இது என்ன மாயம் 38

இது என்ன மாயம் 38

பகுதி 38

அவளிடம் கொலுசை வாங்கியவன், நேரே கண்ணாடி முன் இருந்த நாற்காலிக்குச் செல்ல, அவளோ அங்கேயே நிற்க, அவனோ விசிலிலேயே “என்ன?” எனக் கேட்டான். “கொறடு எடுக்கலையா?” எனக் கொலுசை இறுக்குவதற்கு தேவைப்படும் கருவியை கேட்க…

“ஆமா… இப்ப நான் வெளிய போய் கொறடு எங்கிருக்குன்னு தேடுனா, எங்கம்மா என் முதுகுல டின் கட்டவா? ஏன் டி புருஷன மாட்டி விடுறதுலையே இருக்க? சரி, சரி வா… நேரமாச்சு” என கை நீட்டி, விரல் மடக்கி அழைத்தான். “ஹே… பிறகெப்படி தைட் பண்ணுவீங்க?” என நகராமலே கேட்டாள்.

“ஆமா… இது பெரிய விஷயம்… நீ வா, நானே தைட் பண்றேன்” என்று வெளியே சொல்லி, அவளை அழைத்தவன், ‘வா டி… அப்படியே உனக்கும்… தைட் வைக்கிறேன்’ என்று உள்ளே நினைத்தான்.

அவளை நாற்காலியில் அமரவைத்து, அவன் தரையில் அமர்ந்து, அவள் காலைப் பற்றி கொலுசை போட்டு விட்டு, கொக்கியை பல்லால் இறுக்குவதற்காக, அவன், அவள் காலில் குனிய, சட்டென்று காலை இழுத்துக் கொண்டாள். அவனோ “ஏன்? என்னாச்சு?” எனப் புருவத்தை நெறித்து கேட்க, “இல்ல… கையால நகட்ட (நகர்த்த) முடியாதா?” என்று கேட்டாள்.

“ஹே… உன்னையவே என்னால நகட்ட முடியாது, இதுல இத எப்படி முடியும். என்னைய என்ன பீமன்னு நினச்சுட்டியா?” எனப் பதில் சொல்லிவிட்டு, அவள் கொலுசின் மாட்டியை பற்களால் நெருக்கியவன், அடுத்த காலிலும் அதே போல் செய்து, அப்படியே காலில் காதலாய் ஒரு முத்திரை வைத்தான்.

அதில் அவள் பதறி எழ, அவன் வேறு, அருகில் தரையில், அமர்ந்திருந்ததால், சரியாக காலை ஊன்ற முடியாமல், தள்ளாடி அமர்ந்திருந்தவன் தோளையே பற்றி, தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள். அதற்குள் “ஏய்… பார்த்து…” என அவன் பதறி, அவள் நின்றுக்கொள்ளவும், “என்ன பொண்டாட்டி… உனக்கும் தைட் பண்ணுவோமா” எனத் தன் தோளில் இருந்த அவள் கையைப் பற்றி, எழுந்துக் கொண்டே அவளிடம் கேட்டான்.

பின் அவனை முறைத்து, அறையை விட்டு வெளியேற, “என்ன பிரஜி… இன்னும் நீ டிரஸ் மாற்றலையா?” எனச் சரஸ் கேட்க, “இதோ… போறேன் மா” எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சஞ்சீவ் வெளியே வர, மறுபடியும் தன் அறைக்குள் திரும்பி போகும் போது, அவன் முதுகில், தன் முழங்கையால் ஒரு இடி இடித்து விட்டு அறைக்குள் மறைந்தாள். அவனோ புன்னகையோடு குளியலறைக்குள் நுழைந்தான்.

எல்லோரும் ஒரு வழியாய் கிளம்பி, தயாராக, பின்னர் பக்கத்து வீட்டு விசாலி குடும்பத்தினர், சங்கீ, ஜெய், சிந்தா, செல்வி என எல்லோரும் தங்கள் குழந்தையுடன், சாந்தியம்மாவும் வர, வேன் கிளம்பியது.

பின்னர் மண்டபத்திற்கு செல்ல, அங்கோ… இரண்டு அய்யர்களுடன் ஹோமம் வளர்க்கப் பட, சஞ்சீவ் புரியாமல், “என்னமா இது?” என சரஸிடம் கேட்க, அவரோ “சுதன் இவனையும் கூட்டிட்டு போய், அங்க மதன் ரூம்ல மாலை இருக்கும், அத போட்டு இவன தயாராக்கு பா” என அவனைப் பேச விடாமல், அங்கு வந்த சுதனிடம் சொன்னார். அதே போல அந்தப் பக்கம் பிரஜீயை ரதியும், சங்கீயும் மணமகள் அறைக்கு இழுத்து சென்றனர். போகும் போது, பிரஜி, சஞ்சீவை திரும்பி கேள்வியாய் பார்த்துக் கொண்டே சென்றாள்.

சஞ்சீவோ “அம்மா… என்ன மா இது?” என்று அதிலேயே இருக்க, “டேய் சஞ்சீவ்… எல்லாம் உங்கப்பா ஏற்பாடு பா, எனக்கே தெரியாது “ என்று சொல்லும் போதே, சாரங்கன் அங்கு வர, அதற்கு மேல் எதுவும் பெரிதுப்படுத்தாமல், சுதனுடன் சென்றான்.

மீண்டும் ஒரு முறை அங்கு, பிரஜீக்கும் சஞ்சீவுக்கும் திருமணம் நடக்கவிருந்தது. முதலில் மதனுக்கு, மங்கள நாண் வழங்கப் பட, அதை வாங்கியவனோ, தன் அருகே பூவைப் போன்று, சிகப்பு நிறப் பட்டில் மலர்ந்திருந்த புஷ்பாவின் கழுத்தில்… மனதில் காதலோடு, அன்போடு கட்டினான்.

அடுத்து, பட்டு வேஷ்டியில் இருந்த சஞ்சீவோ, தேன் வண்ணப் பட்டில், தேனீ போல அவனைக் கொட்டுவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தவள் கழுத்தில்… மனதில் “சாமி… என்ன காப்பாற்று… இந்த ஏற்பாடு எனக்கே இப்பத்  தான் தெரியும்” எனக் கடவுளை நினைத்து தாலியை கட்டினான்.

எல்லோரும் அட்சதை தூவினர். பின் தங்கள் தாய் தந்தையரிடம், இரு ஜோடிகளும் அடுத்தடுத்து ஆசிப் பெற்றனர். சஞ்சீவிடம், சாரங்கனோ “சஞ்சீவ்… நான் தான் ஆசைப்பட்ட மாதிரி வாழ முடியல டா… நீயாவது நல்ல படியா, நீ ஆசைப்பட்ட மாதிரி, எங்க எல்லோரட ஆசீர்வாதத்தோடு வாழனும் டா” என்று அவனை உணர்ச்சிப் பொங்க அணைத்துக் கொண்டார். இத்தனை நாளும், அவனை ஒதுக்கியே வைத்தவர், தன் காலம் கடந்து போயிற்று, இனி நாம் பெற்ற மகனுக்காவது… எல்லாம் நல்ல படியாய் நடக்கட்டும் என்ற நல்ல எண்ணத்தோடு, அவன் தவறாய் செய்த ஒன்றை சீர்ப்படுத்தி விட்டார். அவரின் இந்த மாற்றத்திற்கு பிரஜீயும் ஒரு காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.

இத்தனை நாளும் தந்தையின் பார்வைக் கூட தன் மேல் விழாமல் இருந்தவன், அவரின் அணைப்பில் அனைத்தையும் மறந்து “அப்பா…” என முதன் முதலாய் தன் தந்தையைப் பார்க்கும் சிறுவன் போன்று, தன் அன்பை முழுவதும், அந்த ஒற்றை அழைப்பில் தேக்கி வெளிப்படுத்தினான். சிறு வயது சஞ்சீவ் தன்னை அழைப்பது போன்றே, சாரங்கனுக்கு அவனின் அப்பா என்ற அழைப்பு, காதில் தேனாய் வந்து விழுந்தது.

இருவரின் இந்த பாச அணைப்பே… இந்த அங்கீகாரமே… அங்கிருந்த சொந்தபந்தங்களின் வாயை அடைத்தது எனலாம். இனி யாரும், சஞ்சீவைப் பற்றியோ, பிரஜீயைப் பற்றியோ, அவர்களின் திருமணத்தைப் பற்றியோ தவறாக பேசுவார்களா என்ன?

இதைக் கண்ட சரஸ்… ஏன் மதன் கூட கண் கலங்கி விட்டான். மணமேடையில் இருந்த அனைவரும், நெகிழ்ந்து போய் சந்தோஷமாய் அவர்களைப் பார்த்தனர். பின் சரஸ், ரதிக்கு கண் ஜாடைக் காட்டி விட்டு, “போதும்ங்க… நல்ல நாள் அதுவுமா அழுதிட்டு…” என அதட்டினார்.

பின் மணமேடையிலேயே, லஷ்மிக்கு பின் புறமாய், ஒதுங்கி நின்றிருந்த கோதையின் கைப் பற்றிய ரதி, “வாங்க ஆன்ட்டி” என இழுத்து வந்தாள். அவருடன் ராமும் நிற்க, இந்த முறை பிரஜி, “அம்மா…” என சந்தோஷமாக அழைக்க, அவரோ “உனக்கு ஆசீர்வாதம் பண்ணனும்கிறது, என் கடமை… எங்கிருந்தாலும் நல்லா இரு” என அவர்கள் காலில் விழும் முன்னே, ‘அதற்கு தான் நான் வந்தேன்’ என்பது போன்று பட்டும்படாமலும் சொல்ல, அதைக் கேட்ட, சஞ்சீவ் தான் கலங்கி போனான். சரஸும், மற்றவர்களும் அம்மா – பெண் பாடு என்று அவர்கள் பேச்சில் தலையிடவில்லை.

சஞ்சீவ் “அத்த…” என உணர்ச்சி மிகுதியில் பொங்க, “என்ன மாப்பிள்ள, எங்க கால்ல விழுகுற உத்தேசம் இல்லையா?” என ராம், அவனின் உணர்வுக்கு தடைப் போட்டார். “இதோ… மாமா” என்று அவரின் காலில் விழுந்து வணங்காமல், பிரஜீயின் உடல் நிலையால் லேசாய் குனிந்து, அவர்கள் கால் தொட்டு நிமிர்ந்தனர்.

பின் பிரஜி “அம்மா… அண்ணன் எங்க மா?” எனக் கேட்க, அவரோ “உனக்கு… கூடப் பிறந்தவங்கலாம் ஞாபகம் இருக்கா? அவன்லா வரல…” என அவளைத் திட்டத் தொடங்க, மீண்டும் சஞ்சீவ் “அத்த…” என வர, “நீங்க சும்மா இருங்க, இது பொண்ணுக்கும் அம்மாக்கும் உள்ள பிரச்சனை” எனச் சொல்ல,

மேலும் அவன் “இப்ப பிரஜி உங்க பேரக் குழந்தைய சுமக்குறா அத்த… இப்போ போய் அவள திட்டுறீங்களே” என அவளையும், குழந்தையையும் காக்க எண்ணி சொன்னான். இந்த மாதிரி சமயத்தில் பெற்றவர்கள் சபிக்கக் கூடாது என்று அவனுக்கு கூட தெரிந்திருந்தது!

ஆனால் அதற்குள், தன் மகளைப் பார்த்து, புருவத்தை உயர்த்தி, நாக்கை ஒரு பக்கமாய் நகர்த்தி, ‘உன் அம்மா பொய் சொல்கிறாள், அங்கு பார்’ என்று ஜாடையிலேயே சொல்ல, அவளும் தன் தந்தையின் ஜாடையை புரிந்துப் பார்க்க, அவள் அண்ணன் ரிஷிவர்த்தன், முதல் வரிசையில் தன் நண்பர்களோடு அமர்ந்துச் சிரித்துக் கொண்டிருந்தான். இவ்வளவு நேரமும், தன் கணவன் மீது உள்ள கடுப்பில் குனிந்த தலை நிமிராமல் இருந்தவள், இப்போது தான் நிமிர்ந்து மண்டபம் பக்கமே பார்த்தாள்.

இந்த முறை சஞ்சீவ் பதில் அளிக்கவும், அவன் பக்கம் திரும்பிய கோதை, “ஹும்… இதே மாதிரி தான, நாங்களும், உங்கள பெற்று வளர்திருப்போம். நான் உங்களையும் சேர்த்து தான் சொல்றேன், அவ தான் சின்னப் பொண்ணுன்னா… நீங்களாவது பொறுப்பா புத்தி சொல்லிருக்க வேணாமா?” என்று அவனையும் குற்றம் சுமத்த, இப்போது சஞ்சீவ் பதில் பேசாமல் மௌனித்தான்.

பின் ராம் தான், “சரி, விடு கோதை… மிச்ச மீதிய வீட்ல போய் திட்டிக்கலாம், இப்போ… அங்க பார் அய்யர் கூப்பிடுறார்” எனச் சொல்லி சமாளித்தார்.

அக்னி வலம் வர, மச்சினனை அழைக்க, புஷ்பாவிற்கு ஒரே ஒரு தங்கை, பூஜா மட்டும் தான், அண்ணன் எல்லாம் கிடையாது.

ஆனால் இதை உணர்ந்த கோதை, தன் கணவனுக்கு கண் காட்ட, அவர் “டேய் ரிஷி… வா டா இங்க…” என அழைத்து, அவனையே மதனுக்கும் மச்சினனாக, பின் ரதி வந்து நாத்தனராக இருந்து மணமக்களுடன் வலம் வந்தனர். பின்னர் சஞ்சீவுக்கும் அதே போலவே செய்தனர். பின் இருவரும், அவரவர் மனைவிக்கு மெட்டி அணிவித்தனர். இப்போது தான் பிரஜி, தன் காலில் மெட்டியை அணிகிறாள்.

பின்னர் வந்திருந்த அனைவரும் வாழ்த்தி, அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். மேடை ஏறி வந்த சிந்தா குடும்பத்தினரோடு புகைப்படம் எடுத்த பிரஜி, “அக்கா குட்டீஸ் எல்லாரோடும் ஒரே ஒரு போட்டோ க்கா” என பட்டுப்பாவாடை அணிந்த சந்தோஷியும், வேஷ்டி சட்டை அணிந்த இரண்டு வயதாகும் செல்வியின் மகன் சாஸ்வத்தையும், தங்கள் நடுவில் அமரவைத்து, பிரஜி மடியில் ஒரு வயது நிரம்பாத சந்தோஷும், சஞ்சீவ் மடியில் கிருஷ்ணரை போன்று வேஷ்டி அணிந்த ஸ்ரீராமும் அமர்ந்து, அழகாய் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பின்னர் வீட்டிற்கு சென்று, புதிய மருமகளான புஷ்பாவையே விளக்கேற்ற சொல்லி விட்டு, இரு ஜோடிகளுக்கும் பால் பழம் கொடுத்தனர். சங்கீ மட்டும் இவர்களுடன் வந்து விட, ரதியும் அவளும் சேர்ந்து பிரஜீயை கேலி செய்ய, சஞ்சீவும் அவர்களுடன் சேர்ந்து வெறுப்பேற்ற, கடுப்பான பிரஜி யாருக்கும் தெரியா வண்ணம், தன் முழங்கையால் அவனுக்கு ஒரு இடியை இறக்கினாள்.

மீண்டும் மண்டபம் சென்று மதிய உணவை முடித்துக் கொண்டு, வரவேற்புக்கு, அழகு நிபுணர்கள் அங்கேயே வருவதால், இடைப்பட்ட ஒன்றரை, இரண்டு மணி நேரத்திற்கு, இரு ஜோடிகளையும் அங்கேயே, இரு அறைகளில் ஓய்வெடுத்துக் கொள்ள சொல்லி விட்டு, பெரியவர்கள் மட்டும் வேனில் வீட்டிற்கு திரும்ப, அவர்களுடனே சிந்தா மற்றும், விசாலி குடும்பத்தினரும் சென்றார்கள். ஆனால் சந்தோஷி மட்டும் வர மறுத்து அழுக, பிரஜீயும், ரதியும் தாங்கள் பார்த்துக் கொள்வதாக சிந்தாவை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

அறைக்கு வந்த நொடியே, படுக்கையில் படுத்தவளிடம், கதவை தாழிட்டு வந்த சஞ்சீவ், “ஹே… பொண்டாட்டி… என்னடி அதுக்குள்ள படுத்திட்ட, சேலையைக் கூட மாற்றாம… அவ்ளோ அவசரமா?” எனச் சரசமாய் பேசி, அவள் அருகே கால் நீட்டி அமர்ந்தான்.

அவளோ ‘தேங்காய் உருட்டி விளையாடும் போதே, அப்பளட்ட மண்டைல உடைச்ச மாதிரி… தேங்காயையும் இவன் மண்டைல உடைச்சிருக்கனும். இன்னிக்கு இப்படிப் பண்ணப்போறங்கன்னு ஒரு வார்த்த சொல்லாம… எவ்வளவு கமுக்கமா இருந்திருக்கான்? இதுல சரசம் வேற…’ என எண்ணிக் கொண்டே, கண்ணை மட்டும் திறந்துப் பார்த்தாள்.

அவனோ அவளைப் பார்த்துக் கண்ணடிக்க, பட்டென்று கண்ணை மூடி, அவனுக்கு முதுகு காட்டி, அந்தப் பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

ஆனால் அவனோ, அவள் தோளைத் தொட்டு “ஏய்… ஆமா, மாத்திர போட்டியா பிரஜி?” என அக்கறையாய் வினவ, “இம்… ஆச்சு… தூக்கம் வருது” என சொல்லி, பேசியது போதும் என்பது போல, தூங்கப் போக, கதவு தட்டப்பட்டது. யாரென்று திறந்துப் பார்த்தால், ரதி சங்கடப்பட்டுக் கொண்டே, தன் தோளில் அழுதுக் கொண்டிருந்த சந்தோஷியைக் காட்டினாள்.

பிரஜி எழப் போக, சஞ்சீவ் “இரு” எனச் சொல்லி, சந்தோஷியைத் தூக்கி வந்து, அவளிடம் தர, “ஏன் டா பாப்பா… அழுகுறீங்க?” எனக் கேட்க, “பர்ஜி த்த…” என அவளிடம் தாவிக் கொண்டாள்.

பின்னர், அவளைப் படுக்கையிலேயேப் படுக்க வைத்து, சமாதானம் செய்துக் கொண்டே, பிரஜீயும் தூங்கி விட, சந்தோஷியும் தூங்கி விட்டாள். அவர்கள் இருவரையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவனும் ஆழ்ந்து உறங்கி விட்டான். மீண்டும் ரதி வந்து, கதவைத் தட்டி அவர்களை எழுப்பவும், தான் எழுந்து வரவேற்புக்கு தயாரானார்கள்.

காலையில் சேலைக் கட்டியிருந்த ரதி, இப்பொழுது வெண்மை நிறத்தில் ஒரு அனார்கலி சுடிதார் அணிந்து, சந்தோஷியை அழகு படுத்தினாள். அவளுக்கு லேகங்காப் போன்ற பாவாடை, சட்டையைத் தாவணியாய் அணிவித்து, அவளுக்கு பொய் முடி வைத்து பின்னலிட்டு, பூ வைத்து, குட்டி தேவதையாக்கினாள். பின் அவள் தம்பிகளுக்கு குர்தா தான் போட்டு அழைத்து வர வேண்டும் என்று கண்டிஷனாக சொல்லி விட்டிருந்தாள்.

மாலை வரவேற்புக்கு, பேபி பிங்கில், வெள்ளைக் கற்களும், நீல கற்களும் பதித்த டிசைனர் சேலை கட்டும் போது, சேலை எடுத்த அன்று நடந்தது பிரஜீக்கு நினைவு வந்தது.

சஞ்சீவ் திருமணத்திற்கும், வரவேற்புக்கும், பிரஜி சேலை எடுத்த நிறத்திலேயே, தேடி தேடி சட்டையைத் தேர்வு செய்ய, அதைப் பார்த்த மதன் “டேய்… சஞ்சீவ் இதுக்கு பதிலா, பிரஜி எடுத்த சேலையிலேயே சட்டைக்கு, துணி கொடுத்திருப்பங்க… நீ அதையே கிழிச்சு, தைச்சு போட்டுக்கலாம் டா… செலவு மிச்சம், ரொம்ப மேட்ச்சா… ஆப்ட்டா… இருக்கும் டா… என்ன பிரஜி நான் சொல்றது சரி தான?” எனக் கிண்டல் செய்தான். ஆம், சஞ்சீவும், அதே நிறத்தில் சட்டையும், சந்தன நிற கோட் சூட்டும் எடுத்துக் கொண்டான்.

மதனோ நீல நிற குர்தாவும், புஷ்பாவும் அதே போன்று நீல நிற, கற்கள் பதித்த டிசைனர் சேலை அணிந்திருந்தாள். இவ்வாறு வரவேற்பு ஆரம்பித்திருக்க, ஒவ்வொருத்தராக வர ஆரம்பித்தார்கள். ஷிவா, குடும்பத்தினரும், சஞ்சீவுடன் சேர்ந்து சசியும் வந்திருந்தான். இந்தப் பக்கம் ரிஷியும், சுதனும் சேர்ந்துக் கொள்ள, வரவேற்பு கலைக் கட்டியதைக் கேட்கவா வேண்டும்?

 

மாயம் தொடரும்………..

error: Content is protected !!