இது என்ன மாயம் 31

இது என்ன மாயம் 31

 

பகுதி 31

உயிராய் உன்னை நினைத்தேன்

என்று சொல்லும் நீயே

என் உயிரை பறித்து

உலகை வெறுக்க செய்கிறாயே

காதலுக்கு கண்ணில்லை என்கிறார்களே

ஆனால் இவ்வளவு தூரம்

என் உயிர் நேசத்தையும்

உனக்கு காட்ட மறுத்து

உணராத அளவுக்கு குருடாக்கும்

என்று நான் எண்ணவில்லை.

அவள் இருந்த மனநிலையில் அதைப் பார்க்கவும், சந்தோஷம் குமிழ் பூக்க, “ஹே…” எனக் கத்தி, தன் கணவனிடம் திரும்பி “தேங்க்ஸ் ங்க” என அவன் கைப் பற்றி கூறிவிட்டு, கூண்டைத் தூக்கினாள். பிரஜீக்கு சிறு வயதில் இருந்து குட்டி நாய், கோழி குஞ்சு, மீன் இல்லை பறவைகள் என ஏதாவது வளர்க்க வேண்டும் என்று கொள்ளை ஆசை இருந்தது.

ஆனால் அவள் அன்னை கோதை தான், உன்னை வளர்ப்பதே பெரும் பாடு, இதில் இது ஒன்று தான் குறைச்சல், சும்மா இரு என்று எல்லா அன்னையரை போல திட்டி அதை தடுத்து விடுவார்.

கூண்டை எடுத்து வந்து, படுக்கையறை பால்கனியில் வைத்தாள் பிரஜி. அவனுக்கு டீ, கேசரியைக் கூட எடுத்து கொடுக்க மறந்து, அந்த பறவைகளையே வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தாள். சஞ்சீவும், பறவைகளை ரசித்துக் கொண்டிருந்த பிரஜீயை ரசித்துக் கொண்டிருந்தான்.

பின் தான் அவனுக்கு டீ, கேசரி என எதுவும் கொடுக்காதது நினைவு வர, எழுந்து சென்று அவனுக்கு எடுத்து வந்தாள். ஏனோ இன்றைக்கு, அவளுக்கு அவனின் அன்பைத் தடுக்காமல், அனுபவிக்க தோன்றியது.

அந்தப் பறவைகளையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவள், அவை பறக்க முடியாமல், அந்த குட்டிக் கூண்டில் சின்ன இடத்திலேயே பறப்பதை கண்டு, ஏனோ அவளுக்கு மனம் வலித்தது.

மேலும் தன் கணவனிடம் “என்னங்க, அந்த பறவைங்க பாவம்… இவ்ளோண்டு கூண்டுல, பறக்க முடியாம… ஐயோ பார்க்கவே கஷ்டமா இருக்கு, வேண்டாம் எனக்கு” என்றாள் தொண்டை அடைக்க,

உடனே சஞ்சீவ், அவளை தோளோடு அணைத்து, “ஹே… லவ் பார்ட்ஸ் கூண்டுல வளரும் டா, இப்போதைக்கு தான் இந்த சின்னக் கூண்டு, பெரிய கூண்டு செய்ய சொல்லிருக்கேன். ரெண்டு நாளுல வந்திரும் டா, நீ தனிய இருக்கன்னு, உனக்கு துணைக்கு தான் வாங்கிட்டு வந்திருக்கேன்” என்று பாதி உண்மையைச் சொன்னான். இந்த பறவைகள் மூலமாவது, அவள் மனம் சிறிது சஞ்சலம் குறைந்து, லேசாக மாறும் என எண்ணி தான் வாங்கி வந்தான்.

அவன் சொன்னது போல், அவர்கள் பால்கனி சுவற்றின் முக்கால் பாகம் அடைத்தது போல், பெரிய கூண்டும் வந்தது. அதோடு சேர்த்து இன்னொரு ஜோடியும் இலவசமாய் வந்தது. அதற்கு தேவையான, திணை போடும் தட்டு, தண்ணீர் வைக்க கிண்ணம், முட்டையிட்டு அடைகாக்கவென சின்ன சின்ன மண் சட்டிகள் நான்கு மூலையில் கட்டப்பட்டிருந்தன.

அந்த பானையின் வயிற்றில் ஒரு ஓட்டை வேறு, பறவை அதன் வழியே உள்ளே சென்று வெளியே வருவதற்காக போடப்பட்டிருந்தது. மேலும் கூண்டு செய்து கொடுத்தவர், சின்ன கூண்டும் இருக்கட்டும், அவை முட்டையிட்டு குஞ்சு பொரித்தால், அவை பெரிதாக வளரும் வரை இந்த கூண்டில் வைத்து தனியாக வளருங்கள், இல்லையென்றால் மற்ற பறவைகள் அதை கொத்திக் கொண்டே இருக்கும் என்று சொல்லி சென்றார்.

சஞ்சீவ் நினைத்தது போல், பிரஜி கொஞ்சம் கொஞ்சமாக மாறினாள். பிரஜி முதல் வேலையாய் தன் பறவை தோழமைகளுக்கு பெயர் வைத்தாள். அதைக் கணவனிடம் பகிர்ந்துக் கொண்டாள். “இதுங்களுக்கு பேர் மஞ்சள் அழகிஸ், அதுங்களுக்கு பேர் ப்ளூ ஏஞ்சல்ஸ், அப்புறம் இதுங்க பேர் குட்டி” என மஞ்சள் ஜோடி பறவைக்கு மஞ்சள் அழகி என்றும், நீல நிறத்தில் இருந்த ஜோடிக்கு ப்ளூ ஏஞ்சல்ஸ் என்றும், மற்ற இரண்டையும் விட, மூன்றாவது சிறியதாய் நீலமும் மஞ்சளும் கலந்த நிறத்தில் இருந்ததால், குட்டி என வைத்திருந்தாள்.

சஞ்சீவ் “ஆமா, அது என்ன? தனி தனியா பேர் வைக்காம, இப்படி ரெண்டுக்கும் சேர்த்து வச்சிருக்க நீ?” என்றான்.

அவளோ “அதுங்க லவ் பார்ட்ஸ்ல, அதனால ஜோடி ஜோடியா தான் இருக்கும், தன் இணை செத்தா, மத்ததும் சாப்பிடாம இருந்து செத்து போயிடும், மனுஷங்க போல இல்ல” என்று பட்டென்று சொல்லிவிட்டு, நகர்ந்து விட்டாள்.

இப்படி தான் சஞ்சீவ் ஏதாவது பேச போய், பிரஜி ஏதாவது ஜாடை மாடையாய் அல்லது பொதுவாய் குற்றம் சுமத்தி செல்வாள். சஞ்சீவுக்கு ஏன்டா அவளிடம் கேள்வி கேட்டோம் என்றாகிவிடும்.

பிரஜி தினமும் அவைகளை வேடிக்கைப் பார்த்து, அது செய்யும் சேட்டைகளையும், செய்கைகளையும் அவனிடம் ஆர்வமாய் பகிர்வாள். அவனும் சரியென கேட்டு கொள்வான், அதற்கு மேல் கேள்வி கேட்க மாட்டான்.

ஒரு நாள் சஞ்சீவ் வீட்டிற்கு வரும் போது, பிரஜி பால்கனியில், அறை வாசலின் அருகே முட்டியிட்டு அமர்ந்திருந்து, பறவைகளைப் பார்த்து ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். அன்று மஞ்சள் பூக்கள் தெளித்த பச்சை நிற சேலை அணிந்திருந்தாள்.

சஞ்சீவுக்கு ஏனோ அன்று புத்தி வேறு விதமாய் வேலை செய்தது. அவளின் அருகே சத்தமில்லாமல் சென்று குனிந்து, அவளின் இடுப்பில், தன் கை விரல்களால் பியானோ வாசித்தான்.

இதை எதிர்பாராத பிரஜி, துள்ளி விழுந்து தடுமாறி பின்னே சாயப் போக, சஞ்சீவ் அவளைத் தன் கை வளைவில் பற்றிக் கொண்டு, குழந்தையென தன் மடியில் பாதி படுத்திருந்து மலங்க விழித்தவளின் நெற்றியில், தன் நெற்றியால் முட்டினான்.

மேலும் கண்ணை சிமிட்டி விட்டு, அவன் முன்னேற போக, “ஸ்ஸ்… விடுங்க” எனக் கெஞ்சுவது போல் சொல்லியும், அவன் காதில் விழாதவன் போல முன்னேற, “அத்த… டொம்மா…..” என அவள் விழப் போனதை பார்த்து, ஸ்ரீராம் பால்கனி பக்கம் இருந்து வந்து, மழலை மொழியில் கேட்கவும் தான், சஞ்சீவ் விலகி, அவளையும் நேராக நிறுத்தினான். பால்கனி அந்தப் பக்கம் ஸ்ரீராம் நின்றிருந்ததால், சஞ்சீவ் படுக்கை அறை வாசலில் இருந்ததால், அவனுக்கு ஸ்ரீராம் இருந்தது தெரியவில்லை.

பின் அசடு வழிந்துக் கொண்டே “ஹே… ஸ்ரீ பைய்யா… எப்ப டா, வந்த?” என அவனைத் தூக்கி கொஞ்சினான். ஆனால் அவனோ வழுக்கிக் கொண்டு “மாமா… பாத் பாத்” எனச் சொல்லவும், தான் செய்த காரியத்தை பார்த்து, தன்னை தான் சொல்கிறானோ என சஞ்சீவ் அதிர்ந்தான்.

அவன் அதிர்ந்ததைப் பார்த்து சிரித்தவள், “அவன் லவ் பர்ட்ஸ்ஸ தான் பர்ட்னு சுருக்கமா சொல்றான்” என மனைவி விளக்கம் அளிக்கவும் தான், “ஓ… பர்ட் பார்க்க போறியா… சரி சரி போ போய் பாரு…” என அவனை இறக்கி விட்டான்.

மனதுள் ‘ஸ்… எப்பா கொஞ்ச நேரத்துல எப்படி பயமுறுத்திட்டான். சிரிப்ப பாரு இவளுக்கு? என் நிலைமை இவளுக்கு சிரிப்பா தெரியுதோ? சொல்லலாம்ல ஸ்ரீராம் இருக்கான்னு’ என பிரஜீயை கீழ் கண்ணால் பார்த்து முறைத்தான்.

ஆனால் அவன் மனசாட்சியோ ‘அவள் தான் உன்னிடம் ‘விடுங்க’ எனக் கெஞ்சினாலே, உனக்கு புரிந்திருக்க வேண்டாமா? ஸ்ரீராம் இருந்ததால் கெஞ்சியிருக்கிறாள், இல்லையென்றால் மத்தப்படி இந்நேரம், உன் கன்னம் எரிவது போல், உன் கன்னத்தில் இரண்டு கொடுத்திருந்தாலும், ஆச்சரியப் படுவதற்க்கில்லை’ என அவனுக்கு உண்மையை எடுத்துரைத்தது. ‘இம்…ஆமாம்ல’ என எண்ணி சிரித்துக் கொண்டான்.

பிரஜி, ஒரு நாள் பறவைகளுக்கு சாப்பிட கொத்தமல்லித் தழைகளை உள்ளே போடப் போனாள். அவை திணை மாவு, கொத்தமல்லித் தழை, செம்மண் என மூன்றையும் உண்ணும். அப்பொழுது பார்த்து, அந்த மஞ்சள் அழகிஸில் ஒன்று, மிஸ்டர் குட்டியை குப்புறப் படுக்க வைத்து, அதன் மீது அமர்ந்து, அதை கும்மாங்குத்து (கொத்திக் கொண்டு) கொடுத்து, சண்டையிட்டது.

பிரஜி, முதலில் ஏதோ விளையாடுகிறது போல என எண்ணினாள். பின் குட்டியின் இறக்கை அடியில் இருக்கவும் தான், இதை மஞ்சள் அழகி அடிக்கிறது என்று அவளுக்கு புரிந்தது. பின் தான் வைத்திருந்த மல்லித் தழை ஒன்றை வைத்து அதை அடித்து, விலக்கி விட்டாள். அதற்குள் அந்த மிஸ்டர் மஞ்சளுக்கு கோபம் வந்து, அவளைக் கொத்த வந்தது. அதனால் தான் பிரஜி அதை ரௌடி என்று அழைப்பாள்.

இன்று என்னவோ அது அமைதியாய் இருக்கிறதே என எண்ணி தான், “என்ன அமைதியா இருக்க” என்று கேட்டாள்.

சிறிது நேரத்தில் அந்தக் கம்பியில் உட்கார்ந்திருந்த மஞ்சள் அழகிஸில் ஒன்று, கம்பியின் ஒரு முனைக்கு சென்று விட, மற்றொன்று அமைதியாய் அங்கேயே இருக்க, முனையில் இருந்த அந்த மஞ்சள் அழகி அப்படியே தத்தி தத்தி வந்து, அமைதியாய் நின்ற தன் இணையை இடித்தது.

பின் மீண்டும் அது போல செய்ய, இப்பொழுது இடையில் அந்த குட்டி வந்து உட்கார்ந்து விட, அதை பத்தி விட்டது. பின் மீண்டும் மஞ்சள் அழகிகள், அது போல தத்தி தத்தி நடந்து வந்து இடித்து, ஒன்றை ஒன்று பார்த்து “கீச் கீச்” எனக் கத்தின.

ஏதோ காதலர்கள் ஓடி பிடித்து விளையாடி பின், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சிரிப்பார்களே, அது போல இருந்தன, அந்தக் காதல் பறவைகளின் செய்கைகள். இதே எண்ணத்தோடு, புன்னகையோடு அந்தப் பறவைகளின் காதல் விளையாட்டைப் பார்த்து ரசித்தாள்.

மீண்டும் அதே போல் நடந்து இடித்துக் கொண்ட பறவைகள், பின் தன் அலகால், தன் இணையின் அலகைப் பற்றிக் கொண்டு சில நொடிகளில் விட, அப்பொழுது இரு பறவைகளின் வாயில் இருந்தும், நூல் போல எச்சில் வடிய, அதைப் பார்த்த பிரஜி அதிர்ந்தாள்.

இது நாள் வரை, இப்படி ஒரு செய்கையை, அந்தப் பறவைகளிடம் இருந்து பார்க்க நேந்தது இல்லை. இன்று இப்படி, இதழோடு இதழ் பதித்து, முத்தம் கொடுப்பது போல் செய்யவும், அவள் மனதில், ஏனோ ஒரு படபடப்பு எழுந்தது.

ஆனால் அந்த மஞ்சள் ஜோடி, பிரஜீயின் மனநிலையைப் பற்றி கவலைப்படாமல், மீண்டும் அதே போல செய்ய, அதைக் கண்ட பிரஜி சட்டென்று எழுந்து திரும்பி விட்டாள். பிரஜி திரும்பும் போது யார் மீதோ மோதி விட, தள்ளாடியவளைப் பிடித்து கொண்டான் சஞ்சீவ்.

ஆம், அவன் வீட்டுக்கு வந்து, தன் மனைவி இங்கு தான் இருப்பாள் என எண்ணி, அவள் அந்த பறவைகளோடு பேசும் அழகை காண வந்தான். ஆனால் அவள் எதைப் பார்த்து அதிர்ந்தாலோ, அதை அவனும் பார்த்து, பிரஜீயின் மனநிலையை உணர்ந்தான்.

பிரஜி அவனை எதிர்ப்பாராததால் என்பதை விட அவள் இருந்த மனநிலையில், ஏனோ அவனை அவளால் எதிர்க்கொள்ள முடியவில்லை. எனவே தலைக் குனிந்துக் கொண்டே, தன்னைப் பற்றி இருந்தவன் கரத்தை விலக்கினாள். ஆனால் அவனோ விடாமல், அவளைச் சுவற்றில் சாய்த்து, ஒரு கையை சுவற்றில் ஊன்றி, மற்றொரு கையால் அவள் முகத்தை நிமிர்த்தினான்.

ஆனால், அவளோ ஏதோ அவஸ்த்தையால் அவன் முகத்தைப் பார்க்க முடியாமல், கண்களை மூடிக் கொண்டாள். சஞ்சீவ் மூடிய அவள் இமைகளில் தன் இதழால் முத்தமிட்டு, அவள் முகத்தோடு முகத்தை உரசி அவள் காதில் “அதுனால தான் இதுங்களுக்கு லவ் பர்ட்ஸ்னு பேர் வச்சிருக்காங்க பிரஜி” என்று ஹஸ்கியான குரலில் கூறினான்.

அவளோ தான் பார்த்ததை இவனும் பார்த்து விட்டானே என்ற அவஸ்த்தையான வெட்கத்தில், உதட்டை கடித்துக் கொண்டே, அவன் சட்டையைப் பற்றிக் கொண்டு, அவன் தோளிலே முகத்தை புதைத்துக் கொண்டாள்.

இதமான குளிர் காற்று அறைக்குள் வந்து, அவர்கள் மீது வீச, மென்மையாய் அவள் இடையோடு கட்டியணைத்தான். மேலும், அவள் கழுத்து வளைவில் குனிந்து, “பிரஜு…” என்று அதே குரலில் பிரத்தேயகமாக அழைக்க, அவள் மேலும் அவன் தோளில் புதையுமாறு ஒன்ற, “ஹே… ஒரே ஒரு கிஸ் டி…” எனக் கேட்க,

 

அவளோ “இம்ஹும்” எனத் தலை ஆட்டியதால், அவளின் முகம் இடமும் வலமுமாக அவன் மார் மீது உரச, “ப்ளீ…ஸ்… டி…” கழுத்து வளைவில் முத்தமிட, அவள் அப்படியே சிலையென அசையாமல் நின்றாள்.

பின் அதை அவன் சம்மதமாக எடுத்துக் கொண்டு, அவன் அணைத்த நிலையிலேயே, ஒரு கரத்தால் அவள் முகத்தை நிமிர்த்தினான். அவள் கண் மூடிய மோன நிலையிலேயே இருக்க, சஞ்சீவ் நெற்றி, கண்கள், மூக்கு, கன்னம் என மெல்ல முன்னேற, அவன் எதிர்ப்பார்த்த, ஏக்கமாய் கேட்ட இதழொற்றலை நாடும் சமயம்….. வெளியே இடி இடிக்க, மழை பொழிய ஆரம்பிப்பதற்கான அறிகுறியாய் அது அமைய, அதற்கு பயந்து பறவைகளும் “கீச் கீச்” எனக் கத்த, பிரஜி பூ உலகிற்கு மீண்டாள்.

தான் இருந்தக் கோலத்தைக் கண்டவள், வான் நிலை போலவே அவள் இதயமும் குலுங்க, ஒரு நொடி விதிர்விதிர்த்து போய், ‘என்ன காரியம் பண்ணுகிறான் இவன்? எவ்வளவு தைரியம்?’ என அவனிடம் இருந்து தன்னை வெடுக்கென பிடுங்கிக் கொண்டு, நகர்ந்தாள்.

“சை… வெட்கமா இல்ல உங்களுக்கு?” என அவன் நெருங்கும் போதெல்லாம் கேட்கும் அதே கேள்வியைக் கேட்டாள்.

“ஏன் பிரஜி? நீ இன்னுமா அத மறக்கல? நான் தப்பு செஞ்சேன் தான், இல்லன்னு சொல்லல” என இன்று எப்படியும் அவளுக்கு புரியவைத்து விட வேண்டும், என இறங்கி வந்து பேசிக் கொண்டே, அவள் கையைப் பற்றப் போனான்.

ஆனால் அவன் பிடிக்குள் வராமல், “பேசாதீங்க… நான் இன்னொருத்தன காதலிச்சு ஏமாத்திட்டு… உங்களையும் காதலிச்சதா தான என்ன பத்தி மட்டமா நினச்சீங்க? எங்க இல்லன்னு சொல்லுங்க பார்க்கலாம். அப்படி இன்னொருத்தன ஏமாத்துனதுக்கு தான, கல்யாணத்துக்கு அப்ப்புறம் தண்டனை தந்தீங்க. ஆனா ஒன்னு கேக்குறேன் உங்கள, இன்னொருத்தன காதலிச்ச பொண்ண… உங்க வரைக்கும் அப்படி தான நினச்சீங்க, நீங்க மட்டும் காதலிச்சு கல்யாணம் பண்ணலாமா? இதே நினைப்போடு தான என்ன தொட்டீங்க, இப்பவும் அசிங்கமா நடந்துக்குறீங்க?” எனத் தன் ஆத்திரம் தீரக் கேட்டாள்.

“ஏய்…” என அடிக்க, ஓங்கிய கையை சஞ்சீவ் பாதியிலேயே கீழே இறக்கினான்.

“ஏன்… ஏன் கைய கீழ இறங்குறீங்க, அடிக்க வேண்டியது தான, நீங்க தான் ஆம்பிள்ளை ஆச்சே” என அன்று கடற்கரையில் இப்படி அவன் சொன்னதையும், அதனைத் தொடர்ந்த அவளின் பதிலால் அவன் அடித்ததையும் நினைவு கூர்ந்தாள். அவனோ அவளை தீயாய் பார்த்தான்.

ஆனாலும் அவள் “உங்கள மட்டம் தட்டுனா மட்டும் எவ்ளோ கோபம் வருது? ஆனா நீங்க உங்க மனசுல இவ்ளோ நாள் கீழ் தரமா, அதுவும் உங்கள உயிரா நினச்சு காதலிச்ச என்ன போய்… எப்படி எப்படி உங்களுக்கு மனசு வந்துச்சு அப்படி நினைக்க? அதே நினைப்போடு என்ன காதலிச்சு கல்யாணம் பண்ணி… ஏமாத்தி…” என அதற்கு மேல் சொல்ல முடியாமல், கண்ணீர் மல்க அவள் அழுதாள்.

அவள் அழுகையை தாங்காமல், சஞ்சீவ் “பிரஜி…” என அவள் பக்கம் ஒரு எட்டு வைக்க, “வேணாம்… எனக்கு நீங்க வேணாம் என்னிக்கு என் காதல்ல தப்பா நினச்சு அத அசிங்கப்படுத்தி, அதே எண்ணத்தோடு என் கூட குடும்பம் நடத்தி என்னையும் அசிங்கப்படுத்தினீங்களோ அன்னிக்கே முடிவு பண்ணிட்டேன். நான் கூட என் காதல் தான் உங்கள அன்பா மாத்திருச்சோன்னு நினைச்சேன். ஆனா அவன், அதான் அன்னிக்கு கடைல பார்த்த பிரின்ட், உங்ககிட்ட சொல்லலேன்னா, நீங்க இன்னும் அதே நினப்போட… ஐயோ… கடவுளே… இந்தக் குழந்தையும் யாரோடதுன்னு கேட்டிருந்தாலும் கேட்டிருப்பீங்க” எனத் தன் வயிற்றை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, அப்படியே மடங்கி சரிந்து அமர்ந்தாள்.

அது வரை பொறுமையாய், தன் மீது குற்றம் இருக்கவும் அமைதியாய் கேட்டவன், உன் குழந்தையையே தப்பாய் எண்ணுவாய் எனும் அளவிற்கு அவள் பேசவும், சஞ்சீவுக்கு கோபம் கொந்தளித்துக் கொண்டு வந்தது. “ஏய்… என்னடி? விட்டா… பேசிட்டே போற” என அவன் எகிறவும், அவள் நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

“நானும் என் மேல தப்பிருக்குன்னு பொறுத்து பொறுத்து போனா, வாய்ல வந்த மாதிரி எல்லாம் பேசுற. உன்ன பழிவாங்கணும்ன்னு காதலிச்சேன் தான், ஏதோ ஆத்திரத்துல உன்ன தொட்டேன் தான், இல்லன்னு சொல்லல, ஆனா அன்னிக்கே எனக்கு தெரியாம என் ஆழ்மனசுல இருந்த காதல்… உன்மேல உயிர் கொண்ட காதல் உயிர்த்தெழுந்திருச்சுடி… என்ன சொன்ன? அரவிந்தன் வந்து சொன்னானா? அப்புறம் தான் உன்ன நம்புனேன்னா? ஏன்டி… உனக்கு அறிவில்ல? அவன் சொல்றதுக்கு முன்னாடியே, நான் உன்மேல எவ்ளோ காதல்லா இருந்தேன், அத நீ உணரவே இல்லையா???” என வெடித்து, கடைசி வாக்கியத்தில், தன் காதலை அவள் உணரவேயில்லையே என்ற வலியோடு நிறுத்தினான்.

மேலும் அவன் “என்னமோ உன் காதல்ல அசிங்கப்படுத்திட்டேன் அசிங்கப்படுத்திட்டேன் சொல்றியே… இப்ப நீ மட்டும் என்ன டி பண்ணிட்டு இருக்க? நானாவாது தெரியாம தான் தப்பு பண்ணேன். ஆனா நீ தெரிஞ்சே தப்பு பண்ணுற. நான் உன்மேல காதலோட இருக்கேன்னு உனக்கு புரியல? இதெல்லாம் நடிப்புன்னு நீ நம்புறியா? சொல்லு… சொல்லுடி… நான் ஒவ்வொரு தடவையும், உன்மேல அன்போட, காதலோட நெருங்கும் போதெல்லாம், வெட்காமயில்ல, இப்படி நடந்துக்க அசிங்கமாயில்லன்னு கேட்டு கேட்டு என் காதல்ல ஏன்டி கொல்லுற?” என்று அவன் கேள்வியும் கேட்டு, நொந்து போய் சோர்வோடு கட்டிலில் அமர்ந்தான். அவள் கண்ணீரோடு அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

பின் தீர்மானத்தோடு, “நானும் உன்ன அன்பா கவனிச்சுக்கணும், சந்தோஷமா வச்சுக்கணும்ன்னு நினைக்கிறேன், ஆனா நீ என் அன்ப, காதல்ல எப்படியெல்லாம் கொச்சப்படுத்துற? இனிமே என் நிழல் கூட உன் மேல விழாது, ஞாபகம் வச்சுக்கோ… போ… போய்… இப்பவாது நிம்மதியா இரு” என்று சொல்லி விட்டு வெளியே சென்று வரவேற்பறையில் அமர்ந்தான்.

இவர்கள் சண்டையிட்டதில், வெளியில் இடி மின்னலோடு பெய்த மழையைக் கூட அவர்கள் உணரவே இல்லை. ஆயினும் பறவைகள் உணர்ந்து, பயத்தில் “கீச் கீச்” எனச் சத்தமித்தன. மேலும் அவைகளின் சத்தம் நிரம்ப கேட்கவும், சஞ்சீவ் மீண்டும் அறைக்குள் வந்து, பால்கனியில் இருந்தக் கூண்டைத் தூக்கி வந்து படுக்கையறையின் உள்ளே, ஒரு ஓரத்தில் வைத்து விட்டு, பால்கனி கதவைச் சாற்றினான். செல்லும் போது, சுவரோரமாய் சாய்ந்து கண்ணீர் வற்றிப் போய் அமர்ந்திருந்தவளை, ஓரக் கண்ணில் பார்த்து விட்டு தான் சென்றான். நேரம் கடந்து, இரவு ஒன்பதை தொட்டது.

சஞ்சீவும் பிரஜி வருவாள் என்று காத்திருந்தான். ஆனால் அவள் வருவதாக தெரியவில்லை என்பதை விட, அவள் வர மாட்டாள் என்றே நம்பினான். அது தான் ஏற்கனவே நிறைய தடவை அனுபவப் பட்டிருக்கிறானே. அதனால் அவளை அழைக்க சென்றான். ஆனால் அழைத்தாலும் வரமாட்டாள் என்றெண்ணியவன், “பிரஜி” எனத் தொடங்காமல், “சாப்பிட வேண்டும்” என்று சத்தமாகச் சொன்னான்.

மேலும் “உனக்காக இல்லை என்றாலும் என் குழந்தைக்காக… வா” என்று இப்படி கூறினாலாவது எழுந்து வருவாள் என்ற நம்பிக்கையோடு அழுத்தமாய் சொன்னான்.

ஆனால் பிரஜீயோ??????

மாயம் தொடரும்………

error: Content is protected !!