இது என்ன மாயம் 32

 

பகுதி 32

நீயில்லாத என் உலகம் சுழல மறுக்கிறதே

நீயில்லாத என் சூரியன் விடிய மறுக்கிறதே

நீயில்லாத என் நிலவு விலக மறுக்கிறதே

நீயில்லாத என் பகல் புலர மறுக்கிறதே

மொத்தத்தில் நீயில்லாத நான்

உயிருள்ள ஒரு பொருளாய் மட்டுமே இருப்பேன்…

சஞ்சீவ் அவளிடம் தன் பக்க நியாயங்களை என்று சொல்வதை விட, அவனின் காதலின் ஆழத்தைத் தனக்கு தெரிந்த மட்டும் சொல்லிவிட்டு, சென்ற பின்னும், பிரஜி அதே நிலையில் தான் அமர்ந்திருந்தாள். ஏனென்றால் பிரஜி, அவனின் இந்தத் தாக்குதலை எதிர்பாராமல் பேசி சண்டையிட்டு அவனைக் குற்றம் சுமத்தி, தன் மனக் குமறலை இறக்கினாள்.

ஆனால் அவனும், பதிலுக்கு எரிமலையாய் வெடித்து சிதறவும், அதிலும் தன் மீது குற்றம் சுமத்தவும், முதலில் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. கண்ணீர் வேறு மடை திறந்த வெள்ளமாய் நிற்காமல் வந்து கொண்டே இருந்தது.

‘இவன் என்ன சொல்கிறான்? இவனைக் குற்றம் சுமத்தினால், என்னையும் சேர்த்து குற்றம் சொல்கிறான். ஏதோ சொன்னானே அரவிந்தன் சொல்வதற்கு முன்னாடி…’ என்று அவன் சொன்ன வாக்கியங்களைத் திரும்பவும், மனதில் ஓட்டிப் பார்த்தாள்.

அவன் சொல்ல வந்தது புரிந்தது போல் இருந்தாலும், வேதனையில் உழன்ற அவள் மனமோ ‘ஆமா, மனசுல என்ன பத்தி இவ்ளோ மட்டமா நினச்சிட்டு தான், என் மேல காதலாகி கசிந்து உருகினானாக்கும்? எல்லாம் சும்மா சொல்கிறான். உண்மை தெரிந்து இவ்வளவு கோபத்தில் இருக்கும் போதே, என்னை விடாமல், தொட்டுக் கொண்டே இருக்கிறான். இதெல்லாம் வெறும் சமாளிப்பு’ எனச் சஞ்சீவின் நம்பிக்கை துரோகத்தால் வாடிய அவள் மனம், அவனின் உண்மையான காதலை நம்ப மறுத்தது என்பதை விட, தன் காதல் பொய்த்து போன நிலையில், அவனின் காதலை… காதல் தானா? அல்லது… என்று சந்தேகம் கொள்ள செய்தது.

மேலும் அவனின் தீர்மானத்தின் படி, ‘அவனின் நிழல் கூட என்னைத் தொடதாமே! பார்ப்போம் எத்தனை நாளைக்கு?’ என்று அவனைப் பற்றி நல்ல விதமாகவே அவளால் எண்ண முடியவில்லை.

ஏனென்றால் தன் காதல் அடிபட்ட நிலையில் மற்றவரின் காதல் உண்மை என அவளால் நம்ப கடினமாக இருந்தது. மேலும், சஞ்சீவ் தன்னைத் தொட்ட பின் தான் உருகினான் என்பதால், தன் கணவன் தன் மீது கொண்டது காதல் தானா? என்று குழப்பம் அடைந்தாள்.

சஞ்சீவின் நேரம் என்று தான் சொல்ல வேண்டும், அவளிடம் கணவனாய் நடந்துக் கொள்ளும் முன்பே தன் காதலை அவன் உணர்ந்திருக்கலாம், அமைதியாய் தன் மனதை ஆராய்ந்து பார்த்திருந்தால் புரிந்திருக்கும்.

அவனின் கோபம், அவனை எதுவும் செய்ய விட வில்லை. சஞ்சீவுக்கு முன்பே, அவளைக் குட்டி தேவதையாய் பார்த்த போதே, காதல் வந்திருந்தாலும், அவன் அதை உணர்ந்த தருணம், அவன் காதலியே அதை நம்ப மறுக்கிறாள். என்ன செய்ய? இது தான் நேரம் போலும்? காலம் தான் இவர்களுக்கு விடை சொல்லும்.

பிரஜி ஒரு முடிவுக்கு வந்திருந்தால், அதவாது தங்கத்தை எப்படி உரை கல்லில், உரசி பார்த்து தான், அது சுத்த தங்கமா? அல்லது செம்பு கலந்த தங்கமா? என்று சொல்ல முடியுமோ, அது போல அவனின் காதலையும் உரசி பார்த்து, அது சுத்தமான காதலா? இல்லை காமமா? என்று சோதித்து பார்க்க முடிவு செய்தாள்.

அவன் வரவேற்பறையில் இருந்து சாப்பிட அழைத்தது, அவள் காதில் விழுந்தாலும், அமைதியாய் இருந்தாலும், குழந்தை என்ற சொல்லில் நகர்ந்தாள். முகத்தை அழுந்த துடைத்து வெளியே வந்தவள், நேரே சமையலறை சென்று தனக்கு மட்டும் போட்டுச் சாப்பிட்டுக் கொண்டாள். அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை, சாப்பிட்டு முடித்ததும், வழக்கம் போல, தன் கட்டிலில், சங்கீ கொடுத்த டெடியை அணைத்துக் கொண்டு படுத்துக் கொண்டாள்.

சஞ்சீவும் அவள் சாப்பிட்டு முடித்த பின், அவள் பின்னேயே இவனும் சாப்பிட்டு, வரவேற்பறையில் அவள் கட்டிலின் அருகே, கீழே விரித்து படுத்துக் கொண்டான்.

ஆதி காலத்து மனிதர்களை போல மொழி அறியாதவர்கள் போலவே, அவர்களுக்குள் பேசாமலே, மௌனமாய், நாட்கள் கழிய, அடுத்த மாத மருத்துவ பரிசோதனைக்கு இருவரும் சென்றனர்.

வழக்கம் போல, ரதி சஞ்சீவிடம் மட்டுமே சிரித்து பேசி, பிரஜீயின் ரத்த அழுத்தத்தை உயர்த்தினாள். மருந்து மாத்திரை, எழுதி தந்த சீட்டை, ரதியிடம் இருந்து பிடுங்காத குறையாய் வாங்கிய பிரஜி, எழ முயல, சஞ்சீவ் அவள் கையைப் பற்றி மீண்டும் அமர செய்தான்.

அவள் அவனைப் பார்த்து முறைக்கும் முன், சஞ்சீவ் ரதியிடம் “ஏன் டாக்டர், இப்ப இவ ட்ராவல் பண்ணலாமா?” எனக் கேட்டான்.

“இம்ம்… பண்ணலாமே, அவங்களுக்கு மூணு மாசம் மேல ஆகிடுச்சு, நார்மலா தான் இருக்காங்க. சோ நோ ப்ராப்லம். ஆனா பஸ் ட்ராவல்லிங் அவாய்ட் பண்ணிடுங்க” என்றாள்.

பின் பிரஜீயிடம், அவள் “ஏன் பிரஜி, இன்னும் வாமிட்டிங் சென்ஷேசன் இருக்கா?” என்றாள்.

அவளோ “அவ்வளவா இல்ல டாக்டர்”

ரதி “அப்புறம் என்ன? தாராளமா கூட்டிட்டுப் போலாம். ஆனா மெதுவா கார்லையோ இல்ல ட்ரைன் ட்ராவலோ பண்ணலாம். ஆமா சஞ்சீவ், எந்த ஊருக்கு போறீங்க?” என்றாள்.

சஞ்சீவ் “சென்னைக்கு தான் டாக்டர்”

“ஓ… இங்கிருந்து மாக்ஸிமம் ஒரு த்ரீ அண்ட் ஹாஃப் ஹவர்ஸ் இல்ல போர் ஹவர்ஸ் தான, பரவாயில்ல ட்ராவல் பண்ணலாம். ஆமா நீங்க சென்னையா?” எனக் கண்ணில் ஆர்வம் பொங்க கேட்டாள் ரதி.

சஞ்சீவோ “ஆமா டாக்டர்” எனச் சொல்ல, அவளோ சந்தோசத்தில் “நானும் சென்னை தான், நீங்க எங்க இருக்கீங்க?” என அப்படியே விசாரித்தாள்.

பிரஜீயோ ‘போச்சு… ஆரமிச்சுட்டாங்க, அவ தான் சிரிச்சு சிரிச்சு பேசுறான்னா, இவனுக்கு எவ்ளோ கொழுப்பு? கட்டுன பொண்டாட்டிய பக்கத்துல வச்சுகிட்டே, எப்படி கடலைப் போடுறான்’ என மனதுக்குள் கொந்தளித்தாள்.

பேசி முடித்து, தன்னோடு வெளியே வந்தவனிடம் “ஏன் வீட்டு அட்ரசையும் சேர்த்துக் கொடுத்திட்டு வர வேண்டியது தான?” என்று நொடித்தாள்.

“என்ன சொல்லுற?” எனப் புரியாமல் சஞ்சீவ் கேட்க,

“ஊருக்கு போறத பத்தி பொண்டாட்டி கிட்ட சொல்ல முடியல, ஆனா மற்றவங்ககிட்ட மட்டும் இளிச்சுக்கிட்டு சொல்ல முடியுது” என்று பொரியவும் தான், ரதியை தான் சொல்கிறாள் என்று சஞ்சீவுக்கு புரிந்தது.

அவளின் பொறாமை அவனுக்குள் சிரிப்பை வரவழைத்தாலும், அதைக் காட்டாமல் விறைப்பாய், “பொண்டாட்டி, பொண்டாட்டி மாதிரி நடந்தா சொல்லலாம்” எனக் கூறினான்.

அவளோ, அவன்  பதிலைக் கேட்டு, ‘எப்படியெல்லாம் பேசுகிறான்? அதானே இவன் புத்தி அதிலேயே தான் இருக்கும்’ என்று தவறாகவே எண்ணி அவனை முறைத்தாள்.

ஆனால் சஞ்சீவோ, அன்று சண்டயிட்ட பின், அவள், அவனுக்கு சாப்பாடு, ஏன் டீ கூட அவள் கையால் கொடுப்பதில்லை. ஏதோ சமையல்காரி போல் எல்லாம் செய்து முடித்து ஒரு ஓரமாய் வைத்து விடுவாள். டீயைப் போட்டு டம்ளரை அறைக்குள் மேஜையில், அவன் குளியலறையில் இருக்கும் போதே வைத்து விடுகிறாள். அவனிடம் சொல்வதுக் கூட இல்லை, ஏதோ ஒன்றுக்கு வைப்பார்களே, அது போல தன்னை அவமானப் படுத்துகிறாள் என்ற கடுப்பில் தான் அவ்வாறு கூறினான்.

ஆனால் பிரஜீயோ தவறாக எண்ணிக் கொண்டு, அவன் தன் இரு சக்கர வாகனத்தை எடுக்கும் முன், விறு விறுவென்று முன்னே சென்று, சாலையில் நடக்க ஆரம்பித்தாள். வாகனத்தை உயிர்ப்பித்த சஞ்சீவோ ‘என்னடா, இன்னும் அமராமல் இருக்கிறாள்’ என்று பின்னே பார்க்க, அவள் சாலையில் நடப்பது தெரிய, வாகனத்திலேயே சென்று, அவள் வழியை மறித்து, “ஏறு” என்றான்.

அவளோ “நான் தான் பொண்டாட்டி மாதிரி நடக்கலேல்ல, பிறகேன் கூப்பிடுறீங்க? இப்ப சிரிச்சு சிரிச்சு பேசுனாலே, அவள கூப்பிட்டுட்டுப் போக வேண்டியது தான” என்று சிறுப்பிள்ளை கூறுவார்களே, என்ன விட்டுட்டு அவ கூட பேசுனேல்ல, அவ கூடேவ போய் விளையாடு என்று, அது போல பொறாமையில் என்ன சொல்கிறோம் என்று உணராமலே அவள் கூறினாள்.

சஞ்சீவோ ‘மகாராணிய ஒன்னு சொல்லிடக் கூடாது, அப்படியே ரோஷம் பொத்துக்கிட்டு வந்திரும்’ என்ற கடுகடுப்பில், “ஏய் லூசு மாதிரி பேசாத, மரியாதையா பின்னாடி உட்காரு, இல்ல ரோடுன்னு கூட பார்க்க மாட்டேன், இரண்டு அப்பு அப்பிடுவேன்” என்று பற்களைக் கடித்து கடுமையாய் கூற, அந்தக் கடுமைக்கு இயல்பாய் பயந்து, வண்டியில் ஏறினாள்.

பின் வீட்டிற்கு வந்ததும் அவன் மீது உள்ள கோபத்தை, தன் சாம்ராஜ்யத்தில், “டம் டும்” என்று பாத்திரங்களை உருட்டி, அதன் மீது காண்பித்தாள்.

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத சஞ்சீவ், அவளிடம் வந்து “ஏய் என்னடி வேணும் இப்ப உனக்கு?” என்று கோபமாய் கேட்க, அவளும் அவனுக்கு நிகராய் கோபத்தோடு பதில் சொல்லாமல், தன் வேலையைத் தொடர்ந்தாள்.

“உன்ட்ட தான் டி கேட்கிறேன்” என்று அவள் கைப் பிடித்து திருப்ப, “ஊருக்கு போகணும்ன்னு என்ட ஒரு வார்த்தையாவது சொன்னீங்களா? அவ கிட்ட மட்டும் சொல்ல தெரியுது” என்று வெடித்தாள்.

சஞ்சீவோ “ஏய் அன்னிக்கு தான், அம்மா சொன்னாங்கள, மதனுக்கு இந்த மாசம் கல்யாணம்னு, எப்படியும் ஒரு வாரத்துக்கு முன்னாடி போகணும், இன்னும் பத்து நாள் தான் இருக்கு, அதுக்கு தான் டாக்டர்கிட்ட கேட்டேன். ஏய்! அவங்க டாக்டர், முத அவங்களுக்கு மரியாதை தரலைன்னாலும், அவங்க தொழிலுக்கு மரியாதைக் கொடு. இன்னொரு வாட்டி உனக்கு வைத்தியம் பார்க்கிற அவங்கள தப்பா பேசாத” என்று பொறுமையாய் எடுத்துரைத்தான்.

அவளும் தன் தவறை உணர்ந்து, கீழுதட்டை தன் பற்களால் கடித்து, தலை குனிந்து கண்ணீர் விட்டாள். இதற்கு காரணம் ரதியை ரொம்பவும் தப்பாய் பேசிவிட்டோமே என்ற குற்ற உணர்வு மட்டுமல்ல, தன் கணவன் தன்னைக் கவனிக்கவில்லை என்ற ஏக்கமும் மறைந்து இருந்ததோ??? ஆனால் அதை அவள் தான் அறியவில்லை.

மேலும், அவள் கையை விட்டவன், “நான் ஆபீஸ்ல, லீவ் எடுத்திட்டு, எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு சொல்றேன். அப்போ கிளம்பினா போதும்” என்று அத்தோடு முடித்துக் கொண்டான்.

பின் அந்த வார சனிக்கிழமையே கிளம்பினார்கள். முதல் நாள் சஞ்சீவ் அவளை பத்து நாட்களுக்கு தேவையான துணிமணிகளை எடுத்து வைத்துக் கொள்ள சொன்னான். ஆனால் ஏன் பத்து நாட்கள் முன்பே செல்ல வேண்டும்? என்று எந்த விவரமும் அவன் அவளிடம் சொல்லவும் இல்லை, அவளும் அவனிடம் கேட்கவும் இல்லை.

ஒரு வேளை அலுவலகத்தில் பத்து நாட்கள் விடுமுறை கேட்கவும், இவன் விடுமுறையே எடுக்கவில்லை எனக் கொடுத்து விட்டார்களா? கல்யாணத்தை ஒட்டி வேறு விடுமுறை எடுக்க வேண்டுமே, திருமணம் முடிந்ததும் உடனே வர முடியுமா, என்ன? மனதோ ‘என்னிடம் ஏன் கேட்கிறாய்? அதோ அவனிடம் கேட்க வேண்டியது தானே’ என்று இடித்துரைத்தது.

ஆனால் அவளோ ‘நமக்கென்ன அதன் பின் மீண்டும் இங்கு வந்து கூட விடுமுறை எடுத்து திரும்பட்டும், அப்பவாது வாய் கொழுப்பு அடங்கட்டும்’ என்று வேண்டுமென்றே அவனிடம் எந்த விவரமும் கேளாமல் கிளம்பினாள்.

ஆம், மதனின் திருமணத்திற்கு பத்து நாள் முன்பே அவர்கள், ஒரு வாடகை காரில் பயணம் செய்தனர். சங்கீயிடம் விவரம் சொல்லி விட்டு, ஸ்ரீராமிற்கு முத்தம் கொடுத்து விட்டு, வீட்டைப் பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டு கிளம்பினாள் பிரஜி. மேலும் மஞ்சள் அழகிஸ், ப்ளூ ஏஞ்சல்ஸ், குட்டிஸ் மற்றும் மஞ்சள் அழகிஸின் குட்டிகள் இரண்டும் இவர்களுடன் பயணித்தன.

ஆம், மஞ்சள் அழகிஸ் முட்டையிட்டு இரண்டு குஞ்சுகளைப் பொரித்தன. கண் கூட திறவாத நிலையில் இருந்த குட்டிக் குட்டிக் குஞ்சுகளைப் பார்த்து அதிசயித்து, கடவுளின் அற்புதத்தை எண்ணி எண்ணி வியந்தாள். ஆனால் இப்போது சிறகு முளைத்து பெரிதாகியிருந்தன. அதனால் பிரஜி அவற்றைப் பார்த்து கொஞ்சம் குழப்பங்களை மறந்து, சிறிது சந்தோசமாக இருந்தாள்.

வசதியாய் உறங்கிக் கொண்டே செல்லுமாறு, சஞ்சீவ் டவேராவை புக் செய்திருந்தான். பறவைகளின் கூண்டை டிக்கியிலும், பறவைகள் அனைத்தையும், தற்சமயம் சிறிய கூண்டில் அடைத்து, பின் இருக்கையிலும், குட்டிகளை ஒரு சிறு மூடியிட்ட பிளாஸ்டிக் கூடையில் பிரஜி மடியில் வைத்துக் கொண்டு, நடு இருக்கையில் சஞ்சீவுடன் அமர்ந்திருந்தாள்.

சிறிது நேரத்தில், அந்த ஜென்னலோர காற்று அவளை உறங்க வைக்க, அப்படியே உறங்கி, சஞ்சீவ் தோளில் சாய்ந்தாள். சஞ்சீவ் மெல்ல அவள் கையில் இருந்த கூடையை எடுத்து, நகர்ந்து காரின் கதவுக்கும், தனக்கும் இடையே நகராதவாறு பத்திரமாக வைத்தான். அப்படி நகர்ந்ததில், பிரஜீயுடன் நெருக்கமாய் அமர வேண்டிய நிலை ஏற்பட, தவித்து தான் போனான் சஞ்சீவ்.

இருந்தும் அவன், அவளை தன் மடி மீது படுக்க வைக்க எண்ணி அவளை நகர்த்த, உசும்பி விட்டாள். பயந்து போன சஞ்சீவ் நெஞ்சு படபடக்க அப்படியே இருக்க, நல்ல வேளை, பின் மீண்டும் அயர்ந்து உறங்கியவள் அவன் தோளிலேயே சாய்ந்தாள்.

இந்த முறை அவள் தோளில் கை போட்டு அணைக்காமல், அவள் வலக்கையை தன் இடது கையில் வைத்துக் கொண்டான். சிறிது நேரம் சென்ற பின், பிரஜீக்கு பாத்ரூம் செல்ல வேண்டும் போல இருந்த உணர்வில் விழித்துக் கொண்டாள். விழித்தவள் பின் தான், தன் தலையை அசைக்க கூட முடியாமல், நாம் எதன் மீதோ தலை சாய்த்திருக்கிறோம் என்று உணர்ந்தாள்.

கண்ணை நன்றாக திறந்து பார்க்க, சஞ்சீவ் தோளில் அவள் தலை சாய்த்திருப்பதும், கூடவே அவனும் தன் தலை மீது, அவன் தலை சாய்த்து உறங்குவதும் புலப்பட, அவசரமாக விலகினாள்.

மேலும் அவன் கையில், தன் கை இருப்பதை கண்டு, அதையும் உருவப் போக, அதற்குள் சஞ்சீவ் விழித்து, அவள் கையை இறுக பற்றி “என்ன பிரஜி?” என இயல்பாய் வினவினான்.

அவளோ தன் அவஸ்த்தையை மறைத்து “ஒன்னும் இல்ல” எனத் தன் கையை விடுவிக்க, அவனோ அதைப் புரிந்து மெல்ல விடுவித்தான். நேரம் செல்ல செல்ல, பிரஜீக்கு வியர்க்க ஆரம்பிக்க, அவனிடம் எப்படி இதைச் சொல்வது என்று அவஸ்த்தையோடு, அவள் அவனைப் பார்ப்பதும், அவன் பார்த்தால் குனிவதும், கையை இறுக மடக்கி, தன்னை கட்டுப்படுத்துவதுமாக இருந்தாள். இப்படியே இரண்டு நிமிடம் சென்றது.

அதற்குள், அவளுக்கு நிரம்ப வியர்த்து வழிய, அவளைப் பார்த்தவன், அவளின் அவஸ்த்தையைப் புரிந்துக் கொண்டு, ஓட்டுனரிடம் “இங்க எங்கயாவது ஹோட்டலோ, இல்ல ரெஸ்ட் ரூமோ இருந்தா நிப்பாட்டுங்க சார்” என்று கூறினான்.

ஓட்டுனரும், மிக அருகில் இருந்த ஹோட்டலில், அடுத்த அரை நிமிடத்தில் நிறுத்த, பிரஜீயோடு இறங்கிய சஞ்சீவ், “இத சொல்ல, என்ன தயக்கம் பிரஜி” என அவள் காதில் கூற, அவளோ எதுவும் சொல்லாமல் ரெஸ்ட் ரூம் நோக்கி சென்றாள்.

அவள் வரும் வரை காத்திருந்தவன், அவளிடம் “என்ன குடிக்கிறாய்?” எனக் கேட்டு, அவள் “டீ” என்றதும், அதை வாங்கி கொடுத்து விட்டு, ஓட்டுனருக்கும் வாங்கி தந்தான்.

பின் சென்னைக்கு சஞ்சீவ் வீட்டிற்கு வந்து சேர, காரில் இருந்து இறங்கிய பிரஜி, ஒரு கையில் குட்டிகள் இருந்த சின்னக் கூடையையும், மறு கையால் சஞ்சீவ் இறக்கி வைத்த பையை (லக்கேஜ் பாக்) தூக்கப் போக, உடனே அவள் அருகில் வந்த சஞ்சீவ் “ஏய் பிரஜி கீழ வை, உன்ன தான் டாக்டர் வெயிட் தூக்க கூடாதுன்னு சொல்லிருக்காங்களா?” எனக் கூறி விட்டு, ஒவ்வொரு பொருட்களாய் இறக்கினான். ஓட்டுனருக்கு கட்டணத்தை சரி பார்த்து ரூபாயை கொடுத்துக் கொண்டிருந்தான்.

அவன் வரும் வரை, அங்கு நின்றுக் கொண்டிருந்தாள், ஏனோ தனியே போக அவளுக்கு விருப்பமில்லை. எல்லாவற்றையும் முடித்து, அவளைப் பார்த்தவன், “ஏன்… வீட்டுக்கு போக வேண்டியது தான, இங்கயே ஏன் நிக்கிற பிரஜி” என்று இயல்பாய் கேட்க, “இல்ல… அது… வந்து” என அவள் தடுமாற, “சரி, சரி, வா” எனப் பெரிய கூண்டை கீழே, படியில் வைத்து விட்டு, ஒரு கையில் பறவைகள் இருந்த சிறு கூண்டையும், மறு கையில் பையையும் தூக்கிக் கொண்டு, அவளை முன்னே போக சொல்லி, பின்னே இவன் ஏறினான்.

பின் வீட்டிற்குள் செல்லவும், சரஸ் அவர்களை “வா மா பிரஜி… வா… பா” என தன் மருமகளையும், மகனையும் வரவேற்றார். முன்னறையில் இருந்த கட்டிலில் அமர்ந்திருந்த சாரங்கன், இருவருக்கும் பொதுவாய் “வாங்க” என்று அழைத்து, மீண்டும் தன் கையில் இருந்த செய்தித் தாளில் மூழ்கினார்.

பிரஜி சரஸோடு உள்ளே சென்று விட, சஞ்சீவ் பொருட்களை முன்னறையிலேயே வைத்து விட்டு, கீழே இருந்த பெரிய கூண்டை எடுக்க சென்றான். அதற்குள் சிறிய கூண்டில் இருந்த பறவைகள், “கீச் கீச்” என சத்தமிட்டு, சாரங்கனின் கவனத்தைக் கவர்ந்தது. அவர் செய்தி தாளை கீழிறக்கி, அதன் மேலே கழுத்தை நீட்டி பார்த்தார்.

அவைகளும் அவரைப் பார்த்தன. சாரங்கனுக்கு என்னவோ ‘எங்களை மட்டும் வரவேற்காமல், அவர்களை மட்டும் வரவேற்கிறீர்கள், எங்களை கவனிக்க மாட்டீர்களா?’ என்று தன்னிடம் அவைகள் கேட்பது போல் தோன்ற, அவர் அவற்றைப் பார்த்து சிரித்தார்.

சஞ்சீவ் பெரிய கூண்டோடு மீண்டும் உள்ளே வந்தவன், “பிரஜி… பிரஜி… தண்ணி கொண்டு வா” எனப் பறவைகளுக்கு நீர் ஊற்றக் கேட்டான். பின்னர், ஒரு ஓரமாய் முன்னறையில் பெரிய கூண்டை வைத்தவன், சிறிய கூண்டில் இருந்த பறவைகளை அதில் மாற்றி, அவற்றுக்கு தீனிப் போட்டான். பின் பிரஜி கொண்டு வந்த நீரை ஊற்றி வைத்தான். மேலும் மஞ்சள் அழகிஸின் குட்டிகளையும் சிறிய கூண்டிற்கு மாற்றினான்.

மதிய சாப்பாட்டிற்கு பின், வரவேற்பறையில் பிரஜி தன் அத்தையிடம் பேசிக் கொண்டிருந்தாள். அவரோ “போய் படுத்து ஓய்வெடு பிரஜி மா” என்று கூற, “இல்ல மா… வண்டில வரும் போதே தூங்கிட்டேன். இப்பவும் தூங்குனா, நைட் எனக்கு தூக்கம் வராது, வேணும்னா நீங்க படுங்க மா” என்று கூறினாள்.

சஞ்சீவ், வீட்டில் இருந்த ஒற்றை படுக்கையறையில் உறங்கிக் கொண்டிருக்க, சாரங்கனோ முன்னறையில், வயர் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தார்.

“சரி, தூங்க வேணாம், சும்மா படு மா… இல்ல இடுப்பு வலிக்கும்” எனத் தன்னோடு படுக்க வைத்தார். ஏதேதோ சிறிய குரலில் பேசினார்கள். பின் பிரஜி “மதன் மாமா வேலைக்கு போயிட்டாராமா? இன்னிக்குமா அவருக்கு வேலை இருக்கு?” என்று பேச்சு வாக்கில் கேட்டாள்.

“ஆமாம் மா, அவன் சொந்தமா ஒரு கார் வாங்கி, ஒரு ட்ராவல் ஏஜென்சிக்கு விட்டிருக்கான். சவாரி வந்தா இவன் தான் ஓட்டிட்டு போவான். அது மாதிரி தான், இந்த வாட்டி, எங்கேயோ கோயம்புத்தூருக்கு போயிருக்கான். வர இரண்டு நாள் ஆகும்ன்னு சொன்னான். இல்லாட்டி உங்கள கூட்டிட்டு போக வந்திருப்பான்.”

“ஓ… அப்படியாமா, மாமாக்கு எப்போமா கல்யாணம்? பொண்ணு பேரு என்னமா? மாமா சொன்னாரே, அவரோட தங்கச்சி பொண்ணுன்னு? அவங்களா?” என அடுத்தடுத்து வினவினாள்.

“ஆமா மா, மதனோடு அத்த பொண்ணு தான். இப்ப தான் பரீட்ச்ச முடிக்கப் போறா, முடிச்சதும் கல்யாணம் பண்ற மாதிரி தேதி குறிச்சிருக்கு” என்றார்.

“என்ன மா படிச்சிட்டு இருக்காளா?” என அதிர்ச்சியடைய, “ஆமா மா, என்னமோ ஒரு டிகிரி படிக்கிறா, இப்ப மூணாவது வருஷம் தான். முடிக்கப் போறா”

“ஏன்மா, என்ன விட சின்னப் பொண்ணா இருப்பா போலேயே? ஆனாலும் எனக்கு ஒரு செட் வரப்போகுது ஜாலி” என்று சந்தோசப்பட்டாள்.

ஆனால் அதற்கு விடையாய் “நீங்க இப்படி கல்யாணம் பண்ணலேன்னா, இப்படி அவசரம் அவசரமாவ என் பையனுக்கு கல்யாணம் பண்ணுவேன், எல்லாம் நேரம்” என்று எல்லோரும் சஞ்சீவின் கல்யாணத்தை அரசல் புரசலாய் கேட்ட விதத்தில், கொதித்து போன ரங்கன், இவர்களிடம் தன் கோபத்தை காட்டினார்.

அதன் பின் பிரஜி மௌனமாகி விட்டாள். சரசும் தன் கணவன் முன் ஒன்றும் செய்ய முடியாமல், அமைதியாய் எழுந்து சென்று, அவர் வெளியே செல்லும் முன் டீ போட்டு நீட்டினார். பின் அவர் சென்றதும், முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டிருந்த பிரஜீயைச் சாமதானம் செய்தார். அவளும் “மாமா சொல்றதுல தப்பில்ல மா, நா பண்ணதும் தப்பு தான” என்று அன்றைய நினைவில், அதன் பின் நடந்த சம்பவங்களை எண்ணி சோர்வானாள்.

மாலையில் கண் விழித்த சஞ்சீவும், என்னவென்று விசாரிக்க, சரசும் நடந்ததைச் சொல்ல, “ஏன்டி, வாய வச்சுக்கிட்டு சும்மாவே இருக்க மாட்டியா” எனத் தந்தை மீது உள்ள கடுப்பில், அவளைக் குற்றம் சுமத்த, தன் அத்தையின் முன் ஒன்றும் சொல்ல முடியாமல், அவனைக் கீழ் கண்ணால் முறைத்து வைத்தாள்.

மறுநாள் ஞாயிறன்று, பிரஜீயை மட்டும் விட்டு விட்டு, சஞ்சீவ் பெங்களூர் திரும்பினான்.

 

மாயம் தொடரும்…………….