இது என்ன மாயம் 34

இது என்ன மாயம் 34

பகுதி 34

நீ…..

என் கனவுக்குள் வந்து

வெகு நாட்களாகி விட்டன…

என் நினைவுக்குள் புகுந்து

நாட்கள் மாதங்களாகி விட்டன…

இத்தனையும் எப்படி நேர்ந்தது

என்று நான் ஆராயும் போது

என் இதயத்தில் நுழைந்து

சர்வாதிகாரம் செய்கிறாய் என்று தெரிந்தது…..

தன் மீது கொடி போல் படர்ந்திருந்தவளை பார்த்துத் திகைத்து நின்றான் சஞ்சீவ். இது கனவா இல்லை நிஜமா? தான் வந்தது தெரிந்தால் அவள் வாயில் இருந்து வரவேற்பு கிடைக்குமோ என்னவோ? என்ற அச்சத்தோடு தான், சஞ்சீவ் மட்டும் தனியாய் பழைய வீட்டில் இருந்து கிளம்பினான்.

எங்கே இவர்களோடு சென்றால், அவள் வரவேற்காமல் நின்றால், தன் பெற்றோர்களுக்குச் சந்தேகம் வந்து விடுமோ என, அவர்களுக்காக அஞ்சி தான், மதனின் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு, “அம்மா, அவ தனியா இருப்பா, நான் முன்னாடிப் போறேன், நீங்க மெல்ல எல்லாம் சரி பார்த்திட்டு, வீட்டப் பூட்டிட்டு வாங்க” எனச் சொல்லிவிட்டு, கையோடு அவளின் பறவைத் தோழமைகளையும் முன் போலவே சிறிய கூண்டில் அடைத்து எடுத்துச் சென்றான்.

தன்னை வரவேற்பாளோ என்னவோ? என்ற ஐயத்தோடு வந்தவனை, இப்படி புயலெனத் தாக்கி, சுனாமியாய் சூழ்ந்து அவனை வரவேற்பாள் என்று எதிர்பார்க்கவில்லை. எனினும் இதை அவள் சுய உணர்வோடு தான் செய்கிறாளா? என்று மேலும் குழம்பினான். பாவம் ஏற்கனவே நிறைய தடவைச் சூடுப் பட்ட அனுபவம் அவனை அவ்வாறு சிந்திக்க வைத்தது.

இப்போது இவளை அணைக்கலாமா? வேண்டாமா? என மனதில் சஞ்சீவ் பட்டி மன்றம் நடத்தி, ‘சரி வருவது வரட்டும்’ என்று எண்ணி அவளை அணைக்கக் கையைக் கொண்டு போன வேளையில், “பிரஜி… பிரஜீமா” எனச் சரஸின் குரல் கேட்க,

நாணில் இருந்து விடுப்பட்ட அம்பு போல பட்டென விலகினாள் பிரஜி. பின், தன்னையே பார்த்து கொண்டிருந்த சஞ்சீவைப் பார்த்தவள், “அப்போ இது கனவில்லையா? நிஜம் தானா? அவன் தான் வந்திருக்கிறானா?” என எண்ணியவள், மேலும் ‘ஹையோ கடவுளே! எனக்கு என்னாயிற்று? நானா??? எப்படி… இப்படி… நடந்து கொண்டேன் என்று புரியவில்லையே… ஐயோ… சரி, கனவில்லை என்றால், ஏன் என்னை அணைக்கவில்லை? அப்படியென்றால் அவனிடம் எந்தப் பாதிப்பும் இல்லை என்று அர்த்தமா? என்னைப் போல் அவனுக்கு எந்த தாக்கமும் இல்லையா? என்னை நிஜமாவே வெறுத்து விட்டானா?’ என்று நினைத்த மாத்திரமே, கண்களில் நீர் பெருக நின்றாள்.

“இங்க இருக்கியா பிரஜி?” என அவளிடம், தான் பழைய வீட்டில் இருந்து, கொண்டு வந்த காய்கறிகளை கொடுக்க எண்ணி அழைத்து, அவளைத் தேடி, இருவருக்கும் நடுவில் வந்து நின்றார் சரஸ்.

பின் அவள் கலங்கியக் கண்ணோடு நிற்பதைப் பார்த்து, அவளுக்கு எதிரே சஞ்சீவ் நிற்கவும் “பிரஜி ஏன் மா, கண் கலங்குற? நல்ல நாள் அதுவுமா பொம்பளப் பிள்ளைங்க அழக்கூடாது மா. ஏன் என்ன அச்சு?” என்று அவளிடம் கேட்டு விட்டு, சஞ்சீவிடம் “ஏன் டா… நீ எதுவும் சொன்னியா அவள?” எனத் தன் மகனின் முன்கோபத்தை உணர்ந்து அவனிடம் திரும்பினார்.

அதற்குள் பிரஜி “இல்ல மா, நான் காலைல சாப்பிட வேண்டிய மாத்திர சாப்பிடலையா, அதான்… கேட்டார் மா” எனத் தன் மீது அன்போடு தான் இருக்கிறான் என்பது போல் காண்பித்து, தன் கணவனைக் காப்பாற்றினாள்.

ஆனால் அதற்குள் “ஏன்… சாப்பிட மறந்துட்டியா? இல்ல சாப்பிட வேணாம்னு இருந்துட்டியா? உனக்கென்ன அவ்வளவு மறதி? இங்க இருக்கா இல்ல அந்த வீட்ல இருக்கா மாத்திர?” எனப் பொரிந்தான். தன்னை அணைத்துக் கொண்டு நன்றாக தானே இருந்தாள், பின் எதற்கு கண்ணீரை வழிய விடுகிறாள் என்ற எரிச்சலில் தான் பொரிந்தான். மேலும் அதை தன் அன்னைப் பார்த்து கேட்குமாறு வைத்து கொண்டாளே என்ற கோபம் வேறு.

இதைக் கேட்ட பிரஜி ‘அவசரக்குடுக்கை, இவன காப்பாத்தணும்னு நினைச்சா, அவனே மாட்டிக்குவான் போல’ என்று எண்ணி உதட்டை கடித்து மௌனமாய் இருந்தாள்.

நல்ல வேளை இதையெல்லாம் ஆராயாத சரஸ் “இம்ச்… சரி விடு, இன்னிக்கு பால் காய்ச்ச வேண்டிய அவசரத்துல மறந்திருப்பா. அப்படி தான பிரஜி… சரி எங்கம்மா வச்சிருக்க? இன்னும் நேரமாகல, இப்ப சாப்பிட்டாப் போச்சு. உடனே இதுக்கு இவன் இவ்ளோ குதி குதிப்பான். வேற ஒன்னும் இல்ல பிரஜி… உன் மேல அவ்ளோ அக்கறையா இருக்கான்” என்று சிரித்தார். ஒரு வழியாய் மகனையும் மருமகளையும் சமாதானம் செய்த திருப்தியோடு காய்களைச் சமையல் மேடையில் வைத்து விட்டு, அவர் நகர்ந்தார்.

பிரஜீயோ ‘என் மீது அக்கறையா? இல்லை அவன் பிள்ளை மீது அக்கறையா? என்று அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்’ என்று எண்ணியவளிடம், “எங்கடி வச்சிருக்க?” என அதட்டினான்.

அவளோ ‘பெரிய மகாராஜா, எதுக்கெடுத்தாலும் அரட்ட வந்திருவான்’ என எண்ணி, வாயை சுழித்துக்கொண்டு “இங்க தான் இருக்கு, நானே எடுத்துக்குவேன்” என்று முன்னறைக்கு சென்று, தன் கைப்பையை எடுத்து மாத்திரையை எடுத்தாள்.

பின் சரஸ் வேண்டாம் என்று சொல்லியும், எளிமையாய் சமையல் செய்து முடித்தாள் பிரஜி. ஆண்கள் இருவரும் வந்திறங்கிய பொருட்களை உதவியாளர்களோடு, தூக்கிக் கொண்டு, சரஸ் சொன்ன இடங்களில் வைத்தனர். பின் சில பொருட்களை, சஞ்சீவ் எங்கு வைப்பது என ஆலோசனை சொல்ல, அவன் சொல்வதும் சரி தான் என ரங்கன் சொல்ல, சரஸ் அவர்களின் ஒற்றுமையைப் பார்த்து சந்தோஷத்தில் வாயடைத்து நின்றார்.

மேலும் ரங்கன் பறவைகளின் கூண்டை வரவேற்பறையில் ஜென்னலோரம் வைக்க சொல்லி, “அதுங்களுக்கும் நல்ல காற்றோட்டமா இருக்கும். என்ன பிரஜி?” என தன் மருமகளிடம் அபிப்பிராயம் கேட்டார்.

அவளும் புன்னைகையோடு “ஆமா மாமா” என்றாள். சஞ்சீவ் இதையெல்லாம் கவனிக்கவில்லை. ஆனால் சரஸ் தன் கணவனின் மாற்றத்தை குறித்துக் கொண்டே வந்தார்.

இந்தப் பறவைகள் கூட ரங்கன் மனதை மாற்றி விட்டன என்றே சொல்லலாம். காலையில் எழுந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டே, “கீச் கீச்” எனக் கத்தும் அவைகளை ஓரக்கண்ணால் ரசிப்பார்.

பிரஜி அவற்றுக்கு உணவு வைக்கும் போது, வேடிக்கைப் பார்ப்பார். ஒரு நாள் அவளிடம் “இங்க கொடு பிரஜி, நான் சுத்தம் பண்ணி வைக்கிறேன் மா” என உணவு தட்டை வாங்கிக், கூண்டை சுத்தம் செய்து வைத்தார். மேலும் கடைக்கு சென்றால், கொத்துமல்லித் தழை வாங்கி அவைகளுக்கு போடுவார்.

யாரேனும் சஞ்சீவ் திருமணம் பற்றிக் கேட்டால் மட்டுமே, கோபமாய் வந்து, தன் மனைவியை இரண்டு திட்டு திட்டுவார். மற்றப்படி சரஸையும் ஒன்றும் சொல்ல மாட்டார், பிரஜீயையும் எதுவும் சொல்ல மாட்டார். அவர் தான் பார்க்கிறாரே, பிரஜி தன் மனைவியிடம் நடந்துக் கொள்ளும் பாங்கை, ஒரு மகளை போல, அவர் மீது பாசம் கொள்ளும் விதத்தில் மனம் குளிர்ந்துப் போவார்.

அன்று மதிய உணவு வேளையில், பிரஜி வேண்டும் என்றே, சஞ்சீவுக்கு நிறைய சாதம், நிறைய காய்களை பரிமாறி, அவனைத் திணற திணற சாப்பிட வைத்தாள். மேலும் “நல்லா சாப்பிடுங்க” எனச் சுருதி வேறு சேர்த்தாள். வேண்டும் என்றே செய்கிறாள் என்று புரிந்துக் கொண்டவனோ, தன் பெற்றோர் முன்னிலையில், ஒன்றும் சொல்ல முடியாமல் சாப்பிட்டான்.

மேலும் அவள் மோர் சாதத்திற்கு, நிறைய சாதம் போடப் போக, அவனோ பயந்து “எனக்கு வேணாம், சளி பிடிச்சிருக்கு” என்று சொல்ல, பிரஜீயோ “இங்க பாருங்க மா, சாப்பிட மாட்டேங்குறாரு” என்று புகார் சொல்ல, சரஸும் “அது அங்க குளிரா இருக்கும். இங்க அடிக்கிற வெயிலுக்கு ஒன்னும் பண்ணாது. சாப்பிடு” என்று அவரும் பாசத்தைப் பொழிய, அவனும் திணறி தான் போனான்.

மேலும் இரண்டு நாட்களும், அவள் இப்படியே அவனைக் கொடுமைப் படுத்தி விட்டு, அவனிடம் தனியே மாட்டிக் கொள்ளாமல் தப்பித்து கொண்டாள். இரவு அவன் வரும் முன், சீக்கிரமே தூங்கி விடுவாள். சரஸ் தான் அவனுக்கு இரவு உணவை பரிமாறுவார்.

ஞாயிறன்று மீண்டும் அவன் ஊருக்கு கிளம்பி விட்டு, வரும் வியாழன், திருமணத்திற்கும் சேர்த்து பத்து நாட்கள் விடுமுறை எடுத்து விட்டு, வருவதாக சொல்லி சென்றான். அவன் செல்லும் போது, அவன் நண்பர்களுக்கு, தெரிந்தவர்களுக்கு பத்திரிக்கைக் கொடுப்பதற்கு என  ஐம்பது பத்திரிக்கை கொடுத்து விட்டார் ரங்கன். அந்த பத்திரிக்கையில் இவர்களுக்கும், அதாவது சஞ்சீவ் – பிரஜீக்கும் வரவேற்பு விழா எடுத்திருப்பது தெரிய, அவன் அதைப் பற்றி சரஸிடம் விசாரித்தான்.

அதற்கு ரங்கன் “பிறகு கல்யாணத்தன்னைக்கு, உன்னையும் அந்தப் பொண்ணையும் என்னன்னு சொல்லி அறிமுகப் படுத்தறது? அதுக்கு தான், மதனுக்கு வரவேற்பு வைக்கும் போதே உனக்கும் சேர்த்து வச்சாச்சு. கல்யாணம் தான் உங்க இஷ்டத்துக்கு நடத்திக்கிட்டீங்க இப்பவாது நாங்க சொல்றத கேளுங்க” என்று அவனிடம் முடித்து விட்டு, சரஸிடம் “அவனுக்கு விருப்பம் இருக்கோ இல்லையோ, அன்னிக்கு ஒரு நாள் ஒரு பொழுது, அவன் பொண்டாட்டியோட என் சொந்தப்பந்தம் முன்னாடி, ஒரு மூனு மணி நேரம் நிக்க சொல்லிடு, ஏன் பிரஜி அவன்ட்ட சொல்லலையா?” என்று முடித்துக் கொண்டு வெளியேறினார்.

சஞ்சீவும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் வாயை மூடிக் கொண்டு கிளம்பினான். பிரஜீக்கு இதை பற்றி முன்பே சரஸ் சொல்லி, அவளிடம் அபிப்பிராயம் கேட்ட பின் தான் முடிவு செய்தனர். அப்படியே இதை சஞ்சீவிடம் சொல்லும் பொறுப்பை அவளிடமே ஒப்படைத்து இருந்தனர், ஏனென்றால் அவர்கள் சொந்தங்களுக்கு பத்திரிக்கை வைக்கும் வேலையில் மூழ்கி இருந்தனர்.

ஆனால் பிரஜி அவனைப் பழி வாங்கவே இதை சொல்லாமல் விட்டாள். சஞ்சீவும் தன் மனைவியை அவர்கள் முன் மாட்டி விட வேண்டாம் என்று மேற்கொண்டு எதுவும் கேளாமல் கிளம்பி விட்டான்.

ஆனால் தற்போது பிரஜீக்கு இதைக் கேட்டதில் இருந்து, மனதில் சஞ்சலம் உண்டாயிற்று. அவளுக்கு ஏற்கனவே விஷயம் தெரியும் என்றாலும், நாட்கள் நெருங்க நெருங்க, என்னவோ அவளுக்கு இப்போது தான் புதிதாக திருமணம் நடக்கப்போவது போல் கொஞ்சம் வெட்கமாக இருந்தாலும், ஏனோ ஒரு படபடப்பு, ஒரு தவிப்பு என முரண்பாடான எண்ணங்களே உருவானது. அவர்கள் வரவேற்பு விழாவை எண்ணி ஒரு பக்கம் சந்தோஷமாய் இருந்தாலும், மறுப்பக்கம் வருத்தமாய் இருந்தாள். இதை கவனித்த சரஸ், “என்ன பிரஜீமா, எதையோ மனசுல போட்டு குழப்பிட்டு இருக்க போல?” என்று சரியாய் கேட்க,

அவளோ “இல்லமா … அது…” என திக்க, “என்னமா குழப்பம், இந்த மாதிரி சமயத்துல எத நினைச்சும் வருத்தப்படக் கூடாது, அது வயித்துல வளர்ற குழந்தைய  பாதிக்கும்” என்று விஞ்ஞானப் பூர்வமாய் சொன்னவர்,

மேலும் அவள் தலையை வருடி, “கவலைப்படாத எல்லாம் நல்லப்படியா நடக்கும் டா” எனச் சொல்ல, அவளுக்கும் அந்த ஆறுதல் தேவையாய் பட, அப்படியே அவர் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள்.

அவளுக்கு என்ன வருத்தம் என்று சரஸுக்குப் புரிந்தது, ஒரு பெண்ணின் மனதை, அதுவும் இந்த மாதிரி நேரங்களில் என்ன எதிர்ப்பார்க்கும் என்று, அவருக்கு தெரியாதா என்ன? அவள் உறங்கி விட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு, உடனே தன் மகனுக்கு போன் போட்டார்.

பின் பிரஜி எதிர்ப்பார்த்த, வியாழக் கிழமையும் வந்தது. காலையில் எழுந்ததில் இருந்து, எந்த வேலை செய்தாலும், தன் கணவன் வருகிறானா என்று வாசலை, வாசலைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். பெரிய படுக்கை அறை மதனுக்கும், தற்சமயம் சிறிய படுக்கை அறையை, பிரஜீக்கு கொடுத்திருந்தார் சரஸ். ஆம், தற்சமயம் தான், இப்போது மேலே, மாடியில் விஸ்தாரமாக ஒரு அறையை, வீட்டு உரிமையாளரின் அனுமதியோடு கட்டிக்கொண்டு இருந்தனர்.

இன்று சஞ்சீவ் வந்தவுடன், முகூர்த்தப் புடவை எடுக்க வேண்டும் என்று சரஸ் பிரஜீயிடம், சொல்லியிருந்தார். மதன் கூட நேற்றே வந்து விட்டான். காலை உணவு நேரமும் வந்து விட்டது, ஆனால் சஞ்சீவை தான் காணவில்லை.

பிரஜி இட்லி சுட்டெடுத்து விட்டு, தோசை வார்க்க, சரஸ், வரவேற்பறையில் ரங்கனுக்கும், மதனுக்கும் வைத்துக் கொண்டிருந்தார். பிரஜி தோசையைச் சுட்டுக் கொண்டிருந்தாலும், கவனமெல்லாம் வாசலில் இரும்பு கதவு திறக்கும் சத்தம் எதுவும் கேட்கிறதா, எனக் காதை தீட்டிக் கவனத்தை அதில் செலுத்தினாள். ஆனால் சரஸ் கதவை திறந்து வைத்திருந்தது, பாவம் அவளுக்கு தெரியவில்லை.

அதனால் சஞ்சீவ் உள்ளே வந்து, தான் கொண்டு வந்த பையை இறக்க, அப்போது தான் தோசையை, சரஸிடம் கொடுத்து விட்டுத்  திரும்பியவள், அவனைப் பார்த்ததும் பின்னே சாய்ந்து வரவேற்பறையை எட்டிப் பார்த்து விட்டு, அப்படியே நின்றாள்.

இத்தனை நாளும் எப்போது வியாழக்கிழமை வரும், அவன் எப்போது வருவான் என்று இருந்தவள், இப்போது அவனை பார்த்ததும் அவளுள்ளே புதிதாய் ஒரு வெட்கம் எட்டிப் பார்க்கவும், தன்னை மறைத்துக் கொண்டாள். தன் நிலையை எண்ணி, அவளுக்கே புரியாத ஒரு இன்பாமான லயிப்பில் சந்தோசமாய் இருந்தாள்.

அவன் தன்னை எங்கே என்று கேட்பான் என்றெண்ணி, அவன் கேட்கும் தருணத்திற்காக அவள் பணி செய்துக் கொண்டே காத்திருக்க, ஆனால் அவனோ “மா… நான் குளிச்சிட்டு வந்திர்றேன், சாப்பாடு எடுத்து வை மா” என்று துண்டெடுத்துக் கொண்டு குளியலறைக்கு சென்று விட்டான்.

உள்ளே ஷவரை திறந்து விட்டு நின்றவன், ‘இத்தனை நாளுக்கு அப்புறம் வந்திருக்கேனே, எட்டிப்பார்ப்போம், அட்லீஸ்ட் அம்மவுக்காகவாது வாங்கன்னு கேட்போம் நினைக்கிறாளா? அப்படி என்ன புருஷன் மேல அவ்ளோ கோபம்? திமிர்… இருக்கட்டும்… அப்படியே இருக்கட்டும்…’ என எண்ணி எரிச்சலாகி, தன் எரிச்சல் தீரும் மட்டும் குளித்து விட்டு வந்தான்.

துண்டால் தலை துவட்டிக் கொண்டே, “அம்மா… டிபன் எடுத்து வைக்கிறியா? பிரஜி எங்…” என  கேட்டுக்கொண்டே சமையலறை உள்ளே நுழைந்தவன் மீது, எதையோ வெளியே வைக்க வந்த பிரஜி அவன் வருவதை பாராமல், அவன் மீது மோதி நின்றாள்.

அவனோ அவளின் முழங்கையை பற்றியவாறு அவளைப் பார்க்க, அவளும் தன்னை மறந்து அவனைப் பார்க்க, ஏனோ இருவருக்கும் பிரஜி அன்று ஒரு நாள் அவனுக்குத் தலைத் துவட்டி விட்டது ஞாபகம் வந்தது. அதன் பின் நடந்தவை, அவன் தன்னை தவறாக நினைத்து உறவாடியது எல்லாம் அவளின் மூளையில் ஞாபகம் வர, அவன் பார்வையைப் பார்த்தவள் “இம்ஹும்… இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல” என்று அவன் பார்வையைப் புரிந்து, நொடித்துக் கொண்டு, தன்னை விடுவித்துக் கொண்டு வெளியே சென்றாள்.

‘பார்… எவ்ளோ திமிர்னு…’ என்று மனதில் நினைத்துக் கொண்டு அவனும் அமைதியாய் நகர்ந்து விட்டான்.

 

மாயம் தொடரும்…..

error: Content is protected !!