப்படுத்தி, எல்லோரும் அந்தச் சந்தோசத்தோடு மதிய உணவை உண்டனர். பின் மதன் ஊர் சுற்றி பார்க்க கிளம்பினான். பிரஜி சரஸிடம் தங்கள் அறையில் கட்டிலில் படுத்து ஓய்வெடுக்கச் சொன்னாள்.

ஆனால் சஞ்சீவ் படுக்கட்டும் என அவர் தயங்க, பிரஜி “அதெல்லாம் அவர், ஹால்ல கீழ படுத்துப்பார் அம்மா. நீங்க வாங்க, நாம ரெண்டு பேரும் படுக்கலாம். உங்களுக்கு தான் கீழ தரையில் படுத்தா சேராதே” என்று சரஸின் தயக்கத்தைப் போக்கினாள்.

அவரும், அவள் சொல்வது போல், அவருக்கு இடுப்பு வலி வந்ததிலிருந்து, மருத்துவர் தரையில் படுக்கக் கூடாது என்று சொன்னதால், அவருக்கும் ஒரு மெத்தை வாங்கி, அதை தரையில் போட்டு தான் படுப்பார். அதனால் அதற்கு மேல் அவர் மறுக்காமல் படுத்துக் கொண்டார்.

பின் மாலை, சங்கீதாவிடம் தன் அத்தையை அறிமுகப்படுத்தினாள் பிரஜி. அதே போல் தன் அத்தையிடம் அவளை அறிமுகப்படுத்தி, அவளின் உதவிகளையும், பழகும் விதத்தையும் சொன்னாள்.

சங்கீ கூட “ஏய்… பிரஜி… என்ன இது சின்னப்பிள்ளத் தனமா சொல்லிக்கிட்டு” என்று கூச்சுப் பட்டு, அவளைத் தடுத்தாள்.

அதற்கு பின் அவர்கள் இங்கு நல்ல, கைராசியான பெண் மருத்துவர் யாரேனும் அருகில் உள்ளாரா? என விசாரித்தனர். சங்கீதாவும் தனக்கு தெரிந்த குழந்தை நல மருத்துவரின் மருத்துவமனையில் பிரசவமும் பார்க்கப் படும், அதுவும் தான் கேள்விப்பட்ட வரையில், நல்ல மருத்துவர் என்று தான் எல்லோரும் சொல்கிறார்கள் என அங்கு போக சொல்லி, முகவரியும் அவர்களுக்கு தந்தாள்.

மேலும் சங்கீ “பிரஜி… யார் யார் போறீங்க?” எனக் கேட்டாள். பிரஜி “நான், அம்மா… அப்புறம் அவரும் தான் போறோம்” என்றாள்.

சங்கீ “அப்போ… ஆட்டோல தான போவீங்க? ஹே இந்த மாதிரி சமயத்துல… ஆட்டோல லாம் போ வேணாம், இருங்க நான் அவர்கிட்ட கார் கேக்குறேன், அவர் குளிச்சிட்டு இருக்கார் வரட்டும்” எனச் சொன்னாள். பிரஜீயோ “ஐயோ… வேணாம் சங்கீ இருக்கட்டும்”

ஆனால் அவளோ “அம்மா… நீங்க என்ன உங்க மகளா நினைக்குறீங்களா? இல்லையா?” எனச் சரஸிடம் கேட்க, அவரோ “ஆமாம் மா… எனக்கு பொண்ணே இல்ல, அதுனால எனக்கு உன்ன மாதிரி பொண்ணுங்கள பார்த்தா என் மக மாதிரி தான் தோணும், அதுவும் இப்ப நீ கேட்ட பிறகு, நீயும் எனக்கு ஒரு மக தான் மா” என அவளின் வெகுளித்தனமான அன்பை கண்டு உள்ளம் பூரித்தார்.

“அப்புறம் எப்படி, என் அண்ணன் பொண்டாட்டிய ஆட்டோல அனுப்புவேன்? அதுவும் நான் கார வச்சுகிட்டே, உங்கள ஆட்டோல அனுப்புவேன்னு நினைச்சீங்களா? இம்…” எனச் செல்லமாய் மிரட்டி, பிரஜி மறுக்க, மறுக்க, அவளைக் கிளம்ப சொல்லி உள்ளே சென்று விட்டாள்.

குளித்து விட்டு வெளியே வந்த கணவனிடம், கார் வேண்டும் என்று கேட்க, அவனோ கடுப்பில் “ஹே… போடி… நானே இப்ப தான் வீட்டுக்கு வர்றேன், திரும்பலா கார் எடுத்திட்டு என்னால லாம், எங்கேயும் வர முடியாது” என்று எரிச்சலாய் சொன்னான்.

சங்கீயோ அவன் பதிலை கேட்டு,இரு கைகளையும் தன் இடுப்பில் வைத்துக் கொண்டு, “ஆமாம், தினம் அப்படியே பொண்டாட்டிய வெளிய கூட்டிட்டு போற புருஷன் நீங்க, இன்னிக்கு வேணாம்னு அலுத்துக்குறீங்க” என அவனை சாடிவிட்டு, பின் விஷயத்தைச் சொன்னாள்.

ஆனாலும் கணவனின் சோர்வு அவளைத் தயங்க செய்தாலும், அவர்களிடம் சொல்லி விட்டோமே என்று சங்கடப்பட்டாள். பின் தன் கணவன் அரைமனதாய் சம்மதித்தாலும், அவன் அருகில் சென்று அமர்ந்து, அவன் தோள் மீது சாய்ந்து, அவனது இரவு உடையின் சட்டைப் பட்டனைப் பற்றி திருகிக் கொண்டே, “என்னங்க… நான் வேணா ஓட்டிட்டு போகவா?” எனக் கேட்டாள்.

என்ன தான் மனைவி காரோட்டி, ஓட்டுனர் உரிமம் வாங்கியிருந்தாலும், ஜெய் யோசித்தான். அதைப் பார்த்தவளோ, மேலும் அவன் சட்டைப் பட்டனைத் திருகிக் கொண்டே “என்னங்க அவங்களுக்கு ஒன்னும் ஆகாது, நான் பத்திரமா கூட்டிட்டு போயிட்டு, வந்திருவேன்” என்று அவன் யோசனையான முகத்தைப் பார்த்து கூறினாள்.

அவனோ “இல்ல… அந்த கார் நான் முத முத என் சம்பாத்தியத்துல வாங்கினது, அதான் யோசனையா இருக்கு” என்று அவன், அவளைக் கேலி செய்ய… அதைப் புரிந்துக் கொண்ட சங்கீ, “இம்ம்… உங்கள…” என்று அவன் சட்டை பட்டனை பிய்த்து விட்டு, கார் சாவியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.

அவள் பின்னோடே ஸ்ரீராமை தூக்கிக் கொண்டு வந்தவன், “அம்மா டாட்டா போறாளாம் டா… எங்க டாட்டா காட்டு டா செல்லம். நாம கொஞ்ச நேரம் இம்சையில்லாம ப்ரீயா இருக்கலாம்” என்று மேலும் அவளைச் சீண்ட… அவனுக்கு முன் சென்றவள், இதைக் கேட்டு நின்றவள், அவனைத் திரும்பி பார்த்து முறைத்து, அவன் அருகில் சென்றாள்.

“நான் இம்சையா… இம்…” என்று அவன் காதை திருகி, அவன் சுதாரிப்பதற்குள், “நான் போயிட்டு வர்றேங்க” என்று நல்ல பிள்ளையாய் சொல்லி, சிரிப்போடு சென்று விட்டாள்.

பின் சங்கீ, ஓட்டுனர் இருக்கையில் இருக்க, அவள் அருகே சரஸ் அமர்ந்திருக்க, பின் இருக்கையில் பிரஜீயும் சஞ்சீவும் அமர்ந்திருந்தனர். முதலில் அனைவரும் சங்கீ ஓட்டப்போவதை எண்ணி திகைத்தாலும், பின் அவளின் கையில் கார், நிதானமாய் வழுக்கிக் கொண்டு போவதை எண்ணி நிம்மதி அடைந்தனர்.

சஞ்சீவோ ‘என்ன லாவகமாய் ஓட்டுகிறாள், இந்தச் சின்ன பெண்!’ என வியப்படைந்து, அதை அவளிடம் கேட்டே விட்டான். அதற்கு அவள் தன் கணவன் தான், தனக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தி கற்று தந்தான் என சிறிது பெருமை கலந்து, சொல்ல தான் செய்தாள்.

அவளின் பதிலைக் கேட்ட சஞ்சீவ், ‘ஜெய் எப்படி முற்போக்காய் தன் மனைவி எல்லாவற்றிலும் சிறந்தவளாக இருக்க வேண்டும் என்று எண்ணி இருக்கிறான். ஆனால்… நான்… சே!’ எனத் தன்னை தானே திட்டிக் கொண்டான். அதன் விளைவாய், தன் அருகில் இருந்த மனைவியைப் பார்த்தான், ஆனால் அவளோ கதவை ஓட்டி அமர்ந்திருந்தாள்.

ஏனோ அவனுக்கு அவளை அணைத்துக் கொள்ள வேண்டும் போல தோன்றியது. தான் செய்த கொடுமையில் இருந்து அவனே காப்பாற்றுவது போல, அவள் அருகே நகர்ந்து, அவள் தோளை அணைக்க கை உயர, சட்டென்று அவள் திரும்பி, அவனை முறைத்தாள்.

“இல்ல… பிரஜி… நீ கதவுல சாஞ்சு இருந்தியா, அதான் தூக்கம் வருதோ…ன்னு…” என மெல்லிய குரலில் அவன் சொல்ல, அவளோ அவனுக்கு எந்த வித பதிலும் கூறாமல், இருக்கையில் பின்னே நன்றாக சாய்ந்து, தலை சாய்த்துக் கொண்டாள்.

சங்கீ ஓட்டுவதிலும், சரஸம்மாவும் அவள் லாவகமாய் ஓட்டுவதை வேடிக்கைப் பார்ப்பதிலும் கவனமாய் இருந்ததால், யாரும் இவர்களைப் பார்க்கவில்லை. மருத்துவமனையில் நுழைந்தவர்கள், மருத்துவரைப் பார்க்கும் அனுமதி சீட்டை (டோக்கன்) வாங்கி காத்திருந்திருந்தனர். பின் இவர்கள் முறை வரவும், சஞ்சீவ் வெளியேவே காத்திருக்கிறேன் என்று சொல்லி விட, சாரஸூம், பிரஜீயும் உள்ளே செல்ல, அவர்களுடன் சங்கீயும் உள்ளே சென்றாள்.

சங்கீயை அடையாளம் கண்டு கொண்ட அந்த மருத்துவர் ரதி தேவி, இவர்களைப் போன்று இளம் பெண்ணாக இருந்தாள். “வாங்க சங்கீதா, பையன் எப்படி இருக்கான்? நல்லா இருக்கானா?” என்று நலம் விசாரித்தாள். அவளுக்கு பதில் அளித்து விட்டு, தாங்கள் வந்த விஷயத்தைக் கூற, அவளும் பிரஜீயை பரிசோதித்து பார்த்து விட்டு, சந்தோசத்தோடுக் கர்ப்பத்தை உறுதி செய்தாள். பின் பிரஜீக்கு தேவையான மருந்து, மாத்திரைகளையும், சில அறிவுரைகளையும் வழங்கினாள்.

வீட்டிற்கு வந்த சரஸ், தன் கணவர் ரங்கனுக்கு இந்த நற்செய்தியை தெரிவித்தார். அவரோ “இம்… சந்தோஷம், நீ ஊருக்கு போகும் போதே நினைச்சேன், விஷயம் இதுவாக தான் இருக்கும்ன்னு. சரி, நீ அந்த புள்ளைய பத்திரமா இருக்க சொல்லி, புத்திமதி சொல்லிட்டு, மூணு நாலு நாள்ல கிளம்பி, வந்திரு. அப்படியே உன் பிள்ளையையும் பொறுப்பா இருக்க சொல்லு” என்று பெரிதாய் பேசி முடிக்க,

சரஸ் எல்லாவற்றுக்கும் “சரிங்க சரிங்க…” என்று ஆமோதித்தார். அவர் மேலும் தன் தங்கை பெண்ணை மதனுக்கு பார்த்த விஷயத்தைப் பற்றி கூறி முடித்தார். மேலும் சரஸ் “பிரஜிட்ட பேசுறீங்களா?” எனக் கேட்க, அவரோ “நான் என்ன பேச அந்த புள்ளைட்ட, நல்லா சாப்பிட்டு சந்தோஷமா இருக்க சொல்லிடு நீயே” என்றார்.

“மதன் நைட்டு கிளம்பி, பஸ்ல வர்றான், காலைல வந்திருவான்ங்க, நீங்க சாப்பிட்டீங்களா?”

“இம்… சரி, எல்லாம் ஆச்சு ஆச்சு”

“மாத்திர சாப்பிட்டீங்களா? அந்த மஞ்ச டப்பால போட்டு, அங்க முன்னாடி மேஜைல தான் வச்சிருக்கேன், எடுத்து மறக்காம சாப்பிடுங்க” என அக்கறையாய் கூறி, அந்தப் பக்கம் அவர் சரி எனச் சொல்லவும், வைத்து விட்டார். பின் மதனும் கிளம்ப, அவனைப் பேருந்து நிறுத்தத்தில் விட்டு விட்டு வந்தான் சஞ்சீவ்.

மறுநாள், தன் தாய் பிரஜீக்கு துணை இருக்கும் தைரியத்தில் அலுவலகம் கிளம்பி சென்றான். பிரஜி காலையில், உடல் சோர்வினால் சிறிது தாமதமாய் தான் எழுவாள். அதற்குள் சரஸ் டீ போட்டு முடித்திருக்க, அவருக்கு உதவுகிறேன் பேர்வழி என்று, சமயலறையில் அமர்ந்து காய்களை நறுக்குகிறேன் என்று அவன் கண்ணில் படாமல் இருந்து விடுவாள்.

சரஸும், காலையில் சஞ்சீவுக்கு சமைத்து அலுவலகம் அனுப்பும் பரபரப்பில் இதைக் கவனிக்க வில்லை. மேலும் அவர், பிரஜீயை ஒரு பணியும் செய்ய விடாமல் பார்த்து கொள்வார். அவளே நான் மசாலா அரைக்கிறேன், தோசை வார்க்கிறேன் என்று சொன்னால் கூட கேட்க மாட்டார், காயையாவது நறுக்குகிறேன் என்று அவள் தான் அடம் பண்ணி செய்தாள்.

மாலையிலும், சரஸம்மாவே தன் மகனையும் மருமகளையும் சேர்த்தே கவனித்து கொண்டார். பிரஜீக்கு தன் அத்தையை நினைத்து, மனமே நிரம்பி விட்டது. எத்தனைப் பேருக்கு இப்படி ஒரு மாமியார் கிடைப்பார்? தான் உண்மையிலேயே கொடுத்து வைத்தவள் தான் என எண்ணினாள்.

இரவு சஞ்சீவ் வெளியே படுக்க, சரஸ் மற்றும் பிரஜி இருவரும் கட்டிலில் படுத்துக் கொள்ள, சரஸ் தான் கல்யாணம் முடித்து வந்ததில் தொடங்கி, சஞ்சீவ் பிறந்து வளர்ந்து செய்த சேட்டைகள் வரை, இருவரும் பேசிக் கொண்டே துயில் கொள்வார்கள்.

இரண்டு நாட்கள் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் நகர்ந்தது. மூன்றாவது நாள் மாலை ஒரு நான்கு மணி வாக்கில், அழைப்பு மணி அழைக்க, சற்று நேரம் ஓய்வெடுத்த பிரஜீயும், சரஸும் ஒன்றாக முழித்தனர்.

பிரஜி எழுந்துக் கொள்ள முயல, சரஸ் “இரு மா, நான் போறேன்” என்று செல்ல முயல, “நீங்க இருங்க மா, நான் போய் கதவ திறக்கிறேன், அது ஆட்டோமாட்டிக் லாக், உங்களுக்கு திறக்க தெரியாது.” என்று அவள் சென்றாள்.

‘இந்த நேரத்தில் யாராக இருக்கும்’ என எண்ணிக் கொண்டே, கதவை திறந்தவள், ஒரு நிமிடம் மூச்சு விடக் கூட மறந்தவள் போல் நிற்க, கண்களில் சந்தோஷம் மின்ன, “அப்பா…” என ஆவலாய் சென்று, புன்னகைத்தவரின் கையை இருகைகளால் பிடித்துக் கொண்டாள்.

பின் அவர் “எப்படி டா… இருக்க?” எனக் கேட்க, அவளோ கண்களை பெரிதாக்கி, தானாய் மெய்மறந்த நிலையிலேயே “ரொம்ப சந்தோஷமா… இருக்கேன் பா” என அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவர் அவள் தலையை தடவ, அவ்வளவு தான், கையை பிடித்த நிலையிலேயே பிரஜி, அவர் தோளில் சாய்ந்து கண்ணீர் விட்டாள். அதற்குள் “ஹே… பிரஜி என்ன இது? மாமாவ வீட்டுக்குள்ள கூட்டிட்டுப் போகலையா?” என மாமனாரின் பின்னே, அவர் பையைத் தூக்கிக் கொண்டு வந்த கணவன் கேட்கவும் தான், வாசலிலேயே நின்றிருப்பது தெரிந்தது. சரஸும் அவர்களின் உணர்ச்சி மயமான பாசத்தைப் பார்த்து உறைந்து விட்டார். பின் மகனின் குரலில் அவரும் கலைந்து, வந்தவருக்கு தண்ணீர் கொடுப்பதற்கு உள்ளே சென்றார்.

“வாங்க பா” என அவரை வரவேற்று, வரவேற்பறையில் இருந்த நாற்காலியில் அவரை அமரவைத்து, அவரருகே அவள் கீழே அமர்ந்து, அவர் மடியில் தலை சாய்த்தாள். பின் மெல்ல, “எப்படி பா…?” எனக் கேள்வியோடு நிறுத்தினாள்.

அந்த முற்று பெறாத கேள்வியில் நூறு கேள்விகள் அடங்கி இருந்தன, எப்படி பா வந்தீர்கள்? யார் மூலம் வந்தீர்கள்? நான் பெங்களூர்ல இருக்கிறது எப்படி தெரியும்? யார் சொன்னார்கள்? என்னை மன்னித்து விட்டீர்களா? எப்படி… எப்படி? இதெல்லாம் எப்படி நடந்தது? யார் இந்த மாயங்களை எல்லாம் செய்தார்கள் என வரிசையாய் சந்தோஷமும் அதனைத் தொடர்ந்த படபடப்பும், அவளுக்கு கண்ணீரை வரவழைத்தது.

“எல்லாம் மாப்பிள்ள தான் மா பண்ணார்” எனத் தந்தை ராம் கூறிய பதிலைக் கேட்கவுமே, அவர் மடியில் படுத்திருந்தவளின் கண்கள் தானாய், அவர்களுக்கு எதிரே ஒரு நாற்காலியில், கன்னத்தில் குழி விழுக சிரிப்போடு அமர்ந்திருந்த தன் கணவனைப் பார்த்தது.

 

மாயம் தொடரும்…….