இது என்ன மாயம் 37

இது என்ன மாயம் 37

பகுதி 37

இரவு எல்லோரும் உறங்கத் தொடங்கி இருந்தனர், ஒருவனைத் தவிர, அவன் தான் சஞ்சீவ். பெரிய அறையில் சரஸ், அவர் தங்கை லஷ்மி மற்றும் ரதி படுத்திருக்க, வரவேற்பறையில் ரங்கன், ரவி, மற்றும் இரண்டு பெரியவர்கள், உறவின் முறையில் சரஸின் சித்தப்பா, மாமா ஆவார்கள். அவர்களும் அங்கு உறங்கிக் கொண்டிருந்தனர். பிரஜீயின் அறையில் எப்போதும் போல் பிரஜீயும், சஞ்சீவும் படுத்திருந்தனர்.

இரவு ஏழு மணிக்கு எல்லோரும் கல்யாண மண்டபத்திற்கு ஒரு வேனில் சென்று, அங்கு பெண் வீட்டினரை வரவேற்க தயாராய் இருந்தனர். இதில் ரதி தான் ரொம்பவும் குஷியாக இருந்தாள்.

பின்னே இருக்காதா? ஒரே நாளில் இரு அண்ணன், அண்ணி மேலும் ஒரு அண்ணி வேறு கிடைக்கப் போகிறாள்… மேலும் ஒரு குட்டி குழந்தை வேறு வரப் போகிறது. அதையெல்லாம் விட, நாளை அண்ணனின் கல்யாணம் வேறு… கேட்கவா வேண்டும்… அலம்பல் பண்ணிக் கொண்டு அங்கும் இங்கும் பட்டாம்பூச்சி என வலம் வந்தாள்.

சஞ்சீவ், பிரஜீக்குமே ஒரு மருத்துவரான ராதியா இது? இப்படி ஒரு வாலில்லா வானரமாய் இருக்கிறாள் என்று… ஒரே ஆச்சரியம் கணவன் மனைவி, இருவருக்குமே பொங்கி வழிந்தது.

சஞ்சீவ், ரதி வருந்தி அழைத்த பின், மரியாதை நிமித்தமாக, அவர்களுக்கும் ஒரு பத்திரிக்கை வைக்க, அவர்கள் வீட்டிற்கு சென்றான். அங்கு சென்று, அழைப்பு மணியை அழுத்தி விட்டு நிற்க, “பரவாயில்லையே மருத்துவர் வீடாய் பெரிய பங்களா போல் இல்லாமல், எளிமையாய், அழகாய் இருக்கிறதே” என்று எண்ணி, சுற்றும் முற்றும் கண்களாலேயே அளந்தான்.

கதவு திறக்கும் ஓசை கேட்டு திரும்பியவன், “சித்தி…” எனச் சந்தோசமாக கூவியவனுக்கு, அதற்கு மேல் மகிழ்ச்சியில் வார்த்தையே வரவில்லை. அவரும் முதலில் நெற்றி சுருக்கியவர், பின் “சஞ்சீ… நீ… சஞ்சீ தான?” என்று கண்ணீர் மல்க வரவேற்றார்.

பின் சஞ்சீவ், சித்தியின் ஆசைப்படி, அங்கிருந்தே போன் மூலம், மதனையும் வரவழைத்தான். குடும்பக் கதை, அது, இது எனப் பேசி முடித்து, மதிய சாப்பாட்டையும் அங்கேயே முடித்து ஒரு வழியாய் கிளம்ப ஆயத்தமாக, லஷ்மி “இருங்க பா, சித்தப்பாவும், சுதனும் வர்ற நேரம் தான், கொஞ்ச நேரம் இருங்க…” என்று வற்புறுத்தி இருக்க வைத்தார்.

அதற்குள் வீட்டுக்கு வந்து விட்ட, ரதி, அவர்கள் இருவரையும் பார்த்து, “பார்த்தியா மா… எப்படி நான் எங்க அண்ணன்கள கண்டுபிடிச்சிருக்கேன் பார்த்தியா?” எனப் பெருமைப் பட்டுக் கொண்டு, தன் தாயின் கழுத்தைக் கட்டிக் கொண்டு, அவர் அமர்ந்திருந்த மெத்திருக்கையின் கைப்பிடியில் அமர்ந்தாள். பின் சுதனைப் போன்று சஞ்சீவ் இருந்ததால், அவளுக்கு சந்தேகம் வந்து தான், அவனைப் பற்றி துருவி துருவி விசாரித்தாள்.

லஷ்மியும், ரவியும் அந்தக் காலத்திலேயே காதல் திருமணம் செய்துக் கொண்டதால், சொந்தப் பந்தங்கள் யாரும் அவர்களுடன் பேசுவதில்லை. சரஸ் கூட, தன் தந்தையின் பேச்சிற்கு கட்டுப்பட்டு தங்கையுடன் பேசவோ, எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் மனதினுள்ளேயே, தன் தங்கையைப் பற்றி நினைத்துக் கொள்வார்.

அதனால் ரதியும், அவள் அண்ணன் சுதனும் சொந்தப்பந்தங்களை அறியாமலே, ஆனால் லஷ்மியின் வாயிலாக தங்கள் பெரியம்மா, பெரியப்பா மற்றும் அவர் பிள்ளைகளைப் பற்றித் தெரிந்துக் கொண்டனர்.

ஆம், சரஸுக்கும், லஷ்மிக்கும் ஏழெட்டு வயது வித்தியாசம். அதனால் சரஸுக்கு திருமணம் முடித்து, சஞ்சீவ் பிறந்து நான்கைந்து வயதான பின் தான் லஷ்மிக்கு மாப்பிள்ளை தேடத் தொடங்கினர்.

அப்போது தான் லஷ்மி, தங்கள் தெருமுனையில், பூச்செடிகளை விற்பனைச் செய்துக் கொண்டிருந்த ரவியை, சந்தர்ப்ப வசத்தால் பார்த்து, காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். அவர் தற்போது, அரசு அலுவலகத்தில், உயர் பதவியில் இருக்கிறார்.

முன்பே, லஷ்மியை காதலித்தப் போதே, அரசு பணிகளுக்கு பரீட்சை எழுதிக் கொண்டே தான், பெற்றோர்களுக்கு பாரமாய் இல்லாமல், பூச்செடி விற்பனைக் கடையும் நடத்தினார். லஷ்மிக்கு, அவரின் தன்னம்பிக்கையும், உயர்ந்த குணமும், பிடித்து போய் தான் திருமணம் செய்துக் கொண்டார். பின் அவருக்கு, ஆண் குழந்தை முதலில் பிறக்கவும், தன் அக்கா மற்றும் அவரின் குழந்தைகள் மேல் இருந்த பாசத்தால், அவரின் மூத்த மகன், மதன் குமாரைப் போன்றே, தன் குழந்தைக்கு சுதன் குமார் என்று பெயர் வைத்தார்.

பின்னர் மதனும், சஞ்சீவும், தங்கள் சித்தப்பாவையும், தம்பி சுதனையும் பார்த்து, மீண்டும் அளவளாவி விட்டு, கல்யாணத்திற்கு முதல் வாரமே வர சொல்ல, பின் அவர்களின் பணி காரணமாய் சொன்ன காரணத்தை “சரி” என ஏற்று, முன் தினமே தயாராய் இருக்கும் படி, வேண்டிக் கொண்டு கிளம்பினார்கள். சொன்னது போலவே, மதன் தன் காரோடு போய் அவர்களை அழைத்துக் கொண்டு வந்து, தன் அம்மாவிற்கு ஆச்சரியப் பரிசாய், அவர் அன்பு தங்கையைக் காண்பித்தனர்.

இரவு பெண் அழைப்பு முடித்து, இரவு சாப்பாடை அங்கேயே மண்டப்பத்திலேயே முடித்து விட்டு, மதனை அங்கு மணமகன் அறையில் சுதனுடன் விட்டு விட்டு கிளம்பினர்.

அதைப் பார்த்த ரதி, “அப்போ நானும் இங்க இருக்கேன்… அங்க அண்ணி ரூம்ல… மணமகள் ரூம்ல இருக்கேன்” எனச் சொல்ல,

சுதனோ “ஏன் ரதி… நாளைக்கு மதன் அண்ணாக்கு, நல்லபடியா கல்யாணம் நடக்கணும்னு, உனக்கு நினைப்பு இருக்கா… இல்லையா?”

ஆனால் அதற்குள் சஞ்சீவ் “ஏன் டா… அவளையே வம்பிழுக்குற…” என அவளுக்கு சார்பாய் பேசி, “நீ பிரஜி கூட நம்ம வீட்டுல, வந்து படுத்துக்கோ ரதி… இங்க இடம் பத்தாது டா” எனப் பாசமாய் விளக்கம் கூறும் போதே…

“ஆமா அது கரெக்ட் தான் அண்ணா, அவ படுத்து உருள இடம் பத்தாது தான்… ஆனா ஒன்னு அண்ணா… இவள மட்டும் பிரஜி அண்ணி, கூடப் படுக்க வச்சு… அந்தக் கொடுமைய மட்டும் பண்ணிறாதீங்க… இவள பத்தி உங்களுக்கு தெரியாது… இவ ஒரு மிதி மன்னி” என அவன் முடிக்கும் முன்னே, “டேய்… வேணாம் டா… அம்மா….” எனக் கத்தி, தன் அன்னையை அழைத்தாள்.

அதற்குள் அங்கு வந்த லஷ்மியோ “ஏன்மா… இப்படி கத்துற… அவன் உண்மைய தான சொல்றான்.” எனச் சிரித்துக் கொண்டே பிரஜீயிடம், “வேணாம் பிரஜி, இவள உன் கூட படுக்க வச்சா, அவ தூங்கிடுவா… நீ தான் தூங்காம கஷ்டப் படனும்” என அவள் உறங்கும் போது, பக்கத்திலிருப்பவரை உதைத்து தள்ளி விடுவாள் என்று சொன்னார்.

“அம்மா……” என அவள் கத்தி, மேலும் ஒரு கலவரம் வருவதற்குள், “சரி… கிளம்புங்க நேரமாச்சு, சுதன் மதன்ட்ட பேசாம, அவன தூங்க விடு… நாளைக்கு சீக்கிரம் எந்தரிக்கணும்” என மற்றவர்கள் வீட்டிற்கு கிளம்பினர்.

பின் ரதியை தன்னுடனேயே, லஷ்மி படுக்கச் சொல்லி விட்டார். அதனால், எப்போதும் போல் சஞ்சீவ், பிரஜி அவர்கள் அறையில் படுத்துக் கொண்டார்கள்.

சஞ்சீவிற்கு தான் இன்னும் தூக்கம் வரவில்லை, என்னவோ! நாளை அவனுக்கு தான், திருமணம் போன்று ஒரே படபடப்பில் இருந்தான். நாளை எந்த வித பிரச்சனையும் இல்லாமல், எல்லாம் நல்ல படியாக, நடக்க வேண்டும் என்ற பதட்டமே நிறைந்து இருந்தது.

அவன் கனவு தேவதை, அருகில் இருந்தும்… ஏனோ ஒரு தவிப்பு… புரியாத பரிதவிப்பு… படப்படப்பு… என பல உணர்வுகளின் கலவையில் அவன் இருக்கையில்… கழுத்தில் பிரஜீயின் வளைக்கரம் வந்து விழுந்து, அவனைக் கலைத்தது.

அப்போது தான் அவள் பக்கம் திரும்பி, அவளைப் பார்த்தான். அவனைப் பார்த்தவாறு, ஒருக்களித்து, ஆழ்ந்து துயில் கொண்டிருந்தாள். “இப்பொழுதெல்லாம் சீக்கிரமே தூங்கி விடுகிறாளே… நாளை வரவேற்புக்கு எப்படி நிற்க போகிறாளோ? பாவம்…” என எண்ணிக் கொண்டிருக்கும் போது தான் “இம்… இதுக்கெல்லாம் காரணம், நீங்க தான் டா செல்லக் குட்டி…” என தன் கையை, அவள் வயிற்றில் வைத்து தன் குழந்தையிடம் பேச ஆரம்பித்தான்.

“நாளைக்கு… அம்மாக்கும், அப்பாக்கும்… ரிஷப்ஷன் டா குட்டி… பார் நீ எவ்ளோ லக்கின்னு… இப்பவே அம்மா, அப்பா வரவேற்புக்கெல்லாம் பங்கெடுத்துக்கப் போற… இம்… பெரிய ஆளு தான் நீ… அப்புறம்… நாளைக்கு அம்மாவ ரொம்ப படுத்தக் கூடாது… என்ன?” என ஆள் காட்டி விரலை ஆட்டி, என்னவோ குழந்தை நேரிலேயே இருப்பது போன்று பாவத்தோடு பேசிக் கொண்டிருந்தான்.

குழந்தைக் கூட, ‘என்னடா இது… இவர் நாம வெளிய வர்றதுக்கு முன்னாடியே இவ்ளோ கண்டிஷன் போடுறார். என்ன கவனமா பார்த்துக்காம… அன்னிக்கு அப்படி தான்… அம்மாவ பார்த்துக்கோ சொல்றார். ரொம்ப தான் பண்றார்…’ என நினைத்திருக்கும்.

“அப்புறம் செல்லக் குட்டி… நாளைக்கு உங்க அம்மாவுக்கு ஒரு சர்பரைஸ் காத்துட்டு இருக்கு…” எனச் சந்தோஷமாகச் சொல்லும் போதே… அப்படியே கொஞ்சம் சஞ்சலமான மனதோடு… கலக்கமான முகத்தோடு “அந்த சர்பரைஸ் நல்ல படியா நடக்கணுமேன்னு அப்பாக்கு பயமா இருக்கு டா… அந்த சர்பரைஸ் அம்மாக்கு ஒரு ஸ்வீட் சர்பரைஸா இருக்கணும்ன்னு… அம்மாவுக்காக சாமிக்கிட்ட வேண்டிக்கோ…” எனத் தன் போக்கில், தன் குழந்தையிடம் பேசிய பின் தான், சிறிது நிம்மதியாக உணர்ந்தான். மேலும், பிரஜி வயிற்றில் இருந்த அவன் கை, ஏதோ அசையும் உணர்வை உணர….. சிலிர்த்துப் போனான் சஞ்சீவ்.

அவன் குழந்தை எல்லாவற்றையும் கேட்டு, “சரிப்பா…” என்று அந்த அசைவு சொன்னது போல் உணர்ந்தான். அவன் மனதில் இருந்த கலக்கம் எல்லாம் அந்த நொடியே மறைந்து, அவன் மனமெங்கும் சந்தோசம் நிரம்பி வழிந்தது. கடவுளே நேரில் வந்து, “கவலைப்படாதே சஞ்சீவ், உன் கலக்கமெல்லாம் கலைந்து போகும்” என்று சொன்னது போல் பரவசமாய் உணர்ந்தான். அதே மன நிறைவோடு உறங்கியும் போனான்.

“பீங்… பீங்…” என அலாரச் சத்தத்தை கேட்டு, “சே… இப்ப தான தூங்குனேன்… அதுக்குள்ள விடிஞ்சிருச்சா…” என மனதில் எரிச்சலோடு கண் திறந்தவன், அப்படியே அதிசயித்து, முழி பிதுங்க தன் முன்னே நின்றவளைப் பார்த்தான்.

தலையை காய வைத்து, தோகையென முடியை விரித்து போட்டு, தேன் வண்ணத்தில் பட்டுச் சட்டை அணிந்து, அதே நிறத்தில் சதாரண சேலையை அணிந்து, இடுப்பில் இரு கையையும் வைத்து, அவனை முறைத்துக் கொண்டிருந்தாள். அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன், ஒரு புன்னகையோடு, அவள் பக்கம் ஒரு கையை நீட்டினான். அவனுக்கு கைக் கொடுத்து எழுப்பி விடுமாறு அவன் சொல்லாமல், சொல்வது புரிந்தது.

ஆனால் அவளோ சுற்றும், முற்றும் தேட, “என்ன பொண்டாட்டி தேடுறீங்க?” என அவன் வினவ,

“இல்ல… இங்க தான் ஒரு விசிறிக் கட்ட இருந்துச்சு… பார்த்தேன்… அத தான் தேடிட்டு இருக்கேன்” என்று மேஜை மீது என எல்லாப் பக்கமும் தேடுவது போல, சீரியஸாய் அவள் சொல்லவும், அவனோ “எதுக்கு?” என்று புரியாமல் கேட்க,

“நீங்க தான் லேட்டா எழுந்ததுக்கு… கைக் காமிச்சீங்களே… அடிக்கச் சொல்லி…” என அவள் சொல்ல, சஞ்சீவோ “அடிப்பாவி… நீயெல்லாம்…” என எழுந்துக் கொண்டு, கூறும் போதே, “என்ன அண்ணி? அண்ணாக்கு திருப்பள்ளியெழுச்சி பாடிட்டீங்களா?” என ரதி உள்ளே வந்தாள்.

“வாமா… நீயும், உங்க அண்ணனும் இப்ப தான் எழுந்திருக்கீங்க, ரெண்டு பேரும் அம்மாட்ட சுப்பரபாதம் கேக்காம இருந்தா சரி, எனக்கு வேல இருக்கு” என்று அவள் சமயலறைக்கு செல்ல, அவள் சொன்னதுப் போலவே குளித்து முடித்து, குளியலறையில் இருந்து வெளி வந்த சரஸ், “சஞ்சீ… எந்திருச்சிட்டியா… நேரமாச்சு… சீக்கிரம் குளி… நீ போய் தான், வேன் டிரைவர பார்க்கணும்… சீக்கிரம் மண்டபத்துக்கு போகணும் டா… பாரு அப்பா வந்தா திட்டப் போறார்” என அவர் மூச்சு விடாமல் பாடிக் கொண்டே இல்லை… இல்லை… சொல்லிக் கொண்டே, அவர் இருந்த அறைக்குள் சென்று தான் தயாராவதற்கு கதவடைத்தார்.

சஞ்சீவ் தன் அறையில் இருந்தப் படியே, “இதோ… போறேன் மா…” என பதில் அளிக்க, ரதி “அண்ணா நீங்க போய் பிரஷ் பண்ணிட்டு வாங்க, நான் உங்களுக்கு டீ கொண்டு வரேன்” என்று சொல்லி சென்றாள். சொன்னது போலவே, பிரஜி போட்ட டீயை கொண்டு வந்து கொடுத்தவளிடம், “தேங்க்ஸ் மா” என வாங்கிப் பருகத் தொடங்க, “அண்ணா… நீங்க அண்ணி போட்ட டீய ரசிச்சு, ருசிச்சு குடிச்சிட்டு இருங்க… நான்… இதோ… தோ (இரண்டு) மினிட்ஸ்ல வந்திடுறேன்” என்று அங்கு இருந்த ஒரே ஒரு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

“டீ கொடுத்து ஐஸ் வச்சது, இதுக்கு தானா… சரியான வாலு” என எண்ணி சிரித்துக் கொண்டிருக்கும் வேளையில், பிரஜி தன்னை தயார் படுத்திக் கொள்ள, உள்ளே வந்து, அவன் இருப்பது தெரியாமல், கதவடைத்தாள்.

தாழிட்டு திரும்பியவள், அவனைப் பார்த்து அதிர்ந்து, பின் சமாளித்து, “நீங்க குளிக்கப் போகல?” என வினவினாள். ஆனால் அவனோ உல்லாசமாய் விசிலடித்து, கண்ணடித்து “தேவியாரின் தரிசனத்தைப் பெற்றுப் போகவே… காத்திருக்கிறேன்” என்று செந்தமிழில் பதில் அளித்தான்.

அவளோ “சீ…” எனச் சொல்லி, அவனைப் பார்த்து, வாயைக் குவித்து, ஒரு பக்கம் கோணிக் கொண்டு, கண்ணாடி முன் சென்று ஒரு நாற்காலியில் அமர்ந்தாள். பட்டுச் சேலை மாற்றலாம் என்று வந்தவள், அவன் உள்ளே இருக்கவும், தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு, “சரி, முதலில் பவுடர் போட்டு, நகைகளை போடலாம்” என எண்ணி ஒப்பனை செய்ய ஆரம்பித்தாள்.

அவள் பின்னே மேஜை மீது அமர்ந்தவன், அவள் ஒப்பனைச் செய்து, கண்ணாடியில் சரி பார்க்க, பின்னாடி இருந்தவனோ, ‘நன்றாக இருக்கிறது’ என்பது போன்று, அவனும் இரு கை விரல்களை மட்டும் மடக்கி, கண்ணாடியிலேயே காண்பிக்க, அவள் நொடித்துக் கொண்டே, தோடு, நெக்லஸ், லாங் செயின் என ஒவ்வொன்றாய் போட, அவன் கண்ணாடியிலேயே, நெற்றி உயர்த்தி… தலையை ஆட்டி… விழி விரித்து… என பல விதமாக உடல் மொழியிலேயே, அவளுக்கு அழகாய் இருக்கிறது என்று சொல்லி வந்தான்.

கடைசியில் எல்லாம் முடித்து, அவள் எழுந்து நின்று, கண்ணாடியில் தன்னை ஒரு முறை சரி பார்க்கவும், ஒரு பறக்கும் முத்தத்தை அவளிடம் பறக்க விட்டான்.

அவளோ கண்ணாடியிலேயே அவனை முறைத்து, அவனை நோக்கி வந்தாள். ‘போச்சு… உன்ன அடிக்க தான் வர்றா…’ என்று மனது குரல் கொடுக்க, அவளோ “இத மாட்டி விடுங்க” என்று அவனிடம் கொலுசை நீட்டவும் தான், “உஃப்…” என பெருமூச்சு விட்டவன், விசலடித்துக் கொண்டே, மீண்டும் உல்லாசமான மன நிலைக்கு திரும்பினான்.

 

மாயம் தொடரும்….

 

error: Content is protected !!