இது என்ன மாயம் 35

இது என்ன மாயம் 35

பகுதி 35

காதலே இல்லை என்று சொல்பவளும் நீ

ஆனால் தற்போது காதல் சடுகுடு ஆடுகிறாய் நீ

நானும் உன்னுடன் சேர்ந்து விளையாட

நினைக்கையில்……

என்னை மட்டும் ஆட்டத்தில் சேர்க்காமல்

ஆட்டத்தின் நாயகனாயும் இல்லாமல்

ஆட்டத்தின் இலக்காகவே

குறி வைக்கிறாய் என்னை…

அது ஏனோ?

சஞ்சீவ் சாப்பிட்டு முடித்ததும், ஒரு வழியாய் அனைவரும் மதனின் காரில் ஜவுளிக் கடைக்கு கிளம்பினர். முன் இருக்கையில் ரங்கனும், ஓட்டுனர் இருக்கையில் மதனும் இருக்க, பின் புறம், பிரஜி, சஞ்சீவ், சரஸ் என அமர்ந்து சென்றனர்.

பிரஜி கண்ணை மூடி காலையில், சஞ்சீவ் தன் மீது மோதிய போது, அவன், பனியன் அணிந்த தோளில் துண்டுடனும், இடுப்பில் நைட் பாண்ட்டும் அணிந்து நின்ற அழகை ரீவைண்ட் செய்து, செய்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அருகே இருந்த இருவரும், அவள் உறங்குகிறாள் என்று எண்ணிக் கொண்டனர்.

ஜவுளிக் கடையில், ரங்கனின் தங்கைக் குடும்பம், பெரிதாக யாரும் வரவில்லை, தங்கை லதாவும், அவர் கணவர் சேகரும் நின்றிருக்க, அவர்களுக்கு, தன் மருமகளை சரஸ் அறிமுகப் படுத்தினார். பிரஜீயும் சங்கடப்பட்டு புன்னகைத்தாலும், அவள் சங்கடப்படும் படி அவர்கள் இருவரும் பேசவும் இல்லை, இகழ்ச்சியாய் பார்க்கவும் இல்லை.

நாகரிகமாக ஒரு புன்னகையைச் சிந்தி விட்டு, உடனே அன்பொழுக பேசாமல் “ஓ… சரி அண்ணி, நாம புடவை எடுக்க போலாமா?” என லதா உள்ளே நுழைந்தார். பிரஜி அவர்களை எதுவும் தவறாக எண்ணவில்லை.

பெண்கள் உள்ளே நுழைய, ரங்கன் “நீங்க போய் எடுங்க, நாங்க ஒரு டீ குடிச்சிட்டு வர்றோம்” என்று கழன்று கொள்ள, சேகரும் அவரோடு சேர்ந்துக் கொண்டார்.

பின் வேறு வழியில்லாமல், மதனும், சஞ்சீவும் அவர்களோடு உள்ளே நுழைந்தனர். பெண்கள் முன்னே முகூர்த்தப் புடவைகள் இருந்தப் பக்கம் நடக்க, சஞ்சீவ் “மதன், பணம் எதுவும் தேவையா? தேவைன்னா சொல்லுடா, தரேன். என்னிக்கு மாடி போஷன் முடிப்பாங்க? அவங்களுக்கு செட்டில்மெண்ட் பண்ணிட்டியா?” என அவர்கள் இருவரும், பணம் சம்பந்தமான வரவு, செலவுகளை அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து, பேசிக் கொண்டிருக்க, மேலும் மண்டபம், சமையல் வேலை, வீட்டில் இருந்து வேனில் செல்வதா? இல்லை பேருந்து பிடிப்பதா? என அவர்களின் உரையாடல் வளர்ந்தது.

சிறிது நேரம் சென்றதும், பிரஜி தான், இரண்டு மூன்று சேலைகளைத் தூக்கிக் கொண்டு, அவர்களை நோக்கி வந்து, “மதன் மாமா, இந்த கலர்லாம், பிடிச்சிருக்கா? புஷ்பாக்கு நல்லா இருக்குமான்னு? அம்மா உங்கக்கிட்டக் கேட்கச் சொன்னாங்க” எனச் சரஸ் கேட்காததையும் குறும்பாகக் கேட்டு சிரித்தாள்.

மதனும் “நீயே செலக்ட் பண்ணு பிரஜி, நீ எந்த கலர் எடுத்தாலும், நல்லா இருக்கும்,  இதெல்லாம் எனக்கென்ன தெரியும்” என அவனும் சிரித்துக் கொண்டே கூற,

“இம்… அதெல்லாம் சரி மாமா, இருந்தாலும் உங்க வைஃப்புக்கு நீங்க தான் செலக்ட் பண்ணனும், ஏன்னா அவங்களுக்கு எந்த கலர் நல்லா இருக்கும்னு உங்களுக்கு தான தெரியும்… இல்லைங்க… நீங்களும் சொல்லுங்க மாமாக்கு” என்று தன் கணவனையும் துணைக்கு இழுத்தாள்.

அவனோ “ஆமா மதன், இதுலாம் லைப்ல ஒரு வாட்டி தான் டா நடக்கும்… இப்போ மட்டும் தான் நாம செலக்ட் பண்ண முடியும், அப்புறம் அவங்களே எடுத்துப்பாங்க, நாம பணம் கொடுக்குற ஏ.டி.ம் மிஷன்னா தான் டா நிக்கணும்” என்று அவனும் கேலிப் பேசி, மேலும் “எனக்கெல்லாம் அந்த கொடுப்பினைக் கிடைக்கல, நீயாவது அனுபவி” என்று அவன் எதார்த்தமாய் தான் கூறினான். ஆனால் பிரஜீக்கு முகம் சுருங்கி விட்டது.

உதட்டை இறுக்கமாய் வைத்து, தவறு செய்தவள் போல, தலைக் குனிந்து வாடி நின்றவளைப் பார்த்த மதன், “டேய்… ஏன்டா இப்படி பேசுற, உங்களுக்கும் ரிஷப்ஷனுக்கு டிரஸ் எல்லாம் எடுக்கணும்… வா… வந்து பிரஜீக்கு நீ செலக்ட் பண்ணு” என அவனையும் எழுப்பி, கைப் பிடித்து தன்னோடு சேர்த்து இழுத்துக் கொண்டு சென்றான்.

பின்னர் லதா, சரஸை அம்மா, அம்மா என பாசமழை பொழிந்து, தன்னிடமும் மரியாதையாய் தன்மையாய் பேசிப் பழகுவதை பார்த்தவர், மனதுள் ‘இம்… காதலிச்சு கல்யாணம் பண்ணாலும் நல்ல பொண்ணா தான் இருப்பா போல…’ என எண்ணிக் கொண்டார்.

பின் ஜவுளியை முடித்து, சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு கிளம்ப, ரங்கன், தன் தங்கையையும், சேகரையும் அவர்களோடு அழைத்து செல்லலாம் என முடிவு செய்து ஒரு ஆட்டோவைத் தேட, சஞ்சீவ் “அம்மா… நாங்க இரண்டு பேரும், இங்க ஒரு கடைக்கு போகணும்… போயிட்டு வர்றோம், மாமா நீங்க வீட்ல இருங்க, ஒரு… ஒரு மணிநேரத்துல வந்திர்றோம்” என்று பிரஜீயை அழைத்துக் கொண்டு, கிளம்பினான். அவளும் அவர்களிடம் விடைப்பெற்று விட்டு, அவனோடுக் கிளம்பினாள்.

முதலில் சஞ்சீவ், அவளை ஒரு நகைக் கடைக்கு அழைத்து சென்று, அவளுக்கு ஒரு ஆரமும், கல் வைத்த நெக்லஸ், தோடு, மோதிரம் என ஒரு செட்டும் வாங்கினான். பிரஜி “எதுக்குங்க?… வேண்டாம் எனக்கு” என மறுக்க, அவனோ கோபமாய் “அப்போ ரிசப்ஷனுக்கு வெறும் கழுத்தோடு நின்னு, என் மானத்த வாங்கப் போறியா?” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் கடிந்து கூறினான். பிரஜி அதன் பின் எதற்கும் வாயைத் திறக்கவில்லை.

மேலும் சாதாரணமாக சில வளையல், தோடு என வாங்க போக, அவளோ “வேண்டாம்ங்க, இதுவே போதும், அம்மா வேற சொந்தமா வீட்ட மாத்தணும் சொல்லிட்டு இருக்காங்க. இப்ப போய் நகைல இவ்ளோ செலவு பண்ண வேணாம். அதான் ரிசப்ஷனுக்கு வாங்கியாச்சுல, நான் வேணா ஒன் கிராம் கோல்ட்ல வாங்கிக்கிறேன்” என அவனைத் தடுத்து விட்டாள். அவனும் அவள் சொல்வது சரியெனப் பட, அவள் இஷடத்திற்கு விட்டு விட்டான். அவள் மேலும், சில பொருட்கள் குறைந்த விலையில் வாங்கினாள், சஞ்சீவ் தான் அதற்கும் பணம் கட்டினான்.

அவள் வேலைக்கு சென்ற போது, வாங்கிய சம்பளமும், அவள் கணக்கில் ஏற்கனவே அவள் சேமித்து வைத்திருந்த பணமும் கணிசமாய் ஒரு தொகை இருந்தது. அதில் இருந்து எடுத்துக் கொடுத்தால், இவன் மேலும் குதிப்பான் என்று அவனையே பணம் கட்ட வைத்தாள். ஆனால் அதை எடுத்து, தன் அத்தையிடம் அவர் மறுக்க மறுக்க, அவரைப் பேச்சிலேயே, கரைத்துக் கொடுத்து விட்டாள்.

பின் அவள் களைப்பாய் தெரியவும், பக்கத்தில் இருந்த பழசாறு கடைக்கு அழைத்துச் சென்று, ஒரு மேஜையில் அமர்ந்தனர். அப்போது “சஞ்சீவ்…” என அழைத்துக் கொண்டே அவர்களை நோக்கி ரதி வந்தாள். பிரஜி ‘இவளா… இங்கேயும்… வால் பிடித்துக் கொண்டே வந்து விட்டாளா? இந்தக் கூட்டத்திலேயும்… எப்படி தான் இவனைக் கண்டுப்பிடிப்பாளோ… தெரியவில்லை…’ என்று எண்ணிக் கொண்டிருக்க…

அதற்குள் அவர்கள் இருவரும் பேசி முடித்திருக்க, “கண்டிப்பா வரேன் சஞ்சீவ், அதுக்கு முன்னாடி எங்க வீட்டுக்கு நீங்க கண்டிப்பா வரணும்” என்று அன்பு… வேண்டுக்கோள் வைக்க, பிரஜீயோ “இம்க்கும்…” என எண்ண, சஞ்சீவும் “கண்டிப்பா வர்றேன் ரதி” என அவள் கொடுத்த முகவரி அட்டையை, தன் பர்சில் வைத்துக் கொண்டான்.

பிரஜீயோ ‘என்னது… ரதியா? இது எப்போ நடந்துச்சு? அடக் கடவுளே!’ என்று எண்ணும் போதே “பிரஜி நீங்களும் கண்டிப்பா வரணும் நான் எதிர்ப்பார்த்துட்டு இருப்பேன். டேக் கேர்” என்று கூறி விடைப்பெற்றாள். பிரஜீயும் “சரி டாக்டர்” எனப் புன்னகைத்தாள்.

ஒரு வாடகைக் கார் பிடித்து வீட்டிற்கு சென்றனர். பிரஜி, லதா கிளம்பும் போது, இப்போது கடையில் ஒன்கிராம் தங்கத்தில் வாங்கியக் கல் வளையலைப் புஷ்பாவுக்கு அன்பளிப்பாகத் தரும் படி சொல்லி கொடுத்து விட்டாள். அவர் கூட “எதுக்கும்மா இருக்கட்டும்” என்று மறுக்க, “இல்ல… அம்மா… அத்த…” என அவள் குழம்ப, சரஸ் தான் “சித்தின்னு கூப்பிடனும் பிரஜி” என உதவ,

“சரி மா, இருக்கட்டும் சித்தி, என் தங்கை புஷ்பாவுக்கு நான் வாங்கி தரக் கூடாதா? எனக்கு அக்கா தங்கச்சி இல்லையேன்னு கவலைப்பட்டேன். ஆனா இப்ப அந்தக் கவலை இல்லை” என்று கூறினாள்.

லதாவும் சரியென வாங்கிக் கொண்டு “ஆமா பிரஜி, அது என்ன அண்ணிய மட்டும், அம்மான்னு சொல்ற, எங்கண்ணன மட்டும் மாமா சொல்ற? ஒன்னு அண்ணிய அத்தைன்னு சொல்லு, இல்ல அண்ணன அப்பான்னு சொல்லு, நீ வேற உறவு முறைய மாத்திராத மா” எனப் பேசிப் பெண்கள் சிரிக்க, “சரி சித்தி, இனி நான் மாமாவ அப்பான்னு மாத்திக் கூப்பிடுறேன்” என்று உடனே கீழ் படிந்தாள்.

லதா “நான் கூட பயந்தேன், நீ எப்படியோ, என்னவோன்னு, ஆனா நீ ரொம்ப நல்ல பொண்ணுமா” என்று கூறி முடிக்க, அதற்குள் சஞ்சீவ் “அது எப்படி அத்த உடனே சொல்றீங்க? இரண்டு மூனு நாள் இருந்து பாருங்க. அப்போ தான் தெரியும், அவ பண்ற கொடுமைய” என்று கேலி போல் சொல்ல,

சரஸ் “நீ சும்மா இருக்க மாட்டியா சஞ்சீ… அவனுக்கு வேற வேலை இல்ல லதா, எப்போ பாரு என் மருமகள குறை சொல்லிட்டே இருப்பான்” என்று லதாவிடம் பிரஜீக்கு பரிந்துக் கொண்டு வந்தார். பிரஜி அவனைப் பார்த்து ‘இரு இரு…உனக்கு இருக்கு, கொடுமை பண்றேன்னா நான்…’ என மனதுக்குள் எண்ணி, யாரும் பார்க்காத போது, அவனைப் பார்த்து வாயைச் சுழித்தாள்.

“எங்க அண்ணி கொடுத்து வச்சவங்க தான். ஆனா, எங்க அண்ணியையும் சும்மா சொல்லக் கூடாது, தங்கமான குணம். அதான் நீயும் தங்கமான பொண்ணா அவங்களுக்கு கிடைச்சிருக்க” என்று தன் அண்ணியையும் புகழ, “ஹே சும்மா இரு லதா, உனக்கும் வேற வேலை இல்ல, எப்பப் பார் இப்படியே சொல்லு” எனச் சொன்னார்.

“என்னம்மா இவ்ளோ வெட்கப்படுறீங்க? மாமா கூட இங்க இல்லையே” என்று அவள் கேலி செய்ய, லதா சிரிக்க, சரஸ் “ஏய் பிரஜி… உன்ன…” அதற்கும் அவள் சிரித்தாள். பின்னர் லதா “சரி அண்ணி, நாங்க கிளம்புறோம், பிரஜி மா, உடம்ப பார்த்துக்கோ மா” என்று கிளம்பினார்கள்.

அடுத்து வந்த நாட்களில் கல்யாண பணிகள் அவர்களை தொடர, பிரஜி சஞ்சீவை, முன் போலவே சாப்பாடு விஷயத்தில் நன்றாக கவனித்தாள்.

அந்த அன்புத் தொல்லைத் தாங்காமல், ஒரு நாள் அவள், அவனிடம் அகப்பட, அவள் முழங்கையை பற்றி “ஏய்… என்னடி… சும்மா இருக்க மாட்டியா?” என அவன் கடுப்பாய் கேட்க, ஆனால் அவளோ மனதுள் சிரித்துக் கொண்டு “என்ன சொல்றீங்க? நான் சும்மா தான இருக்கேன்” என்று ஒன்றும் தெரியாத அப்பாவியாய் பதில் சொல்ல, “ஹேய்… வேணாம்டி நடிக்காத…” என்று பற்களைக் கடித்து வாய் கூற, அவன் கைகளோ அவள் கைகளை இறுக்கிப் பிடித்தது.

“ஐயோ… அம்மா… இங்க வந்து என்ன காப்பாத்துங்க” என்று கத்த, அவனோ அவள் கைகளை விட்டு விட, வரவேற்பறையில் தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருந்த சரஸ், “என்னம்மா…” என்று குரல் கொடுக்க, “ஏய்… ஏன்டி… இப்பக் கத்துற” என்று சொல்லி விட்டு, “ஒன்னும் இல்லமா, அவ சும்மா கூப்பிடுறா” என்று பதில் சொல்லும் போதே, சரஸ் அவர்கள் அறைக்குள் வந்து விட, “என்னமா?” என்று பிரஜீயிடம் கேட்டார்.

“என்ன திட்டிட்டே இருக்கார் மா, நீங்களே கேளுங்க மா” என அவள் அவனைப் போட்டுக் கொடுக்க, “ஏன்டா… திட்டுற அவள… பாவம் பிள்ளைத்தாச்சி பொண்ண திட்டக் கூடாது பா” என்று எடுத்துரைக்க…

“ஐயோ அம்மா… அவ சும்மா சொல்றாமா” என்றான் சஞ்சீவ். உடனே பிரஜி பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு, “அப்போ இருந்து அவர் சும்மா சும்மா ஏதோ சொல்றார் மா” என அவனைக் கேலி செய்தாள்.

சஞ்சீவோ பல்லைக் கடித்து கொண்டு அங்கிருந்து வெளியேறினான். பாவம் அவனால் வேறு என்ன செய்ய முடியும்!!! பிரஜி உதட்டில் புன்னகையுடன் இப்படி, அவனைக் கடுப்பேற்றும் விளையாட்டை செவ்வனே அழகாக ஆரம்பித்திருந்தாள்.

அப்படி தான் ஒரு நாள், வரவேற்பறையில் இருந்த மெத்திருக்கையில் அமர்ந்திருந்தவன் அருகில் போய், வேண்டுமென்றே இடித்து கொண்டு அமர்ந்தாள். அவனும் தள்ளி அமர, அவளும் நகர்ந்தாள். அவள் உடல் நிலையை மனதில் கொண்டு, அவனால் அவளைத் தள்ளவும் முடியவில்லை, “தள்ளிப் போ” என்று கூறவும் முடியாமல் பல்லைக் கடித்து கொண்டிருந்தான். ஏனென்றால், அவர்களுக்கு கிளைப் பக்கமாய் சரஸ் நாற்காலியில் அமர்ந்து தொலைக்காட்சிப் பார்த்து கொண்டிருந்தார்.

ஆனால் அந்த இரண்டையும் செய்ய முடியாமல் இருந்தாலும், கண்களால் அவளை முறைத்தான். அவளின் அருகாமை, அவள் மேல் இருந்து வந்த, சுகந்தமான நறுமணம், அவனை ஏதோ செய்ய, பொறுக்க முடியாமல் “ஹே… வேணாம்டி” என அவள் காதில் குனிந்து எச்சரிக்கை விடுத்தான்.

ஆனால் அவளோ “என்னங்க… என்ன சொன்னீங்க?” எனச் சத்தமாய் கேட்டுக் கொண்டே, தன் காதை அவன் அருகே, இன்னும் நெருக்கமாய் கொண்டு செல்ல, அதில் சரஸ் கலைந்து திரும்பினார்.

உடனே அவன் சட்டென்று எழுந்து “இல்ல… தண்ணி கேட்டேன்” என்று சமாளித்து விட, திரும்பி பார்த்த சரஸோ “நீ உட்காரு, நான் கொண்டு வரேன்” என்று சமயலறைக்கு சென்றார்.

அந்த இடைப்பட்டத் தருணத்தில், “நைட் நீ என் கூட தான இருப்ப? அத… ஞாபகம்… வச்சுக்கிட்டு… உன் வால் தனத்த பண்ணு…” என்று அவளருகே குனிந்து, அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் மிரட்டினான். தண்ணீர் குடித்தப் பின் அவனும் வெளியே செல்ல, பிரஜி வாயடைத்து போய் அமர்ந்திருந்தாள்.

அடுத்த நாள், சஞ்சீவ் சொன்னது போல்… தன் வால்தனத்தைக் கொஞ்சம் சுருட்டி வைத்தாள். ஆம், பிரஜி பயந்து விட்டாள் தான். அவளின் வீரம் எல்லாம், நாலு பேர் மத்தியில், அவனைச் சீண்டி வம்பிழுப்பது வரை தான். அதுவும் மற்றவர்களுக்கு தெரியாமல், அவனுக்கு மட்டும் புரியும்படி சீண்டுவாள். ஆனால், அவன் சொல்லிச் சென்றது போல், அவனிடம் தனியாக… அதுவும் இரவில்… மாட்டிக் கொள்ள, அவள் விரும்பவில்லை. அதனால் அமைதி காத்தாள்.

ஆனால் நம் சஞ்சீவோ, ‘பரவாயில்லையே… நாம் மிரட்டியது வேலை செய்கிறது போல’ என எண்ணினாலும், அவள் அவனைச் சீண்டாமல், அமைதியாய் இருப்பது அவனுக்கு என்னவோ போல் இருந்தது. அடுத்த நாளும் அவள் அமைதியாகவே இருக்க, வீட்டில் இருந்த சஞ்சீவ், மேலே இன்று கான்கிரிட் போடவும், அதை மேற்பார்வையிட சென்று விட்டான்.

சிறிது நேரத்தில் வேலைச் செய்பவர், கீழே வந்து சரஸிடம், குடி நீர் கேட்க, அவரும் தண்ணீர் பிடித்து தந்து விட்டு, வேலையைப் பற்றி விசாரித்தார். இதைப் பார்த்த பிரஜி, “அம்மா… நானும் போய் பார்த்திட்டு வரேன் மா. நான் வேலை நடந்ததுல இருந்து பார்க்கவே இல்ல” என சிறுப்பிள்ளையாய் கேட்க, சரியென அவரும் “பார்த்து… போ மா” என அனுப்பி விட்டார்.

அப்பொழுது மாடி ஏறியவள், சல்லிக் கற்கள், ஆங்காங்கே படிகளில் கிடக்க, அதைக் கையில் எடுத்து, ஒரு கையில் இருந்து மற்ற கைக்கு, மாற்றி மாற்றி விளையாடிக் கொண்டே சென்றவள் கண்ணில், சஞ்சீவ் பட்டான்.

அதுவும் கையைக் கட்டிக் கொண்டு, எதையோ தீவிரமாய் சிந்தனைச் செய்பவன் போல, அவளுக்கு முதுகு காட்டி நின்றிருந்தான். ‘ம்… என்ன மிரட்டுறது மிரட்டி விட்டு, இப்போ அப்படி என்ன தீவிரமா யோசிக்கிறான்? ஒரு வேளை அவன் அனுப்புன ராக்கெட் கீழ விழுந்திருச்சோ…’ என அவனை மனதின் உள்ளே நக்கல் செய்து விட்டு, தன் விளையாட்டை ஆட எண்ணினாள்.

கையில் இருந்த ஒரு கல்லை அவன் மீது எறிந்துவிட்டு, படியின் தொடக்கத்தில் இருந்த வராந்தாவில், மாடிக் கதவின் சுவற்றில், தன்னை மறைத்துக் கொண்டாள். கல்லால் அடிப்பட்டவனோ, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, ‘நம் பிரமை’ என எண்ணினான்.

அவன் தேடுவதை ஒளிந்திருந்து பார்த்தவளோ, முகமெல்லாம் சிரிப்பாய் இருக்க, மனதுள் கல்லூரியில், அவனுக்கே தெரியாமல் ஒளிந்திருந்து, அவனைப் பார்த்த நினைவுகள் மேலெழும்பி மனத் திரையில் படமாய் ஓட, மேலும் குஷியானாள்.

மேலும் இரண்டு கற்களை, அடுத்தடுத்து அவன் மீது எறிய, இந்த தடவை, சுதாரித்த சஞ்சீவ், தன் மீது தான் யாரோ கல் எறிகிறார்கள் என மீண்டும் சுற்றும் முற்றும் பார்த்தான். அப்படியே நகர்ந்து மாடி சுவற்றை ஒட்டி கீழே எட்டிப் பார்த்தான். அப்போது மாடி கதவிற்கும் சுவற்றுக்கும் இடைவெளியில் பிரஜீயின் சேலை, அவளைக் காட்டிக் கொடுத்து விட, “இவ வேலை தானா?” என எண்ணியவன், அங்கு வேலை செய்பவர்களை பார்த்தான். அவர்கள் கான்கிரிட் போடுவதில் மும்பரமாய், கான்கிரிட் கலவைத் தட்டை வேகவேகமாக கை மாற்றி, வேலை செய்வதில் கவனமாய் இருந்தார்கள்.

அதனால் சஞ்சீவ், பிரஜி ஒளிந்திருக்கும் கதவின் மறுப்பக்க சுவற்றில், அவள் பார்க்கும் முன், சட்டென்று நின்று, தன்னை மறைத்து கொண்டான். மறுபடியும், அவன் மீது கல் ஏறிய, எட்டிப் பார்த்தவள், அவனைக் காணாது, தலையை மட்டும் நன்றாக நீட்டி, மாடியில் அவனைத் தேடிப் பார்த்தாள். “ஒரு வேளை, கட்டிடத்திற்கு உள்ளே போய் விட்டானோ?” என எண்ணிக் கொண்டே, வாசல் தாண்டி ஒரு அடி எடுத்து வைத்தது தான் அவளுக்கு தெரியும், மறுநிமிடம் சஞ்சீவ் முன் நின்றிருந்தாள்.

‘இவள் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள்? இவள் என்னை சீண்டினால், கேலி செய்து விளையாடினால், மட்டும் சரி, அதே நான் செய்தால், வெட்கமாகயில்லை, துக்கமாயில்லை என்று, வாயில் வந்த படி அனாவசிய கேள்விகள் கேட்க வேண்டியது” என்று கடுப்பாக எண்ணினான். அதே கடுப்போடு தான், அவள் உள்ளே வரவும், திறந்திருந்தக் கதவின் பின் இருந்து, அவள் வலக்கையைப் பற்றி இழுத்து, தன் முன்னே நிறுத்தினான்.

இதை எதிர்பாராத பிரஜி, அவனின் செய்கையில் திடுக்கிட, தன் இதயம் படபடவென மிக வேகமாக துடிக்கவும், தன் இடக்கையால், நெஞ்சத்தின் மீது கை வைத்து, மூச்சு வாங்கினாள். மேலும், அவள் வயிற்றிலும், ஏதோ துடிப்பது போல் உணர, புருவம் சுருக்கி, தன் நெஞ்சத்திலிருந்தக் கையை எடுத்து, தன் வயிற்றில் வைத்தாள்.

அவளையே பார்த்து கொண்டிருந்தவன், அவளின் செய்கையில், அவள் நிலை உணர்ந்து, “ரொம்ப பயந்துட்டா போல, எனக்கு… அறி… ச்ச…” என நெற்றி உயர்த்தி தன்னை தானே நொந்தவன், அனிச்சை செயலாய் அவள் வயிற்றின் மீதிருந்த அவள் கையின் மேல் தன் கையை வைத்து, “பிரஜி… என்ன பண்ணுது? சே… நான் உன் நிலைமைத் தெரியாம, இப்படிப் பண்ணிட்டேன். ரொம்ப பயந்துட்டியா? என்ன பண்ணுது? வலிக்குதா? பிரஜி” எனப் படபடத்து, பதட்டத்தோடு அவளின் முகத்தைப் பார்த்தான்.

அவனைப் பார்த்தவள், தன் தலையை இடவலமாக ஆட்டி, “ஒன்றும் இல்லை” என்று சொல்லாமல் சொன்னவள், அவனிடம் இருந்து தன் வலக்கையை உருவியவள், தன் வயிற்றின் மீதிருந்த அவன் கையை எடுத்து விட்டு, தன் கையையும் எடுத்தாள்.

தலைக் குனிந்து, “நான் கீழப் போறேன்” என்று கூறி விட்டு, நகர்ந்தவளை, கைப் பற்றி தடுத்தான் சஞ்சீவ். அவள் நிமிர்ந்து அவனைப் பார்க்கவும், “கொஞ்ச நேரம் இங்கயே இரு பிரஜி, படப்படப்பு குறையட்டும்” என அங்கிருந்த ஒரு பெரிய வாலியை எடுத்து வந்து, அந்த கதவோர நிழலில், சுவரோரமாய் கவிழ்த்திப் போட்டு, அதில் அமரச் சொன்னான். அவளும் அவன் சொல்வதும் சரியெனப் பட, எதுவும் பேசாமல் அமர்ந்தாள்.

பின் சஞ்சீவ் கீழே சென்று, அவளுக்கு அருந்த சொம்பு நிறைய தண்ணீர் எடுத்து வந்து தந்தான். அதை வாங்கிப் பருகி முடித்தவள், தன் வாயை சேலையால் துடைத்து விட்டு, நிமிர்ந்தவள் கண்ணில், நெற்றியில் வியர்வை ஒழுக நின்ற சஞ்சீவின் தோற்றம், தன்னை விட அவனே மிகவும் பயந்து போய் விட்டான் என்ற உண்மையை அவளுக்கு உணர்த்தியது.

என்ன நினைத்தாளோ? தான் அருந்தி விட்டு, மீதி தண்ணீர் இருந்த சொம்பை அவனிடம் நீட்டி, “நீங்களும் குடிங்க” எனத் தந்தாள். அவன் ஆச்சரியமாய், புருவத்தைச் சுருக்கி, அவளை உறுத்து பார்க்க, அவளோ “இல்ல… நீங்களும்… பயந்துட்டீங்கள… அது… அதான்…” என முடிக்கும் முன்னே நூறு முறை, வெட்கப்பட்டு, தலைத் தாழ்த்தி, நிமிர்த்தி, தடுமாறி, என ஆயிரம் அழகு காட்டி, ஒரு வழியாய் சொல்லி முடித்தாள்.

சஞ்சீவ், ஏற்கனவே அவள் அழகோடு, தாய்மையின் பூரிப்பும் சேர்ந்து அவளை இன்னும் ஒளிர வைக்க, அதில் மயங்கி போய் தான், அவள் தன் மீது கோபமாய் இருந்த போதும், அவளை நெருங்கினான். ஆனால் இன்றோ! அவள் அழகு இன்னும் கூடுதலாய்… இன்னும் பேரழகாய்… இன்னும் அதிக நாணச் சிவப்பாய்… தோன்ற, சஞ்சீவ் இன்னும் சொக்கித் தான் போனான். அந்த மயக்கத்திலேயே, புன்னகையோடு அவள் நீட்டிய சொம்பை வாங்கி, நீரைப் பருகினான்.

இனி, அவளின் விளையாட்டை, தைரியமாய் தான் விளையாட எண்ணினான். இதுவும் சுவாரசியமாய் தான் இருந்தது… திருமணம் முடிந்து, ஒரு குழந்தையின் வரவை எதிர் நோக்கிக் காத்திருந்த அந்த காதல் ஜோடிக்கு…

 

மாயம் தொடரும்……

error: Content is protected !!